மரக்கலாஞ்சி மாஞ்சிளா

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

நடராஜன் ஸ்ரீனிவாசன்


இந்தப் புத்தகத்திலாவது ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற

முனைப்போடு தான் முழுக்கவும் படித்தான் பிரகாஷ். கனவுகளுக்குப் பலன்களென்ற

அந்தப்புத்தகத்திலும் அவன் கேள்விக்கான பதில் இல்லை. அந்தக் கேள்வியால்

அவன் கேலிக்குத்தான் ஆளானான். மஞ்சள் நிழல் ? எப்படி சாத்தியம் ? அன்று

நண்பர்களைக் கேட்டான்.

‘டேய் கொஞ்ச நாளாய் எனக்கு ஒரு கனவு வருதுடா. கனவில் என் நிழல்

மஞ்சளாக இருப்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. அதெப்படி நிழல்

மஞ்சளாக ? ‘

நண்பர்களுக்கு கேலி செய்ய எதுவுமே தேவை இல்லை. இப்போது ஆலமரமே

கிடைத்துவிட்டது.

‘நேற்றிரவு இந்த கனவு வந்ததா ? ‘

‘ஆமாம் ‘

‘நினைத்தேன். மஞ்ச ட்ரெஸ் போட்டவங்கள உத்து உத்துப் பார்க்காதே.

அது அப்படியே உள்ளேபோய் ஜீரணமாகி கனவில் வந்து உன்னையே

இனங்காட்டும். ‘

இன்னொருவன் சொன்னான், ‘பிரகாசு, நீ ஒரு கலர்புல் பர்சனால்டியா

மாறிட்டு வர்ரடா. கனவே பிளாக் அண்ட் வைட்டுன்னு சைக் எல்லாம் சொல்றான்.

நீ நிழலையே மஞ்சள்ன்ற ‘.

பிரகாஷ் ஒரு பெருமூச்சு விட்டான். பிறகு சொன்னான். ‘கனவு எப்படி

கருப்பு வெள்ளையில் மட்டும் வரும் ? கனவில் நீ வானவில்லை பார்த்தால் அது

‘கிரே ஸ்கேல் ‘லயா வரும் ? ‘

கேள்வியின் நியாயம் கேலியில் சீண்டலாக மாறியது.

‘மச்சி, நல்லாத்தான் யோசிக்கிற. ஒன்னு செய். மஞ்சளா கயிறு

மந்திரிச்சி கையில கட்டிக்க. இல்ல மஞ்சளா ஒரு கயித்த எவ

கழுத்திலயாவது கட்டு. கனவு மட்டுமில்ல வாழ்க்கையே பிளாக் அண்ட் வைட்டா

ஆயிறும். ‘

சற்றே விந்தியபடி அந்த இடத்தைவிட்டு அகன்றான். அலுவல்கள்

ஆக்கிரமித்த நேரம் போக இந்த எண்ணமே அவனை ஆக்கிரமித்திருந்தது.

விடுபடவேண்டும். எப்படியாவது இதிலிருந்து விடுபடவேண்டும். மறுநாள் காலை

அலுவலக வாசலில் ஒரு இளம்பெண் இவனை வழி மறித்தாள்.

‘சார் என் பெயர் ரேகா. தொழிற்சாலை மேளாளரைப் பார்க்க

வேண்டும் ‘ என்றாள்.

‘எதற்காக என்று சொல்லுங்கள் ‘.

‘நான் அண்ணா யுனிவர்சிடி ஸ்டூடண்ட். என் ப்ராஜக்ட் விஷயமாக அவரைப்

பார்க்கச் சொல்லி பேராசிரியர் கடிதம் கொடுத்திருக்கிறார் ‘.

அவளுக்கு வழி காட்டிவிட்டு விடுப்புக்கு விண்ணப்பித்தான். ஒருமுறை

கருத்தம்பட்டி சென்று வர வேண்டும். அவன் கிராமத்திற்கு சென்று வந்தால் புது

ரத்தம் பாய்ச்சியதுபோல் உணர்வான். வார முடிவில் சென்றுவர

யோசித்திருந்தபடி இரண்டு நாள் விடுப்பில் ஊருக்கு வந்தான். திண்டுக்கல்

மாவட்டத்தில் மலையடிவாரத்தில் ஒரு சிற்றூர் கருத்தம்பட்டி. சற்று பெரிய

தோட்டத்துடனான சிறு வீடு. பாட்டி மட்டுமே வீட்டில். அவளுக்கு புலம்

பெயர்வதில் விருப்பமில்லை. தூரத்துச் சொந்தமான ஒரு

தம்பதிகள் வீட்டைப் பராமரிக்க இருந்தனர். அவர்களுக்கு பத்து வயதில் ஒரு

மகள் இருந்தாள். இந்த மூவருடன் பாட்டி தனி அரசிபோல் அங்கு

வாழ்ந்துவந்தாள். தாய் தந்தை மற்றும் தங்கையுடன் சென்னை வாசம் செய்யும்

பிரகாஷ் மாதமிருமுறையாவது கருத்தம்பட்டி வந்துவிடுவான். பாட்டியும்

பாசத்தோடு முயல்கறி சமைத்து வைத்திருப்பாள்.

இரவு சாப்பிடும்போது பாட்டி புலம்பிக்கொண்டிருந்தாள். அவனுடைய

திருமணத்தைப் பற்றிய வழக்கமான புலம்பல்தான். அவள் கண்ணை மூடுமுன் அவனுடைய

கால் கட்டைப் பார்த்துவிட வேண்டுமாம். கால்கட்டு என்று சொல்லியபின்

அவளுக்கு பழைய ஞாபகங்கள் கிளர்ந்து விட்டது.

‘நீ கட்டைக்காலில்லாம இப்படி நடக்கிறதே அந்த ராசாவோட

ஒழப்புதேன் ‘. ராசா என்பது ஒரு காலத்தில் புகழோடு இருந்த அவன் தாத்தா

நாட்டுவைத்தியர் முத்துசாமிதான்.

‘பத்து நா சொரம் வந்து படுத்தே. சூம்புன காலப்பாத்து எல்லாம் தெய்வ

குத்தம்னாங்க. என்ராசாதான் ஊருக்கெல்லாம் சொஸ்தம் சொல்லிட்டு ஏம்பேர

புள்ளக்கி இப்டியாச்சேன்னு கலங்கி மருந்து மருந்தா குடுத்து நாடுநகரமெல்லாம்

அலஞ்சி மக்கனல்லி பசவப்பாகிட்ட கெஞ்சி மாஞ்சிளா வாங்கியாந்து

நட்டு…. ‘ பெருமூச்சு விட்டாள்.

‘சொல்லு பாட்டி, ஏன் பாட்டி தாத்தா ஞாபகம் வந்திருச்சா ? ‘

பாட்டி தொடர்ந்தாள், ‘ நட்ட மாஞ்சிளாவுல கஷாயம் செஞ்சி லேகியம்

செஞ்சி பாசானங்கலந்து ராப்பகலில்லாம ஒரு திருநா இல்லாம மருந்து மருந்தா

குடுத்து குடுத்து ஒன்னைய கட்ட கால்லேர்ந்து காப்பாத்திட்டாகளே ‘. பாட்டி

உணர்ச்சிவசப்பட்டிருந்தாள். இது பல முறை அவன் கேட்ட கதைதான்.

குடநாட்டு மடக்கனஹல்லி பசவப்பா அந்நாளில் புகழ்பெற்ற மூலிகை

மருத்துவர். அவரிடமிருந்த அபூர்வ மூலிகைகளில் ஒன்றுதான் சின்னதாக மஞ்சள்

பூப் பூக்கும் மஞ்சுளகரே என்னும் ஓரடி உயரமே வளரும் மூலிகைச்செடி. இலையும்

தண்டும் கூட பசுமஞ்சளாக சற்று வித்தியசமாகவே இருக்கும். அரும்பாடுபட்டு

தாத்தா அன்று வளர்த்தது இன்று தோட்டம் பூராவும் காடாக மண்டிக்கிடக்கிறது.

அதற்கு இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்

சக்தியிருக்கிறது போலும். அதனால்தான் தாத்தா அதற்கு ‘மரக்கால் அஞ்சும்

மஞ்சுளா ‘ என்று பெயரிட்டழைத்தார். பாட்டி அதை ‘மரக்கலாஞ்சி

மாஞ்சிளா ‘ என்பாள். சற்றே சிறு கசப்பும் துவர்ப்பும் கூடிய சுவையுடைய அந்த

பிரகாசமான மஞ்சள் பூ எல்லா சமையலிலும் கலக்கப்பட்டது. அவனை

பச்சையாகவே (மஞ்சளாகவே) சாப்பிடவும் தாத்தா பழக்கியிருந்தார். இன்று

சாப்பிட்ட முயல் கறியில் கூட மஞ்சுளகரே கலந்துதான் இருந்தது.

அன்று வளர்பிறையின் பத்தாம் நாள். இரவு சுமார் ஒன்பது மணியிருக்கும்.

சாப்பிட்டவன் தாழ்வாரத்தில் வந்து மலை தழுவிவரும் காற்றில் மூழ்கினான்.

தோட்டத்தின் மறு புறத்தில் சிறு வீட்டில் அந்த தம்பதியர் மகளுடன்

வசித்தார்கள். அந்த வீட்டினுள் அரவம் கேட்டது.

‘பார்வதீ….இந்நேரத்துக்கென்னடி மொசக்குட்டி வெரட்டுற ? ‘

‘கால பிராண்டுதும்மா, வெள்ல வெரட்டிட்டு வாரேன் ‘

வெளியே துரத்தப்பட்ட முயல் சிறு புதரில் பதுங்கியது. சற்று நேரம்

தேடிப்பார்த்துவிட்டு பார்வதி உள்ளே பொனாள். பிரகாஷ் புத்துணர்வோடு

இருந்தான். வெள்ளையான அந்த முயல் கசியும் நிலவொளியில் நனைந்து

வேகவைத்து உரித்த சேப்பங்கிழங்கைப் போலிருந்தது. அவனுக்கு ஏனோ அந்த

மஞ்சள் நிழல் கனவு ஞாபகம் வந்தது. பார்வதி போய் விட்டாளா என்று

பார்ப்பதற்காக மெல்ல முயல்

புதரிலிருந்து எட்டிப்பார்த்தது. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தான். அவனுக்கு

தூக்கி வாரிப்போட்டது. முயலுக்கடியில் சிறு நிழல் – மஞ்சளாக.

உற்றுப்பார்த்தான். இது மன பிராந்தியா அல்லது உண்மையாவென்று .

உண்மைதான். கண்களை கசக்கிக் கொண்டு மெதுவாக முயலுக்கருகில் செல்ல

எத்தனித்தான். பார்வதி வீசிய கொம்பொன்றின் குறி தப்பிய முயல் துள்ளி

ஓடிவிட்டது. அந்த மலைக்காற்றின் குளிர்ச்சியும் தன் வியர்வையை

தடுக்கவியலாதிருந்ததை பிரகாஷ் உணர்ந்தான். நெடுநாள் கேள்விக்கான

பதிலா அல்லது புதுப்புதிரா ? மேலும் குழம்பினான்.

‘பிரகாசு, நேரத்தில வந்து படுராசா ‘ பாட்டியின் குரல் அவன்

குழப்பத்தை குறைப்பதாக இல்லை.

‘இதோ கொஞ்ச நேரத்தில் வந்திடறேன் பாட்டி ‘

செருப்பணிந்து தோட்டத்தில் உலவினான். நிலவொளி செய்த எல்லா

நிழலையும் ஆராய்ந்தான். எல்லாம் கருநிழல்தான். நிலைகொள்ளாமல்

மெதுவாகவும் வேகமாகவும் உட்கார்ந்தும் குனிந்தும் நிமிர்ந்தும் -ம்- ஒன்றும்

இயல்புக்குமாறாய் இல்ல. சற்று சோர்வுடன் வந்து படுத்தான். உறக்கம்

வரவில்லை. நடு நடுவே எழுந்து தோட்டத்தை உற்று நோக்கினான்.

அவனையறியாமல் உறங்கியும் போனான்.

காலை ஒன்பது மணி இளம் வெயில்தான் அவனை எழுப்பியது. சூரியன்

உச்சிக்கு வந்தபோது ஒரு சிந்தனைக்கு வந்திருந்தான். தன் மஞ்சள் நிழல்

கனவிற்கும் இந்த தோட்டத்திற்கும் ஒரு நிச்சயமான தொடர்பு இருக்கிறது என்ற

சிந்தனை ஆழமாக உருவெடுத்தது. மதிய உணவிற்கு பிறகு இது பற்றி இலேசாக

பாட்டியிடம் பிரஸ்தாபித்து பார்த்தான்.

‘மொசக்குட்டி நெழல் மஞ்சயாவா ? ஏதாச்சும் காஞ்ச எல கெடந்திருக்கும்.

ராவில எல்லாம் மாறித் தெரிஞ்சுதா ராசா ? ‘

பாட்டிக்குத் தெரியவில்லை. இன்றிரவு மீண்டும் சோதிக்க வேண்டும்.

கண்களை அகல விரித்து காத்துக்கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தது வீண்

போகவில்லை. மீண்டுமொருமுறை அதே இடத்தில் பதுங்கிய முயல் வெளியே

எட்டிப்பார்த்தபோது விழுந்த சிறு நிழல் – சற்று மஞ்சளாக -. சற்று நேரம்

கழித்து வேறிடம் சென்று பதுங்கியது முயல். அப்போதும் அதே மஞ்சள் நிழல்.

தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்ற சுய இரக்கத்திலிருந்து

விடுபட்டு இந்த முடிச்சை அவிழ்த்து விடவேண்டுமென்ற ஆவேசம் கொண்டான்.

பார்வதி இம்முறை முயல் விரட்ட ஒரு பிளாஸ்டிக் பந்தை எறிந்தாள். துள்ளி

மறைந்தது முயல். முயல் மேல் படாத பந்து எதன் மேலோ பட்டு எகிறி

இவனருகில் விழுந்தது. விளையாட்டாய் அதையெடுத்து தரையில் வீசி

எம்புவதைப் பிடித்து மீண்டும் வீசி….உற்சாகத்துடன் படுக்கச் சென்றான்.

ஏனோ உறங்கியும் போனான். பின்னிரவும் அதிகாலையும் கலந்த நேரத்தில்

விழித்தான். தூரத்தில் நாற்காலிக்கடியில் அந்தப்பந்து – இலேசான பசு

மஞ்சள் நிற ஒளியுடன், – இருட்டில் ஒளிரும் ஏதோ ஒரு பொருள் கலந்து

செய்யப்பட்ட விளையாட்டுப் பந்து. இதைத் தொடர்புப்படுத்தி நினைத்தபோது

ஏற்பட்ட மஞ்சள் மகிமை அவனை புன்முறுவல் பூக்க வைத்தது.

அவன் சென்னை வந்தவுடன் அதேத் தெருவில் வசித்த ஓய்வு பெற்ற பெளதிக

பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தான்.

‘தம்பி நிழல் என்பது எப்போதும் கருப்புதான். ஒளிப்பாதையை

ஒருபொருள் தடுக்கும்போது அந்தப் பொருளின் சில்லவுட்டாக (silhouette)

அதாவது வெளிவடிவின் செங்குத்து பரப்பாக தரையில் ஒளியை வீழாமல்

செய்யப்பட்ட இடம்தான் நிழல் ‘.

சற்று கொதித்து போய்விட்டான்.

‘ஐயா, நிழல் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அதை மிகவும்

குழப்பமாகச் சொல்கிறீர்களே. ‘

‘ஒரு ஒளிக்கற்றை, அது வீழும் இடம், இடையில் ஒரு பொருள் – நிழலை

உருவாக்க இவை மூன்றும் தேவை – இது எல்லோரும் அறிந்த ஒன்றா ? ‘

‘இது புரிகிறது ஐயா – இதைப்போலச் சொல்லுங்கள் ‘

‘ஒளி விழாத இடம்தான் நிழல். ஒளி விழுந்தும் அதை பிரதிபலிக்க

முடியாத பொருள் இருந்தால் அந்தப் பொருளின் நிறம் கருப்பென்று சொல்வோம்.

கருப்பில்லாத பொருளும் -…. ‘

‘ஐயா விடாது கருப்பு ரேஞ்சில் சொல்லிக்கொண்டே போகிறீர்களே –

மஞ்சளுக்கு வாருங்கள் ‘

‘தம்பி நிழலைப்பற்றிப் பேசும்போது மஞ்சளுக்கு ஏதப்பா இடம் ? ‘

விட்டது கருப்பு என்று வீட்டிற்கு வந்தான். மறுநாள் அலுவலகம் வந்த போது

அவன் இருக்கைக்கு எதிரில் ஒரு பெண் காத்துக்கொண்டிருந்தாள். அதே பெண்தான்.

சென்று இருக்கையில் அமர்ந்து அவளை ஆராய்ந்தான்.அந்த வயதின் எல்லாப்

பெண்களையும் போலவே அவளும் அழகாக இருந்தாள். பாட்டி திருமனத்தைப்

பற்றிச் சொன்னது ஏனோ நிணைவிற்கு வந்தது. மனத்திற்குள் தலையில்

அடித்துக்கொண்டான்.

‘நீங்கள் ரேகாதானே. சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் ? ‘ தன்

பெயரை ஞாபகமாக அவன் சொன்னதால் மேலும் சற்று மலர்ந்தவள்,

‘சார் இங்கு ஒரு ப்ராஜக்ட் செய்ய அனுமதிக் கடிதமும் தற்காலிக

அடையாள அட்டையும் வேண்டும். ‘

‘விவரம் சொல்லுங்கள். ‘

‘நான் அன்னா யுனிவெர்சிடியில் எம்மெஸ்ஸி படிக்கிறேன். இங்கு

ப்ராஜக்ட் செய்ய விண்ணப்பித்து அனுமதியும் கிடைத்துவிட்டது. அதற்கான

ஃபார்மாலிடாஸ்தான்…. ‘

‘உங்கள் ப்ராஜக்ட்டைப் பற்றிச் சொல்லுங்கள். ‘

‘திஸ் இஸ் அபவ்ட் ஃப்லோரசன்ஸ் அண்ட் பாஸ்பரசன்ஸ். அதாவது பொருட்கள்

தானாகவே ஒளிர்வது பற்றி. ‘

‘ம் ‘

‘உங்கள் நிறுவனம் தயார் செய்யும் சில மின்விளக்குகளின் இரசாயனப்

பூச்சு பற்றி…. ஒரு சிறு ஆராய்ச்சி என்றுகூடச்

சொல்லலாம். ‘

‘ம் ‘

‘நீங்கள் இருட்டில் எண் காட்டும் கடிகாரங்களைப் பார்த்திருப்பீர்கள்.

அதுவும் ஒருவகை இரசாயனப் பூச்சுதான். ரேடியம் வைத்த வாட்ச் என்பது

ஒருகாலத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ‘

‘…. ‘

‘சில விளையாட்டுப் பொருட்கள்கூட,.. சில பந்துகள் இருட்டில்

இளம்பச்சை நிறமாக…. ‘. பிரகாஷ் இப்பொது மிகவும் ஆர்வமானான்.

‘ரேகா, உங்களால் எனக்கு உதவ முடியும். உங்களுக்கான எல்லா

உதவிகளையும் நான் செய்கிறேன். அதற்கு மேலும் செய்கிறேன். எனக்கு

கொஞ்சம் உதவுங்களேன். ‘

அவள் ஆச்சர்ய முகத்துடன், ‘நிச்சயம் சார். பை ஆல் மீன்ஸ். ‘என்றாள்.

அன்று மாலையே ட்ரைவ்-இன்னில் சந்தித்து உரையாடியபோது அவளும் அந்த

பெளதிகப் பேராசிரியர் சொன்னதையே சற்று புரியும்படி இனிமையாகச்

சொன்னாள். சற்று நேரம் சிந்தித்தவள் மேலும் சொன்னாள்,

‘அந்த முயல் தானே ஒளிர்ந்து, ஒளி அளவுகள் நிலவொளி அளவிற்கு

ஏற்ப இருந்து, தரையும் சரியான டெக்சரில் (texture) இருந்து,….

இப்படி ஏராளமான ‘இருந்து ‘ கள் இருந்தால் ஒருவேளை மஞ்சள் நிழல்

நிகழ்ந்தாலும் நிகழலலாம். ஆனால் முயலாவது தானே ஒளிர்வதாவது ? ‘

இதற்குமேல் எப்படி தொடர்வது என்ற குழப்பத்தில் நாட்களும் நகர்ந்தன.

அந்த மஞ்சள் நிழற் கனவு மீண்டும் வரவில்லை. இப்போதெல்லாம் வேறு

கனவுகள். நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ரேகா அலுவலகம் வந்தாள்.

நல்லபடியாக ப்ராஜக்ட் முடித்து அனைவருக்கும் நன்றி சொல்ல வந்திருந்தாள்.

அன்று பசுமஞ்சள் வண்ண உடை அணிந்திருந்தாள். அதனாலோ என்னவொ அன்றைக்கு

அவனுக்கு கனவு வந்தது. கனவிற்கு ரேகா வந்திருந்தாள். ஆனால் அவன் தன்

நிழலை மஞ்சளாகக் கண்டான். அதன் பிறகு சரியாக தூக்கம் பிடிக்காமல்

புரண்டுகொண்டிருந்தான்.நள்ளிரவு நேரம் இருக்கும். தொலைப்பேசி அழைத்தது.

பாட்டிக்கு உடம்பு முடியவில்லை உடனே வரச் சொல்லித் தகவல். அவர்கள்

காலையில் கிராமத்தை அடைந்தபோது எல்லாம் முடிந்திருந்தது. தன் நெருங்கிய

தோழனொருவனை இழந்ததுபோல் இருந்தான் பிரகாஷ். சற்றும் எதிர்பாராத

இந்த நிகழ்விற்குப் பின் இயல்புக்கு வர ஒரு மாதத்திற்கு மேல் பிடித்தது.

பார்வதியின் குடும்பமும் தெற்கே அவர்கள் ஊருக்குச் சென்றுவிட்டனர். வீடு

மற்றும் தோட்டத்தை விற்றுவிட்டு பத்திரமெல்லாம் பதிந்துவிட்டு சென்னை

திரும்பினர்.

சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒருநாள் மாலையில் ஒருவர்

அவன் வீட்டிற்கு வந்தார். நடுத்தர வயதிலிருந்த அவர் இவனுடன் கை

குலுக்கிவிட்டு தன் பெயரட்டையைக் கொடுத்தார். P.மாதப்பா – விஞ்ஞானி –

கர்நாடக மாநில மூலிகை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சித் துறை – மைசூர் –

என்றிருந்தது.

‘என் பெயர் மாதப்பா. மைசூரிலிந்து வருகிறேன்…. ஒரு

முக்கியமான காரியமாக உங்களைப் பார்க்க வந்தேன். ‘

‘சொல்லுங்கள் மாதப்பாசார். நான் என்ன செய்ய வேண்டும் ? ‘

‘உங்கள் தாத்தா நாட்டுவைதியர் முத்துசாமிதானே. என் தந்தையின்

பெயர் பசவப்பா. குடநாட்டு மடக்கனஹல்லி பசவப்பா. புகழ் பெற்ற மூலிகை

மருத்துவர். ‘

‘மிக்க மகிழ்ச்சி. நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் பாட்டி

சொல்லியிருக்கிறாள். உங்கள் தந்தையார் நலமாக இருக்கிறாரா ? ‘

‘இல்லை. அவர் இறந்துபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விலை

மதிப்பற்ற அவருடைய அறிவுச்செல்வத்தை முழுவதுமாக யாரும் பெறாமலேயே அவர்

மறைந்துவிட்டார். அவர் இருந்தவரை நாங்களும் அருமை தெரியாமல்

இருந்துவிட்டோம். ‘

‘நான் மிகவும் வருந்துகிறேன் ஐயா. வந்த விஷயத்தைச் சொல்லுங்கள். ‘

‘மஞ்சளாங்கரே என்கிற மூலிகைச்செடி எனக்கு வேண்டும். அது இப்போது

எங்குமே இல்லை. உங்கள் தாத்தாவின் தோட்டத்தில் கண்டிப்பாக அது இருக்க

வேண்டும். ‘

‘மஞ்சளாக பூ பூக்கும் ஓரடி உயரமுள்ளச் செடிதானே. எங்கள் தோட்டத்தில்

காடுபோல் மண்டிக் கிடந்ததே. ஆனால்… நாங்கள் இரண்டு வாரத்திற்கு

முன்புதான் எல்லாவற்றையும் விற்று விட்டோம். அங்கு கூட ஒரு தொழிற்சாலை

கட்ட வேலை துவங்கி விட்டதாக அறிந்தேன். ‘

இடிந்து போனவர் போல் அவர் தளர்ந்து போனார்.

‘அபூர்வ மூலிகை ஐயா அது. அதன் சக்தியை இதுநாள் வரை

அறியாமலேயே

இருந்திருக்கிறோம். அதன் லேகியதை இரசாயன ஆய்விற்குட்படுத்திய

பிறகுதான் ஏராளமான பாஸ்பரஸ் மற்றும் அரிய தாதுக்கள் கொண்டிருந்ததைக்

கண்டுபிடித்தோம். கதிரியக்கம் தரக்கூடிய மூலகங்கள் கூட அதனுள் இருக்கிறதா

என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். லேகியம் கொஞ்சம்தான் கையிருப்பு

இருக்கிறது. என் தந்தை இது பற்றி ஏராளமான குறிப்புகளும் லேகிய, சூரண

செய்முறைகளும் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் அவர் அறிவியல் முறைப்படி

ஆராய்ச்சி செய்தவர் அல்லர். அவர் குறிப்புகளிலிருந்துதான் த்ங்கள் தந்தையின்

முகவரியைக் கண்டுபிடித்து இங்கு வந்தேன். எப்படியாவது எனக்கு உதவி

செய்யுங்களேன் ஐயா. ‘

பிரகாஷுக்கு அவரைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. உடனே

தொலைபேசியில் ஊருக்குத் தொடர்பு கொண்டு பேசினான். கட்டிட வேலை

மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் மிச்ச மீதி செடிகள் இருக்கிறதா என்று

தெரியவில்லை என்றும் வந்த தகவல் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை.

இவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும் பிரகாஷுக்கு ஏதோ ஒன்று

புரிந்துகொண்டிருந்தது. உடனே காரில் கிளம்பினார்கள். பிரகாஷ் மேலும்

விவரங்கள் கேட்டான். அவர் சொன்னார்,

‘அந்த லேகியமே பகலில் கரும் பச்சையாக தெரியும். ஆனால் இரவில்

இருட்டில் சற்று வெளிர்பச்சையாக இருப்பது போல் தோன்றும். ஏராளமான

பாஸ்பரஸும் கால்ஷியமும் கொண்ட அந்த லேகியம் எலும்பு சம்பந்தப்பட்ட

நோய்களை சிறப்பாக குணமாக்கும். அந்த்ப் பூக்களை அதிகமாகத் தின்ற

வெள்ளெலிகள் இரவில்தானே இலேசாக ஒளிரும். கும்மிருட்டில் கூட அவற்றை

துல்லியமாக காணலாம். ‘

சடாரென்று குறுக்கிட்டு வினவினான். ‘கும்மிருட்டில் அவை உலாவும் போது

லேசான நிலவொளி விழுந்தால் அவ்ற்றின் நிழல் சற்று மஞ்சளாகத் தோன்றுவது

சாத்தியமா ? ‘

‘ஆச்சரியமான உண்மை. நானே கண்டிருக்கிறேன்.

உங்களுக்கெப்படித்தெரியும் ? ‘

ஒரு பெரும் புதிர் விடுபட்ட ஆயாசத்திலிருந்தான். அவரே

தொடர்ந்தார். ‘நிலவொளி ஏற்படுத்திய கரு நிழலில் தன் மஞசள் ஒளியை

உமிழ்ந்து நமக்கு நிழலே மஞ்சளாகத் தோன்றும். ‘

கவனிலிருந்து விடுபட்ட கல்போல் இலேசாக உணர்ந்தான்.

காலையில் கிராமத்தை அடைந்தபோது தோட்டம் துப்புரவாக

மழிக்கப்பட்டிருந்தது. மண்டியிருந்த செடி கொடிகள் சுத்தமாய் எரித்து

விட்டதாக காவல்காரன் கூறினான். மரக்கலாஞ்சி மாஞ்சிளாவை இனி

வேறெங்காவதுதான் தேட வேண்டும். பிரகஷுக்கு நெஞ்சு கனத்தது.

தொழிற்சாலைக் கட்ட தயாராக இருந்த அந்த முன்னாள் தோட்டம் இவர்களைப்

பார்த்து காலை வெய்யிலில் மஞ்சளாகச்

சிரித்தது.

—-

sn_in@yahoo.com

Series Navigation

நடராஜன் ஸ்ரீனிவாசன்

நடராஜன் ஸ்ரீனிவாசன்