மத்தளராயன்
கோயில் வாசல் கடைகளுக்கு என்று ஒரு பொதுத்தன்மை உண்டு.
பிஸ்லரி மினரல் வாட்டர் பாட்டில், கோலக் குழல், பிளாஸ்டிக்கில் சிறைப்பிடித்த தெய்வத் திருப்படங்கள், பாசிமணி மாலை, இரண்டாவது தடவையாக டேப் ரிக்கார்டரில் போட்டால், யேசுதாஸ் உள்ளே சிக்கி அழும் பக்தி கேசட்டுகள், அமிர்தாஞ்சனம், கொண்டை ஊசி, பம்பரக் கயிறு, சீசனில் நூல் கயிற்றில் தூக்குப் போட்டுப் பாம்புப் பஞ்சாங்கம். அடுத்த வருஷத்துத் தினசரிக் காலண்டர்.
அம்பலப்புழை கோயில் வாசல் கடைகளில் மலையாளத்தில் மாத்ருபூமி காலண்டர். மற்றது முன் பத்தியில் உள்ளவை.
சேட்டா செருப்பு ஊறிப் போகணும். ஷேர்ட் இட்டுப் போகான் பாடில்யா.
கடைக்காரர்களின் கரிசனத்துக்கு நன்றி சொல்லி நடந்தேன்.
கடைகளைக் கடந்து இடது புறம் திரும்பினால் பொந்து போல் சிறிய வாசல்.
ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர் ஆக்ரஹிக்குன்னது முழுவன் நேரத்தே கிட்டும். ஸ்வர்ணமோ, ஸ்த்ரியோ, பின்னெ லோட்டரியில் வல்ய பம்பர் பிரைஸோ.
ஒண்ணும் வேணாம்ப்பா. கோயில் வாசல்லே விட்ட செருப்பு காணாமல் போகாமல் இருந்தால் போதும்.
பதில் சொல்ல வாயை எடுத்தால், அம்பல வாசலில் மோதிரக் கடை பரத்தியிருந்தவன் டியூப் லைட் வெளிச்சத்தில் ‘வெள்ளி நக்ஷத்ரம் ‘ சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் டேப் ரிக்கார்டரில் ‘ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர்.. கேவலம் நூறு ரூபயாணு ‘.
கேவலம் நூறு ரூபாய் கொடுத்து நவரத்தின மோதிரத்தை வாங்கி விரலில் போட்டுக் கொண்டு, தோளில் துணி சஞ்சியில் தங்கக் கட்டிகளும், கூடவே ஒரு தலை குளித்த ஸ்திரியுமாகச் சென்னையில் வீட்டுப் படியேறத் துணிச்சல் இல்லாததால், சாதுவாக அம்பலத்தின் உள்ளே நடந்தேன்.
முணுக் முணுக் என்று ஏழெட்டு ட்யூப் லைட் வெளிச்சத்தில் நிழலாட்டம் காட்டும் கம்பீரமான அம்பலத்தின் மரக் கூரை. சுற்றம்பலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீபங்கள். ஒலிபெருக்கியில் பி.லீலாவின் குரலில் ஒழுகி வரும் நாராயணீயத்தில் பாதாதிகேச வர்ணனை.
எதிர்பார்த்ததுபோலவே வெளித் திண்ணையில் ஒரு கிழவர்.
முத்தச்சா, செருப்பு இங்கே விடலாமா ?
அவர் தேர்தல் விளம்பரம் போல் இரண்டு விரலைக் காட்டினார்.
ஷேர்ட்டும் அழிக்கணும்.
சட்டையை அப்புறம் கழற்றுவதாகச் சொல்லி விட்டுத் திரும்பியபோது, மின்சாரம் போயிருந்தது. பாதாதி கேசம் கழுத்து வரை வந்து நிற்கிறது. எண்ணெய்த் தீபங்கள் இன்னும் பிரகாசமாகச் சுடர் விட்டு, சில நூற்றாண்டுகள் பின்னால் இட்டுப் போகின்றன. ஸ்ரத்திச்சுப் போகு. அவிடெ கல்லுண்டு. வயசன் குரல். பின்னணியில் ‘ ‘ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்ன.. ‘.
கோயில் நடை அடைத்திருக்கிறது. அத்தாழ பூஜைக்கு இன்னும் அரை மணி நேரத்தில் திறப்பார்கள் என்று பக்கத்தில் இருந்த வயதான பெண்மணி சொல்கிறார்.
வெளிப்பிரகாரம் சுற்றி வருகிறேன்.
குஞ்சன் நம்பியார் முன்னூறு வருடம் முன்னால் ஓட்டந்துள்ளல் நிகழ்த்திய முன் மண்டபம். மரபுக் கலையான கதகளியையும், நாட்டார் கலையான கூத்தையும் இணைத்து அவர் உருவாக்கிய அருமையான கலை வடிவம் இது. சமூக அவலங்களைக் கிண்டல் செய்வதற்கும், அவை பற்றிய பிரக்ஞையைப் பொதுமக்கள் மத்தியில் விதைப்பதற்குமாக, ஓட்டந்துள்ளலை உருவாக்கிய குஞ்சன் நம்பியார் முதன்முதலில் அதை அரங்கேற்றியது அம்பலப்புழ ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தில் தான்.
கம்பீரமாகச் சரிந்து நின்றிருக்கும் குடமிழா ஒன்று மூங்கில் கூரை வேய்ந்த மண்டபத்தின் நடுநாயகமாக. குஞ்சன் நம்பியார் முழக்கிய தாளக் கருவி அந்த மிழா. அந்த மக்கள் கலைஞனை மனதில் வணங்கி முன்னே நடக்கிறேன்.
அவனையும் கூடிப் ப்ரதியாக்கி. ஞான் காணான் போயப்போழ் பாடில்ல என்னு பரஞ்ஞு திரிச்சயச்சு. நாளெ மறுநாள் கோடதியில் ஹாஜராக்கும் என்னு கேட்டு.
மெலிந்து கருத்த ஒருத்தர் ஜமுக்காளத்தை உதறி விரித்தபடி சொல்கிறார். அகல் விளக்கு வெளிச்சத்திலும் அவர் முகத்தில் சோகம் நீளமாகக் கையெழுத்துப் போட்டுப் போயிருப்பது தெரிகிறது. சுற்றி நாலுபேர் ஆதரவாகத் தலையசைக்கிறார்கள்.
யார் காவலில் இருக்கிறார்கள் ? எப்போது இவர் பார்க்கப் போனார் ? கோர்ட்டில் விசாரிக்கப் போவது எதை ? தொடர்கதையில் பாதிக்கு மேல் ஆரம்பித்துப் படிப்பதுபோல் இருக்கிறது.
சட்டென்று அவர் ஹார்மோனியத்தை எடுத்து மீட்டிப் பாட ஆரம்பிக்கிறார்.
தெச்சி மந்தாரம் துளசி
பிச்சக மாலகள் சார்த்தி
குருவாயூரப்பா நின்னெக் கணிகாணேணம்.
வாகச் சார்த்து கழிஞ்ஞிட்டும்
வாசனப்பூ அணிஞ்ஞிட்டும்
கோபிகமார் கொதிக்குன்ன
முகம் காணேணம்.
மயில்பீலி சூடிக்கொண்டும்
மஞ்ஞச் துகில் சுத்திக் கொண்டும்
மணிக்குழல் ஊதிக்கொண்டும்..
கஞ்சிராவும் தாளமுமாக மற்றவர்கள்.
போன நிமிடத்தின் சோகம் கரைந்து போன இடம் தெரியவில்லை. கிருஷ்ணார்ப்பணம் எல்லாம். சோகமும் மகிழ்ச்சியும் கூடத்தான்.
மேற்குவாசல் கதவு திறக்கிறது. தோளில் ஒருவசம் மாத்திரம் சட்டை இருக்க, முக்கால் வாசி கழற்றியபடிக்கு ஆண்கள் நுழைகிறார்கள். அம்மே நாராயணா அம்பாடிக் கண்ணா என்று உரக்க நாமம் சொல்லியபடி கூந்தலில் துளசியும் நெற்றியில் சந்தனக் குறியுமாகப் பெண்கள்.
பலிக்கல் பக்கம் சிறுபறை கொட்டி ஒருவர் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்கிறார். சந்தன வாடை. மெல்லிய வியர்வை நெடி. பக்கத்தில் நிற்கும் பெண்ணின் தலைமுடியிலிருந்து கேசவர்த்தினி வாசனை. யாரோ கிராம்பு மெல்லும் வாடை. ஏன் சாமி, ராத்திரிக்கு ஆலப்புழையிலே ரூம் எடுத்துடலாமா ? அம்பலத்துள்ளில் சம்சாரம் ஒழிவாக்கணும் தயவாயிட்டு.
மணிகள் முழங்குகின்றன. வரிசையாக ஏற்றி வைத்த நெய் விளக்குகளின் குளிர்ந்த ஒளி.
அம்பல நடை திறக்கிறது.
*************************************************************
நண்பர் தினமணி சிவகுமார் வெகு உற்சாகமாக இருந்தார். எந்த சபாவில் மார்கழி இசை விழா, காண்டான் விழா கொண்டாடுகிறார்களோ இல்லையோ, தினமணியில் தவறாது இசைமலர் கொண்டு வந்து விடுவார்கள். இந்த ஆண்டும் தினமணி கதிராக மலர்ந்த இந்த அருமையான சிறு நூலை இலவச இணைப்பு என்று சொல்வது அதன் தகுதிக்கு ஏற்றது இல்லை. ஒரு வருட தினமணியையே இலவச இணைப்பாகக் கொடுத்து இந்த மலரை விலைக்கு விற்றிருக்க வேண்டும். தினமணிகாரர்களின், முக்கியமாக சிவகுமாரின் சங்கீத ரசனையும், உழைப்பும், லயிப்பும் பக்கத்துக்குப் பக்கம் தெரியும் நாற்பத்தெட்டு பக்கப் புத்தகம் இது.
பரிச்சயமில்லாதவர்களுக்கு, சிவகுமாரின் முரட்டு ஸ்டாலின் மீசைக்குப் பின்னால் எழுபதுகளில் இளைஞராக இருந்த ஒரு காம்ரேட் தான் தட்டுப்படுவார். அவரை அறிந்தவர்களுக்கு பழந்தமிழ், நவீன இலக்கியத்திலும் இசையிலும், ஓவியத்திலும் தோய்ந்த படைப்பாளி, ரசிக உள்ளம் தெரியும். வருடம் ஒன்றாக இதுவரை எட்டு இசைமலர் இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்து அவர் கொண்டு வந்த மலர்களைத் தொகுத்தாலே இசையையும், இசைக் கலைஞர்களையும், 1850 – 1950 மற்றும் தற்காலத் தமிழகக் கலைச் சூழல் பற்றியுமான ஒரு விவரமான ஆவணப் புத்தகம் வெளியிட்டு விடலாம். இவற்றில் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு சிவகுமாரே எழுதிய கட்டுரைகள். தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த அபூர்வ புகைப்படங்கள். அப்புறம் ஓவியங்கள்.
தில்லானா மோகனாம்பாளையும், சிக்கல் சண்முகசுந்தரத்தையும், ஜில்ஜில் ரமாமணியையும், வைத்தியையும் நாம் முறையே பத்மினியாகவும், சிவாஜியாகவும், மனோரமா ஆகவும் நாகேஷ் ஆகவும் பார்க்க வெகு காலம் முன்னால், கொத்தமங்கலம் சுப்பு (இவரும் முதலில் ஒரு கலா ரசிகர், அப்புறம் தான் அற்புதமான கவிஞர், எழுத்தாளர்) கற்பனைக்கு உயிர் கொடுத்து வாரா வாரம் விகடனில் சித்திரமாகத் தீட்டி லட்சக்கணக்கான வாசகர்களைத் தஞ்சைத் தரணியை நோக்கிப் படையெடுக்க வைத்தவர் கோபுலு.
‘மகா வைத்தியநாத அய்யருக்கும் கண்டாமணி பல்லவி வேணு நாயுடுவுக்கும் நடந்த சங்கீத மோதல் ‘ என்று படத்துக்கான சூழ்நிலையைத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சிவகுமார் வர்ணிக்கத் தொடங்கும் முன்னாலேயே, ‘ஓ, அந்த நாராயண கெளளை பல்லவி சமாச்சாரமா, சரி ‘ என்று சொல்லித் தொலைபேசியை வைத்துவிடுவார் கோபுலு. ஒரு வாரம் கழித்து சிவகுமார் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக ஓவியம் வந்து சேரும் – கோபுலு எப்போது ஏமாற்றியிருக்கிறார் ? கூடவே தொலைபேசியில் திரும்பக் கோபுலு – ‘நீ சொன்னதைப் போட்டு அனுப்பிச்சிருக்கேன். அதை வரையும்போது இதுவும் ஞாபகம் வந்தது. வரைஞ்சு அனுப்பியிருக்கேன். நீ எழுதிக்கோ ‘. நாற்பதுகளில் நடந்த இசை தொடர்பான ஏதாவது நிகழ்ச்சியை வரைந்து அனுப்பியிருப்பார் கோபுலு. பார்த்து ரசித்தபடி அதைப் பற்றி எழுத உட்கார்வார் சிவகுமார். கட்டுரைக்கு ஓவியம் பக்க வாத்தியமானால் என்ன, ஓவியத்துக்குக் கட்டுரை பக்க வாத்தியமானால் என்ன, வாசகருக்கு ரசானுபவமாக ஒரு வாசிப்புக் கச்சேரி அமைந்து விடும்.
இந்த வருடம் இசை மலரில் கோபுலு வரைய முடியாத குறையை சுமன் முடிந்த அளவு நிறைவு செய்திருக்கிறார்.
பெங்களூர் நாகரத்தினம்மாள் பற்றிய ‘தியாக ரத்தினம் ‘ என்ற கீர்த்தனையோடு ஜிலுஜிலுப்பாகத் தொடங்கி, தஞ்சை ஆனந்தா லாட்ஜ் கிட்டப்பா விஷயமாக நூதனமாக இயற்றிய ‘எல்லா வித்வான்களும் இவரது ரசிகர்கள் ‘ என்ற பல்லவியை அழகாக மூணு காலத்திலும் ஆலாபனை செய்திருக்கிறார் சிவகுமார். துவாரம் வெங்கடசாமி நாயுடு பற்றிய அபூர்வ கிருதி அழகாகவும் விரிவாகவும் ராகமாலிகையாகப் பாடப்பட்டிருக்கிறது. 1930-ல் செம்மங்குடி கச்சேரி புகைப்படங்கள், செம்பை கச்சேரி புகைப்படங்கள் என்று ரசனையோடு துக்கடாக்கள் அங்கங்கே தூவப்பட்டிருக்கின்றன. சீனியர்கள் மஹி, சங்கரநாராயணன் என்று சிலரும் கலந்து கொண்டு, ஆளுக்கு ஒரு பாட்டு பாடி அப்ளாஸோடு இறங்கியிருக்கிறார்கள்.
சிவகுமாரின் ‘தியாக ரத்தினம் ‘ கீர்த்தனையின் கவித்துவமான எடுப்பு இப்படி –
‘நிலவு பூசிக் கிடந்தது. கோயிலின் நெடிய முன்முற்றம். மண்டபத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அகல் விளக்கின் சுடர். இருளும் ஒளியும் குழைத்த கோலம். கோயில் மண்டபம் தண்ணென்று குளிர்ந்திருந்தது. பிரகரத்திலிருந்து வீசிய மென் காற்றில் மகிழம்பூ மணம். மண்டபத்தின் நடுவில் அவள் உட்கார்ந்திருக்கிறாள். தோளில் சாய்ந்து ஓய்ந்திருந்த தம்புரா. அதை ஸ்ருதி சேர்க்க முனையும்போது கைகள் துவண்டன. பலமெல்லாம் வற்றியது போல் விரல்கள் நடுங்கின.
‘சாப்பிடாததால் இருக்குமோ ? எங்கிருந்து வந்தது இவ்வளவு களைப்பு ? அதுவும் தம்புராவை மீட்ட முடியாதபடியா ? சாப்பிட்டால் சரியாகிவிடுமா ? ‘ நெஞ்சு அலைபாய அவள் தலையைத் தூக்கியபோது மண்டபத்தின் முகப்பில் அவர் நிற்பது தெரிந்தது. சுடரொளியில் அவரது படர்ந்த நெற்றியில் கோபி சந்தனமும் குங்குமமும், மூக்கின் தீர்க்கமும், எலும்புகள் தெரியும் மார்பின் குறுக்கே ஓடுகிறது அங்க வஸ்திரம். உஞ்சவிருத்திக்கு அவர் கொண்டு செல்லும் செம்பு விளக்கொளியில் மின்னுகிறது. அவர் மெல்லிய குரலில் சொல்வது துல்லியமாகக் கேட்கிறது. ‘நாகரத்தினம் .. சாப்பிடாதே.. விஷம் .. விஷம் .. ‘.
அமிர்தவர்ஷிணியான இந்தக் கச்சேரி முடிந்த பிறகும் ஏகப்பட்ட ரசிகர் கடிதங்களின் மழை. க்ரியா ராமகிருஷ்ணன் போன்ற நண்பர்களின் வாழ்த்து. சிவகுமார் நாலாக மடித்த ஒரு இண்லாண்ட் லெட்டரைக் காட்டினார். பழக்கமான கையெழுத்து. ஒரு கடிதத்தைக் கூட அற்புதமான படைப்பாக மாற்றக் கூடிய எழுத்து அது. அசோகமித்திரன் இந்த வருட இசைமலரைப் படித்து விட்டுப் பாராட்டி எழுதிய கடிதம்.
இது ஒண்ணே போதும் மன நிறைவைக் கொடுக்க.
தினமணி சிவகுமார் கண்கலங்கிப் பார்த்ததில்லை. இப்போது பார்த்தேன்.
*****************************************************************
நண்பர் பா.ராகவன் மின் நாவல் வெளியிட்டிருக்கிறார்.
மின் புத்தகம் தமிழுக்கு வந்து நான்கைந்து வருடம் ஆகிவிட்டது. மதுரைத் திட்டம் போன்ற இணையத் தளங்களில் சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள்,இடைக்கால இலக்கியங்கம் எல்லாம் பார்த்துப் பார்த்துப் பதிந்து வைத்து இலவசமாக இறக்கிக் கொள்ள உலகமெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அன்போடு அனுமதி தருகிறார்கள். ஈழப் படைப்பாளிகளான தளையசிங்கம், கைலாசபதி, சேரன், வைரமுத்து, டாக்டர் ரெ.கார்த்திகேசு, என்று தற்காலத் தமிழிலக்கியமும் http://projectmadurai.org தளத்தில் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் உதவியால் ஒற்றைக் காசு செலவில்லாமல் கிடைக்கிறது.
ஆனாலும், தினமலர் போன்ற பத்திரிகைகள் இண்டர்நெட்டைப் பொறுத்தவரை இன்னும் துவாபர யுகத்திலேயே இருப்பதால், சாரு நிவேதிதாவின் ‘ஜீரோ டிகிரி ‘ ஐந்து டாலர் கட்டணம் செலுத்தி இறக்கிக் கொள்ள வேண்டிய மின்புத்தகமாக அண்மையில் வந்ததும்தான் விழித்துக் கொண்டு ‘உலகிலேயே முதல் தமிழ் மின் நாவல் ‘ என்று பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறார்கள்.
அது போகட்டும்..
பா.ராகவன், ஆறு மாதம் ஆய்வு செய்து எழுதிய நாவல் என்று சொன்னார். படிக்க நிறைவாக இருக்கிறது. நாவலுக்கு இந்த உழைப்பு மிக முக்கியம்.
சிறுகதை (கை வந்த பிறகு) தன்னைத் தானே எழுதிக் கொண்டு விடும். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மொழி உண்டு. இது கதையில் வருகிறவர்கள் பேசுகிற மொழியோ, கதை எழுதப்பட்ட மொழியோ இல்லை என்று தொடங்கி விரிவாக எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
குறுநாவல் கொஞ்சம் சிக்கலான விஷயம். இதை எழுதலாம் என்று தொடங்கியதுமே நிச்சயமாகச் சிறுகதைக்கு உரிய விஷயமில்லை என்று தெரிந்து, ஆனால் நாவலாக்குகிற தீர்மானம் இல்லாமல் எழுதிப் போகிறது அது. கொஞ்சம் களம் பெரியது என்பதால் சந்தோஷமாகச் சோதனை செய்து பார்க்கலாம். சமயத்தில் ஆய்வுக்காக உயிரை வாங்கி விடும்.
நாவல் மலைமுழுங்கி. ஒரே பிரச்சனை, நாவலில் மும்முரமான பிறகு சிறுகதை எழுதுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். காலை வீசிப் போட்டு நடந்தவனை அறைக்குள் வாக்கிங்க் போகச் சொல்வது போல் ஆகி விடுகிறது.
நேற்றுப் பகல் ஒரு சிறுகதைக்காக உட்கார்ந்து, அது பிரும்ம ராட்சனாக வளர்ந்து கொண்டே போக, நிறுத்தி வைத்துவிட்டு அடுத்த அரசூர் நாவலைத் தொடர்ந்தபோது ஏற்பட்ட எண்ணங்கள் பாரா கடிதம் படித்ததும் எழுத்தானது.
அப்புறம் ஒன்று – இதெல்லாம் சம்பிராதயமான சிறுகதை, குறுநாவல், நாவல் பற்றியதில்லை.
*******************************************************************
பொறுத்தது போதும் பொங்கி எழுந்து விட்டார்கள் இங்கிலாந்தில் ஆண்கள்.
எத்தனை நாள்தான் இப்படி மெளனமாகத் துன்பத்தைச் சகித்துக் கொண்டிருப்பது ? அரசாங்கத்திடம் முறையிட, அவர்கள் மேல் பரிதாபப்பட்ட டோனி ப்ளேரின் அரசு கண்ணைத் தொடச்சுக்கங்கப்பா என்று சொல்லி உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.
மனைவியிடம் அடிவாங்கிக் துன்பப்படும் கணவர்கள் இனிமேல் ஓடிப் போய்ப் பத்திரமாகப் புகுந்துகொள்ள இனிமேல் தென் மேற்கு இங்கிலாந்தில் ஒரு இடம் உண்டு. அரசாங்கமே நிர்மாணித்த பாதுகாப்பான அந்தக் கட்டிடத்தின் ரகசியம் பரம ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது. (அங்கேயும் தேடி வந்து அடிச்சா என்ன பண்றதாம் ?).
பொறுக்க முடியாமல் போயிட்டிருக்காம் அங்கே. நாலு புள்ளி ரெண்டு சதவிகிதம் கணவர்கள் தினசரி மனைவி கையால் அடிவாங்குகிறார்களாம். அறுபத்தொன்பது வயது வரை அடி வாங்கித் தழும்பேறிய தாத்தாக்களில் இருந்து முந்தாநாள் தான் மீசை முளைத்த இளைஞர்கள் வரை உண்டு.
நாலு புள்ளி நாலு சதவிகிதம் தப்பு என்று ஆணுரிமை இயக்கங்கள் சொல்கின்றன. நிறையப் பேர் பயந்து போய் இருப்பதால் (யாரிடம் என்று சொல்லணுமா என்ன ?) இதை வெளியே சொல்வதே இல்லை. சொன்னால், தொகை கிர்ரென்று ஏறும்.
கார்டியன் தரும் தகவல் இது.
*************************************************************************
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- கிறிஸ்மஸ் விடுமுறை
- நீ வருவாயா ?
- அன்புடன் இதயம் – 2
- மின்சாரமில்லா இரவு
- நாடகமேடை
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- பின்னல்
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- நீளப் போகும் பாதைகள்
- அவதூறுகள் தொடாத இடம்
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
- சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்
- எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்
- கடிதங்கள் – ஜனவரி 8,2004
- வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது
- தமிழ் ஒழிக!
- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு
- ஒளிரும் காரிருள்
- பொங்கலோ பொங்கல்
- நேற்று, இன்று, நாளை
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- மின் ஆளுகை (E-Governance)
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- விடியும்! -நாவல்- (30)
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- பொங்கலைத் தேடி…
- நீ ஏன்…
- புரியாத புதிது
- கவிதைகள்
- வானவில்
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- பரவச கவிதைகள் சில
- நிழல்கள்
- மூன்று
- இரவின் அழகு
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- வாருங்கள்