மோந்தோ – 6

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


இது கடைசியாக நடந்தது. கோடைகாலம் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். அன்றையதினம் அதிகாலையிலேயே சத்தமின்றி மோந்தோ புறப்பட்டுப் போயிருந்தான். மலைகளூடாகச் செல்லும் பாதையில் நிதானமாக இறங்கினான். மரங்கள், புல்வெளிகளென்று அனைத்தும் இளஞ்சிவப்பிலிருந்தன. கடலுக்குமேலே அடர்த்தியான பனிமூட்டம், பழைய சுவரொன்றில் படர்ந்திருந்த கன்வொல்வுலஸ் கொடியின் அகன்ற இலைகளில் நீர்த்துளிகள் வைரம்போல ஜொலிப்பதை கண்டு நெருங்கினான். கொடியை நெருங்கி இலையைக் கவிழ்த்து தூய்மையான அந்நீர்த்துளிகளைப் பருகினான். சிறுசிறு துளிகள் ஆனாலும் வாயை நனைத்து, உடலெங்கும் கலந்து பரவியது, அவனது தாகத்தை தணிக்கவும் செய்தது பாதையின் இருபுறமும் வெயிலில் காய்ந்திருந்த கற்சுவர்கள் சுடுகின்றன. இண்டு இடுக்குகளிலிருந்த சலமாந்தர்கள் மெல்ல வெளியில்வந்து பகற்பொழுதை தரிசிக்க ஆரம்பித்தன.

மலையிலிருந்து கடல்வரை இறங்கி வந்தான். ஆளரவமற்ற ஓரிடத்தில் அமர விரும்பினான். கடற் நாரைகளைத் தவிர்த்து வேறொருவரும் அங்கில்லை. அவை கடல் நீரில் மிதந்துகொண்டும், கரையோரம் பரவிக்கிடந்த கற்களில் ஆடி ஆடியும் நடந்துகொண்டிருந்தன. தங்கள் அலகுகளைப் பிரித்து பினாத்திக்கொண்டிருந்தன. பறப்பதும் சுற்றிச்சுற்றிவருவதும், பறந்துபோய் தள்ளி உட்காருவதுமாக இருந்தன. கடல்நாரைகளுக்கு காலை நேரத்திற்கென்று விநோதமானக் குரலொன்றுண்டு, புறப்பபடுவதற்குமுன்பாக மற்றவர்களை கூவி அழைக்கும் குரலுக்கு நிகரானவை அவை. சூரியன் புறப்பட்டு இளஞ்சிவப்பான வானில் சற்று மேலே வந்ததும், தெருவிளக்குகளை அணைத்திருந்தார்கள், நகரம் இறைச்சலிட ஆரம்பித்தது. வெகுதூரத்தில் கேட்ட அந்த இறைச்சல், நெடிதுயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் ஒலிக்கிற வீதிகளுடைய ஓசையாக இருக்கலாம்; கடற்கரை கற்களை அதிர்வுறச்செய்யும் ஊமைச் சப்தமாக இருக்கலாம்; அனோராக் அணிந்து, கம்பளிக் குல்லாக்களுடனான ஆண்களும் பெண்களும் ஓட்டுகிற இருசக்கரவாகனங்களின் உருமும் ஓசையாகக்கூட இருக்கலாம்.

காற்றினை சூரியன் சூடாக்கட்டுமென்று எதிர்பார்த்து மோந்தோ கடற்கரையில் காத்திருந்தான். அலைகளெழுப்பிய சப்தத்தினை கரையோரம் கிடந்த கூழாங்கற்களில் கேட்டான். மோந்தோவையும், கடல் நாரைகளையும் தவிர்த்து வேற்று மனிதர்களின் நடமாட்டமற்ற அக்கணத்தை மோந்தோ மிகவும் விரும்பினான். நகரத்து மனிதர்களையும்; யார் யாரையெல்லாம் காணவேண்டுமென நினைக்கிறானோ அவர்களையும்; வானம், கடலென்று பொழுதைக் கழிக்கிற மனிதர்களையும் தனித்திருக்கிறபொழுதுதான் அவனால் நினைக்க முடிகிறது. அவனது அந்நிலைப்பாடு அவர்களை எட்டத்திலும் வைத்தது, அண்மையிலும் நிறுத்தியது. ஒருவகையில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்த அந்நினைப்பே போதுமானது என்பதுபோலவும் அல்லது அவர்களைக் கவனத்தில்கொள்ள தவறினால், அவர்கள் இனி இல்லையென்றாகிவிடுவார்கள் என்பதுபோலவும் நடந்துகொண்டான்.

வெறிச்சோடிகிடந்த கடற்கரையில் அமர்ந்தபடி வெகுதூரத்தில் இருக்கிற மனிதர்களிடம் உரையாடினான். தனக்கென அமைத்துக்கொண்ட பாணியில் அவ்வுரையாடல் நடைபெற்றது. சொற்களற்ற செய்தி. கேட்பவர்கள் இடந்தேடிச்செல்லும் தன்மை கொண்ட உரையாடல். ஒளியுடன் இரண்டறக்கலந்த கடலலைகளின் ஒலிகளால் ஆனது. எங்கிருந்து புறப்பட்டதென்ற கேள்வியில்லை, கேட்க ஆயத்தமாக இருந்தார்கள். ழித்தான், கொஸாக், நாற்காலி பின்னுகிறவர், ரோஸா, ரொட்டிக்கடை இடா, காற்றாடி மனிதர், ஏன் கடைசியாக இவனுக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்த பெரியவர் என அனைவருமே அக்கறையோடு செவிமடுத்தார்கள். அவ்வுரையாடல் காதில்விழும் சீழ்க்கைபோல இருந்திருக்கும், அல்லது விமானத்தின் இறைச்சல்போலவும் இருந்திருக்கலாம், அது இன்னதென்று விளங்காது எனினும் தலையை அசைப்பார்கள். ஆனால் அவர்களுடன் அப்படியானதொரு உரையாடலை நடத்துவதில் அதாவது கடல், சூரியன், வானமென்ற பேரில் அடுக்கடுக்காய் அனுப்பிவைப்படும் தகவல் போக்குவரத்தில் ஒருவித குதூகலம் மோந்தோவுக்கு வாய்த்தது.

மோந்தோ கடற்கரையையொட்டி மரத்தாலான குடிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கடற்கரைப் பகுதிக்குச் சென்றான். அங்கிருந்த சுவரையொட்டி, பெரியவர் எழுத்துக்களைக் கீறிய கற்கள் கிடக்கிறதாவென்று பார்த்தான். வெகு நாட்களாக மோந்தோ அங்கு வரவில்லை, உப்பும், சூரிய ஒளியும் வடித்திருந்த எழுத்துக்களை பாதிக்குமேல் தின்றிருந்தன. ஒரு கூரான கல்லைக்கொண்டு கடற்கரையில் கிடைத்த வேறு கற்களில் தனது பெயரைக் ‘M-O-N-D-O எனக் கீறினான், பின்னர் அவற்றை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். அக்கற்களை பார்க்கும் பெரியவர் தான் அங்கு மறுபடியும் வந்துபோனதை புரிந்துகொள்வார் என நம்பினான்.

எல்லா நாட்களும் ஒன்றுபோலவே அமைந்து விடுகிறதா என்ன? அன்றையதினம் நகரத்து ஆசாமிகளில் ஒருவர் குறைந்திருந்தார். புறாக்களுடன் வீதிகளில் வித்தைகாட்டி பிழைக்கும் கிழவரை மோந்தோ தேடினான், இதற்கு முன்பு அவனுடைய இதயம் அப்படி அடித்துக்கொண்டதில்லை, இனி அவரைப் பார்க்கமுடியாதென்பதை அவன் உணர்ந்திருந்தான் என்பதே அதற்கான காரணம். வீதிகளில், சந்துகளில், சந்தைத் திடலில், தேவாலயங்களின் வாசல்களென எல்லா இடங்களிலும் அவரைத் தேடினான். அவரைப் பார்க்கவேண்டுமென்று துடித்தான். ஆனால், கடந்த இரவு சாம்பல் நிற வாகனம் வந்திருந்தது, சீருடை அணிந்த மனிதர்கள் ததிக் கிழவனை அழைத்து சென்றிருந்தார்கள்.

மோந்தோ ததிக் கிழவனை நகரத்தின் அத்தனை இண்டு இடுக்குகளிலும் சளைக்காமல் தேடினான். நகரசபை அமைத்திருந்த கடற்கரை மறைவிடங்களை ஒன்றன்பின்னொன்றாகத் தேடுகிறபோதெல்லாம் அவனது இதயத்தின் படபடப்பு அதிகரித்தது. பெரிய கதவுகள், படிகட்டுகள், நீரூற்றுகளுக்கு அருகே, பொதுப்பூங்காக்கள், பழைய கட்டிடங்களின் வாயில்களென கிழவன் இருப்பதற்கு சாத்தியமுள்ள இடங்களிலெல்லாங்கூட சென்று பார்த்தான். சிலநேரங்களில் செய்தி பத்திரிகைகளின் ஒன்றிரு பக்கங்கள் நடை பாதையில் கிடக்கும், கிழவன் அதில் எப்படியும் உட்கார வருவானென நினைத்து சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறான்.

கடைசியில் கொசாக் மூலம்தான் உண்மை தெரியவந்தது. சந்தைக்கருகே அவனை வீதியில் சந்தித்தான். வழக்கம்போல நல்ல குடிபோதையிலிருந்த கொஸாக் சுவரை அவ்வப்போது பிடித்தபடி எதிர்பட்டான். தெருவில் நடந்துசென்ற மக்கள் நின்றார்கள், சிரித்தபடி பார்த்தார்கள். கையில் வழக்கமாக வைத்திருக்கும் கறுப்பு நிற சிறிய அக்கோர்டியன் கூட இல்லை. குடியில் மயங்கிக் கிடந்தபோது திருடு போயிருக்கிறது. ‘கிழவர் ததியும் அவருடைய புறாக்களும் போனவிடம் தெரியுமா?’ என மோந்தோ அவனை வினவியபோது, அக்கேள்விக்கான பொருளை முதலில் அவன் புரிந்துகொள்ளவில்லை. பிறகு தட்டு தடுமாறி வார்த்தைகள் வந்தன:

– தெரி..யாது. அவங்கதான் கூட்டிப்போனாங்க.. ராத்திரி…

– கூட்டிப் போனவிடம் தெரியுமா?

– தெரியாது.. மருத்துவ மனையாக இருக்குமோ.

அதன்பிறகு கொஸாக் அங்கிருந்து மிகுந்த சிரமத்துடன் புறப்பட எத்தனித்தான்.

– நில்லுங்க! வெண்புறாக்கள் என்ன கதியாச்சு? அவைகளையும் சேர்த்து கொண்டு போயிட்டாங்களா.

– வெண்புறாக்கள்? என்ன சொல்ற..

கொஸாக் விழித்தான்.

– வெள்ளையா ரெண்டு புறாக்கள் ததி வச்சிருந்தாரே அதைச் சொல்றேன்.

– ஓ அதுவா.. எனக்குத் தெரியாது, கொஸ்ஸாக் தோளை உயர்த்தினான். கிழவன் புறாக்களை அவங்க என்ன செஞ்சிருப்பாங்கண்ணு எனக்குத் தெரியலை. ஒருவேளை வெட்டி கறி சமைக்கும் எண்ணமிருக்கலாம், என்றவன் மீண்டும் தடுமாறியபடி சுவர்கள் ஓரமாகவே நடந்துபோனான்.

அடுத்தகணம், தான் மிகவும் களைத்திருப்பதுபோல மோந்தோ உணர்ந்தான். மீண்டும் கடலோரத்திற்குத் திரும்பி, சிறிறு கண்ணயரலாமென்று எண்ணினான். அதற்கு வெகு தூரம் நடக்க வேண்டும். இப்போதைய நிலையில் அது முடியாது போலிருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். காலையிலிருந்து பட்டினிகிடப்பதோ அல்லது இதுவரை கண்டிராத அச்சமோ இரண்டிலொன்று அல்லது இரண்டுமேகூட காரணமாக இருக்கலாம்.

வீதியில் அல்லது நடைபாதையில் எங்காவது உட்கார ஒரு இடம் கிடைக்குமாவென்று தேடினான். கிடைத்ததும் சுவரில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்துவிட்டான். பிறகு காத்திருந்தான். சற்று தூரத்தில் மர தளவாடங்கள் விற்கிற கடை, தெருப்பகுதி மின்சாரத்தில் ஒளிர்வது கண்னாடியிற் தெரிந்தது. மோந்தோ உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையவில்லை, இவனை நின்று பார்க்கிற அல்லது முன்னால் வீதியில் நடந்துபோகிற மனிதர்களின் கால்களைக்கூட கவனித்தவனில்லை. மனிதர்களின் பேச்சுக்களைக்கூட கேட்க விருப்பமில்லாமலிருந்தான். உடலில் சீதளம் பாய்ந்ததைப்போல உணர்ந்தான், உதடுகளிரண்டும் மரத்துபோயின, கண்கள் நிலைகுத்தி நின்றன, கடைசியில் உணர்வற்ற மரக்கட்டைபோல சாய்ந்தான்.

இதயத்தின் படபடப்புக் குறைந்திருந்தது, மிகவும் பலவீனமாக துடித்தது, சப்தம் வெகுதூரத்திலிருந்து வருவதுபோல இருந்தது. எந்த நேரமும் நின்றுபோகலாம் என்பது போல மெல்ல மெல்ல இதயத்துடுப்பு அடங்கிக் கொண்டுவந்தது. கடலோரம், வெள்ளை நிறப் பாறைகள், அணையின் கற்கள், பிறகு மின்னொளி வீட்டின் தோட்டமென்று அவன் நித்திரை கொள்கிற இடங்களையெல்லாம் வரிசையாக நினைவிற்குக் கொண்டுவந்தான். ஒக்ஸித்தோன் படகும், அது துறையிலிருந்து விலகிக்கொள்ள எழுப்பும் பொருமலும் ஞாபகத்திற்கு வந்தன. செங்கடல்வரை போகலாம் என்கிற ஆவலும் அத்தனை எளிதாக மறக்கக்கூடியதல்ல. ஆனால் எடுத்து இரண்டடி வைக்கமுடியாதென்ற நிலையில், இப்போது அமர்ந்திருக்கிறானே இவ்விடத்தைவிட்டு அதாவது இந்த நடைபாதையைவிட்டு, இச்சுவரைவிட்டு இனி வேறெங்கும் போகவியலாது என்பதைப்போல உணர்ந்தான்.

மனிதர்கள் அவனிடம் பேச்சுக்கொடுத்தும், தலை நிமிர்த்த்¢யவனில்லை முன்கைகளில் தலைசாய்த்து அசைவின்றிருந்தான். மனிதர்களின் கால்கள் இப்போது அவன் முன்னால் நின்றன. ழித்தான் வித்தைகாட்டுகிறபோது அவனை சுற்றி நிற்கிற கூட்டத்தைப்போல, அரணாக அவனுக்கு முன்னால் கால்கள். நிற்காமல் தொடர்ந்து அக்கால்கள் நடப்பது நல்லதென நினைத்தான். அவனுக்கு முன்னால் நிற்கிற கால்களைப் பார்த்தான்: ஆண்கள் கால்களில் தோலாலான ஷ¥க்கள், பெண்கள் கால்களில் குதி உயர்ந்த செருப்புகள். அவன் தலைக்குமேலே குரல்கள் கேட்கின்றன, ஆனால் அவை என்ன சொல்லவருகின்றன என்பது விளங்கவில்லை.

– யாராச்சும் தகவல் சொல்லுங்க’, – என்கிறார்கள். தகவல் யாருக்குச் சொல்லணும்? வளர்ந்த உரோமங்களுடன் நடைபாதையில் சுருண்டுக்கிடக்கிற கிழட்டு நாயாக மோந்தோ தன்னை எண்ணிக்கொண்டான். ஒருவரும் அந்நாயைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள், பழுப்பு நிறக் கிழட்டு நாயைப் பார்த்து என்ன ஆகப்போகிறது. தொடர்ந்து, குளிர் கைகள் கால்கள், வயிறு, தலையென்று உடலெங்கும் பரவுகிறது.

எதிர்பார்த்ததுபோல சாம்பல் நிற வாகனம் சியாப்பாகன் வந்து சேர்ந்தது. அரை மயக்கத்திலிருந்த மோந்தோவின் செவிகளில் வாகனம் வருகிற சப்தம், பிரேக்கிடும் சப்தம், கதவுகள் திறக்கப்படும் சப்தம் அனைத்தும் கேட்டன. அவன் அலட்டிக்கொள்ளவில்லை. எதுவேண்டுமானாலும் நடக்கட்டுமென்பதுபோல செயலற்றிருந்தான். இதுவரை கூடிநின்ற கால்கள் விலகிக்கொள்ள கடல் நீலநிறத்தில் அணிந்த நீண்ட காற்சராயும், தடித்த சப்பாத்துமாக தன்னை நெருங்குகிற கால்களைப் பார்த்தான்.

– உனக்கு என்ன உடம்புக்கு?

சீருடை மனிதர்களின் குரல்கள். அக்குரல்கள் வெகுதூரம் எதிரொலிப்பதுபோல கேட்டன.

– உன்னுடைய பெயரென்ன, எங்கே இருப்பிடம்?

– எங்களோட நீ வரணும், கிளம்பு.

மோந்தோ நகரத்தை சுற்றிலும் மலைத் தாவரங்கள் எரிந்துகொண்டிருப்பதைப்பற்றி நினைத்தான். சாலையோரத்தில் அமர்ந்திருக்க, வெந்து கணிந்துகொண்டிருக்கிற நிலப்பரப்புகளும், பெரியபெரிய தீக்கொழுந்துகளும் கண்முன்னே தெரிந்தன, எரியும் பிசினால் ஏற்பட்ட துர்நாற்றத்தையும் அவன் நுகர்கிறான். வெண்மை நிறத்தில் வானத்தில் எழும் புகை, தீ அனைக்கும்படையினரின் சிவப்பு வாகனங்கள் புதர்களுக்கிடையே நிற்பது, நீளமான இரப்பர் குழாய்கள், அதன் சுற்றிலிருந்து பிரிக்கப்படுவது என எல்லாம் கண்முன்னே விரிந்தன.

– உன்னால நடக்க முடியுமா?

சீருடை மனிதர்களின் கைகள் மோந்தோவின் தோளுக்கடியில் ஊர்ந்து அவனை நிற்க வைத்தன. சிறு சுமையொன்றை தூக்கிச் செல்வதுபோல சுமந்துகொண்டு திறந்திருந்த வாகனத்தின் பின் கதவுகளுக்கு அருகிற் கொண்டு சென்றனர். தனது கால்கள் நிலத்தில், படிகளில் இழுபடுவது தெரிந்தது, இருந்தும் மரபொம்மையின் கால்களுக்கு நேர்ந்ததாக நினைத்து நடப்பதெதுவும் தன்னோடு சம்பந்தப்பட்டதல்ல என்றிருந்தான். கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. வாகனம் மெல்ல ஊர்ந்து மறைந்தது. அதன்பிறகு என்ன நடந்ந்தென்று ஒருவருக்கும் தெரியாது.

இரண்டு நாட்கள் கடந்திருந்தன. வியட்நாமை பூர்வீகமாகக்கொண்ட குள்ள பெண்மணி, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தாள். தூக்கமின்மையால் அவளுடைய முகம் வெளுத்திருந்தது, கண்கள் சோர்ந்திருந்தன. இரண்டு இரவுகள் மோந்தோவுக்காகக் காத்திருந்தாள், பகலில் தேடவும் செய்தாள். பலனில்லை என்பதால் வந்திருந்தாள். கண்காணிப்பாளர் அக்கறையின்றி அவளைப் பார்த்தார்.

– உங்களுக்கு பையன் உறவா?

– இல்லை.. இல்லை, என்றவள் என்ன சொல்லலாம் என யோசிப்பதுபோல இருந்தது. என்னுடைய நண்பன் என்று வேண்டுமானா வச்சுக்குங்க.

வயதானவள் என்பதை உறுதிபடுத்துவதுபோல முகத்தில் நிறைய சுருக்கங்கள், ஆனாலும் பார்க்கக் சிறுமிபோல இருந்தாள்.

– அவன் எங்கே இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியுமா?

அவளுக்கு உடனே பதில்சொல்லவேண்டிய அவசியமில்லை என்பதுபோல அவளை அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். பொறுத்து பதில் வந்தது.

– அவனை சமூக நல வாரியத்தின் பொறுப்பிலே வச்சிருக்கோம்..

பெண்மணிக்கு அவர் பதில் குழப்பமாக இருந்திருக்கவேண்டும்.

– சமூக நலவாரியமா? நீங்க செய்தது நியாயமே இல்லை, சத்தமிட்டாள்.

– எது நியாயமே இல்லை – காவல்துறை அதிகாரி.

– சொல்லுங்க ஏன்? அவன் என்ன தப்பு செஞ்சான்?

– அவன் தனக்கு குடும்பமோ உறவினர்களோ இல்லைண்ணு சொன்னதாலே சமூக நலவாரியத்திடம் ஒப்படைச்சிருக்கோம்.

– என்ன அநியாயம்! நீங்க செய்தது உங்களுக்கே நியாயமா தெரியுதா?

காவல் துறை அதிகாரிக்குக் கோபம் வந்திருக்கவேண்டும், அவர் முகத்தில் இறுக்கம் தெரிந்தது.

– மேடம், நீங்கதான் நியாயத்தைப் புரிஞ்சுகொண்டமாதிரி தெரியலை, வீடில்லை, பெற்றோர்களில்லை என்றிருக்கும் ஒரு சிறுவன் வீதியில் பிச்சைக்காரர்களுடன் சுற்றிக்தெரிவது எத்தனை கேவலம் தெரியுமா? அதுமட்டுமில்லை தெரு நாய்போல கண்டதையும் தின்றுகொண்டு, எங்கே வேண்டுமானாலும் உறங்கிக்கொண்டுவேறு திரிகிறான். அவனைபற்றிய தகவல்கள் வெகுநாட்களுக்கு முன்பே எங்களுக்குக் கிடைத்தன, ஒரு சிலர் புகார் மனுவும் கொடுத்திருந்தார்கள், நாங்களும் சமீபத்துலே அவனைத் தீவிரமாக தேடி வருகிறோம்., ஆனா பையன் ஜித்தன். தப்பிவிடுகிறான்..

பெண்மணியின் பார்வை காவலதிகாரியைவிட்டு விலகவில்லை. அவளுடல் நடுக்கமுற்றது. அவளை அமைதிபடுத்துவதுபோல

– மேடம் பையனை நீங்கதான் பார்த்துகிறீங்களா? .

– ஆமாம் என்பதுபோல பெண்மணி தலையாட்டினாள்

– உங்களால் அவனை பார்த்துக்க முடியுமென்றால், நாங்க அவனை உங்ககிட்டே ஒப்படைக்கணுமென்றால், ஏற்பாடு செய்யலாம். அது நடக்கக்கூடியதுதான்.

– அதற்கு முன்னே, பையன் வெளியில் வரவேண்டாமா?

– பையனின் நிலைமை சீராகும் வரை சமூக நல வாரியத்தின் பொறுப்பில்தான் இருப்பான், அதற்கு முன்னாலே முறையா நீங்க செய்யவேண்டிய காரியங்கள் இருக்கின்றன. முதலாவதாக சமூக நலத்துறைக்கு விண்ணப்பமொன்று போடனும், விண்ணபத்தில் கேட்டிருக்கும் தகவல்களையும் நீங்க சமர்ப்பிக்கணும். ஆனால் அதுவொன்று இன்றைக்கோ நாளைக்கோ முடிகிற முயற்சியில்லை.

பெண்மணிக்கு என்னபதில் சொல்வதென்று தயங்கினாள், உரிய சொற்கள் அவளுக்குக் கிடைக்கவில்லை.

– அதுவரை அரசாங்கத்தின் கிட்டே பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நீங்க நிம்மதியா இருங்க. பையனுக்கு என்னபேரு?

– மோந்தோ.

– அந்தப் பையன் சிறுவர் சீர்திருத்தபள்ளியின் பாதுகாப்பிலே இருக்கான், அவனைக் குணபடுத்தியாகணும். கோப்பொன்று அவனுக்காகப் போட்டிருக்காங்க. உங்களுக்கொன்று தெரியுமா அவன் வயசுக்கு எழுதப்படிக்க தெரியாதுண்ணு சொல்கிறான், பள்ளிக்கூடம் பக்கமும் ஒதுங்கினதில்லையாம்.

– தி-ச்சின் அதிகாரியிடம் என்னவோ சொல்லவிரும்பினாள். ஆனால் தொண்டைக்குள்ளேயே சொற்கள் சிக்கிகொள்கின்றன. தட்டுத் தடுமாறி கடைசியில் பேசினாள்.

– அவனை நான் பார்த்தாகணும், முடியுமா?

– தாராளமா பார்க்கலாம், அரசாங்கம் தடுக்கவே தடுக்காது, இருக்கையைவிட்டு எழுந்த அதிகாரி, ‘இன்னும் கொஞ்சம் நாளுல பையன் திருந்திடுவான், நிலைமையிலே மாற்றம் வரும், பிறகு நீங்க பார்க்கலாம். சமூக நலதுறை இயக்குனரிடம் அனுமதி கேட்டு எழுதுங்க’..

– இன்றைக்கே – இன்றைக்கே நான் பார்த்தாகணும்- துருபிடித்த குரலில் மீண்டும் மீண்டும் சத்தமிட்டாள்.

– வாய்ப்பே இல்லை மேடம். குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்களாகவது ஆகும் அதற்கு முன்பு நீங்க பார்க்கவே முடியாது.

– அவனுக்காகத்தான் நான் வாதிடறேன், தயவு பண்ணுங்க.

அதிகாரி கதவுவரை அவளுடன் வந்து வழி அனுப்பினார்.

– ஐந்து நாள் பொறுத்துக்குங்க, அதன் பிறகு பையனைப் பார்க்கலாம்.

கதவு திறக்கிற நேரத்தில், மனதை மாற்றிக்கொண்டவர்போல:’ உங்க பெயரையும் முகவரியையும் கொடுங்க, தேவைபட்டால் தொடர்புகொள்வோம்.

ஒரு சிறியதொரு கையேட்டில் அவற்றைக் குறித்துக்கொண்டார்.

– நல்லது இரண்டுநாள் கழித்து தொலைபேசி எடுங்க, பையன் பிரச்சினைக்கு நாங்களும் கோப்பினை போட்டாகணும். ஆனால் மறுநாளே காவல்துறை அதிகாரி தி-ச்சின் வீடு தேடிவந்தார். வாயிற் கதவை திறந்துகொண்டு சரளைக்கற்களால் மூடியிருந்த பாதையில் இறங்கி வீட்டின் வீட்டின் முன் கதவருகே வந்து நின்றார். தி-ச்சின் கதவைத் திறந்ததும், உள்ளே நுழைந்ததில் அவருக்குள்ள அதிகாரம் வெளிப்பட்டது. வரவேற்பறையை பார்வையிட்டார்.

– உங்க மோந்தோ..

– அவனுக்கு என்ன நடந்தது? – தி-ச்சின் கேட்டாள். இன்றைக்குக் கூடுதலாக அவளுடைய முகம் வெளுத்திருந்தது, அதிகாரியின் முகத்திற்கெதிராக திருப்பிய அவளுடைய பார்வையில் அச்சம் வெளிப்பட்டது.

– அவன் எங்கே போனானென்று தெரியலை

– என்ன சொல்றீங்க.

– ஆமாம் அவனைக் காணவில்லை, மாயமாய் மறைந்துவிட்டான்

தி-ச்சின் தலைக்குமேலே பார்வையை ஓட்டியவர் வீட்டை ஆராய்வதுபோல பார்த்தார்.

– நீங்க அவனை பார்க்கலையா? இங்கே அவன் வரவில்லை?

– இல்லை, தி-ச்சின் கோபத்துடன் கத்தினாள்.

– அவனுடைய படுக்கைக்கு தீவச்சிட்டான், தீ விபத்தென்று எல்லோரும் கலவரபட்டுக்கொண்டிருக்க அதனைப் பயன்படுத்திக்கொண்டு தப்பியிருக்கான். உங்களைப் பார்க்க இங்கே வந்திருக்கவேண்டுமென்று நான் நினைத்தேன்.

– இல்லை.. இல்லை எத்தனை முறை சொல்ல. இம்முறை அவளுடைய சின்னஞ்சிறிய கண்களிரண்டும் கோபத்தில் சிவந்து மின்னின, அதிகாரி பயந்தது உண்மை.

– கொஞ்சம் நிதானமா கேளுங்க, உங்களை எச்சரிக்கத்தான் நான் இங்கே வந்தேன். முட்டாள்தனமா அவன் ஏதாவது செய்வதற்குள் அவனைக் கண்டுபிடிச்சாகணும்.

காவல் துறை அதிகாரி முன்வாசல் படியில் இறங்கி நடந்தார்.

– உங்க வீட்டிற்கு வந்தானென்றால் எங்களுக்குத் தகவல் சொல்ல மறத்திடக்கூடாது, எச்சரித்தபடி சரளைகற்கள் பாதையைப் பிடித்து வாயிற்கதவினை அடைந்திருந்தார்

– நான் உங்களிடத்தில் ஆரம்பத்திலேயே அவன் சாதுவான பையனல்ல மிருகமென்று எச்சரித்திருக்கேன்.

தி-ச்சின் வாசற்படியில் நின்றபடி அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டாள். அவள் கண்களில் நீர் தளும்பியது, தொண்டை ஒட்டிக்கொண்டு சுவாசிக்கத் தடுமாறினாள்.

– உங்களுக்கெல்லாம் எதுவும் புரியாது. அவளது குரல் அடங்கி ஒலித்தது. காவல்துறை அதிகாரி வாயிற்கதவை திறந்துகொண்டு அங்கு நிறுத்தியிருந்த கறுப்பு நிற வாகனத்தை நோக்கி நடந்தார். தி’ச்சின் படிகளிலேயே உட்கார்ந்துவிட்டாள். உன்மத்தம் பிடித்தவள்போல அமர்ந்திருந்தாள். வெறிச்சோடிகிடந்த வரவேற்பறையை நிரப்பிக்கொண்டிருக்கும் பொன்னொளியை பற்றியோ, மறைந்தபடி வெட்டுக்கிளி எழுப்பும் சீழ்க்கை சப்தம் பற்றியோ அக்கறை இல்லாதள்போல இருந்தாள். அழவும் செய்தாள். அழுகிறபோது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மூக்கின் வழியே அவள் கட்டியிருந்த நீல ஏப்ரனில் சொட்டுவது குறித்த பிரக்ஞையும் அவளுக்கு இல்லை. அவளனுபவத்தில் சாம்பல்வண்ண தலைமுடிகொண்ட பிள்ளைகள் போனால் போனவர்கள்தான். நாளையென்றில்லை என்றைக்குமே திரும்பமாட்டார்கள். கோடைகாலம் நெருங்கிவிட்டது எனினும் குளிர்காலம்போல இருந்தது. தி-ச்சின் என்றில்லை, எங்கள் நகரத்து மனிதர்கள் அனைவருமே பிறகு குளிரை உணர்ந்தோம். மக்கள் வழக்கம்போல போவதும் வருவதுமாக இருந்தார்கள். விற்றார்கள்-வாங்கினார்கள். மோட்டார் வாகனங்கள் சாலைகளிலும் வீதிகளிலும் வழக்கம்போல உறுமிக்கொண்டு ஓடின, ஒலி எழுப்பவும் அவை தவறவில்லை. அவ்வப்போது நீல நிற வானத்தில் ஊர்ந்து செல்லும் விமானம், அதன் வழித்தடம் வெண்மை நிற பாட்டையால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. வீதிமுனைகளிலும், தேவாலயங்களின் வாசல்களிலும், நகராட்சி வாசலிலும் பிச்சைஎடுப்பவர்கள், தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அத்தனையிலும் ஒரு பேதம் இருக்கத்தான் செய்தது, அப்பேதம் ஊனக் கண்களால் உணரமுடியாதது, நிலம் போர்த்திய பனிமூட்டத்திற்கு ஒப்பானது, அப்பனிமூட்டம் இருக்குவரை நிலத்திற்கு முழுமையாக ஒளிகிடைப்பதும் நடவாதுதான்.

வழக்கத்திற்கு மாறாக ஏதேதோ எங்கள் நகரில் அரங்கேறியது. சில மாதங்களுக்குப்பிறகு, வழியில் போனவர்களின் சட்டைப்பைகளில் தனது வித்தையைக் காட்ட முயற்சித்ததின் பலனாக காவல் துறை ழித்தானை கைது செய்தது. குடிகார கொஸாக்கும் கொஸாக்காக இல்லை. ழியோர்தான், தூண்டிற்கழியை உடைத்திருந்தான், எரித்ரே மாத்திரமல்ல வேறு நாடுகளுக்கு பயணப்படுவதுகூட அவனுக்கு சாத்திமில்லாமல் போய்விட்டது. கிழவன் ததி, ஒருவழியாக மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்திருந்தான், அவனது புறாக்களைத் தொலைத்திருந்தான், இப்போதெல்லாம் அவனுக்குத் துணை ஒரு பூனை. ஞாயிற்றுக்கிழமை ஓவியர் வானத்தை வரைய எத்தனித்து வேண்டாமென்று கைகழுவினார், கடல், இயற்கையின் அழிவு என்று தீட்டலானார். தோட்டத்தில் சைக்கிள் விட்ட பையன் அவன் சிவப்பு நிற சைக்கிளை தொலைத்துவிட்டான். தனியார் கடற்கரையில் மணலை நிரவிக்கொண்டிருக்கும் இந்தியர் சாடையிலிருந்த பெரியவர் கங்கையை மறந்து நாளாகிறது. துருபிடித்த வளையமொன்றில், இழுத்துக் கட்டப்பட்ட ஒக்ஸித்தோன் தன்னந்தனியே மிதக்கும் டீசல் எண்ணெய் படலத்துக்கிடையே நீரில் தத்தளித்தது, அதிலேறி பாட்டுபாட ஒருவருமில்லை.

மோந்தோ இல்லாமலேயே வருடங்கள், மாதங்கள், நாட்கள் கடந்திருந்தன. கடந்திருந்த அக்காலத்தை யுகமென்றும் சொல்லலாம் நொடியென்றும் கூறலாம். அக்காலகட்டத்தில், எங்கள் நகரத்தில் பலரும், சொல்லவேண்டியதை துணிச்சலுடன் சொல்லக்கூடிய, எதையும் பெரிதுபடுத்தாத ஒருவனுக்காக, காத்திருந்ததும்; அப்படியான ஒருவனைத் தேடி மனிதர் மந்தையிலும், வீதி முனையிலும், கதவுகள் அருகிலும் தேடி அலைந்ததும்; கடற்கரையின் வெண்மை நிற கூழாங்கற்களையும், சுவரை நினைவூட்டும் கடலையுங்கூட அவனை நினைத்து சென்று பார்த்ததும் எப்படி நிஜமோ அப்படி நிஜம், இன்றைக்கு நாங்கள் அவனை மறந்திருப்பதும்.

வெகுகாலத்திற்குப் பிறகு ஒருநாள், மலைமீதிருந்த தன் வீட்டுத் தோட்டத்தில் வியட்நாம் பெண்மணி நடதுவந்தாள். அங்கே கொசுக்கள்காற்றில் ஆட்டம்போட்டபடியிருந்த புன்னைமரத்தினடியில் அமர்ந்தாள். விநோதமான கடற்கரை கூழாங்கற்கள் சில அங்கே கிடக்க அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தாள், கற்களின் பக்கவாட்டில் பல வரிவடிவங்களைக் கண்டாள், தூசிபடிந்து பாதி கலைந்திருந்த நிலையில் எழுத்துக்கள். மிகவும் கவனமாகப் படிந்திருந்த தூசியை தனது ஏப்ரனால் மெல்ல துடைத்தபொழுது, அவளுடைய இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள். துடைத்து முடித்த கற்களில் கோணலும் மாணலுமாக இரண்டு சொற்கள் தெளிவாகத் தெரிந்தன வாசித்தாள்: Toujours(ஓயாமல்) Beaucoup(நிறைய).

——————————————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா