ரா கு கே து ர ங் க சா மி -4

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/4/

‘ ‘சாமி நான் இப்பதான் விஷயம் கேள்விப்பட்டேன். பாட்டிக்கு இப்ப எப்பிடியிருக்கு ? ‘ ‘ என்று வந்து நின்றான் ரங்கசாமி. சட்டென்று வாயில் புகையிலை கசந்தாற் போலிருந்தது. ஆத்திரத்தில் கண் சிவந்து உடலே கிடுகிடுவென்று நடுங்கியது.

‘ ‘எல்லாம் உன்னாலதான்யா! ‘ ‘

‘ ‘சாமி கோவத்ல இருக்கீங்க… ‘ ‘ என்று ரங்கசாமி புன்னகைத்தான். ‘ ‘நல்லவேளை உங்ககிட்ட பணம் குடுத்து வெச்சிருந்தேன். இப்ப அவசர ஆத்திரத்துக்கு உதவிச்சா இல்லையா ? ‘ ‘

‘ ‘அவசரமாவது ஆத்திரமாவது, உன்னை நெனைச்சித்தான் ஆத்திரம்! அந்தப் பணத்துனாலதான் பாட்டிக்கு உடம்புக்கு வந்தது… ‘ ‘

‘ ‘எல்லாம் காக்கா உக்கார பனம்பழம் விழுந்தாப்லதான்… நல்லதுக்குக் காலமில்லை இது. ‘ ‘

‘ ‘சரி, பாட்டி வீட்டுக்கு வரட்டும். பணத்தை வாங்கிக்கங்க. ‘ ‘

‘ ‘ஏன் ? ‘ ‘

‘ ‘ஏனா ? நான் வீட்டை விக்கிறதா இல்லை. ‘ ‘

‘ ‘என்னாச்சி சாமி ? ‘ ‘

‘நாம எதுவுமே பேசல அக்ரிமென்ட் ஒண்ணுமே போடல. அதுக்கு முன்னால எப்பிடி ரியல் எஸ்டேட் போர்டு மாட்டுவே நீ ? ‘ ‘

‘ ‘அதான் கோவங்களா ? நம்ம சாமிதானே, அக்ரிமென்ட் பின்னால போட்டுக்கலாம்னு பார்த்தேன். இப்பவும் நான் உங்களை நம்பறேன். அந்த நம்பிக்கைலதான், எந்த சாட்சியும் இல்லாமப் பணம் குடுத்திட்டுப் போனேன். போனேனா .இல்லியா ? ‘ ‘

இப்படிப் பேசிப் பேசித் தானேடா நாயே என்னைக் காயடிச்சே, என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஒழியறான், இவன்ட்ட ஏன் வெட்டியாப் பேசணும் ? வார்த்தையை வளர்த்துக்க வேணாம்…

ரங்கசாமி நான் முழிச்சிண்டாச்சாக்கும். உன் பருப்பு இனி இங்க வேகாது!

‘ ‘அப்ப நீங்க இடத்தை விக்கிறதா இல்லை… ‘ ‘ என்றான் ரங்கசாமி.

‘ ‘அதான் எத்தனை தடவை சொல்றது ? ‘ ‘

‘ ‘சரி சாமி. அப்ப நான் குடுத்த பணத்தை ரெண்டு வட்டி போட்டுத் திருப்பிக் குடுத்துருங்க… ‘ ‘

‘ ‘ரெண்டு வட்டியா ? ‘ ‘

‘ ‘அதான் நாங்க குடுக்கறது, வாங்கறது. ரூபாய்க்கு ஒரு நாளைக்கு ரெண்டு பைசா. ‘ ‘

‘ ‘பரவால்ல அவ்ளதானே ? ‘ ‘ என்றான் அவசரமாய். ‘ ‘அப்ப எவ்ளோ வருது ? ‘ ‘

‘ ‘ஒரு நாளைக்கு வட்டி ரெண்டாயிரம் ரூவா. ‘ ‘

‘ ‘அவ்வளவா ? ‘ ‘ என்றான் மலைப்பாய்.

‘ ‘பின்ன பிசினெஸ்னா சும்மாவா ? ‘ ‘

சீச்சி, என சபேசன் தன்னையே வெறுத்துக் கொண்டான். அதென்ன சனி ஒழியறதுன்னு அப்பிடி வேகமாய்த் தலையாட்டினோம்…

‘ ‘இங்க பார் ரங்கசாமி, நீங்க இடத்துக்கு அட்வான்ஸ்னு சொல்லிப் பணம் குடுக்கலியே, எப்பிடி வட்டி கேப்பீங்க ? முறையாப் பேசணுமில்லே ? ‘ ‘

‘ ‘நீங்க புரிஞ்சுக்கலைன்னா நான் என்ன சாமி பண்ண முடியும் ? முதல்ல அப்பிடிச் சொல்லல, சரி. எப்ப நான் உங்ககிட்ட விவரம் சொல்லிட்டேனோ, அப்பவே பணத்தைத் திருப்பிக் குடுத்திருக்கணும் நீங்க. இப்ப அஞ்சி நாளாச்சி. அதும்படி நீங்க திருப்பிக் குடுக்கல… நான் போர்டு போட்டது சரிதான். ‘ ‘

மேற்கொண்டு அவனிடம் என்ன பேச தெரியவில்லை. ‘ ‘மொதல்ல பெரியம்மா எழுந்து நடமாடட்டும் சாமி. நாம சாவகாசமா உக்கார்ந்து பேசுவம். ரெண்டு வட்டின்றது எங்க நடைமுறை வட்டி. உடனே போட்டுப் புரட்டினா லாபத்ல சரியாயிரும்… அதான் கட்டுப்படி யாவும். இல்லாட்டித் தாளாது… ‘ ‘

‘ ‘உங்க டாலிங்ஸ் நல்லால்ல ரங்கசாமி. நான் ஏமாளி இல்லை ‘ ‘ என்று வேறு கோணத்தில் ஆரம்பித்தான்.

‘ ‘ஐய நீங்க எமாளின்னு நான் சொன்னேனா ? நானும் எமாத்தற ஜாதி இல்ல. வேற எவன்ட்டியாவது மாட்டார்க்கணும் நீங்க… அதான் என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியல. பேச்சு வார்த்தைக்கு மின்னியே ஒரு லட்ச ரூவா குடுக்கலே நான் ? என்னைப் போய் இப்பிடிப் பேசறீங்களே சாமி. மனுஷன்னா நம்பிக்கை வேணும். எனக்கு உங்க மேல இருக்கு. உங்களுக்கு என் மேல இல்ல. ‘ ‘

‘ ‘இருக்கட்டும். நம்பி நம்பித்தான் நான் நாசமாப் போனேன்… ‘ ‘

‘ ‘மத்த ஆளுங்களை மாதிரி இ.ல்ல நான். இந்த இடத்துல ஒரு ஃபிளாட் (flat) தரேன். கட்டி முடிக்கிற வரை நல்ல இ.டமா வாடகைக்கு முடிச்சித் தர்றேன். உங்க மனைக்குப் பணம், தவிர லாபத்துல பங்கும் தரலாம்னேன்… இல்லையா ? உண்டா இல்லையா சொல்லுங்க சாமி ? ‘ ‘

‘ ‘நீ எதுவும் தர வேணாம். ஆளை விட்டாப் போதும். ‘ ‘

‘ ‘சாமி அதையே சொல்ட்டிருக்காதீங்க. உங்க பொண்ணு கல்யாணம் கெடக்கு. பையன் நல்ல நிலைமைல உக்காரணும். எல்லாத்துக்கும் பணம் வேண்டார்க்கே ? ‘ ‘

இதன் நடுவே சபேசன் மனதில் – பணத்தை வட்டியோடு இப்பவே வை – என அவன் அவசரப் படுத்தாதது பற்றி சிறிய ஆறுதல் வந்தது. வட்டி கேட்கிறான், சும்மா மிரட்டுவதுபோல்தான் இருக்கிறது. இந்த அஞ்சு நாளில் வட்டியே பத்தாயிரம். ஆஸ்பத்திரியில் இந்த ஐந்து நாளுக்கு ஆறாயிரம் ரூபாய் செலவு. அதைவேறு திரும்பப் போட வேண்டும். பாட்டி நிமித்தமே கூட இன்னும் எத்தனை செலவு இருக்கிறதோ, அது தனி ராமாணயம்.

‘ஆனது ஆய்ப்போச்சு ரங்கசாமி. நீயும் பணத்தை அட்வான்ஸா தரல. நானும் விக்கிறதா வாக்கு குடுக்கல கேட்டியா ? பேசாம பணத்தைத் திருப்பி வாங்கிக்க – அதான் நியாயம். ‘ ‘

‘ ‘அப்ப வட்டி ? ‘ ‘

‘ ‘அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ? ‘ ‘

‘ ‘அந்தக் கதைல்லா வேணாம். சாமி நான் விரல் சூப்பற பப்பான்னு நினைச்சிப் பேசறீங்க. நீங்களும் பைத்தாரன் கிடையாது, பைத்தாரன் வேஷம் போடறீங்க. உங்ககிட்ட நான் பணம் குடுத்தா, நீங்க பாட்டுக்கு அவசரம்னு எடுத்துச் செலவு பண்ணிக்குவீங்க. அதுக்கு நான் வட்டி கேட்டா… நான் என்ன செய்யிறதும்பீங்க… ‘ ‘ அவனே மாதிரிப் பேசிக் காட்டினான்.

‘ ‘இப்ப பாட்டிக்கு இப்பிடி வந்ததுக்குப் பணம் வேணுன்னா என்ன பண்ணுவீங்க ? வட்டிக்கு வாங்க மாட்டாங்களாக்கும் ? ‘ ‘ என்றான் ஒரு சிரிப்புடன், அதில் கோபம் தெரிந்தது.

‘ ‘இப்ப என்ன நீ வெவகாரம் பண்ணணும்னு வந்திருக்கியா ? ‘ ‘

‘ ‘ஒரு வெவகாரமும் இல்லை. காலைல வரேன் – வட்டியோட பைசல் பண்ணி விட்ருங்க. இல்லாட்டி போலிசுக்குப் போவேன்… ‘ ‘

திக்கென்றது. ‘ ‘போலிசா ? ‘ ‘

‘ ‘வேற வழி ? நீங்கதான் அடாவடித்தனம் பண்ணத் தயாராயிட்டாங்களே. ‘ ‘

சபேசனுக்கு உடம்பு வெடவெடவென்று நடுங்கியது. நான் பேச நினைத்த வார்த்தைகளை எனக்கு முன் என்மேல் வீசுகிறான்…

‘ ‘வேணாம் சாமி. ஒத்துவரலன்னா நாங்க பேசற பேச்சே வேற. லட்சக் கணக்குல பணம் புரள்றப்ப பாவ புண்ணியம் பாக்க முடியாது. பார்த்தா என் தலைக்குத் துண்டுதான். உங்ககிட்ட குடுத்த பணத்துக்கு நான் வட்டி தந்தாகணும். நான் எங்க போறது ? ‘ ‘

சபேசன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ ‘ச் விடுங்க சாமி. நாம நண்பர்களாகவே இருப்பம். ஆச்சிங்களா ? பெரியம்மா தேறி வரட்டும் முதல்ல…. நான் நியாயஸ்தன். இன்னும் பணம் வேணுன்னாலும் வாங்கிக்கிடுங்க. அவசர ஆத்திரம்னா உதவறது நல்ல விஷயம்தான். நான் பாவம் பாக்கற ஆளுத்தான்! உங்களை ஏமாத்தறது சுலபம். உங்களை ஏமாத்தன்னு நாட்ல ஆயிரம் பேர் அலையிறாங்க. நீங்க என்னடான்னா என்னை சந்தேகப் படறீங்க!… ‘ ‘ என்று நிறுத்தியவன், ‘ ‘எண்ணெய்க்காரன் தெருவுல ஃபர்ஸ்ட் கிளாஸ் வீடு பார்த்து வெச்சிருக்கேன். புதுசு. வாடகைக்கு எடுத்துத் தரேன். அதுக்குள்ள உங்க ஃபிளாட் ரெடியாயிரும். ஆயுசு பூரா உக்கார்ந்து சாப்பிடுவீங்க. நிம்மதியா இருப்பீங்க… ‘ ‘ என்றான்.

திரும்பத் திரும்ப அவனிடம் ஒரே விஷயத்தைப் பேச சபேசனுக்கு அலுப்பாய் இருந்தது.

‘ ‘வரேன் சாமி. புத்திசாலித்தனமா நடந்துக்கங்க. அவ்ளவுதான் சொல்ல முடியும். ‘ ‘ ரங்கசாமி பைக்கில் கிளம்பிப் போனான்.

—-

(அ டு த் த வாரம் கடைசிப் பகுதி)

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்