ஆர். சந்திரா.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி : இரண்டு கோப்பை
பெரிய வெங்காயம் – இரண்டு
நறுக்கிய காய்கறி : ஒரு கோப்பை
(கடையில் வெட்டி ஆயத்தமாய் உள்ள காய்கறிகளையும் பயன் படுத்தலாம்.)
வெண்ணெய் – அரைக் கட்டி (அல்லது நெய் 5 மேஜைக் கரண்டி)
எண்ணெய் – 5 மேஜைக் கரண்டி
பச்சை மிளகாய் – 4 அல்லது 5
புதினா – சிறிது
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
பட்டை கிராம்பு – தாளிப்பதற்கு சிறிது
ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு – அரைத்தது ஒரு தேக்கரண்டி
(அல்லது இஞ்சி சிறிதும் பூண்டு நான்கு பற்கள் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிது
எலுமிச்சை பழம் : அரை மூடி
செய்முறை:
1. வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் நன்றாகப் பொடியாக நறுக்கவும்.
2. பாசுமதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து இரண்டு முறை கழுவின பிறகு வடிகட்டி வைக்கவும்.
3. அடி கனமான அல்லது T-FAL போன்ற ஒட்டாத பாத்திரத்தை அல்லது குக்கரை அடுப்பில் வைத்து கால் கட்டி வெண்ணெய் அல்லது இரண்டு மேஜைக் கரண்டி நெய்யுடன் இரண்டு மேஜைக்கரண்டி என்ணெயையும் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டின மாசுமதி அரிசியை சிறிது நேரம் வறுக்கவும். வறுத்தபின் எடுத்து விட்டு, அதே பாத்திரத்தில் மீதி வெண்ணெய் (அல்லது நெய்) , எண்ணெய் இவற்றைச் சேர்த்து சூடு படுத்தவும். அதில் பட்டைக் கிராம்பைச் சேர்த்துத் தாளிக்கவும்.
4.தாளித்தபின்பு, அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியபின் இஞ்சி பூண்டு (அரைத்தது அல்லது நறுக்கியது) சேர்த்து மீண்டும் வதக்கவும்.
5. பிறகு புதினாவை (விருப்பப் பட்டால்) சேர்க்கவும்.
6. காய்கறியை இதில் சேர்த்து வதக்கவும்.
7. கரம் மசாலா போட இதுவே நல்ல சமயம்.
8. வதக்கல் முடிந்தது. இப்போது அரிசியைச் சேர்க்கலாம்.
9. அதில் தண்ணீர் மூன்று கோப்பை சேர்த்து, உப்பு, ஏலப் பொடி போட்டு மூடி விடவும்.
10. நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிறிது பண்ணி, ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.
( குக்கராக இருந்தால் ஆவி வந்த பிறகு, எடையைப் போட்டு, அடுப்பை சிறிது பண்ணி ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.)
11. கடைசியாகப் பரிமாறும் முன்பு, கொத்தமல்லி தழைகளை நறுக்கித் தூவ வேண்டும். வேண்டுமானால் எலுமிச்சை சாறு அரை மூடி பிழியலாம்.
இதற்கு இணையாக தயிர்ப் பச்சடி செய்து சாப்பிடலாம். எளிமையாய் சுவையாய் இது பண்ணும் விதம் இதோ:
ஒரு வெள்ளரிக்காயை விதை , தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். இவைகளுடன் அரை கோப்பை Sour Cream சேர்க்கவும். கால் கோப்பை தயிர் சேர்க்கவும். உப்பு அரை தேக்கரண்டி சேர்ககவும். கொத்தமல்லி தழை தூவினால் பச்சடி தயார். (Sour Cream இல்லையெனில் தயிரையே அரைக் கோப்பையாய் ஆக்கிக் கொள்ளலாம். )
இரண்டும் சேர்ந்து சாப்பிட்டால் ஆகா என்ன சுவை! என்ன மணம்!
திண்ணை
|