ரஜாய்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

ராகவன் தம்பி

Ismat Chughtai. The Quilt & Other Stories. New Delhi: Kali for Women. 1996
நன்றி: Ms.Urvashi Bhutalia, Kali for Women, New Delhi.

கடுமையான குளிர்காலத்தின் நடுக்கத்தில் என்னுடைய ரஜாய் மெத்தைப் போர்வையை இறுக்கப் போர்த்திக் கொண்டு அணைத்துக் கவிழ்ந்து படுக்கும்போதெல்லாம், அதன் நிழல் சுவற்றில் ஒரு கரிய யானை அசைந்து செல்வது போல எனக்குக் காட்சியளிக்கும். மடை பிளந்தாற்போல் போல இறந்த காலத்தின் நினைவு வெள்ளத்தில் எண்ண அலைகள் ஊடுருவிப் பாயும்.

என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். என் சொந்த ரஜாய் தொடர்பான ஏதேனும் ஒரு சிருங்காரமான சம்பவத்தை உங்களிடம் இப்போது விவரிக்கப் போவதில்லை. அந்த ரஜாயைச் சுற்றி அப்படி சுவையான, சிருங்காரமான சம்பவம் ஏதாவது இருக்கும் என்றும் எனக்குத் தோன்றவில்லை. கொஞ்சம் வசதிக் குறைவாக இருந்தாலும் கம்பளிப் போர்வை எவ்வளவோ தேவலை என்று சில சமயங்களில் தோன்றும். அவை இப்படி பயமுறுத்தும் சலனங்களான நிழல் தோற்றங்களை சுவர்களில் உருவாக்குவதில்லை.

நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது இது நடந்தது. என்னுடைய சகோதரர்களுடனும் அவர்களின் நண்பர்களுடனும் எப்போதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். சில சமயங்களில் என்ன இழவுக்கு இப்படி சண்டைக்காரியாக இருக்கிறேன் என்று நானே ஆச்சரியப்படுவேன். என் மூத்த சகோதரிகள் என்னுடைய வயதில் தங்களுக்கான ரசிகர்களை சேர்த்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தனர். அப்போது எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்குத் தெரிந்த அல்லது தெரியாத யாரோ ஒரு பையனுடனோ அல்லது பெண்ணுடனோ எப்போதும் ஏதாவது ஒரு காரணம் வைத்து அவர்களை வலிய சண்டைக்கு இழுப்பதுதான்.

இந்தக் காரணத்துக்காகவே, அம்மா ஆக்ராவுக்குச் சென்றபோது தன் சுவீகார சகோதரி ஒருத்தியிடம் என்னை விட்டுச் செல்ல முடிவு செய்தார். எனக்கு மிகவும் பிரியமான சண்டையிடும் காரியத்தில் ஈடுபட அந்தச் சகோதரியின் வீட்டில் ஒரு வளர்ப்பு மிருகம் கூட இல்லை என்று அம்மாவுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்திருந்தது. இந்தத் தண்டனைக்கு நான் ஏற்றவள்தான் என்று நினைக்கிறேன். அம்மா என்னை பேகம் ஜான் வீட்டில் விட்டுப்போனாள். இந்த பேகம்ஜானின் ரஜாய் மெத்தைதான் கொல்லன் பட்டறையில் அடித்ததைப் போன்ற ஆழமான பட்டறை முத்திரையாக என் மனதில் ஆழப் பதித்திருக்கிறது.

அன்புமிகுந்த, ஆனால் மிகவும் ஏழைகளான தன்பெற்றோர்களின் கருணையினால் நவாப் சாகிப்பை மணந்தவள் இந்தப் பெண். நவாப் சாகிப் மிகவும் கருணை உள்ளம் கொண்டவராகவும் நல்லகம்பீரமானவராகவும் இருந்தார். ஒரு நவாப்புக்கான அனைத்து லட்சணங்களும் அவரிடம் குடியிருந்தன. என்ன இருந்தும் இந்த நவாப்பின் வீட்டில் எப்போதாவது நடனமாதர்களையோ அல்லது விலைமாதர்களையோ யாரும் பார்த்ததில்லை. தானே ஹஜ் புனித யாத்திரையை சிறப்பாகப் பலமுறை மேற்கொண்டது மட்டுமல்லாது தனக்கிருந்த அதீத செல்வாக்கினால் புனித யாத்திரைக்குப் போகும் ஏழை எளியவர்களையும் பலவகைகளில் சிறப்புடன் ஆதரித்து வந்தார்.

அந்தக் காலத்தில் பலர் தொல்லையும் எரிச்சலும் மிகுந்த பொழுதுபோக்கான புறா வளர்ப்பது, சேவல் சண்டைகளை ஏற்பாடு செய்வது போன்றவைகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். இவைபோன்ற அருவெருப்பான விளையாட்டுக்களிலிருந்து தன்னை எப்போதும்விலக்கியே வைத்திருந்தார் நவாப் சாகிப். அவர் எப்போதும் மிகவும் விரும்பியது, படித்துக் கொண்டிருக்கும் இளைய மாணவர்களுக்காக தன் வீட்டை எப்போதுமே திறந்து வைத்திருந்ததுதான். இளைய வயதினர்களாக, மிகவும் லட்சணமாக, மெல்லிய இடுப்புக்களுடன் வளைய வந்த சிறுவர்களின் எல்லா செலவுகளையுமே நவாப் சாகிப் ஏற்றுக்கொண்டார். பேகம் ஜானை மணந்து கொண்டு இந்த வீட்டுக்கு அழைத்து வந்ததும், நவாப் சாகிப், தன் வீட்டின் விலைமதிப்பிட முடியாத மற்ற பொக்கிஷங்களுடன் அவளையும் ஓரிடத்தில் மிகவும் பத்திரமாக வைத்து பிறகு சுத்தமாக மறந்து போனார். வயதில் இளையவளான, மென்மையான பேகம், தனிமையில் மிகவும் வாடிப்போனாள்.

பேகம் ஜான் எப்போது தன் வாழ்வைத் துவங்கினாள் என்று யாருக்குத் தெரியும்? பிறந்த பாவத்தைச் செய்த போது துவங்கியதா, அல்லது நவாப்பின் புது மணப்பெண்ணாக அந்த வீட்டில் புகுந்த போதா அல்லது அந்த ஆடம்பரமான கட்டிலில் ஏறித் தன் நாட்களை எண்ணத் துவங்கியபோதா? அல்லது அந்த வீட்டில் அந்த சிறுவர்களை வைத்துத்தான் எல்லாமே இயங்குவதை அவள் உணரத் துவங்கிய போதும் அந்த வீட்டின் சமையலைறையில் தயாராகும் எல்லா சுவையான உணவு வகைகளுமே அந்தக் களையான மெல்லிய இடைகளுடன் வளையவரும் சிறுவர்களின் ருசிக்காக மட்டுமே தயாராவதை அவள் உணர்ந்து கொண்டபோதா? அந்தச் சிறுவர்களின் மெல்லிய இடைகளையும், அழகான கணுக்கால்களையும், அவர்களின் சிலந்தி வலைச் சட்டைகளையும் வரவேற்பறைக் கதவின் ஓட்டைகளில் கண்களை இடுக்கி ஒரு கணம் பார்க்கும்போதெல்லாம் அவள் மனம் மேலும் தகித்தது.

குறிகேட்பது, மனோவசியம் செய்வது போன்ற பல காரியங்கள், இன்னும் என்னென்னவோ முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை. பாறையில் ரத்தம் கசிய வைக்க முடியாது. நவாப் ஒரு துளியும் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் பேகம் ஜான் படிப்பின்பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள். அதிலும் அவள் அடைந்தது ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சிருங்கார ரசமுள்ள நாவல்களும் உணர்ச்சி வசப்படும் கவிதைகளும் அதிக உணர்ச்சிவசப்படும் கவிதைகளும் அவளுடைய
மன அழுத்தத்தை இன்னும் அதிகரித்தன. து¡க்கம்
இல்லாத இரவுகள் அவளுக்கு வாடிக்கையாகிப் போயின. பேகம் ஜான் சிறிது சிறிதாக நம்பிக்கையிழந்து எப்போதும் துயரமே வடிவாகக் காட்சியளித்தாள்.

தன்னுடைய அழகான உடைகள் அனைத்தையுமே அடுப்பில் போட்டுக் கொளுத்த வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. யாரையாவது கவருவதற்குத்தான் அழகான உடைகள் உடுத்த வேண்டும். நவாப் அந்த சிலந்தி வலைச் சட்டைகளிடம் கொண்ட ஈடுபாட்டினால் ஒரு நொடி கூட இவளுக்காக ஒதுக்கத் தயாராக இல்லாது இருக்கிறான். அவளை எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. வீட்டுக்குள்ளேயே ஒரு கைதி போல அவள், அடைந்து கிடக்க சிலஉறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள். இது சிலசமயம் மாதக்கணக்கில் கூட தொடர்ந்தது.

இப்படி அடுத்தவர்களின் செலவில் பண்டிகை கொண்டாடும் அந்த உறவினர்களைப் பார்த்து அவளுடைய ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. சமையறையில் தயாரிக்கப்படும் சுவைமிகுந்தஉணவுவகைகளை அவர்கள் புகுந்து விளையாடுவதும், விரல்களிடையே வழியும் வெண்ணையையும் நெய்யைப் பேராசையுடன் நக்கி மகிழ்வதும் அவளுக்கு மிகுந்த எரிச்சலைத் தரத் துவங்கின. அவளுடைய வீட்டில் தங்களுக்கான குளிர்காலத் தேவைகளை அவர்கள் நிறைவு செய்து கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் அவளுடைய ரஜாய் மெத்தைப் போர்வையின் பருத்தி புதுப்பிக்கப் பட்டாலும் ஒவ்வொரு இரவும் பேகம் ஜான் கடுங்குளிரால் நடுங்கிக்கொண்டுதான் இருந்தாள். ஒவ்வொரு முறை அவள் புரண்டு படுக்கும்போதும் அந்த ரஜாய், சுவற்றில் ராட்சசத்தனமான நிழலுருவங்களாக காட்சியளித்துக் கொண்டிருந்தன. என்ன இழவுக்கு வாழவேண்டும்? இந்த வாழ்க்கையால் ஏதேனும் பயன் உண்டா? ஏன் வாழவேண்டும்? ஆனால் பேகம் ஜான் அப்படியே வாழ விதிக்கப்பட்டிருந்தாள். ஒருமுறை அப்படி வாழத் துவங்கியதும் எப்போதுமே அப்படியே வாழத்தலைப்பட்டாள்.

வாழ்க்கை இப்படியே பயனற்று, வெளிறத் துவங்கியபோது ரப்போ அவளுடைய மீட்சிக்கு வந்தாள். திடீரென அவளுடைய வற்றிப்போன தேகம் சிறிது நிரம்பத் துவங்கியது. கன்னங்கள் மிருதுவாகவும் ரோஜா நிறத்திலும் உருமாறத் துவங்கின. ஒவ்வொரு துவாரத்திலும் அழகுகசியத் துவங்கியது. பேகம் ஜானின் உடலில் விசேஷமான ஒரு எண்ணெய் மசாஜ் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது.

நான் பேகம் ஜானைப் பார்த்தபோது அவள் தன் நாற்பதுகளின் துவக்கத்தில் இருந்தாள். சாய்மானக் கட்டிலில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தாள். மிகுந்த கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் விளங்கினாள். ரப்போ, அவள் முதுகுக்குப் பின்னால் அமர்ந்து இடுப்புப் பகுதியில் மசாஜ் செய்து கொண்டிருந்தாள். கால்களின் மேல் ஒரு ஊதா நிற சால்வை போர்த்தப் பட்டிருந்தது. ராஜகம்பீரமான தோற்றம். அசப்பில் ஒரு மகாராணி. அவளுடைய அந்தத் தோற்றத்தை நான் மிகவும் நேசித்தேன். ஒரு பக்தையைப் போல் பணிவுடன் மணிக்கணக் கணக்கில் அவளுடைய பக்கத்தில் அமர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். அவளுடைய மேனி வண்ணம் மிகவும் அழகாக இருந்தது. கருங்கூந்தல் எப்போதும் எண்ணெய் தேய்க்கப்பட்டு மினுமினுவென மின்னியது.மயிற்கற்றைகள் விலகியோ ஒழுங்கு தவறியோ இருந்ததை நான் பார்த்தது கிடையாது. கண்கள் கருமையாகவும். மிகுந்த கவனத்துடன் பிடுங்கப்பட்டு, புருவங்கள் வில்போல மிகவும் கச்சிதமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. அவள் கண்கள் களைப்படைந்தும், இமைகள் கனமாகவும் இரப்பைகள் தடிமனாகவும் இருந்தன. எப்போதும் உதட்டுச்சாயம் பூசப்பட்டு மேலுதடுகள் தனித்த அழகுடன் விளங்கின. முன் நெற்றி நீண்ட ரோமங்களால் சூழப்பட்டிருந்தது. என்னுடைய பரவசப் பார்வையில், சில நேரங்களில் அவளுடைய முகம் ஒரு இளைஞனின் முகத்தைப் போல லேசாக உருமாறியது போலவும் தோன்றியது.

அவளுடைய சருமம் மிக அழகாகவும் ஈரத்துடனும் காணப்பட்டது. மினுமினுப்பான சருமத்தை அவளுடைய உடம்பின் மேல் இழுத்து வைத்துத் தைத்ததுபோல இருந்தது. மசாஜ்க்காக அவள் தன்னுடைய கணுக்காலை ஒரு கணம் வெளிநீட்டும்போதெல்லாம் அந்த அழகான கணுக்கால்களின் உருளையான வழவழப்பினை திருட்டுத் தனமாகப் பார்ப்பேன். அவள் உயரமாக இருந்தாள். சதைத் திரட்சியில் இன்னும் உயரமாகக் காட்சியளித்தாள். உள்ளங்கைகள் பெரிதாகவும் ஈரமானதாகவும் இருந்தன. இடுப்பு மிகவும் வழவழப்பாக இருந்தது. ரப்போ அவள் பக்கத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் முதுகை சொரிந்து கொடுத்துக் கொண்டிருப்பாள். அப்படி அவள் சொரிந்து கொள்ள வைப்பது வாழ்வின் அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்து கொள்வதைப் போல இருந்தது. ஒரு வகையில், உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளையும் விட மிகவும் முக்கியமானதாக இருந்தது.

ரப்போவுக்கு அந்த வீட்டில் ஆற்ற வேண்டிய கடமைகள் வேறு ஏதும் கிடையாது. சொகுசுக் கட்டிலின் மேல் ஒய்யாரமாக அமர்ந்து பேகம் ஜானின் தலையையோ, பாதங்களையோ அல்லது உடலின் ஏதாவது முக்கியமான பகுதியையோ எப்போதும் மசாஜ் செய்து கொண்டு இருப்பாள். இந்த அளவு ஒரு மனிதத் தொடுகை பேகம் ஜான் தவிர வேறு யாருக்காவது இருந்தால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? என்னைக் கேட்டால், இப்படி என்னை யாராவது தொடர்ச்சியாகத் தொட்டுக் கொண்டிருந்தால் நான் கண்டிப்பாக அழுகிப்போவேன்.

இந்த தினசரி மசாஜ் சடங்கு போதாதென்பது போல, பேகம் குளிக்கும் நாளன்று இந்த சடங்கு இரண்டு மணிநேரத்துக்கு மேல் தொடரும். அவளுடைய பளபளப்பான சருமத்தில் வாசனைத் தைலங்களாலும் களிம்புகளாலும் மசாஜ் செய்யப்படும். தொடர்ச்சியான இந்த தேய்த்தலினால் உண்டாகும் உராய்வினை கற்பனை செய்து பார்க்கும்போது எனக்கு லேசாகக் காய்ச்சலே வந்து விடும். சடங்கு துவங்கும் முன் மூடிய கதவுகளுக்குப் பின் கணப்பு மூட்டப்படும். அந்தப் புனிதத் தலத்தில் வழக்கமாக ரப்போ மட்டுமே அனுமதிக்கப் படுவாள். மற்ற பணியாட்கள், அதிருப்தியுடன் முணுமுணுத்துக் கொண்டே மூடிய அந்தக் கதவுக்குப் பின்பக்கம் தேவைப்படும் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இதில் உண்மையான விஷயம் என்னவென்றால், பேகம் ஜான் ஒருவிதமான நிரந்தர நமைச்சலினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள். பலவிதமான தைலங்களையும் களிம்புகளையும்முயற்சித்துப் பார்த்தார்கள். அந்த நமைச்சல் நீங்கவே இல்லை. “இது ஒன்றுமில்லை. சருமம் சுத்தமாகவே இருக்கிறது. தோலுக்கடியில் இந்த பிரச்னை இருந்தால் அது வேறு விஷயம்” என்று ஹக்கீம்களும் டாக்டர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த டாக்டர்கள் பைத்தியங்கள். கனவு மயக்கத்தில் கண்களை செருகிக்கொண்டு பேகம் ஜானை உற்றுப் பார்க்கும் ரப்போ, “இந்தத் தோல் வியாதி உங்கள் எதிரிகளுக்குத் வரட்டும். இந்தத்
தொல்லைக்கெல்லாம் காரணம் உங்கள் சூடான ரத்தம்தான்” என்று ஒருமாதிரி அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் சொல்வாள்.

ரப்போ! சுட்ட இரும்புக் கனிமத்தைப் போலக் கருப்பாக இருந்தாள். அவள் முகத்தில் லேசாக அம்மை வடுக்கள் இருக்கும். சிறிய செயல்திறனுள்ள கரங்கள். சிறிய தொப்பையும் லேசாகப் பருத்து, எப்போதுமே ஈரமாக இருக்கும் உதடுகளுமாக அவள் உடல் திடமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. மின்னலைப் போன்று வேகமாகச் செயல்படும் அந்தக் கரங்கள் இப்போது பேகம் ஜானின் இடுப்பிலும், உதட்டிலும் பயணித்து தொடையினைப் பிசைந்து, கணுக்கால்களை நோக்கிப் பாய்ந்தது. நான் எப்போது பேகம் ஜான் அருகில் அமர்ந்தாலும் நரம்புகள் முறுக்கேறிய அந்தக் கரங்களின் மீதே என் கண்கள் பதிந்திருக்கும்.

குளிர்காலமாக இருந்தாலும் கோடையாக இருந்தாலும் பேகம் ஜான் எப்போதும் ஹைதராபாதி ஜல்லி குர்த்தாவையே அணிந்து கொள்வாள். அவளுடைய அடர்ந்த நிறமுள்ள குட்டைப் பாவாடைகளையம் அலைஅலையான வெள்ளைக் குர்த்தாக்களையும் என் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். கூரையில் மின்விசிறி மெதுவாகச் சுழலும் போது, பேகம் எப்போதும் மிருதுவான ஒரு சால்வையினால் தன்னை முடிக் கொள்வாள். குளிர்காலம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவள் வீட்டில் எனக்கும் குளிர்காலம் பிடித்திருந்தது. மிகவும் குறைவாக அவள் நடமானடினாள். தரைவிரிப்பின் மீது சொகுசாக சாய்ந்து படுத்துக் கொண்டு முந்திரி, திராட்சை போன்றவைகளைக் கொறித்துக் கொண்டும் தன்னுடைய முதுகை மசாஜ் செய்தவாறும் நாளைக் கழித்துக் கொண்டிருப்பாள். வீட்டின் மற்ற பணியாட்கள் ரப்போவின் மீது பொறாமை கொண்டிருந்தார்கள். சூனியக்காரி! பேகம் ஜானுடன் சமமாக அமர்ந்தும், சாப்பிட்டும், ஏன் சில சமயங்களில் உறங்கவும் செய்கிறாள். பணியாட்கள் ஒவ்வொரு முறை ஒன்றுசேரும்போதும் தவிர்க்க முடியாமல் அவர்கள் பேசுவதற்கான தலைப்பு இதுவாகத்தான் அமையும். இந்தப்பேச்சு எழும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தில் வெடிச்சிரிப்பு கிளம்பும். அங்கு இன்னும் என்ன மாதிரியான வேடிக்கைப் பேச்சுக்கள் கிளம்பின என்று யாருக்குத் தெரியும்? ஆனால் ஒன்று நிச்சயம். பாவப்பட்ட அந்த பேகம் ஜான் வேறு எந்த ஒரு ஆத்மாவையும் எப்போதும் பார்த்தது இல்லை. அவளுடைய நேரமெல்லாம் அந்த துரதிருஷ்டமான நமைச்சலுக்கு வைத்தியம் செய்து கொள்வதிலேயே கழிந்து போனது.

நான் அப்போது மிகவும் இளவயதினளாகவும், பேகம் ஜான் மீது அதீத நேசம் கொண்டவளாகவும் இருந்தேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவளும் என் மீது பிரியமாக இருந்தாள். என்னைத் தனியாக விட்டால் என் சகோதரர்களுடன் தொடர்ச்சியாக சண்டை இழுத்துக் கொண்டோ அல்லது குறிக்கோளில்லாமல் சுற்றிக் கொண்டோ இருப்பேன் என்று அவளுக்கும் தெரியும். என்னை பேகம் ஜானுடன் ஒரு வாரத்துக்குத் தங்கவைத்தது எனக்கு மிகவும்மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல பேகம் ஜானும் தன்னுடன் என்னை வைத்திருப்பதில் மகிழ்ந்து போனாள்.

நான் எங்கு து¡ங்குவது என்னும் கேள்வி எழுந்தது. அதற்கு அந்த வீட்டில் சரியான இடம் பேகம் ஜான் படுக்கையறைதான் என்று முடிவானது. அதன்படியே அவளுடைய சொகுசுக் கட்டிலின் அருகே ஒரு கட்டிலை ஏற்பாடு செய்தார்கள். அன்று இரவு பத்து பதினொரு மணி வரை சீட்டாட்டம் ஆடிக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தோம். பிறகு நான் தூங்கப்போனேன். து¡க்கம் என் கண்களை இழுத்தபோது ரப்போ பேகம் ஜானின் முதுகை சொரிந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அசிங்கம் பிடித்த சனியன் என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பிப் படுத்தேன். நடு இரவில் திடீரென்று விழிப்பு வந்தது. பேகம் ஜானின் ரஜாய் போர்வை அடியில் ஒரு யானை ஆக்ரோஷத்துடன் போராடிக் கொண்டு இருப்பதைப் போல மிகவும் வேகமாக ஆடிக்கொண்டிருந்தது.

“பேகம் ஜான்”.. என்னுடைய குரல் எனக்கே கேட்காதவாறு வெளிக்கிளம்பியது. யானை சற்று அடங்கியது.

“என்ன அது? து¡ங்கு”. பேகம் ஜானின் குரல் து¡ரத்திலிருந்து ஒலிப்பது போல் கேட்டது.

“எனக்குப் பயமாக இருக்கிறது”. என்னுடைய குரல், கலவரத்தில் உறைந்துபோன எலியின் குரலைப்போல ஒலித்தது.

“பயப்பட ஒன்றுமில்லை. தூங்கப்போ. அய்யத்-உல்-குர்ஸி யை ஒப்பித்துக் கொண்டே தூங்கு. ஒரு பயமும் இல்லை”.

“சரி”. உடனே அய்யத்தைத் துவங்கினேன். ஆனால் யாலமு மாபெய்ன் வரும்போது தடுமாறிப்போவேன். இது எனக்கு விசித்திரமாக இருந்தது. எனக்கு முழு அய்யத்தும் தெரியும்.

“உங்களிடம் வரட்டுமா பேகம் ஜான்”?

“இல்லை தூங்கு”. சற்றுக் கடுமையுடன் ஒலித்தது அவளுடைய குரல். பிறகு யாரோ குசுகுசுப்பது கேட்டது. அல்லாஹ்! யார் இது இன்னொரு ஆள்? இப்போது நான் மிகவும் பயந்து விட்டேன்.

“பேகம் ஜான். திருடன் யாராவது உள்ளே நுழைந்து விட்டானா”?

“தூங்கப்போ கண்ணே!. இங்கு திருடன் யாரும் இல்லை”. இது ரப்போவின் குரல். என்னுடைய ரஜாய் போர்வையில் ஆழப்புதைந்து கொண்டு தூங்க முயற்சி செய்தேன்.

விடிந்ததும், இரவில் அரங்கேற்றப்பட்ட அந்தப் பயங்கரக் காட்சியை என்னால் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. எங்கள் குடும்பத்திலேயே நான் ஒருத்திதான் முடநம்பிக்கைகள் அதிகம் உடையவளாக இருந்தேன். இரவுநேரப் பயங்கள், தூக்கத்தில் உளறுவது, தூக்கத்தில் நடப்பது போன்ற விஷயங்கள் என் சிறுவயதில் வழக்கமாக நடக்கும் காரியங்களாக இருந்தன. நான் கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று என் உறவினர்கள் பேசிக் கொள்வார்கள். மற்ற கற்பனையான பயங்களை உதறித்தள்ளியதைப் போலவே அந்த ரஜாய் சம்பவத்தையும் உதறித்தள்ளினேன். அடுத்தநாள் இரவில் நான் விழித்துக் கொண்ட போது ரப்போவுக்கும் பேகம் ஜானுக்கும் இடையிலான சண்டை படுக்கையின் மீதே தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் என்ன விதமான முடிவுக்கு வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரப்போ விசும்புவது கேட்டது. பிறகு பூனை தட்டில் பாலை நக்கிக் குடிக்கும் ஓசை கேட்டது. நாசமாகப்போகட்டும்! நான் உறங்கப்போனேன்.

இன்று ரப்போ தன்னுடைய மகனைப் பார்க்கப் போனாள். அவன் வம்புச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுபவன். வாழ்க்கையில் அவன் ஒரு நிலைக்கு வர பேகம் ஜான் நிறைய உதவியிருக்கிறாள். அவனுக்காக ஒரு கடையை விலைக்கு வாங்கிக் கொடுத்தாள். கிராமத்தில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தாள். ஆனால் பயனேதும் இல்லை. நவாப் சாகிப்புடன் கூட அவனைத் தங்க வைத்துப் பார்த்தாள். அங்கு அவன் மிகவும் நன்றாக நடத்தப்பட்டான். அவனுக்காக புதிய ஆடைகள் தைக்கப்பட்டன. ஆனால் நன்றி கெட்ட அந்தப் பையன் யாதொரு காரணமும் இன்றி அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனான். ரப்போவை பார்ப்பதற்குக் கூட அவன் திரும்பி வரவில்லை. அதனால் அவனை எப்போதாவது பார்ப்பதற்காக ஒரு உறவினரின் வீட்டில் ஏற்பாடு செய்து கொண்டாள் ரப்போ. பேகம் ஜான் இதை எப்போதும் அனுமதித்து இருக்க மாட்டாள். ஆனால் பாவம் ரப்போ வேறுவழியின்றி அங்கு போகவேண்டியதாகப் போனது.

நாள் முழுக்க மிகவும் நிலைகுலைந்தவளாக இருந்தாள் பேகம். அவளுடைய மூட்டுக்களில் நரக வலியெடுத்தது. ஆனால் அவளால் வேறு யாருடைய தொடுகையையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு கவளம் கூட உள்ளே இறங்கவில்லை அவளுக்கு. நாள் முழுதும் படுக்கையில் தளர்ந்து, சரிந்து கிடந்தாள்.

“நான் உங்களுக்கு சொறிந்து விடட்டுமா பேகம் ஜான்”? சீட்டு விளையாடும்போது ஒருவிதமான ஆர்வத்துடன் அவளைக் கேட்டேன். என்னை மிகவும் ஜாக்கிரதையாக உற்றுநோக்கினாள் பேகம் ஜான்.

நிஜமாகவே நான் செய்யட்டுமா? சீட்டுக்களை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து சொறிந்து கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய சிசுருஷைக்கு ஏதுவாக அமைதியாகப் படுத்துக் கொண்டாள். ரப்போ மறுநாளைக்கு வரவேண்டும். ஆனால் அவள் எப்போதும் வரவில்லை. பேகம் மிகவும் எரிச்சல் அடைந்தாள். தலையின் நரம்புகள் தெறிக்கும் அளவுக்கு எக்கச்சக்கமாகத் தேனீர் அருந்தினாள்.

மீண்டும் அவள் முதுகில் இருந்து ஆரம்பித்தேன். என்ன ஒரு வழவழப்பான முதுகு! மிகவும் மிருதுவாக சொரிந்து கொடுத்தேன். அவளுக்குக் கொஞ்சம் உதவியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

“பட்டையை அவிழ்த்து விட்டு இன்னும் ஆழமாக சொறிந்து விடு… அங்கே.. அங்கே.. தோளுக்குக் கீழே. அய்யோ… அற்புதம்”.. மிக ஆசுவாசத்துடனும் பரவசத்துடனும் என் காதருகில் கிசுகிசுத்தாள் பேகம்.

“இங்கு… அப்படித்தான்”.. பேகம் அங்கங்கு காட்டி சொறியச் சொன்னாள். அந்தப் பகுதியைத் தானே சொறிந்து கொள்ள முடிந்தாலும் எனக்குக் காட்டிக் காட்டி சொறிய வைத்தாள். என்னுடைய தொடுகை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எவ்வளவு பெருமை எனக்கு!

“இங்கே… இங்கே.. ஐய்யோ… நீ எப்படியெல்லாம் கிச்சுக்கிச்சு முட்டுகிறாய்” – அவள் உரக்கச் சிரித்தாள். நான் அவளுடன் பேசிக்கொண்டே சொறிந்து விட்டுக் கொண்டிருந்தேன்.

“நாளை உன்னை கடைத்தெருவுக்கு அனுப்புகிறேன். உனக்கு என்ன வேண்டும்? தூங்கும் நடக்கும் பொம்மை வேண்டுமா?”

பொம்மையா.. வேண்டாம் பேகம்! என்னை என்ன குழந்தை என்று நினைத்தீர்களா? நான்…

சரி. நீ கிழட்டுக் காக்கை. அதுதானே நீ? அவள் சிரித்தாள்.

சரி. அப்போ ஒரு சுட்டிப் பையன் பொம்மையை வாங்கிக்கொள். அதற்கு நீயே உடை உடுத்தி விடு. உனக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை வாங்கித்தருகிறேன். சரியா? என்று புரண்டு படுத்தாள்.

“எனக்கு அந்த மலிவான பொருள் வேண்டாம். பார்த்தாலே ஒட்டிக் கொள்வது மாதிரி இருக்கும்” – அவளுடைய உடலின் சகல பகுதிகளிலும் என் கைகளை மேயவிட்டு சம்பந்தமே இல்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தேன். அதை நான் உணரவில்லை. ஆனால் இப்போது பேகம் மல்லாக்கத் திரும்பிப் படுத்தாள். நான் சடாரென என் கைகளை விலக்கிக் கொண்டேன்.

“முட்டாள் பெண்ணே, நீ செய்கிறாய் என்று பார்த்தாயா- என் விலா எலும்புகளை எல்லாம் தடம் புரள வைத்து விட்டாய்”. குறும்பாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள் பேகம். நான் சங்டத்தில் சிவந்து போனேன்.

“வா. வந்து என்னுடன் படுத்துக் கொள்”. தன்னுடைய கரங்களின் மேல் என் தலையை சாயவைத்து படுக்க வைத்துக் கொண்டாள். எவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய். சரி. உன் விலா எலும்புகள் எத்தனை இருக்கின்றன என்று பார்க்கிறேன்” – என்று சொல்லி ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பித்தாள்.

“வேண்டாம்”… என பலவீனத்துடன் எதிர்த்தேன்.

“நான் ஒன்றும் உன்னை தின்றுவிடமாட்டேன். என்ன ஒரு இறுக்கமான ஸ்வெட்டர். உள்ளே ஒன்றும் போடவில்லையா”? – நான் அமைதியிழக்க ஆரம்பித்தேன்.

“எவ்வளவு விலா எலும்புகள்”? பேச்சு மாறியது

“ஒரு பக்கம் ஒன்பதும் மற்றொரு பக்கம் பத்தும்”. பள்ளியில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. மிகவும் குழப்பமான நினைவுகள்.

“சரி – நான் பார்க்கிறேன்”. என்னுடைய கையை விலக்கி எண்ணத் துவங்கினாள். “ஒன்று… இரண்டு… முன்று”…

அங்கிருந்து, அவளை விட்டு எங்காவது ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவள் என்னைத் தன்னுடன் இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள். விடுபடுவதற்குப் போராடினேன். பேகம் சிரிக்கத் தொடங்கினாள்.

அந்தக் கணத்தில் எனக்குக் காணக்கிடைத்த அவளுடைய அந்தத் தோற்றத்தை இப்போது நினைத்துக்கொண்டாலும் எனக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய கண்ணிமைகள் மிகவும் கனமாக, மேலுதடு கறுத்துப்போய், குளிரையும் மீறி அவளுடைய நாசியிலும் கண்ணிமைகளின் மேலும் சிறுசிறு முத்துக்களாய் வியர்வைத்துளிகள் பனித்திருந்தன. அவளுடைய கரங்கள் விரைப்பாகவும் சில்லிட்டும் இருந்தன. ஆனால் மிகவும் மிருதுவாகவும் உரித்துவைத்ததைப் போலவும் இருந்தன. அவள் தன்னுடைய சால்வையை வீசி எறிந்தாள். காக்ரா குர்த்தாவில் அவளுடைய உடல் பிசைந்து உருட்டி வைத்த மாவைப்போல ஒளிர்ந்தது. குர்தாவின் கனமான தங்கப் பித்தான்கள் திறந்து ஒரு பக்கமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

அச்சமுட்டும் கருந்திரளாக அந்தி நேரம் அவளுடைய அறையில் சூழ்ந்து கொண்டிருந்தது. இனம்புரியாத ஒரு பயங்கரத்தின் பிடியில் சிக்கியதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குத் தோன்றியது. பேகம் ஜானின் கருமையான ஆழமான கண்கள் என்னையே உற்றுநோக்கின. நான் அழத்தொடங்கினேன். ஒரு களிமண் பொம்மையைப்போல அவள் என்னை இறுக்கிப் பிடித்திருந்தாள். அவளுடைய உடலின் வெதுவெதுப்பு எனக்கு வாந்தியை வரவழைப்பது போல இருந்தது. அவள் ஏதோ பேய் பிடித்தவள் போல் இருந்தாள். நான் என்ன செய்ய முடியும்? என்னால் அழவோ அல்லது கதறவோ முடியவில்லை! ஒரு கணத்தில் பேகம் வலிமையற்றவள் போல ஆனாள். முகம் வெளிறிப்போய் அச்சமூட்டும் வண்ணம் இருந்தது. ஆழமாகப் பெருமுச்சு விடத் துவங்கினாள். செத்துப்போவது போல எனக்குத் தோன்றினாள். நான் வெளியே ஓடத் துவங்கினேன்.

கடவுளுக்கு நன்றி! அன்று இரவு ரப்போ திரும்பி வந்தாள். முகத்தை போர்வையால் முடிக்கொள்ள பயமாக இருந்தது. ஆனால் வழக்கப்படி உறக்கம் தவிர்ந்து போனது. நான் பல மணி நேரத்துக்கு விழித்துக் கொண்டே படுத்திருந்தேன்.

அம்மா திரும்பி வரவேண்டும் என்று நான் வேண்டினேன். அந்த வீட்டின் மற்ற பணியாட்களின் இடையில் என்னுடைய நேரத்தை கழிக்கும் வண்ணம் பேகம் எனக்கு பயங்கரமானவளாகத் தோன்றினாள். அவளுடைய படுக்கையறையில் நுழைய எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. யாரிடம் என்ன சொல்ல முடியும்? என்னை அந்த அளவுக்கு நேசித்த பேகம் ஜானைப் பார்த்து நான் பயப்படுகிறேன் என்றா?

இன்று பேகம் ஜானுக்கும் ரப்போவுக்கும் இடையில் ஏதோ பெரிய தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையிலான சண்டையைப் பார்க்க எனக்கு மரண பயம். என்னுடைய துயரங்களுக்கு அவை கோடி காட்டின. பேகம் ஜான் உடனடியாக என்னை நினைத்துக் கொண்டாள். நடுங்கும் குளிரில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? கண்டிப்பாக நிமோனியா காய்ச்சலில் சாகப்போகிறேன்!

மகளே… எல்லோருக்கும் நடுவில் என்னை அவமானப்படுத்தப்போகிறாய். உனக்கு ஏதாவது ஆனது என்றால் உன் அம்மாவின் முகத்தில் நான் எப்படி விழிக்க முடியும்? வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டே கண்டிக்கும் குரலில் என்னைக் கேட்டாள். தேனீர் கோப்பை பக்கத்து மேஜையில் காத்துக் கொண்டிருந்தது.

ஒரு கோப்பையில் தேனீர் விட்டு எனக்குக் கொடு, அவள் முகத்தையும் கைகளையும் துடைத்துக் கொண்டாள்.

அவள் உடை மாற்றிக் கொண்டபோது நான் தேனீர் அருந்தினேன். அவளுடைய உடல் மசாஜ் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னிடம் சிறுசிறு வேலைகளைப் பணித்தாள். நான் சற்றுத் தயக்கத்துடன் அவள் கேட்டதையெல்லாம் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தேன். கிடைக்கும் சிறு சந்தர்ப்பங்களில் எல்லாம் ஓடிப்போய் பேகம் ஜானுக்கு முதுகைக் காண்பித்தவாறு நாற்காலியில் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன்.

“அம்மி”… என் இதயம் வேதனையில் கதறியது. “சகோதரர்களுடன் போட்ட சண்டைக்காக எதற்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறாய்?” அம்மாவுக்கு பையன்களுடன் நான் பழகுவது பிடிக்காது. அவர்கள் ஏதோ தன்னுடைய அருமை மகளை உயிரோடு ஒரே முழுங்காக விழுங்கப்போகும் ஆள்முழுங்கி ராட்சதர்கள் என்று கற்பனை செய்து வைத்திருப்பாள். எப்படியிருந்தாலும் அந்த ராட்சதர்கள் யார்? என்னுடைய சொந்த சகோதரர்களும் அவர்களுடைய சுட்டி நண்பர்களும்தானே?. பெண்களுக்கு ஏழு தாழ்ப்பாள்களின் மேல் பூட்டப்பட்ட ஏழு பூட்டுக்களால் ஆன சிறைத்தண்டனையில் நம்பிக்கை வைத்திருந்தாள் என் அம்மா. பேகம் ஜான் தரும் “ஆதரவு” உலகத்தின் மிக மோசமான தடியர்களிடம் ஏற்படும் அச்சத்தை விடவும் பயங்கரமானதாக இருந்தது. எனக்குத் துணிச்சல் இருந்திருந்தால் நான் தெருவில் இறங்கி ஓடியிருப்பேன். ஆனால் வழக்கப்படி நிராதரவாக மெய்யொடுக்கி அங்கேயே உட்கார்ந்து இருந்தேன்.

ஆடையுடுத்தியபின் வழக்கமான சடங்கான வாசனைத் தைலங்களையும் சூடேற்றும் அத்தரையும் பூசிக் கொண்டபின் பேகம் ஜான் தன்னுடைய கடுமையான சூட்டினை என் பக்கம் திருப்பினாள்.

அவளுடைய எல்லா ஆலோசனைகளுக்கும் எதிர்வினையாக “நான் வீட்டுக்குப் போக வேண்டும்” என்று கண்ணீருடன் சொன்னேன்.

“என்னுடன் வா. நாம் கடைக்குப் போகலாம்” வெண்ணெய் தடவுவது போல மிகவும் மென்மையாகச் சொன்னாள்.

ஆனால் என்னிடம் ஒரே பதில்தான் இருந்தது. “நான் வீட்டுக்குப் போக வேண்டும்” என்ற என் பல்லவிக்குப் போட்டியாக பல விதமான பொம்மைகளும் இனிப்புப் பண்டங்களும் என் முன் திணிக்கப்பட்டன.

“சூனியக்கார முண்டமே! உன் சகோதரர்கள் உன்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்” என்று அவள் மிகவும் பாசத்துடன் முதுகில் அறைந்தாள்.

“அவர்கள் தாராளமாக என்னைக் கொல்லட்டும்” என்று நான் கிளறிவிடப்பட்டது போல கோபத்துடன் இறைந்தேன்.

“சரியாகப் பழுக்காத மாம்பழங்கள் ரொம்பவும் புளிக்கும் பேகம் ஜான்” என்றது அந்தக் குள்ளப் பிசாசு ரப்போ.

பிறகு பேகம் ஜானுக்கு வழக்கமான வலிப்பு துவங்கியது. என்னுடைய கழுத்தில் அணிவதற்காக இருந்த தங்க நெக்லஸ், தூள்தூளாகச் சிதறியது. சிலந்தி வலை மாதிரி நெய்யப்பட்ட கழுத்துப் பட்டைத்துணி இரக்கமே இல்லாது நார்நாராகக் கிழிபட்டது. எப்போதும் விலகாத முன்நெற்றி முடி தாறுமாறாகக் கலைந்தது. “ஓ” வென்ற பெருங்கூச்சலுடன் உரக்க அழுது துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள். நான் வெளியே ஓடிப்போனேன். பெரும் ஆரவாரத்துக்குப் பின்னர், ரப்போவின் கடுமையான சேவைக்குப் பின் சுயநினைவுக்கு வந்தாள் பேகம் ஜான். நான் சத்தமில்லாது, மெல்ல நுனிக்காலை ஊன்றி படுக்கையறைக்குள் நுழைந்தபோது ரப்போ பேகம் ஜானின் உடல்மீது சாய்ந்து கொண்டு அவளுடைய கால்களைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

“காலணியைக் கழற்றுங்கள்” என்று அவள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள். நான் மெல்ல சுண்டெலி போல ரஜாய் போர்வைக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின் அந்த இரவில் பேகம் ஜானின் ரஜாய், மீண்டும் ஒருமுறை யானையைப் போல வலுவாக அசைந்து கொண்டிருந்தது. “அல்லா” என்னால் கூச்சலிட இயலாது போனது. ரஜாய்க்குள் இருந்த அந்த யானை குதித்து பின்னர் உட்கார்ந்து கொண்டது. என்ன ஆனாலும் சரி. படுக்கையின் அருகில் இருக்கும் விளக்கை எரிய விடுவது என்று தீர்மானித்தேன். யானை மீண்டும் உட்கார எத்தனிப்பது போல படபடத்து அடங்கியது. அழுந்திய ஒலி, வீறிட்ட அலறல். எச்சில் உமிழ்வதைப்போன்ற ஒலி – யாரோ விருந்தினை அனுபவிக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று சடாரென்று எனக்குப் புரிந்தது.

பேகம் ஜான் நாள் முழுதும் எதையும் சாப்பிடவில்லை. ஆனால் அந்த ரப்போ சூனியக்காரி, பெருந்தீனிக்காரி. கண்டிப்பாக அவர்கள் இருவரும் ரஜாய்க்கு அடியில் புதைந்து கொண்டு எதையோ சுவைத்துக் கொண்டிருந்தார்கள். நான் மூக்கை விடைத்துக் கொண்டு, பெருஞ்சினத்துடன் கனமாக மூச்சு விட்டுக்கொண்டு அந்த விருந்தின் மணத்தை நுகரக் காத்திருந்தேன். ஆனால் அந்த அறையின் காற்றில் அத்தர், ஹென்னா, சந்தனம், சூடான வாசனைத்திரவியங்களின் மணம்தான் சூழ்ந்தன. உணவுப் பண்டத்தின் வாசம் ஏதும் இல்லை.

மீண்டும் அந்த ரஜாய் பெரும் அலையாக மேலெழும்பியது. சலனமின்றிப் படுத்துக் கொண்டிருக்க முயற்சித்தேன். ஆனால் பேகத்தின் ரஜாய் என்னை நான் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதவாறு பூதாகரமான தோற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த ரஜாய்க்குள் ஒரு தவளை மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து என்மேல் பாய்வதற்குத் தயாராவது போலத்தோன்றியது.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அம்மி! என்று கூப்பிட்டேன். ஆனால் யாருக்கும் அது கேட்கவில்லை. அதே நேரத்தில் அந்த ரஜாய் மெத்தை என் மூளைக்குள் புகுந்து மிகப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்தது. படுக்கையின் விளிம்புக்கு மெல்ல ஊர்ந்து சென்று கால்களை உதறி எழுந்து உட்கார்ந்தேன். இருட்டில் விளக்கின் சுவிட்சை பற்றிக்கொண்டேன். ரஜாய்க்குக் கீழ் அந்த யானை கரணமடித்து உள்ளே புதைந்து கொண்டது. அந்தக் கரணத்தின் போது ரஜாயின் ஒரு பக்க மூலை படுக்கையிலிருந்து ஒரு அடிக்கு மேலெழும்பியது.

அல்லாஹ்! நான் என் போர்வைக்குள் முகம் புதைத்துக் கொண்டேன்.

ரஜாய் விலகியபோது நான் எதைப்பார்த்தேன் என்பதை நான் யாருக்கும் எப்போதும் சொல்லமாட்டேன். எனக்கு யாராவது ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் கண்டிப்பாகச் சொல்லமாட்டேன்.

*******************************

ரஜாய்

இஸ்மத் சுக்தாய்

Ismat Chughtai. The Quilt & Other Stories. New Delhi: Kali for Women. 1996

ஆங்கிலத்தில் : தஹிரா நக்வி மற்றும் சயீதா எஸ்.ஹமீது
தமிழில் : ராகவன் தம்பி

Series Navigation

ராகவன் தம்பி

ராகவன் தம்பி