வண்ன நிலவன்
‘என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. . என்ன சொல்லுதீய.. ? ‘
‘சரிதான் சொல்லுங்க… ‘
‘பம்பு அடிக்கும் போது மெதுவா அடிக்கணும். தக்கு புக்குன்னு அடிக்கக் கூடாது. பம்புக்கு வாஸர் போடணும்னா வாடகைக்குக் குடியிருக்கவுஹ தான் துட்டுப் போட்டு வாஸர் வாங்கிப் போடணும்.. என்ன சொல்லுதீய ? ‘
‘சரி சொல்லுங்க.. ‘
ராத்திரி ஒன்பது மணிக்குள்ளே யாரா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்திரணும். சரியா ஒம்பதுன்னா ஒம்பதுக்குத் தலை வாசல் கதவச் சாத்திடுவேன். அப்புறமா அம்மான்னாலும் முடியாது. அய்யான்னாலும் தொறக்க முடியாது. .. கதவைத் தாழ்ப்பாள் போட்டு சாவியை நான் வச்சிருப்பேன்.. ‘
‘ஒம்பது மணிக்கே வெளிக்கதவைப் பூட்டிடுவீங்களா ? ஒரு அஞ்சு பத்து நிமிஷம் லேட்டா வந்தாக் கூடக் கதவைத் திறக்க மாட்டாங்களா ? ‘
‘அது தானேய்யா இத்தனை நேரமும் சொல்லுதேன்.. விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்ன கதையிலல்லா பேசுதீய.. என்ன சொல்லுதீய ? ‘
‘சரி சொல்லுங்கம்மா… ‘
‘வீட்டுக்குள்ள கண்ட எடத்துலேயும் ஆணி அடிக்கக் கூடாது. விறகு அடுப்பு வச்சு சமையல் பண்ணக் கூடாது.. சமையல் கட்டுலே ஒரு பொட்டுக் கரியைப் பார்த்தாலும் எனக்குப் புடிக்காது..என்ன சொல்லுதீய ? ‘
‘சொல்லுங்கம்மா.. ‘
‘ஏன்னா எல்லாத்தையும் நீங்க குடி வர்றதுக்கு முன்னாலேயே பேசிக்கிட்டா ஒங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது பாருங்க.. என்ன சொல்லுதீய ? ‘
சொர்ணத்தாச்சி , நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை ‘என்ன சொல்லுதீய.. ? ‘ ‘என்ன சொல்லுதீய ? ‘ என்று எதிரே இருப்பவரைக் கேட்டுக் கொள்வாள். அப்படியொரு பழக்கம்.
‘சொல்லுங்கம்மா.. ‘
‘ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. துணிமணிகளை மொட்டை மாடியிலே கொண்டு போய்க் காயப் போடக் கூடாது. மொட்டை மாடிக்கு யாரும் போகவே கூடாது… வத்தல் போடுதேன், துணி காயப் போடுதேன்.. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைப் படுக்க வைக்கேன்னு ஆரம்பிச்சிரக் கூடாது.. என்ன சொல்லுதீய ? ‘
‘…………………………………. ‘
‘இத்தனை கண்டிஷனுக்கும் ஒத்து வர்றதா இருந்தா மவராசனா வாங்க..ம்.. சொல்ல மறந்துட்டேனே. விருந்து கிருந்துன்னு ஊர்லாம்பட்ட ஆட்களை வீட்டுக்குள்ள அடைச்சு வச்சுரப் படாது.. ஏதோ ஒரு ஆளு ரெண்டு ஆளு வந்தாப் பரவாயில்லை. அதுவும் மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு மூணு நாளு தங்கியிருக்கலாம். ஒரேயடியா மாசக்கணக்கிலே டேராப் போட்டு உக்காந்தா நீங்க தான் அடுத்த மாசமே வீட்டைக் காலி பண்ணணும். என்ன சொல்லுதீய ? ‘
‘ சரிம்மா. சொல்லுங்க.. ‘
‘என்னடா இந்த வீட்டுக்கார ஆச்சி கண்டிசன் மேலே கண்டிசனாப் போடுதாளேன்னு பாக்காதீய.. நாளையும் பின்னையும் நீங்களும் நல்லா இருக்கணும், நானும் நல்லாஇருக்கணும் பாருங்க.. எனக்கு இந்த வீட்டு வாடகை வந்து தான் வயிறு நெறயணும்கறது இல்லை, எம்மவன் மிலிடரியிலே இருக்கான். எங்க வீட்டு அய்யா நயினாகுளம் பக்கத்துலே நாலு மரக்கா வெதைப்பாடும் , பேங்குல ரெண்டு லட்சத்திச் சொச்சம் ரூபாயும் விட்டுட்டுத் தான் மண்டையைப் போட்டாஹ… அந்த அதிகாரி இருந்தாஹன்னா நான் இந்த மாதிரி வீட்டை விட்டு வெளியிலே வந்து நின்னு பேசுவனா ? அது கெடக்கட்டும். . எங்கதை என்னோட . . . இத்தனை கண்டிசன் இருக்கு . சம்மதமுனா வாருங்க .. . இங்க இருக்க எட்டுக் குடித்தன்ங்களும் இபப்டித் தான் இருக்குதுஹ . . என்ன சொல்லுதீய . . ? ‘
‘சரிம்மா . . வீட்டு வாடகை . . ‘
‘ வாடகை எரநூறு ரூபா . . ரெண்டாயிர ரூபா அட்வான்சு . . அட்வான்ஸைப் போகும் போது தான் திருப்பித் தருவேன் . . வீட்டைக் காலி பண்றதுன்னா ஒரு மாசத்துக்கு முந்தியே அட்வான்ஸா ‘வீட்டைக் காலி பண்ணப் போறேன் ‘ னு சொல்லிப் புரணும். . என்ன சொல்லுதீய ? . . ‘
அந்தப் பக்கம் பதில் இல்லை. சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் : ‘அட்வான்ஸ் தான் கொஞ்சம்.. ‘
‘அய்யா ! அதான் சொல்லிட்டேனே, காலணாக் கூட கொறைக்கறதுக்கு இல்ல.. இஷ்டம்னா வாங்க..என்ன சொல்லுதீய ? ‘
‘ரொம்பச் சரிங்க.. நல்ல நாள் பாத்து வந்துடறோம். நாளக்கிக் காலம்பற அட்வான்ஸ் தந்துடறோம். ‘
‘சொல்லுதேன்னு கோச்சுக்கிடாதீய.. நீங்க அட்வான்ஸ் தர்றதுக்கு மிந்தி ஆராவது வந்து தந்துட்டாஹன்னா அவுஹளுக்குத் தான் வீடு… பொறவு வந்து என்ன ஆச்சி ! வீட்டை விட்டுட்டாஹளான்னு கேளாதீய.. சம்மதமா ? .. என்ன சொல்லுதீய ? ‘
‘சரிம்மா.. காலையிலே எட்டு எட்டரைக்கெல்லாம் வந்து தந்திடுதோம். ‘
‘மவராசனாப் போயிட்டு வாங்க.. ‘
****
‘சொர்ணத்தாச்சி வளவு ‘ என்கிற அந்த வீடுகளுக்குக் குடி வருகிற நபர்கள் இன்னும் சில விசித்திரமான கண்டிஷன்களுக்கும் ஆளாக வேண்டும். அந்தக் கண்டிஷன்களெல்லாம் வீட்டுக்குக் குடி வந்த பிறகு தான் அனுபவத்தில் ஒவ்வொன்றாகத் தெரிய வரும். ஆச்சியின் கெடுபிடிகளைப் பற்றித் திருநெல்வேலி டவுனில் கேள்விப் படாத ஆளே இருக்க முடியாது.
‘ஐயோ , நீங்க சொர்ணத்தாச்சி வீட்டு வளவுலேயா குடியிருக்கீஹ .. அடப் பாவமே.. உக்காந்தாக் குத்தம், நின்னாக் குத்தம்பாளே அந்த ஆச்சி.. ‘ என்று சொர்ணத்தாச்சி வீட்டில் குடியிருக்கிற ஜீவன்களை, ஏதோ கூண்டுக்குள் அடைபட்டிருக்கிற மிருகங்களைப் பரிதாபத்துடன் பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள். ஆனால், ஆச்சியின் அத்தனை கெடுபிடிகளுக்கும் மசிந்து கொடுத்து , அந்த வளவில் குடியிருக்கக் காரணம் தண்ணீர் வசதி. பம்பில் எந்த நேரமும் தண்ணீர் வரும். காலையில் ஆற்றுக்குக் குளிக்கப் போவதற்கும் ரொம்பச் செளகரியம். நெல்லையப்பர் கோவில், காய்கறி மார்க்கெட், பள்ளிக் கூடம் எல்லாம் பக்கத்தில் தான். இந்தச் செளகரியங்கள், சொர்ணத்தாச்சி தரும் கெடுபிடிகளை மறக்கடிக்கச் செய்து விடுகின்றன.
எல்லா வீடுகளையும் வாடகைக்கு விட்டு விட்ட சொர்ணத்தாச்சி, மாடியில் இரண்டே இரண்டு அறைகளை மட்டும் தனக்கென்று வைத்துக் கொண்டாள். ஓர் அறையில் மிலிட்டரியில் இருக்கிற அவளுடைய ஒரே மகனுடைய மிலிட்டரி ட்ரங்க் பெட்டிகளும், புழங்காத சாமான்களும் கிடக்கும். இன்னொரு அறையைத் தான் புழங்கி வந்தாள்.
எல்லா வீடுகளிலுமாக இரண்டாயிரம் ரூபாய் வரை வாடகை வருகிறது என்றாலும் , ஆச்சி தன் வீட்டில் சமையல் செய்வதைப் பார்க்கவே முடியாது. காலையில் மட்டும் யாராவது பையன்களை அனுப்பி ஹோட்டலில் இட்லி வாங்கிச் சாப்பிடுவாள். மதியமும் , இரவுச் சாப்பாடும் அனேகமாக அங்கே வாடகைக்குக் குடியிருக்கிற குடித்தனக் காரர்கள் வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ தான் நடக்கும்.
மனிதர்களுக்கு வம்பளக்கும் பலவீனம் உண்டு என்பது ஆச்சிக்குத் தெரியும். யார் யாருக்கு எந்த மாதிரி வம்புகள் பிடிக்கும் என்பதும் ஆச்சிக்குக் கரதலப் பாடம். இரண்டாவது வீட்டில் குடியிருக்கிற கோமதி நாயகமும், அவர் பொஞ்சாதியும் சினிமாப் பைத்தியங்கள். அவர்கள் வீட்டுக்குப் போனால், தியாகராஜ பாகவதர் காலத்துச் சினிமா கிசுகிசு வரை அவிழ்த்து விடுவாள். குழாயடி வீட்டில் இருக்கிற கெளரிக்கு, வேம்படித் தெருவில் குடியிருக்கிற அவள் நாத்தனாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே போதும். சோறு தண்ணி கூட வேண்டாம். சொர்ணத்தாச்சி அவள் நாத்தனாரின் நடையுடை பாவனைகளைக் கேலி பண்ணி கெளரியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுவாள். அதற்குள் சாப்பாட்டு நேரமே வந்து விடும்.
‘ஏளா பாத்தியா.. பேசிக்கிட்டு இருந்ததுலே நேரம் காலமே தெரியலை! இரு..! போயி ரெண்டு வாயி சோத்தை அள்ளிப் போட்டுட்டு வாரேன்.. ‘ என்று மெதுவாக எழுந்திருப்பாள், தவறு, எழுந்திருக்கிற மாதிரி பாவனை செய்வாள்.
கெளரி விடுவாளா ? அவள் மனதையெல்லாம் சர்க்கரைப் பாகாக இனிக்க வைத்து விட்டிருக்கிற ஆச்சியின் பேச்சை இன்னும் இரண்டு மணி நேரமாவது கேட்க வேண்டாம ?
‘ரெண்டு வாச் சோத்தை அள்ளிப் போடறதுக்காக நீங்க மாடிப்படி ஏறி இறங்கணுமாக்கும் .. அந்தச் சோத்தை இங்க உக்காந்து அள்ளிப் போட்டா தான் என்னவாம். ‘ என்று தட்டுச் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து ஆச்சியின் முன்னால் வைத்தே விடுவாள்.
‘எனக்கு மக இல்லாத குறையைத் தீர்க்கத்தான் காந்திமதி அம்மனே உன் ரூபத்திலே வந்திருக்காம்மா. ‘ என்று சொல்லி விட்டுச் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விடுவாள்.
ராத்திரிச் சாப்பாட்டுக்கு இதே போல் இன்னொரு கோமதி அல்லது கோமதி நாயகத்து வீடு. அவர்களுக்குப் பிரீதியான விஷயத்தைப் பேசி ஆளைக் கிறங்கடித்துச் சாப்பாட்டை முடித்துக் கொள்வாள்.
ஆச்சிக்குத் தெரிய யாரும் அமிர்தாஞ்சனமோ, விக்ஸோ தேய்த்து விடக் கூடாது. வாசனை எந்த வீட்டிலிருந்து வருகிறது என்று கண்டு பிடித்து அவர்கள் வாங்கி வைத்திருக்கிற பாட்டில் காலியாகிற வரை அவ்வப்போது வந்து வாங்கி , தைலத்தை எண்ணெய் மாதிரி தேய்த்துக் கொள்வாள்.
குடியிருக்கிறவர்கள் ரேடியோ வைத்திருந்தால் போச்சு. ஆச்சி ஒரு ரேடியோ பைத்தியம். ராத்திரி பத்து மணிக்கு ஒலி பரப்பாகும் நேயர் விருப்பத்தில் வாரம் தோறும் ‘திருநெல்வேலி டவுன் சொர்ணத்தம்மாள் ‘ என்கிற நேயரின் பெயர் வாசிக்கப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா ? அந்த நேயர் நமது வீட்டுக்கார ஆச்சியே தான். தினசரி சென்னை, திருச்சி, திருநெல்வேலி, ரேடியோ நிலையங்களுக்கு , நாலாவது வீட்டில் குடியிருக்கிற அர்ச்சுனனின் மகனிடம் சொல்லி , தனக்குப் பிடித்தமான சினிமாப் பாட்டுகளை ஒலிபரப்பக் கேட்டுக் கார்டுகளைத் தட்டி விட்டுக் கொண்டேயிருப்பாள். அந்தத் தெருவில் நேயர் விருப்ப ஆச்சி என்றே ஆச்சிக்குப் பெயர் உண்டு.
நேயர் விருப்ப நேயராக ஆச்சி இருந்தாலும் ஆச்சியின் வீட்டில் நூறு ரூபாய் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது. அப்படியானால் ஆச்சி எப்படித் தனக்கு விருப்பமான பாடல்கள் ஒலி பரப்பப் படுவதைக் கேட்கிறாள் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதிலும் ஆச்சியின் சாம்ர்த்தியமே தனி தான். நேயர் விருப்ப நிகழ்ச்சி இருந்தால் அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாமர்த்தியமாக வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு , நம்மை ரேடியோ போடவைத்து விடுவாள்.
ஆச்சியின் ரேடியோத் தொந்தரவு தாங்காமல் வீட்டைக் காலி செய்து கொண்டு ஓடிய குடும்பங்கள் பல. சிலர் தங்கள் வீட்டில் இருந்த ரேடியோக்களையே விற்றுவிட்டார்கள்.
எல்லா வீடுகளுக்கும் தனி மீட்டர் இருக்கிறது. என்றாலும் , இரவு அகால நேரத்தில் எந்த வீட்டிலாவது விளக்கு எரிகிறதா என்று ஆச்சி மோப்பம் பிடிப்பாள். எல்லா போர்ஷன்களும் ஓடு போட்டவை தான். இதனால் வீட்டினுள் விளக்கு எரிந்தால் ஓடுகளுக்கு இடையே உள்ள இடுக்குகளின் வழியாக விளக்கு வெளிச்சம் தெரியும்.
‘ஏளா .. இம்புட்டு நேரத்திலே வெளக்குப் போட்டு என்னமா செய்த.. வெளக்கை அணை ‘ என்ற ஆச்சியின் குரல் கேட்கும்.
தனக்குப் பிடிக்காத குடித்தனத்தைக் காலி செய்ய ஆச்சி கையாளும் நடவடிக்கைகள் ரொம்ப டிப்ளமேடிக் ஆனவை. இந்த விஷயத்தில் ராஜதந்திரிகள் எல்லாம் ஆச்சியிடம் கைகட்டி நிற்க வேண்டும்.
யார் யார் எப்படி என்பதை , ஆச்சியின் கூர்மையான அறிவு அவர்களுடன் பழக ஆரம்பித்த சில தினங்களிலேயே எடை போட்டு வைத்து விடும். ஆளுக்கு ஏற்ற படி காலி செய்யும் நடவடிக்கைகளும் இருக்கும்.
சற்றுப் படித்தவராக இருந்தால் அவர்களுக்குப் புரிகிற மாதிரி ஜாடையாகப் பேசுவாள். கேலி பேசுவாள்., அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர்களைப் பற்றி அவதூறுகளைக் கிளப்பி விட்டு விடுவாள். அந்த வீட்டுக் காரர்கள் பம்பில் தண்ணீர் அடிக்க வந்தால் , அவர்கள் காதில் விழுகிற மாதிரி ‘மனுஷாள்கள் தண்ணீர் அடிச்சா மெதுவா அடிப்பாஹ.. மாடுங்க மாதிரி தண்ணீர் அடிச்சா .. பம்ம்பு எத்தனை நாளைக்கி வரும் ? ‘ என்று சத்தம் போட்டுச் சொல்லுவாள். கொஞ்சம் உணர்வுள்ள குடித்தனக் காரர்கள் இந்த அவமரியாதைகளைச் சகிக்க முடியாமல் காலி செய்து ஓடி விடுவார்கள்.
எதற்கும் மசியாத கடோத்கஜர்களை விரட்ட ஆச்சி கையாளும் நடவடிக்கைகள் அவர்களுடைய குணத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும். வீட்டுப் புரோக்கர்கள் மாதிரி , வீட்டைக் காலி செய்து தருவதற்கும் , பழைய பேட்டைக்குப் பக்கத்தில் சில புரோக்கர்கள் இருக்கிறார்கள். சம்பந்தப் பட்ட குடித்தனக் காரர்கள் வேலைக்குப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் , குடித்து விட்டு அவர்களை வம்புச் சண்டைக்கு இழுப்பார்கள். ஒருத்தன் ‘ஆச்சி வீட்டிலே இருந்துகிட்டு காலி பண்ண மாட்டேங்கிறியா ராஸ்கல். ‘ என்று சத்தம் போடுவான். இதற்கு மசியாத ஆட்களை வீட்டுக்குள் புகுந்து , சாமன்களை எடுத்துப் போட்டு விரட்டி விடுவார்கள்.
‘ஆச்சி ஆச்சி யாரோ ஒங்க வளவுலே வீடு வாடகைக்கு இருக்குதுன்னு சொன்னாஹ.. வீடு கிடக்குதா ஆச்சி ? ‘ என்று விசாரிக்கிறார்கள்.
‘ ஆரு அட, ராமய்யாவா. ஒனக்கு இல்லாத வீடாப்பா .. வா.. வந்து பாரு.. புடிச்சிருக்குதா பாரு.. அப்புறமா வாடகையைப் பத்திப் பேசுவோம். செத்த முந்தி கூட ஒருத்தர் வந்து பாத்துட்டுப் போனாரு. நீயும் பாரு .. யாரு மிந்தி அட்வான்ஸ் தாரீஹளோ அவுஹளுக்குத் தான் வீடு.. என்ன சொல்லுத ? ‘
(உள்ளும் புறமும் – சிறுகதைத் தொகுப்பிலிருந்து)
திண்ணை
|