“மிஸ்டிக் இண்டியா”- ஓர் அபூர்வ அனுபவம்

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

அருணகிரி



ஏழ்மையையும், அவலத்தையும் மட்டுமே இந்திய அடையாளமாக்கி அந்த அவலச் சிலுவைகளை வசதியாக இந்து மரபின் முதுகில் மட்டுமே சுமத்தி வரும் கயமைத் திரைப்படக் குப்பைகளுக்கு இடையில், அமைதியாய் ஆரவாரமின்றி மூன்று வருடக் கடும் உழைப்பில் 45000 ஆட்கள் நடிக்க நேர்த்தியாய் உருவாக்கப்பட்டு, பார்வையாளரை பிரமிக்க வைக்கும் ஒரு மகத்தான அனுபவமாக வெளி வந்திருப்பது மிஸ்டிக் இண்டியா என்ற 40- நிமிட 70mm பெருந்திரை வடிவத் திரைப்படமாகும். ஐ-மாக்ஸ் திரையரங்குகளில் காண்பதற்கென்ற தேடிப்பிடிக்கப்பட்ட பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் காட்சியமைப்புகள்.
11 வயது நீலகண்டனாகத் தன் ஆன்மீகத் தேடலைத் தொடங்கி 7 வருடங்களில் 12000 கிலோ மீட்டர்களை வெறுங்காலுடனும் வெற்றுடம்புடனும் கடந்து இந்தியாவையே தன் ஆன்மீகத்தேடலில் அளந்தபிறகு ஸ்வாமி நாராயணனாக உருவெடுக்கும் ஒரு பால யோகியின் உண்மைக்கதை மிஸ்டிக் இண்டியா. 2005-இல் பாரிஸில் நடந்த 10-வது சர்வதேச பெருந்திரை வடிவப் படவிழாவில், பார்வையாளர்களின் தேர்வு (“The Audience Choice Prize”) விருதை வென்ற படம் இது. அமெரிக்க இந்தியக் கூட்டு முயற்சியால் வெளிவந்த இப்படத்தைத் தயாரித்து உலகமெங்கும் வெளியிடுவது பாப்ஸ் என்ற ஸ்வாமிநாராயண் வகுப்பைச் சார்ந்த ஒரு அமைப்பு.
இருநூற்றுப் பதினான்கு வருடங்களுக்கு முன் – 1792 ஜூன் 29 இரவில், இடுப்புத் துணி மட்டும் சொந்தமாய்க் கொண்டு, பாதணிகூட இன்றி, பற்றறுத்து, பயமறுத்து, தான் பிறந்த அயோத்தியையும் உற்றாரையும் விட்டுத் தனியனாய்த் தனது ஆன்மீகத்தேடலைத் தொடங்குகிறான் நீலகண்டன் என்கிற 11-வயது சிறுவன். சரயு ஆற்றில் இறங்கும் அவனைக் கரை சேர்க்கிறது நீர்ப்பிரவாகம். காடு மலைகளை நடந்தே கடந்து ஹரித்துவார் சென்று அங்கு கங்கைக்கரையில் விளக்கு பூஜையைக் காண்கிறான். பிறகு ஸ்ரீபுரம் என்ற கிராமத்தை அடைகிறான். அங்கே ஆள் கொல்லி சிங்கத்திற்குப்பயந்து எல்லோரும் வீட்டினுள் அடங்க, “வீட்டிற்குள் ஒளிந்தால் இறப்பு வராதா” என அமைதியாய்க் கேட்டு விட்டு மரத்தடியில் இரவில் அமர்கிறான் சிறுவன் நீலகண்டன். சிங்கம் அவனை நேருக்கு நேர் கண்டு அமைதியாய் அவன் காலடியில் படுத்துக் கொண்ட அதிசயம் கண்டு ஊரே வியக்கிறது.
அங்கிருந்து 11300 அடி உயரத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலை வெற்றுடம்புடனும், வெற்றுக்கால்களுடனும், மனதில் உறுதியுடனும் நடந்தே அடைகிறான். அவ்வாறே 18000 அடி உயரத்தில் உள்ள கைலாச மலைக்குச்சென்று மானசரோவரைத் தரிசிக்கிறான். பின்னர் 12500 அடி உயரத்தில் உள்ள பழமையான விஷ்ணு கோலிலான முக்திநாத் கோவிலை அடைந்து அங்கு கடுங்குளிரில் வெண் பனிப் பொழிவில் தியானத்தையும் யோக சாதனத்தையுமே உணவாக்கி இயற்கையை வென்று கடுந்தவம் செய்கிறான். தம்-மோ என்ற ஒருவித யோகப்பயிற்சியால் 17 டிகிரி வரை உடல் வெப்பத்தை அதிகரிக்க முடியும் என்பது ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் அறிஞர்கள் ஆய்வில் கண்ட உண்மை. இது படத்திலும் கோடி காட்டப்படுகின்றது.
அயோத்தியிலிருந்து புறப்பட்டு 5 வருடங்கள் கழித்து அஸ்ஸாம், சுந்தரவனக்காடுகள் வழியே ஜகன்னாத் பூரி கோவிலை அடைகிறான். அங்கு வெகு விமரிசையாக வண்ணமயமாக நடக்கும் தேர்த் திருவிழாவை பிரமிப்பூட்டும் விதத்தில் அருமையாகக் கட்டமைத்துப் படம் பிடித்திருக்கிறார்கள். பெருந்திரை வடிவப்படங்களிலேயே அதிகம் உதிரிநடிகர்கள் (Extras) – 45,000 பேர்- பங்கு பெற்ற ஒரே திரைப்படம் இதுதான். இந்தத்தேர்க்காட்சியில் மட்டும் 8000 பேர் பங்கு கொண்டிருக்கிறார்கள். பிரம்மாண்டத்தில் மட்டுமன்றி 200 வருடத்திற்கு முந்தைய இந்தியாவைக் கண்ணெதிரே மிக்க யதார்த்தத்துடன் கொண்டு வரவும் வெகு கவனமாக ஆராய்ச்சி செய்து, பெரும் முயற்சி எடுத்து, அதில் நல்ல வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
நீலகண்டனின் பயணம் நில்லாமல் தொடர்கிறது. கிழக்குகடற்கரையைப் பின்பற்றி ராமேஸ்வரம் வருகிறான். 1.2 கிலோமீட்டர் நீளத்தில் இந்தியாவிலேயே நீண்ட கல் நடைதளம் கொண்டதாகவும், 1212 தூண்களை உடையதாகவும் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரக் கோவிலின் பிரம்மாண்டம் மிக நேர்த்தியாக நம் கண்முன் விரிகிறது. பின் கேரளா வழியாக குஜராத்தில் லோஜ் எனும் கிராமத்தை அடைகிறான்.
காளிகோவில் பூசாரியிடத்தில் தனது குருவைக் கண்டு பிடித்த விவேகானந்தர் போல, குஜராத் கிராமத்தில் சமூகப் பணி புரியும் இறையாளரான ராமானந்தரிடத்தில் தனது ஆன்மீக குருவைக் கண்டு கொள்கிறான் நீலகண்டன். பிளவுபட்டும், மூடப்பழக்கங்களிலும் மூழ்கி அறியாமையில் சிக்கியும் கிடக்கும் மக்களுக்கு உதவுவதே அப்போதைக்கு அவசியமான இறையியல் கடமையென நீலகண்டனுக்கு உணர்த்துகிறார் இராமானந்தர். ஸ்வாமி நாராயணன் என்ற பெயரில் அந்த மடத்துத்தலைமை ஏற்றுப் பல சமூகப்பணிகள் செய்யத்தொடங்குகிறார். பெண் சிசுக்கொலைத் தடுப்பு, பெண்களுக்கு மதிப்பு, ஏழைகளுக்கு உணவு, கிராமங்களில் நீர்வசதி என்பதாகப் பலசமூக சேவைகளைத்தன் மடம் மூலம் நிறைவேற்றியும், அழகான பல கோவில்களைக்கட்டியும் ஒரு பெரும் சமுதாய விழிப்புணர்வு இயக்கத்திற்கு விதையூன்றுகிறார் ஸ்வாமி நாராயணன்.
40 நிமிடங்களே என்றாலும், படம் முடிந்து வெளிவருகையில் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதப்படச்செய்யும் அருமையான ஆக்கமாக மிஸ்டிக் இண்டியா மிளிர்கிறது. பனி மூடிய இமாலயத்திலிருந்து பாலைநிலம் வரை, சிரபுஞ்சிக் காடுகள் முதல் கங்கையின் பிரவாகம் வரை, முக்திநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை முற்றிலும் வேறுபட்ட புவியியலையும் அதன் மகத்தான கோவில்களையும், கட்டிடங்களையும், வண்ணமயமான பண்டிகைகளையும் நம்முன்னே பிரம்மாண்டமாக விரிப்பதிலும் சரி; கணிதம், வானவியல், இயற்பியல், கட்டிடவியல், ஆயுர்வேதம், யோகம் ஆகியவற்றில் பாரதத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுவதிலும் சரி; எவ்வாறு பல மதங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாசாரங்களையும் ஒருங்கிணைக்கும் தொன்மை இழையாக தேடல் நிறைந்த நம் ஆன்மீகப் பாரம்பரியம் விளங்குகிறது என்பதை அழுத்தமாகச் சொல்வதிலும் சரி; மறுப்பு சொல்ல முடியாத வகையில் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது இப்படம்.
ஸ்வாமி நாராயண் அமைப்பு இன்று பல லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்ட உலகளாவிய அமைப்பாக வளர்ந்துள்ளது. அக்ஷர்தம்மில் உள்ள ஸ்வாமிநாராயண் கோவிலில்தான் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் புகுந்து பெண்கள் உட்பட ஏறக்குறைய 30 அப்பாவிகளைசரமாரியாய்ச் சுட்டும் குண்டெறிந்தும் படுகொலை செய்தனர். ஆனாலும் இப்படத்தில் அவை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் பேசப்படவில்லை. காலமெனும் மருந்தை அந்தப்புண்களுக்கு இட்டு விட்டு அமைதியாக மேற்சென்று விட்டது போல், எவ்வித எதிர்மறைக் கண்ணோட்டங்களுக்கும் இடம் தராமல் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பாரதப் பண்பை மட்டுமே மையக்கருவாக்கி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பேசும் பார்வையாளருக்காகத்தான் எடுக்கப்பட்டது எனினும், ஆங்கிலம் அறிந்த இந்தியர்களும் (முக்கியமாக) குழந்தைகளுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.
படம் நிறைந்து வெளிவருகையில், சிங்கத்தைக் கண்டு அஞ்சாமல் இருக்குமாறு அந்த கிராமத்தாருக்கு சிறுவன் நீலகண்டன் கூறும் வார்த்தைகள்தான் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன (நினைவிலிருந்து எழுதியது): “பயத்திலிருந்து தப்பி ஓடக்கூடாது; எதனை பயப்படுகிறோமோ அதனைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம்தான் பயத்தினை வெல்ல முடியும்”.


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி