காட்டாற்றங்கரை – 1

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

வ.ஐ.ச. ஜெயபாலன்


கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும் சுடு புழுதி செம் பருந்துகளாய்ச் சுளன்றது. காய்ந்த புதர்கள் கானல் நீரில் அசைந்து முள்ளம் பன்றிகள் போல ஓடின. முதலையின் முதுகுபோலப் பாழாய்க் கிடந்த களர் நிலத்தில் ஒரு மாடு விழுந்து கிடந்தது. அந்த மாட்டின் நோக்கி அலகை நீட்டியபடி காகம் ஒன்று காத்திருந்தது. உலர்ந்து வெடிக்கும் காட்சிகளெல்லாம் ‘ஈழத்தின் திணை பாலை’ என்கிற விவாதத்தையே ஞாபப்படுதியது.

பாலை நிலத்துக்கு தனது குடி மக்களைத் தாங்கி வைத்திருக்கப் போதிய வளமும் தன்னிறைவும் கிடையாது. அதனால் பொருள் நிமித்தம் பிரிதலும் புலம் பெயர்தலும் நிலத்தில் இருந்து விடுபடக் கல்வி கற்பதும் பாலை வாழ்வின் இயல்பாகி விடுகிறது என்று சிவலிங்கதாஸ் சொல்லுவார். “தென்தமிழ்நாடு, ஈழம் போன்ற பாலைகளில் நிலமை இதுதான். திருநெல்வேலியிலும் யாழ்ப்பாணத்திலும் சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க பொருள் நிமித்தம் பிரிதல் கூர்மை அடைஞ்சிட்டுது.”

பாலன்தான் சிவலிங்கதாஸ¤க்குப் பிடித்த மாணவன். எனினும் அவன் ஒருபோதும் சிவலிங்கதாஸின் கருத்தை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்வதில்லை. தென் தமிழ் நாடும், ஈழமும் பாலைவனம் இல்லையென்று வாதிடுவான். சிவலிங்கதாஸ் பாலைவனம் வேறு சங்கத் தமிழ் குறிப்பிடும் பாலைத் திணைவேறு என்பார். ஒரு வகுப்பில் தென்தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் பாலையும் நெய்தலும் அர்த்த நாரீர்ஸ்வரர்போல இணைந்திருக்கு என்று பாலன் சொன்னான். கிழக்குமாகாணத்தின் கரையோரம் நெய்தல் பின்புலத்தில் பெரும்பகுதி மருத நிலங்கள் என்றும் வாதாடினான். ”கோடியாக்கரைகரைக்கும் அன்னை வேளாங்கண்ணிக்கும் திருச்செந்தூருக்கும் போனனான். எனக்கு கிழக்கு மாகாணத்துக்குப் போனமாதிரித்தான் இருந்தது. இரண்டு கரையோரங்களும் அடிப்படையில நெய்தல்தான் என்ற போது சிவலிங்கதாஸ் குறுக்கிட்டார். ”மருதம் நிலம் பாலையில் நீர்ப்பாசனக் கட்டுமானங்களால் உருவாக்கப் படுகிற திணைதானே என்றார். அவர்களது விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வந்ததில்லை.”

பாலன் மீண்டும் எரிகிற அந்தக் கானல் வெளியைப் பார்த்தான். மாடு இறந்துவிட்டது என்று தோன்றியது. உயிர் இருந்தாலும் இனிப் பிழைக்க வாய்பிராது என்று நினைத்தான். எழுந்து ஒரு வட்டம் போட்ட காகம் மீண்டும் விழுந்து கிடந்த மாட்டின் தலைப்பக்கமாகச் சொண்டை நீட்டியபடியே வந்தமர்ந்தது. நம்ப முடியாத வாழும் ஆசையின் வலிமைக்கு ஈடும் இணையும் ஏது?.
மாடு திடீரென உயிர்த்து வாழும் மூர்க்கத்தோடு வாலை வீசிக் காகத்தை விரட்டியது. காகம் எழுந்து சற்றுத் தள்ளி அமர்ந்தது. அவற்றின் பின்புறமாக கொடிய விதிபோலக் கானல்நீர் நெழிந்து கொண்டிருந்தது. பாலனுக்கு மனசு கனத்தது. “சண்டையால எங்க வாழ்க்கையும் இப்படித்தானே போச்சு” என்று பெருமூச்சு விடவனின் மனப் பாலையில் அகநானூற்று வெள்ளாடியனாரின் யானை வந்து விழுந்தது. அவர் பார்த்தபோது அந்த யானைக்குப் பக்கதில் காக்கை இல்லை. அல்லது வெள்ளடியனார் அந்தக் காக்கையைக் கண்டுகொள்ளத் தவற விட்டு விட்டார். 2000 வருடங்களுக்கு முன்னம் அவர் பார்த்த ”வெக்கை எரிகிற பாழ்நிலத்தில் மாட்டுப் பட்டு தன் பெருமிதமும் வாடிப்போன அந்த யானை, நீர் மருங்கு அறியாது கானல்நீர் மருங்குகளில் ஓடி ஒடி , வழியில் நீர் அற்ற படகாகக் கிடந்து காய்கிறது.” பாலன் இறுதியாகத் திருபிப் பார்த்தபோது விழுந்து கிடந்த மாட்டைக் காணவில்லை. அந்த மாடு காணல் நீருள் கால் புதைய மெல்ல மெல்ல பாலியாற்றின் திசையில் நடந்து கொண்டிருந்தது. கண்களைக் கொத்தித் தின்னத் திரிந்த காக்கை இப்போது நட்புடன் அதன் முதுகில் உண்ணி பொறுக்கியபடி சவாரி செய்து கொண்டிருந்தது.

பாலனின் ஐம்புலன்களும் அதிர்ந்தன. காலமும் இடமும் தகர்ந்து ஒரு கணமாய் நூற்றாண்டுகள் தொலைத்தன. மாடு கிடந்த இடத்தில் இப்ப வெள்ளடியனார் கணட அதே யானை தன் மகத்துவம் எல்லாம் உலர்ந்துபோய்க் கிடந்தது. சற்றுமுன் பாலன் கண்ட காக்கை 20 நூற்றாண்டுகளின் முன்னம் விழுந்து கிடந்த யானையின் கண்களைக் கொத்த முயன்றது. வாழும் ஆசையின் அதிர்வில் கால இடத்தை நொருக்கியபடி ஒரு சாட்டையாக அந்த யானை தன் வாலைச் சொடுக்கியது.

”அந்த யானையை எண்ணுபவர் கண்பனிப்பர். கடப்பவரோ தொடர்ந்து செல்லும் மனவலி உடைந்து தயங்குவர்.” கண் முன்னே அந்த யானை உலர்ந்து கொண்டிருந்ததுதது. பாலனின் நினைவுகளில் வித்துப் போல் கிடந்த அந்தப் பாடல் முழைத்து அவனது உலர்ந்து வெடித்த உதடுகளை அசைத்தது.

“யானை
நீர் மருங்கு அறியாது தேர்மருங்கு ஓடி
அறுநீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை”

கானல் நீருக்குத் தேர் பொருத்தமான படிமமா என பாலன் குழம்பினான். நினைத்துப் பார்க்கையில் பிரிவுதான் ஈழத் தமிழரின் வாழ்வியல் அடிப்படையென்று இப்போது பாலனுக்கும் தோன்றியது. அவனது ஈழத் தாயகம் கானல் ஆறாய் ஓடும் பாலையாகக் கிடந்தது.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் கானல் ததும்பியது. அப்பால் நீர்ப் பறவைகளின் சிறகுகளின் கீழ் குன்றின் சரிவுபோல் உயர்ந்த ஆற்றங் கரையில் மட்டும் பசுமை கோடிட்டிருந்தது. கண்களைக் கொத்தும் வெய்யிலில் வரப்புகளைத்தவிர வயலின் வேறெந்த அடையாளங்களும் இல்லாத அந்தப் பொட்டலில் சைக்கிள் ஓட்டுவது அவனுக்கு தண்டனைபோல மாறிக் கொண்டிருந்தது. வழியில் நிழல் மரங்களுமில்லை. ஆற்றம் கரைக்கு விரைந்து கை கால்களை நனைக்கவும் முகத்திலும் தண்ணீரை வாரி இறைக்கவும் வேட்கையாய் இருந்தது. ஆற்றை அடைய இன்னமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீமிதிக்க வேண்டும். ஆனால் எதிரில் நிலா வெளிச்சத்தில் பயணம் செய்கிற கொண்டாட்டத்தோடு மூன்று சைக்கிள்களில் நான்கு கிராமத்துத் தேவதைகள் வந்தார்கள்.

பகல் நில்லாபோல சைக்கிள் பாரில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கைகளில் ஈர உடைகளோடு தாமரை மொட்டுகளும் காட்டு மலர்களும் இருந்தன. ஆற்றில் அவன் தாமரையைப் பார்த்ததில்லை. எரியும் கோடையிலும் பூக்கும் வரத்தைக் காடு பெற்றிருந்தது. தாமரைப் பூக்களை அந்த தேவதைகள் ஆற்றுக்கு அப்பால் இருந்த கண்மாயில் பறித்திருக்க வேணும். ஆற்றில் இன்னமும் குழிக்கத் தண்ணீரும் காட்டில் மலர்களும் இருக்கிற நற்செய்தியைக் கொண்டுவந்த அந்தப் பெண்களைப் பாலன் மனசார வாழ்த்தினான். அவர்களை வழி மறித்து ஆத்தில தண்ணீர் நிறைய வருகிறதா என்று கேட்க்க நினைத்தான். ஏனோ அவனுக்குக் குரல் எழவில்லை. அதனால் அந்த வெய்யில் குமரிகளின் துணிச்சல் உயர்ந்தது.

“கவிஞர் ஆத்தங்கரைக்குப் போறாரடி” என்று ஒருத்தி சொன்னாள். அவர்கள் தன்னைத் அடையாளம் கண்டதில் உலர்ந்துபோயிருந்த பாலனின் முகம் மலந்தது. நெருங்கும் போது “கவிஞற்ற கற்பனையில நல்ல நிலா எறிக்குதுபோல” என்று ஒருத்தி கிண்டல் செய்தாள். அப்பவும் பாலனுக்கு வாய் எழவில்லை. அவர்கள் வெடித்துச் சிரித்தபடி காட்டு மலர்களையும் குளிக்கும் சவர்க்காரத்தையும் மிஞ்சிய பெண்மையின் வாசத்தோடு அவனைக் கடந்தார்கள். தான் தனியனாக இல்லாமல் தோழர்களுடன் வந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் மெளனமாகப் போயிருக்கக் கூடும். பாலனைக் கடந்தபின்னர் ஒருத்தி அவனுக்குக் கேட்கும் வண்ணம் பண்டார வன்னியன் குதிரையில நீர்விழையாடப் போறாரடி என்றாள்.
“அப்ப அம்பு வில்லைக் கானேல்ல”
“அம்பு வில்லா அவர் ராம பக்தனில்ல முருக பக்தனடி” நான்கு பெண்களும் வெடித்துச் சிரித்தார்கள்.

ஆற்றம் கரையை நெருங்கியபோது வீதி மேடாகிச் சென்றதில் சைக்கிள் மிதிப்பது சிரமமாய் இருந்தது. ஆற்றுப் பக்கமாய் சில பறவைகள் பறந்ததைத் தவிர வேறு எந்த உயிர்ப்பும் தென்படவில்லை. வயல் வெளியின் எல்லையில் கழிவு தண்ணீர் ஓடைப் பக்கமாக பற்றை மறைப்பில் போராளிகள் சிலபேர் நின்றார்கள். அவர்களுள் ஒருவன் துப்பாக்கியை அசைத்து எதோ சொன்னான். அவன் சொன்னது ஒன்றும் கேட்கவில்லை. தன்னை அடையாளம் கண்டுகொண்டு வாழ்த்துச் சொல்கிறார்கள் என்று பாலன் நினைத்தான். அவர்கள் தன்னை மேலே போகவேண்டாம் என எச்சரிக்கக் கூடுமென அவன் நினைக்கவில்லை. சிங்கள ராணுவ நிலைகள் வெகு தொலைவில் இருந்ததால் ஆற்றம் கரைக்கு அவர்கள் வரக்கூடும் என்கிற பயம் இருக்கவில்லை.
காலையில்கூட பாலனைச் சந்திக்கவெனச் சில போராளிகள் விவசாயப் பண்ணைக்கு வந்திருந்தார்கள். அவனுடைய கவிதைகளை ஆர்வமாக வாசிப்பதாகவும் சொன்னார்கள். பிரச்சாரக் கவிதைகள் எழுதுவதில்லையென்று குறைப் பட்டார்கள்.
அவர்களும் பேச்சு வாக்கில் மல்லாவி சுற்று வட்டாரத்துக்கு சிங்கள இராணுவம் வருகிற வாய்ப்பே இல்லையென்று சொன்னது பாலனுக்கு நினைவு வந்தது.
பற்றைக் காட்டுக்குள் நின்ற போராளிகள் மீண்டும் கைகளை அசைத்து பாலனுக்கு எதையோ தெரிவிக்க முயன்றார்கள். திரும்பிப் பார்த்த பாலனும் பதிலுக்குக் கைகளை அசைத்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவர்களோ தொடர்ந்தும் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

நூற்றி எண்பது வருடங்களின் முன்னம் வெள்ளையருக்கு எதிராக பண்டார வன்னியனின் கொடிகள் உயர்ந்த காடு இன்னமும் அந்த ஆற்றம் கரையோரமாகக் எஞ்சியிருந்தது. வெய்யிலிலும் வெக்கையிலும் உலர்ந்து துவண்டபோதும் ஆற்றை அண்மியபோது பாலனுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. எனினும் சரிவில் இறங்கியபோது ஆறு வரண்டுகிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய்விட்டான். ஏமாற்றத்தோடுதான் ஆற்றம் கரை யோர மருத மர நிழலில் தன் மிதிவண்டியை நிறுத்தினான். அவனது ஜொல்னாப் பையில் இருந்த தண்ணீரும் சூடாக இருந்தது. அவன் தண்ணீர் அருந்திய போது நாணற் புதர்களுக்குப் பின் இருந்து ஏதோ ஒரு சின்ன விலங்கு சருகுகள் மீது ஓடியது.

காற்றில் சாம்பர் பறந்தது. எரிந்து கிடந்த யாழ் நூலகம்போல கறுத்து வெறுமையாய்க் கிடந்த ஆறு அவனைத் திடுக்குற வைத்தது. கருஞ் சேறாகக் கிடந்த படுகையில் வெக்கை மட்டுமே புரண்டது. சற்றுமுன் வழியில் தன்னைக் கலாட்டா பண்ணிய பெண்கள் எப்படிக் குளித்தார்கள் எங்கே பூப்பறித்தார்கள் என்று பாலன் ஆச்சரியப் பட்டான். அவர்கள் மோகினிகளா? ஆற்றின் மறு பக்கமாக இறங்கிப் போனால் கூப்பிடு தொலைவில் ஒரு நீர்ப்பாசனக் குளம் இருப்பது பாலனுக்கு ஞாபகம் வந்தது.

இரு புறத்தும் நாணற் புதர்கள் மண்டிக்கிடந்த மணற்கரைகளுக்கு நடுவே பரவிய சேற்றின் மீது பாலி று தண்ணீர்ப் பாம்பாக நெழிந்ததைப் பார்த்து பாலனின் மனசு இரங்கி அதிர்ந்தது.
சேற்றின் மீது புள்ளி அளவில் இருந்து உள்ளம்கை அளவு வரைக்கும் காட்டில் வாழும் அத்தனை உயிரினங்களதும் தங்கள் தங்கள் சுவடுகளைப் பதிவு செய்திருந்தன. சிறிதும் பெரிதுமான பறவைகள் சேற்றில் சுமேரிய எழுத்துக்களால் “நீரின்று அமையாது உலகு” என பல்லாயிரம் தடவை எழுதி வைத்திருந்தது. சற்றுத் தள்ளி கற்பாறைப் பக்கமாய்ச் சிறு குட்டையாகத் தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் கொக்குகள் சில தரை இறங்கின.
காட்டு மரங்களின் இலைகளும் கரையோர நாணல்புதர்களும் நிலத்தில் புரளும் சருகுகளும் வெப்பக்காற்றோடு மனிதத் தொனியில் கிசு கிசுத்தன. வேட்டைக்கார முத்துத்தம்பி காடுதான் பேய் பிசாசுகள் தேவதைகள் சிறுதெய்வங்கள் போன்ற அனுமானுடங்களின் நாடு என்று அடிக்கடி சொல்லுவார். காடு மனிதனின் கற்பனைகளுக்கும் சாகசங்களுக்கும் அச்சத்துக்கும் நம்பிக்கைகளுக்கும் நிறைய இடம் வைத்திருந்தது. குறும்புக்கார பெண்கள் மத்தியில் தனியனாய் அகப்படுகிறபோது ஏற்படுகிற அச்சம் மடமும் சேர்ந்த குறு குறுப்பை அந்த யாருமற்ற அந்த ஆற்றம்கரையில் பாலன் உணர்ந்தான். காடு பல நூறு கண்களால் உற்று நோக்கிகொண்டிருக்கும் உணர்வில் பாலனுக்கு மயிர் கூச்செறிந்தது.

கரையின் இரு மருங்கிலும் பருத்துத் தொந்திவைத்து முறுகித் திரண்ட கிழட்டு மருத மரங்கள் வாட்டத்துடன் அணிவகுத்து நின்றன. அவற்றின் நிழலில் ஒதுங்கிய இளம் மருதங்கன்றுகளைக்கூட கொடிய போரைப்போல பரவிய வெக்கை விட்டு வைக்கவில்லை. வாடி வதங்கி உயிர் வற்றும் நாணல்கள் போராளிகளின் மரணச் சடங்குகளில் ஒலிபரப்பப்படுகிற செனாய் வாத்தியமாய் சுடு காற்றில் அழுதது.

பாலி ஆற்றைப் பார்க்க அவனுக்குக் கவலையாக இருந்தது. ஒருசில மாதங்களின் முன்னம் பார்த்த ஆறா இது? அதே படுகைதான் ஆனாலும் ஓடும் வெள்ளம் வேறு. மனித இனங்களின் வரலாறும் தாயக மண்ணின் படுகையில் புதிசு புதிசாய் வந்து போகிற தலைமுறைகளின் கதையாகவே பாலனுக்குத் தோன்றியது. காலம் காலமாய் பண்டார வன்னியனைப் போன்ற விடுதலை வீரர்களின் புகலிடமாய்ச் சிறக்கிற வன்னிக் காட்டின்மீது பாலனுக்கு மனமோகனமான ஈடுபாடிருந்தது. பெருக்கோ வரட்சியோ எப்பவுமே “எல்லாம் வெல்லலாம்” என்று நம்பிக்கை தருகிற பாலியாறு வற்றிக் கிடந்தாலும் அவனது கவிமனசில் தமிழரது தாயகக் கனவின் குறியீடாகவே நிறைந்திருந்தது. வன்னிக் காட்டுக்குள் கால்வைத்து விட்டாலே “எல்லாம் வெல்லலாம்” என்று தோன்றும்.

ஒரு புறத்தில் வெய்யில் பாலியாற்றை வரட்டியது. மறு புறத்திலோ அதே வெய்யில் பாலியாற்றை உயிர்ப்பித்துப் போசிப்பதற்காக ஏழு சமுத்திரங்களையும் ஆவியாக்கிக் குடித்து முகில்களாகக் கக்கிக் கொண்டிருந்தது. இயற்கை விதிகளின் முரண் நகையை எண்ணி பாலன் வியப்படைந்தான். ஒரு புறத்தில் சிங்கள அரசின் இன ஒடுக்குதல் ஈழத் தமிழர்களை அல்லல் படுத்தி ஆற்றாது கண்ணீர் சிந்த வைக்கிறது உண்மைதான். எனினும் அதே இன ஒடுக்குதல் மறு புறத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒரு ஓக்டபஸ்போல ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறதே. பாலி ஆற்றைப்போலவே தமிழர் வாழ்வும் மீண்டும் பெருகி நிறையும் என்பதில் பாலனுக்குத் துளியளவும் சந்தேகம் இருக்கவில்லை. இறுதியில் ‘எல்லாம் வெல்லலாம்’ என்று அவனுக்கும் தோன்றியது.

இந்து சமுத்திரக் கரைகளிலும் மேற்குலகிலும் தமிழர்கள் இருந்தார்கள். கடல் கடந்தால் இரண்டு மணித் தூரத்தில் தமிழகம் இருந்தது. இதற்கு முன்னம் கடலில் கால்கூட நனைத்திருக்காத சிறுவர்கள் பலர் யுதப் பயிற்சிக்குப் போகிறோம் என்றபடி நாளாந்தம் படகேறிக் கொண்டிருந்தார்கள். விரைவில் ஈழம் உருவாக வேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி உறுதியாய் இருக்கிறாராம். இதுதான் இன்று காலையில் பாலன் கேட்ட கடைசி நற் செய்தியாக இருந்தது. கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் வன்னியை ஊடறுத்துச் செல்லும் ஏ 9 பாதையிலும் நிலமை மோசமாக இருந்தது. ஈழத்தமிழர் வாழ்வும் வளங்களும் பாலியாறு போலவே வரண்டு கிடந்தது. எனினும் சரணாகதியை நிராகரித்து விடுதலைப் போருக்கு எழுகிற இளைய தலை முறையும் தமிழகத்தில் இருந்து அடிக்கடி கிடைக்கிற உறுதிப் படுத்தப் படாத நற் செய்திகளும்தான் “எல்லாம் வெல்லலாம்” என்றபடி நிமிர்ந்து மரணத்தை மீறி வாழ்கிற நெஞ்சுரத்தைத் தந்தது.

எதிர்க்கரையில் சுளன்றடித்த காற்றில் சாம்பல் பறந்தது. இரவு வேட்டைக்காரர்கள் நெருப்பு மூட்டி யிருக்கவேணும். குளிர் காய்ந்திருப்பார்கள் அல்லது தண்ணீர் குடிக்கவந்த காட்டுப் பன்றியைச் சுட்டு மயிரைப் பொசுக்கியிருப்பார்கள் என்று பாலனுக்குத் தோன்றியது. காற்றில் படர்ந்த சாம்பர் சூழலின் வெக்கையையும் விரக்தியையும் அதிகரித்தது. எங்க வாழ்க்கை எப்பவும் கண்ணீரும் இரத்தமும் சாம்பருமாய்த் தானே இருக்கு என்று முனுமுத்துக் கொண்டான்.

பாலன் சின்ன வயசுக்குள்ளேயே நிறைய நெருப்பையும் சாம்பரையும் பார்த்திட்டான். அவனது யாழ்ப்பான நகரம் தவணை முறையில் காக்கிச் சட்டை போட்ட சிங்களக் குண்டர்களால் மாறி மாறி எரியூட்டப் பட்டது. 1983ம் ண்டுக் கலவரத்தின் போது முஸ்லிம் இளைஞனின் வேடத்தில் இருந்த பாலன் கொழும்பில் தெருத் தெருவாக தமிழர்களது கடைகளும் வீடு வாசல்களும் எரிவதைப் பார்த்துக் கண்ணீர் வடித்திருக்கிறான். தமிழர்களையே உயிரோடு போட்டுக் கொழுத்திய சாம்பரையே பார்த்திருக்கிறான். எனினும் சாம்பர் மேடும் எரிந்த சுவர்களுமாக புகை படிந்த யாழ்ப்பாணம் நூலகத்தைப் பார்த்ததுபோல பெரிய அதிற்சி அவன் வாழ்வில் ஏற்பட்டதில்லை. சிங்களப் படைகள் யாழ்ப்பாண நூலத்தில் இட்ட தீ மூன்று வருடங்களுக்குப் பின்னும் அவனது மனசுக்குள் எரிந்துகொண்டிருந்தது. பாலனுக்கு கண்களுக்குள் குட்டித்துக்கம் கனத்தது. ஆற்று மணலில் கொஞ்சநேரம் கண்ணயர நினைத்து சுற்றும் முற்றும் திருபிப் பார்த்தான்.

தீவெட்டிக் கொள்ளைக் காரனாய் சூரியன் உலகின்மேல் இறங்கிக் கொண்டிருந்த அந்த நடுப் பகல் முழுக்க கவிஞன் பாலன் பாலியாற்றங்கரையே தஞ்சமென்றிருந்தான். பாலியாற்றை மையமாக வைத்து தனது காலத்தின் கதையை எழுத வேண்டு மென்பதே தற்போதைக்கு அவனது கனவாக இருந்தது. குடும்பச் சொத்தாக வன்னியில் ஒரு விவசாயப் பண்ணை இருந்தது பாலனுக்கு வசதியாகப் போய்விட்டது. அதனால் பாலனுக்கு அடிக்கடி வன்னிக்குப் போய் வர வாய்த்தது. இப்போதெல்லாம் அவன் வன்னிக்கு வருகிற போது ஜொல்னாப் பையில் சாராயப் போத்தலும் கையில் ஒலிப்பதிவுக் கருவியுமாகவே வருகிறான். எண்பத்தைந்து வயசுப் பெடியன் என்று பாலன் எப்பவும் கிண்டல் செய்யும் வேட்டைக்காரர் முத்துத்தம்பி சாராயப் போத்தலோடு சேர்த்து வன்னிமண்ணின் கதைப் புதையல்களையும் திறப்பார்.

பெரும்பாலான கதைகள் துரத்துக் காடுகளுக்குத் தங்கு வேட்டைக்குப் புறப்படுவதோடு ஆரம்பிக்கும். இரவுகளில் பேய்கள் முனிகள் தேவதைகள் சிறு தெய்வங்கள் என்று எல்லாமே காட்டினுள் முத்துத்தம்பியைப் பின் தொடரும்.
மோகினிப் பேய்க்கு கொஞ்சமும் இடம் கொடுத்து விடக்கூடாது. அது கண்ணையும் இடுப்பையும் வெட்டி வெட்டி நடந்து பூசைமணிபோல சிரித்து யாரையும் கவிழ்த்துப்போடும்.
வேட்டைக்காரன் சுத்த பத்தமாய்க் கற்போடு இருக்கிற வரைக்கும் காட்டுத் தெய்வங்கள் அவனைக் கைவிடாது காக்கும் என்று அவர் நம்பினார். அதனால் பேய்களதும் மோகினிகளதும் பருப்பு இந்த முத்துதம்பியிடம் வெந்ததில்லை என்று ஒருமுறை பெருமையாகச் சொன்னார். வேட்டைக்குப் புறப்படும்போதே காட்டு வழியில் எதிர்ப்படும் கொடிய விலங்குகளின் வாயை மந்திரத்தால் கட்டிவிடுவாராம். வேட்டை முடிந்து வீடு திரும்பும்போது மறக்காமல் கட்டுக்களை அவிழ்த்து விடவேண்டும் அதுதான் தர்மம் என்பார். வாய்க்குப் போட்ட மந்திரக் கட்டை அவிழ்க்காவிட்டால் மிருகங்கள் பட்டினியால் இறந்துவிடும். முயலும் மானும் மயிலும் மட்டுமல்ல சிறுத்தையும் கரடியும் கழுகும் சேர்ந்ததுதான் வன்னிக் காட்டின் தர்மம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கொல்வது பாவம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

வேட்டை டியதும் குண்டடிபட்ட மிருகத்தின் ஈரலை வெட்டி தொடரும் பேய்களுக்கும் முனிகளுக்கும் பலியாக வீசிவிட்டு இறைச்சியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவாராம். அதுதான் தர்மம் என்பார்.

கொன்றபாவம் தின்றிடத் தீரும் என்பதுதான் வேட்டைக்காரர் முத்துதம்பியின் கருத்தியலாக இருந்தது. உண்பதற்க்கன்றி வேறு எதற்க்காவும் கொல்லமாட்டார். அடுப்பெரிக்கவும் வீடு கருவிகள் செய்யவும் விவசாயத்துக்குமன்றி காட்டில் ஒரு தடியைக்கூட முறிக்கமாட்டார். முத்துத் தம்பியின் உறவில் I became romantic என்று அடிக்கடி முனுமுக்கிற அளவுக்குப் பாலன் மோகனனாகி விட்டிருந்தான். அவன் காட்டைக் கோவிலாக வணங்கி நேசித்த வன்னி மூதாதைகளின் ஆன்மாவை வேட்டைக்கார முத்துத்தம்பியில் தரிசித்தான். வன்னி மக்களிடமிருந்து கற்ற ஞானம் அவனை மேம்படுத்தியது. அந்த ஞானம் நான் கடவுளுக்கு அடுத்த யாழ்ப்பாணத்தான், நான் உயர்சாதி, எம்மவர்கள் தான் படித்தவர்கள் எங்கள் யாழ்பாணத்தாரை ஒருத்தராலும் வெல்ல ஏலாது. எங்கள் மூழையாலும் தயவிலும்தான் இந்த உலகமே உருள்கிறது என்கிற பாலனின் மனசுள் குவிந்திருந்த வரலாற்றின் பீயை எல்லாம் கழுவித் துடைத்தது. அவனது யாழ்ப்பாணத்துத் திமிரை உடைத்துச் சிதற வைத்த வன்னி வாழ்வின் கருத்தியல்களின் முகமாகவே அவனுக்கு முத்துத்தம்பி தோன்றினார்.
எங்கிட மூதாதையள் உயிர் ஆபத்தெண்டாக்கூட மிருகங்களைக் கொல்ல மாட்டினம் தம்பி என்று சொல்லுவார். “ஆபத்தெண்டா அதிகமா தனியன் யானைதான் தம்பி. அதுதான் அடிக்கடி வழியிலில நிக்கும். கறடியும் எருமைக் குழுவனும் கண்டா துரத்துமடா தம்பி. புலி வழியிருந்துதெண்டா தானா விலகிப் போயிரும். அப்படிக் குறுக்க வந்தாலும் எங்கிட ஆக்கள் சுடமாட்டினம். மந்திரத்தால கட்டப் பாப்பினம் இல்லாட்டி எப்பிடியும் காட்டுக்குள்ள கரைஞ்சு விலகிப் போகத்தான் பாப்பினம். யாழ்ப்பாணத்தார் மாதிரி எடுத்ததுக்கெல்லாம் துவக்கை நீட்ட மாட்டினம். தம்பி. நாங்கள் மிருகங்களோடகூட ஏலுமான மட்டும் பேசிப் பாப்பமடா தம்பி” என்றார். முதலில மிருகங்களை யார் கேட்டுக் கேள்வியிலாமச் சுடதெண்டு தெரியுமாடா தம்பி என்று ஒருமுறை கேட்டார். வன்னி ராசாக்களிட்ட யானை வாங்க வந்த பீ பறங்கிதான் தர்மம் இல்லாமல் மிருகங்களைச் சுடதொடங்கினது. சொல்லிறனெண்டு கோவிச்சுப்போடாத அவங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தார்தான். அவைக்கும மனிசரோடயே பேசத் தெரியாது. மிருகங்களோட எப்படிப் பேசுவினம். காட்டுக்கிள அவைக்குச் சுட மட்டும்தான் தெரியும். இது எங்கிட காடாடா தம்பி. கண்டபடிக்குச் சுடுகிறது தர்மம் இல்லையாடா தம்பி. தர்மங்கள் அழிஞ்சா எப்பிடித்தம்பி பூமாதேவிக்கு மழை பெய்யும். எப்படித் தம்பி காடும் குளிரும். எப்பிடித் தம்பி பாலிஆத்தில தண்ணி வரும். எப்பிடி வயல் விழையும் எப்பிடித் தம்பி கோயிலுக்குப் பூசையும் பலியும் படைப்புகளும் செய்யிறது. எல்லாம் போயிற்றுது தம்பி என்று கோபப் படுவார்.

இப்படிக் கதைகள் பாலனுக்குப் புதியவை. சாதி சமயச் சித்தாந்ததைத் தவிர அறிவு சார்ந்த எல்லாமே வெள்ளைக்காரரின் அன்பளிபென்றுநம்புகிற யாழ்ப்பானத்துப் பையனாகத்தான் அவனும் இருந்தான். அவனைப் பொறுத்துக் கலைகளின் ஊற்று மட்டும் சென்னை மேட்டுக் குடிகளிlல் ரம்பித்தது.

பாலனுக்கு வேட்டைக்கார முத்துத் தம்பியும் வன்னியில் சந்தித்த செல்லமுத்து அப்பாத்தை போன்ற மூதாட்டிகளும் சொன்ன கதைகள் புதிய உலகமொன்றைத் திறந்துவிட்டிருந்தது. அவர்களது உவமைகளும் குறியீடுகளும் நிறைந்த கவிதை மொழி புதிது. கதை சொல்லும் பாணியும் புதிது. குறியீட்டுத் தன்மையுள்ள அவர்களது கதை மாந்தர்களும் அவனது கவிமனசை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பாலன் புராணத்து மந்திர வாழை கண்டெடுத்த சாகச இளவரசனைப் போல உணர்ந்தான். இப்படித்தான் அவன் தொலைந்துபோன தன் மூதாதையரின் கதை சொல்லும் மந்திர நாவை வன்னிக் காட்டினுள் கண்டெடுத்தான்.

வேட்டைக்கார முத்துத்தம்பி ஒரு சிறுவனுக்குக் சொல்வது போல பாலனுக்குப் புதுசு புதுசா கதை சொல்லுவார். காட்டுக்குள் வன்னி ராசாக்களின் புதையல்களை தாய்க்குத் தலைப் பிள்ளையான ஆண்மகவைப் பலிகேட்கும் பூதங்கள் காவல் காக்குதாம். அப்படி புதையல்களுக்குக் காவலிருக்கும் பூதங்களை எல்லாம் அவர் பார்திருக்கிறாராம். பிள்ளை பலிகேட்கும் பூதமங்களும் அவை கட்டிக் காக்கும் ராசாக்களின் புதையல்களும் பாலனுக்கு ஆர்வம் தரவில்லை. ஆனாலும் அவனுக்கு காலம் காலமாக வன்னிக் காட்டில் இந்த மக்கள் காத்துவருகிற கலை ஞானப் புதையல்கள் ஆர்வம் தந்தது. அவற்றை எல்லாம் கண்டெடுக்கவேணும் என்கிற தீராத ஆசை ஏற்ப்பட்டது. அதற்காக அவன் ஒரு பேயைப்போல தலைமுறைகளாகப் பீடித்துவருகிற யாழ்ப்பாணத்து வெள்ளாளத் திமிரை தயக்கமில்லாமல் பலி பீடத்தில் வைத்தான்.

கதை கண்டுபிடிக்கிற விருப்பத்தோடு சென்ற வருடம் யாழ்ப்பாணம் பல்கலைக் களகத்தில் இருந்து வரலாற்றுத்துறை விரிவுரையாளர்கள் இந்திரகுமாரனையும், இரகுநாதனையும் வன்னிக்கு அழைத்து வந்தான். முத்துதம்பி வழிகாட்ட பகலில் இடிபாடுகளைத் தேடி எலோரும் உளவு யந்திர பெட்டியில் காடு காடாக அலைவார்கள். அவர்கள் பார்த்த பல இடிபாடுகளில் அரசர்கள் காலத்துப் போரில் மாறி மாறி உடைக்கப் பட்ட கோவில்களும் விகாரைகளும் இருந்தன. அவற்றை அண்டி ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் புதையல் தேடுகிறவர்கள் அகழ்ந்த குழிகளும் இருந்தன.

பகல் முழுக்க சூரியகுமாரனும் இரகுநாதனும் இடிபாடுகளைப் புரட்டிப் பார்ப்பதும் சட்டிபானை ஓடுகளைத் தேடிப் பொறுக்குவதுமாக இருந்தார்கள். உடைந்து கிடந்த சிலைகளை ஆராய்ந்து படங்கள் எடுத்தார்கள். காட்டுக்குள் கண்டுபிடித்த கல்வெட்டுகளை மையால் நனைத்து காகிதத்தை அழுத்திப் பிரதி பண்ணினார்கள். ஒரு புழிய மரத்தின் நிழலில் தரித்தபோது ரகுநாதன் VOC 1735 என்று எழுதிய செப்பு நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். இது பதினெட்டாம் நூற்றாண்டில வன்னிக்கு வந்த காசு, அப்ப யானைதான் பெரிய ஏற்றுமதிப் பொருள். என்று இந்திரகுமாரன் சொன்னார். “அப்ப இந்தக் காட்டுகளில பிடிச்ச யானையளுக்கு வங்காளம்தான் பெரிய சந்தை” என்று ரகுநாதனின் கருத்தையும் இந்திரகுமாரன் ஆமோதித்தார்.

வேறு ஒரு கட்டிடத்தை கிளறிப் பார்த்தபோது ஒரு புதையல் குழிக்குப் பக்கத்தில் உடைந்த சட்டிபானை ஓடுகளையும் ஒரு சிறுவனின் மண்டை ஓட்டையும் கண்டு பிடித்தார்கள்.

சூரியகுமாரனும் இரகுநாதனும் வன்னியில் தங்கியிருந்த மூன்று இரவுகளும் நிலா உடைந்து பாலாகக் கொட்டியது. மது அருந்திக் களித்தபடி காடுகளில் பார்த்த இடிபாடுகளில் பல மாறி மாறித் தாக்கி அழிக்கப் பட்ட பெளத்த விகாரங்களும் சிவன் கோவில்களும் என்று பேராசிரியர் இந்திரகுமாரன் சொன்னார். துணுக்குற்று இந்திரகுமாரனைப் பார்த முத்துத் தம்பியின் முகம் இருண்டது. இனத் துரோகிகளுக்கு உதவிவிட்டோமோ என அந்த வேட்டைக்காரரின் மனசு அச்சமடைந்தது.
“எப்பிடி தம்பி நீங்க அப்படிச் சொல்லுவீங்க. எங்க வன்னியரிண்ட ஐயனை எப்படி புத்ரெண்டு சொல்லுவிய.” முத்துத் தம்பி கலவரப் பட்டார்.
“சொல்லவந்தத பொறுமையா கேழுங்க” பேராசிரியர் இந்திரகுமாரன் வேட்டைக்கர முத்துத் தம்பியை தோழில் தொட்டு அமைதிப் படுத்தினார்.
“ஐயா நீங்க என்னத்த படிச்சுக் கிழிச்சீங்க. இப்டிச் சொன்னா நாளைக்கே புத்த பிக்குகள் வந்திடுவாங்க தம்பி. சும்மா வரமாட்டாங்க. அரச மரக் கண்டைத் துக்கிக் கொண்டு, சிங்களக் குண்டரோடையும் ஆமி பொலிசோடயும் உருக்குள்ள வந்திடுவாங்க. மலையில அப்படித்தனே நடந்திச்சு.”
“மலையா, எந்த மலையை சொல்லிறீங்க” பேராசிரியர் இந்திரகுமாரன் கேட்டார்.
“முத்துத்தம்பியர் மலையென்று சொல்லிறது திருகோணமலையைத்தான்” ரகுநாதன் பதில்சொன்னார்.
முத்துதம்பிக்கு துர் நிமித்தங்கள் தெரிந்தது. கறையான்கள் அமைத்த புற்றில் மஞ்சள் பாம்புகள் குடியேறுவதை கண்டார். வானத்தில் கள் சிந்திய நிலாவையும் தன்னோடு சுற்றி இருந்து குடிப்பவர்களௌயும் அவர் மறந்தார். தொடர்ந்தும் அதிர்ச்சிதரும் தரிசனங்களை அவர் கண்டார். இராணுவ வண்டிகள் ஊருக்குள் வருகின்றன. சிங்களத்தில் பேசியபடி பொலிஸ்காரரும் இராணுவதினரும் புத்த பிக்குகளும் மல்லவிச் சந்தியில் இறங்குகிறார்கள். ஒரு அரசம் கன்றை அவர்கள் மல்லவி சந்தியில் நட்டுகிறார்கள். பின் வீடுகளைக் கொழுத்தி முத்துதம்பியையும் ஊரவரையும் துரத்துகிறார்கள். வண்டியில் விலங்குகளோடும் சிறைச்சாலை ஆடைகளோடும் வந்து இறங்கும் சிங்கள கைதிகள் தமிழர்களது வீடுகளில் குடியேறுகிறார்கள். தமிழர்கள் அகதிகளாகின்றனர். அகதி முகாம்களில் இருந்து காட்டுக்குள் வருகிற பெடியள் பெட்டையளுக்கு முத்துதம்பியும் துப்பாக்கி சுடப் பழக்குகிறார்.

சாமி வந்ததுபோல வேட்டைக்கார முத்துத் தம்பியரின் உடல் நடுங்கியது. “காட்டிக்கிள இருக்கிற இடிஞ்ச புத்தகோயிலை புத்தகோயில் எண்டு மட்டும் சொல்லிப் போடாதையுங்க.” என்று முத்துத் தம்பி கத்தியபோது முற்றத்து மரங்களில் பறவைகள் மிரண்டன..
“இப்படிச் சொல்லித்தான் ஈரப்பெரிய குளமெல்லாம் தமிழரைக் கலைச்சுப் போட்டாங்க. 1958ம் வரியமே ஊருக்கிள நிண்ட எல்லா அரசமரத்தையும் வெட்டீற்றம். புத்தர் சிலையளையும் உடைச்சுக் காட்டுக்குள்ள எறிஞ்சிட்டம். இப்ப எங்கிட கண்ணுக்குத் தப்பிக் கிடந்த புத்தர் சிலையள்மாதிரி நீங்க ரெண்டுபேரும் வந்து நிக்கிறியள்.”
பேராசிரியர் இந்திரகுமாரன் ஆடிப்போனார். “அமைதியாய் இருங்க அமைதியாய் இருங்க” என்றபடி இரகுநாதன் எழுந்துவந்து வைரமுத்தரைக் கட்டிப்பிடித்தான்.
”பெளத்தம் சிங்களவரிண்ட சொத்தில்லை பெரியவர். இதொண்டும் சிங்களவற்ற தேரவாத விகாரைகளுமில்லை. எங்க மூதாதையள் மகாஜான பெளத்தர்களாய் இருந்தவை. இது மகாஜான பெளத்தக் கோயில்கள் பெரியவர்.” சாமியாடிய முத்துதம்பியர் மெல்ல மெல்ல வளமைக்குத் திரும்பியது இப்பவும் பாலனின் மனசில் நிழலாடியது.
கதையை மாற்றி வேட்டைக்கார முத்துதம்பியை சந்தோசப் படுத்துவதற்காக ரகுநாதன் இறுதித் தமிழ் சிற்றரசனான பண்டாரவன்னியனின் பெருமைகளைப் பேச ஆரம்பித்தார். எங்க கொப்பாட்டன்ர கொப்பாட்டனுக்கு தகப்பன் பண்டார வன்னியனோட நகமும் தசையுமா இருந்திருக்கிறாராம் எங்க பாட்டான் சொல்லித் தந்தவர்.” என்று முத்துதம்பி பெருமிதப் பட்டார்.
“வேற என்ன சொன்னார்”
“அவன் பெரிய வீரன்தான் ஆனாலும் சரியான மூர்க்கன் எண்டு சொன்னார். யாற்ற சொல் புத்தியும் கேக்கானாம்.”
வரலாறு என்ன தேவதைக் கதையா, மனிதர்களின் கதைதானே” என்று இந்திரகுமாரனே அன்று அந்த விவாதத்தை முடித்துவைத்தார்.
அப்போது பாலனுக்கு ”வரலாறு தேவதைக் கதை இல்லாவிட்டாலும் தேவதைக் கதைகள் எல்லாம் வரலாறுதானே” என்று தோன்றியது. அதனைச் சொல்ல முன்னம் காலி மதுக் கிண்னங்களைத் எடுத்துக்கொண்டு இந்திரகுமாரனும் இரகுநாதனும் எழுந்துவிட்டார்கள். முத்துதம்பியும் தன் கையில் இருந்த கிண்ணத்தை பாலனிடம் நீட்டியபடியே “ஐயோ எனக்கும் நேரம்போச்சுது கிழவி பாத்துக்கொண்டிருக்கும் தம்பி போயிற்றுவாறன்” என்றார்.

பாலன் பாலியாற்றங் கரைகளை மீண்டும் நோட்டம்விட்டான். போன வருடம் இந்திரகுமரனையும் இரகுநாதனையும் பாலியாற்றுக்கு அழைத்துவந்தபோதும் இப்படி வரண்டு ஆற்றுப் படுகை சேறாய்க் கிடந்த கோடைகாலம்தான்.
“என்ன பாலன் கவிதையெண்டாலும் பாலி ஆற்றைப் பற்றி எதோ நைல் நதியை கங்கை நதியைப் பற்றி எழுதிறமாதிரி இவ்வளவு பொய் எழுதிறதா. பொய்க்கும் ஒரு கணக்கு வளக்கு வேண்டாமா” என்று செல்லமாக அவனைத் துரத்தி முதுகில் தட்டினார்.

பாலனுக்கு வெக்கை தாங்க முடியவில்லை. காட்டுக்குள் இருந்து அனுமானிடர்கள் பார்த்துக் கொண்டிருக்கிற உணர்வு மீண்டும் அவனுக்குள் ஓங்கியது. சற்றுத்தள்ளி ஆற்றோரமாக முதிய மருத மரத்தின் வேரடியில் தலை சாய்த்துத் தூங்க வசதியாக மணல் மேடிட்டிருந்தது. சென்ற முறை வந்தபோது தண்ணீர் சுழித்தோடிய இடங்கள் அவை.
இன்றோ நிலமை எதிர் மாறாக இருந்தது.

எல்லாம் இழந்து வறுமைப் பட்ட ஒரு பெரு நிலக்கிளான் தன்னுடைய குலத்தெரு வீதியில் நடைமெலிந்தது கூனிக் குறுகிச் செல்வதுபோல பாலியாறு சந்தடியின்றி நகர்ந்து கொண்டிருந்தது.
“குடை நிழல் இருந்து
குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர்
நண்ணினும் நண்ணுவர்”
என்கிற சின்ன வயதில் படித்த பாடலை அவனது உதடுகள் மீட்டியது. எனினும் ஆற்றுக்கு மரணமில்லை என்பதையும் அவை நொடித்துப் போகாமல் பீனிக்ஸ் பறவையாய்த் தம்மை புனரமைத்துக் கொள்கின்றன என்பதையும் அவனுக்கு உணர்த்தும் வகையில் அங்கு காரியங்கள் பல நிகழ்ந்தது. போரிலும் பஞ்சத்திலும் நோஞ்சானாய் நசிந்தபோதும் தன் பிள்ளைகளைக் காக்க ஓடி ஓடிச் செயல்ப்படுகிற ஒரு அன்னையின் துடிப்பை மட்டும் அந்தச் சிற்றாறு ஒருபோதும் இழந்துவிடவில்லை. அது தனது வரண்ட படுகையில் வாடி வதங்கிய நாணற்புதர்களின் வேர்களை நக்கி நனைத்தது. சுடு சேற்றுக்குள் வெந்துகொண்டிருந்த அல்லிக் கிழங்குகளை குளிரவைத்து நம்பிக்கையூட்டியது. இறந்த விலங்கில் இருந்து களருகிற தெள்ளுப் பூச்சிகளையும் குருட்டு ஈக்களையும் திட்டித் தீர்த்தபடி சிறகு விரித்த நீப் பறவைகளை அந்த ஆறு புரிந்து கொண்டது. இன்றுபோய் அடுத்த மாரிக்குக் வாருங்கள் என்று பரிவோடு அந்த நன்றி கெட்ட பறவைகளிடம் று பரிவோடு சொன்னது.
எஞ்சியிருந்த று காற்றில் ஈரமாகத் தொற்றி எட்டமுடியாத கரையில் உலர்ந்துகொண்டிருந்த புல் பூண்டுகளின் விதைகளின்மீது கவிந்தது. அவற்றிடம் தளராமல் மாரிவரைக்கும் மண்ணுக்குள் பதுங்கி இருங்கள் என்று புத்தி சொன்னது. நாணல் மண்டிய சகதிக் குட்டைக்குள் ஒப்பாரி வைத்த மீன்களை நோக்கி நிறுத்துங்க எனக் குரல் கொடுத்தது. முதல்ல முட்டைகளை மண்னலுக்குள்ள புதைச்சிட்டு சேற்றுக்குள்ள தலைமறைவாகிற வழியைப்பாருங்க, ஒப்பரியை விடுங்க வாழ்வுக்காக ஆசையோட போராடணுமல்லா என அதட்டியது. அவற்றின் வார்த்தைகள் போருக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக கிழருகிற பலனின் மனசுக்கும் எழுச்சியும் புத்துணற்ச்சியும் தந்தது.

பாலன் முதிய மருத மரத்தின் அருகில் சென்றான். வேர்களின் பக்கமாக மேடிட்டிருந்த மணலில் குந்திச் சரிந்து மருத மர வேர்களில் தலை சாய்த்து வானத்தைப் பார்த்தான். உச்சியில் இருபுறத்து மருதமரங்களும் கைகோர்த்து முகடு கட்டியிருந்தன. பசிய தழை முகட்டின் மேலே பரந்த வானம் வெள்ளை நெருப்பாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவனது ஆன்மாவில் இருந்து ஆழ்ந்த பெருமூச் சொன்று நெஞ்சாங்கூட்டை உடைத்தது. அதன் எதிரொலிபோல பல பெருமூச்சுகள் தொடர்ந்தன. காட்டின் அகலத்தில் இருந்தும் நாணல்கரைகளின் ஆழத்தில் இருந்தும் மருதம் கொப்புகளின் உயரதில் இருந்தும் பெருமூச்சுகள் பாலனைச் சுற்றி வழைத்தன. எதிரொலியா, பிரமையா அல்லது பிரபஞ்சத்தின் குரலா?

பாலன் துணுக்குற்றுப் போனான். மீண்டும் காடுகள் விம்மித் தணிந்தபோது அச்சமடைந்தான். பாட்டி கதைகளில் வருகிறதுபோல நிசமாகவே காடுகள் பேசுதல் கூடுமா? ஊழியின்முன்னே சாபத்தால் மரங்களாய்ச் சமைந்த தேவர்களும் தேவதைகளும்போல காடு அவனைச் சூழ்ந்து நின்றது. சினத்துடன் “வேலில்லாத கீழ்பிறப்பு” என பக்கதில் நின்ற முதிரை மரம் அவனைச் சபித்தது. வேரில்லாத கழிசடைகளில பறவையளை நம்பினாலும் இந்த மனிசனை மட்டும் நம்பக்கூடாது என்று வேறொரு முதிரை மரம் சினந்தது. போர்க்களத்தில் பாய்ந்து வருகிற வருகிற மோட்டார்செல்களின் சீட்டி ஒலிபோல நாலாபுறத்தில் இருந்தும் அவன்மீது பெருமூச்சுகள் குற்றம் சுமத்தும் தொனியில் இறங்கிவந்தன. வெகுண்ட கலைமான்களைப் போல மருத மரங்கள் கொம்பர்களை சிலுப்பி அசைத்தது. பாலனின் பொறுமை உடைந்தது. அச்சத்தை மிஞ்சிய சினத்துடம் என்னில என்ன குற்றம் என்று பாலன் கத்தினான்.
மீண்டும் பெருமூச்சு விட்ட மருத மரமொன்று ”உங்களைத் தெரியுமடா எங்களுக்கு” என்று பதிலுக்குக் கத்தியது. “வேரோடும் விழுதோடும் நூறு நூறு வருசம் இந்தக் கரையில இருக்கிறமடா. எங்களுக்குத் தெரியாதாடா உன்னை” என்றபடி மருத மரமொன்று அவன்மீது விழுவதுபோல கோபத்தோடு சரிந்து வந்தது.
“ஆறு வற்றும்வரை மீன்கொத்தி காட்டில். மரம் தறிக்கும்வரை மனிசன் காட்டில” காட்டுக்குள் இருந்து ஒரு மரத்தின் குரல் கேட்டது. “இது எங்க முன்னோர்கள் வார்த்தை. அடங்கு அடங்கு அடங்கடா.” கோடையின் வெக்கையை மீறிக் காட்டின் கொதிப்பு ஏறியது. நிலமை கட்டுமீற முன்னம் நொந்து நூலாகிப் போயிருந்த பாலியாறு காட்டையும் மருத மரங்களையும் ஊஸ் என்று அதட்டி அடக்கியது.
பின்னர் பாலனைக் கனிவோடு மகனே என்று விழித்தது.
பாலன் அம்மா என்று நெகிழ்ந்தான்.
அழுத்தமாக “எழும்பு மகனே” என்றது பாலியாறு. “எழும்படா மகனே, எழும்பு, உனக்குக் கீழ ஒரு பொம்பிளைப் பிள்ளையல்லாடா படுத்திருக்கு”
பாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்தைபோல தலையால் வட்டமிட்டபடி பேந்தப் பேந்த முழித்தான்.
“அவள் சின்ன வயசில அறிமுகமாகி எங்க கண்ணுக்கு முன்ன எங்க மடியில வளர்ந்த பிள்ளையடா. எல்லா மருத மரங்களுக்கும் அந்த நாணல் புதர்களுக்கும் ஏன் இந்தக் கரையோரக் காடுகள் முழுதுக்குமே சினேகிதியாய் வாழ்ந்தவளடா. பாவம் கோடைகால நதிகளை மிஞ்சிய துரத்தோடும் வாலைப் பருவக் கவிகளை மிஞ்சிய கனவுகளோடும் படுதிருக்கிறாள். முதல்ல எழுந்திரடா”
அதிற்ச்சியடைந்த பாலன் என்ன எனக்குக் கீழ ஒரு பொம்பிளையா என்று அலறியடித்துக் கொண்டு துள்ளி எழுந்தான். அவன் படுத்திருந்த மணல் மேட்டிலிருந்து, மண்ணுக்குள் இருந்து ”தாகமாயிருக்கு தண்ணி தண்ணி” என்று ஒரு பெண்ணின் முனகல் ஒலி உயர்ந்து வந்தது. பாலனுக்கு மயிர் கூசெறிந்தது.
“வேரிலி முண்டம். தவிச்ச விடாய்க்கு தண்ணிதராத வேரிலி முண்டம்” என்று மீண்டும் பலன்மீது பாய்ந்த மருத மரங்களை மீண்டும் பாலியாற்றுத் தாய்தான் அதட்டி அடக்கினாள்.
மீஈன்டும் தண்ணிர் யாசிக்கும் இளம்பெண்ணின்வேதனைக் குரல் எழுந்தது. வாய் கட்டப் பட்ட காடுகள் சினம்தாளாது காற்றைப் பிடித்து உலுப்பின. காற்று வலிதாளாமல் அலறியது. பாலன் சேறில் இறங்கி கற்பாறைப் பக்கமாக ஓடினான். என்ன ஆச்சரியம் அங்கு ஒரு குழம்போல தெளிந்த தண்ணிர் தேங்கி இருந்தது. நாணல்களும் பச்சைப் பசேலென்றிருந்தன. அல்லிச் செடிகள் சில பூத்திருந்தது. பாலன் அவசரம் அவசரமாக ஒரு அல்லி இலையைப் பறித்து தொன்னை கோலினான். தொன்னை நிறைய நீரை மொண்டு இரு கைகளாலும் தாங்கியபடி திரும்பி ஓடினான். மணல் மேட்டின்மீது தொன்னையைச் சரித்து விரல்களால் நீரை உடைத்துத்து விசிறித் தெளித்தான். மணல் மேடு நனைந்து குளிர்ந்தபோது மீண்டும் அந்த பெண்குரல் நன்றி என்றது. பாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாலனுக்கு இன்னும் பிரக்ஞை தவறவில்லை. எனினும் விசைப் பாவைபோல தன்வசமில்லாமலே செயல் பட்டான். நாற்று மேடையில் இருந்து ஒரு மாபெரும் வித்து முழைத் தெழுவதுபோல ஈர மணலை உதறியபடி கிராமத்து அழகோடும் ஐந்து காயங்களோடும் ஒரு தேவதை மிதந்தது. அந்தக் கிராமத்துத் தேவதையின் மேனியில் முத்துக்களாக உருண்ட நீர், காயங்களில் இருந்து கசிந்த இரத்தத்தோடு கலந்து செம் மணிகளாக நிலத்தில் சிந்தியது. என்ன இது என்ன இது என்று பாலன் பதட்டமடைந்தான்.
அவளது இடுப்பிலும் மார்பிலும் நீலக் கடல் அலையொன்று சேலையாக உறைந்துபோயிருந்தது.
கனிவோடு ஆசீர்வதிப்பதுபோல அந்த அழகி கைகளை அசைத்தாள். பின்னர் நிதானமாக
“அடிமை விலங்கைச் சுமக்கிற என் மக்களுக்கு மருந்தாகவும் விருந்தாகவும் என் குருதியையும் தசையையும் தந்தேன்” என்றபடி புன்னகைத்தாள்.
“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே”

அந்த அழகி மெல்ல மெல்ல சேறாக கிடந்த ஆற்றில் இறங்கி வளமையாக அயலூர்ப் பெண்கள் குழிக்கும் கற்பாறைத் தேக்கத்தின் பக்கமாய் நடந்தாள். உடல் சிலிர்த்தபடி குளிர்ந்த தண்ணீரில் இறங்கியவள் பெண்கள் குளிக்கும் பக்கமாக நகர்ந்து நாணல் புதர்களுள் மறைந்தாள்.

பாலன் காடுபோலச் சமைந்து நின்றான். சடாமுடி விழுதுகள் தாழ்ந்து அசைய முனிவரைப் போல நிமிர்ந்த ஆலமரம்மொன்று ”வேரும் விழுதுமில்லாத கீழ் பிறப்புத்தான் அனாலும் நல்ல காரியம் செய்தான்.” என்று பாராட்டியது.

சூரிய ஒளியிலும் மெல்ல எழுந்த பாடலிலும் கிளர்ச்சியுற்ற பாலிறு பாலனைப் பார்த்ததுக் கண்சிமிட்டியது. தலைக்கு மேலே கண்களைக் குருடாக்கும் பிரகாசத்தோடு பசிய இலைக் கூரை எரிந்துகொண்டிருந்தது. காற்றில் வருகிற கீதத்தை யார் பாடுகிறார்கள்? மருத இலைகளைத் தாண்டி வருகிற ஒளித் தீயுள் முடிவின்றி விரிந்து செல்கிற பிரபஞ்சமா பாடுகிறது? அல்லது எங்கும் அலைகிற காற்றேதான் பாடுகிறதா? அவனது நொந்துபோன அன்மாவுக்கு மருந்தாக முடிவிலியில் இருந்து ஒழுகிய அந்த நல் இசையின் தேன் தாரையில் மனசு தொற்றிக் கொண்டது.

மண் நான் விண் நான் சமுத்திரம் நான் – உன்
வாழ்வின் வளனாம் தாய் நிலம் நான்
என்னுள் புதைந்த இளையவரின்
உள்ள முரசம் அதிர்கிறதே
ஊழிச் சங்கை ஒலிக்கிறதே

மானிடன் மகளே உயிர்த்தெழுவாய்
வாழ்வெனும் மந்திர வாழ் எடுப்பாய்
அகால மரணமுன் குலக் கொடியை
அழித்திட முன்னம் வழி மறிப்பாய்.

அங்கு ஊயிர்ப்பின் ஆதாரமாவதற்க்கு பாலியாற்றில் எஞ்சிய நீரும் அந்தப் பாடலுமே போதியதாய் இருந்தது. அது ஆதியில் உலகத்தில் இருந்த நீரும் ஒலியும் என்பதை பாலன் உணர்ந்தான். ஆதியில் இருந்த நீர் புல்லாகிப் பூடாய் புளுவாய் மரமாகி வல்லசுரராகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்க் கூர்ப்படைந்தபோது ஆதி ஒலி சொல்லாகி வார்த்தையாய் பாடலாய் கதையாய் எழுத்தாகி கவிதையாய் பூத்தது. இசையாய் எழுகிற கவிதை உயிர்காக்கும் சாவா அமுதாகும். பாடல் கேட்டு பாலியாற்றின் இரு கரைகளிலும் மேடிட்டிருந்த பூமியுள் இருந்து விடுதலை விடுதலை விடுதலை என்கிற மந்திர வார்த்தைகள் எழுந்தன. “விடுதலை போருக்கு அணிவகுப்பீர் வெற்றியால் எமக்கு உயிரளிப்பீர்” என்கிற மந்திர வார்த்தைகள் சுப்பிரபாத சுலோகம்போல ஒலித்தது.

அப்போது ஈழத்தமிழனின் பொல்லா விதி அந்த ஆற்றின்மீதும் நாணல்கள் நரைக்கும் கரைகளின் மீதும் உயரும் மருத மரங்களின்மீதும் காட்டின் மீதும் இடியும் மின்னலுமாக இறங்கியது. ஆற்றின் மறுபக்கமாக துப்பாக்கிகள் வெடித்தது, இராணுவ வண்டிகள் கர்ச்சித்தன. காடுகளில் பாய்ந்த துப்பக்கிச் சண்ணங்களில் ஆத்தங்கரைக் காடும் நாணல்களும் சட சடத்தன. துள்ளி எழுந்து சைக்கிளில் தாவிய பாலன் ஆற்றம் கரையைக் கடந்து வயல்வெளியில் இறங்கினான். பின் தொடர்ந்த துப்பாக்கி வெடி ஒலிகள் இப்போது மிக அண்மையில் கேட்டது. பாலனுக்குப் பொட்டலாய் விரிந்த வயல் வெளிப் பாதையில் செல்ல அச்சமாய் இருந்தது. அரைக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த பற்றைக் காடுகள் வரைக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மறைந்து போக வழியில்லை. பற்றைக் காடு போய்ச்சேரும்வரை தனது முதுகின் வழியாக உயிரில் துப்பாக்கிச் சன்னங்கள் தைத்துவிடப் போகிறது என்ற அச்சத்துடன் வேகமாகச் சைக்கிளை மிதித்தான். பற்றைக் காட்டை வகுடெடுத்துச் சென்ற ஒற்றையடிப் பாதையில் ஏறியபோதுதான் அவனுக்கு உயிர் வந்தது. அதன்பின்னர்தான் அவனுக்கு ஆற்றில் குழிக்கிற தேவதைப் பெண்ணின் நினைவு வந்தது. அவளிடம் ஒரு வார்த்தை சொல்லாமலும் ஆபத்து என்றுகூடக் குரல் கொடுக்காமலும் நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிவந்த கோழைத்தனத்தை நினைத்துப் பாலன் வெட்க்கப் பட்டான்.


visjayapalan@gmail.com

Series Navigation