பாவண்ணன்
(நீர் விளையாட்டு – சிறுகதைத் தொகுப்பு- பெருமாள் முருகன் , அகரம், 15பி-1,சரவணா காம்ப்ளக்ஸ், வெள்ளப் பண்டாரத் தெரு, கும்பகோணம்-612001)
ஒரு கதைக்குள் நீளும் சுரங்கப் பாதைகள் வாழ்வை நோக்கி அழைத்துச் செல்பவை. இருள் மண்டியும் மக்கிய வாசம் அடர்ந்தும் மறைந்திருக்கிற இப்பாதைகளை அடையாளம் காணவல்லவனே நல்ல வாசகன். அவன் மனமே அச்சுரங்கத்தில் இறங்கிச் சரசரவென்று நடைபோடத் தொடங்கும். தன் முன்னால் வழியை மறைத்துக் கொண்டிருக்கும் ஒட்டடைகளையும் சிலந்தி வலைகளையும் எதிரில் பறந்து மோதும் வெளவால்களையும் எளிதில் தாண்டி வாழ்வின் மணத்தை நுகர்ந்து விடும். இச்சுரங்க வழிகள் கதைக்குள் இல்லையென்னும் போது அது வார்த்தைகளின் குவியலாக மாறிவிடுக்ிறது. வாழ்வில் கண்டதையும் கேட்டதையும் பதிவு செய்கிற ஒரு ஆவணமாக மட்டும் சுருங்கி விடுகிறது. ஆவணமாக இருப்பதுதான் நல்ல கதை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. இந்த வாதத்தை ஒத்துக் கொள்வோமெனில் தினந்தோறும் செய்திகளை ஆவணப்படுத்தும் செய்தித்தாளுக்கும் இலக்கியத்துக்கும் வேறுபாடே இல்லை என்ற முடிவுக்கே வரமுடியும். இன்றைய நவீன கதையாசிரியன் செய்தி ஆவணக்காரன் அல்லன். அவன் மனத்தை ஏராளமான சந்தேகங்கள் அரித்தபடி உள்ளன. தன்னை ஆவணப்படுத்த முயலும்போது விழும் தன் சித்திரங்களே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக இருப்பது அவனுக்கு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஒருவனின் சித்திரமே கணத்துக்குக் கணம் மாறும் போது கோடி கோடி கலவைகளில் மாறும் உலக மக்களின் சித்திரங்களை மாறாத ஒன்றாக கதைக்குள் எப்படி வடிப்பது ? இக்குழப்பமும் கேள்வியும் நவீன கதையாசிரியர்களை வதைக்காத நாளில்லை. இந்த வதை தொடர்ந்து நிகழ்ந்ததால்தான் தமிழ்ச் சிறுகதைகளின் உள்ளடக்கமும் உருவமும் தொண்ணுாறுகளில் மாறத் தொடங்கின. குறிப்பாக எண்பதுகளிலும் தொண்ணுாறுகளின் தொடக்கத்திலும் தம் கதைத் தொகுப்புகளை வெளியிட்ட பல படைப்பாளிகள் தொண்ணுாறுகளின் பிற்பகுதியில் முற்றிலும் வேறான திசையில் பயணத்தைத் தொடர்ந்தார்கள். திருச்செங்கோடு என்னும் முதல் தொகுப்பிலிருந்து முற்றிலும் புதிய வகையிலான கதைகளைப் பெருமாள் முருகன் 1995 முதல் எழுதத் தொடங்கி இத்தொகுப்பை வெளியிட்டிருப்பதை இப்பின்னணியில் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.
1995 முதல் 2000 வரையிலான இடைவெளியில் பெருமாள் முருகன் எழுதிய 21 கதைகளின் தொகுப்பு இது. இத்தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் அடிப்படையில் இழையோடுகிற ஓர் அம்சத்தைச் சொல்லால் வடிக்க முனையும் போது மனத்தில் வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும் என்கிற எதிர்நிலை உணர்வுகள் எழுகின்றன. மனத்தை சீட்டுக்கட்டுகளை வாங்கி அடுக்குகிற ஒரு பெட்டி என உருவகித்தால் வாழ்வு ஒவ்வொரு கணத்திலும் வெற்றி என்னும் சீட்டுகளையும் தோல்வி என்னும் சீட்டுகளையும் வீசிக் கொண்டே இருக்கிறது. ஒரு சீட்டைக் குனிந்து கைநீட்டி எடுப்பதற்குள் இன்னொரு சீட்டு இறங்கிவிடுகிறது. மேலும் மேலும் சீட்டுகள் விழுந்தபடி உள்ளன. வெற்றிச் சீட்டு விழும்போது மனம் எக்களிக்கிறது. அடுத்த நொடியே தோல்விச் சீட்டு விழுந்ததும் கூனிக் குறுகி அவமானத்தால் சிறுத்து விடுகிறது. பெரும்பாலான கதைகளில் வேறு வேறு பின்னணியில் இதே எதிர் உணர்வுகளைப் பெருமாள் முருகன் பொருத்திப் பார்க்க விழைவதாகத் தெரிகிறது.
தொகுப்பின் முதல் கதையிலேயே இந்த உணர்வுகளின் அடுக்கு தொடங்கி விடுகிறது. நகரச் சந்தடியிலிருந்து தப்பிக்கவும் நல்ல காற்றை நாலு இழுப்பு இழுக்கும் சந்தோஷத்துக்கவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு நகரத்தைத் தாண்டிச் செல்கிறவன் மெல்ல மெல்ல சந்தடியற்ற சூழலில் அலுப்பை உணர்கிறான். யாராவது ஒருவன் அல்லது ஒருத்தி எதிர்ப்பட்டதும் அன்பாலோ அல்லது வம்பாலோ எதிர்கொள்ள விழைகிறது அவன் மனம். அவன் மனத்திலிருந்து விரிவது சிறகுகள் அல்ல, கத்திகள். அது குத்திக் கிழிக்க அல்லது வெட்டுப்பட அசைந்தபடி இருக்க அவன் பயணம் தொடர்கிறது. எதிர்பாராத ஒரு கணத்தில் வேறு யாரோ ஒரு சைக்கிள்காரன் பயணத்தின் ஏதோ ஒரு புள்ளியில் அகப்படுகிறான். அவன் கத்திகளின் விளிம்புகள் கூர்மை கொள்கின்றன. தாக்க நீள்கின்றன. வெற்றி வரும்போது மனம் எக்களிக்கிறது. தோல்வி வரும்போது சிறுத்துவிடுகிறது. மனம் எவ்வளவு பெரிய பாசாங்குள்ள மிருகம் என்று தெரிய வரும்போது அதிர்ச்சியாக உள்ளது. கதையின் சுரங்கப் பாதைகள் இந்த இடத்தில்தான் நீள்கின்றன. வாழ்வைப் பற்றிய கதையாக இது மாறியிருப்பதை இப்பாதை வழியாக வரும்போது புரிந்து விடுகிறது. வெற்றியே வாழ்வு என்று புரிந்தாலும் தோல்விகளையெல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகள் என ஏதேதோ சொல்லி மனத்தைச் சமாதானப்படுத்தினாலும் வெற்றியை மட்டுமே மனம் விரும்புகிறது என்பதே உண்மை. காரணம் வெற்றி என்பது அகங்காரம். அகங்காரத்தின் இருப்புக்கு ஒரே அடையாளம் வெற்றி மட்டுமே. வெல்லாத சமயத்தில் எதையாவது இட்டுக்கட்டிக் காயத்திலிருந்து கசியும் குருதியைத் துடைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் மனம் எப்போதும் வெற்றியிலேயே குறியாக இருக்கிறது. அப்படியென்றால் தோல்விகளை ஏற்றுக் கொள்ளச் சொன்ன பழமையையும் மரபையும் தத்துவங்களையும் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகக் காணச் சொன்ன அறிவுரைகளையும் என்ன செய்வது ? இந்த அறிவுரைகளிலிருந்து நவீன மனிதன் பெற ஒன்றுமில்லையா ? இந்தப் புள்ளியை வந்தடையும் போதுதான் அறிவுரைகளிலிருந்து நவீன மனிதன் எவ்வளவு தொலைவுக்கு ஒதுங்கியிருக்கிறான் என்பதையும் அவன் மனத்தைச் சந்தேகக் கறையான்கள் எப்படி அரித்துத் தின்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடியும். பெருமாள் முருகன் ‘வேட்கை ‘ எனக் குறிப்பிடுவது வெற்றிக்கான வேட்கை. அகங்காரத்தைத் தக்க வைத்துக் கொள்கிற வேட்கை.
‘இசை நாற்காலி ‘ கதையில் நாற்காலியை முன்வைத்து கணவன் மனைவிக்குள் நிகழ்வதும் இந்த வெற்றி தோல்வி ஆட்டம்தான். ‘குரல்கள் ‘ கதை சீட்டின் பெயர்களையும் எண் மதிப்பையும் தன்னிடத்திலிருந்து கற்றுக் கொண்டவனே தன்னைத் தோற்கடிப்பதைத் தாங்காதவன் கதையாக நீண்டு வென்றவர்களின் எக்காளக் குரல்களாக மாறுகின்றன. ‘நீர்விளையாட்டு ‘ கதையில் சித்தப்பா மேலேறி வருவதும் சின்னப் பிள்ளைகள் கிணற்றுக்குள் மீண்டும் மீண்டும் தள்ளத் தள்ளி விழ்த்துவதுமாக வெற்றி தோல்வி விளையாட்டு நீள்கிறது. ‘உள்நுழைந்த மூஞ்சூறு ‘ கதையிலும் மூஞ்சூறுக்கும் அவனுக்கும் நுட்பமான போட்டி உருவாகி விடுகிறது. ‘காக்கை ‘ கதையில் தொடர்ந்து விரட்டிவந்து கொத்திவிட்டுப் போகிற காக்கையின் வெற்றியும் மனிதனின் தோல்வியும் திறமையாகச் சித்தரிக்கப்படுகிறது. காக்கை ஒரு பிதுரார்ஜித உறவின் படிமமாக மாறி வேறொரு நிலையில் கதை விரிந்தாலும் அந்த வெற்றி தோல்வி ஆட்டத்தின் ஈர்ப்பு குறையவில்லை. ‘எல்லை ‘ கதையில் தப்பிப் போன மாட்டைப் பிடிப்பதுவும் ‘கோடித்துணி ‘ கதையில் பாட்டிக்கு ரவிக்கை போடுவதும் கூட வெற்றி தோல்வி ஆட்டமாக மாறிவிடுகிறது.
ஒரு நவீன மனிதனின் உள்மன விழைவைச் சித்திரமாக்கிய விதத்தில் பெருமாள் முருகனின் வெற்றி முக்கியமானது என்றே தோன்றுகிறது. முழுத்தொகுப்பிலும் ஒரே வகையிலான சொல்முறை சற்றே அலுப்படைய வைக்கிறது. மேலும் உணர்வெழுச்சி மிக்க ஒரு தருணத்தைத் தருக்கத்தின் துணைகொண்டு படிமமாக்கிப் பிறகு அந்த உணர்வோடு பொருத்தும் தொழில்நுட்பம் தொகுப்பின் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை ஒரே மாதிரியாக இருப்பதுவும் அலுப்படைய வைக்கிறது. முதல் ஒன்றிரண்டு பிம்பங்களைப் படிக்கும் போது உவகையாகவே இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் அதே தளத்துக்குக் கதை நகர்ந்து வந்து செல்லும் போதுதான் அந்த அலுப்பு வருகிறது.
—————————————————-
paavannan@hotmail.com
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- கிறிஸ்மஸ் விடுமுறை
- நீ வருவாயா ?
- அன்புடன் இதயம் – 2
- மின்சாரமில்லா இரவு
- நாடகமேடை
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- பின்னல்
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- நீளப் போகும் பாதைகள்
- அவதூறுகள் தொடாத இடம்
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
- சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்
- எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்
- கடிதங்கள் – ஜனவரி 8,2004
- வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது
- தமிழ் ஒழிக!
- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு
- ஒளிரும் காரிருள்
- பொங்கலோ பொங்கல்
- நேற்று, இன்று, நாளை
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- மின் ஆளுகை (E-Governance)
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- விடியும்! -நாவல்- (30)
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- பொங்கலைத் தேடி…
- நீ ஏன்…
- புரியாத புதிது
- கவிதைகள்
- வானவில்
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- பரவச கவிதைகள் சில
- நிழல்கள்
- மூன்று
- இரவின் அழகு
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- வாருங்கள்