இரு வேறு சூல் காலம்

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

எஸ்.காமராஜ்


பேருந்திலிருந்து இறங்கியதும் வெயில் சுரீரென்றடித்தது. தீக்கங்குகுகளை
அள்ளிவீசியதுமாதிரியிருந்தது. ஒவ்வொரு கோடையிலும் வெயில் உக்கிரமாக அடித்தாலும் இப்பொழுது அடித்துக்கொண்டிருக்கிற வெயில் வேண்டுமென்றே அதிகமான மாதிரித்தெரிகிறது. வெயிலடிக்கிற நேரங்களில் நிழலின் ஞாபகம் கூப்பிடாமலே வந்து விடுகிறது.நடபாதைக் கடைகளைத்தாண்டி வெயிலுக்குப்பயந்த மனிதர்களின் கூட்டமிருந்தது. அவர்களோடு இணைந்து கொள்ள ஒதுங்கி நடந்தோம். அவள் மிக மெதுவாகவே நடந்து வந்தது எரிச்சலாயிருந்தது.களைத்துப்போயிருந்தாள், ஜன்னலோர இருக்கைப்பயணம் தலையைக்கலைத்துவிட்டிருந்ததால் இன்னும் கூடுதல் சோர்வாகத்தெரிந்தாள். பேருந்து நிலையத்துக்குள் வரிசையாகக் கடைகள் இருந்தது எல்லாமே பயணிகளுக்கான வியாபாரம். கடைகளில் உட்கார்ந்து கொண்டு இறங்குகிற ஒவ்வொரு பயணியையும் அளந்தார்கள். அந்தப்பக்கமாய் வெயிலுக்கு ஒதுங்குகிறவர்களை ஆவலோடு பார்த்தார்கள். பெட்டிக்கடைக்காரர் சர்ப்பத் குடிக்க வற்புறுத்தினார். பெரியார் படம் போட்ட ‘தமிழக எண்ணெய்ப்பலகார’க்கடையிலிருந்தும் இனிப்புகள் வாங்க வற்புறுத்தினார். நடைபாதையில் பூக்கூடை வைத்திருந்த பதினோறு வயதுப்பென்னொருத்தி, வழிமறித்தாற்போல் நின்றுகொண்டு ”அண்ணே பூ வாங்கிக்கொங்க” இரண்டுமுழம் மல்லிகையை முகத்துக்கு நேரே நீட்டினாள். வெயில் பட்ட மல்லிகை வதங்கிய வாசம் முகத்திலடித்தது. அவள் முகம் பார்த்தேன் அவள் பூவைப்பார்த்தள், வியாபாரம் படிந்துவிடும் எனும் நம்பிக்கை அந்தப்பென்னின் கண்ணில் விரிந்தது. அதற்குள் ”எக்கா பிச்சிப்பூ வேனுமா” இன்னொரு கணத்த சரீரமுள்ள பெரிய மனுஷி குறுக்கே வந்தாள். ”நாங்க குடுக்கப்போறமில்ல..”’ ‘சும்மா கெடங்க, நாங்க பிச்சிப்பூ வச்சிருக்கமில்ல”
”நாங்க என்ன கூடையில வச்சி செல் போனா வித்துட்டுருக்கோம்”
பூ வியாபாரம் கெட்ட கெட்ட வார்த்தைகளில் நாறியது. ”என்ன இன்னும் அந்த மாமூல் வசவ எடுத்து உடல” பலகாரக்கடைப்பெரியவர் சொல்லவும் சிப்பந்திகள் சிரித்தனர். பக்கத்து வீட்டுச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி. ஓசியில் சண்டை பார்த்தது கூட்டம்.யாருக்கும் சண்டை விலக்கிவிடத் துணிச்சலில்லை. அது அடித்தட்டுப் பூக்காரிகள் விவகாரம். சுற்றிலும் நின்றுகொண்டிருப்பவர்களுக்கு புஷ்ஷையும், முசாரப்பையும் பற்றிப்பேசுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மும்முரத்தில் ரெண்டு பூக்கூடைகளும் எங்களை எங்களை மறந்து போயிருந்தார்கள். மிகவும் ஆச்சரியமாயிருந்தது ஒரு சின்னப்பென் அவ்வளவு பெருங்கூட்டத்தில் ஓடி ஓடி பூ விற்பதும், போட்டியெமன்று வந்ததும் தன் தாயை விடவும் பெரிய மனுஷியோடு சரிமல்லுக்கு நிற்பதுவும் விசித்திரமாகத்தெரிந்தது. இதோ பக்கத்தில் நிற்க்கிற அவள் ஒரு நாள் தணித்து வீட்டிலிருக்க நேர்ந்தாலும் எல்லா விளக்குகளையும் எறிய விட்டு,
சாவித்துவாரங்களைக்கூட துணிவைத்து மறைத்துவிடும் பராக்கிரமசாலி. அது அவளின் முன் ஜாக்கிறதை என்று கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.அதற்கு சொல்லும் காரணங்கள் தமிழ் சினிமாவின் மூடப்பழக்கங்களைவிட மோசமானது. உலகத்தில் சுவரென்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே அவற்றோடு ஒட்டிப்பிறந்தமாதிரி பல்லிகள் பிரிக்கமுடியாததாகிவிட்டது. ஓலை வீடு கூரைவீடு காரை வீடு வித்தியாசமில்லாமல் எல்லாவீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிற பல்லிகளைச்சந்தேகிக்கிறவள். அதுபாட்டுக்கு விளக்குக்குப்பக்கத்தில் இருந்துகொண்டு சின்னப்பூச்சிகளை சுவாகாப்பண்ணிக்கொண்டு ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அப்பிராணி.அது இதுவரை மனிதர்களைக்கடித்ததாக சரித்திரமும் இல்லை, கம்ப்யூட்டர் சயின்சும் இல்லை. ஒரு நாள் நடு இரவில் என்னை எழுப்பி தூக்கம் வரவில்லை என்று சொன்னாள். என்னவெனக்கேட்டதற்கு கெட்டசொப்பணம் வந்ததாகவும். முழித்து விளக்கைப்போடும்போது பல்லியொன்று திரு திரு முழியோடு அவளையே உற்றுப்பார்ப்பதாவும் சொன்னாள். கெட்ட வார்த்தகளில் திட்டிதீர்த்து விட்டுத்தூங்கினேன்.” சண்டை ஏதும் போடுவதாயிருந்தாள் பகலில் அல்லது முன்னிரவில் போடுங்கள் நடு சாமத்தில் போடாதீர்கள்” என்று மறு நாள் காலை அடுத்த வீட்டுக்காரர்கள் ஆலோசனை சொல்லும்படிக்கு ஆகிப்போனது. கரப்பான் பூச்சி, கம்பளிப்பூச்சியைக்கண்டு கீச்சுக்குரலில் அலறுகிற பென்களைப்பற்றித்தான் பட்டறிவு பதிவு செய்திருக்கிறது. மண்புழுவுக்குப் பயப்படுகிற பெண் இவள். ஏழுகழுதை வயசாகிப்போனபின்னும் காய்ச்சலுக்கு ஊசி போடும்போது முகட்டைப்பர்த்து கண்மூடிக்கொண்டு வீச்சரிவாளை எதிர்கொள்கிற மாதிரி முகத்தைவைத்துக்கொள்வாள்.
இரண்டாவது குழந்தை ஜனித்ததிலிருந்து இதுவாவது சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று வெள்ளி செவ்வாயில் கடவுளர்களையும்,மாதம் ஒருதரம் மருத்துவரையும் நச்சரித்தாள் .மருத்துவரையே குழப்புகிற பெருஞ்சந்தேகங்களைக்கேட்டு ஒவ்வொரு தரமும் அவரை நிம்மதியாக பீஸ் வாங்கவிடாமல் அலைக்கழித்தாள். இவளது நச்சரிப்புந்தாங்காமல் மதுரையில் ஸ்கேன் பார்க்க சீட்டெழுதிக்கொடுத்திருந்தார்.ஜலதோசக்காய்ச்சலென்றால் கூட ரத்தம் மலம் சலியைப் பரிசோதனைபண்ண சிபாரிசு செய்கிற மருத்துவர்கள் இப்போது முனுக்கென்றவுடன் ”எதுக்கும் ஒரு ஸ்கேன் பாத்துருங்க”என்று சொல்லிச் சீட்டெழுதிக் கொடுத்துவிடுகிறதுதான் விஞ்ஞானம். எல்லாம் வளர்ச்சியின் வேதனைகூட முன்னேற்றங்களுக்கான விலை என்றாகிப்போனது. ஸ்கேன் பார்க்கச் சொல்லியதிலிருந்து பயம், குழப்பம் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு நாளையும் சந்தேகத்தோடே கடத்தும்படிக்கு நேர்ந்தது. போதாக்குறைக்கு தொலைக்காட்சியில் வாரா வாரம் மருத்துவ ஆலோசனைப்பகுதியில் காண்பிக்கப்படுகிற காட்சிகளில் தனது உடல் நலத்தை ஒப்பிட்டுப்பார்த்து பயந்துபோயிருந்தாள்.தொலைக்காட்சி என்பது இப்பொழுது எல்லாவற்றையும் விற்க பயன்படுத்தும் விளம்பர ஊடகமாகிப்போனது.ஒரு படி ஒரு ரூபாய்க்கு வாங்குவதற்குக் கூட கடும் பேரம் பேசுகிற தாய் மார்களை அறைக்கிலோ உப்பை ஏழு ரூபாய்க்கு வாங்க வைத்துவிடுகிற சாமர்த்தியம் நிறைந்தது. பேருந்து நிலைய வாசல்களில் மஞ்சள் நோட்டீசைக்கொடுத்து லாட்ஜுக்கு இழுக்கிற ரகசிய மருத்துவர்களை மிஞ்சுகிற விளம்பரங்களுக்கு தொலைக்காட்சி பெரும்பனியற்றி வருகிறது.
எனக்கு விபரம் தெரிய எங்கள் ஊருக்கு சைக்கிள் கேரியரில் ஒரு மருந்துப்பெட்டியை வைத்துக்கொண்டு ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் வருவார், எதாவது வீட்டுத் தாழ்வாரத்தில் அதைவைத்துக்கொள்வார். அந்த வீட்டுமனிதர்களிடமே வெண்ணீர் போடச்சொல்லி வாங்கிக்க்கொள்வார், கிராமத்து மனிதர்களுக்கு ஊசிபோட்டு மாத்திரைகள் தந்து வெறும் ஐந்து ரூபாய்மட்டும் வாங்கிக்கொண்டு, அதுவும் தர வக்கில்லாதவர்களிடம் அன்பை மட்டும் வாங்கிக்கொண்டு திரும்பச் சைக்கிளில் ஏறிச்சென்று விடுவார். பின்னாளில் அவர் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர் என்று தெரிந்துகொள்ள நேர்ந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியும் ”பிழைக்கத்தெரியாத மனுசன், கடைசி வரை ஒரு சல்லிக்காசு கூடச்சேர்த்துவைக்காமல் போய்ச்சேர்ந்துவிட்டார்” என்று பிறர் சொல்லக்கேட்கும் ஏற்பட்டுப்போன பெருத்த மரியாதையும் அவர் சொத்து. அவர் இல்லாத போது,பூச்சச்சின்னையாவின் கை மருத்துவம் மூக்கம்மாப்பாட்டியின் பிரசவ மருத்துவமும் தான் கதிமோட்சமாக இருந்தது. .காது வளர்த்து, கண்டாங்கிச்சேலை மட்டும் உடல் சுத்தி ரவிக்கையில்லாத,பாட்டியின் கைபடாமல் எந்தக் குழந்தையும் தரை பார்த்ததில்லை. கச கசவெனப் பேச்சுச்சத்தத்துக்கு நடுவில் பெண்களின் சாமம் விழித்திருக்கும். முக்கலும் முனகலும், சில நேரம் சாமத்தின் மௌனத்தைக்கிழித்தெறிகிற கூப்பாடோடும் பிள்ளைத்தாச்சி கலவரப்படுத்திக்கொண்டிருப்பாள். அந்த வீட்டு ஆண்களும் சிறுவர்களும் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்கள், அவர்களுக்கு அன்றைக்கு ஊர் மடத்தில் தான் படுக்கை. கேலியும் கிண்டலுமாக, வேதனையை விரட்டிவிடச் சூழ்ந்திருக்கும் பழய தாய்மார்களின் ராஜ்ஜியமாக அந்த இடம் மாறியிருக்கும், இந்த உலகத்துக்கு ஒரு புதிய கூலிக்காரியை. கூலிக்காரனை கொண்டுவந்து சேர்க்கிற ஆவலோடு அவர்கள் காத்திருப்பார்கள். மூக்கம்மாக்கிழவியின் விரலசைவும் கண்ணசைவும், கட்டழைகளாகும், பிறகு ரத்தசகதியாய் தரையிறங்கும் சிசுவைக்கையிலேந்தி, குளிக்கவைத்து துடைத்து ” எலே கருவாப்பயலே என்ன பாடு படுத்திட்ட இந்தக்கெழவிய, வளந்து ஆளாகி, கால்வராமக்கெடக்குபோது, கெழவிக்கொரு பொடிமட்ட வாங்கித்தரனும்” உச்சிமுகந்து உற்றாரின் கையில் ஒப்படைத்துவிட்டு, காலையில் மொழகா பறிக்க காந்தி நாய்க்கர் தோட்டத்துக்கு போகவேண்டிய சேதியையும் சொல்லுவாள். காப்பித்தண்ணி போடலயா என்று கேட்டுவிட்டு அதற்குக் கூடக்காத்திருக்காமல் கடந்து போய்விடும் மூக்கம்மாக்கிழவிக்கு இது வரை அப்படி யாரும்
பொடிமட்டை வாங்கிக்கொடுத்ததாகச்சேதியில்லை.பட்டமில்லாத அவர்களுக்கு கொடுக்கவும், வாங்கிக்கொள்ளவும் விலையில்லா அன்பு மட்டும் ததும்பத் ததும்ப அந்த ஊர் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது.

ஸ்கேன் செண்டருக்கு வழி கேட்டு, அண்னா நகர் பேருந்து நிலையத்துக்கு நகரப்பேருந்தில் உட்கார இடம் இல்லாமல் கம்பியைப்பிடித்துக்கொண்டு பயணம் போனோம். கூட்ட நெரிசலில் அவளுக்கு நிற்க முடியவில்லை. இறக்க சிந்தனை குடியிருக்கிற முகம் எதுவும் அந்தக்கூட்டத்தில் தென்படவில்லை. தற்செயலாக திரும்பிப்பார்த்த பழக்கூடை வைத்திருந்த வயசான பெண்மனி ”வகுத்துப் பிள்ளக்காரி நிக்குதே, வா தாயி” என்று சொல்லி தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார்கள். நிறத்திலும் தோற்றத்திலும் மூக்கம்மாப்பாட்டி போலவே தெரிந்தார்கள். மதுரை ரயில் நிலையச் சுவற்றில் ஆளுயர எழுத்துக்களில் அரசியல் வாதிகளின் பெயர்களும், ”ஒச்சு”பாலு, ‘ஒத்தக்கை’காளியப்பன், பரட்டை முருகன் இப்படியான, தொண்டர்களின் புனைப்பெயர்களும் எழுதப்பட்டிருந்தது. மனிதர்கள் எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.அதில் ‘மணல்’கந்தசாமி என்ற பெயர் என்னை வெகுவாகப்பாதித்தது, மணல் என்ற அடைமொழி உருவாக எது காரணமாயிருக்கும் என்கிற கேள்வி நெடுநாள் புதிராகவே இருந்தது. ஆத்துமணலை அரசாஙகத்துக்குத்தெரியாமல் அள்ளி விற்ற அந்தத் தியாகி பின்னாளில் குத்தகைதாரர் ஆனார் என்பது தெரிய வந்தபோது இந்த தேசத்தின் மேலிருந்த மரியாதையின் அளவு ரொம்பத்தான் கூடிப்போனது. அந்த எழுத்துக்களுக்கு கீழே உச்சிவெயிலில் கையகல நிழலில் ஒருதாயும் குழந்தையும் சுருண்டு படுத்துக்கிடந்தார்கள். கொஞ்சம் தள்ளி சைக்கிள் ரிக்சாக்கள் ஒன்றிரண்டு சோர்ந்துபோய் நின்றிருந்தது, அதில் உட்கார்ந்து கொண்டு ரிக்சா ஓட்டிகள் இழுத்துவிடுகிற கஞ்சாப்புகையின் வாசனை ஒடுகிற பேருந்துகுள்ளும் வந்துபோனது, பாரதி பணிபுரிந்த சேதுபதி மேனிலைப்பள்ளி வானுயர்ந்த கட்டிடங்களின் பள பளப்புக்கு நடுவே ஒளி மங்கிப்போய்,மிகச்சின்னதாகத்தெரிந்தது.பிடரிசிலிர்த்த சிங்கத்தின் அருகில் முதலமைச்சர் உட்கார்ந்திருக்க அருகில் அதைப்பர்த்து விசுவாசி ஒருவர், கைகூப்பிவணங்கியபடியதான ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது.அவர் கண்களில் தெரிக்கிற பக்தி அச்சு அசலாக பதிவு செய்யப்பட்டிருந்தது, அந்தக் கண்களுக்குக் கீழே முரட்டு மீசையும் வரையப்பட்டிருந்தது.அந்த ஓவியச்சுவரைப்பார்க்காமல் எந்தக்கண்களும் கடந்துபோகமுடியாதபடி இடம்தேர்வு செய்யப்பட்டிருந்தது. சிம்மக்கல் தாண்டியதும் பிரம்மண்டமான ஆற்றுப்பாலம் வந்தது.சின்ன வயசிலிருந்தே செவிவழிச்செய்தியாகவும்,தமிழ்ச்செய்யுள்கள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டிருந்த வைகைஆறு,சினிமாப்பாடல்களில் கூடப்பொங்கிபிராவகம் எடுத்த அதன் பெருமை அடிஆழத்தில் கிடக்க,ஆறு என்று சொல்லுவதற்கு இருந்த ஒரே தடயமான மணலும் பறிபோய், கட்டாந்தரையாய் பரந்து கிடந்தது வைகை. எல்லாம் மணல் தியாகிகள் கைங்கர்யம். ஒரு ஓரமாய் மதுரையின் மிச்ச சொச்சக்கழிவுகள் ஓடிக்கொண்டிருந்தது. கோரிப்பளையம் திரும்பியவுடனே நோயும் வறுமையும் கலந்த ஆஸ்ப்பத்திரி வாசனை அந்தப்பகுதியெங்கும் வியாபித்திருந்தது.கூட்டம் கூட்டமாக சோர்ந்த முகமும் அழுக்கு ஆடைகளோடும் மனிதர்கள் அலையும் ஒரு வேற்று உலகத்தைக்கடந்து போனது மாதிரியிருந்தது.
அண்ணா நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தே போனோம்.போகிற வழியெங்கும் இரண்டு கட்டிடத்துக்கு ஒன்றென மருத்துவமனைகள் நிறைந்திருந்தது.அது தவிர மருந்துக்கடைகள்,மருத்துவப்பரிசோதனை நிலையங்கள்,காய்ந்த ரொட்டி பச்சை ரொட்டிகளை அடுக்கி வைத்த பலகாரக்கடைகள்.ஆரஞ்சுப்பழங்கள்,இளநீர்க்காய்களை குவித்து வைத்திருக்கும் பெட்டிக்கடைகள் யாவும் நோயாளிகளைக் குறிவைத்துக் காத்துக் கிடந்தன.நடந்த களைப்பில் தாகமெடுத்தது பெட்டிக்கடையொன்றில் குடிக்கத்தண்ணீர் கேட்டதற்கு,பாட்டில் ஒன்றை குளிர்பதனப்பெட்டியிலிருந்து எடுத்துத்தந்தார்.பதினாலு ரூவாய் துணிச்சலோடு கேட்டார். நாங்கள் தயங்கியதால், பழரசம் சர்ப்பத் இருக்கு சாப்பிடுங்கள்,பானைத்தண்ணீரில்லை என்று கறாராகச்சொல்லிவிட்டான்.காற்றிலும் கூட ஈரப்பதம் குறைந்திருந்ததால் தாகம் அதிகமாக இருந்தது.சர்ப்பத் குடித்தால் சலிப்பிடித்து விடுமென்ற ஜாக்கிறதையில்,இளநீர் குடித்தோம்,இருவத்து நான்கு ரூபாய் பழுத்துப்போனது.
ஸ்கேன் செண்டரை நெருங்க நெருங்க அவள் முகத்தில் கூடுதல் சோர்வு தெரிந்தது.முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்தக்கட்டிடத்தின் முகப்பில் கார்களிலும் ஆடோக்களிலுமிருந்து இறங்கும் வாசனைத்திரவியம் மணக்கிற கணவான்களை வரவேற்கவும், பெயரைப்பதிவு செய்த மறுகணமே பணத்தைக் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளவும்,ஆங்கிலம் பேசத்தெரிந்த அழகிய இளம் பென்கள் காத்திருந்தார்கள்.தோற்றத்திற்குச்சம்பந்தமில்லாத கண்டிப்போடு பணத்தை வசூல் பண்ணுவதில் குறியாயிருந்தார்கள்.கனிவும்,ஆதரவும் தர்மாஸ்பத்திரியை விடக்குறைவாகவே இருந்தது.அதன் பிறகு காத்திருப்போர் வரிசையில் உட்கார்ந்து கொண்டு மக்கள் திலகம் எம்ஜியாரின் தத்துவப்பாடல்களைக்கேட்டபடியே பொழுது கடத்த தொலைக்காட்சிப்பெட்டி காத்திருந்தது.
இரண்டரை மணிவாக்கில் அவளை ஒரு அறைக்குள் அழைத்துப்போனார்கள்.அதற்குப்பிறகு ஒரு அறைமணிநேரம் காத்திருந்து ஒரு அகலமான காகித உறையில் அச்சடிக்கப்பட்ட காக்கிதங்களும்,படங்களும் வைத்துத்தந்தார்கள்.
”எப்படியிருக்கு”ஆவலடங்காமல் கேட்டாள்,”எல்லாம் நார்மல் தான் உங்க டாக்டர் மத்ததையெல்லாம்.சொல்லுவார்”.
சொன்னார்கள்.கிட்டத்தட்ட இதைப்போல பொருள் தொணிக்கும் வார்த்தைகளைத்தான் வந்திருந்த எல்லாருக்கும் சொன்னார்கள்.நிம்மதியாக இருந்தது.உடனே வெளியேறி ரோட்டுக்கு வந்தபோது வெயிலின் உக்கிரம் குறைந்துபோயிருந்தது.
சாப்பிடாத போதும் பசி குறைந்திருந்தது.அவள் முகத்தில் இப்போது சோர்வு இருந்த தடயமே இல்லை.சினிமாவுக்கு போகலாமா என்று யோசனை கேட்டாள், அதற்கான காலம் தவறி விட்டதால், பெரிய ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு கடைகளுக்குப்போய் அடுப்பங்கறைக்கு அழகூட்டுகிற பிளாஸ்டிக் பொருள்களை அள்ளிக்கொண்டு வந்தாள். பொழுது சாய்கிற நேரம் சாத்தூர் வந்திறங்கியதும் ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள் அடுத்த தெருவில் தான் வீடிருக்கிறது என்று சொல்லிப்புரிய வைக்க சிரமப்பட்டுக்கடந்து வந்தோம். அவளுக்கு ஆட்டோவில் போய் இறங்க வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கலாம் அது முகத்தில் லேசாகத்தெரிந்தது. மதுரையை விட ஜன நெரிசல் குறைந்திருந்தாலும் பாதிக்குமேல் தெரிந்தமுகங்களாகக்கடந்து போனதால் சாத்தூரும் நெரிசலான ஊராகத்தெரிந்தது. பழனியப்பா ஆஸ்பத்திரிக்குப்பக்கத்தில் காரவடை மணக்க மணக்க போட்டுக்கொண்டிருந்தார்கள்” நில்லுங்க,வடை வாங்கிட்டு வாரேன்” பதிலுக்கு காத்திருக்காமல் தள்ளுவண்டியைப்பார்த்துபோய்விட்டாள். பக்கத்து பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கலாமா என்று யோசித்து பையைதடவியபோது ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் கொஞ்சம் சில்லறையும் கிடந்தது.கொண்டுபோன ஆயிரம் ரூபாயில் அதுதான் மிச்சம். ஒரு பெரிய தீப்பெட்டி போரா என்னைத்தட்டியது. இடித்துச்சென்ற உருவத்தை எரிச்சலோடு பார்த்தேன், நிறைமாதக்கற்பினி ஒருத்தி தலையில் சுமக்கமாட்டாத பாரத்தோடு நகர்ந்து, நகர்ந்து போவதுபோல் நடந்து போனாள். அவளுக்குப் பாரம் எது ?


skraj_125@yahoo.co.in

Series Navigation

எஸ். காமராஜ்

எஸ். காமராஜ்