செங்கை ஆழியான்
கூடிக்குறைந்தால் பன்னிரண்டு வயது இருக்கும். முகத்தில் இனம் தெரியாத சோகம், தேமலாக அப்பிக் கவிந்திருக்க, வயதுக்கு மீறிய பெருந்தன்மையும், பொறுப்பும் விழிகளில் தெறிக்கும். புலரா ஓர் அதிகாலை வேளையில், வீட்டு வாசலில் அவனை நான் கண்டேன். மதிலுக்கு மேல் பூத்துச் சிலிர்த்திருக்கும் மல்லிகைப் பூக்களை மொட்டுக்களோடு, வீட்டார் விழித்து எழுவதற்கு முன்னரே ஒடித்துச் சென்று, மாலை கட்டுபவர்களுக்கு விற்கும் சிறுவர்களில் ஒருவனாக எனக்கு அவன் தென்படவில்லை. அரை காற்சட்டையும், கிழிந்த பெனியனுமாக, பரட்டையாகப் பறக்கும் தலை மயிர் சிலும்பிக் கிடக்க, தோளில் சாக்கு ஒன்றைச் சுமந்த படி அவன் என் முன் நின்றிருந்தான். சாக்கில் கிடந்த பொருட்களின் பாரத்தில், வலது பிஞ்சுத் தோள் ஒரு புறம் சரிந்து கிடந்தது.
‘சேர் ‘ என்றான்; குரலில் பணிவும் இனிமையும் சேர்ந்து ஒலித்தது.
‘என்ன ? ‘
‘வெறும் போத்தல்கள் விக்கிறதுக்கு இருக்கா ? ‘
‘இருக்கு. ‘
‘தாங்கோ சேர்… நல்ல விலை தருகிறேன். ‘
அவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்து விட்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன். வெற்றுப் போத்தல்கள் பல சிறிதும் பெரிதுமாக மூலையில் குவிந்து கிடக்கின்றன. நல்ல விலையா கிடைக்கப் போகிறது ?
அவன் அப்போத்தல்களை வகை மாதிரியாகத் தரம் பிரித்து வைத்தான்.
‘இந்த சாராயப் போத்தல்களுக்கு நான்கு ரூபாய் தாறன்.. ‘
‘நான்கு ரூபாயா ? அண்டைக்கு ஒருத்தன் இரண்டு ரூபா கேட்டான் ? ‘
‘அது எனக்குத் தெரியாது சேர். நான் நான்கு ரூபா தாறன்… இந்த மைப்போத்தல்களுக்கு இருபத்தைந்து சதப் படி தாறன். ‘
‘அண்டைக்கு வந்தவன் பத்துச் சதம்கேட்டானே.. ? ‘
எனக்கு அந்தப் பையன் மீது இரக்கம் ஏற்பட்டது. பரிதாபமாக அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.
‘தம்பி, உனக்கு விலையள் தெரியாது போல இருக்கு. உப்பிடி வாங்கி எக்கணம் எப்பிடி விற்கப் போறாய் ? நட்டப் படப் போறாய் ?.. ‘
‘இல்லை சேர்.. இந்த விலைக்கு வாங்கினாலும் சாராயப் போத்தலில் ஒரு ரூபாயும்,
மைப்போத்தலில் பத்துச் சதமும் கிடைக்கும். அநியாய விலைக்கு வாங்கக் கூடாது சேர். அந்தக் காசு தங்காது.:
அவன் மீது எனக்கு ஒரு வித மதிப்புத் தோன்றுவதை உணர்ந்தேன்.
‘சரி எடுத்துக்கொள்.. உனக்கு என்ன பெயர் ? ‘
‘வேலு ‘ என்றான் அவன்.
‘அப்பா அம்மா ?.. ‘
அவன் என்னை நிமிர்ந்து பார்த்த போது, விழிகள் கலங்கியிருப்பது தெரிந்தது. தலையைக் குனிந்து கொண்ட படி, போத்தல்களைச் சாக்கினுள் அடுக்கியவாறு மெதுவாகச் சொன்னான்.
‘வவுனியாவில குடியிருப்புக்கு வந்த ஆமிக்காரர் ஐயாவைச் சுட்டுச் சாக்காட்டிப் போட்டினம். அம்மாவுக்கும் இடுப்பில சூட்டுக்காயம். நாங்கள் இங்கை ஓடி வந்திட்டம். ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி, நான் தான் உழைச்சு அவங்களைக் காப்பாத்துறன். ‘
நான் இரக்கத்தோடு அவனைப் பார்த்து ஆறுதல் கூற முயன்றேன். இந்த இளம் வயதில் இப்படியொரு சுமையா ? அவனை ஒத்த சிறுவர்கள் கவலையின்றி ஓடியாடி, படித்துத் திரிகின்ற வயதில், குடும்பப் பாரத்தைச் சுமக்க முடியாத இளம் குழந்தை.. சிட்டுக்குருவியின் தலையில் பனம் பழத்தை வைத்தது போல சுமை..இறக்கி வைக்க முடியாத சுமை.
என்ன அநியாயம் ?
‘இந்தப் போத்தல்களுக்கு நீ காசு தர வேண்டாம். ‘
அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். என் இரக்கத்தை அவன் வேண்ட வில்லை.
சாக்கினுள் அடுக்கிய போத்தல்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைக்க முயன்றான்.
‘பொறு.. ‘ என்று அதட்டினேன்.
‘சும்மா எனக்கு வேணாம் சேர்.. ‘
‘சரி, சரி காசு கொடு. ‘
என் மனதில் அவன் ஒரு படி உயர்ந்து அமர்ந்து கொண்டான்.
***************************
ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம், ‘கேற் ‘றடியில் நின்றிருந்த போது, வேலுவை மீண்டும் சந்தித்தேன். பழைய ஒரு சயிக்கிலில் வந்து என்னருகில் குதித்து இறங்கினான். சயிக்கிலின் கரியலில் ஒரு பெட்டி. அதனுள் பழைய இரும்பு சாமான்கள்.
‘என்ன வேலு, போத்தல் வியாபாரம் விட்டிட்டியா ? ‘
‘இல்லை சேர். இந்த ஏரியாவில இருந்த போத்தல்கள் எல்லாம் வாங்கிட்டன். அதனால் இப்ப பழைய இரும்பு வாங்குறன். இருக்கா சேர் ? ‘
‘அது யாருடைய சயிக்கில் ? ‘
‘கடை முதலாளியின்ரை.. வாடகை தான். இருக்கா சேர் ? ‘
‘என்ன ? ‘
‘பழைய இரும்பு, கம்பி, கல்வனைஸ்டு பைப்புகள். ‘
‘நீயே வளவுக்கை கிடந்தால் பார்த்துப் பொறுக்கி எடு. ‘
என்னால் நம்பவே முடியவில்லை. என் வளவுக்குள் கிடந்த உதவாத இரும்புப் பொருட்களைத் தேடிப் பொறுக்கி ஒரு சிறு குவியலாகக் குவித்து விட்டான். கணக்கிட்டு நூறு ரூபா தந்த போது நான் வியந்து போனேன்.
‘நீ உருப்பட மாட்டாய்.. ‘ என்று அவனைச் செல்லமாகத் திட்டினேன். ‘வேலு பவுடர் டப்பாக்கள் வாங்கிறான்கள். என்னட்டை ஐந்தாறு கிடக்கு. தரவே ? ‘
அவன் வேகமாகக் குறுக்கிட்டான்.
‘ஒருக்காலும் பவுடர் டப்பாக்களை விக்காதீங்கள் சேர். அவங்கள் அதுகளை வாங்கி, அதுகளுக்குள்ள கண்டகண்ட மாக்களை நிரப்பி, பவுடர் என விக்கிறான்கள். அநியாயம்! ‘
நான் விக்கித்து நின்றேன்.
‘இரும்பு வாங்கி முடிந்த பிறகு என்ன செய்வாய் ? ‘
‘பழைய அலுமினியம் வாங்குவேன். அடுத்த முறை வாறன். எடுத்து வையுங்க சேர். ‘
நான் சிரித்தேன்.
*************************************
மூன்றாம் தடவை அவன் வீட்டிற்கு வந்து, ஓட்டையாகி மூலையில் ஒதுங்கிக் கிடந்த அலுமினியப் பாத்திரங்களை வாங்கிச் சென்றான்.
‘எப்படி வேலு ? ‘
‘இப்ப பரவாயில்லை சேர்… பட்டினி கிடக்காமல் சாப்பிடுகிறம். அம்மாவுக்குக் கொஞ்சம் சுகம். அரிசி இடிக்கப் போறா. தங்கச்சி மாரும் தம்பியும் பள்ளிக்குப் போகினம். ‘
‘நீ போக வில்லையா ? ‘
‘நான் போகாட்டில் தான் அவை போக முடியும் சேர். ‘
அவன் புறப்படும் போது கூறினான்:
‘நாளைக்கு வாறன் சேர். உங்களிடம் விற்பதற்கு இன்னொரு பொருள் இருக்கிறது.. இப்ப என்னிடம் காசு போதாது. நாளைக்கு வாறன் ‘
‘வேலு நில்லுடா.. என்னெண்டு சொல்லு. காசில்லாட்டில் பரவாயில்லை; பிறகு தருவாய் தானே ? ‘
‘உங்கட காராய்ச்சுக்கு வெளியில ஒரு பழைய ரேடியேற்றர் கிடக்குது. செம்பு ரேடியேற்றர். நல்ல விலைக்கு விக்கலாம். ‘
‘அது கூடாதென்று எறிஞ்சு விட்டிருக்கிறன். நீ வேணுமெண்டால் எடுத்துக் கொண்டு போ. ‘
‘அது நூறு ரூபாவுக்கு மேல போகும். சேர், நாளைக்கு வந்து வாங்கிறன் ‘ என்ற படி அவன் சயிக்கிலில் தாவி ஏறி மறைந்தான்.
‘நல்ல பையன். பொறுப்பான பையன்.. ‘
மறு நாள் வந்து வாங்கிப் போனான்.
‘போத்தல் வியாபாரம், பழைய இரும்பு வியாபார்ம, அலுமினிய வியாபாரம், ரேடியேற்றர் வியாபாரம் எல்லாம் பார்த்திட்டாய்..இனி என்ன செய்யப் போறாய் ? ‘ என்று கேட்டேன். ‘ஏரியாவை மாத்தப் போறியோ ? ‘
அவன் சிரித்தான்.
‘தொழிலா இல்லை சேர் ? கொஞ்ச நாளைக்கு கண்ணாதிட்டி நகைக் கடைகளுக்கு முன்னால உள்ள வீதிகளைத் துடைத்து மண் அள்ளப் போறன். அள்ளிக் கொடுத்தால் நல்ல கூலி தருவினம். ‘
‘ஏன் அந்த மண் ? ‘
‘சிந்துற பவுன் தூள் அதுக்குள்ள கிடக்குதாம். ‘
மாலை வேளைகளில், நகைக் கடைகளுக்கு முன்னுள்ள வீதிகளை பிறஸ்களினால் கூட்டிக் குவித்து, சாக்குகளில் மண் நிரப்பி எடுத்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.
‘அது உனக்கு வேண்டாம். வேறு தொழில் பார். ‘
அவன் என்னை ஏறிட்டுப் பார்த்து விட்டு, ‘சரி சேர்.. ‘ என்றான்.
************
யாழ்ப்பாண நகரம் திடாரெனக் கதி கலங்கியது. கோட்டைப் பக்கம் இருந்து வெடித்த ஒரு குண்டின் சத்தம், நகரத்தில் நின்றிருந்த மக்களைக் கிலி கொள்ள வைத்தது. வாகனங்கள் விரைந்து மறைந்தன. கணப் பொழுதில் யாழ்ப்பான நகரம் வெறிச்சோடிப் போனது.
கடை ஒன்றினுள் பாதுகாப்பாகப் பதுங்கியிருந்த நான், வேகமாக ஓடி வந்தேன். வீதியில் எவரையும் காணவில்லை. மரக்கறிச் சந்தையில் நின்றிருந்த மரத்தின் பின்னால் ஒருவன் பதுங்குவதைக் கண்டேன். பயத்துடன் பார்த்த போது அவன் வேலு என்று தெரிந்தது. பாவம் அகப்பட்டுக் கொண்டானோ ?
‘வேலு ஓடி வா ஷெல் அடிக்கப் போறான்கள். ஹெலிகாப்டர் சத்தமும் கேட்குது. சுடப் போறான்கள் ஓடி வாடா.. ‘
‘நீங்க போங்க சேர்.. கெதியா ஓடிப் போங்க சேர்.. ‘
அடங்காத கோபத்துடன் நான் அவனை நோக்கி ஓடிப் போனேன்.
‘உனக்கென்ன விசரா.. வாடா ஷெல் அடிக்கப் போறான்கள். ஹெலியில் இருந்து சுடுகிற சன்னங்கள், ஏழு இஞ்சி நீளத்தில் தெரியுமே வா.. ‘
அவன் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுத் தலை குனிந்தான்.
‘அதுக்காகத் தான் காத்திருக்கிறன். சேர்.. ‘
நான் புரியாமல் அவனைப் பார்த்தேன்.
‘ஷெல் விழுந்து சிதறினால், அதில இருந்து சிதறுகிற பித்தளைத் துண்டுகள், கொலிக்கொப்டர் சுடுகிற வெற்றுச் சன்ன பித்தளைக் கவர்கள், இவற்றைச் சேகரித்தால் நல்ல விலைக்கு விற்கலாம்., சேர் ‘
ஷெல் என்பது என் மண்டைக்குள் சிதறுவது போல உணர்ந்தேன். தூரத்தில் ஹெலியின் சத்தம் எழுகிறது.
(சுப மங்களா- ஆகஸ்ட் 1993)
திண்ணை
|