வண்ணச்சீரடி

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஆனந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தது.

வீட்டு வராண்டாவில் நடைவண்டி வைத்து அதை நடத்தினால் என்ன வேகம். வேகம் அதிகரிக்க அதிகரிக்க நடையில் தறிகெட்டு ஒரு ஓட்டம். ‘பாத்து மெதுவா மெதுவா’ என்று பிடிக்க வந்தால் கையைத் தட்டிவிட்டு விடுகிறது.

அந்த விளையாட்டுக்கு அம்மா ஐஸ்வண்டி என்று பெயர் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘ஸ்’ என்று உயரத்தில் நடைவண்டியைக் காட்டிக் கேட்கும் அது. தடதடவென்று தொடையெல்லலம் அதிர ஒரு நடை, நடையோட்டமாகி நேரேபோய்ச் சுவரில் டாமாரென்று முட்டி, வண்டியைத் திரும்ப இழுக்கத் தெரியாமல் நிற்கும். வண்டியைப் பின்னுக்கு இழுக்க முயன்று தப்பென்று தரையில் உட்காரும். தானே எழுந்து கொள்வதாக வண்டியைப் பிடிக்க வண்டி அதன்மேலேயே கவிழும்.

அவள் குழந்தையைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அவளிடம் பாராட்டை எதிர்பார்த்தது அது. தவறி விழுவதற்காகக் கூடச் சிரிக்க வேண்டுமென்றால் எப்படி? என்னவொரு அராஜக ராஜ்யம் நடத்துகிறது!

நன்றாக ஓடிச்சாடும் வயது. இந்நேரம் சாப்பாடு விஷயத்தில் நாம் சரியாக ஈடுகொடுக்க வேண்டாமா என்றிருக்கும். ·பேரக்ஸ் ஆரம்பித்திருந்தாள். பருப்பை மையாய்ப் பிசைந்து நெய்யூற்றி கைபொறுக்கும் சூட்டில் ஊட்டினாள். காரட் மாதிரி மென்மையான காய்கறிகள் சேர்த்துக் கொண்டாள். கொஞ்சம் ரசத்தெளிவு. காரம் பழக்க வேண்டும். காரம் சாப்பிடச் சாப்பிட உசரங் கொடுக்கும் என்பார்கள்.

வாயும் மூஞ்சியும் சோற்று ஈஷல். வேணாம் என மறுக்க மறுக்க விடாமல் கொடுப்பாள். விளையாட்டு கவனத்திலேயே சப்புச் சப்பு என்று சாப்பிடும்.

எல்லாம் சனி ஞாயிறுகளில் மாத்திரமே அதற்கு வாய்க்கிறது பாவம். மற்ற நாட்களில் ஹாட்பாக் இட்லிதான் என் கண்மணிக்கு. அதையும் அது துப்பத் துப்ப போக்கு காட்டி ஊட்ட வேண்டும். இடுப்பில் அமர்த்தி நாலு திசையும் அதை சவாரஸ்யப் படுத்தி நிலாகாட்டி உம்பாய் காட்டி… கூடமாட ஓடி குனிந்து நிமிர முதுகு விட்டுப் போகிறது. அது சாப்பிட்டு முடிக்க, அப்பாடா என அவளுக்கே ஆசுவாசம். அதன் வயிற்றை அமுக்கிப் பார்த்து (குழந்தை கண்வரியோட கூச்சத்தில் கெக்கெக் என்று சிரிக்கிறது.) – பஸ் விளையாட்டில் தொப்பையை அமுக்கி பொப்பாய்ங்க் என்பாள்! – வயிறு நிறைய எந்த ஆயா சோறு¡ட்டுவாள்?

ஆனந்தி நல்லவேளை, படுக்கையில் மூச்சா போவதை நிறுத்தி விட்டது. பாதிக் குழந்தைகளை ஆயா அப்படியே நீந்த விட்டிருக்கிறதை அவளே பார்த்தியிருக்கிறாள். அதைப் பற்றி கேட்க பயம். என் குழந்தையை ஒழுங்காப் பாத்துக்கடி தாயே. அது போதும்… என்றுதான் மனசில் படுகிறது. இப்படி ஈரத்தில் விடுவது எத்தனை கிருமிகளை உற்பத்தி செய்யும், பரவச் செய்யும்… என்று கூடவே கவலை வருகிறது.

இதெல்லாம் பார்க்க சனியன் வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம் என்று து¡க்கியெறியத் துடிப்பாய் இருக்கிறது. எல்லாம் தற்கணத்துச் சிந்தனைகள். மறுநாள்க் காலையில் வழக்கம்போல குழந்தையை இடுப்பில் து¡க்கிக் கொண்டு அது அழ அழ (அங்க பார் ஐஸ்வண்டி… ஐ சூப்பர்!… இந்தா ஆயா சீக்கிரம்…. எனக்கு பஸ் போயிரும்.)

சில நாட்களில் அவள் கிரீச்சுக்கு வரும்போது ஆனந்தி து¡ங்கிக் கொண்டிருக்கும். து¡ங்குகிற குழந்தைகள் அதிக கனமாய் இருக்கின்றன. து¡ங்கினாலும் திடீரென விசும்பும். பயந்து விக்கிப்பதும், வாயில் விரல் போட்டுச் சர்ர்ரெனச் சப்புவதும் என குழந்தை சலனப்படும். கூர்ந்து பார்த்தால் அதன் கண்ணுக்குள் ‘பாப்பா’ அசைகிறதைக் காணலாம். இந்தக் குஞ்சுமனசில் என்ன நினைப்பு ஓடுது… அது என்ன கனவு காணுது, என்று தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கும் அவளுக்கு.

அப்போதுதான் து¡ங்கி எழுந்து கொண்டிருந்தது போலும். ஆனந்தி உற்சாகமாய் இருந்தது. ஜன்னல் பக்கம் எக்கி நின்றபடி ஜன்னல் கம்பியில் கன்னத்தை அழுத்திக் கொண்டு அது எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தது. அந்த ஈர ஜில்லிப்பு அதற்குப் பிடித்திருந்தது. எத்தனைமுறை அந்தக் கம்பியை நக்கிச் சுவைத்ததோ என்று கவலை வந்தது அவளுக்கு. இது எதைப்பார்க்கிகறது என்று கவனித்தாள். காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம் வேலிக்குள் இருந்த பசுந்தழையை எட்டிப் பிடிக்க முயன்ற ஆட்டை கவனித்துக் கொண்டிருந்தது குழந்தை. முன்காலை உயர்த்தி நின்றபடி ஆடு குழையைக் கடிக்க முயன்றது.

‘ஏய் பப்ளிமாஸ்!’

அம்மாவின் குரல். சட்டென்ற சிரிப்புடன் அது திரும்பித் தேடியது. அம்மாவைக் கண்டதும் அது ஜன்னல் வழியே வெளியே கையை நீட்டி விரல்களை விரித்துச் சுருக்கி ‘வ்வா… த்து¡!’ என்றது.

‘இருடி செல்லம் வரேன்…’ என அவள் உள்ளே வந்தாள். குழந்தை ஜன்னல் பக்கம் வந்து நின்றதில் அது உயரங் கொடுத்திருப்பது தெரிந்தது.

அவள் குழந்தையுடன் வெளியே வந்தாள். வெளியே வந்த ஜோரில் அது அந்த ஆட்டை எட்டித் தொட முயன்றது. ‘ஏய் முட்டும் அது’ என்று பின்னால் இழுத்தாள்.

இன்றைக்கு அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம்தான். ஐந்துமணி பார்த்து அவள் எழுந்து கொண்டதில் மானேஜருக்கு வருத்தம். ‘நான் போய்க் குழந்தையையும் எடுத்திண்டு வீட்டுக்குப் போகணும் சார்’ என்றாள். ”நல்ல சாக்கு கிடைச்சது உங்களுக்கு. ம். சரி போங்க” என்றார் அவர். அவர் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி விட்டன. தவிரவும் ஆண்களுக்கு இந்தக் கவலை இல்லை… அவர்கள் வேலைபார்க்கிற பெண்களைக் கல்யாணம் முடிக்க விரும்புகிறார்கள். வீட்டுப் பொது என்கிற பாவனையில் டூ வீலரும் வாங்கி, தான் மட்டும் அலுவலகம் போகிறார்கள். போகிறபோது ஒண்ணாய்க் கிளம்பினால்கூட வரும்போது பெண்கள் பஸ்சில் வர வேண்டியிருக்கிறது.

அடடா கிரீச்சிலேயே உட்கார்ந்து இதற்குத் தாய்ப்பால் கொடுத்து விட்டு வந்திருக்கலாம் என்று பட்டது. குழந்தையின் வயிற்றை அமுக்கிப் பார்த்தாள். கெக் கெக் என்று சிரித்தது குழந்தை. பசியாய் இல்லை போலும். நல்ல வேளை. தவிரவும் பசித்தால் அது தன்னைப்போல அவள் முந்தானைக்குள் முகத்தைப் போட்டுத் தேய்க்கும்.

/*/
பஸ் நிறுத்தத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. ஆட்டோ டூ வீலர் என்று சூழலே உருமிப் பரபரக்கிறது. இடையே ஒருநாய் – என்ன அவசரம் அதற்கு – அடிபடுகிறாப் போல ஊடே ஓடியது. வண்டிகள் நெருங்கி வந்து பிரேக் போட்டதில் கீச்சிட்டுக் கத்தியபடி அது தெருவைக் கடந்தது.

கூட்டம் பார்த்து அதன் மூச்சிலேயே ஒரு சுறுசுறுப்பு. எல்லாவற்றையும் ஒரு மலர்ச்சியோடு அது பார்த்தது. நின்று கொண்டிருந்த ஆட்டோவின் ஹாரனை அழுத்தி பொப்பாய்ங் சத்தம் கேட்க அது முயன்றது. அதன் கையெட்டாத அளவில் தள்ளி நின்றுகொண்டாள் அவள்.

”வா பாப்பா ஆட்டோல போலாம்…” என்றபடி பொப்பாய்ங் அடிக்கிறான் ஆட்டோக்காரன்.

‘ஆட்டோ வேணாம்ப்பா’ என்றாள் அவள்.

உடம்பை விரைத்து அது அம்மாவைப் பார்த்தது. பின் ”க்கீய” என்றது.

‘ஐய்யே கீழல்லாம் ஒரே ஆய்’ என்றாள் அம்மா. ‘தோ அக்கா பார்’.

”க்கா”

‘ம்’

பஸ் நிறுத்தத்தில் வேறொரு சிறுமி நின்றிருந்தாள். பாசிமாலையைக் கடித்தபடி பஸ் வரும் திசையைப் பார்த்தபடி அவள் ‘நம்மது எந்த பஸ்ம்மா…’ என்று தாயைக் கேட்டாள். ஆனந்தி அவளைப் பார்த்தபடி தன் கழுத்தைத் தடவிக் கொண்டது.

பஸ் வரும் சுவடேயில்லை. நேரம் ஆக ஆக நிறுத்தத்தில் கூட்டம் அதிகரித்தபடி இருந்தது. கூட்டத்தில் ஏறிப் போவதென்றால் இன்னும் சிரமம். பஸ் வரும் திசையை முடிந்த து¡ரம்வரை அவள் பார்த்தவாறிருந்தாள். குழந்தை அந்தச் சிறுமியின் முடியைப் பிடித்து அசைத்தது. சிற்றாட்டின் முற்றிலும் வெளித் தெரியாத கொம்புகளைப் போல சிறு சடை. சிறுமி குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். பவுடர் பூசிய அவசர முகம். பிறைநிலா போல முன்னுச்சி மண்டையில் கனகாம்பர வில். மைப்பூச்சு ஒட்டாத முகம். இதற்கு கன்னத்தில் ஒரு ஓரம் திருஷ்டிப் பொட்டு… குழந்தை அவளிடம் தாவ முயன்றது.

பஸ் ஹாரன் ஒலியெழுப்பி வந்து கொண்டிருந்தான் ஐஸ்வண்டிக்காரன் ஒருவன்.

‘ஸ்’ என்றது குழந்தை.

‘ஆமாண்டி செல்லமே’ என்றாள் மூக்கால் அதை வாசனை பிடித்து.

அந்தச் சிறுமி தன் தாயிடம் ‘அம்மா ஐஸ்’ என்றாள்.

”ஒதை!…”

குழந்தை ஐஸ்வண்டிக்காரனிடம் தாவ முயன்றது. எப்படியும் அந்த ஐஸ்வண்டியைத் தன்னால் ஓட்டிவிட முடியும் என அது நம்பினாற் போலிருந்தது. அதன் உடம்பில் அலையலையாய் ஆயிரம் நெளிசல்கள் வந்தன.

ஐஸ் வண்டிக்காரன் குழந்தையைப் பார்த்தபடியே பாம் பாம் என்று ஹாரன் அடித்தான். திடுக்கிட்டு குழந்தை அம்மாபுறம் சாய்ந்து விரைத்தபடி அவனைப் பார்த்தது. அவன் புன்னகைத்துத் தலையாட்டி திரும்பவும் பாம் பாம் என்றான்.

ஹாரன் சத்தம் சிறுமிக்குக் கிளர்ச்சியூட்டக் கூடியதாய் இருந்தது. ‘நேத்து தம்பி கேட்டப்ப வாங்கிக் குடுத்தியே?’ என்றாள் அவள். குரல் பலவீனமாகவே இருந்தது. அம்மாவுக்குக் கோபம் என்று வந்தால் நடுத்தெரு என்றும் பார்க்காமல் மூதி… என ஆரம்பித்து அடி விளாசி விடும். கண்ணிலும் மூக்கிலும் ஆறாய்ப் பெருக வைத்து விடும்… ஆனால் ஆத்தாக்காரி பதில் சொல்லவில்லை. அவள் வேறு கவலையாய் யோசனையாய் இருந்தாப் போலிருந்தது.

ஆனந்தி திரும்பவும் இடுப்பில் முட்டி கீழே இறங்க முயற்சித்தது. புடவை கசங்கியது.

‘நானாம்’ என்றாள் அம்மா.

”கீய கீய” என்று கைகாட்டியது ஆனந்தி.

‘டீ இந்தக் கூட்டத்ல எப்டி இறங்கி விளையாடுவே. அப்றம் அம்மா டொம் போட்ருவேன்…’
என்றாள் அம்மா புன்னகைத்தபடி. எப்படி இதன் நினைவை மாற்ற என அவள் உள்ளூற யோசித்துக் கொண்டிருந்தாள். தன் பைக்குள் இதற்கு சாப்பிட எதாவது கிடைக்குமா எனத் துழாவினாள்.

சிறுமி அந்தக் கைப்பையையே பார்த்தது. குழந்தையை விட அவள் அதிகப் பரபரப்பாய் உணர்ந்தாப் போலிருந்தது.

பைக்குள் கையில் பட்டது டியோடரன்ட்டா பாப்பின்ஸ் ரோலா தெரியவில்லை. வெளியே எடுத்தாள். போலோ.

தா, என்று கைநீட்டியது குழந்தை. (இப்போது சிறுமி குழந்தையைப் பார்த்தது.) குழந்தை இடது கையை நீட்டியது. ‘அந்தக் கை’ என்றாள் அம்மா. குழந்தை வலது கையை நீட்ட ஒரு முத்தம். பிறகு ஒரு போலோ. குழந்தை இப்போது வலது கையைப் பின்தள்ளிக் கொண்டு இடது கையை நீட்டியது. ‘அடிச் சமத்தே’ என்று அம்மா ரெண்டாவது போலோவை இடது கையில் வைத்தாள். ‘ரெண்டையும் போட்டுக்கப்டாது. ஒண்ணொண்ணாச் சாப்பிடணும்’.

ஒன்றை வாயில் சப்பியபடி குழந்தை சிறுமியைப் பார்த்தது. சிறுமியின் கண்களைப் பார்த்தது. சட்டென்று ரெண்டாவதையும் போட்டுக் கொண்டது. சிறுமி முகத்தை மாற்றிக் கொண்டாள். இனி குழந்தையிடம் அவளுக்குப் பார்க்க ஏதுமில்லை.

பஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்து விட்டது. இனி வரும் பஸ்சில் அத்தனை பேரும் முண்டியடிக்க வேண்டும் என நினைக்கவே அம்மாவுக்குத் திகைத்தது. என்ன செய்ய, எப்படி வீட்டுக்குப் போக… என அவள் கவலைப் பட்டாள். கூட்டம் சேரச் சேர குழந்தைக்கு உற்சாகம் தாளவில்லை. இத்தனை கூட்டத்தின் நடுவே மாடு ஒன்று ஊடே புகுந்து சுவாதீனமாய்க் கடந்தது. எல்லாரும் பதறி ஒதுங்கினார்கள். குழந்தை உற்சாகம் அடைந்து மாட்டின் கொம்புகளைப் பிடித்து இழுக்க முயன்றது. மாடு ஈயைத் துரத்தும் இயல்பிலோ என்னமோ கொம்பை ஒரு வீசு வீசியது. திக்கென்றது அம்மாவுக்கு. விலுக்கென்று பின்வாங்கினாள்.

‘பாத்தியா உம்பாய் முட்டும். தொடப்டாது’

”கீய” என்றது குழந்தை. வாயில் பெப்பர்மின்ட்டை அது நறுக்கென்று கடித்தது. வாயில் ஊற வைத்து நிதானமாய்ச் சாப்பிடும் பழக்கம் அதற்கு இன்னும் வரவில்லை. சத்தம் கேட்டு சிறுமி திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்… குழந்தை சற்று பிடிவாதம் பண்ணிப் பார்க்க முடிவெடுத்தாப் போலிருந்தது. என்ன இந்த அம்மா நம்ம டபாய்க்கிறாள்…

குறைந்தபட்சம் ஒரு ·பைவ்சீட்டர் ஷேர் ஆட்டோ வந்தால்கூட பஸ்ஸைவிட ஒரளவு வசதியாப் போகலாம். இந்த ஜனத்துடன் பஸ்ஸேறி அவள் குழந்தையுடன் நிற்க முடியாது. ஒருத்தியும் அவள்மீது இரக்கப் பட்டு எழுந்து இடம் தரப் போவதில்லை. ஆண்களாவது இரக்கம் காட்டுகிறார்கள். பெண்கள் வேறு உலகத்தில் இருப்பதுபோல பாவனை கொண்டாடுகிறார்கள்.

இவள் வழிக்கு வரமாட்டாள், என குழந்தை அவளிடம் நம்பிக்கை இழந்திருந்தது. கீழே இறங்க அது முன்பக்கமாய்க் குனிந்தது. அம்மாவின் சேலை விலகி மார்பு முன்னெடுப்புகள் பளிச்சென வெளித் தெரிந்தன. ‘ஏய் அம்மா அடிப்பேன்’ என அவள் திரும்ப குழந்தையை இறுக்கி மேலேற்றிக் கொண்டபடி புடவையை ஜாக்கெட்டுக்கள் செருகிக் கொண்டாள்.

ஆனந்தி சுற்றுமுற்றும் பார்த்தது. எப்பா எத்தனை கூட்டம். அத்தனை பேரையும் ஒருசேரப் பார்க்க அதற்கு சந்தோஷம் கிறுகிறுவென்று பொங்கியது.

யாரோ சிறுவன் சைக்கிளில் அரைப்பெடல் போட்டபடி மணியை கிணிங் கிணிங் என்று அடித்தபடி போனான். அந்த ஒலியில் ஈர்க்கப் பட்டு குழந்தை அம்மா முகத்தைத் திருப்பி ”ஸ்” என்றது.

‘ஆமாண்டி குஞ்சலம்’

பஸ் நிறுத்ததில் நின்றிருந்த ஒர் இளைஞன் அசப்பில் இவள் தம்பி போலிருந்தான். ”ஜு” என்றது குழந்தை. ‘ஐய அது ராஜு மாமா இல்லடி…’ என்று சிரித்தாள் அம்மா.

நல்லவேளை ஒரு ஷேர்ஆட்டோ வந்தது.

/*/
அவள் கீழே இறங்கினாள்.

வீடுவரை அந்த ஆட்டோ வருவதில்லை. திருமண மண்டபத்தோடு அவளை இறக்கி விட்டு விடும். குழந்தையை ஏந்திக் கொண்டு நடந்தாள். ஒருபக்கம் கைப்பை. உள்ளே டிபன்பாக்ஸ், ஆனந்தவிகடன். புட்டிப்பால் குழந்தையின் தேவைகளுடன் தனிப்பை… நடக்க சிரமமாய் இருந்தது. ரொம்ப நேரம் அவள் குழந்தையைத் து¡க்கியபடியே வந்தது கை வலித்தது.

வழியில் சிறு திடல். ஜன நடமாட்டம், கூட்டம் எதுவும் இல்லை. வண்டி போக்குவரத்து என்று எதுவும் இல்லை. கொஞ்சம் ஆசவாசப் பட்டு குழந்தையை இறக்கி விட அவள் முன்வந்தாள்.

‘கீய’ என்றாள் அவள்.

”நானாம்” என்றது குழந்தை.


storysankar@gmail.com
mobile india 094 44 95 95 70

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்