மோந்தோ-4

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


தி-ச்சின் என்பவளை மோந்தோ சந்திக்க நேரந்ததும், பகற்பொழுது சுருக்கமாகவும், இரவுப்பொழுது நீண்டும் அனத்தலாகவும் இருக்கிற நாட்களிலொன்றில்தான். அன்றைய தினமும் அணையையொட்டிக் நகராட்சி நிர்வாகம் கடலில் குளிப்பவருக்கென அமைத்திருந்த மறைவிடத்தில் அனுமதியின்றி இரவைக் கழித்துவிட்டு, புறப்பட்டிருந்தான். நிலத்தில் அனற்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஈரப்பதமற்ற காற்று தலைமுடியில் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது, காடுகளிலுள்ள கார்க்-ஓக் மரங்கள் எளிதில் தீப்பிடித்து எரிந்தன. நகரத்துக்கு மேலாக தெரிந்த மலைப்பகுதிகளில், வெண்ணிறப் புகை வானிற் படிந்திருந்தது.

மோந்தோ சற்றுநேரம் கதிரவனால் பிரகாசிக்கிற மலைகளை அவதானித்தான். பிறகு அதை நோக்கிச் செல்லும் பாதையில் இறங்கி நடந்தான். வளைந்தும் நெளிந்தும் செல்லும் அப்பாதையில் இடைக்கிடை காரைபூசபட்ட விளிம்புகளைக்கொண்ட அகலமானப் படிகளும் உண்டு. பாதையின் இருபுறமும் உருவாக்கியிருந்த நீர்த்தாரைகளில், சருகுகளும், கிழிந்த காகிதங்களும் அடைத்துக் கொண்டிருந்தன.

படிகளில் ஏறிச்செல்வதை மோந்தோ மிகவும் விரும்புவான். அப்படிகள் மலைகளூடாக அவசரமேதுமில்லை என்பதுபோலவும், சூன்யவெளியைக்குறிவைத்தும் நீண்டிருந்தன. எங்கிருக்கிறோம் என்பதைக்கூட அறியமுடியாதபடி வழி நெடுக தலைப்பில் கண்ணாடி ஓடுகள் பதிக்கபட்ட உயரமான கற்சுவர்கள். நீர்த்தாரைகளில் பார்ப்பதற்கு சுவாரஸ்யத்தை தரக்கூடியது எதுவுமில்லை என்பதுபோல நிதானமாகப் படிகளில் மோந்தோ ஏறிக்கொண்டிருந்தான், எப்போதாவது சிலவேளைகளில் ஒன்றிரண்டு நாணயம், துருப்பிடித்த ஆணிகள், படம்ங்கள், விநோதமான பழங்கள் ஆகியவைக் கண்ணிற்படும். .

உயரே போகப்போக நீள் சதுர கட்டிடங்களுடனும்; சிவப்பும் நீலமுமான வாகனங்கள் ஊர்ந்துசெல்கிற, நேர்நேராக அமைந்த வீதிகளுடனும்; நகரம் சமட்டமாகத் தோற்றம் தரும். மலைகளுக்குகீழே கடலுங்கூட தட்டையாகத்தான் தெரியும், வெண்ணிற இரும்புத் தகடுபோல அது மினுங்கும். அவைகளை மரக்கிளைகளூடாகவும், வீடுகளுக்கு மேலாகவும் காண விரும்பியன்போல மோந்தோ அவ்வப்போது திருப்பிப்பார்த்து நடந்தான்.

படிகளில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை ஒருமுறை நீர்த்தாரையில் காட்டுப்பூனையொன்று சுருண்டு படுத்தபடி துரு பிடித்த டப்பியொன்றிமிருந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் மிச்சத்தை தின்றுக்கொண்டிருந்தது. பூனை தரையோடு தரையாகக் கிடந்தது, காதுகள் மடிந்திருந்தன. அதன் மஞ்சள் நிற கண்களின் வட்டமான கண்மணிகளிரண்டும் மோந்தோவை மீது படிந்திருந்தன. பூனையை நெருங்கியதும் வாய் திறவாமல் அமைதியாகக் கடந்து சென்றான். வளைவொன்றில் திரும்பும்வரை, பூனையின் கண்மணிகளிரண்டும் தனது முதுகில் படிந்திருந்ததைபோல அப்போது உணர்ந்திருக்கிறான்.

ஓசையின்றி ஏறிக்கொண்டிருந்தான். வழியிற்கிடந்த சுள்ளிகளையும் தெறித்துகிடந்த விதைமணிகளையும் மிதித்திடாமல் கவனமாக நடந்தான். நிழலைப்போல சுவடின்றி ஊர்ந்தான்.

படிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒவ்வொரு தடவை அவை குறுகியதாகவும், செங்குத்தாகவும் அமைந்திருக்க கால் வைத்து ஏறுவது மிகவும் சிரமமாக இருந்தது, மூச்சிறைக்கிறது; ஒவ்வொருதடவை அவை சோம்பேறிபோல தனியார் நிலங்களுக்கும் அரசாங்க நிலங்களுக்குமிடையில் கால் நீட்டி கிடக்கின்றன; சிலவேளைகளில் தொடர்ந்துபோகாமல் திரும்ப விருப்பங்கொண்டவப்போல அவை இறங்கிப்போகின்றன.

மோந்தோவுக்கு அவசரமில்லை. பாதையின் வளைவும் நெளிவும் இவனிடமும் தொற்றிக்கொண்டது, இரண்டு பக்கங்களிலுமுள்ள சுவர்களை குறிவைத்து மாறிமாறி நடந்தான். இடைக்கிடை நீர்த்தாரைகளை பார்ப்பதற்கென்றோ, மரக்கிளைகளிலிருந்து இலைகளை கொத்தாக பறிப்பதற்கென்றோ நிற்பதுண்டு. பேரிக்காய் மரத்தின் இலையொன்றை பறித்து, அதன் வாசத்தை நுகர்வதற்காக விரல்களுக்கிடையில் வைத்து கசக்கினான், மூக்கிலும் கண்களிலும் எரிச்சல்கண்டதுதான் பலன். ஹனிசக்கிள் மலர்களைப் பறித்து, மலர் காம்புகளில் சொட்டிய தேனைச் சுவைத்தான். கோரை புல்லை உதடுகளுக்கிடையில் வைத்து இசைத்தான்.

தன்னந்தனியாக இங்கே மலைகள் பக்கம் காலாற நடப்பது மகிழ்ச்சியைத் தரும். மோந்தோவும் அதை விரும்பினான். இவன் மேலே செல்ல செல்ல சூரிய ஒளியும் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்திற்கு மாறிக்கொண்டுவந்தது. சுகமாக இருந்தது. ஏதோ இத்தனை நேரம் தாவரங்களில் இலைகளிலும், பழைய சுவர்களின் கற்களிலும் சிறைப்பட்டிருந்து இப்போதுதான் விடுபட்டதுபோல சூரியனின் கதிர்கள். பகல்முழுக்க பூமியை நனைத்ததுபோதுமென்று நினைத்து வெளிபட்டிருந்தது. அத்தனை வெளியையும் வெப்பத்தால் நிறைத்தது, மேகங்களைகூட விட்டுவைக்கவில்லை, அவற்றையும் ஊதி பெருக்கவைத்திருந்தது.

மலையில் ஒருவருமில்லை. பிற்பகல் முடிவுக்குவந்திருப்பது காரணமாக இருக்கலாம். அதுவன்றி அப்பகுதியை மனிதர்கள் மறந்தும் ரொம்பகாலமாயிற்று. துருபிடித்த கம்பிக்கதவுகளும்; வண்ணமுதிர்ந்து, ஒழுங்காக மூடவியலாமல் பழுதுபட்டுக்கிடந்த சன்னற்கதவுகளிக் கொண்ட வில்லாக்கள் மரங்களுக்கிடையில் பதுங்கிக் கிடந்தன. அவை துக்கத்திலிருக்கிறதென சொல்வதற்கில்லை, மாறாக தூக்கத்தில் இருக்கின்றன என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

மரங்களில் பறவைகள் எழுப்பும் ஒலியையும், காற்றில் கிளைகள் அசைந்து சிலநேரங்களில் உடைபடுவதுமான ஓசைகளையும் கேட்டான். குறிப்பாக வெட்டுக்கிளியொன்றின் பரிதாபமான சீழ்க்கையொலி இவன் நடக்க நடக்க தொடர்ந்து வந்தது. அவ்வொலி அவனுக்கு வெகு அண்மையிலும் கேட்டது, தொலைவிலும் கேட்டது. அண்மையில் சத்தம் வருகிறபோதெல்லாம் ஒலியெழுப்பும் வெட்டுக்கிளியைப் பார்த்தாக வேண்டும் என்பதுபோல திரும்புவான், ஆனால் கேட்ட சத்தம் இல்லையென்றாகிவிடும். அந்நேரம் ஒலி அவனுக்கு முன்னாலோ அல்லது சுவர்களுக்கு மேலிருந்தோ வரும். உதடுகளுக்கிடையில் கோரைப்புல்லைக் கொடுத்து சீழ்க்கையை எழுப்பி அதற்கு அழைப்பு விடுத்தான். வெட்டுக்கிளிக்கு மறைந்து வாழவே விருப்பம்போலிருக்கிறது, இவன் அழைப்பிற்கு செவி சாய்க்கவில்லை.

தூரத்தில், வெப்பத்தின் காரணமாக மலைகளுக்கு மேலே மேகங்கள் தெரிந்தன. அவை வடக்கு நோக்கி ஆக மெதுவாக நகர்ந்தன. அவை சூரியனை நெருங்கியபொழுது, தன் முகத்தில் நிழல்படிவதை மோந்தோ உணர்ந்தான். வண்ணங்கள் மாறின, அசைந்தன, அனைத்தும் மஞ்சள் ஒளியில் தோய்ந்தன, பிறகு அது இல்லை என்றானது. மலையின் உச்சியைப் பார்த்துவரவேண்டுமென மோந்தோவுக்கு வெகுநாட்களாக ஆசை. கடற்கரையிலிருந்து மலைப்பகுதியை ரசித்திருக்கிறான். விதவிதமான மரங்கள், வில்லாகளிள் தெரியும் மின்சார விளக்குகள் எனக் கலந்த மலைத் தொடரை வானத்துடன் பார்க்க ஒரு பெரிய ஒளிவட்டம்போல காட்சிதரும். அந்த ஒரு காரணத்திற்காகவே மலைமீது ஏறவெண்டுமென்கிற ஆசை. படிகளால் அமைந்திருந்த அப்பாதை நம்மை ஆகாயத்திடமும், சூரியனிடமும் சேர்க்கக்கூடும். கடலுக்கு மேலே, மேகங்களுக்கு வெகு அருகில் தெரிகிற மலைத்தொடர் உண்மையில் கொள்ளை அழகு. சாம்பல் நிறத்திலிருந்து விடுபடாமல், வெகுதூரத்தில் தெரிவதுபோலிருக்கிற காலை நேரங்களிலும், மாலைவேளைகளிலும், இரவு நேரங்களில் மின்சார விளக்குகளினால் ஜொலிக்கிறபொழுதும் மலையைக் காண்பதற்கென்று மோந்தோ நேரத்தைச் செலவிட்டிருக்கிறான். இதோ மலையில் ஏறுகிற இக்கணமும் அவனுக்கு மகிழ்ச்சி தருவதே.

குவிந்திருந்த சருகுகளில் சுவர்களோரம் சலமாந்தர்கள்வகை ஓணான்கள் இருக்கக்கூடும். சத்தாமில்லாமல் அருகிற் சென்று அவைகளை திடுக்கிடவைக்கவேண்டுமென்று நினைத்தான். எனினும் அவைகள் இவன் நெருங்கி வருவதை எப்படியோ உணர்ந்து பொந்துகளில் மறைந்துகொள்கின்றன.

பற்களுக்கிடையில் சீழ்க்கை எழுப்பி சலமாந்தர்களை அழைத்தான். ஒரே ஒரு சலமாந்தரையாவது பிடித்து, அவற்றுக்கு விருப்பமானதைக் கொடுத்து, தமது கால்சராய் பையில் பத்திரப்படுத்திக்கொண்டு நடை பழகவேண்டும் அப்படியொரு ஆசையும் அவனுக்குண்டு. அவனுடைய சலமாந்தர் பசிக்கென்று ஈக்களைப் பிடித்து கொடுக்கலாம், கடற்கரை மணலில் இதமான வெயிலுக்காக அமரும் பொழுதும் அல்லது அணையின் கற்களில் அமர நேரிடுகிற பொழுதும் ஜேபியிலிருந்து சலமாண்டெரை எடுத்து தோளில் விட்டுக்கொள்ள, அதுவும் அமைதியாக தோளில் அமர்ந்துகொள்ளும். அப்போது அது எழுப்பும் மெல்லிய உருமலை அதன் நெஞ்சத்துடிப்பில் கண்டு மகிழலாம்..

பிறகு ‘பொன்னொளி வீடு’ என்று மோந்தோ பேர்சொல்லி அழைக்கிற வில்லாவின் கதவருகே மோந்தோ வந்து நின்றான். அப்பெயரை முதன் முதல் அந்த வில்லாவுக்குள் நுழைகிறபோது சூட்டியிருந்தான். அதுவே பின்னர் நிலைத்துவிட்டது. அழகான பழங்காலத்து வீடு, இத்தாலியர் வீடுகளைப் போன்றதொரு தோற்றம். மஞ்சளும்- ஆரஞ்சு வண்ணமுமான சுண்ணாம்பு காரையைப் பூசியிருந்தார்கள். காற்றுவாரிகள் மிகப்பெரியதாக இருந்தன. அவற்றின் கதவுகள் ஈன நிலையிலிருந்தன. திராட்சைக்கொடியொன்று வீட்டு முன் வாயிலை மூடியிருந்தது. சிறிய தொரு தோட்டமும் இருந்தது, ஆனால் எங்கே முடிகிறது என்று சொல்ல இயலாமல் எங்குபார்த்தாலும் புற்களும் முட்செடிகளுமாக மண்டிக் கிடந்தன. வெளியிலிருந்த இரும்புக்கதவைத் தள்ளிக்கொண்டு, சரளைகற்கள் பரப்பப்ட்ட பாதையில் முன்வாசற் கதவினை நோக்கி சப்தம் எழுப்பாமல் மெல்ல நடந்தான். அலங்கார வேலைபாடுகள், சிற்ப வேலைபாடுகள் என்றில்லாமல் மஞ்சள் நிறத்திலிருந்த வீடு பார்க்க எளிமைத் தோற்றத்துடனிருந்தது. இது போன்றதொரு வீட்டை இதற்கு முன்பு தான் பார்த்ததில்லை என்ற முடிவுக்கு மோந்தோ வந்தான். ஒழுங்கற்றுக்கிடந்த தோட்டத்தில் வீட்டு முன்பாக, வீட்டுக்கூரையை காட்டிலும் கூடுதல் உயரத்தில் இரண்டு செம்பனைகள். காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம், அவற்றின் ஓலைகள் வேய்ந்துள்ள
ஓடுகளிலும் நீர்த்தாரைகளிலும் உரசுகின்றன. பனைமரங்களைச் சுற்றி புதர்போல செடிகள் மண்டிக்கிடந்தன, மரங்கள் நெடுக ஊதா நிறத்தில் காட்டுக் கொடிகள் பாம்புபோல படர்ந்திருந்தன.

அந்த வீட்டில் அழகென்று வர்ணித்தால் அது ஒளியால் மூடப்பட்ட வீட்டின் தரிசனம். தங்கத்தில் தகடு வேயப்பட்டதுபோலிருந்த அவ்வீட்டிற்கு ‘பொன்னொளிர் வீடு’, என்ற பெயரை மோந்தோ தேர்ந்தெடுக்கவும் அதுதான் காரணம், வீட்டை முதன்முதலாகப் பார்த்தபோதே அவன் மனதில் உதித்த பெயர். பிற்பகல் கதிரவனின் ஒளிசெய்த மாயம் அது. அவ்வொளியில் மென்மையுமுண்டு, சாந்தமுமுண்டு. பார்த்ததும் சட்டென்று மனதிற் பதியக்கூடிய இலையுதிர்காலத்து பழுத்த இலைகள் அல்லது மணலுக்குண்டான நிறமென்று அவ்வொளியைக் கருதலாம். அவ்வொளிவெள்ளம் தரும் போதையில் திக்குமுக்காடிப்போவோம். அன்றைக்கு சரளைக்கற்களால் மூடப்பட்ட பாதையில் அவன் மெல்ல நடந்தபோது, ஒளிக்கதிர் முகத்தை ஸ்பரிசித்ததை உணர்ந்தான். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன, உறங்க வேண்டும்போல இருந்தது, இதயத் துடிப்பும் குறைந்திருந்தது. சுவாசம் தடைபட்டுப்போனது.

மீண்டும் வெட்டுக்கிளியின் சப்தம், பதுங்கி விளையாட்டுக்காட்டியதுபோதுமென்று நினைத்து புதரிலிருந்து வெளிவந்திருப்பதைப்போல இந்தமுறை கூடுதலாவேக் கேட்டது. அவ்வொலியை சிறிது நேரம் நின்றுகேட்டவன் முன்வாசலை நோக்கி நடந்தான், நாய் ஏதேனுமிருந்து எதிர்ப்படுமானால் சமாளித்து சிட்டாய் பறப்பதற்கும் தயாராகவிருந்தான். ஆனால் ஒருவருமில்லை, கடுமையான வெப்பம் இலைகளுக்கு அயற்சியை கொடுத்திருக்கவேண்டும், சுற்றியிருந்த செடிகொடிகள்கூட அசைவின்றி இருந்தன. புதர் போல மண்டிக்கிடந்த தாவரங்களுக்கிடையில் இறங்கினான், கொப்புகளை விலக்கிக் கொண்டு நடந்தான், வளர்ந்திருந்த முட்செடிகளை ஒதுக்கினான், செடிகொடிகளால் மூடப்பட்ட மறைவிடமொன்று அங்குண்டு, தங்கம்போல மஞ்சள் நிறந்த்தில் ஜொலிக்கிற வீட்டை அங்கிருந்துகொண்டுதான் அவன் மெய்மறந்து ரசிப்பது வழக்கம். வீட்டின் முகப்பிலிருந்த வெளிச்சம் பைய குறைந்துகொண்டுவந்தது. வெட்டுக்கிளியின் குரலையும், மோந்தோவின் தலையைச் சுற்றிவந்து கொசுக்களிடும் ரீங்காரமுமின்றி வேறு சப்தங்களில்லை, எங்கும் நிசப்தம். புன்னைமரத்தின் அடர்ந்திருந்த இலைகளுக்குக் கீழே தரையில் அமர்ந்து வீட்டின் கதவினை வெறித்துப் பார்த்தான், பிறகு முன்வாசலில் பிறைநிலாபோல கட்டப்பட்டிருந்த படிகளைப் பார்த்தான். படிகளுக்கிடையில் புற்கள் முளத்திருந்தன. கைமீது தலைவைத்து ஒருக்களித்து சிறிது நேரம் படுத்திருந்தான்.

வாசமுள்ள மரத்தடியில், மனதிற்குப்பிடித்த பொன்னொளிவீட்டிற்கு அருகாமையில், போவதும் வருவதுமாக இருக்கிற வெட்டுக்கிளியின் ஓயாத ரீ¢ங்காரத்தைத் துணைக்குவைத்துக்கொண்டு அமைதியும் வெப்பமும் சூழ்ந்திருக்க நித்திரை வாய்ப்பது புண்ணியம். மோந்தோ உனக்கொன்று தெரியுமா? கண்மூடி உறங்கும்போதெல்லாம் நீ அங்கிருப்பதில்லை. உனது உடலைவிட்டு எங்கோ வெகுதூரத்திற்கு பயணப்பட்டுவிடுகிறாய். கற்கள் பரப்பிய பாதைக்கருகில் உடலைச் உறங்கப்போட்டுவிட்டு, ஊற்சுற்ற போய்விடுகிறாய், அச்செயல்தான் எங்களை வியப்பிலாழ்த்துகிறது. மெல்ல சுவாசித்துக்கொண்டு, சரீரம் மாத்திரம் நிலத்தில் கிடக்கிறது, கண்கள் மூடி இருக்கின்றன, வீசும் காற்றால் முகத்தில் அவ்வப்போது படிந்து பின்னர் மறைந்துபோகும் மேகங்களின் நிழல். உன் கன்னங்களை ராட்சத கொசுக்கள் சுற்றிவருகின்றன, கட்டெறும்புகள் உனது ஆடைகளையும், கைகளையும் பரிசோதிக்கின்றன. பிற்பகல் காற்றில் உனது தலைமயிர் பறக்கிறது. ஆனால் நீ அங்கிருப்பதில்லை எங்காவது தேசாந்தரம் போயிருப்பாய், அது அந்த வீட்டின் கதகதப்பான ஒளியாக இருக்கலாம், புன்னை இலைகளின் வாசமாக இருக்கலாம், மண் துகள்களில் ஒட்டிக்கிடக்கும் ஈரமாக இருக்கலாம். சிலந்திக்கூடுகளில் நடுக்கம், கூட்டிலுள்ள சிலந்திகள் தூக்கம் கலைந்து கண்விழிக்கும் நேரம். கறுப்பும் மஞ்சளுமான நிறங்களில், வயதான சலாமந்தர்கள் சுவர்களின் ஓட்டைகளிலிருந்து வெளிப்பட்டு, ஓரிடமாய் நின்று, விரல்கள் பரத்திய பாதங்களில் உடலைக் கிடத்தி உன்னைத்தான் அவதானிக்கின்றன. ஆகக் கண்களை மூடிய உனது சரீரம் பலருக்கும் வேடிக்கைப் பொருளாகிறது. பிறகு தோட்டத்தின் மற்றொரு மூலையில் மண்டிக்கிடக்கும் பிலாக்பெரி(blackberry), ஹோலி(holly) முட்செடிககளுக்கிடையில், புங்கமரமொன்றின் கீழ் வண்டொன்று ஓயாமல் ரம்பம் கொண்டு அறுப்பதுபோல சத்தமிடுவது காதில் விழுகிறதா? அதுகூட உன்னைத்தான் அழைக்கிறது, அதற்கு உன்னிடம் ஏதோ சொல்லவேண்டுமாம். ஆனால் அவற்றையெல்லாம் நீ காதில் வாங்குவதில்லை, புறப்பட்டு உன்பாட்டுக்கு கண்காணாத தேசத்திற்கு போய்விடுகிறாய்.

– யார் நீ? – உரத்த குரல்.

மோந்தோவுக்கு முன்னால் ஒரு பெண்மணி. அவள் அவனால் நம்பமுடியவில்லை, பார்க்க ஒரு சிறுமிபோலவிருந்தாள். முகத்திற்குப் பின்புறம் விழுந்திருந்த தலைமயிர் வட்ட வடிவத்தில் வெட்டப்பட்டிருந்தது. சாம்பலும் நீலமுமாக ஏப்ரனை உடலிற் கட்டியிருந்தாள். சிரித்தாள்.

– எங்கிருந்து வர?

மோந்தோ எழுந்து நின்றான். அவனைக் காட்டிலும் உயரத்தில் மிகச் சிறியவளாக இருந்தாள். இவனுக்கு கொட்டாவி வந்தது.

– தூங்கினாயா என்ன?

– மன்னிச்சுக்குங்க, உங்கத் தோட்டத்துக்குள்ளே வந்தேன், களைப்பாக இருக்கவே அப்படியே கொஞ்சம் தூங்கிட்டேன். தங்கமாட்டேன் உடனே கிளம்பிடுவேன்.

– உடனே போகவேண்டுமென்று ஏன் நினைக்கிற, தோட்டங்களென்றால் உனக்குப் பிடிக்காதோ?

– ஐய்யய்யோ, எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிரம்மிப்பா இருக்கு,- என்ற மோந்தோ பெண்மணியின் முகத்தில் கோபத்திற்கான அறிகுறிகள் தெரிகிறதாவென்று கவனித்தான். ஆனால் அவள் முகத்தில் தொடர்ந்து சிரிப்பு, பூனையின் கண்களில் காண்பதுபோல, ஒருவிதமான தேடலை அவளுடைய பார்வையில் காணமுடிந்தது. அவள் கண்கள் மற்றும் வாயைச்சுற்றித் தெரிந்த சுருக்கங்கங்கள், பெண்மணி வயதானவளென்பதைத் தெரிவித்தன.

– அப்போ உள்ளே வந்து வீட்டையும் பாரேன், – அவள்.

அவனுக்கு முன்பாக நடந்தவள், பிறைவடிவத்தில் அமைத்திருந்த வாசற்படிகளில் கால்வைத்து ஏறி முன் கதவைத் திறந்தாள்.

– தயங்காதே வா.

மோந்தோ அவளைப் பின் தொடர்ந்து சென்றான். பெரியதொரு வரவேற்பறை, உள்ளே பெரிதாய்ச் சொல்லிக்கொள்ளும்படி தளவாடங்களோ, பொருட்களோ இல்லை, காலியாக இருந்தென்று சொல்லலாம். அறைக்கு நடுவே ஒரு மேசையும், நாற்காலிகளுமிருந்தன. பளபளவென்றிருந்த தட்டொன்றில் தேநீர்க்குடுவையும், கோப்பைகளுமிருந்தன. மோந்தோ வாசற்படியில் நின்றவண்ணம் அறையையும், சன்னல்க¨ளையும் கவனித்தான். சன்னல்களில் தடித்த கண்னாடிக் கதவுகளுடனிருந்தன. உள்ளே வந்திருந்த வெளிச்சத்தில் வெப்பமும், பொன்னிறமும் இன்னமும் தெரிந்தன. வேறெங்கும் இது போல் வெளிச்சம் ஒளிர்வதை மோந்தோ கண்டவனில்லை.

குள்ளப்பெண்மணி மேசைக்கு முன்பாக நின்றவள் கோப்பைகளில் தேநீரை நிரப்பினாள்.

– உனக்கு டீ பிடிக்குமா?

– பிடிக்கும் மேடம்.

– அப்போ வா. உட்கார்.

மெல்ல நடந்து வந்தவன் நாற்காலியின் விளிம்பில் பட்டும் படாமல் அமர்ந்தபடி, தேநீரை அருந்தினான். தேனீர் கூட பொன்னிறத்தில் இருந்தது, உதட்டைச் சுட்டுக்கொண்டான், தொண்டையிலும் கொதித்தது.

– ரொம்பச் சுடுது.

பெண்மணியும் அமைதியாக கொஞ்சம் அருந்தினாள்.

– எங்கிருந்து வந்தாயென்று சொல்லவில்லையே. அவளுடைய குரல் இனிமையாக ஒலித்தது..

– எனக்கு மோந்தோண்ணு பேரு.

பெண்மணியின் முகத்தில் இன்னமும் சிரிப்பு ஒட்டிக்கிடந்தது. நாற்காலியில் அமர்ந்தவுடன் ஆகக் குள்ளமாகத் தெரிந்தாள்.

– எனக்கு தின்-ச்சின் என்று பேரு..

– உங்க நாடென்ன சீனாவா?.

பெண்மணி மறுப்பதுபோல தலையை ஆட்டினாள்.

இல்லை எனக்கு வியட்நாம், சீனா இல்லை.

– உங்க நாடு ரொம்ப தூரத்திலிருக்கா?

– ஆமாம், வெகு தூரத்திலிருக்கு.

மோந்தோ நேநீரை பருகினான். அவனுடைய களைப்பு போனவிடம் தெரியவில்லை.

– உனக்கு எனத ஊரு? உன்னைப் பார்க்க இந்தப் பக்கத்து பையன் மாதிரி தெரியலையே.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மோந்தோ விழித்தான்.

– நீங்க நினைப்பது சரி, நான் வெளியூர். முன் தலையில் விழுந்திருந்த முடியை ஒதுக்கியவன், சட்டென்று தலையைக் குனிந்துகொண்டான். பெண்மணிக்கு எப்போதும்போல சிரிப்பு, மாறாக அவளுடைய சிறிய கண்களில் சட்டென்று கவலை குடிகொண்டது.

– கொஞ்ச நேரம் இருந்துட்டு போ. உடனே போயாகணுமென்று நிர்பப்பந்தங்களில்லையே? – பெண்மணி.

– உங்க தோட்டத்துக்குள் நுழைந்திருக்கக்கூடாது. கதவு திறந்திருந்தது. நானும் களைத்திருந்தேன்.

– நீ செய்ததில் எந்த தப்புமில்லை. நீயும் பார்த்தியே. உன்ன குற்றம் சொல்லலியே? கதவைத் திறந்து வீட்டிற்குள் அழைத்தேனா இல்லையா.

– அப்போ உங்க வீட்டுக்கு நான் வருவேனென்று முன் கூட்டியே தெரியுமா. பெண்மணியின் நடவடிக்கை அவனது அச்சத்தைக் குறைத்திருந்தது. அதை உறுதிபடுத்திக்கொள்ள விரும்பினான்.

பெண்மணி ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினாள். ஒரு கிண்ணம் நிறைய மக்கரோன் கேக்குகள் கொடுத்தாள்.

– பசிக்கிறதா?

– ஆம், என்ற மோந்தோ, வெளிச்சம் உள்ளேவர காரணமான பெரிய சாளரங்களைப் பார்த்தபடி கேக்கிலொன்றை எடுத்துத் தின்றான்.

– ரொம்ப அழகா இருக்கு. எதனால இப்படி தங்கம் போல ஜொலிக்குது.

– சூரியனின் கதிரொளிதான் காரணம்.

– அப்போ நீங்க பணக்காரிண்ணு சொல்லுங்க.

தி-ச்சின் சிரித்தாள்.

– எவருக்கும் உடமையாக முடியாத தங்கம் இது.

இருவருமாக வெளிச்சமிடும் அழகை ரசித்தபடி கனவுலகில் மிதந்தார்கள்.

எங்க நாட்டில கூட இப்படித்தான் இருக்கும். அந்தி நேரத்தில் வானம் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டதைபோல மாறிடும், திட்டுத் திட்டாக இலேசாக மிதக்கும் கறும் மேகங்களைப் பார்க்கலாம். அம்மேகங்கள் பறவைகளின் இறகுபோல இருக்கும்.

அறைமுழுக்க பொன்னொளியால் நிரம்பியிருந்தது, தேநீர் குடித்து முடித்ததும் தெம்பும் அமைதியும் மீண்டும் அவனுக்குள் குடிகொண்டது.

– என்னுடைய வீடு உனக்குப் பிடிச்சிருக்கா?

– ரொம்பப் பிடிச்சிருக்கு, அவனுடைய கண்களிலும் சூரியனின் அத்தனை வண்ணங்களும் ஜொலித்தன.

தி-ச்சின் பெண்மணியும் பொன்னொளி வீடும் அவனுக்கு அறிமுகமான நேர்ந்த கதை இதுதான். வெகு நேரமாய் வரவேற்பறையிலிருந்தபடி அன்றைக்கு சன்னல்களை பார்த்துக்கொண்டிருந்தான். மலைகளின் பின்புறத்தில் சூரியன் முற்றாக மறையும்வரை, அறை பொன்னொளியில் மூழ்கிக் கிடந்தது. சொல்லப்போனால் அந்த நேரத்தில் சுவர்களில் ஒட்டிக்கிடந்த ஒளிமாத்திரம், மங்காமல் அப்படியே வெகு நேரம் இருந்தது. பிறகு இலேசாக இருட்டு உள்ளே வந்திருந்தது: சுவர்கள், சன்னல்கள் மோந்தோவின் தலைமயிர் அனைத்தும் சாம்பல் நிறத்துக்கு வந்துவிட்டன. குளிரும் சேர்ந்து கொண்டது. விளக்கேற்றவேண்டுமென்று பெண்மணி எழுந்துகொண்டாள். அதன் பிறகு மோந்தோவை அழைத்துக்கொண்டு இரவை பார்க்கலாமென்று தோட்டத்திற்கு வந்தாள். மரங்களுக்குமேலே நட்சத்திரங்கள் மின்னின, மெல்லிய பிறை நிலாவையும்ங்கூட பார்க்க முடிந்தது.

அன்றிரவு, வரவேற்பறையிலேயே ஒரு பக்கமாக சிறு தலையணைகளை தலைக்கு வைத்துக்கொண்டு மோந்தோ உறங்கினான். அன்றிலிருந்து அந்த வீடு அவனுக்குப் மிகவும் பிடித்துபோயிற்று. அநேக இரவுகள் அங்கே உறங்கி இருக்கிறான். ஒரு சில சமயங்களில் இரவு நேரங்களில் வெக்கையாக இருக்கின்ற நாட்களில் தோட்டத்தில் புன்னை மர இலைகளின் கீழோ, முன்வாசல் கதவருகே படிகளிலோ உறங்குவதுமுண்டு. தி-ச்சின் அதிகம் பேசுவதில்லை. அதனாலேயே மோந்தோவுக்கு அவளைப் பிடித்திருந்தது. முதன் முதலாக அவன் பேரையும் ஊரையும் கேட்டதோடு சரி, அதற்குப்பிறகு அவளிடமிருந்து வேறு கேள்விகள் இல்லை. அவள் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அவ்வப்போது அவனுடையை கைகளை பிடித்தபடி தோட்டத்திலும், வீட்டிலும் இருக்கிற ஆச்சரியமான சங்கதிகளை அறிமுகம் செய்வாள். அவற்றுள் விதவிதமான தோற்றமும், விநோதமான சித்திரங்களும் கொண்ட கற்கள், மெல்லிய நரம்புககள் கொண்ட மரத்தின் இலைகள், பனையின் சிவந்த கொட்டைகள், கற்களுக்கிடையில் பூக்கும் மஞ்சள் வெள்ளை நிற மலர்களென எல்லாமுண்டு. அவள் அவனுக்கென்று வண்டுகள், மரவட்டைகளென அவள் சேகரித்ததை தர, மோந்தோ பதிலுக்கு கடலோரங்களில் அவன் சேகரித்த பறவைகளின் இறகுகள், கிளிஞ்சல்களென கொண்டுவருவான்.

தி-ச்சின் அவன் சாப்பிடுவதற்கென சோறும், சிவப்பும் பச்சையுமாக அரை வேக்காட்டில் காய்கறிகளும் சமைத்து தருவாள். பிறகு சீனக் களிமண்ணாலான வெண்மை நிறக் கோப்பையில் தேநீரும் கொடுப்பதுண்டு. கும்மிருட்டாக இருக்கும் இரவுவேளைகளில், படக்கதைகளுள்ள புத்தகத்தை கையிலெடுத்துக்கொண்டு ராஜா-ராணி கதைகளைச் சொல்வாள். அக்கதை மிகவும் பழமையானது, ஊர் பேர் தெரியாத தேசத்தில் நடக்கும் கதை, அக்கதையில் வருகிற கட்டிடங்களில் கூரைகள் கூர்மையாக இருக்கும், தீக்கக்கும் டிராகன்கள் வரும், வேறு மிருகங்களும் உண்டு. அம்மிருகங்கள்கூட மனிதர்களைப்போல பேசும் என்பதுதான் விந்தை. கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும் மோந்தோ முழுக்கதையையும் கேட்டவனில்லை. கதையைக் கேட்டபடியே உறங்கிப்போவான். குள்ளப் பெண்மணியும் விளக்கை அணைத்துவிட்டு மெள்ள எழுந்து போய்விடுவாள். அவள் முதல் மாடியில் ஒரு சிறிய அறையில் உறங்குவாள். காலையில் அவள் எழுந்திருக்கிறபோது, மோந்தோ புறப்பட்டு போயிருப்பான்.

————————————

——

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா