மாத்தா-ஹரி – அத்தியாயம் 19

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நேரங் காலம் பார்க்காமல் சட்டென்று பிடரியைத் தட்டி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற மரணத்தை யார் வெல்வது? அஞ்சோ பத்தோ கொடுத்து, “பக்கத்துவீட்டுகாரன் துள்ளறான், அவனைக் கொஞ்சம் கவனியென்றோ”, பெட்டியொன்றைக்கொடுத்து, “ஆளுங்கட்சிகாரனை முடிச்சுடு”, என்றோ மரணத்திடம் சொல்லமுடியாது; “ஏழாவது பொண்டாட்டியின் வாரிசுக்கு எதுவுமே செய்யவில்லை, இரண்டுநாள் பொறுக்கமுடியுமா?” என்றும் அவனிடம் கேட்டுவிடமுடியாது. எமதர்மராசா கைசுத்தமான ஆசாமி, முகவரியை ரகசியமாக வைத்துக்கொண்டு நேர்மையாகத் தொழில் செய்பவன். முகவரிதெரிந்தால் நம்மூர் சுண்டைக்காய் அரசியல்வாதிகளை விடுங்கள், அமெரிக்க அதிபரும், பின்லாடனும் குறைந்தபட்ஷம் அவன் துணைவியாரைக் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பார்கள். கடவுள் அவனை நம்பிக்கொண்டிருப்பவர்களை மட்டுமே அச்சுறுத்துபவன். எமன் அவனை நம்பாதவர்களையும் பயமுறுத்துகிறவன். மரணமில்லா உலகை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு காந்தியைக் கொண்டாட ஒரு கோடி கோட்சேக்களை, அனுமதித்தாகவேண்டும். எமனே நீ வாழ்க! எத்தனைமுறை வேண்டுமானாலும் தாராளமாக வாழ்த்தலாம், அவன் சாகசங்கள் அண்டைவீட்டில் தொடரும்வரை…

பவானியின் வீட்டிற்கும் அப்படித்தான் எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் திடுதிப்பென்று நுழைந்து அவள் பாட்டியைக் கையோடு அழைத்துப்போய்விட்டான். பாட்டியின் குத்திட்ட விழிகளும், சில்லிட்டுக்கொண்டிருந்த உடலும், காரில் ஏற்றும்போதே மரணத்தை பூடகமாக உணர்த்தியபோதிலும், உடன்சென்ற ஒவ்வொருவரும், விபரீத கற்பனையென்றே ஒதுக்கித் தள்ளினார்கள். பவானிக்கு அப்படியொரு உண்மையை எண்ணிப்பார்க்கவே பயங்கரமாக இருந்தது, மனம் கலவரப்பட்டது. இவர்கள் சென்ற வாகனம் மருத்துவமனையின் எதிரே நின்றதோ இல்லையோ, தேவசகாயம் இறங்கி ஓடினான். பவானி இறங்கிக்கொண்டாள், நெஞ்சத்தில் இதுவரை அடைபட்டிருந்த துக்கம், உடைத்துக்கொண்டு பீறிட்டது, கைக்குட்டையை எடுத்து வாயிற்திணித்து அழுகையை கனத்து ஒலிக்காமல் அடக்க, கண்களில் ஊற்றுப் பெருக்கெடுக்கிறது, மூக்கிலும் நீர் வடிகிறது. ஆட்டோவில் வந்திறங்கிய தேவகியும் பத்மாவும் ஆளுக்கொருபுறம் தோழியைத்தாங்கிக்கொள்ள, தேவசகாயம் அழைத்து வந்திருந்த சிப்பந்திகள் இருவர், படுக்கைவண்டியொன்றில், பாட்டியை வைத்துத் தள்ளிக்கொண்டுபோனார்கள். தேவசகாயம் “நீங்கள் போங்கள் நான் வருகிறேன்” எனச் சொன்னவன், கணக்கு அலுவலகம் சென்று ரசீதுகளை வாங்கிக்கொண்டு, பணம் செலுத்தப்போனான். அவசர சிகிச்சைப்பிரிவுக்கு வண்டியைத் தள்ளிப்போக, பவானி அவளுடைய தோழிகளிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டு ஓடினாள். அப்போதுதான் பணமேதும் கொண்டுவராதது புத்தியில் உறைத்தது. நின்று தோழிகளிடத்தில் நிலைமையை இரண்டொரு வார்த்தைகளில் தெரிவித்தாள். “நான் கொஞ்சம் கொண்டு வந்திருக்கேன். தேவாகிட்டேயும் சொல்லிவச்சிருக்கேன், உனக்கு இப்போதைக்கு அந்தக் கவலைகள் வேண்டாம்”, என்ற பத்மாவுக்கு, நன்றி சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.

பாட்டியை எடுத்து நிதானமாக ஒரு கட்டிலில் கிடத்திய சிப்பந்திகள் புறப்பட்டுபோன ஐந்தாவது நிமிடத்தில், வெள்ளைச்சீருடைத் தாதியொருத்தி உள்ளே வந்தாள், இரண்டு நிமிடம் கழித்துவந்த நடுத்தர வயதுடைய மற்றொருதாதி, வந்திருந்தவர்களைப் பார்வையால் அளந்தாள். ஓரளவு படித்தவர்கள் என்று நினைத்திருக்கவேண்டும், அதற்கேற்றவகையில் தனது சொற்களைத் தேர்ந்தெடுத்து, “முன் பணம் கட்டிட்டுவர கேஷ் கவுண்டருக்குப் யார் போயிருக்கிறது?, அதைக் கட்டிட்டு, ரசீதோட வந்திடுங்கம்மா, அதற்குள் டாக்டர் வந்துடுவார், என வழக்கமான தனது வசனத்தை வரிபிசகாமல் ஒப்புவித்தாள். “கொஞ்சம் சீக்கிரம் டாக்டரை வரச் சொல்லுங்கம்மா, ஏற்கனவே நிறைய ரத்தம் போயிருக்கு..” என்ற தேவகியின் அவசரத்தைக் காதில் வாங்காதவள்போல பாட்டியின் தலைமயிரை விலக்கிக் காயத்தைப் பார்த்தாள், புடவைத் துணியைத் தளர்த்தி கால்களைக் கவனித்தாள். வலதுகாலில் கணுக்காலுக்குமேல் கன்றியிருந்தது.

மருத்துவர் உள்ளே நுழைந்தார். நாசியில் விரல்வைத்துப் பார்த்தார். முகம் சிறுத்துப்போனது. சுற்றி இருந்தவர்களை விலகச் சொன்னார். இதயத்துடிப்புப் பதிவுகருவியை, அருகில் இழுத்தார், வண்ணக்கம்பிகளில் இணைத்திருந்த, பொத்தான்களை மார்பில் பொருத்தினார், பிறகு இயக்கினார், சட்டென்று திரை கரும்பச்சை நிறத்தில் விழித்துக்கொண்டது- உச்சுக்கொட்டினார், இதய அழுத்தமும் நாடித்துடிப்பும் பயமுறுத்துகிறதென சொன்னார், உடலின் வெப்பமும் வேகமாகக் குறைந்துகொண்டுபோக, இதயத்துடிப்புப் பதிவுக்கருவியின் கோடு ஒழுங்கின்றி சிலம்பம் விளையாட ஆரம்பித்தது. அவர் முகத்தில் சம்பிரதாயக் கவலைரேகைகள் படரத் தொடங்கின, திரையில் இப்போது ‘பீப்..பீப் என்ற சத்தத்தின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுபோக, அசாதாரணமான அமைதி. பாட்டியின் மூச்சு நின்றது. நாடியும் அடங்கிப்போனது. வந்திருப்பவர்களிடம், செயற்கையாய் கவலையை வரவழைத்துக்கொண்டு, “பாட்டி, இறந்துட்டாங்க” என்று உதடுகளை அதிகம் சிரமத்திற்கு உள்ளாக்காமல் கூறினார், பின்னர் தாமதிக்காமல் வெளியேறினார். மூர்ச்சையான பவானியைத் தேவகி தோளிற் சாய்த்துக்கொண்டாள்.

தேவசகாயம், பாட்டியின் திறந்திருந்த கண்களை மூடினான். தொங்கிக்கிடந்த வலதுகையை கட்டிலில் நேர்வாக்கில் உடலோடு அணைத்து வைத்தான். கோணியிருந்த கால்களையும் நேர்படுத்தினான். பத்மா விலகிக் கிடந்த புடவையைச் சரி செய்தாள். கடைவாயில் ஒழுகிக் காய்ந்திருந்த எச்சிலையும் துடைத்தார்கள். மறுநாள் சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லி, கூப்பிடவேண்டியவர்களை அழைத்து, மயானத்திற்குக் கொண்டுபோய்… வந்திருந்தவர்கள் கூடாது என்றபோதும் பிடிவாதமாகப் பாட்டி சாம்பலாகும்வரை காத்திருந்து, பவானி வீட்டிற்குத் திரும்பினாள். சீனியர் நாராயணனும், தேவசகாயமும் பொறுப்பாய் இருந்து காரியங்களைச் செய்தார்கள். உறவினர்கள் எல்லோரும் துக்க காரியம் முடிந்ததும், ஒருவர் பின் ஒருவராகப் புறப்பட்டுப் போனார்கள். பவானியின் அப்பாவழிச் சகோதரியான அத்தைமட்டும் ஒரு நாள் கூடுதலாகத் தங்கியிருந்து, பாட்டி கழுத்தில் போட்டிருந்த இரட்டைவடச் சங்கிலிக்கு உரிமைக்கொண்டாடிக்கொண்டு தங்கியிருந்தாள், பவானி அதை அவள் கையிற்கொடுத்து அனுப்பி வைத்தாள். இரண்டு நாட்களாக, வீட்டில் துணைக்கிருந்த பத்மாவும், தேவகியும் காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். சென்னையிலிருந்து சுதாராமலிங்கம் தொலைபேசியில் விசாரித்தார்.

பவானி, மரணம் அநியாயமாய் பாட்டியைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்டதென்று குற்றஞ் சாட்டினாள். நமது வாசலில், நமக்கு வேண்டியவர்களுக்கு நேரும் மரணமனைத்துமே அநீதியானதுதானே? பவானியின் நெஞ்சம் போலவே வீடும் ஒரு சில தினங்களாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது, குடங்குடமாக கண்ணீரைக் கொட்டியும் தாளவில்லை, சோர்ந்திருக்கிறாள். எதிரே, தொடுவான விளிம்பில் அம்மா. தூரத்தில் அடைமழையில் நனைந்தபடி அப்பா, கைக்கெட்டும் தூரத்தில் பாட்டி. அவர்களுக்கிடையே இடைவெளி இருப்பதுபோல தோன்றியதென்றாலும் -எல்லோரும் ஓரணியில் நிற்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள், ‘இறப்பு’ ஒருவட்டத்திற்குள் அவர்களை கொண்டுவந்திருக்கிறது. வற்றிப்போன குளத்தையும், இலைகள் கழித்த மரங்களையும் நினைவூட்டுவதுபோல வீடெங்கும் உயிர்களின் சுவடற்ற குரூர அமைதி. இத்தனை சீக்கிரம் ஒரு மரணம் வீட்டைத் துவம்சம் செய்துவிடுமென்று நினைத்ததில்லை. படுகளம்போல கிழிந்த உடல்கள், இரத்தம் சொட்டும் இதயங்கள், துண்டித்துப்போன அவயவங்கள், அவலக்குரல்கள் இறைந்து கிடக்கின்றன. ஒரு பெரிய விபத்து நடந்து முடிந்ததன் அடையாளத்துடன் பிணவாடை, வெப்பக்காற்றில் மிதந்து வருகிறது, அடைத்திருக்கும் சன்னல்களைக் கண்ட ஏமாற்றத்தில் மீண்டும் இவளிடத்தில் திரும்புகிறது. தழுவும் காற்றில் கலந்திருக்கும் பரிவின் கதகதப்பும், பாசத்தின் வெதுவெதுப்பும், இவளுக்குக் புத்திதெரிந்த நாள்முதல் நன்கு பரிச்சயமானது.

பவானி, பாட்டியின் கண்ணுக்குள் வளர்ந்தவள், அவளது விரல்கள் முலைக்காம்புகளாய், பவானியின் பற்கடிகளுக்குத் தப்ப மறந்திருக்கின்றன, அவள் மார்புக்கூட்டினில் முட்டையிட்டு, இவள் இதயத்தில் குஞ்சுபொரித்த கனவுகள் சிறகடித்த நாட்களில், மெய்சிலிர்த்த அனுபவம் நெஞ்சில் உலாத்துகிறது. “உனக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்”, என அடிக்கடி சொல்வாள், அதனாற்தானோ என்னவோ இவள் தேடியோ, அவள் விரும்பியோ, கருமணி தெரிய, இமைக்கமறந்த பாட்டியின் கெஞ்சும் கண்கள், அறையில், கூடத்தில், வாசலில், முற்றத்தில் இவளை மொய்த்தபடி வளையவருகின்றன. பாட்டிக்குப் பெரிய கண்கள், மூப்பறியாக் கண்கள், பாட்டியின் வயதோடு வளர்ந்த பிரபஞ்சத்தைப் பற்றிய முழுவரலாற்றையும் அவற்றுள் வாசிக்கலாம், புனைகதைகளுக்குத் துளியும் இடமிருப்பதில்லை. பார்வையால் பதிவுசெய்யபட்டவை, தெளிவாக எழுதி வைத்திருப்பாள். மனிதர்களைச் சுலபமாகப் படித்து ஒற்றை வார்த்தையில் தனது அபிப்ராயத்தைப் பேத்திக்குச் சொல்லும் வித்தைக்கும் அக்கண்களே அவளுக்கு ஒத்தாசை செய்துவந்திருக்கின்றன. ‘பொறந்த உடனே அம்மாவை வாங்கிட்டா, பிறகு உருப்படாத ஒரு அப்பன், அவனையும் விட்டுவைக்கலை, இப்போ துணைக்கென்றிருந்த கிழவியும் போயிட்டா, இவளுக்கு எவன் வருவானென்று நினைக்கிற” என்று கூடி அழுதச் சூட்டோடு புலம்பிய உறவுப் பெண்மணிகளின் குரல்கள் ஒட்டடைகளாக வீட்டில் படிந்திருப்பதைத் துடைக்கவாவது பாட்டியும் அவளது கண்களும் துணைக்கு வேண்டும். பாட்டியின் ஒற்றை நாடி உடம்பிற்குத்தான் எத்தனை பலம், தாகத்திற்குத் தண்ணீராக, நிழல்தரும் மரமாக, ஆறாவது புலனாக, எப்படியெல்லாமோ அவளுக்குத் துணையாக இருந்திருக்கிறாள். அவள் கொடுத்தது அதிகம். இவளைக் கடன்காரியாக்கிவிட்டுப் போய்விட்டாள், கன்றை பசுவாக்க அவளுக்கு மட்டுமே வரும், அப்படித்தான் அவளை மாடத்தில் வைத்து தளும்ப தளும்ப எண்ணெய் ஊற்றி, நீலத்தீயாய் அவள் ஜொலிக்கும் அழகில் சொக்கி இருக்கிறாள், இவள் உதடுகளில் ஒட்டும் சோற்றுப்பருக்கையைத் துடைத்துவிட்டு, எத்தனை முறை பிரம்மித்திருக்கிறாள்.

“பாட்டி உனது மடி வேண்டுமே”! என்கிறாள். அமர்ந்த பாட்டியுடைய இடதுகால் நீள்கிறது, வலதுகால் முக்கோணமாகிறது, பவானி தலைசாய்க்க, வற்றலாய் உலர்ந்தகை மெல்ல கன்னத்தில் ஆரம்பித்து, கழுத்தில் இறங்கி தவிக்கிறது, பாட்டியின் தாளிரண்டும் அரைவட்டத்தில் அசைந்துகொடுக்க, வறண்ட உதடுகளிரண்டும் குவிந்தும்விரிந்தும் சொற்களை சிந்துகின்றன:

மாமி அடித்தாளோ? – உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ? – உன்னை
மாலையிடும் கையாலே!
ஆராடித்து நீ அழுதாய்?

– நீ தானே பாட்டி!, வாய்விட்டுச் சொன்னாள்.

அழுதழுது கண்ணீர்ச் சுரப்பிகள் வற்றிவிட்டன. விழிமடல்கள் ஊதிபெருத்திருந்தன. பரந்து கிடந்த மயிற் கற்றையை, எடுத்துக் கட்டும் நினைப்பின்றி எவ்வளவு நேரம் தரையிற் கிடந்தாளோ. இவளை எழுப்புவதுபோல ஒரு குரல்:

– பவானி..!

திடுக்கிட்டு எழுந்தாள். வீடெங்கும் சீராகப் பரவிக்கிடந்த இருள் இவளைக் குழப்பியது. தெருவாசல் இருக்கும் திசை தெரியாமல் திகைத்து நின்றாள். ‘பவானி’, மீண்டும் தெருவாசலிலில் இருந்தபடி இவள் பெயர் சொல்லி அழைக்கும் குரலுக்குச் சொந்தக்காரன் யாரென்று புரிந்ததும் கால்கள் தயங்கின. மனம் போய்த் திறவென்று கட்டளை இட்டது. மெல்ல சென்று கதவைத் திறந்தாள். தேவசகாயம் நின்றுகொண்டிருந்தான். இவள் அமைதியாக இருந்தாள்.

– பவானி உள்ளே வரலாமா? – பதிலில்லை, அமைதியாக அவன் கேள்வியை வாங்கிக்கொண்டபடி நடந்து சென்றாள். தேவசகாயம் அதைச் சம்மதமென்று எடுத்துக்கொண்டவனாக உள்ளே வந்தான்.

– வீடு ஏன் இருண்டுகிடக்கிறது? – கேட்கிறான், அதற்கும் அவளிடமிருந்து பதிலில்லை. ஆனால் நடை, கூடமென்று வழியிலிருந்த விளக்குகளைப் போட்டுக்கொண்டே போனாள். அவன் அமைதியாக அவளைத் தொடர்ந்து வந்தான்.

கூடத்திற்குப்போனதும் தரையில் அமர்ந்தாள். இவனைப் பார்த்து உட்காருங்கள் என்றாள். அங்கிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்தான். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பவானியின் அறைக்குள்ளிருந்த சுவர்க்கடிகாரம் பத்துமுறை அடித்து ஓய்ந்தது.

– இந்த நேரத்திற்கு வந்திருக்கக்கூடாது. பத்மாவுக்குப் போன் பண்ணேன். அவங்க வீட்டுக்கு நீங்கள் போயிருக்கலாம். இல்லை தேவகியுடனாவது இரண்டொரு நாட்கள் சென்று தங்கி இருக்கலாம். உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். சாப்பிட்டீங்களா? பத்மா ஏதோ சமைச்சுவச்சிட்டு வந்ததாகச் சொன்னாளே?

பவானி தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். இவனை நேரே பார்ப்பதைத் தவிர்த்தாள். அவள் மார்புகள் மெல்ல உயர்ந்து இறங்குவதைக்கொண்டு எந்த நேரத்திலும் உடைந்து அழுவதற்குத் தயாராக இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான்.

– பவானி, உங்கள் நிலைமை எங்களுக்குப் புரியாமலில்லை. வாய் திறந்து ஏதாவது பேசுங்களேன். அழவேண்டும் போலிருந்தால் அழுங்கள், மனதிற்குள்போட்டுக் குமையாதீர்கள். நீங்கள் இப்படி இருப்பதுதான் எங்கள் எல்லோரையும் பயமுறுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் இங்கே தனித்து இருப்பதும் நல்லதல்ல. பத்மா வீட்டிற்குப் போவோமா?

– நான் யாரையும் எதிர்பார்த்து இல்லை. நான் அழுவேன் அழாமலிருப்பேன், என் விருப்பம்- வெடுக்கென்று பதில் வந்தது. அவள் கண்கள் தற்செயல்களாகவோ அல்லது விரும்பியோ, அவனுடைய கண்களைச் சந்திக்கின்றன.

நம்மை மாத்திரமல்ல நமது உணர்வுக¨ளையும் வழி நடத்த அறியாமல் தடுமாறும் தருணங்கள், எல்லோருக்குமே ஏற்படுவதுண்டு. “வேண்டாம் வேண்டாம், அவனிடம் கவனமாக இரு”, என்ற அறிவை, நெற்றியில் அரும்பிய வேர்வைத் துளிகளோடு சேர்த்தே துடைத்தாள். பாட்டியின் இழப்பு ஏற்படுத்தியிருந்த வெற்றிடம், உறவினர்களின் சுடுசொற்கள் சீண்டியதால் உண்டான வீம்பு, யாருமற்ற சூழல், கடந்த சில நாட்களாக தேவசகாயத்தின் உள்ளத்திலிருந்த தவிப்புகாரணமாக, இவள் அடிமனதில் சுரந்திருந்த கரிசனம், பரஸ்பர உடற் தேவைகள், அதை நிறைவேற்றிக்கொள்ள தடையாக இங்கே எவருமில்லை என்ற தெளிவான உண்மை.. இப்படி ஒவ்வொன்றும் உணர்ச்சிப் பிரவாகத்தில் அவளைத் தள்ளின, ஒரு கணம் அவனை நெருங்கிய கைகளைச் சட்டென இழுத்துக்கொண்டாள். தேவா எழுந்தான். அவனது கைகள் நடுக்கத்துடன் இப்போது மெல்ல அவள் தோளைத் தொட்டன. அவளுடல் சட்டென்று ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. நெஞ்சு வெடித்து, அவளுடைய வெப்ப மூச்சு இவன் உடலைத் தகித்தது. மறுகணம் கண்ணீர்தளும்பிய கண்களும், தேம்பலுமாக அவன் மார்பிற் புரண்டாள்- “தேவா? தேவா?.”. சொற்கள் தடுமாறின..” சொல்லுங்கள் பவானி உங்களுக்கு நானிருக்கேன்”, ” உண்மையாகவா? நம்பலாமா?, “சத்தியமா நம்பலாம்”.. இருவரது இதயமும் வேகமாகத் துடித்தது. இரத்தம் ஜிவ்வென்று பாய, உடல் கொதிக்கிறது. அவன் அவளைக்கிடத்தினான். ஆரம்பத்தில் சண்டையிடுவதுபோல, இவனது முகத்தைத் தள்ளிய அவள் கைகள் பின்னர் ஒதுங்கிக்கொண்டன. சற்று வலிக்கும்படியாகவே அவள் உதடுகளில் பற்களைப் பதித்தான். அவள் அனுமதித்தாள்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா