மோந்தோ -3-2

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா



முழங்கால்களிற் கைகளைக் கட்டிக்கொண்டு கடற்கறையில் அமர்ந்தபடி சூரியன் உதிப்பதை பார்ப்பது மோந்தோ விரும்பிச் செய்வான். நான்கு ஐம்பதிற்கு, கடலுக்கு மேலே நீராவிபோல மிதக்கும் ஒன்றிரண்டு மேகங்களைத் தவிர்த்து, அதிகாலை நேரத்தில் பொதுவாக வானம் சாம்பல் வண்ணத்தில் மாசுமருவற்றுப் பளீரென்றிருக்கும். சூரியன் ஒருபோதும் உடனே உதித்திடாது, ஆனால் தொடுவானத்தின் மற்றபக்கத்தில், எரிகிற தீக்கொழுந்தாக மெல்ல மெல்ல அது எழுவதை மோந்தோ எப்படியோ மோப்பம்பிடித்திடுவான். முதலில் சற்றே வெளுத்த வளையமொன்று அடிவானில் பெரிதாகிக்கொண்டுவரும். தொடுவானத்தை அதிர்வுகொள்ள வைக்கிற அந்நிகழ்வை அத்தனை எளிதாக அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதைப்போல நம் அடிமனதிலும் விநோதமாக அதனை உணர முடியும். நீருக்குமேலே சூரிய தாம்பாளம் தெரியவந்ததும் ஒளிக்கற்றைகள் நேர்க்கோட்டில்வந்து கண்ணிற் புகும், கடலும் பூமியும் சேர்ந்தாற்போல பேதமின்றி ஒரே வண்ணத்தில் காட்சியளிக்கும். அக்காட்சிக்குப் பிறகே முதல் வண்ணங்களும், முதல் நிழல்களும் தலைகாட்டும். தெருவிளக்குகளை அணைத்திருக்கமாட்டார்கள், அவை சோர்வுடன் மங்கலாய் எரிந்தபடியிருக்கும், காரணம் பகல் தொடங்கிவிட்டதென்று உறுதியாய்ச் சொல்வதற்கில்லை.

கடலுக்கு மேலே மேலே என வந்துகொண்டிருக்கிற சூரியனை மோந்தோ ரசித்தபடி இருந்தான். தலையையும், உடலையும் மெல்ல அசைத்தபடி மோந்தோ தன்னந்தனியாக கொஸாக்கிடம் கேட்ட பாடலொன்றை சூரியனுக்காகப் பாட ஆரம்பித்தான்.

– அயாயா, யாயா, யாயாயா, யாயா…

நீரில் மிதந்துகொண்டிருந்த ஒருசில கடல்நாரைகளைத் தவிர்த்து கடற்கரையில் ஒருவருமில்லை. சாம்பல், நீலம், வெளுர் சிவப்பென்று பல வண்ணத்தைப் பிரதிபலித்த தண்ணீர் ஸ்படிகம்போலவிருந்தது, கற்கள் வெள்ளை வெளேரென்றிருந்தன.

நீர்வாழ்ப் பிராணிகளான நண்டினங்கள், மீனினங்கள் ஆகியவற்றின் வைகறைப் பொழுது நீரில் எப்படியிருக்குமெனவும் மோந்தோ யோசித்தான். ஒருவேளை நிலப்பரப்பில் காண்பதைப்போலவே, நீரின் ஆழ்பரப்பும் மென் சிவப்பாய் மாறிவிடுமோ? கண்ணாடி போன்ற அலைகளே நீர்வாழ்ப் பிராணிகளுக்கு வானமாக இருக்கக்கூடுமோ? மீன்கள் உறக்கம் கலைந்து, அதனடியில் மெல்ல அசைந்து நீந்தத் தொடங்கலாம். நீருக்குள்ளிருந்து பார்க்க மேலே ஆயிரக்கணக்கில் சூரியன்கள் ஆட்டமிடக்கூடும். நிறைய சூரியன்களுக்கிடையே வாழ்வது கூட உண்மையில் மகிழ்ச்சியானதுதான். புத்தம்புது அதிகாலை ஒளியைக் கிட்டத்தில் பார்க்கவிரும்பி கடற்குதிரைகள் பாசிவகை தாவரங்களின் தண்டினைப்பிடித்தபடி ஆழ் பரப்பினைவிட்டு மேலே வரக் கூடும். கிளிஞ்சல்கள்கூட மெள்ளத் திறந்து பரிதியின் ஒளியை தமக்குள் அனுமதிக்கலாம். கற்பனையை விரிக்க விரிக்க மோந்தோவின் சிந்தை முழுக்க மீனினங்களும் அவற்றின் காலைப் பொழுதும். அலைகள் மெல்ல கரையில் விழுந்து திரும்புகிற போதெல்லாம், நீரில் நனைந்த கூழாங்கற்கள் ஜொலிப்பதையும் மோந்தோ கவனிக்கத் தவறவில்லை.

சூரியன் கொஞ்சம் மேலே வந்ததும், எழுந்துகொண்டான், இலேசாக குளிர் தெரிந்தது. ஆடைகளைக் களைந்தான். கரையில், காற்றில் நிற்பதைக்காட்டிலும், கடலில் இறங்கலாமென நினைத்தான். இளஞ்சூட்டுடனான கடல்நீர் சுமகமானது. கழுத்தைத் தொடும் வரை நீரில் அமிழ்ந்தான். தலை கவிழ்த்து, கண்களைத் திறந்து ஆழ்பரப்பினைப் பார்த்தான். அலைகள் உடைந்து சிதறும் சலசலப்பு ஒரு வித இசை லயத்துடன் காதில் விழுந்தது, கரையில் கிட்டாத அனுபவம்.

எவ்வளவு நேரம் தண்ணீரில் இருந்திருப்பானோ, விரல்களெல்லாம் வெளுக்க ஆரம்பித்திருந்தன, கால்களும் நடுங்கத் தொடங்கின. எனவே மீண்டும் கரைக்குத் திரும்பினான், சாலைக்கு அரணாக கடலொட்டி எழுப்பியிருந்த சுவரில் சாய்ந்தவண்ணம் தனது உடலை வெப்பம் போர்த்தட்டுமெனக் கண்களைமூடி காத்திருந்தான்.

கடற்கரையிலிருந்துப் பார்க்க நகரத்திற்கு மேலாக தொடர்ச்சியாய் நீண்டிருந்த மலைகள், வெகு அண்மையில் இருப்பதுபோல தெரிந்தன. மரங்கள், செடி கொடிகள், பெரிய வீடுகளின் வெண்மை நிற முகப்புகளென்று அனைத்தும் ஒளிவெள்ளத்தில் அழகாய் ஜொலித்தன. ‘அங்கே சென்று அவைகளைப் பார்த்தாகவேண்டும்’, மோந்தோ தனக்குள் சொல்லிக்கொண்டான். மீண்டும் ஆடைகளை அணிந்தவன், கடற்கரையிலிருந்து புறப்பட்டான்.

அன்றைய தினம் பண்டிகை நாள். சியாப்பாகன் பற்றிய அச்சம் தேவையில்லாதது. பண்டிகை நாட்களில் நாய்களும், சிறுவர் சிறுமியரும் விருப்பம்போல தெருக்களில் சுற்றித் திரியலாம். ஒரே சங்கடம், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும். காய்கறிகடைகாரர்கள் வியாபாரம் செய்வதில்லை, ரொட்டிக்கடைகளின் கதவுகளை இழுத்து அடைத்திருப்பார்கள். ‘la boule de neige’ (பனியுருண்டை), என்ற பெயர்கொண்ட, ஐஸ்கிரீம் கடையில், கோன் ஐஸ் ஒன்றை வாங்கிக்கொண்டான், அதை சப்பியபடி வீதிகளைச் சுற்றி வர ஆரம்பித்தான்

நடைபாதைகளுக்கும் சூரியன் ஒளியைத் தந்திருந்தான். மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது, அவர்களுக்குத் தினசரி வாழ்க்கை அலுத்துப்போயிருக்கலாம். அரிதாகத்தான் மனிதர்களை வீதிகளில் எதிர் கொள்ள முடிந்தது. மோந்தோவைப் பார்த்து புன்னகைக்கிறவர்கள், உப்பு பூத்திருக்கும் அவனது தலைமுடி, இமைகள்; வெயிலால் பழுப்புநிறத்த்திற்கு வந்திருக்கிற அவனுடைய முகம் ஆகியவற்றைக்கண்டு வியப்பில் ஆழ்கிறார்கள். அக்கோலத்தைக் கண்டு பிச்சையெடுக்கும் பையனென்று அவர்கள் நினைத்திருக்கவேண்டும்.

ஐஸ்கிரீமை சப்பியபடி, கடைமுகப்புகளின் கண்ணாடிகளைப் பார்த்தான். மின்சார ஒளியில் செம்மரத்திலான கட்டில், படுக்கை விரிப்பு, பூக்களுடன் கூடிய தலையணையென்று வைத்திருந்தார்கள். யாருக்கோ படுக்கை போட்டிருப்பதுபோல அலங்கரித்திருந்தார்கள். சற்று தள்ளி வேறொரு கடை, அங்கும் கண்னாடிக்குப்பின்னே ஆவலைத் தூண்டும் விதத்தில்: வெள்ளை வெளேரென்று மின்சார அடுப்புகள், அட்டைகோழியொன்று கம்பியில் குத்தப்பட்டு தீயில் வாட்டப்படுவதுபோலவும் இருந்தது. தொடர்ந்து வேடிக்கை பார்த்தவண்ணம் நடந்தான். ஒரு கடையில் மூடிய கதவடியில், படங்களுடன் கூடிய இதழொன்றைக் கண்டான்.

அவ்விதழில் அச்சடிக்கப்பட்டிருந்த கதையொன்று வண்ணப்படங்களுடன் இருந்தது. அப்படங்களில் மெலிந்த மஞ்சள் நிற பெண்மணியொருத்தி சமைக்கிறாள், தனது பிள்ளைகளுடன் விளையாடவும் செய்கிறாள். மிகப்பெரிய கதை, மோந்தோ உரத்தக்குரலில் வாசித்தான். வண்ணப்படங்களைக் கண்களருகே கொண்டு சென்றான். அவ்வாறு செய்கிறபோது, வண்ணங்கள் கலப்பதுபோல தோற்றம் தந்ததை வெகுவாக ரசித்தான். கதையில் வரும் பையனின் பெயர் ழாக், சிறுமியின் பெயர் கமிலி. அவர்களின் அம்மா சமையலறையில் இருந்தாள், ரொட்டி, கோழி, கேக்குகளென்று விதவிதமாக அவளுடைய பிள்ளைகளுக்குச் சமைத்துத் தருகிறாள். ‘இன்றைக்கு என்ன சாப்பிட விருப்பம்.?’ தம் பிள்ளைகளிடம் கேட்கிறாள். பெரிய அளவில் ஒரு ஸ்ட்ராபெரி பழத்தில் தார்த் (ஒருவித அடை) செய்து தருவியா?, ழாக் கேட்கிறான். பெண்மணி, ‘வீட்டில் ஸ்ட்ராபெரி இல்லை ஆப்பிள் பழங்கள்தான் இருக்கின்றன’, என்கிறாள். எனவே ழாக்கும், கமிலியும் ஆப்பிள் பழங்களின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொடுக்க, அவர்களுடைய அம்மா, கோதுமை மாவைச் சேர்த்து தார்த் செய்தாள். செய்ததை அடுப்பில் வைத்து வேகவைத்தாள், வீடுமுழுக்க கமகமக்கிறது. மின்சார அடுப்பில் வெந்து முடிந்த தார்த் மேசைக்குக் கொண்டுவரப்பட்டது, பெண்மணி அதைத் துண்டுகளாக்கினாள். ழாக்கும் கமிலியும் வேண்டுமளவிவிற்கு, சாப்பிட்டுச் சூடாக சாக்லேட் பானம் அருந்தினார்கள். ‘இப்படியானதொரு தார்த்தை வீட்டில் இதற்குமுன்பு சாப்பிட்டதில்லை, என்றார்கள்.

படித்துமுடித்ததும், பூங்காவிலிருந்த புதரொன்றில், பிறகு எடுத்து படிக்கலாமென்ற எண்ணத்தில் இதழை ஒளித்து வைத்தான். அதுபோன்றதொரு மற்றொரு சித்திரகதையை குறிப்பாக காடொன்றில் அக்கீமுடைய சாகசங்களைச் சொல்லும் கதைப்புத்தகத்தை வாங்கிப்படிக்க மோந்தோவுக்கு ஆசை. ஆனால் கடைகள் மூடியிருந்தன.

பொதுப்பூங்காவின் நீள் இருக்கையொன்றில், தபால் துறையிலிருந்து பணி ஓய்வு பெற்றிருந்த ஒருவர், நித்திரை கொண்டிருந்தார். அவரருகில், பிரித்து வைக்கப்பட்ட செய்தி பத்திரிகை, அருகிலேயே ஒரு தொப்பி.

சூரியன் தொடுவானத்திலிருந்து மீண்டு மேலே வந்தபோது, மென்மையான ஒளி எங்கும் நிறைந்திருந்தது. வாகனங்கள் ஒலி எழுப்பிக்கொண்டு வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தன. பூங்காவின் மற்றொரு பக்கம், வாயிலருகே சிறுவனொருவன் சிவப்பு நிற மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்தான்.

– சைக்கிள் உன்னுடையதா?- மோந்தோ கேட்கிறான்

– ஆமாம்- பையன் சொன்னான்.

– கொஞ்ச நேரம் எனக்குக் கொடேன், விட்டுப் பார்க்கிறேன்.

பையன் தனது அத்தனை பலத்தையும் பிரயோகித்து சைக்கிளை இறுகப் பிடித்துக்கொண்டான்.

– முடியாது, போ.. இங்கிருந்து போறியா இல்லை சத்தம்போடவா?

– சைக்கிளுக்கு ஏதாச்சும் பேர் வச்சிருக்கியா?

பையன் பதில் சொல்லவிருப்பமின்றி, தலையை குனிந்துகொண்டான். பிறகு என்ன நினைத்தானோ, சட்டென்று பதில் வந்தது:

– மினி

– சைக்கிள் ரொம்ப அழாயிருக்கு- என்ற மோந்தோ கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான், சைக்கிளின் பிரேம் சிவப்பு வண்னத்தில் இருந்தது. இருக்கை கறுப்பு நிறத்திலும், கைப்பிடியும், மட்கார்டும் குரோமியத்திலும் இருந்தன. சைக்கிளில் இருந்த மணியை இரண்டுமுறை அடித்து ஓசையை எழுப்பினான். ஆனால் பையன் பெடலை வேகமாய் மிதித்து அவனிடமிருந்து விலகிச் சென்றான்.

சந்தைகூடுமிடத்திலும், வழக்கமான மக்களில்லை. சிறு சிறு கும்பலாக மக்கள் தேவாலாய பூசைக்கோ அல்லது கடற்கரைப்பகுதிக்கோ போய்க்கொண்டிருந்தார்கள். ‘என்னை தத்து எடுத்தீப்பீங்களா’? எனப் பிறரிடம் கேட்கவேண்டுமென்கிற ஆவல் அவனிடத்தில் அதிகம் வருவதும் இந்தப் பண்டிகை நாட்களில்தான். ஆனால் அப்படியானதொரு கேள்வியை அந்த நாட்களில் ஒருவரும் அவனிடம் கேட்டதில்லை.

அங்கிருந்த குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிற் கூடத்திற்குள் காரணமின்றி மோந்தோ நுழைந்தான். காலியாகவிருந்த குடியிருப்போரின் அஞ்சல் பெட்டிகளையும் அதனருகில், தீவிபத்தின்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளிருந்த பலகையையும் பார்த்தான். அளவீட்டு விசை (Timeswitch) ஒன்றிருந்தது, அதைத் திருக, எழுப்பிய டிக்-டாக் சத்தத்தை கேட்டான். நுழைவாயிற் கூடத்தில் கடைசியாக படிகட்டுகளின் ஆரம்பமும், மெருகேற்றப்பட்ட மரக் கைபிடிகளும்., சுண்ணாம்புச் சாந்தினால் செய்த பொம்மைகளைக் கொண்ட பெரியதொரு நிலைக்கண்னாடியும் இருக்கக் கண்டான். அங்கிருந்த விசைத் தூக்கியில் (Lift) ஒருமுறை பயணிக்க விரும்பினான். பெரியவர்களில்லாமல் சிறுவர்கள் தனியே அதை உபயோகிக்கக்கூடாதென்பதை அவன் அறிந்திருந்ததால் யோசிக்க வேண்டியிருந்தது..

வெளிர் நிற கவுன் சலசலக்க, தேனின் நிறத்தில் நெளிநெளியாய் தலைமுடியுடன் இளம்வயது பெண்ணொருத்தி அப்போது நுழைந்தாள். அவளிடத்தில் நல்ல மணம். திறந்திருந்த கதவுக்குப் பின்னால் நின்றிருந்த மோந்தோ அவள் பார்வையில் படும்படி முன்னால் வந்து நின்றான். இளம்பெண் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டாள்.

– உனக்கு என்ன வேணும்?

– உங்ககூட விசைத் தூக்கியில் வரலாமா?

இளம்பெண் சிரிக்கிறாள்.

– அதற்கா இப்படி? தாராளமா வரலாம்.

விசைத்தூக்கிக்குள் இருவரும் கால் வைத்ததும், படகுபோன்று அது குலுங்கியது. .

– எங்கே போற?

– கடைசிமட்டும்.

– ஆறாவது மாடிக்கா? நானும் அங்கேதான் போகணும்.

விசைத்தூக்கி மெல்ல உயர்ந்தது, கண்ணாடி வழியே தளங்கள் ஒன்றன்பின்னொன்றாக கீழிறங்குவதைப் பார்த்தான். ஒவ்வொரு அடுக்கிலும் குழப்பமான சத்தம். கதவுகள் அதிர்வதும் நடக்கிறது. விசைத்தூக்கியின் கம்பி வடங்கள் எழுப்பிய சீழ்க்கை ஒலிகளையுங்கூட கேட்க முடிந்தது.

– உங்க குடியிருப்பும் இந்த கட்டிடத்திலதான் இருக்கா? கேட்டவள், வியப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

– இல்லைங்க.

– உன்னுடைய சிநேகிதர்கள் யாரையாவது பார்க்க வந்திருக்கியா?

– இல்லைங்க. சும்மா தெருவில் போய்க்கொண்டிருந்தேன். கதவுத் திறந்திருக்க உள்ளே வந்தேன்.

– என்னது?

இளம்பெண்ணுடைய பார்வை மோந்தோவை விட்டு அகலவில்லை. அவளுக்குக் கனிவான பெரிய கண்கள், அதில் கொஞ்சம் ஈரமும் தெரிந்தது. அவளது கைப்பையைத் திறந்து மெல்லிய தாள்சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தாள்.

விசைதூக்கி மேல் நோக்கிப் போய்க்கொண்டிருக்க, தளங்கள் ஒவ்வொன்றாக கீழ் நோக்கிச் செல்கின்றன.

– விமானத்தில் மேலே போவதுபோல இருக்கிறது -மோந்தோ.

– விமானத்தில் இதற்கு முன்ன போயிருக்கிறியா?

– இல்லைங்க, இதுவரை போனதில்லை. விமானப் பயணம் ஜோராக இருக்குமென்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இளம்பெண் புன்னகைத்தாள்.

– விமானம், விசைத் தூக்கியைக் காட்டிலும் வேலமாகப் போகும், தெரியுமில்லையா?

– நல்ல உயரத்திலும் போகும்.

– ஆமாம் ரொம்ப உயரத்திலே போகும்!

விசைத்தூக்கி மெல்ல பொருமிக்கொண்டு நின்றது. கூடவே சின்னதாக ஒரு குலுக்கல் வேறு. இளம்பெண் முதலில் வெளியேறினாள்.

– நீ வரலையா?

– இல்லைங்க, உடனே இறங்கி யாகணும்.

– உன் விருப்பம்போல செய். ஆனால் இறங்குவதற்கு, கடைசி பொத்தானுக்கு முன் பொத்தானை அழுத்தணும். கவனம் இருக்கட்டும், சிவப்புப் பொத்தானை தொட்டுடப்போற. அது எச்சரிக்கை மணிக்கானது.

விசைத்தூக்கியின் கதவுகள் மீண்டும் மூடிக்கொள்வதற்கு முன்பாக இளம்பெண் மறுபடியும் புன்னகைத்தாள்.

– பார்த்துப்போ, வாழ்த்துக்கள்!

– நன்றிங்க.

கட்டிடத்தைவிட்டு வெளியில் வந்தபோது சூரியன் தலைக்குமேல் இருந்தது. கிட்டத்தட்ட உச்சிவேளை எனலாம். காலைத் தொடக்கம் மாலைவரை கிடுகிடுவென நாள் போகிறது. அதுபற்றிய பிரக்ஞை இல்லையென்றால் பொழுது இன்னும் கூட வேகமாக கரைந்துபோகக்கூடும். மக்கள் இப்படி அவசர கதியில் இயங்குவதற்கு அதுதான் காரணம். சூரியன் மீண்டும் இறங்கிவருவதற்கு முன்பாக செய்யவேண்டியதையெல்லாம் முடித்திட முடியுமா என்கிற கவலை அவர்களுக்கு.

பின்னேரங்களில் மக்கள் கால்களை அகலவைத்து வீதிகளில் நடக்கிறார்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேவருகிறவர்கள், வாகனங்களில் ஏறுகிறார்கள். கதவுகளை அடித்து சாத்துகிறார்கள். ஏங்க கொஞ்சம் நில்லுங்க, நானும் வறேன்” என்று அவர்களிடம் மோந்தோவுக்குச் சொல்ல விருப்பம். ஆனால் ஒருவரும் அவனை சட்டைபண்ணுவதில்லை.

கடுமையாகவும், வேகமாகவும் அடித்துக்கொள்ளும் அவனது இதயத்தின் எதிரொலி அவனிடத்திலும் வெளிப்பட்டது. கைகளைக் கட்டிக்கொண்டு அசையாமல் சந்திகளில் நின்றான். தெருக்களில் நடந்துபோகிற கூட்டத்தைப் பார்த்தான். காலையில் அவனுடலில் இருந்த அசதி இப்போதில்லை. கால்களால் ஓசை எழுப்பியபடியும், பேசிக்கொண்டும், கலகலவென்று சிரித்தபடியும் வேகமாய் நடக்கத் தொடங்கினான்.

கூட்டத்தில் ஒருவளாக, ஒரு வயதானப் பெண்மணி நடைபாதையில், மெல்ல நடந்துவந்துகொண்டிருந்தாள். அவள் முதுகு கூன்போட்டிருந்தது, தன் பாட்டுக்கு குனிந்த தலை நிமிராமல் நடக்கிறாள். அவள் லையிலிருந்த பைமுழுக்க மளிகைப் பொருட்கள், சுமக்க முடியாமல் சுமந்து வந்தாள். அவள் அடியெடுத்து வைக்குந்தோறும் பை தரையைத் தொட்டது. மோந்தோ அவளை நெருங்கி, பையைக் கையில் வாங்கிக் கொண்டான். கிழவி சுவாசிக்குந்தோறும், அவள் விடுகின்ற மூச்சானது இவனுக்குப்பின்னே தெளிவாய்க் கேட்டது.

சாம்பல் வண்ண கட்டிடமொன்றின் எதிரே கிழவி நின்றாள். அவளோடு சேர்ந்து மோந்தோவும் படிகட்டுகளில் ஏறினான். மூதாட்டியை நினைக்க அவனது பாட்டி அல்லது அத்தை ஞாபகம் வந்தது, அவளுக்கு காது மந்தம் என்பதைப் புரிந்துகொண்டதால் அவளிடம் எதுவும் பேசவில்லை. நான்காவது மாடியிலிருந்த அவளது குடியிருப்பின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். கதவைத் திறந்ததும் நேராக சமையல் அறைக்குள் நுழைந்து, வாசனைப்பொருள்களிட்டு தயாரித்திருந்த ரொட்டியிலிருந்து ஒரு துண்டை வெட்டி மோந்தோவிடம் கொடுத்தாள். ரொட்டித் துண்டைக் கொடுக்கிறபோது அவள் கை நடுங்குவதைக் கவனித்தான். “கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக!” என்ற பொழுது அவள் குரலிலும் நடுக்கமிருப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை.

மீண்டும் தெருவில் இறங்கினான். சிறிது தூரம் நடந்திருப்பான். திடீரென்று தான் மிகவும் குள்ளமாய்ப் போனதாக உணர்வு. சுவரொன்றின் ஓரமாக நடந்துகொண்டிருந்தான். அவனைச் சுற்றியிருந்த மனிதர்கள் சட்டென்று வளர்ந்து மரங்கள்போல நிற்கிறார்கள், அவர்களது முகங்கள் கட்டிடங்களில் இருக்கிற பால்கணிகளைப்போல எட்டாத உயரத்திலிருக்கின்றன. ராட்சத மனிதர்களுக்கிடையில் புகுந்து நடந்தான், அவர்கள் தாவுவதுபோல நடக்கிறார்கள். தேவாலயங்கள்போல நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பெண்கள் கால்களில் மிதிபடாமலிருக்க முயன்றான். பெண்கள் புட்டாபோட்ட பெரிய கவுன்களை அணிந்திருந்தார்கள், ஆண்கள் நீண்ட நீல நிற சராயும் வெள்ளை நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தார்கள். இவைகளெல்லாம் உச்சி வேளை சூரிய ஒளி செய்யும் விந்தை, பொருட்களை பெரிதுபடுத்தவும், நிழல்களை சுருக்கிக் காட்டவும் அதனால் முடியும். மோந்தோ அவர்களுக்கிடையே புகுந்து நடந்தான். கீழே பார்க்கிறவர்களுக்கு மட்டுமே அவன் தெரியவருவான். அவ்வப்போது வீதிகளைக் குறுக்காக கடக்கிற நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் மோந்தோவுக்கு அச்சமென்பதே கிடையாது. நகரமெங்கும், பொது பூங்காக்களில், கடற்கரை பகுதிகளில் ஒருவரைத் தேடுகிறான். அவன் தேடுகின்ற நபர் யார்? எதற்காக அவரைத் தேடுகிறான் என்கிற விபரங்களெல்லாம் அவனுக்குப்போதாது ஆனாலும் தேடுகிறான். அந்நபரிடம், “ஏங்க என்னை தத்து எடுத்துப்பீங்களா?” என்று கேட்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அந்நபரின் கண்களில் தெரியும் பதிலை வாசிப்பதும். ஆகவேதான் அந்நபரைத் தேடிக்கொண்டு திரிகிறான்.

——-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா