-அம்ஷன் குமார்
பாதல் சர்க்கார் நாடகம் என்று பொதுவாக அறியப்படும் வகையிலிருந்து பெரிதும் மாறுபட்ட பாதல் சர்க்கார் நாடகம் ‘பாக்கி இதிஹாஸ். ‘
இது ஏற்கனவே ‘மீதி சரித்திரம் ‘ என்ற பெயரில் தமிழில் மேடையேற்றப்பட்டிருக்கிறது. ‘பிறகொரு இந்திரஜித் ‘ தில் வரும் நாடகாசிரியன் தனது நாடகத்தில் நாடகத் தன்மையுடைய கதா பாத்திரங்கள் இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்வதைப் போல ‘பாக்கி இதிஹாஸ் ‘ நாடகத்தை காணும் பார்வையாளர்கள் செய்ய முடியாது. நாடகத்தன்மை, விறு விறுப்பு, சம்பவக் கோர்வை ஆகியன கொண்டது இந்த நாடகம். வாழ்வு பற்றிய கணிப்பை கனமற்ற நடையில் வெளிப்படுத்தும் கடைசிக் காட்சியும் இதிலுண்டு.
‘மீதி சரித்திரம் ‘ என்ற நேரான, அழகான பொருட் செறிவுள்ள தமிழ்ப்படுத்தலை ஒதுக்கிவிட்டு ‘பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான் ? ‘ என்ற கண்ணராவியான தலைப்பை, நீண்ட நாட்களுக்குப் பின் தாங்கள் மேடைக்கு வர தேர்ந்தெடுத்த இந்நாடகத்திற்கு பரீக்ஷா குழுவினர் ஏனோ தந்துள்ளனர்.
விமர்சனம் என்றால் நாடகத்தின் கதை சுருக்கத்தை ஈந்து பின்னர் அதன் இலக்கிய குணாம்சங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்ற சம்பிரதாயத்தை ஒதுக்கிவிட்டு நாடகத் தயாரிப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்தினால், சிறப்பாக தென்படுவது நடிக நடிகையரின் நடிப்பு. மூர்த்தியாக வரும் ராமானுஜம் அலாதியான நடிப்பாற்றலை வெளிப் படுத்துகிறார். உடலை விறைப்பாக உணர்ந்து கொண்டு ‘தடபுட ‘லாக நடிக்கும் ஞானிக்கு நேரெதிராக உடலின் தொய்வை பாத்திர ஈடுபாடு பிரக்ஞையின் பாற்பட்டதான ஆற்றலாக மாற்றுகிறார் ராமானுஜம். வசந்தியாக நடிக்கும் ப்ரீதம் வீட்டிற்குள் ஒரு குடும்பத் தலைவி எவ்வாறு இயல்பாக நடப்பாளோ அதே போன்ற நடையுடன் உலவுவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்தாலும் ப்ரீதம் கச்சிதமான அசைவுகள் தருகிறார். மூர்த்தியின் நண்பராக வரும் நடிகர் துரை மறந்து போய் பையை வைத்துவிட்டு போய்விட்டாலும் ப்ரீதம் அதை குறையாக்கிவிடாது ‘உங்கள் நண்பர் பையை வைத்துவிட்டு போய்விட்டார் ‘ என்று சாமர்த்தியமாக வசனம் பேசி சமாளிக்கிறார்.
நாடகத்தில் நிகழ்ச்சிகள் மாறினாலும் களன் மாறுவதில்லை. அதே வரவேற்பரை, நாடகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. அதில் தவறில்லை. ஆனால் கற்பனை காப்பாற்றப்படவில்லை. உதாரணமாக, மூர்த்தி வீட்டிலுள்ள வரவேற்பறையில் உள்ள புத்தக அலமாரியிலிருந்து வேறு காட்சியில் கதை மாற்றத்திற்கேற்ப பாலுவின் மாமனார் ஒரு பருமனான புத்தகத்தை எடுத்துப் போகிறார். அந்தப் புத்தகம் எடுத்து செல்லப் பட்டது செல்லப் பட்டது தான். பின்னர் மூர்த்தியின் வீடாக மீண்டும் காட்டப்படும் பொழுதும் அந்தப் புத்தகம் ஷெல்ஃபில் இடம் பெற்றிருக்கவில்லை. மாமனார் பாலுவின் வீட்டிலிருந்து மட்டுமின்றி மூர்த்தியின் வீட்டிலிருந்தும் புத்தகத்தை எடுத்துப் போய்விட்டதாக எண்ணங் கொள்ள வேண்டியுள்ளது.
எல். வைத்தியநாதன், எல். சங்கார் ஆகியோரின் இசைப் பகுதிகள் நாடகத்தில் வரும் சிக்கலையோ அவதியையோ அடிக்கோடிடும் வண்ணம் அமையவில்லை. நாடகம் நேரம் ஆக ஆக தொய்வினை பற்றிக் கொள்கிறது. திரும்பத் திரும்ப மேடையேற்றுவதன் மூலம் இதன் குறைகள் நிவர்த்திக்கப்படலாம்.
பின் குறிப்பு
மெலிதாக நகைச்சுவை தலையெடுக்கும் இடங்களில் கூட பார்வையாளர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். நாடகம் என்றால் பிரதானமாக சிரிப்பதற்கான நிகழ்ச்சி என்று அமெச்சூர் நாடக கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள புரையோடலான பாதிப்பு எல்லா தரப்பு பார்வையாளர்களையும் இவ்விதம் நடந்துக் கொள்ள வைக்கிறது.