மழையும் வெயிலும்.

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

இரா மதுவந்தி


மழை கொட்டிக்கொண்டிருந்தது வெளியே. உள்ளே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள் வைதேகி. முன்னறையில் வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது. சமையலறையிலிருந்து வரும் வெளிச்சம் கோடாக கிழிந்து சோபாவின் மீது கிடந்தது. மாலையில் கேட்கும் ஒலிகள் எல்லாம் இருளிலும் மழையிலும் கரைந்து, இரவின் ஒலிகளும் அமுங்கி மழையின் சோ என்ற ஒலி மாத்திரம் பல தொனிகளில் கேட்டுக்கொண்டிருந்தது. கீழ் வீட்டிலிருந்து டிவியில் ஓடும் ஒரு பாடல் மழை ஒலியில் திக்கித் திக்கி அவளது வீட்டுக்குள் தயங்கி வந்தது. அவள் கண்களின் மீது சோகமும், மடங்கிய கைகளின் மீது முகமுமாக குறுகி உட்கார்ந்திருந்தாள்.

பாவம் சுப்பிரமணியன் என்று ஒரு புறம் தோன்றினாலும், தலைக்குள் கண்மூடித்தனமான கோபம் அவளைப் படுத்தியது. ‘இவன் எப்படி அதைச் சொல்லலாம் ? இவன் யார் ? ஏன் இவனுடன் இப்படி லோல் படணும் ? எனக்கென்ன தலையெழுத்தா ? பொம்பளைன்னா இவனுக்கென்ன இளக்காரமா போச்சா ? ‘

கைக்குப் பக்கத்தில் இருந்த கரண்டியை தூக்கி வீசினாள். அது சுவரில் பட்டு கலீர் என்று தெரித்து தரையில் உருண்டது.

வெளியே சுப்பிரமணியனின் பைக் சடசடவென்று நின்று திரும்பி அபார்ட்மெண்ட் கட்டடத்துக்குள் நுழைவது கேட்டது. அந்த ஒலி அவளுக்கு மிகப்பழக்கமான ஒலி. மாலை ஆனதும் அந்த ஒலியைக் கேட்க காதுகள் விடைத்துக்கொண்டு நிற்கும். அந்த ஒலி கேட்டதும் ஜிவ்வென்று சந்தோஷம் வரும். ஒரு நிம்மதி வரும். இப்போதும் வந்தது. இத்தனை கோபத்திலும் அந்த ஒலி அவளுக்கு நிம்மதி தருவதை, முக்கியமாக இப்போது அதிக நிம்மதி தருவதை அவள் உணர்ந்தாலும், அதன் முரண்பாட்டை அவள் உணரவில்லை. ‘வரட்டும்.. ‘ என்று கருவியவாறு உட்கார்ந்திருந்தாள்.

வண்டியை நிறுத்திவிட்டு, படியேறி மேலே வர இந்தனை நிமிஷங்கள் ஆகும் என்பது அவள் கணக்கு. இருப்பினும், ஏன் மெதுவாக நடந்து வருகிறான் என்று வேறு கோபம் வந்தது இப்போது.

கதவு தட்டும் ஒலி வரைக்கும் காத்திராமல் எழுந்து சென்று கதவைத் திறந்துவைத்துவிட்டு அவள் மீண்டும் வந்து தன்னுடைய மூலையில் உட்கார்ந்தாள். கதவை தட்டித்திறந்தால், அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே, கோபம் இருக்கும்போது அவன் முகத்தைப் பார்க்க விருப்பமில்லை வைதேகிக்கு.

அவன் வாசலில் வந்து நின்றான். உடலெங்கும் மழையில் நனைந்து, படு கோபத்துடன் கடுகடுவென்று நின்று கொண்டிருந்தான். ‘இப்ப உனக்கு சந்தோஷமா ? ‘ என்று பையை சோபாவின் மீது வைத்தான். சுப்பிரமணியனுக்கு ஒரு பழக்கம். எத்தனை கோபம் இருந்தாலும், எதையும் தூக்கி எறியவோ, அடிக்கவோ மாட்டான். கை நீட்டியதில்லை. முகத்தில் கோபம் இருக்கும். உடலில் இருக்காது. அது அவளுக்குத் தெரியும். அவனுக்குக் கோபம் வந்தால், அவன் பேச மாட்டான். சில சமயம் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிடுவான். அவனுக்குக் கோபம் வந்து பேசாமல் இருந்தால் கூட பரவாயில்லை, அவன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டால், வைதேகி பதறிவிடுவாள். எங்காவது கோபத்தில் எதன் மீதாவது இடித்துச் செத்துப்போய்விட்டால் என்ன பண்ணுவது என்று கவலை அரித்துத் தள்ளிவிடும்.

அவன் செருப்பைக் கழற்றிவிட்டு, ஈரமான கால்கள் பதிய குளியலறைக்குள் சென்றான். தலையை துவட்டிக்கொண்டே, ‘நீ கேட்டமாதிரியே, வாங்கி வந்துட்டேன். நீ சாப்பிட்டுட்டு எனக்கு மீதி வை, நான் வரேன் ‘ என்று படுக்கை அறைக்குள் சென்றான்.

‘எப்ப பாத்தாலும் உங்களுக்கு சமச்சி போட்டுக்கிட்டே இருக்கணுமா ? வரப்பவே சொன்னேன். ஏதாவது வாங்கியாங்கன்னு. கையை வீசிக்கிட்டு வந்துட்டு, பண்ணுடி சமயல்னா, என்னா ? என்னை என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க ? அப்புறம் வாங்கியாந்துட்டு, தூக்கி எறிஞ்சிட்டு சந்தோஷமான்னு வேற பேசறீங்க ?.. எனக்கு ஒன்னும் வேணாம். நீங்களே தின்னுங்க ‘ என்று பொறிந்தாள் வைதேகி.

‘என்ன எது சொன்னாலும் குத்தம் பாக்குற.. பெரிய லொல்லா போச்சி. ஏண்டா இப்படி எனக்கு ஒரு தலை வேதனை ‘ என்று கத்தினான் சுப்பிரமணியன் உள்ளிருந்து.

‘ஆமா.. எனக்கு வேற வேலைஇல்லை ‘

‘ஆமா உனக்கு என்னதான் வேலை.. ‘ என்று திரும்பிக்கத்தினான்.

‘நான் வேலைக்குப் போவலைன்னு இப்படி குத்திகுத்தி காமிக்க வேண்டியது ‘ என்று திரும்பிக் கத்தினாள் வைதேகி.

‘அடச்சீ.. என்ன எது சொன்னாலும் இப்படி புடுங்கிக்கிட்டே இருக்க ? தெரு நாய் கூட பரவாயில்லை போலருக்கே ‘

‘ஆமா நான் நாயி. என்னை இன்னும் என்ன என்ன எல்லாம் சொல்லணுமோ அவ்வளவும் சொல்லுங்க.. என் தலை விதி ‘ என்று கத்தினாள் வைதேகி.

‘எனக்கு தலையை பிச்சிக்கலாம் போல இருக்கு. இங்க பாரு. நான் சாப்புட்டுட்டு தூங்கப்போறேன். நீ சாப்புடு சாப்பிடாம இரு.. உன்னிஷ்டம் ‘ என்றவாறு வெளியே வந்த சுப்பிரமணியன், பொட்டலங்களில் ஒன்றை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு சமயலறைக்குச் சென்றான். ‘தட்டு எங்க இருக்கு ? ‘ என்று உள்ளேயிருந்து சத்தம் போட்டான்.

‘கீழ ஷெல்பில இருக்கு ‘ என்றாள் வைதேகி.

தட்டையும் டம்ளரில் தண்ணீரும் எடுத்துக்கொண்டு மேஜை மீது உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். இதற்கும் எதாவது கத்துவாள் என்றே யோசித்துக்கொண்டே சாப்பிட்ட சுப்பிரமணி அவள் கத்தாமல் இருப்பதை ஆச்சரியத்துடன் மனதில் குறித்துக்கொண்டான். .

சாப்பிட்டு விட்டு தட்டை எடுத்து சமையலறையில் போட்டு விட்டு மீண்டும் தன் அறைக்குள் சென்றான் சுப்பிரமணி.

சுப்பிரமணி தன்னுடைய புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். கல்யாணம் ஆன பின்னால் தன்னால் புத்தகமே படிக்க முடிவதில்லை என்பது உறுத்தலாக தோன்றியது. தலைக்கு மேல் வேலை இருக்கும் அலுவலகத்திற்கு சிலர் புத்தகம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ரங்கராஜன் புத்தகம் படிப்பதற்காகவே பஸ்ஸில் வருகிறான் என்று அறிந்ததும் அப்போது ஆச்சரியம் வந்தது அவலமாக ஞாபகத்துக்கு வந்தது.

மேஜையில் வைதேகி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதை இங்கே இருந்து பார்த்தான். எதையோ யோசித்துக்கொண்டு அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

‘என்ன முனகறே ? வாயைத்தொறந்து திட்டேன். என்னன்னாவது எனக்குத் தெரியும் ‘ என்றான் சுப்பிரமணியன்.

‘ஆமா எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லிடணுமா ? சுதந்திரமா முனகக்கூட முடியாதா ? ‘ என்று வள்ளென்று விழுந்தாள் வைதேகி.

‘தனிக்குடித்தனம் வந்தது தப்பாப் போச்சி. அம்மா கிட்ட இருந்தவரைக்கும் இப்படியெல்லாம் நீ கத்தினதில்லை ‘

‘உங்க அம்மா பேச்சை எடுக்காதீங்க. பொல்லாதவளா ஆயிருவேன் ‘ என்றாள் வைதேகி.

‘எனக்கென்ன பிரச்னை. நீங்க கத்திக்கங்க சண்டை போட்டுக்கங்க. நான் நிம்மதியா இருந்தாச் சரி ‘ என்றான் சுப்பிரமணி.

‘வேணாம் வம்பு வளக்காதீங்க ‘ என்றாள் வைதேகி.

‘என்ன பேசிக்கிட்டே போற.. நானும் பாக்கறேன். சும்மா திட்டிக்கிட்டே இருக்க. சரி நான் ரங்கராஜன் வீடு வரைக்கும் போயிட்டு வரேன். கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்தாத்தான் எனக்கு புத்தி சுவாதீனமா இருக்கும் ‘

‘இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். காலைலேர்ந்து வீட்டுக்குள்ளயே கிடக்கேன். அங்க இங்க கூட்டிட்டுப்போவோம்னு தோணுதா உங்களுக்கு. நீங்க நல்லா இருக்கணும். அவ்வளவுதான். எவ எக்கேடோ கெட்டுப்போனா என்னா ? ‘ என்று கத்தினாள் வைதேகி.

கிளம்பியவன், ‘தலைவேதனைடா சாமி ‘ என்றவாறு தலையைப் பிடித்துக்கொண்டு, போட்ட செருப்பை கழற்றிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றான்.

‘எனக்கு தலைவலிக்குது .. நான் தூங்கப்போறேன்.. ‘ என்றவாறு படுக்கையில் படுத்து கண்களை மூடினான். வைதேகி டிவி பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த நாளை தன் நினைவிலிருந்து அழிப்பதுபோல,கண்களை இறுக்கி மூடி தூங்க முயற்சித்தான்.

***

காலையில் அவனை எழுப்பினாள் வைதேகி.

‘என்னாங்க. எந்திரிங்க. ஆபீசுக்கு போவேணாமா ? ‘ என்றாள்

கண்ணைத்திறந்து பார்த்தான். குளித்து, முடி காயவைப்பதற்காக விரித்துப்போட்ட கூந்தலோடு அவன் காலருகில் நின்று, வாய் நிறைய புன்னகையுடன் அவன் காலை தட்டிக் கொண்டிருந்தாள் வைதேகி.

நேற்றைய கோபம் அவன் மனத்தில் மிச்சமிருந்தது. ‘சரி போ.. எனக்கு எந்திரிச்சிக்கத் தெரியும் ‘ என்றான் சுப்பிரமணியன். அவள் அவனது கோபத்தைக் கண்டு கொள்ளாமல், ‘சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. உங்களுக்குப் பிடிச்ச தக்காளி உப்புமா பண்ணி வச்சிருக்கேன் ‘ என்றவாறு வெளியே சென்றாள்.

குளித்து கடு கடுவென்று உப்புமாவைச் சாப்பிட்டான் சுப்பிரமணியன். அவள் அவனருகிலேயே நின்று கொண்டிருந்தாள். ‘ஏன் மூஞ்சி அப்படி வச்சிக்கிட்டு இருக்கீங்க. நேத்து சண்டை நேத்தோட போச்சி ‘

‘அதெல்லாம் உனக்குத்தான் ‘ என்று சுப்பிரமணி சொன்னான்.

ஆபீசுக்குக் கிளம்பும்போது, அவனருகில் வந்து கட்டிப்பிடித்தாள் வைதேகி. ‘சமாதானம்.. ஓகே.. ஏதோ தெரியலை கோவம் வந்துடுது. அதுக்கென்ன பண்றது. சாரி .. ஓகே ‘ என்றாள்.

அவனும் அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும்போது காலண்டரைப் பார்த்தான். அடுத்த சண்டைக்கு இன்னும் 23 நாட்கள் இருக்கின்றன. அது அவளுக்கும் தெரியும்.

***

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி