12. மின்வாணிபம் – ஒரு அறிமுகம்

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

கணினிக்கட்டுரைகள் 12
மா.பரமேஸ்வரன்


‘திரைகடலோடியும் திரவியம் தேடு ‘ என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்!. அக்காலத்திலோ நம்நாடு செல்வச்சிறப்புடையாதாக இருந்தது, பிற நாட்டு வியாபரிகள் நமது நாட்டை நோக்கி போட்டி போட்டு திரண்டு வந்தனர். ஆயினும் நமது முன்னோர்களிடம் திரைகடலோடியும் திரவியம் தேடு என்னும் பழமொழி இருந்ததற்கு காரணம் என்ன ? (அறிஞர்களின் பார்வைக்கு விட்டுவிடுவோம்)

இன்று திரைகடலோடி திரவியம் தேடவேண்டியதில்லை கணினி முன்னிருந்து திரவியம் தேடினால் மட்டுமே போதுமானது. உலகம் சுறுங்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள் அதற்குக்காரணம் நாம் சில மணித்துளிகளில் உலகின் எந்தப்பகுதியில் உள்ளவருடனும் தொடர்புகொள்ள முடிகிறதால் தான். ஆனால் அந்த காலத்தில் பத்துக்காத தூரத்தில் இருக்கும் ஒரு இடத்துக்கு செய்தியைக் குதிரைகளிலோ, மாட்டுவண்டிகளிலோ சுமந்துசெல்லவேண்டியிருந்தது. ஆனால் இன்று, தொலைபேசிகள், தொலைநகல்கருவிகள், இணையம் என்று அறிவியல் ஆய்வின் வெளியீடுகள் மொத்த உலகத்தினையும் மணித்துளிகால எல்லைக்குள் சுருக்கிவிட்டன.

மின்வாணிபம் ஒரு அறிமுகம்.

இன்று உலகின் முக்கிய கண்டுபிடிப்பாக இருந்துவருவது கணினி என்பதை நாம் அனைவரும் அறிவோம் அது மட்டுமல்லாது அக்கணினியினைப் பயன்படுத்தும் இணையமே இன்று உலகமுழுதும் பேசப்பட்டு வரும் ஆச்சர்யமான விடயம் என்பதிலும் சந்தேகம் இல்லை. உலகின் மொத்த தொலைத்தொடர்புகளையும் தனது விசுவரூபத்தினுள் சிறைப்படுத்திவரும் இந்த இணையம் உலகின் மொத்த செல்வங்களை உள்ளடக்கிய வாணிபச் செயல்பாடுகளையும் விட்டுவைக்கவில்லை.

இன்று உலகின் முன்னனி நிறுவனங்கள் அடங்கிய நியூயார்க் நகரம் முதல் கொண்டு சிறுதொழில் செய்துவரும் சிவகாசி முடிய பலகோடி நிறுவணங்கள் தனது வியாபரத்தை இணையத்தின் மூலமாக நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இவ்வாறாக கணினிகளைப் பயண்படுத்தி இணையத்தின் மூலமாக நடத்தும் வியாபாரத்தைத் தான் நாம் மின்வாணிபம் என்று கூறுகிறோம்.

எப்படி கணினியின் முன் இருந்து வாணிபம் செய்யமுடியும்..

வாணிபம் என்பது வாங்குவதும், விற்பதுவும் மற்றும் பயன்படுத்துபவர்களும் கலந்துகொள்ளும் அன்றாட நிகழ்ச்சி, நாம் காலை எழுந்த உடன் அன்றைக்கு தேவையான் பச்சைக்காய்கறிகளை வாங்கிவரக் கடைக்குச் செல்கிறோம். அதுதேவையில்லை உங்கள் கணினியை இயக்கி இணையத்தை துவக்கி ஒரு பலசரக்குக் கடையினுடைய வலைத்தளத்திற்கு செல்லுங்கள் அங்கே உங்களுக்கா இன்றைய சிறப்புக் காய்கறிகள், பிற சாமான்களும் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன அதில் தாங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று மட்டும் எழுதி சுட்டியை ‘அனுப்பு ‘ என்ற இடத்தில் தட்டினால் அடுத்த 5 மணித்துளிகளில் உங்களது வீட்டு அழைப்பு மணியை அழுத்துவான் கடையில் இருந்து சாமான்களுடன் வரும் வேலைக்காரன்.

பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு ஏற்கனவே இந்த தொலைபேசி வாணிபம் பற்றி தெரிந்திருக்கும், அதாவது கடைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தேவையானதைச் சொன்னால் உடனே கொண்டுவருவார்கள் நீங்கள் பணத்தைக்கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். பக்கத்தில் இருந்தால்தான் கொண்டுவருவார்கள், இல்லையெனில் நீங்கள்தான் போய் வாங்கிவரவேண்டும். இந்த தொலைபேசி வாணிபம் கணினி வந்துவிட்டதனாலும் இணையத்தின் மூலம் பணம் அனுப்ப மற்றும் பாதுகாப்பக வியாபாரம் செய்ய வழி ஏற்பட்டுவிட்டதாலும் மின்வாணிபமாக மாறிப்போய்விட்டது.

‘நான் ஜப்பானில் இருக்கும் ஒரு மின்னனுக்கருவிஉற்பத்தி நிறுவனத்திடம் 1000 தொலைக்காட்சி சாதனங்களை வாங்கவேண்டும் ‘ அப்படியா நேரே அவர்களது மின்வாணிப வலைத்தளத்திற்கு செல்லுங்கள் அங்குள்ள வாங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பு என்று உள்ள இடத்தில் கிலிக் செய்யுங்கள் அவ்வளவுதான் உங்களது வேண்டுகோள் அங்கு உடனே பரிசீலிக்கப்படும். பணத்தை எப்படி அனுப்புவது ? அதைமட்டும் காசோலையாகவா அனுப்பமுடியும் அது மேலும் ஒரு ஐந்து நாள்களாவது எடுத்துக்கொள்ளுமே என்ன செய்வது… இருக்கவே இருக்கு நமது வங்கி மின்னனுக் கடன் அட்டைகள்(Credit card) அதனுடைய எண்களை தந்தால் போது அடுத்த ஐந்து மணித்துளிகளில் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் அந்த நிறுவணத்திற்கு பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். அடுத்த சில நாள்களில் அங்கிருந்து ஐந்து கண்டெய்னர்களில் உங்களுக்கு தேவையான ஆயிரம் தொலைக்காட்சி பெட்டிகள் வந்துசேர்ந்துவிடும் இவ்வளவுதான் இந்த மின்வணிகம்.

மின்வாணிபம் செய்ய என்னென்ன வேண்டும் ?

கணினி மற்றும் இணையத்தின் இணைப்பு இவை இருந்தால் மட்டுமே போதுமானது, அத்தோடு கொஞ்சம் நேர்மையும் வேண்டும் ஏனெனில் இங்கு நாம் நேரிடையாக சந்தித்துக்கொள்வதில்லை. மேலும் நாம் உற்பத்தி செய்யும் பொருள்களை பிறர் பார்த்து அதன் பண்புகளையும், தரத்தையும் அறிந்துகொள்வதற்கும் ஏற்றவகையில் ஒரு சிறந்த வலைத்தளம் அமைக்கப்பட்டு அவைமூலம் பிறர் உங்களது உற்பத்தி சாதனங்களைப் பற்றி விசாரனைசெய்வதற்கு ஏற்ற வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும்.

அவர் அவ்வாறு விசாரனைசெய்துவிட்டு அதாவது உங்கள் உற்பத்தி பொருள்கள் பற்றிய விளக்கங்களைப் படித்துவிட்டு, விரும்பினால் அவற்றை வாங்குவதற்காக விண்ணப்பம் செய்ய விண்ணப்ப படிவங்களை நீங்கள் அவ்வலைத்தளத்தில் வழங்கவேண்டும். இவ்வாறாக அவர் விண்ணப்பிக்கும் படிவங்களை நீங்கள் முறையாக பரிச்சீலனை செய்து அவரிடம் பணத்தை அவரது மின்கடன் அட்டையில் இருந்து பெற்றுக்கொண்டு அவரது முகவரிக்கு உடனே பொருள்களை அனுப்பிவைக்கவேண்டும். இவ்வளவுதான்.

நான் உற்பத்தியாளன் அல்ல நானும் மின்வாணிபத்தில் பங்கு கொள்ளவேண்டும், அப்படியா இதோ உங்களுக்கு வழி இருக்கிறது, உங்களது வலைத்தளத்தில் கொள்முதல் செய்பவரிடம் இருந்து ஆர்டரைப்பெற்று அதனை வெவ்வேறு உற்பத்தியாளருக்கு அனுப்பி அவர்கள் மூலம் பொருள்களை வேண்டியோருக்கு வாங்கிக்கொடுக்கும் தரகு வாணிபம் செய்யலாம். இதுதான் இணையத்தில் இன்று அதிகம் நடந்துகொண்டிருக்கிறது.

மின்வணிகத்தினால் எனென்ன பயன்கள் விளையும் ?

கணினி சார்ந்த எந்தத் துறையாகட்டும் அதுமிகமிக விரைவானது.. அதனால் தான் இப்பொழுது ஆமைவேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியஅரசிற்கு கணினிக்கால்களை கட்டுகிறார்கள் போலும். காரணம் கணினிகள் நேரத்தை நிமிடங்கள் என்றுகூடப் பார்ப்பதில்லை வினாடிகளும் அதற்கு குறைந்தவைகளாகவும் மட்டுமே பார்க்கிறது.

1. மின்வாணிபத்தில் நாம் நமது வீட்டில் இருந்துபடியே செய்யும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் மிகவிரைவாக நடக்கின்றன. அதனால் நமக்கு பொருள்கள் வந்துசோர்வதோ அல்லது நாம் பொருள்களை அனுப்பிவைப்பதிலோ சிக்கல்கள் இருப்பதில்லை.

2. இங்கு ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வாணிபத்திற்கு இது மிகவும் உகந்த முறையாகும்.

3. இஃது உலகளாவிய வாணிபச்சந்தையின் தரத்தை நமக்கு தரவல்லது.

மின்வாணிபத்தில் யாருக்கு புதிதாக வேலை கிடைக்கிறது ?

இது மிக முக்கியமான ஒன்று மின்வாணிபத்தில் அதிகம் வேலைவாய்ப்பைப்பெருபவர்கள் மின்வாணிபம் செய்யத்தகுந்த வலைத்தளங்களும், வாணிப கொடுக்கல் வாங்கள்களை முறையாக கணினியில் பதித்து பயன்படுத்த தேவையான நிரல்களையும் எழுதித்தரும் புரோகிராமர்களே. மற்ற வாணிப முறைகளில் வாணிபத்தொடர்புகள் காகிதங்கள் வாயிலாக நடக்கின்றன ஆனால் இங்கோ கணினிவாயிலாக அல்லவா நடக்கிறது.

மின்வாணிபம் செய்யத்தகுந்த வலைத்தளங்களை அமைக்க என்னென்ன மென்பொருள்களை நாம் கற்றிருக்கவேண்டும் என்று கேட்டால், முதலில் நமக்கு HTML என்னும் மொழியில் பண்டித்தியம் இருக்கவேண்டும். பின்னர் தகவல்களை சேமிக்கும் நிரல்களை எழுதுவத்ற்கு ASP (Active Server Pages) என்னும் மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் மொழியில் திறமைவேண்டும். மேலும் Perl என்னும் கணினி மொழி ‘C ‘ மொழி போன்றவை தெரிந்திருந்தால் நலம். இங்கு இவை வலைத்தளம் இருக்கும் பரிமாரிக்கணினி, எந்த வினைக்கலனில் இருக்கிறது என்பதைப்பொருத்து வேறுபடும்.

இன்று நாம் காணும் தமிழ்புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா வளங்களையும் வழங்கட்டும், தமிழ்மக்கள் மின்வாணிபம் செய்து வாழ்வில் உயர்ந்து விளங்கட்டும்.

Series Navigation

மா.பரமேஸ்வரன்

மா.பரமேஸ்வரன்