வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘.- ஒரு பார்வை.

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

ஜெயானந்தன்.


கல்லூரிக்கவிஞன், மேடைக்கவி,சினிமாக்கவி போன்ற பலப்பரிமாணங்களைத்தாண்டி வைரமுத்து இன்று இதிகாச படைப்பாளியாக வெளிவந்துள்ளார்.

இவரது சொந்த கிராமத்து வாழ்க்கையின் அழுத்தங்களும்,வேதனைகளுமே ‘கள்ளிக்காட்டு இதிகாசமாக ‘மலர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த புத்தக வெளீயிட்டு விழாவிற்கு, சடங்காக,கலைஞர் வெளியிட- பாரதிராஜா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

பாரதிராஜா- இது அவரது மண்ணின் கதை என்று உணர்ச்சி வசப்பட்டு பேச ஆரம்பித்து, ‘கண்டிப்பாக இந்த வாழ்க்கை நாவலை. ஒரு உலகப்படமாக்குவேன் ‘என்று சபதமெடுத்தார்.

மேலும் இவரது ஆவேச பேச்சில் பல உண்மைகள் வெளிவந்தன. வைரமுத்துவின் நாவல் என்னுடைய மண்ணின் கவுச்சிவாடையும்,பாட்டன்-முப்பாட்டன் வாழ்க்கையும் இதில் தெரிகின்றது.

இதனை படிக்க முடியாது, உணரத்தான் முடியும் என்றார்.

‘அட சண்டாளா…… ‘ என்று வைரமுத்துவைப்பார்த்து, பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டார். இந்த நாவலை படித்தப்பிறகு தான், வைரமுத்துவிற்கு பல தொழில்கள் தெரியும் என்பதை நான் உணர்ந்தேன் என்று பாரதிராஜா ஒரு பட்டியல் போட்டார்.

விவசாயம் செய்வது.

சாராயம் காய்ச்சுவது.

ஆடு-கோழி திருடவது.

கோழி குழம்பு – சமையல் கலை.

சவரத்தொழில் செய்வது.

இன்று, இவன் கவிஞனாக வந்திராவிட்டால், மேலே சொன்ன எந்த தொழிலாவது செய்து பிழைப்பை நடத்தியிருப்பான் என்றார் பாரதிராஜா.

உணர்ச்ச்ிவசப்ப்பட்டு, கண்ண்ிரை அடக்கமுடியாமல் ஒரு சினிமாடைரக்டர் தொனியில் பேசிக்கொண்டே போனார்.

இந்த நாவலில் வருகின்ற முக்கிய கதாப்பாத்திரம் பேயத்தேவர். இவர் தான் வாழ்ந்த மண்ணையும்,மனைவியையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பவர். இவருக்கு இருக்கின்ற சொத்து ஒரு சிறிய ஒலைக்குடிசை, ஒரு மாடு, முருங்கைமரம்,ஆடுகள்-கோழிகள்,அடர்ந்த கள்ளிக்காடு.

அந்த கிராம மக்களுக்கு இவைகளே சொத்தாக தெரிந்தன. ஆனால், இவைகளை மீறிய ஒன்று – குடும்ப உறவு,பந்தம்,பாசம் என்ற மனித உறவு சங்கலியால் பிணைக்கப்பட்டு ,வாழ்விலும்-சாவிலும் எல்லோரும் பங்கேற்றனர் என்பதே இந்த மண்ணின் மகிமை. இதனை வைரமுத்து அற்புதமான நாவலாக படைத்துவிட்டான் என்றார் பாரதிராஜா.

எனக்கு இன்று கிடைத்துள்ள பெரிய புகழ்,பணம்,பங்களா எல்லாம் என் கிராமத்து வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ஈடாக முடியாது. இதனை வைரமுத்து வரிகளில் சொல்ல வேண்டுமானால், ‘ சீமவிட்டுச் சீமபோய் பொழைச்சாலும்,கண்டம்விட்டு கண்டம் போயிபொழைச்சாலும், பொறந்த மண்ணோட புடிமண்ணு வேணுமா இல்லைய ? ‘ என்ற வரிகளால் வைரமுத்து என் நெஞ்சில் கண்ணீர் நதியை ஒடவிட்டான் ‘ என்ற பாரதிராஜாவின் வரிகளால் ,காமராசர் அரங்கமே கைத்தட்டல் மழையால் நனைந்தது.

இந்த நாவலுக்கு உயிரோட்டமான ஓவியம் வரைந்த மணியம் செல்வத்தையும் பாராட்டினார். விழா நாயகர் கலைஞர் பேசுகையில், ‘ இந்த நாவலின் ஆரம்பம் மண்ணிலே ஆரம்பித்து, நாவல் முடியும் போதும் மண்ணிலே முடிகின்றது. இது தமிழ் நாவல் துறையில் பெரிய புரட்சியை செய்யும் என்றார். மேலும் இந்த நாவலில் வெறும் மனிதர்களை மட்டும் பேசாமல்,அந்த மனிதர்கள் வாழ்ந்த மண்ணையும் அதன் புகழையும் பேசுகின்றது. இதுபோல், நானும் என் நெஞ்சுக்கு நீதியில்

எழுதி இருகின்றேன் என்றார். வைரமுத்துவின் இந்த நாவல் வருகின்ற தலைமுறைக்கு ஒரு சரித்திர பெட்டகமாக திகழும் என்றார்.

கள்ளிக்காட்டு இதிகாசம்- கற்றாலையும்,சப்பாத்திக்கள்ளிகளும், வைரம்பாய்ந்த உடல்வலி பெற்ற விவசாய மக்களின் வாழ்ந்த கதையே தேனீமாவட்டத்து மொழிவுடாக எழுதப்பட்ட நாவலாக மலர்ந்துள்ளது.இன்று வைகை ஆற்றின் அணை மீது, இந்த நாவலின் மண் மறைந்துள்ளதை வைரமுத்து அவரது உரையில் குறிப்பிட்டார். இந்த நாவலின் வெற்றியே, படைப்பே நம்மிடம் பேசிப்பேசி உறவாடுகின்றது. படைப்பாளியைப்பற்றிய எண்ணமோ அல்லது அவரது சினிமாப்பாடலின் கவர்ச்சியோ நம்மிடம் உறவாட வரவில்லை.

இந்த நேரத்தில். கி.ராவையும்,நாஞ்சில் நாடனையும் நினைக்கத்தோன்றுகிறது. ஆனாலும் செம்மீனையும்,காண்டேகரின் ‘யயாதியையும் ‘படித்தவர்களுக்கு, தமிழில் அப்படியொரு படைப்பு வரவில்லையே என ஏங்கத்தோன்றும். சமீபகாலமாக நவீன படைப்பாளிகளுக்கு, பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘- ஒரு கற்பனா தத்வார்த்த படைப்பாக தோன்றி, நிஜவாழ்வின் எல்லைகளைக்கூட தொடமுடியாமல் போனதும், நாமெல்லாம் எதிர்பார்க்காத ஒரு சினிமாக் கவி இந்த ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தைப்படைத்து ‘ , அறிவுஜீவிகளின் மண்டையைப்பிளக்க செய்ததும், காலத்தின் கட்டாயமாகவும்,என்றுமே நிஜவாழ்வின் எழுத்துக்களே காலங்காலமாக பேசப்படும் என்பதும் உண்மையாக படுகின்றது.

***

Series Navigation

ஜெயானந்தன்

ஜெயானந்தன்