வாழ்க்கை குறிப்பு
தந்தையார் இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கில-அமெரிக்க-ருஷ்ய கூட்டணிப்படைகளின் சார்பாக போரிடுவதற்காக இங்கிலாந்திலிருந்து கென்யா சென்றார். ரிச்சர்ட் டாகின்ஸ் 1941 ஆம் ஆண்டு நைரோபியில் பிறந்தார். 1949இல் குடும்பம் மீண்டும் இங்கிலாந்து வந்தது. ஆக்ஸ்போர்டில் படித்து 1962இல் பட்டம் பெற்றார். ஒழுக்கவியலாளரான(Ethologist) நிகொ டின்பெர்கென் (Niko Tinbergen) டாக்டரேட் செய்வதற்காக ஆக்ஸ்போர்டிலேயே தங்கினார். விலங்கியல் துணைப்பேராசிரியராக 1967இலிருந்து 1969 வரை பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1970இலிருந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் புதுக்கல்லூரியின் Fellow வாகவும் பணியாற்றிவருகிறார். 1976இல் தனது முதல் புத்தகமான “சுயநல ஜீன்”(Selfish Gene) புத்தகத்தை வெளியிட்டார். புதிதாக துவங்கப்பட்ட “பொதுமக்கள் புரிந்து கொள்ளும் அறிவியலுக்கான சார்லஸ் சிமோனி நாற்காலிக்கு ” (Charles Simonyi Chair of Public Understanding of Science) சொந்தக்காரர்.
புத்தகங்கள்
ரிச்சர்ட் டாகின்ஸின் முதல் புத்தகம் “சுயநல ஜீன்”(selfish gene) (1976 முதல் பதிப்பு, 1989 இரண்டாம் பதிப்பு) வெளிவந்தவுடன் உலகத்தின் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றானது. அவரது புத்தகமான “குருட்டு கடிகாரம் செய்வோன்”(Blind Watchmaker) புத்தகமும் அவரது முதல் புத்தகம் போல் உலகத்தின் பல மொழிகளில் மொழிபெயர்க்க்கப்பட்டு இருக்கிறது. Extended phenotype 1982இல் வெளிவந்தது. அவரது புகழ்பெற்ற வேறு புத்தகங்கள் ஏடனைவிட்டு வெளிவரும் நதி(river out of eden)(1995), ஏறமுடியாத மலைமீது ஏறுவது(climbing the mount improbable) (1996), வானவில்லை வண்ணம் பிரிப்பது(unweaving the rainbow)(1998).
பரிசுகளும் சாதனைகளும்
….
July 1995, Wired பத்திரிக்கையிலிருந்து…
கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்ததனால், டாகின்ஸ் உலகத்தின் ஒப்பற்ற உயிர்வெளிகளின் ஒன்றில் வளர்க்கப்பட்டிருக்கின்றார். 1959இல் ஆக்ஸ்போர்டில் கீழ்பட்டபடிப்புக்கு சேர்ந்த டாகின்ஸ், அங்கிருந்த டென்மார்க் நாட்டுக்காரரான நிகோ டின்பெர்கென் பாதிப்புக்குள் வந்தார். டின்பெர்கென் study of instinct என்ற நூலின் ஆசிரியர்; மிருகங்களின் நடத்தை பற்றிய அவரது முன்னோடி ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர். டின்பெர்கென் ஒரு நவீன ஒழுக்கவியலாளர்களில் ஒருவர்(Ethologist – மிருகங்களின் நடத்தை பற்றி ஆராய்பவர்-விளக்குபவர்). டின்பெகென் கேட்பார் – instinct என்பது என்ன? எந்த நடத்தையை மிருகம் கற்றுக்கொள்கிறது? instictக்கும் கற்றுக்கொண்ட நடவடிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை எவ்வாறு அறிவது? எவ்வாறு நடவடிக்கை மாறுகிறது? எவ்வாறு மிருகங்கள் மற்ற மிருகங்களுடன் தொடர்பு கொள்கின்றன? கூட்டத்தில் இருக்கும் மிருகத்தின் நடவடிக்கைக்கும் தனியே இருக்கும் மிருகத்தின் நடவடிக்கைக்கும் ஏனிந்த வேறுபாடு? ஏன் மிருகங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கின்றன? ஏன் அவை ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொள்கின்றன?
ஒழுக்கவியல்(Ethology), டின்பெர்கன் தொடர்ந்து வலியுருத்தியதுபோல், பல அறிவியல் பகுதிகளின் அறிவு தேவைப்படும் ஒரு பல-அறிவு உயிரியல். அதை பேசுவதற்கு மனவியல், உடலியல், சுற்றுப்புறச்சூழலியல், சமூகவியல், taxonomy, பரிணாமவியல் போன்ற அறிவியல்களின் நுண்ணறிவு தேவைப்படுகிறது. இயற்கையில் காணப்படும் நடத்தைகளின் வீச்சிக்கும், அவையத்தனை நடத்தைகளையும் ஒரு சில அடிப்படை விதிகளாக குறுக்கிபார்க்கவிளைகின்ற அறிவியலாளனின் தேவைக்குமான இடையறாத இழுபறியில் கவனம் செலுத்தினார். “அவருடைய சொற்பொழிவுகளை பற்றி என்னுடைய ஞாபகத்தில் இருப்பதெல்லாம் அவரது இரண்டு சொற்தொடர்கள். ‘நடத்தை பொறியமைப்பு’ , ‘உயிர்வாழ்வதற்கான காரணிகள்’. நான் என்னுடைய முதல் புத்தகத்தை எழுதும்போது, இந்த இரண்டு சொற்தொடர்களையும் இணைத்து ‘உயிர்வாழும் இயந்திரம்’ என்று உருவாக்கினேன்” என்கிறார் டாகின்ஸ்.
டாகின்ஸ் டின்பெர்கெனுடன் ஒரு சிறந்த குரு-சிஷ்ய உறவை வளர்த்துக்கொண்டார். சிறிதுகாலம் பெர்க்லி- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்த பின் மீண்டும் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே சேர்ந்துகொண்டார். அங்கே அவர் புதுக்கல்லூரியில் Fellow வாகவும் ஆனார். (இன்றும் அங்கேயே ஆசிரியராக இருக்கிறார்)
இயற்கையின் இயந்திரத்தனத்திலும், இயந்திரத்தின் இயற்கையையிலும் அவரது இரட்டை ஆர்வம், மூலக்கூறு உயிரியலின் மகத்தான முன்னேற்றத்தின் நடுவில் தொடர்ந்தது.
1953 ஆம் வருடம் ஜேம்ஸ் வாட்ஸன் , பிரான்ஸிஸ் க்ரிக் இருவரும் இரட்டை சுழற்கோட்டை (Double helix) கண்டுபிடித்தபின், அறிவுப்பூர்வமான விவாதங்களுக்கு, மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானிகளே (விலங்கியலாளர்களையும், ஒழுக்கவியலாளர்களையும் முந்திக்கொண்டு) தலைமை தாங்கினார்கள். ஒவ்வொரு ஜீனும் ஜீனோமும் என்ன செய்கிறது என்பதை கண்டுபிடிக்கவும் அதை விவரிக்கவும், இரட்டை சுழற்கோடு உதவியதால், இயற்கையை அறியும் வழி மாபெரும் புரட்சிகண்டது. மிருகங்களையும், தாவரங்களையும் பல நூற்றாண்டுகளாக அறிவியல்ரீதியில் பரிசோதனைச்சாலைகளில் வளர்த்ததன் மூலம், ஒரு உயிரின் ஜீனோமுக்கும், அதன் நடத்தைகளுக்கும் உள்ள நெருங்கியத்தொடர்பு நன்றாகவே அறியப்பட்டிருந்தது. இதனால் பரிணாமத்தை விளக்கும் thoeryகளுக்கு இரட்டை சுழற்கோடு ஒரு புதிய scaffold ஆனது.
இளைய டாகின்ஸ்க்கு டின்பெர்கனின் ஒழுக்கவியலே உலகத்தை பார்க்கும் கண்ணாடியானது. கோழிக்குஞ்சுகளின் நடத்தைகளை டாகின்ஸ் தனித்தனியே பிரிக்கவும், அவற்றை விளக்கவும் முனைந்தார். அதே நேரத்தில் அவரது ஆராய்வு எண்களை Eliot 803 என்னும் கணிப்பொறியில் ஓட்டை நாடா கொண்டு ஆராய்ந்தார். இந்த இயந்திர உவமானம் டின்பெர்கெனின் கருத்துருவங்களை வலுப்படுத்தியதோடு டாகின்ஸின் சொந்த கருத்துருவாக்கமான ஜீனின் முக்கியத்துவத்தோடு பற்றவைத்துக்கொண்டன. “உயிர்பிழைக்கும் இயந்திரம், ஜீனின் இயந்திரமாக அறுதியாக்கப்பட்டால், அறிவியற்சிந்தனை என்னவாகும்?”
இந்த புதிய கருத்துருவாக்கங்களின் மத்தியில் ரிச்சர்ட் டாகின்ஸ் ஒரு ஒழுக்கவியலாளரிலிருந்து ஒரு பரிணாம உயிரியலாளராக விரைவாக மாறினார். 1965இல் மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளை உருவாக்கக்கூடிய, ஆனால் எளியதாக புரிந்துகொள்ளக்கூடிய ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கினார். டாகின்ஸ் “ஜீனின் ஒழுக்கவியல்”(Ethology of Gene) என்று ஒன்று உண்டு என்றார். எவ்வாறு ஜீன்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன? ஜீன் கள் தனியே இருக்கும் போது அவற்றின் நடத்தைகளுக்கும் கூட்டத்தில் இருக்கும் போது அவற்றின் நடத்தைகளுக்கும் ஏன் வித்தியாசம் இருக்கின்றது? எவ்வாறு ஜீன் கள் கூட்டுறவு கொள்கின்றன? எவ்வாறு ஜீன்கள் போட்டி போட்டுக் கொள்கின்றன? எந்த கேள்விகளை ஒழுக்கவியலாளர்கள் கோழிகளைப் பற்றியும் வாத்துகளைப்பற்றியும் குரங்குகளைப்பற்றியும் கேட்கிறார்களோ அதே கேள்விகளையே ஜீன்களைப்பற்றியும் ஜீனோம்களைப்பற்றியும் கேட்கவேண்டும் என்றார்.
இவருக்கு முன்னால் பலர் இந்த கருத்தோடு விளையாடி இருக்கிறார்கள். ஆனால் டாகின்ஸ் இந்த கருத்தை தனதாக்கிக்கொண்டு அதை வலிமையாக அறிவியற்கலாச்சாரத்தின் முன்னணி சிந்தனையாக உருவாக்கினார்.
உண்மையான முதல் ஜீன் ஒழுக்கவியலாளரான டாகின்ஸ், பரிணாம உயிரியலாளரானார். கால வெள்ளத்தில், ஜீன் கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன? எந்த ஜீன் முன்னுக்கு வருகின்றது? எந்த ஜீன் இறந்து போகிறது? எது கூட்டுறவு கொள்கிறது? எது போட்டி போடுகிறது? எது மாறுகிறது? எது அப்படியே இருக்கிறது? – இதுவே செய்திகளின் நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பரிணாமத்தின் definition என்றார்.
1976இல் டாகின்ஸ் “சுயநல ஜீன்” புத்தகத்தை வெளியிட்டபோது, இது விவாததை மேலும் சூடு பிடிக்கச் செய்தது. மனிதர்கள் (மனிதர்களின் நடத்தைகள்) இயற்கையால் ஆளப்படுகிறார்களா? வளர்ப்பால் ஆளப்படுகிறார்களா? முக்கியமாக இந்த விவாதம் முன்னுக்கு வந்துகொண்டிருந்த சமூக உயிரியலாளர்களால் தீவிரமாக பேசப்பட்டன. (ஹார்வர்ட் சமூக உயிரியலாளரான எட்வர்ட் ஒ வில்சனின் 1975 வருடத்திய சமூக உயிரியல் புத்தகம்). ஜீனின் ஒழுக்கவியலை பேசியதன்மூலம், டாகின்ஸ், ஒரு தனி மிருகத்தை பரிணாமத்தின் அடிப்படை பொருளாக பார்ப்பதிலிருந்து, ஜீன்களின் இயற்கை, வளர்ப்பு, நடத்தைக்கு விவாதத்தை நகர்த்தினார். “சுயநல ஜீனின்” மூலம், விஞ்ஞானிகளுக்கு கணிதரீதியான மூலக்கூறு உயிரியலுக்கும், விவரங்களின் தொகுப்பான விலங்கியல், மனவியல், சமூகவியல் ஆகியவற்றுக்கும் ஒரு பாலத்தை கொடுத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், “சுயநல ஜீன்” உவமானம், மனித -விலங்கு நடத்தைகளை ஆராய ஒரு சுற்றுப்புறத்தை தந்தது. ஜீன்களின் உள்ளுறவுகளை ஆராய ஒரு கட்டுமானத்தையும் தந்தது. இந்த உவமானம் , இரட்டை கோட்டை, மனித உள்ளுறவுகளாக மாற்றித்தந்தது.
பூமியிலுள்ள உயிரினங்களின் வளமையையும், அவற்றின் சிக்கலான வடிவமைப்புகளையும் பார்க்கும்போது, ஜீன் களின் ஒழுக்கவியல்மட்டுமே பரிணாமத்துக்கு காரணமாக இருக்கமுடியாது என்பதை டாகின்ஸ் எளிதாக ஒப்புக்கொள்கிறார். எனவே கலாச்சார டார்வினியச் சிந்தனையையும் சேர்த்துக்கொண்டார். வில்லியம் பர்ரோஸின் (William Burroughs) எளிய சொற்தொடரான “மனத்தின் கிருமிகள்” என்பதை மீம் (meme) என்ற கருத்துருவாக்கமாக விவாதித்தார். ஜீன்கள் உயிரியல் heriditory காரணிகளாக இருப்பதுபோலவே மீம்கள் கலாச்சார heriditory காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஜோதிடத்துக்கான மீம் ஒரு மனிதனின் மனத்தின் ஒட்டுண்ணியாக இருப்பது, ஒரு கொக்கிப்புழு ஒருவனது குடலில் ஒட்டுண்ணியாக இருப்பது போன்றதே. கருத்துருவாக்கங்கள் ஜீன்களைப்போன்றே போட்டிபோடவும், கூட்டுறவு கொள்ளவும், மாறுவதும், அப்படியே இருப்பதும் போன்ற நடத்தைகளை மேற்கொள்கின்றன. மீம்களும் இயற்கைத் தேர்வுக்கு(Natural selection) கட்டுப்படுகின்றன. மனிதனது பரிணாமம் என்பது ஜீன்கள், மீம்கள் இரண்டின் இரட்டைப்பரிணாமம் என்கிறார் டாகின்ஸ்.
அதுவும் போதுமானதாக இல்லை. டாகின்ஸின் அறிவுப்பிரயாணம் ஜீன் களின் ஒழுக்கவியலையும் மீம்களின் பரிணாமத்தையும் தாண்டி, பரிணாம இயங்கியலின் இயற்கையின் புரட்சிகரமான உட்காட்சிக்கு அவரை ஆராயத்தூண்டிற்று. இந்த கருத்துருவாக்கமும் வியக்கத்தக்கவகையில் எளியது. ஆனால் இது உயிர் என்பதை செய்திகளின் இயக்கமாக அறிந்துகொள்ள ஒரு வலிமையான அறிவுஜீவிக்கட்டுமானத்தைத் தந்தது.
ஜீன் களுக்கும் மீம்களுக்கும் எது பொதுவான குணம் என்று டாகின்ஸ் கேட்கிறார். அவை தம்மைப் போலவே இன்னொரு படிவத்தை உருவாக்குபவை. (Replicators). இதை நாம் படிவாக்கிகள் என்று குறிக்கலாம். இவை பலவேறு விதமான முறைகளில் சந்ததிகளை(அல்லது தம்மைப் போன்ற படிவங்களை) உருவாக்குகின்றன. இவை தமது படிவங்கள் பரவுவதற்காக தமது உலத்தை பாதிது மாற்றுகின்றன. (கம்ப்யூட்டர் மற்றும் உயிரின) வைரஸ்கள் செய்வது போலவே. டாகின்ஸின் மிகவும் வலிமையான கருத்துருவாக்கம் – பரிணாமத்தின் அடிப்படை குறியளவு தனி ஒரு உயிர் அல்ல, ஜீன் அல்ல, ஆனால் இந்த படிவாக்கி என்பதுதான்.
இயற்கைத்தேர்வின் இயங்கியலுக்கு ஒரு தனி உயிரின் பொருத்தமான சூழ்நிலை மட்டுமே முக்கியம் என்பதை dogma வாகக் கொண்ட டார்வினிய பரிணாம விஞ்ஞானிகளுக்கு இது ஒரு நாஸ்திகவாதமாக இருந்தது. ஆனால் இங்கோ, ஒரு உயிரின் உள்ளே மறைந்திருக்கும் படிவாக்கிதான் இயற்கைக்கு முக்கியம்; பரிணாமம் என்பது இந்த படிவாக்கிகளின் வாழ்க்கை வரலாறுதான் என்று டாகின்ஸ் சொல்கிறார்.
டாகின்ஸ் தீவிரமாக இந்த படிவாக்கி கருத்துருவத்தை பரிமாணித்தார். பறவைகளின் கூடுகளின் பரிணாமத்தைப் பற்றி பேசாமல் பறவைகளின் பரிணாமத்தைப் பற்றி பேசுவதும், பீவர் மிருகங்களின் அணைகளின் பரிமாணத்தைப்பற்றி பேசாமல், பீவர்களின் பரிணாமத்தைப் பற்றி பேசுவதும் அடிப்படையில் நகைப்புக்கிடமானது என்றார். ஒன்று மற்றதன் உயிர்வாழ்வுக்கு தேவையானது. இந்த பறவை-கூடு , பீவர்-அணைகளின் கூட்டுறவுதான் அதைக்கட்டும் மிருகங்களிக்கான போட்டி முனைப்பை தருகின்றன. ஜீனின் கட்டளைகளை உயிரினத்தின் உடல் கேட்பது போலவே, அந்த உயிர் தனது வாழ்வெளியில் கட்டும் கட்டுமானங்களும், உபயோகப்படுத்தும் பொருட்களும், அந்த உயிரினத்தை பாதிக்கின்றன. இந்த அர்த்தத்தில், முட்டை கோழியையும், அதன் கூட்டையும் இன்னொரு முட்டை செய்ய பயன் படுத்திக்கொள்கிறது. எனவே பறவைக்கூடு முட்டையின் இன்னொரு பரிணாம நீட்சிதான்.
உயிரியலில், முட்டையினுள் இருக்கும் ஜீன்கள் அதன் ஜீனோடைப் (genotype) என்று அழைக்கப்படுகின்றன. அந்த ஜீனின் புற உலகு வெளிப்பாடு, அதாவது கோழி, அதன் பீனோடைப் (phenotype) என்று அழைக்கப்படுகிறது. உயிரினம் (பறவை), அது உருவாக்கும் கட்டுமானம் (பறவைகூடு) இரண்டின் இணைப்பை டாகின்ஸ், நீண்ட வெளிப்படைப்பு (Extended phenotype) என்று அழைத்தார். (அவரது இரண்டாம் புத்தகத்தின் தலைப்பு, 1982) இந்த நீண்ட வெளிப்படைப்பு கருத்துருவாக்கம் கொண்டு, உயிரினம், அது உருவாக்கும் அதன் குடும்பம், அதன் சமூக அமைப்பு, அதன் கருவிகள், அதன் சுற்றுப்புறம், அணைத்தையும் இணைத்தார். இவை அனைத்தும் படிவாக்கியின் லௌகீக வெளிப்பாட்டின் பகுதிகள். கண்ணுக்குத்தெரியாத ஜீன்களின் உள்ளே எழுதப்பட்டிருக்கும் program, தான் வாழ வெளியுலகின் பெரும் பகுதிகளை மாற்றுகின்றன.
மனித இனம் தன் கையிலுள்ள மாபெரும் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் காரணமாக மற்றெந்த உயிரினத்தைவிட நீண்ட வெளிப்படைப்புகளைக் கொண்டுள்ளது. பறவையின் கூடு, பீவரின் அணை, வளை எலியின் சுரங்கப்பாதைகள் போன்றே, நமது தொழில் நுட்பமும், நமது பரிணாமத்தின் பிரிக்க இயலா அங்கம். டாகின்ஸின் சிந்தனை காரணமாக ஒரு விஞ்ஞானி மனிதத் தொழில்நுட்ப பரிணாமத்தை விட்டுவிட்டு மனிதனது பரிணாமத்தை மட்டும் பேசுவது அர்த்தமில்லாததாகிவிட்டது. மனிதன் தன் கருவிகளுடன் கூடவே பரிணமிக்கிறான் என்பதே டாகின்ஸின் கருத்து. கருவிகளுடன் பரிணமிக்காத ஜீன்கள் அழிந்துபோம்.
நமது பரிணாமப் பார்வையே படிவாக்கியாகும்போது, வாழ்வுக்கு – செயற்கை வாழ்வுக்கு – என்ன நடக்கின்றது? படிவாக்கிகளின் சுற்றத்தோடும், படிவாக்கிகளின் வலைத்தொடர்போடும் உயிர்வாழ்வையும், அதன் பரிணாமத்தையும் கட்டியதனால், டாகின்ஸ், உயிரியலையே தனது அடிப்படை சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறார். நமது தொழில்நுட்பம், நமது ஜீன்களின் தேவையா, அல்லது, நமது ஜீன்கள் மற்றும் மீம்களின் கலாச்சார சதியா? நாம் உருவாக்கி, நாம் வாழும் தொழில்வெளியை, நமது DNA (ஜீன்கள்) கட்டுப்படுத்துகின்றனவா? நரம்பு வாயுவும் (Nerve gas), microprocessorகளும் நமது சுயநல ஜீன்களின் வெளிப்பாடு என்று சொல்வதன் மூலம் நாம் என்னத்தை அர்த்தப்படுத்திக்கொள்கிறோம்? குழந்தை உருவாதலியல் (Embryology) , நரம்பு உடலியல் (Neurophysiology) போன்றவைகளின் ஜீன் அடிப்படைகளை விஞ்ஞானிகள் தேடுவது போலவே மேற்கண்ட கேள்விகளையும் கேட்கவேண்டும் என்கிறார் டாகின்ஸ்.
உயிர்வாழ்வுக்கு மறுவிளக்கம் தரும் டாகின்ஸ், தனது புத்தகத்துக்கு “படிவாக்கிகளின் தோற்றம் ” (Origin of replicators) என்று பெயர் சூட்டி , டார்வினுக்குப்பின்னர் ஒரு அறிவியற்புரட்சிக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் டாகின்ஸ், டார்வினை இது போல் கேலி செய்யும் மாதிரியான ஆள் அல்ல. ஏனெனில், டாகின்ஸ், டார்வினின் இயற்கை தேர்வு தத்துவங்களின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். ஏற்கெனவே, அவரது இந்த புரட்சிகரமான சிந்தனை, சிறப்பான மீம்-ஆக மனித மனங்களில் வெகு வேகமாக படிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
டாகின்ஸ் 1987இல் லாஸ் அலமோஸ், நியூ மெக்சிகோவில் நடந்த முதல் செயற்கை உயிர்வாழ்வு கருத்தரங்கில் “பரிணாமத்தன்மையின் பரிணாமம்” என்ற கட்டுரையை வாசித்தார். இந்த கட்டுரை , பரிணாமத்தன்மை என்பது ஒரு குணம் என்றும், அது பரிணாமத்துக்கு இயற்கைத்தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது என்றும் விவாதிக்கிறது. ஜீன் மூலமான சுற்றுப்புறத்தால் பாதிக்கப்படக்கூடியத்திறமை (உதாரணமாக புணர்தல்) ஒரு உயிரினத்தின் பரிணாமப் பொருத்தத்துக்கு பெரும் அளவில் உதவுகிறது. செயற்கை உயிர்வாழ்வு பற்றி ஆராயும் குழுவில் டாகின்ஸின் அந்த கட்டுரை படித்தே ஆக வேண்டிய முக்கியமான ஒன்று. அவரது பல்வேறு துறைகளில் இருக்கும் அறிவும் திறமையும் அவற்றை இணைக்கும் அவரது குணமும், ஜனரஞ்சக வாசகர்களால் மட்டுமன்றி, அவரது சக அறிவுஜீவிகளான ஸ்டீபன் ஜே கோல்ட், மார்வின் மின்ஸ்கி, ரோஜர் பென்ரோஸ் போன்றோராலும் தீவிரமாக கவனிக்கப்படுகிறார்.
54 வயதில், டாகின்ஸிற்கு சில சிஷ்யர்கள் இருக்கிறார்கள். செயற்கை உயிவாழ்வில் புதுமையான சிந்தனைக்கும், ஆராய்சிக்கும், தானே பரிசு கொடுப்பதை விரும்புகிறார். மின் அஞ்சலின் மூலம் பேசும்போது, அவர் தனது கருத்தை இவ்வாறு தெரியப்படுத்தினார். ” கண்ணுக்கு அழகான உலகமும், அதில் வாழும் 3 பரிமாணங்கள் கொண்ட உயிரிகளும் இருக்கும் கம்ப்யூட்டர் நிரலுக்கு என் பரிசு. இந்த உயிரிகள், தட்பவெப்பம் போன்ற உயிரற்ற விஷயங்களுக்கு மட்டுமன்றி, கூடவே பரிமாண மாறுதல்கள் கொள்ளும் மற்ற உயிரிகளின் காரணமாகவும் பரிணாம மாறுதல்களை அடைய வேண்டும்.”
July 1995
- ஒளிர்ந்து மறைந்த நிலா
- இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன
- அன்புள்ள ஆசிரியருக்கு
- மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள்
- குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்
- திண்டுக்கல் சோதிடரும் மழையும்
- எங்கே மகிழ்ச்சி ?
- பேட்டிகள் : தின கப்சா விற்கு மட்டுமே கிடைத்தவை.
- ஜெயலலிதா பிரதமரானால்
- ஆன்மீகமும் யூத எதிர்ப்பும் பற்றிய உரையாடல்
- ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins)
- செவ்வாய் கிரகத்தின் கடந்த காலம்
- 2001 க்கு அப்புறம் – ஆர்தர் சி கிளார்க்
- ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..