காசிப் பாட்டி

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

காசிகணேசன் ரங்கநாதன்.


—-

‘எலே மக்கா வாடே! ‘ மிக உற்சாகமாக வரவேற்றான் பனிக்கட்டி.

அது அவனுக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர். அவன் நிஜப்பெயர் நாராயணன்.

பனிக்கட்டி என்று அழைக்கும்போதெல்லாம் அவனுக்குக் கெட்ட கோவம் வரும்.

முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு,முஷ்டியை மடக்கிக் கொண்டு எங்களைத்

துரத்துவதும் நாங்கள் சிரித்தபடி ஓடுவதும் வாடிக்கையான கதை.

‘ஏ ஒங்க காசிப்பாட்டி வந்திருக்கா தெரியும்லா! ‘

‘அப்புடியா ? ‘

காசிப்பாட்டி எனக்கு தூரத்து உறவு. அவர்கள் வாரணாசியில் வசித்துவந்ததனால்

அவர் பெயரே காசிப்பாட்டி என்று ஆகிவிட்டது. அவர்களுடைய நிஜப்பெயரைத்

தெரிந்து கொள்ளவேண்டும் என்று எனக்குத் தோன்றியதே கிடையாது. சிறு

வயதில் என் தந்தைவழிப் பாட்டியார் அவரைப் பற்றி நிறைய சொல்வார்கள்.

‘ஏ ஒங்களுக்கு காசில ஒரு பாட்டி இருக்கா தெரியுமோ ?… ‘

அவர் கதை கதையாகச் சொல்வதை நானும் என் அண்ணனும் அமர்ந்து விழிவிரியக்

கேட்டுக் கொண்டிருப்போம்.

‘அவங்க எப்ப வந்தாங்க ? எங்க இருக்காங்க ? ‘

அவன் பதில் சொல்வதற்குள் என் பாட்டி வந்து இடைமறித்தார்கள்.

‘எலே வந்ததும் வாராததுமா அப்படியென்ன பேச்சு ? மொதல்ல காபி டிபன்

சாப்ட்டு வரட்டும். பெறவு தோழர்கள்ல்லாம் கூடி கும்மாளம் அடியுங்கோ ‘

பாட்டியின் குரல் கேட்டதும் ஜுட் விட்டான் பனிக்கட்டி.

சுடச்சுட தோசை வந்துகொண்டிருந்தது. மிளகாய்ப்பொடியில் காரம் தூக்கலாக

இருந்தது. திருநெல்வேலியில் எப்போதுமே காரம் சற்று அதிகம்

சேர்த்துக்கொள்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரோடு

ஒத்துப்போகிறதுபோல. வீட்டைவிட்டு வெளியே வந்தேன். அங்கே

ஒண்டுக்குடித்தனமாக சுமார் முப்பத்திரண்டு குடும்பங்கள் வசித்தன. அனைத்து

வீடுகளின் மேற்கூரையும் பாதி சுண்ணாம்புக் காரையாலும் மீதி நெளிவான

தகரத்தாலும் ஆகியிருந்தது. அனைத்து வீடுகளுக்குமான நீண்ட பொதுத்திண்ணையும்

எதிரெதிர் வீடுகளுக்கிடையே சிமிண்டு காரை போட்டு வழித்த சுத்தமான

தரையும் என்று வசதியாக…

திடாரென்று ஒரு உரத்த குரல் என் சிந்தனையைக் கலைத்தது.

‘அப்பனே முருகா ஷண்முகா ஞானபண்டிதா…

கந்தா.. கடம்பா.. கார்த்திகேயா..

கதிர்வேஏலவனே… ‘

புரிந்து விட்டது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே ‘. இது

பார்வதியின் குரல் தான். அதற்குள் அவள் என்னை நெருங்கி விட்டாள்.

‘ஏ ஐயா, வாய்யா தருமபுரி. சொகமா இருக்கீயளா ?

ஏ ஒங்கம்மா எப்படிருக்கா ? சொகமா இருக்காளா ?

ஒங்கண்ணன் எப்படி படிக்கான் ?

எல்லாரும் சொகந்தானே ?

சப்பா… நறீய வேல இருக்குய்யா, நான் வாரேன். ‘

இடுப்பில் கைவைத்துக் கொண்டே நகர மறுபடியும் ‘அப்பனே.. முருகா..

ஞானபண்டிதா… ‘ கேட்டது. அவள் இந்தக் காம்பவுண்டில் தன் சிறு வயது முதல்

பணிபுரிபவள். என் தாயாரை

விட வயது மூத்தவள். அங்கு குடியிருப்போரின் பல தலைமுறைகளின் கதையை

அவள் அறிவாள். அங்கு உள்ள முதிய பெண்மணிகளுக்கு அவள் பெயரைப் ஒரு பத்து

முறையாவது கூப்பிடாவிட்டால் அவர்களுக்கு எதையோ தொலைத்தது

போலிருக்கும். நான் திருநெல்வேலியில் பிறந்தாலும் தர்மபுரியில்

வளர்ந்தவன் என்பதாலும் விடுமுறைகளில் மட்டுமே ஊரை எட்டிப் பார்ப்பதாலும் என்

பெயரை தர்மபுரி என்றே வைத்துவிட்டாள். அந்தக் காம்பவுண்டின் கொல்லைப்

புறத்தில் ஒரு சிறு தோட்டம் இருந்தது. ஒரு மாமரம், இரண்டு வேப்ப மரங்கள்

மூன்றும் அடர்ந்து வளர்ந்திருந்தன. மரத்தடியில் கொஞ்சம் கண்டா முண்டாவென்று

வளர்ந்திருக்கும் புற்கள், ஒரு அடிபம்பு, தூர்ந்து போன ஒரு மொட்டைக் கிணறு,

ஓடிப்பிடித்து

விளையாடப் போதுமான அளவு இடம். காம்பவுண்டின் நடுப் பகுதியிலிருந்து

கொல்லைப் புறத்துக்குச் செல்ல ஒரு குறுகலான வழியிருந்தது. ஒரு நேரத்தில்

ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்ல முடியும். இன்னொருவர் வந்தால் ஒதுங்க

இடமிருக்காது. அந்த வழியில் ஒற்றை வாசல் கொண்ட மூன்று வீடுகள் இருந்தன.

அதில் கடைசி வீட்டில்தான் காசிப் பாட்டியைக் குடி

வைத்திருந்தார்கள்.

அந்த வீட்டின் நாலாபுறமும், கூரையும் நெளிவான தகரத்தால் ஆகியிருந்தது.

வெய்யில் காலத்தில் வெப்பம் தகிக்க வேண்டும். ஆனால் அருகில் மரம்

இருந்ததால் வெப்பம் குறைவாகத்தான் தெரியும். உள்ளே நுழைந்து அவர்களைப்

பார்த்த முதல் பார்வையில் ஆதி சங்கரரைப் பார்த்தது போல் இருந்தது.

ஒற்றைக்காவி சேலை அணிந்து தலையில் முக்காடிட்டு தங்க நிறத்தில்

காணப்பட்டார்கள். இதுவரை அவ்வளவு அழகான பாட்டியை நான் பார்த்ததில்லை.

கிட்டேபோய் அறிமுகம் செய்து கொண்டேன்.

‘மீனாட்சி புள்ளையா நீ ?… ‘

அருகில் அமர்த்தி என் கை கால்களை வாஞ்சையோடு தடவிக் கொடுத்த அதே

நேரத்தில் அவர் கண்கள் தளும்புவதையும் கவனிக்க முடிந்தது. எனக்கும் என் தந்தை

வழிப் பாட்டி வெகு சமீபத்திலே இறந்து போனதால் ஏற்பட்ட தடுமாற்றத்தால்

ஏதோ அவர்களே உயிர்பெற்று வந்திருப்பதுபோல தோன்றியது.

‘கண்ணா, அந்த ஜலதோஷ மாத்திரைய எடுத்துக் கொடுப்பா.. ‘

ஒரு அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்த சுண்ணாம்படித்த சுவரின் மேல் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த நெளிவான தகரத்தின் அடிப்பகுதியில் சுவரின் எஞ்சிய

பகுதி நீண்ட பிறையாக மாறியிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான

டப்பிகள் மற்றும் குப்பிகளில், ஒன்றில் மாத்திரை வைக்கப்பட்டிருக்க எடுத்துத்

தந்தேன்.

‘வா தாச்சுக்கோ.. ‘

நானும் பக்கத்தில் படுத்துக் கொள்ள, சிறிது நேரம் என் நெஞ்சு தடவிக்

கொடுத்து, ராமயணக் கதை சொல்லி நான் ம்.. ம்.. என்று சொல்லிக்

கொண்டிக் கொண்டிருக்கத் தூங்கிப் போனார்கள். எனக்குத் தூக்கம்

பிடிக்கவில்லை. மெதுவே எழுந்து வெளியே வந்தேன்.

வெளியே வந்த என்னைப் பார்வதி பார்த்துவிட்டாள்.

‘என் தங்கமேஏ ராசா.. வாய்யா.. ‘

என் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போனாள். மொட்டைக்

கிணற்றுக்கருகே புல்தரையில் என்னை அமர்த்திக்கொண்டாள்.

‘ஏ ஐயா பாட்டிய பார்த்தீயளா ?.. ‘ ஆமாம் என்பதாகத் தலையை

ஆட்டினேன்.

‘எங்க காலமெல்லாம் முடிஞ்சு போச்சு ராசா.. இனிமே நீங்கதான் பாட்டிய

பத்திரமா பாத்துக்கிடணும். ‘

‘செய்வீயளா ? ‘ சரி என்பதாய்த் தலையை ஆட்டினேன்.

‘முந்தி ஒருவட்டம் ஒங்க பாட்டி காசிக்குப் போயிருந்தாங்கள்ளா ? ‘

‘ம்ம்ம்… ‘

‘அப்பமே ஒங்க பாட்டிட்ட அங்கிருக்கறவா சொல்லிருக்கா. பாட்டிக்கு ரொம்ப

வயசாயிட்டு, ஒடம்புக்கு வேற முடியல, அதனால இங்கேர்ந்து கூட்டிட்டு

போயிடுங்கோன்னு சொல்லிட்டா. ஆனால் ஒங்கப் பாட்டி காசிப்பாட்டிட்ட,

காசிலயே செத்தா புண்ணியமுண்டு அதனால இங்கயே இருங்கோன்னு சொல்லிட்டு

வந்துட்டா. பெறவு முடியாததால அவா தனியாவே கிளம்பி வந்துட்டா. ‘

எனக்குள் கேள்வி குடைய ஆரம்பித்தது. பாட்டி ஏன் காசிப்பாட்டியைத் தன்னோடு

கூட்டி வரவில்லை ? பார்வதி குருவி தலையில் பனங்காயை ஏற்றிவிட்டாளோ ?

தலையைக் கவிழ்த்துக்கொண்டு பாட்டிவீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த

என்னை மகிழ்மாறன் வந்து தட்டியெழுப்பினான்.

‘ஏ ராமகிருஷ்ணா என்னலே தலைய தொங்கப்போட்டு ஒக்காண்டுருக்க.. ‘

தலை நிமிர்த்தினேன்.

‘நாங்கள்லாம் பூர்ணகலா போரம்டே வாரயா ? ‘

அமைதியாக வீட்டினுள் சென்று பாட்டியிடம் சில்லரை வாங்கிக் கொண்டு

வந்தேன். அவனோடு பனிக்கட்டி, அவன் தம்பி நாணூ, டாச்சராத்து நாராயணன்

என கும்பலாகக் கிளம்பினோம். மகிழ்மாரன் குடைந்தான்.

‘என்னாச்சிலே இவனுக்கு பேசவே மாட்டிக்கான் ‘

டாச்சராத்து நாராயணன் வழிமொழிந்தான்.

‘ஆமாம்ல எட்டாப்பு படிக்க பையன் மாதிரியா இருக்கான், எதோ நூத்துக்

கெழவன் மாதிரி! ‘

நான் வாய் திறந்தேன்.

‘டேய்! இப்ப என்னான்றீங்க ? ‘

நாணூ ஊடே நுழைந்தான்.

‘அய்யா தருமபுரி! கோவிச்சுக்காதீரும். ‘

‘மவனே, ஊர் பேர சொன்ன… ‘

மகிழ்மாறன் இடைமறித்து,

‘சரி விடுங்கடே எப்பப்பார்த்தாலும்… ‘ அதற்குள் முக்குக்கடை வந்துவிட்டது.

வாழையிலைக் கீற்றில் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கிக் கொண்டோம்.

மாலை நேரத்தில் சுடச்சுட அல்வா சாப்பிடும் சுகமே அலாதிதான். பூர்ணகலா

டாக்கீஸில் திரைப்படத்தோடு மனம் ஒட்டவில்லை. இருப்பினும் தொடர்ந்து

வந்த சில நகைச்சுவைக் காட்சிகள் என்னைத் தன்வசம் ஈர்த்துக் கொண்டன.

இரவில் திண்ணையில் அனைவரும் ஒன்றாகப் படுத்துக் கொண்டோம். பொன்னப்ப

ஐயங்காரும் எங்களோடு படுத்துக் கொண்டார். நிறைய நகைச்சுவைக் கதைகள்

சொன்னார். ஐயங்கார் கதை சொல்வதில் சமர்த்தர். கதை கேட்டுக்கொண்டே

தூங்கிப் போனோம்.

என்னோடு என் சகாக்கள் அனைவருக்கும் விடுமுறை என்பதால் கும்பலாக

தென்காசி, குற்றாலம், கடையம் பிறகு ஆழ்வார் திருநகரி அதன் பிறகு

வள்ளியூர், நாகர்கோவில் என்று ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்ததில்

காசிப்பாட்டியை சுத்தமாக மறந்தே போனேன்.

என் விடுமுறைகள் புஸ்வாணமாகக் கரைந்து போன நிலையில், ஊர் திரும்ப ஒரே

ஒருநாள் மிச்சமிருக்க, வீட்டிலிருந்து காசிப் பாட்டியைப் பார்க்கலாம் என்று

கிளம்பினேன். குறுகலான சந்து கடந்து வீட்டினுள் நுழையும்போது கண்ணில்

தென்பட்ட தீய்ந்துபோன சில கந்தல் துணிகள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

உள்ளே சென்று பார்த்தபோது பாட்டியின் தங்கநிற மேனியில் அங்கங்கே

சடைசடையாகத் தீய்ந்து போயிருந்தது. நான் அவள் முன்னால் நின்றபோதும்

என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அருகிலிருந்த தண்ணீர்ப் பானையை

நோக்கித் தவழ்ந்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு டம்ப்ளரில் எடுத்துக் கையில்

பிடித்துக் கொடுக்க, பாதி குடித்துக் கீழே வைத்தாள். என்னிடம்

பேசவில்லை. பேச முடியவில்லையா ? வலிக்கிறதா ? எனக்குத் தெரியவில்லை.

வெகுநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். கண்ணா ஜலதோஷ மாத்திரை

எடுத்துக் குடுடா, என்று சொல்லமாட்டாளா என்று ஏங்கினேன். அங்கிருந்து போக

முடியாமலும், வேறு வழியில்லாமலும் வேண்டா வெறுப்பாக அந்த வீட்டிலிருந்து

வெளியே வந்தேன். பக்கத்து வீட்டு மாமா சொன்னார்.

‘ராமகிருஷ்ணா, வயசானவா இல்லியோ ? முடியாத ஒடம்போட ஸ்டவ்வ பத்த

வெச்சுருக்கா கண் வேற சரியா தெரியாதோல்லியோ ? எப்புடியோ உடம்புல

மண்ணெண்னெய் கொட்டிடுத்து. அது தெரியாமலே ஸ்டவ்வை வேற பத்தவைச்சுட்டா.

இப்பதான் டாக்டர் வந்து பார்த்துட்டு போனார். வயசானவா இல்லையா ?

அதனாலே மெல்லத்தான் கொணமாகும்னு சொல்லிட்டார். ‘

அதற்குள் அவர் கையிலிருந்த குழந்தை அம்மாட்ட போணும் என்று சிணுங்க அவர்

‘இருடி செல்லம்… சரி நான் வரேண்டா… ‘ வீட்டுக்குள் சென்று விட்டார்.

மறுபடியும் தலையைத் தொங்கப் போட்டபடி பாட்டி வீட்டுத் திண்ணையில்

அமர்ந்திருந்தேன். மாறன் வந்து தோளைத் தோளைத் தொட்டான்.

‘ஏ காசிப் பாட்டியப் பார்த்தியோ ?.. ‘

‘ம்.. ம்.. ம்.. ‘ தலையாட்டினேன்.

‘ச்செரி வாடே நாமெல்லோரும் சயின்ஸ் செண்டர் போவோம். ‘

நடக்க ஆரம்பித்தோம். இந்த முறை அனைவருமே மெளனமாகவே இருந்தார்கள்.

நாணூ ஆரம்பித்தான்.

‘பாவம்டே காசிப்பாட்டி ‘

‘ஆமாம்லே… ‘ வழிமொழிந்தான் டாச்சராத்து நாராயணன்.

மேம்பாலத்தடியில் அனைவரும் பருத்திப்பால் குடித்தோம். மெளனம் அனைவர்

மீதும் அடையாய் அப்பியிருக்க, தாமிரபரணிப் பாலம் கடந்து

கொக்கிரக்குளத்திலிருந்து கீழிறங்கி சயன்ஸ் செண்டரில் நுழைந்தபோது

பெரிய புல்தரை எங்களை வரவேற்றது. அதில் விளையாட மனதின்றி

மேலேறி, டெலஸ்கோப் இருக்கும் பகுதிக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த

ஏராளமான அதிசயங்கள் எங்கள் உற்சாகத்தை மீட்டுத்தர, திரும்பிவரும்போது

ஆளுக்கு ஒரு பொட்டலம் அவித்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே

திரும்பினோம்.

அடுத்த நாளிரவு, என் நண்பர்கள் அனைவரும் என் திருவள்ளுவர் பேரூந்தினடியே

கூடியிருந்தார்கள்.

‘யே மக்கா மறந்துறாத டே.. ‘

‘லட்டர் போடுன்னா.. ‘

‘எலே அடுத்த வருசம் வருவில்லா ?.. ‘

‘முடிஞ்சா போன் பேசுலே.. ‘

என் பேரூந்து கிளம்ப இருந்தது. அனைவர் கண்களிலும் கண்ணீர். என் கண்களும்

கலங்கி இருந்தன. அதை அவர்கள் அவர்களுக்காய் என்று நினைத்துக்

கொண்டார்கள்…

Kasiganesan Ranganathan

ranganath73@yahoo.co.uk

Series Navigation

காசிகணேசன் ரங்கநாதன்

காசிகணேசன் ரங்கநாதன்