நீலக்கடல் – அத்தியாயம் 1

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘……………………

சாவிலே துன்பமில்லை. தையலே இன்னமும் நாம்

பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக்கண்டு

காமுறுவேன்! நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்.

இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு

நின்னுடனே வாழ்விலினி நேரும் பிறப்பினிலே! ‘

-குயில் பாட்டு – பாரதியார்

——————————————————————————————————————————————————————————————–

‘நான் ‘ எங்கிருந்து வருகிறேன் ? ‘நான் ‘ எதனை நோக்கிப் பயணிக்கிறேன். இந்த ‘முதலுக்கும் ‘ ‘முடிவுக்கும் ‘ இடையில் ‘நான் ‘ யார் ? எத்தனை கல்பகாலத்திற்கு ‘நான் ‘. விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த ‘நான் ‘ லீலைகளின் பிரதானமா ?, பிரளயமற்றவனா ? முடிவென்பதில்லையா ? அனந்தசயனமற்ற உயிரா ‘நான் ‘. ‘ பிறவிபற்றிய பிரக்ஞையற்று என்னை ‘நீ ‘ ‘ சுமந்து செல்கிறாய். உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்.. ‘நீ ‘ ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது. ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை. அசட்டுப்பிள்ளையே! உன் பாதைமுழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது ? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம். கொஞ்சம் முனைப்பு வேண்டும்.

‘நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை ‘நீ ‘ அறிவாயாக.

———————————————————————————————————————————————————————————————-

பெர்னார்: மொழி, நாடு, இனம், மதமென, பிறப்பால் இந்திய மண்ணுக்கு முரண்பட்ட பிரெஞ்சுநாட்டு இளைஞன். ஏழுமணிக்கு எழுந்து, கெல்லக்ஸை விழுங்கியபின் பல் துலக்கி (சில நாட்களில் துலக்காமலும்), கண்ணாடி பார்த்து, லோஷன்களில் குளித்து, அணிந்த ‘சூட் ‘ டைச் சரிபார்த்து, டையின் இரண்டாவது முடிச்சை லிஃப்டில் போட்டு, பாரீஸின் சுரங்கப் பாதை இரயிலான ‘மெட்ரோ ‘ பிடித்து, பயணத்தில் ‘லிபரேஷன் ‘ தினசரியில் மேய்ந்து, பகல் முழுவதும் பாரீஸின் மத்திய பகுதியில் உள்ள ‘இந்தியவியல் மற்றும் தெற்கு ஆசியவியற்துறைக் கல்வி மையத்தில்(Le Centre d ‘Etudes de l ‘Inde et d ‘Asie du Sud), ‘ பேராசிரியர் ழான்-பியர் குரோ வழிகாட்டுதலின்கீழ் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழிலக்கியங்களின் மீதான ஆய்வுப் பணியில் மூழ்கிக்கிடந்தவன். சமகாலத் தமிழிலக்கியங்களோடு, சத்தம் போடாமல் சைவ சித்தாந்த ஆகமங்களிலும் அவன்காட்டும் அக்கறைகண்டு வியந்த பேராசிரியர், ஒரு நாள் ‘ பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரியிலுள்ள

நமது மொழி ஆய்வு ஸ்தாபனத்திற்கு உன்னைப் போல் ஒருவன் தேவையாம், விருப்பமா ‘, எனக்கேட்க இவன் மறுப்பேதும் சொல்லவில்லை.

வடகிழக்குப் பருவகாற்று தீவிரமடைந்து, சோழமண்டலக் கடற்கரையைப் பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், புதுச்சேரியில் வந்திறங்கினான். கடற்கரைக்கு அருகிலிருந்த மஞ்சளும் வெள்ளையுமாகவிருந்த அந்த சுண்ணாம்புக் காரைக் கட்டிடம் முதற்பார்வையிலேயே பிடித்துப்போனது. உள்ளே ஆயிரக்கணக்கில் ஓலைச் சுவடிகள். தேர்ந்த தமிழறிஞர்கள் அவற்றைக் கவனத்தோடு பிரித்துப் படித்து அதற்குப் பொருள் காண்கின்றார்கள், அவ்வாறு கண்டவற்றிற்கு உரை எழுதுகின்றார்கள். உரைகள் உடனுக்குடன் கணிணியில் உட்கார்ந்து கொள்கின்றன. அவன் மனதிலிருந்த கற்பனை இந்தியாவேறு, காணுகின்ற இந்தியா வேறு. தன் ‘ஞான ‘த்தில் இன்றைக்கும் இந்தியா இளைத்துபோகவில்லை என்கின்ற அவனது முதல் நாள் அனுமானம், நாட்கள் கூடக்கூட மேலும் வலுப்பட்டது. மொழி ஆய்வு ஸ்தாபனத்தின் இயக்குனர் எப்..கிரிமால் பாரீஸில் சமஸ்கிருதமும், புதுச்சேரியில் தமிழும் படித்துத் தேர்ந்து, இரண்டிலும் இருபது ஆண்டுகால ஆராய்ச்சியாளராக இருப்பதை அறிய இவனுக்கு உற்சாகம். கூடுதலாக அறிஞர் தெ.வி. கோபாலய்யர் போன்றவர்களின் உறுதுணை. போதாதற்கு புதுச்சேரியின் சிறிய கடற்கரையும், அருகிலிருந்த ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமும், கள்ள கபடமற்ற மக்களும், தென்னிந்திய உணவு முறையும் அவனை முற்றிலும் புதுச்சேரிவாசியாக மாற்றிவிட்டது.

இந்த ஓடும் நீரில்தான் பாசியாக சில கனவுகள். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கனவுகள். சந்தித்த மருத்துவர்கள் வேலைப் பளுவிலிருந்து விடுபட்டு மன உளைச்சலைக் குறைக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்குக் ‘கொடைக்கானலுக்கு சென்றுவந்தான். சீரடைந்தது உடல் மட்டுமே. மீண்டும் கனவுகள். அறிந்திராத மண், காற்று, ஆகாயம் அதில் அறிமுகமில்லாத மனிதர்கள், கேட்டிராத மொழி என்று ஆரம்பத்தில் சந்தேகித்து ஒதுங்கிய அவனது மனம் நாளடைவில் அந்தப் படிமங்களைத் தேடி ஓடியது. சந்தோஷப்பட்டது. கனவு தொடர்ந்தது.

எப்போதிருந்து அந்தக் கனவுகள்…

அன்று சனிக்கிழமை. மாலை நான்குமணி. மொழி ஆய்வு ஸ்தாபன ஊழியர்கள்கள் அனவரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர். கிரந்தச் சுவடிகளை ஆய்வுசெய்யும் கணபதி, தேவாரம் திருவாசகங்களை ஆய்வு செய்யும் மரியதாஸ், கல்வெட்டு ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த முத்தையாவென, சில தமிழறிஞர்கள்மட்டும் உத்திரமேரூரிலிருந்து வந்திருந்த வித்துவான் இரத்தினசபாபதி ரெட்டியாரோடு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் கூடப்பாக்கத்திலிருந்து, பெர்னாருடைய தலித் நண்பன் வேலு வந்திருந்தான். அவனோடு வில்லியனூர் வரை போய்வரவேண்டுமென பெர்னார் தீர்மானித்திருந்தான். புறப்படவிருந்த பெர்னாரை நிறுத்தியது மரியதாஸ்.

‘ உத்திரமேரூர் இரத்தினசபாபதி சில அரிய ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்திருக்கிறார். மங்கலம் என்கின்ற கிராமத்தில் கிடைத்ததாம் ‘

‘ அப்படியா! நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா ? ‘

‘ இல்லையென்றால் இரத்தினசபாபதி இவ்வளவுதூரம் வந்திருக்கமாட்டார் ‘. கோபலய்யர் கேள்விபட்டாரென்றால் சந்தோஷப்படுவார் ‘

‘கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணப் பாடல்கள். அதிலும் இக்கவிதை அநேகமாக யுத்தகாண்டமாகத்தானிருக்கவேண்டும். ‘ மரியதாஸ் பெர்னாரிடம் ஓலைச்சுவடியை நீட்டினார்.

‘கந்தபுராணமா ? ‘

‘ ஆமாம். தமிழர்களின் இறைவன் எனப்படும் முருகக்கடவுளின் பிறப்பு, சூரப்த்மன் வதை, வள்ளி, தெய்வானை திருமணம் என முருகன் சரிதைபற்றிய கவிதை வடிவ நூல். சிவாச்சாரியார் எழுதிய சுவடிகளைக் காஞ்சீபுரத்திலுள்ள குமரகோட்டத்து முருகனே ஒவ்வொருநாளும் திருத்தம் செய்ததாக நம்பப்படுகிறது.

வலது கையிற் பெற்று, மின்சார விளக்கின் வெளிச்சத்திற்குக் கொண்டு சென்று வாசிக்க முயற்சித்தான்.

‘வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்தில்

கண்ணீர் பொழிந்த கடலிடையே வீழ்ந்தனனால்

ஒண்ணுற்ற காஞ்சியுமையவள் கோட்டத்தின்

தண்ணுற்ற நேமித் தடத்திடையே வீழ்வார்போல் ‘

படித்து முடித்தபோது தலை வலித்தது. மரியதாசிடம் கூறினான்,

‘ இருக்கலாம். ஆனால் இக்கவிதையில் பிழைகள் இருக்குமென நினைக்கிறேன். மூலமாக இருக்கமுடியாது. மற்றவைகளும் கிடைத்தால் உண்மை விளங்கும். இந்தக் கவிதையைப்பற்றி ஏதோ தகவல்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே ‘

‘ஓ அதுவா ? கச்சியப்ப சிவாச்சாரியார் காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த வழக்கினை இக்கவிதையிற் பதிவுசெய்திருப்பதைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் ‘.

வித்துவான் இரத்தினசபாபதி உதவிக்கு வந்தார்.

‘பத்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரப் பெண்களிடையே மிகவும் அச்சமூட்டுகின்ற பிரார்த்தனை ஒன்று இருந்திருக்கிறது.. காமாட்சி அம்மன்கோவிலிற் பெண்கள், தாங்கள் வேண்டுவது நிறைவேறினால் ‘கருமாறிப் பாய்வதாக ‘ சத்தியம் செய்வார்கள். அவ்வேண்டுதல் நிறைவேறியவுடன், காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் மேல்நிலைக்குப் போய் எட்டிப்பார்த்தால் உலகாணித் தீர்த்தம் என்கின்ற குளம் தெரியும். அக்குளத்தை நோக்கித் தலைகீழாகப் பாய்ந்து உயிரை விடுவார்கள். இந்தச் செய்தியைத்தான் சிங்கமுகன் இறந்த செய்திக் கேட்டு சூரபத்மன் விடுகின்ற கண்ணீரில் அவனே வீழ்வதை ஒப்பிட்டு கச்சியப்பச் சிவாச்சாரியார் தகவலாக அறியத்தருகின்றார் ‘

அந்தச் செய்தியை முழுவதுமாக கிரகித்துக் கொண்டபோது, பெர்னார் உடலில் ஏற்பட்ட நடுக்கம் மனதையும் அசைத்திருந்தது. வேலுவிடம் தன்னால் இன்றைக்கு வெளியிலெங்கும் சென்றுவர இயலாதென அன்புடன் தெரிவித்தான்.

அன்றையலிருந்து, பெரும்பாலான இரவுகளில் வரிசை வரிசையாய்ப் பெண்கள் அவன் கனவுகளில் ‘கருமாறி ‘ப் பாய்ந்தார்கள். அடிக்கடி பகலில்கூட காட்சிகளாகவிரிந்து அவனை அலைக்கழித்தனர்.

அப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திமட்டும் முந்திக்கொண்டு செய்யும் முயற்சிகள் இவனுக்கு விநோதமாகவிருந்தது. ‘உன் உயிரைப் போக்கிக்கொள்வதில் இவ்வளவு ஆர்வமா ? கேட்டுப் பார்த்தான் பதிலில்லை. அறிந்தவளாக இருந்தாள். அவளது கண்கள்-பார்வை, நாசி-சுவாசம், இதழ்-மொழி, கூந்தல்-மணம், கைகள்-வளையோசை, கால்கள்-கொலுசு அனைத்துமே புதிதல்ல-பழகியவை. எப்போது ? எங்கே ?

‘…….. பரந்து கிடக்கும் நீலக்கடல், ஆவேசம் கொண்ட அலைகள், துள்ளியும் துள்ளாமலும் வலம் வருகின்ற நீர்வாழினம், அவற்றைக் கண்டு ஆர்ப்பரிக்கும் பறவைகள், பாதங்களை குறுகுறுக்கச் செய்யவென்றேப் படுத்திருக்கும் கடற்கரை, போர்த்தியமணல், அணைத்திருக்கும் பச்சைவெளி – வெப்பமண்டலக் காடு – திருத்திய நிலத்தில், மரகதத்தில் பதித்த முத்தும் வைரமுமாக குடியிருப்புகள். திரும்புகின்ற திசைகள்தோறும், தென்னையும் வாழையும் சூழ்ந்திருக்க அவள்….

பிறகு ..தூரத்திற் கோபுரம், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்… அவள்.

முகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நீலக்கடலும், நெய்தல் நிலமும்… கோபுரமும், அகன்ற வீதியும், மண்சுவரோடு எழுந்த வீடும், திறந்திருந்த ஒற்றைக்கதவின் இடைவெளியை அழகுபடுத்திய முகமும் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கி பெர்னார் களைத்திருந்தான்.

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா