தேவமைந்தன்
இந்தியப் பழங்குடிகளின் நலத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பிரித்தானிய வெள்ளையர் வெர்ரியர் எல்வின். ‘புக்வென்சர்’ நிறுவனத்தின் வாசகர் வட்ட வெளியீடாக சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் அவர் நம் நாட்டுப் பழங்குடி மக்களோடு கொண்டிருந்த தொடர்பு குறித்தும் அன்புறவு பற்றியும் ஓர் அருமையான நூல் வெளிவந்தது. சிட்டியும் சிவபாதசுந்தரமும் எழுதியது என்று ஞாபகம். இந்தக் கட்டுரையின் பார்வை நூலாக அதை நான் கொள்ளவில்லை. வெர்ரியர் எல்வினின் எழுத்துகளைக் கொண்டே அவரை அறிய முற்பட்டேன். ஆகவே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் 1964இல் வெளியிட்ட அதன் மூல நூலாகிய ‘The Tribal World of Verrier Elwin – An Autobiography’ என்பதையே ஆதாரமாகக் கொண்டேன். தன்னைப் பற்றி மிகவும் வெளிப்படையாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் வெர்ரியர் எல்வின், கடைசியில் மொழிந்திருப்பது, ஒரு சுயசரிதையில் தரவுகள்(datas) எந்த முறையில் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முறையியலாக(methodology) அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். பரம்பரை பிரித்தானிய வெள்ளையரும், கிறித்துவ மத போதகத் தலைமையை ஏற்றிருக்க வேண்டியவருமான வெர்ரியர் எல்வின், மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்த மறுகணம் மிகப்பெரிய மாற்றத்துக்கு உட்பட்டது மட்டுமல்லாமல், தான் கனவிலும் கூடக் கருதியிருக்க முடியாத இந்திய தேசத்துக்கு வந்து, இந்தியக் குடிமகனாகவே மாறிய கதையை இவ்வளவு சுருக்கமாக 2½ பக்கத்தில் எழுத முடிந்தது ஒரு வியப்பு. இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபொழுது ‘பழங்குடி நல அதிகாரி’யாக(Tribal Welfare Officer) வெர்ரியர் எல்வின் பணியமர்த்தம் பெற்ற செய்தி இதில் இருக்க வழியில்லை. நேரு அவர்களின் சுயசரிதையில்(ஆங்கில மூலப்பதிப்பு) இவரைக் குறித்து வரும் இரண்டு இடங்களிலும் காந்தியடிகளின் அடிப்படைத் தன்மை, மத்திய கால கத்தோலிக்க குரு(‘medieval catholic priest’)வின் தன்மையை ஒத்திருக்கின்றது என்று இவர் சொன்னதும்; காந்தியடிகளின் சத்தியாகிரகப்போர்தான் உலக வரலாற்றிலேயே உன்னதமான சாத்வீகமான போராட்டமென்று மொழிந்ததும் பதிவாக்கம் பெற்றுள்ளது.
வெர்ரியர் எல்வின், தன்னைக் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதியது ஷில்லாங்கில்; 1963 ஜூலையில். அவர் கருத்தோட்டத்திலேயே இதைப் பார்ப்போம்.
“இது ஒரு கதை. பிரிட்டன், இந்தியா என்ற இருவேறு உலகங்களுக்கும் இடையில் பல ஆண்டுகள் ஊடாடி வாழ வாய்த்தவனின் கதை. அவ்வாழ்வினால் உருவான அனுபவத்தின் விளவாக “கிழக்கும் மேற்கும் ஒரே இதயத்தின் மாற்றுத் துடிப்புகளாகவே எப்பொழுதும் இயல்பாக ஒலிக்கக் கூடியவை” என்பதைத் தான் புரிந்துணர்ந்து கொண்டதை, ஆரவாரமில்லாமல் கூற விழைபவனின் கதை!” என்று தொடங்குகிறார் வெர்ரியர் எல்வின்.
“என் வாழ்க்கைப் பயணம், ஓர் ஆழமான, மதநம்பிக்கை மிக்க, கிறித்துவ மதப் பரப்புநரின் இல்லத்திலிருந்து தொடங்கியது. நவீனமானதும் கத்தோலிக்கம் சார்ந்ததுமான ஆக்ஸ்ஃபோர்டுக்குச் சென்றது. காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் ஊடாக இந்தியாவின் பழங்குடிகள் வாழ்ந்த குன்றுகளை அறிந்து கொண்டு தேடிப் போனது.
இதற்குள் என் நோக்கங்களிலும் வாழ்க்கை வழிகளிலும்தாம் எத்தனை எத்தனை மாற்றங்கள்!
ஆக்ஸ்ஃபோர்டில் ஓர் ஆங்கிலிக்கன் பாதிரியாக ஆகி இருக்க வேண்டியவன், கிட்டத்தட்ட மதத் தலைவருள் ஒருவனாகவே மாறிக் கொண்டிருந்தவன், இந்தியா என் கற்பனை ஆற்றலைக் கவர்ந்து கொண்டபின் உலகின் இன்னொரு பாதிக்கே பயணப்பட வேண்டி வந்தது.
கொஞ்ச காலம் போராடி, சர்ச்சை விட்டு வெளியேறினேன். ஆனாலும் அங்கு நான் பெற்றுக் கொண்ட கல்வி/கற்றல் வாழ்க்கையை விட்டு மட்டும் என்றுமே நான் வெளியேற விரும்பியதில்லை.
காந்தியோடு நான் கொள்ளும்படி வாய்த்த தொடர்பு, இந்திய மண்ணுடன் என்னை மணம் புரிய வைத்தது. இன்றோ, நான் இந்தியக் குடிமகன். ஆகப் பெரியனவும் பழையனவும் ஆன பெருநகரங்களை நான் நேசிக்கிறேன். என்றபொழுதும், எனக்கு வாய்த்துள்ள வாழ்க்கை – தொலைவானவையும் அறிவால் வளராதனவையுமான சிற்றூர்களில் மட்டுமே என்னைத் தொடர்ந்து வாழ வைக்கிறது. பழங்குடிச் சமூகத்துக்குள்ளேயே மணமும் கொண்டேன். பதிலுக்கு அவர்கள் ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் எனக்கு வழங்கினார்கள். இந்தியாவில் நான் கண்டு கொண்டவை – கவலைகளை மட்டுமல்ல; பேரானந்தத்தையும்தான். ஏமாற்றங்களை மட்டுமல்ல; மனநிறைவையும்தான். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நான் தெரிந்து தெளிந்தது, ‘உண்மையல்லாதவற்றிலிருந்து உண்மைக்கு என்னை இட்டுச் செல்!’ என்ற பிரார்த்தனைக்கு ஏற்றதொரு விடையையே!
இந்த மாற்றங்களெல்லாம் என் வாழ்வில் நடந்தேறிய பின்னும், வாழ்வின் ஊடாக ஓர் உறுதியான இழை ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அந்த இழை, நிலையானதொரு தத்துவம் – வாழ்க்கையைப் பற்றியது. மரபு அடிப்படையிலான இறுகிய நம்பிக்கையின் நோக்கங்களையும் தாண்டி நீடித்தது. குழந்தைப் பருவத்தில் நான் வாழ்ந்த நகர வாழ்க்கை தரும் நன்மைகளின்மேல் அவ்வளவாக எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. பள்ளியில் நான் கற்க வாய்த்த வொர்ட்ஸ்வர்த்தின் படைப்புகள், இந்த நகர/நாகரிக உலகு வழங்கும் உயர்ந்த பரிசுகளுக்கும் மேலாக, எவர் கண்களுக்கும் இதுவரை எளிதில் அகப்படாத கருவூலம் ஒன்று எங்கோ இருக்கிறது என்பதை உறுதியாக எனக்குக் கற்பித்தன. மேலும், சிற்றூர்ப் புறங்களில் வொர்ட்ஸ்வொர்த் கண்டு மகிழ்ந்து மனம் நிரம்பிய இயற்கையின் எழிலையும் அவ்வூர்களில் வாழ்ந்த எளிமையான மக்களின் கள்ளம் கபடமற்ற அன்பையும் என் இளம் மனதில் அழுத்தமாகப் பதித்தன.
ஆக்ஸ்ஃபோர்ட் வாழ்க்கையில் ‘நியோ பிளாட்டானிக்’# வழிமுறைகளில் சிந்திக்கும் பழக்கத்தை நான் வளர்த்துக் கொண்டேன். இதன் மூலம் ஒருவர், உள்ளாழ்ந்த வலிமையை எப்பொழுதும் போதிய இருப்பில் வைத்துக் கொள்ள முடியும். விளைவாக, புறச் சூழல்கள் தன்னை அறவே பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இந்தச் சிந்தனை முறையால்தான், பிற்காலத்தில் நான் சந்திக்க நேர்ந்த சிற்றூர் வாழ்க்கையின் தனிமைப்படுத்தலையும் துன்ப துயரங்களையும் எளிதில் சகித்துக் கொள்ள முடிந்தது. இந்தியாவுக்கு நான் வந்த தொடக்க ஆண்டுகளில், குறிப்பாக காந்தியின் உடன்படிக்கைகளின் காலகட்டங்களில், ஏற்றுக்கொள்ள மிகவும் சரியானதே என்றாலும் அனுபவிக்க மிகவும் கடினமானதும் சிரமமானதுமான அனுபவத்தைக்கூட ஏற்றுக்கொள்ளக் கற்பிக்கும் பயிற்சியாகவே அவை விளங்கின. இப்பொழுதுங்கூட, முன்புபோல் சிற்றூரில் என் இல்லம் இருக்க முடியாமற்போயிருக்கும் நிலையிலுங்கூட, பழங்குடிகளிடையில்தான் என் நேரத்தின் பெரும் பகுதியையும் சிந்தனையையும் செலவழிக்கிறேன்.
இந்தியாவைக் குறித்து நான் மிகவும் பெரிதாகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும் என் வேர்களும் மூலங்களும் எந்தப் பண்பாட்டிலிருந்து வந்தனவோ அந்தப் பிரிட்டனைக் குறித்தும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் அதிகார மாற்றம் என்பது உலக வரலாற்றில் ஆட்சியாளர்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சரிக்கட்டுதல்களுள் ஒன்று” என்று குறிப்பிட்டிருக்கிறார்…..ஆர்தர் கோஸ்லர் சொன்னதோடு நான் உடன்படுகிறேன். அவர் சொன்னார்: “இறந்த காலத்தில், ஒவ்வொரு பேரரசின் வீழ்ச்சியும் அசிங்கமானதும் பெருங்கேடானதுமான நிகழ்ச்சி ஆனது. வரலாற்றிலேயே முதன்முதலாக, ஒரு பேரரசு படிப்படியாகத் தன் கெளரவமும் நயமும் கரைந்து குலைந்து போதலைக் காண்கிறோம். இந்தப் பேரரசின் எழுச்சியைவிட அறிவூட்டுவது இதன் வீழ்ச்சியின் கதையே!..”
ஐரோப்பா எனக்குள் ஆழமாக உயிர்த்திருக்கிறது; ஆனாலும் இந்தியா அதை விடவும் ஆழமாக என்னுள் இருந்து செயல்புரிவதை இந்தப் புத்தகத்தை நான் உருவாக்கும் ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன்..இதில் வரும் மிகப் பெரும்பாலோர் இந்தியர்களே! இந்திய இல்லத்தரசி, இந்திய இல்லம், இந்திய ஈடுபாடுகள், பெரும்பாலான இந்திய நண்பர்கள், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியப் பழங்குடிகளின் மேல் எனக்குள்ள ஈர்ப்பும் ஆர்வமும் மிக்க சார்பு – அல்லாமல் இந்தப் புத்தகம் வேறெதையும் கொண்டிருக்கவில்லை…..
என் வாழ்க்கையை முழுமையான கண்ணோட்டத்துடன் தெரிவிக்க முயன்றிருக்கிறேன். எனக்கு என் வாழ்வில் எது எது முதன்மையாகப் பட்டதோ அது அதற்கே அழுத்தம் கொடுத்திருக்கிறேன்.
‘டைம்ஸ் லிட்டரரி சப்ளிமெண்ட்’டில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டவை:
“ஒவ்வொரு சுயசரிதையும், தவிர்க்க இயலாதபடி, விடுபாடுகள் கொண்ட கட்டுரையாகவே உள்ளது.
நவீன உலக வாசகர்கள், சுய-உயர்குறிக்கோளமைந்த ஆளுமையாளர்களுடன் இனியும் முன்போல் உடன்பாடு கொண்டிருக்க விரும்பவில்லை.
ஒவ்வொரு சுயசரிதையும் இலக்கிலிருந்து மிகமிக நகர்ந்த ஒன்று அல்ல — ஆனால், துறக்கமே! அருள்கனிந்து, மிகவும் நெருக்கமாகவும் உள்ளதும் அல்ல..
அவர்கள் முழுமையானதொரு மனிதரையே(சுயசரிதையின் மூலம்) எதிர்பார்க்கின்றனர்.”
***
இதில் உள்ள தொல்லை என்னவென்றால், சுயசரிதை எழுதுபவருக்கும் அதன் வாசகர்களுக்கும் இடையில் எது எது முதன்மையானது என்பதில் அவர்கள்ஸ் கொண்டுள்ள வெவ்வேறான கருத்துகளே. “எது கறுப்பு?” என்பதில் கூட கருத்து வேறுபாடு உள்ளது..
சில சமயங்களில் என் பாதைகளில் கருநிழல் வீசிய மேகங்களைக் குறித்தும் இலேசாகத்தான் சுட்டியுள்ளேன். மிகுந்த விளக்கங்களை அவற்றின் பொருட்டு நான் தருவதைத் தவிர்த்திருக்கிறேன். அவை மிகவும் இரசிக்கத்தக்கவை என்று நான் கருதவில்லை. வாசகர்களுள் சிலர் பொறாமைப்படவோ, ஏன் பாராட்ட விரும்பவோ, மற்றும் சிலர் நிந்திக்கவோ கூடிய செய்திகளையும் கூட, அவை என் சம்பந்தப்பட்டவை என்பதனால் குறிப்பிடத்தான் வேண்டும் என்று நான் கருதவே இல்லை. ஏனெனில், அவை ஒருவரின் அன்றாடச் சொல்லாடல்களின் ஊடே நிலவும் மிகக்கூரிய மோனத்தின் எல்லைச் சுவர்களைத் தாழச்செய்து விடும். முழுமையாக நோக்கினால், என் வாழ்க்கை வெற்றிகரமானது என்று நான் சொல்லாவிட்டாலும்(காரணம், நான் வெற்றி என்ற அடிப்படையில் சிந்தித்துப் பார்த்ததில்லை) அது மிகவும் போற்றத்தக்கது. அது மட்டுமல்ல, உள்ளாழ்ந்த மகிழ்ச்சியின் சித்திரம் என்பது வெறும் ஓர் ஆளுமை அன்று; ஆனால் அதுவே எதார்த்தமாக, முழுமை வாய்ந்த மனிதனைக் காட்டுவது.
ஒத்துக் கொள்கிறேன். நான் எல்லாவற்றையும் இதில் கொட்டி விடவில்லை. என் வாழ்வில் என்னுடன் தொடர்பு கொண்ட எல்லோரையும் விட்டு விடாமல் சுட்டி விடவுமில்லை. தோழமை மிக்கவனாகவும் பாசம் மிக்கவனாகவும் நானிருப்பதால் நண்பர்களை மிக அதிகமாகப் பெற்றிருக்கிறேன் என்பது என் எண்ணம். ஆனால் ஒரு சுயசரிதை என்பது விரிவானதொரு பெயர்ப்பட்டியல் அல்லவே! அதனால்தான், எனக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்று கருதத் தக்கவகையில் என்னுடன் பல சமயங்களில் தொடர்பு கொண்டிருந்த பலரைக்கூட நான் குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன்.
அவர்கள் என்னைப் பொறுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர்களை நான் மறக்கவே இல்லை. பின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டி இருந்தது? சிறப்பாக ஒன்றுமில்லை.. நூலாசிரியன் ஒருவன் தன் நூல் வசதியாக வாசிக்கப்பட வேண்டும் என்று விழைந்தால், அதை மிகவும் பருமன் உள்ளதாக ஆக்கி விடக் கூடாதல்லவா.. அதனால்தான்.”
****
# neo-Platonism = இதன் மையக் கோட்பாடு, ‘இறைமையின் முத்திற மெய்ம்மை’[மூலமுதல், மனம், ஆன்மா] ஆகும். இயாம்ப்ளிக்கஸ் என்பவரால் தொடங்கப்பட்ட நியோ-பிளாட்டானிசம், மூன்று கூறூகளுக்கு முதன்மை கொடுக்கிறது: 1.இயல் கடந்த ஆய்வு விளக்கம், 2.திட்டவட்டமான விவிலிய ஏட்டு விளக்கம், பிளேட்டோவின் மற்றும் வேறு ஏடுகளின் திட்டமான விளக்கம்,3.அறிவு சார்ந்த தியானத்துக்குப் பதிலாக மனித இயல் கடந்த சமய அடிப்படையிலான திடநம்பிக்கை. தோராயமாக ஆயிரமாண்டுகள்(250 முதல் 1250 வரை) இது ஐரோப்பியத் தத்துவத்தில் தலையோங்கி இருந்தது. மறுமலர்ச்சிக் காலத்தில் ஃபிசினோ மற்றும் பிகோ என்பர்களால் புத்துயிர் கொடுக்கப்பெற்று 19ஆம் நூற்றாண்டில் அதன் ஆதிக்கம் தொடர்ந்தது.
****
karuppannan.pasupathy@gmail.com
- காதல் நாற்பது (14) – கட்டு மீறிய காதல் !
- அன்புடன் கவிதைப் போட்டி
- இலை போட்டாச்சு! – 21- தவலை வடை
- பெரியபுராணம் – 125 – 37. தண்டி அடிகள் நாயனார் புராணம்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 11
- வெர்ரியர் எல்வின்: ‘இந்தியப் பழங்குடிகளின் நலத் தந்தை’ தன்னைப் பற்றி எழுதியவை
- நாகூர் ரூமியின் இலியட் குறித்து…
- செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் ஆழ்ந்த பனித்தளக் கண்டுபிடிப்பு (மார்ச் 15, 2007)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:5)
- அணுசக்தி நூல் வெளியீடு
- சிலேடை வெண்பாக்கள்!
- மன்னி – மரம் – மது
- இசைவட்டு வெளியீட்டு விழா
- கடித இலக்கியம் – 50 – தொடர் முடிவு
- எஸ்.வி.வி. என்னும் எஸ்.வி.விஜயராகவாச்சாரியார்
- தங்கப்பாவின் கவிதையுலகம் – துலக்கமும் ஒடுக்கமும்
- மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு
- புத்தக விமர்சனம் கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- தைத்திருநாள் விழா கவியரங்கம் – 4
- இலை போட்டாச்சு! – 22 – பிசி பேளா ஹ¥ளி பாத் (சாம்பார் சாதம்)
- குட்டிதேவதை
- பொம்மைஜின்களின் ரகசியம்
- மீட்டும் இசை / மோட்சம் / மயக்கம்
- தீக்குளித்தல் பற்றிய குறிப்பு!
- சுடரின் மௌனம்
- இடம்பெயராப் பெயர்வு
- இன்குலாப் ஜிந்தாபாத் –
- மடியில் நெருப்பு – 30
- நீர்வலை (16)
- பாடங்கள் பலவிதம்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் இரண்டு
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் மூன்று: சூறாவளி!