ஆசாரகீனன்
ரவி ஸ்ரீநிவாஸின் கடிதத்துக்கு சரியாகப் பதிலளிக்க ஒரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டும். அவர் சாமர்த்தியமாக எழுப்பும் கேள்விகளின் இயல்பு அப்படி. அதாவது லிபரலிஸம், ஹிண்டு பத்திரிகையின் தார்மீகக் கோட்பாடுகள், பத்திரிகைகளின் தர்மங்கள், இடதுசாரியை யார் எப்படி விமர்சிப்பது, விமர்சிப்பவரின் தகுதி, புத்தியின் அளவு, இதர இடதுசாரி பத்திரிகைகளின் அறிவின் ஆழ, அகல கன பரிமாணங்களோடு ஒப்பிட்டால் என் பரிமாணங்கள் என்ன கதியில் உள்ளன, இத்தியாதி கேள்விகளை ஒரு சிறு கடிதத்தில் எழுதி விட்டு நான் என்ன செய்கிறேன் என்று வேடிக்கை பார்க்கிறார்.
இது உலகெங்கும் இடதுசாரிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஒரு உத்தி. அதையே வலதும் செய்யும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. தொடர்ந்து நடக்கும் விவரத் தொகுப்புகளில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளைப் பற்றி அவற்றின் வாசகர்களுக்குத் தெரியக் கூடிய சில விவரங்களைக் கூடத் தமக்குத் தெரியாதது போலவும் அவற்றைத் தொகுத்துத் தருவது என் வேலை என்பது போலவும் ர.ஸ்ரீ. எழுதுகிறார்.
தொகுப்பது எளிது என்றாலும், ஏற்கனவே செய்து வரும் வேலைகளை நிறுத்தி விட்டு அதைச் செய்ய வேண்டும். மேலும் இதற்கு நேரம் நிறையப் பிடிக்கும். இது ரவி ஸ்ரீநிவாஸ் போன்ற அரைப் பக்கக் கடித எழுத்தாளர்களின் நேரடி நோக்கத்துக்குத் துணை செய்வதாகும்.
அதாவது சமூக அவலங்களில் என் கருத்தில் முக்கியமானவை என்று நான் கருதுவதைச் சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு ர.ஸ்ரீ. போன்றோரின் கருத்தில் எதெல்லாம் முக்கியமானவையோ அவற்றை நான் கருதிப் படித்து ஆய்ந்து அவற்றை எல்லாம் உடைத்து அல்லது எதிர்த்து எழுதி விட்டுப் பிறகு என் கருத்துகளைச் சொல்ல முன்வர வேண்டும்.
ஹிண்டுவும் அதன் தொகுப்புப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனும் இந்திய தேசியத்துக்கு எதிரானவை என்பது என் கருத்து. இதை நிறுவ ஏராளமான விவரங்கள் தேவை இல்லை. ஹிண்டுவிலும், ஃப்ரண்ட்லைனிலும் வெளியாகும் கருத்துப் பக்கங்களையும், தலையங்கங்களையும் தொடர்ந்து படித்தால் சில விவரங்கள் எளிதாகத் தெரியும். சீனா, பாகிஸ்தான், பங்களாதேசம், ஏன் மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம், காஷ்மீர் ஆகிய பிற நாடுகளோடு இந்தியா சுமுக உறவு கொள்ள ஒரே வழி இந்தியா இந்த நாடுகள் கேட்கும் நிலப் பகுதிகளை அவற்றிற்குத் தாரை வார்த்துவிட்டு தன்னையே சிதிலமாக்கிக் கொள்வது அவசியம் என்பது மேற்படி பத்திரிகைகளின் பல வருட நிலைப்பாடு. சுப்ரமணியன் சுவாமி, நூரானி, மேலும் என்.ராம் போன்றவர்கள் இந்தப் பத்திரிகைகளில் எழுதும் பத்திகளில் இக் கருத்துகள் அடிக்கடி வெளிவருகின்றன.
அதாவது, ஏற்கனவே தன் நாட்டின் மீது அவ நம்பிக்கை மேலும் காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்து விதைக்கப்பட்ட சுய சந்தேகம், திக்கற்ற அலைப்பு ஆகியனவற்றுக்கு இரையாகி இந்தியாவைக் குலைக்கவும், இந்தியாவை அன்னிய ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக்குவதற்கும், இந்தியாவின் சில ஆயிரம் ஆண்டு வரலாற்றில் சேமிக்கப்பட்ட ஆதாரப் பண்பாட்டுக் குவிப்பை அழித்தால்தான் சரி என்று கருதும் ஒரு பெரும் கூட்டம் எதையெல்லாம் முக்கியம் என்று கருதுகிறதோ அதையே நானும் முக்கியமாகக் கருத வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார் என்று எனக்குப் படுகிறது. நன்றி. அதற்கு நான் தயாரில்லை.
இந்தியாவின் மேல் அரபு, சீன ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிக்க வழி செய்யும் எந்தப் பாசறையினரையுமோ, அல்லது அவர்களின் வால்பிடிகளையோ நான் கருதிக் கொண்டு இருக்கத் தயாரில்லை. அந்த வழியில் போனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒரு கூட்டம், தன்னை முற்போக்கு என்றும் பிறர் எல்லாரையும் பிற்போக்கு என்றும் பட்டம் சூட்டி விட்டு அதை உண்மை என்றும் தானே நம்பிக் கொண்டு அலைகிறதே அதன் வால் பிடிப்பாளராக நான் ஆக நேரும். ரவி ஸ்ரீநிவாஸிற்கு அது மிகவும் உவப்பாக இருக்கலாம் எனக்கு வேறு அக்கறைகள் இருக்கின்றன.
எந்த மத சார்பும், மொழி அடையாள வெறியும், அடிப்படைவாதக் குருட்டுத்தனமும் எனக்கில்லை. ஆனால் அதனால் இந்திய தேசியம், அதன் ஒருமை, மேலும் இந்திய சமுதாயத்தின் இருப்பு ஆகியனவற்றை அழிக்க இந்தியாவில் தற்போது நடக்கும் இயக்கங்களையும் இதர அடிப்படைவாதங்களையும் முற்போக்கு என்று கருதி மயக்க நிலையில் இருக்கவும் நான் தயாரில்லை. அடிப்படைவாதங்களில் இந்து அடிப்படைவாதம் மட்டும்தான் எதிரி, பிற அடிப்படைவாதங்கள் முற்போக்கு என்று கருதும் குருட்டுத்தனமும் எனக்கு இல்லை.
இதுதான் என் உண்மையான அக்கறை என்பது தெளிவாகவே என் பல கட்டுரைகளில் தெரியும். அவற்றைப் படித்துப் பார்த்தால் ரவி ஸ்ரீநிவாஸிற்கு அது புலப்பட்டு இருக்கும். அவர் அந்த வேலையைச் செய்யத் தயாராக இல்லாமல் என் மீது மேலும் வேலையைச் சுமத்தும், திசை திருப்பும், மேலும் என் சக்தி நேரம் ஆகியவற்றை விரயம் செய்யும் வேலையில், அதுதான், பல ‘முற்போக்குகளுக்கு ‘ மிகவும் கை வந்த வேலையைத் திறம்படவே செய்ய முயன்று இருக்கிறார். நான் அவரது சோம்பல் முயற்சிக்குப் பலியாகத் தயாராக இல்லை. இங்கு ஒரு சிறு அளவில் என் பதிலைத் தருகிறேன். மற்றபடி அவர் எழுப்பிய கேள்விகளில் பலவற்றைக் குறித்து வேறு கோணங்களில் நான் ஏற்கனவே தகவல் திரட்டுவதும், ஓரளவு தொகுப்புக் குறிப்புகள் எழுதுவதும் என்று ஓர் ஆவண முயற்சியைக் கைக் கொண்டு இருக்கிறேன். அது தன் போக்கில் வெளி வரும். இடமும், காலமும் கை கூடும்போது அவை பிரசுரமாகும்.
(அவரது கடிதத்தில் சில வரிகளைக் கீழே வேறு எழுத்துகளில் குறிக்கிறேன்.)
‘இடதுசாரிகளையும், இந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம், அதற்கு முஸ்லிம் பெண்களை ஒரு சாக்காக பயன்படுத்த தேவையில்லை. ‘
இடதுசாரிகளையும் ஹிண்டு செய்தித்தாளையும் ஒரு குறிப்பிட்ட பின்னணியில் வைத்து விமர்சிப்பது அவசியம் இல்லை என்றும் பொதுவாக விமர்சிப்பது போதும் என்றும் ர.ஸ்ரீ. கருதலாம். முஸ்லிம் பெண்களைச் சாக்காகப் பயன்படுத்துகிறேன் என்றும் அவர் கருதலாம். ஆனால் இந்து மதம், இந்துப் பண்பாடு, இந்து அடிப்படைவாதம், இந்திய தேசியம் என்று குறிப்பிட்ட பின்னணியில் வைத்துத் தன் விமர்சனங்களையும், தன் ஏவலுக்கு எழுதும் விமர்சகர்களையும் வைத்து ஹிண்டு பத்திரிகை தொடர்ந்து ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது ர.ஸ்ரீ. அதற்கு ஏதும் எதிர்வினை தெரிவித்ததாக எனக்குத் தெரியவில்லை. அந்த விமர்சனங்களோடு அவர் ஒத்துப் போகிறார் என்று நான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய செய்திகளோடு ஹிண்டு பத்திரிகையின் கோழைத்தனத்தைச் சுட்டும்போது உடனே ர.ஸ்ரீ. ஹிண்டுவின் பாதுகாப்பிற்கு ஓடோடி வருகிறார். அடிப்படைவாதத்தில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவம், மார்க்சிய லெனினியம், தமிழ் தேசியம், திராவிடம் என்று பாகுபாடு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஹிண்டு பத்திரிகை இதர முற்போக்குகளைப் போலவே இந்தியா, இந்து சமூகம் ஆகிய இரண்டை மட்டும்தான் தாக்கத் தயாராக உள்ளது – அதாவது யார் வேண்டுமானாலும் கல்லெறிந்தால் பட்டுக் கொள்ளத் தயாராக உள்ள கோழைகள் இந்த இலக்குகள் என்பது இந்திய முற்போக்குகளுக்கு நன்றாகவே தெரியும். அதை ர.ஸ்ரீ. தெளிவாக்குகிறார்.
ஆனால் இந்தியாவை எதிர் நோக்கும் பல அபாயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முக்கியமான ஒன்று என்பது என் கருத்து. அதைக் கருதக் கூடத் தயாராக இல்லாத மூடர்களை, அதாவது இடது+ஹிண்டு கூட்டத்தை விமர்சிக்க எனக்கு உரிமை ஏதும் இல்லை என்று அவர் கருதலாம். நான் ஏன் அதற்கு ஒப்ப வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. உலகெங்கிலும் இன்று உலவுகிற அபாயங்களில் இஸ்லாமியத் தீவிரவாதமும், அதன் மோசமான பதிப்பான வஹாபியமும் வலுவாக எதிர்க்கப்பட வேண்டிய அபாயங்கள். இவை மற்ற எவரையும் விட முஸ்லிம்களையே அதிகம் வன்முறைக்குப் பலியாக்குகின்றன. ஆனால் போகிற போக்கில் இவை அழிக்கப் போகிற நாடுகள், பண்பாடுகள் என்று கணக்கிட்டால் இந்தியா தற்போதைக்கு முதல் சில இடங்களில் உள்ளது என்பது என் மதிப்பீடு. இது ர.ஸ்ரீ. கருத்தில் தவறாக இருந்தால் எனக்கு அது பற்றி ஏதும் கவலை இல்லை. ஓர் இந்திய முற்போக்கு இப்படித்தான் அசட்டையாக இருப்பார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.
இரண்டாவது, இன்றைய தேதியில் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் கருத்துலகில் ஆதிக்கம் செலுத்துவது மேற்படி ‘முற்போக்குகள் ‘தான் என்பது என் மதிப்பு. நடப்பு அரசியல் அல்லது யதார்த்தம் என்று கணக்கிட்டால் இவர்களெல்லாம் முற்போக்குகளே அல்ல. வழக்கமான மத்திய வர்க்க நாற்காலிப் புரட்சிக்காரர்கள்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இன்னொரு தலைமுறையின் தன்னம்பிக்கை, முன்முயற்சி, மேலும் உலக அரங்கில் அவர்கள் தம்மையும் இந்தியாவையும் முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்ளக் கூடிய பெரு முயற்சிகள் ஆகியவற்றை முளையிலேயே கருக்கி விடுவார்கள் என்று நான் கவலைப்படுவதால் இந்த கவைக்கு உதவாத முற்போக்குகளை எதிர்க்க வேண்டி இருக்கிறது. இவர்களோடு செல்லும் நபர்களில் நிறைய செயல் திறமை உள்ளவரும், இந்தியா என்னும் நாட்டின் எதிர்காலம் குறித்துக் கவலையும் அதற்காக சீரிய முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவர்கள் இருப்பதால் அவர்களையாவது வாய்ச் சொல் வீரர்களின் இரும்புப் பிடியில் இருந்து விலக்க முடிகிறதா என்று பார்க்கும் முயற்சிதான் என்னுடையது.
ஆக இந்த ‘வீரர் ‘களின் வழி தவறுதல்களையும், பொய்களையும், இரட்டை வேடங்களையும் விமர்சிப்பது என் கடமை என்றும் நான் கருதுகிறேன். இதைச் செய்வதாலேயே நானும் ஒரு இந்துத்துவா, அல்லது பிற்போக்குவாதி என்று முத்திரை குத்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அது நிலவும் அரசியலின் இயல்பு. அதை நான் சட்டை செய்யத் தயாரில்லை. இது என்னைப் பற்றியதே அல்ல. என், என், என் என்று சுய வீக்கம் என்னிடம் இல்லை. கருத்துகள் இடையே நடக்கும் போராட்டமாகத்தான் நான் இங்கு நடக்கும் பரிமாற்றங்களைக் கவனிக்கிறேன். மேலும் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் குழுக்களின் நடத்தை மற்றும் சக்தி சேகரிப்பு போன்ற இயக்க விவரங்களைக் கவனிக்கிறேன். இதில் என் மீது குத்தப்படும் முத்திரைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல.
மற்றபடி இந்து அடிப்படைவாதம், அதன் குருட்டுத் தனங்கள், அறிவீனங்கள் ஆகியனவற்றைப் பிறர் விமர்சிப்பதை நான் குறை சொல்லி ரவி ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்க முடியாது என்பது தெளிவு. இந்திய அரசு, அதன் ஆட்சி இயந்திரங்கள், ஆளும் கட்சிகள், ஆளும் குழுக்கள், இந்திய முதலாளிகள், இந்திய நிலச் சுவான்தாரர்கள் என்று ஒரு பெரும் அமைப்பின் 50 ஆண்டு கால இடக்கு மடக்குகள், குழப்படிகள், மேலும் மக்கள் எதிர்ப்புக் கொள்கைகள் ஆகியவற்றை விமர்சிப்பதையோ அல்லது எதிர்ப்பதையோ நான் விமர்சிப்பதும் இல்லை. எந்த இடத்தில் இருந்து, என்ன பார்வையை வைத்து, என்ன எதிர்கால நோக்கை வைத்து மேற்படி விமர்சனங்களை மேற்கொள்வது என்பதுதான் பிரச்சினை. நான் ஜனநாயக சமுதாயத்தின் பால் நிற்கிறேன். ஆனால் எது ஜனநாயகம், எப்படி அது இயங்குகிறது, எதெல்லாம் இன்றைய நிலையில் இந்தியாவில் சாத்தியம், எவை சாத்தியம் இல்லை என்பன நீண்ட விவாதங்களுக்குப் பிறகே நம்மிடையே தெளிவாக வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தெளிவு ஏற்படக் கூடாது என இயங்கும் ஒரு கூட்டம் இந்தியாவில் பல திக்குகளில் இருந்தும் இயங்குகிறது என்பது என் கருத்து. இதில் இடதின் செயல் மறுப்பு இயக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. வலதின் பாசிசம் குறித்துத் தனியே நான் சொல்ல அதிகம் இல்லை. இந்தியாவில் இன்று பிரசுரமாகும் பக்கங்களில் ஒரு 80 சதவீதம் இந்தப் பாசிசத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்குகிறது என்றாலும், தனிப்பட்ட நபர் என்ற அளவில் இந்த விமர்சகர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இதே பாசிசத்துடன் சமரசம் செய்துதான் வாழ்கின்றனர். அதுதான் பிரச்சினையின் ஆணி வேரே.
என் கட்டுரைகளின் உள் நோக்கம் எதுவும் பெரும்பான்மை வாதமோ அல்லது எந்த வகை பாசிசமோ இல்லை என்பதும் தெளிவு. குறைந்த பட்சம் எனக்கு அது தெளிவு! மாறாக ர.ஸ்ரீ.ன் அபிமானக் குழுக்களான திராவிட இயக்கங்கள், இந்தியாவில் இன்று தீவிரமாகி வரும் அரபி ஏகாதிபத்தியத்தின் வால்பிடிப்பாளர்கள், மேலும் சீன ஏகாதிபத்தியத்தின் இந்தியத் தரகராக வேலை செய்ய முனைந்து வரும் ஹிண்டு பத்திரிகை (அதன் கூட்டுப் பதிப்பான ஃப்ரண்ட்லைன்) ஆகியோருக்கு பெரும்பான்மை பாசிசத்தில் மிகவும் தேர்ச்சி உண்டு. எப்படி எதிர் கருத்துகளை உடனடியாகத் தாக்கியோ அல்லது அவற்றை இருட்டடிப்பு செய்தோ ஓரம் கட்டுவது என்பதில் இந்த வகைக் குழுக்களுக்கு கிட்டத்தட்ட நூறாண்டு கால பயிற்சி உண்டு. என் மீது பாயாமல் அங்கே போய்த் தன் திறமையைக் காட்டினாரானால் அது பயன் தரும்.
‘ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி இந்து எழுதவில்லை என்பதைக் குறிப்பிடும் அவர் இந்துவில் அம்பை உட்பட பலர் முஸ்லீம் பெண்களின் நிலை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெண்ணுரிமை விரோதப் போக்கினை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதை ஏன் குறிப்பிட மறுக்கிறார். அஸ்கார் அலி இன்ஜியர் உட்பட பலர் இந்துவில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்கள். இந்த விதத்தில் இந்துவை ஒரு லிபரல் பத்திரிகை என்றே நான் கருதுகிறேன். ‘
எனக்குத் தெரிந்து அம்பை முஸ்லிம் பெண்கள் நிலை குறித்து இரண்டு கட்டுரைகள் ஹிண்டுவில் எழுதி இருக்கிறார். ஒன்று அதில் ஆணாதிக்கம் குறித்தது. அதாவது முஸ்லிம் சமுதாயம் பெண்களை ஒடுக்குகிறது என்று பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்க முயலும் சல்மா போன்ற கவிஞர்களும் இதர முஸ்லிம் பெண்களும் நடத்திய ஒரு கூட்டத்தை எப்படிப் பழமைவாத முஸ்லிம்களும், முற்போக்கு போல நடித்து ஆனால் பெண்களின் குரலையோ, அல்லது அவர்களது கருத்தையோ கருதக் கூடத் தயாரில்லாத ஆண்களும் ஹை-ஜாக் செய்ய முயன்றார்கள், எப்படி அக்கூட்டத்தில் தமது குரலையும் தமது செயல் திட்டத்தையும் ஆட்சி செய்ய வைக்க முயன்றார்கள் என்றும் அவர் எழுதினார். இது ஹிண்டுவில் வெளியானது என்பது அதிசயம்தான். ஆனால் எங்கு வெளியானது ? வார மறுபார்வை பக்கத்தில், பண்பாடுகள் பற்றிய ஒரு பக்கத்தில் வழக்கமான பத்தியாக அம்பை எழுதும் ஒரு இடத்தில் வெளியாகிறது. இதை ஒரு முக்கியமான செய்தியாகவா ஹிண்டு வெளியிட்டது ?
இரண்டாவது கட்டுரையில் ஜமாஅத்தில் ஆண்கள் பெண்களின் குரலையே கேட்க விடாமல் செய்கிறார்கள், மேலும் பள்ளி வாயில்களில் பெண்களை நுழைய விடுவதில்லை என்று கோரி, ஜமாஅத்தில் தக்க இடமும், பள்ளி வாயில்களில் சுதந்திரமாக நுழைய அனுமதியும் கோரி ஒரு முஸ்லிம் பெண்ணியக்கம் நடத்தும் ஒரு போராட்டம் குறித்து அம்பை எழுதியது வெளி வந்திருந்தது. கவனித்தால் ஒன்று தெரியும். இந்த இயக்கம் நடந்து வருவது பல மாதங்களாக. இது குறித்து ஹிண்டுவில் ஒரு செய்திப் பத்திரிகை என்ற அளவில் பல மாதங்கள் முன்பே செய்தி வந்திருக்க வேண்டும், அப்படி ஏதும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. இது குறித்து ஒரு நீண்ட தகவல் கட்டுரையை ஹிண்டு வெளியிட்டு இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்ததாகவும் எனக்குத் தெரியவில்லை.
அப்படிச் செய்திகள் வந்து இருந்தால் அம்பையைப் போல வெகு நாட்களாகத் தமிழகத்திலும், இந்தியாவெங்கும் பெண்களின் குரல், செயல்பாடு, வரலாறு, சாதனைகள் ஆகியன எப்படித் தொடர்ந்து உதாசீனப்படுத்தப் படுகின்றன, எந்த அளவுக்கு இது பெண்களை ஒடுக்குகிறது என்பதை நுணுக்கமாகவும் தீவிரமாகவும் கவனிக்கும் ஒரு வரலாற்றாய்வாளருக்கு செய்தியைத் தரும் வேலையை விட அது குறித்து ஓர் ஆய்வாளர் என்ற அளவில் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்த இடம் இருக்கும். மாறாகக் கொடுக்கப்பட்ட ஒரு பத்தி இடத்தில் பாதி இடத்தைத் தகவல் தருவதற்கு அவர் விரயம் செய்ய வேண்டி இருக்கிறது.
அஸ்கார் அலி எஞ்சினியரின் விமர்சனங்களை ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற இஸ்லாமிய ஆதரவாளர்களாக வெளியில் இருந்து கொண்டு, தம் ‘முற்போக்குத் ‘ தனத்துக்குத் தாமே ஷொட்டு கொடுத்துக் கொள்ளும் நபர்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும். அவரை ஒரு முஸ்லிமாக எத்தனை சதம் முஸ்லிம்கள் கருதுவார்கள் என்பது குறித்து எனக்குக் கேள்வி இருக்கிறது. அவர் மட்டும் அல்ல, அவர் எந்த குழுவில் இருந்து வந்தாரோ அந்த மொத்தக் குழுவையுமே முஸ்லிம்கள் அல்ல என்றுதான் சாதாரண முஸ்லிம்கள் கருதுகிறார்கள் என்பது என் கணிப்பு.
இவர்களை இஸ்லாம் குறித்துப் பேச விடுவதே தவறு என்றும் ர.ஸ்ரீ. மற்றும் ஹிண்டு போன்ற தாராள + முற்போக்குவாதிகளின் அபிமானக் குழுக்களான இஸ்லாமியத் தீவிர இயக்கங்கங்கள் கருதுகின்றன என்பதுதான் உண்மை. ஆக எஞ்சினியரின் கட்டுரைகள் வீழலுக்கு இறைத்த நீர்தான். அவை இந்து சமுதாயத்தில் பிறந்தாலும், அதிலேயே வளர்ந்து கொழுத்தாலும், இந்து சமூகத்தைத் தினம் தினம் காலையில் ஏசுவதுதான் முற்போக்கு என்று கருதும் ஒரு கூட்டத்தினருக்கு ஆகா முஸ்லிம்களில் எத்தனை தாராளமான விமர்சகர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் என்று காட்டி மார்பை முன் தள்ளிக் கொள்ள வேண்டுமானால் உதவியாக இருக்கும். மற்றபடி நெருக்கிக் கேட்டால் எஞ்சினியரும் மரபு முஸ்லிம்கள், பழமைவாத முஸ்லிம்கள், அரபுப் பாதை முஸ்லிம்களோடு ஏதும் பெரும் கருத்து மாறுபாடு உள்ளவராக இருக்க மாட்டார்.
இந்தியா இஸ்லாத்தின் கைப்பிடியில் சிக்கி முஸ்லிம் நாடாவதுதான் வரலாற்றுப் பாதையில் அவசியமான நடப்பா என்று எஞ்சினியரிடம் போய் ர.ஸ்ரீ. கேட்கட்டும். எஞ்சினியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே. நிச்சயம் அந்த வகை நேர்காணல் வேடிக்கையாகத் தான் இருக்கும். ‘Token black, token minority ‘ என்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். எஞ்சினியர் முஸ்லிம்கள் நடுவே ஒரு ‘token progressive, token critic ‘ அவ்வளவே. பெருவாரியான சுன்னி, ஷியா முஸ்லிம்கள் எஞ்சினியர் போன்ற விமர்சகர்களின் குரலைக் கேட்பது கூட இல்லை. அவரை எத்தனை முஸ்லிம்களுக்கு, ஏன் படித்த முஸ்லிம்கள் நடுவே கூடத்தான், தெரியும் ? எத்தனை பேர் அவரைப் படித்து இருக்கிறார்கள் ? எத்தனை பேர் அவரை மதிக்கிறார்கள் என்று கல்லூரியில் படித்த ஒரு பத்தாயிரம் முஸ்லிம்கள் நடுவே ‘random sampling ‘ முறையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளைத் தன் மனச் சாய்வு, மதிப்பீடுகள் போன்ற சாயங்கள் பூசாமல் நேர்மையாக ஆய்ந்து நமக்கு ரவி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தால் நலமாக இருக்கும்.
அவர் தன் மிக மிக முக்கியமான தயாரிப்புகளை எல்லாம் ஓரமாக நகர்த்தி விட்டு, பகவத் கீதையைப் பற்றிய தன் ஆழமான ஆய்வுக் கட்டுரையின் தயாரிப்பை 2006-க்குத் தள்ளி வைத்து விட்டு, இந்த கருத்துக் கணிப்பை உடனடியாகச் செய்தால் அதை மிகவும் ரசிப்பவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். கூடவே ஹிண்டு பத்திரிகை ஒரு தாராளப் பத்திரிகையா என்பது குறித்து ஒரு ஆயிரம் பேரிடமாவது தமிழகம் எங்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அதையும் அவர் முடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மேற்படி ஆயிரம் பேரில் ஒரு இரு நூறு பேர் முஸ்லிம்களாக இருந்தால் தமிழகத்தில் இருபது சதவீதம் முஸ்லிம்கள் என்று கருத்துத் தெரிவிக்கும் சில தமிழக முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களோடு ஒன்றுபடுவதைத் தெரிவித்துத் தன் முற்போக்கு அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும் இடம் இருக்கும். எத்தனை நல்ல வாய்ப்புகள் பாருங்கள்!
aacharakeen@yahoo.com
- ஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.
- ஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)
- பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது
- தியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )
- என் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்
- ரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்
- நபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்
- கடிதம்
- சங்கராச்சாரியார் கைதும் முஸ்லிம்களும்:
- சுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி
- கடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்
- கடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்
- லீனா மணிமேகலை – சந்திப்பு – டிசம்பர் 16, 2004
- மெய்மையின் மயக்கம்-28
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி
- ஜமாத் என்றால் என்ன ?
- சீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்
- உருளைக்கிழங்கு உரிப்பவர்கள்
- உன்னால் நான்
- பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்
- அழியத் துடிக்கும் அப்ரஹாக்கள்
- Evaluation of Meera Nanda ‘s articles
- ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி
- தமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு
- கவிக்கட்டு 38-மனிதனைத் தேடி
- ஜே.ஜே. சில விளக்கங்கள்
- ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி
- அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48
- கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…
- மனச்சாட்சியற்றோரிடையே மாதர்க்கு மரியாதை!
- தேம்பித் திரிவர்
- இன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்
- ஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- ஈசனும் ஆசானும்.
- டேவிட் சசூன்
- மாற்றம்
- கீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- உயிர் மலரும்
- சென்னை நகரமோர் செல்வமடி!
- உன்னால் நான்
- பெரிய புராணம் – 20
- கண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா ? அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும
- தமிழில் பறக்கும் குறுஞ்செய்திகள்
- ஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்
- விஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை
- சிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்
- கடற்கரய் கவிதைகள்