காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள் முடி ஒப்பனைச் சீப்புகளுடன் நின்றிருந்தாள். ரொம்பவும் கவர்ச்சியற்றுத் தெரியாமல் இருக்க வேண்டாமே என்று ஒரு ரோஜாப்பூவை முடியில் செருகிக் கொண்டு வெளிப்பட்டாள். அவனைப் பார்த்தபின்போ தன் தோற்றம் பற்றி இன்னமும் அவள் வருந்த நேர்ந்தது. மரித்தோர் பணி மையத்தின் ஆட்கள் சோகம் ததும்ப இருப்பார்கள் என்று எதிர் பார்த்ததிற்கு மாறாக அவன் இளைஞனாய் கட்டம் போட்ட கோட்டுடனும், பலநிறப் பறவைகள் உள்ள டையும் அணிந்து காணப் பட்டான். பார்சிலோனாவின் காற்று மழை பற்றிக் கவலைப்படாதவனாய், மேல் கோட்டு அணியாமலே இருந்தான். எந்நேரமும் ஆண்களை வரவேற்கக் கூடிய மரியாவிற்கே சற்றுச் சங்கடமாய் இருந்தது. எழுபத்தி ஆறு வயதான அவளுக்குக் கிறுஸ்துமஸ்க்கு முன்னரே இறந்துவிடுவோம் என்ற நிச்சய உணர்வு இருப்பினும் கூட அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு நன்றாய் உடையணிந்து அவனுக்குத்தக்க வரவேற்பளிக்க வேண்டும் என்று தோன்றியது. வெளியே காத்திருந்தால் குளிர் நடுக்கும் என்று தோன்றியவுடன் அவனை உள்ளே வரச் சொன்னாள்.
‘நான் அலங்கோலமாய் இருக்கிறேன். மன்னிக்கவேண்டும். காடலானியாவில் 50 வருஷமாய் நான் இருக்கிறேன். சரியாய்ச் சொன்ன நேரத்துக்கு வந்த ஒரே ஆள் நீ தான். ‘
மிகச் சரியான , சற்றுத் தூய்மையான அவளுடைய காடலேனிய மொழியில் அவளே மறந்து போன போர்த்துகீசிய மொழியின் இசையும் கலந்து இருந்தது. இத்தனை வயதிலும் அவள் ஒல்லியான, உற்சாகமான கலப்பினத்தவளாய் இருந்தாள். கம்பி போன்ற முடியும், இரக்கமில்லாத மஞ்சள் நிறக் கண்களும், ஆண்கள் மீதான அன்பிரக்கத்தை எப்போதோ தொலைத்து விட்டவள் எனக் காட்டியது. வீதியின் வெளிச்சத்தில் பாதி குருடாகிப் போன அவன் ஒன்றும் பேசாமல் செருப்பின் பாதங்களை சணல் பாயில் துடைத்து விட்டு, சற்றே வளைந்து அவள் கைகளை முத்தமிட்டான்.
‘என் காலத்திய ஆண்களைப் போலிருக்கிறாய் நீ. ‘ மரியாவின் சிரிப்பு புயல் போல் கூர்மையாய் இருந்தது. ‘ உட்கார் ‘.
அவன் வேலைக்குப் புதிதாய் இருந்தாலும் அதிகாலை எட்டு மணிக்கு யாரும் அவனை வரவேற்கத் தயாராயிருக்கமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். அதுவும் இரக்கமில்லாத இந்தக் கிழவியிடமிருந்து. எங்கோ அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி வந்தவள் போலத் தோன்றும் இவளிடமிருந்து. அதனால் அவள் ஜன்னல் திரைச் சீலைகளை விலக்குவதைப் பார்த்தபடி பேசாமல் , கதவின் பக்கமே நின்றான் அவன். ஏப்ரல் மாதத்திய சன்னமான வெளிச்சம் அறையின் மூலைகளில் பரவியது. தினசரி உபயோகத்திற்கான பொருட்கள் அதனதன் இயல்பான இடங்களில் இருந்தன.
‘மன்னிக்கவும் ‘, என்றான் அவன். ‘ நான் வீடு மாறி வந்து விட்டேன். ‘
‘அப்படியிருந்தால் சந்தோஷம் தான் ‘, என்றாள் அவள். ‘ஆனால் சாவு தப்பே செய்வதில்லை. ‘
சாப்பாட்டு மேஜையின் மேல் அவன் ஒரு படத்தை விரித்தான். மடிப்புகள் கொண்ட அந்தத் தாள் பகுதிகள் வர்ணத்துடனும், சில பகுதிகளில் சிலுவையுமாய் இருந்தது. அது விஸ்தாரமான மாண்ட்சூ கல்லறை மைதானத்தின் வரைபடம் என்பது கவனத்தில் வந்தவுடனேயே மனெளஸ் கல்லறையின் பயங்கரம் நினைவிற்கு வந்தது. அக்டோபர் மாதத்து மழையில் பெயர் தெரியாதவர்களின் கல்லறையும், வீரர்களின் ஃப்ளோரன்ஸ் கண்ணாடி பாவிய கல்லறைக் கட்டடங்களும் மிதந்தது நினவில் ஓடியது. ஒருநாள் மாலை அவள் சிறுமியாய் இருந்த காலம், அமேஸான் வெள்ளத்தில் சகதியாகிப் போன கல்லறை மைதானத்தில் உடைந்து போன சவப்பெட்டிகளும், பிணங்களின் கந்தல் துணிகளும் தலை முடியும் வீட்டுக் கொல்லைப் பக்கம் மிதந்து வந்ததைக் கண்டிருக்கிறாள். இந்த நினைவுதான் அவளை, மிக அருகிலிருந்த பழக்கமான சான் ஜெர்வசியோ கல்லறைப் பகுதியைத் தவிர்த்து, மலைப் பிரதேசத்தில் உள்ள மாண்ட்சூ கல்லறைப் பகுதியைத் தன் கடைசி உறைவிடமாய்த் தேர்ந்தெடுக்குமாறு செய்தது.
‘வெள்ளமே வராத இடம் தான் எனக்கு வேண்டும் ‘ என்றாள் அவள்.
‘இதோ இங்கே இருக்கிறது ‘ பேனாவைப் போன்ற குறிப்பீடுக் குச்சியைத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து வரைபடத்தில் ஓர் இடத்தைக் காண்பித்தான் விற்பனையாளன். ‘இவ்வளவு உயரத்திற்கு எந்தக் கடலும் வர முடியாது. ‘
வண்ணம் தீட்டப்பட்ட வரைபடத்தைப் பரிசீலித்த அவள் பிரதான வாசலுக்கருகில் ஒன்றே போலிருந்த மூன்று கல்லறைகளைக் கவனித்தாள். உள் நாட்டுப் போரில் உயிரிழந்த இரண்டு பெயர் தெரியாத போர்வீரர்களுடன், புரட்சியாளனான புனோவெஞ்சுரா துருதியும் புதைக்கப்பட்ட இடம் அது. இரவில் யார் யாரோ அந்தக் கல்லறையில் பெயரை பெயிண்ட், கரித்துண்டு, பென்சில் நகப் பூச்சு கொண்டு எழுதியதை காவலாளிகள் அழித்த தடயம் இருந்தது. துருதியின் சவ ஊர்வலத்தில் மரியாவும் சென்றிருந்தாள். பார்சிலோனாவே துயரிலும், கலவரத்திலும் ஆழ்ந்திருந்த நாள் அது. துருதியின் அருகில் தான் அவள் கல்லறையை விரும்பினாள். ஆனால் அதனருகில் இடமில்லை. அவர்களால் தரமுடிந்த இடத்தைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘ஒரே ஒரு நிிபந்தனை. அடுக்குக்கல்லறையில் என்னைப் போட்டுவிடக்கூடாது. ‘ பிறகு முக்கியமான விஷயத்தை நினைவுகொண்டு சொன்னாள். ‘ என்னைப் படுக்கச் செய்து தான் புதைக்க வேண்டும். ‘ முன் கூட்டியே சலுகை விலையில் வாங்கும் கல்லறையில், இடம் சேமிக்கவேண்டி , நின்ற படி புதைக்கிறார்கள் என்று ஒரு வதந்தி வலம் வந்தபடியிருந்தது. நெட்டுருப் போட்டதை ஒப்பிப்பவன் போல அந்த விற்பனையாளன் விளக்கினான். தவணை முறையில் கல்லறை விற்பனையில் தாம் புரிந்த சாதனையால் பொறாமை கொண்ட போட்டியாளர்கள் இந்தக் கொடூர பொய்யைப் பரப்பி வருகிறார்கள் என்றான். அவன் பேச்சினிடையில் கதவில் மெல்ல மூன்று முறை தட்டப் பட்ட ஒலி கேட்டுத் தயங்கினான். அவனைத் தொடர்ந்து பேசுமாறு சைகை காண்பித்த மரியா மெல்லிய குரலில் சொன்னாள்: ‘ கவலைப் படாதே. நோவா தான் ‘
விற்பனையாளன் தன் விளக்கத்தைத் தொடர்ந்தான். மரியா திருப்தியடைந்தவளாய்க் காணப்பட்டாள். இருந்தாலும் கதவைத் திறப்பதன் முன் தன் மனதில் பல்லாண்டுகளாய் நிலைத்துப் போன, மனெளஸ் பெருவள்ளம் தந்திருந்த கவலையை அழுத்திச் சொன்னாள். ‘வெள்ளம் தாக்காத இடமாக, கோடையில் கொஞ்சம் மரநிழல் உள்ள இடமாக, யாரும் இழுத்துக் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடாத இடமாக இருக்கவேண்டும். ‘
முன் கதவை அவள் திறந்தவுடன் மழையில் நனைந்திருந்த ஒரு நாய் உள்ளே உற்சாகமாய் நுழைந்தது. காலை நேர நடைப் பயணத்திலிருந்து திரும்பிய உற்சாகத்துடனே மேஜை மேல் குதித்தோடிக் குரைத்தது. கல்லறை வரைபடம் அழுக்குக் காலால் பாழாகியிருக்கும். அதன் எஜமானியின் ஒரு பார்வையே அதை அடக்கப் போதுமானதய் இருந்தது. ‘நோவா. உட்கார் ‘ என்று குரலை உயர்த்தாமலே அவள் சொன்னாள்.
அது உள்ளடங்கிப்போய் அவளைக் கலவரத்துடன் பார்த்த போது பிரகாசமான கண்ணீர்த் துளிகள் அதன் கண்களில் வழிந்தோடின. விற்பனையாளனைக் கவனிக்கத் திரும்பிய அவள், வியந்து நிற்கும் அவனைக் காண நேர்ந்தது.
‘கண்ணீர். அது அழுதது. ‘
‘இந்த நேரத்தில் இங்கே ஆட்களைக் கண்டு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ தாழ்ந்த குரலில் மரியா தன் வருத்தத்தைத் தெரிவித்தாள். ‘ பொதுவாக இங்கே வரும் ஆட்களை விட இவன் கவனமாய்த் தான் இருப்பான். நீ ஆனால் மற்றவர்கள் போல் இல்லை. ‘
‘ஆனால், ச்சே , அது அழுததே ‘ விற்பனையாளன் திரும்பவும் சொன்னான். தன் பேச்சில் தெரிந்த மரியாதையின்மையை உணர்ந்த மறு நொடியே மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ‘மன்னிக்க வேண்டும், இது போல் நான் சினிமாவில் கூடப் பார்த்ததில்லை. ‘
‘பயிற்சி கொடுத்தால் எல்லா நாய்களும் செய்யும். ‘ என்றாள் அவள். ‘ஆனால் நாய்சொந்தக்காரர்களோ வாழ்நாள் முழுக்க நாய்களைக் கஷ்டப்படுத்துகிற பழக்கங்களையே சொல்லிக் கொடுக்கிறார்கள். தட்டிலிருந்து சாப்பிடுவது, குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் காரியம் செய்வது, இப்படி. இயற்கையாகவே அவை செய்யக் கூடியதாக, சிரிப்பதும் அழுவதும் சொல்லித்தருவதே இல்லை. ம், நாம் எங்கே விட்டோம் ? ‘
முடித்து விற்பனை விபரத் தாள்களைக் கைப்பெட்டிக்குள் வைக்கிற நேரம் மீண்டும் அந்த அறையைக் கூர்ந்து பார்ப்பவனாக நோட்டம் விட்ட அவன் , அதன் மாய அழகில் சற்றே சிலிர்த்தான். மரியாவை முதல் முறையாய்ப் பார்ப்பவன் போலப் பார்த்தான்.
‘நான் உங்களிடம் ஒன்று கேட்டால் தப்பாய் நினைக்க மாட்டார்களே ? ‘
அவனுடன் கூடக் கதவு நோக்கி நடந்தாள்.
‘என் வயதைக் கேட்காமலிருந்தால் சரி ‘
‘வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்து அவர்கள் என்ன வேலைசெய்கிறார்கள் என்று ஊகிப்பது என் பொழுதுபோக்கு. ஆனால் இங்கே எனக்கு அது புலப்படவில்லை. ‘ என்றான் அவன். ‘ நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? ‘
அடக்கமுடியாமல் சிரித்தபடி, மரியா சொன்னாள். ‘ நான் ஒரு விபச்சாரி. என்ன பையா, என்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையா ? ‘
விற்பனையாளனின் முகம் சிவந்தது. ‘ மன்னித்துக் கொள்ளுங்கள். ‘
‘நான் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். ‘ அவன் கையைப் பிடித்து, கதவில் இடித்து விடாமல் நகர்த்திய அவள் சொன்னாள். ‘ஜாக்கிரதை. நான் மண்டையைப் போடுவதற்கு முன்னால் , உன் மண்டையை உடைத்துக் கொள்ளாதே. ‘
கதவைச் சார்த்தியவுடன், நாயைத்தூக்கி, தட்டிக்கொடுக்கலானாள். அடுத்த கட்டடத்திலிருந்த குழந்தைகள் பள்ளியிலிருந்து கேட்ட அழகிய ஆப்ரிக்கப் பாடலுடன் இணைந்து அழகிய குரலில் பாடலானாள்.
மூன்று மாதங்களுக்கு முன் அவளுக்கு வந்த மரண முன்னறிவிப்புக் கனவிலிருந்து, அவள் தனிமைத் துணையான குழந்தைபோன்ற நாயுடன் மிக நெருக்கமாகி விட்டாள். மரணத்திற்குப்பின் தன் உடைமைகளை எப்படி விநியோகிக்க வேண்டும் என்பதையும், தன் உடல் எப்படி கையாளப் பட வேண்டும் என்பதையும் துல்லியமாகத் திட்டமிட்டாள். இன்று அவள் இறந்து விட்டால் கூட யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது. தானாகவே முன்வந்து ஓய்வு பெற்று விட்டவளாய், காசு காசாய்ச் சேர்த்த கணிசமான பணத்துடன், பழமைச் சிறப்பு வாய்ந்த கிரேஸியா நகரைத் தேர்ந்து குடிவந்தாள். இங்கும் நகரப் பகுதிகள் படரத் தொடங்கிவிட்டன. இரண்டாவது மாடியில், மீன் சமையல் நாற்றம் மண்டிய, துப்பாக்கிச் சண்டையால் தோட்டாத் துளைகளும், உரிந்து போன சுண்ணாம்புமாகக் கிடந்த சுவருடைய ஒரு பழைய பகுதியை வாங்கினாள். ஏறிவரும் படிகளிலும் ஒன்றிரண்டைக் காணவில்லை. குளியலறையையும், சமையலறையையும் பழுது பார்த்து சீர் செய்தாள். சுவர்களைப் பிரகாசமான தாள்களை ஒட்டி, சன்னல்களில் அழகுக்கண்ணாடிகளைப் பொருத்தி, வெல்வெட் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுப் பளிச்சென்று ஆக்கினாள். குடியரசுக் கட்சிக்காரர்களிடமிருந்து பாசிஸ்டுகள் திருடின சிறந்த மரக் கட்டில்கள், சாய்நாற்காலியென ரகசிய ஏலத்தில் வாங்கி வைத்தாள். அவள் கடந்த காலத்துடன் அவளுக்கிருந்த ஒரே தொடர்பு வெள்ளிக்கிழமைதோறும் வந்து உணவருந்தி, தீவிரமாய் அவளைக் காதலித்த கார்டோனாவின் பண்ணையார் ஒருவன் தான்.
அவள் இளமைக் காலத்து ரகசியம் ரகசியமாகவே இருக்கும் படி, அவள் பாதுகாப்பிற்கும், அவன் ஜாக்கிரதையுணர்விற்கும் தக்க, அவனும் கூட தூரமாய்க் காரை நிறுத்தி, இருளில் நடந்து நடந்து வருவது வழக்கம். பக்கத்து வீட்டுக் காரர்களுடன் அவளுக்கு எந்தப் பரிச்சயமுமில்லை. எதிர் வீட்டில் , கொஞ்ச நாள் முன்னால் குடி வந்திருந்த, ஒன்பது வயது சிறுமி ஒருத்தியின் இளம் பெற்றோர்கள் தவிர்த்து, யாருடனும் பழக்கமில்லை. படியேறி இறங்கும் போது கூட யாரையும் பார்த்ததில்லை அவள் என்பது அவளுக்கே ஆச்சரியம் தந்தது.
அவள் சொத்து பிரிக்கிற பட்டியலிடும் போது அவள் வேர்கள் இன்னமும் இங்கு தான் என்று அவள் உணர்ந்தாள். வீட்டின் அருகில் இருந்தவர்கள், அவள் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள். சின்னச் சின்ன பொருள்களால் அவர்களை நினைவு கூர்ந்தாள். உயில் எழுத வந்த வக்கீலே ஆச்சரியப் படும்படி துல்லியமாய்த் தன் நினைவிலிருந்து, யார் யாருக்கு, என்னென்ன பொருட்கள், என்ன முகவரி, அவள் நெஞ்சில் என்ன காரணத்தால் அவர்கள் போற்றப் படுகிறார்கள் என்ற் துல்லியமாய் வர்ணித்தாள்.
மரித்தோர் பணிமைய விற்பனையாளன் வந்து சென்றபிறகு, ஞாயிறுதோறும் கல்லறை செல்லும் எண்ணற்ற பலரில் அவளும் ஒருத்தியானாள். மற்றவர்கள் போலவே, புல்லை நறுக்கி, நீர் வார்த்து, பூக்களைஅலங்கரிக்கலானாள். கம்பளம் விரித்தது போல அழகேறியவுடன், முதன்முதலில் அவள் பார்த்தபோது அந்த இடம், வெறிச்சோடியிருந்தது ஏன் என்று வியந்தாள்.
முதன்முதல் அங்கு வந்தபோது, அந்த மூன்று பெயர்தெரியாத கல்லறைகளின் அருகில் வந்த போது, அவள் நெஞ்சு திக்கென்றது. காவல்காரனின் உன்னிப்பான கவனிப்பை மனதிற்கொண்டு, தயங்கி நிற்காமல் நடந்தாள் அவள். ஆனால் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அவள் வெகுநாள் கனவொன்றை நிறைவெற்றிக் கொண்டாள். தன் உதட்டுச் சாயத்தால் முதல் கல்லறையில் துருதி என்ற பெயரை எழுதினாள். அதிலிருந்து, முடிந்த போதெல்லாம் மூன்று கல்லறைகளிலும் பழைய நினைவுகள் பொங்கும் நெஞ்சத் துடிப்பில் பெயரை எழுதினாள்.
செப்டம்பர் மாதக்கடைசியில், ஒரு ஞாயிற்றுக் கிழமை, முதல் முறையாக அங்கு அவள் மலைப்பகுதியில் புதைக்கப் படுதலைக் கண்டாள். மூன்று வாரம் கழித்து, ஓர் இளம் மணப்பெண் அவள் இடத்திற்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டாள். வருட முடிவிற்குள், ஏழு கல்லறைகள் நிரம்பி விட்டன. மரியாவை ஏதும் தொந்தரவு செய்யாமலே குறுகிய பனிக் காலம் கடந்தது. அவளுக்கு ஏதும் உபாதைகள் இல்லை. வெயில் காலம் தொடங்க, மழையும் தீவிரமடைந்தது. அவள் கனவின் புதிர்களைத் தாண்டி அவள் வாழ்ந்திருக்கத் தீர்மானம் புரிந்தவளானாள். கார்டோனா பண்ணையார் வெயில் காலத்தை மலைப் பிரதேசத்தில் கழித்து வந்தவர், முன்னைக்காட்டிலும் கவர்ச்சியானவளாகவும், ஐம்பது வயதிலும் இளமை பொங்கவும் கண்டார்.
பலமுறை முயன்று, தோற்றுப் போய், ஒரு வழியாக நோவா அந்த மலைப் பிரதேசத்தில் அவள் கல்லறையை அடையாளம் கண்டு கொள்ள வைப்பதில் அவள் வெற்றி பெற்றாள். பின்பு, காலியான அவள் கல்லறை முன் நாயை அழ வைக்கிற பயிற்சியும் தந்தாள். அவள் இறந்த பின்பும் அது போல் செய்கிற பழக்கம் வர வேண்டுமே.நோவாவுடன் சேர்ந்தே நடந்து, ஆங்காங்கு இருந்த அடையாளங்களைப் பழக்கப்படுத்தி, தனியாகவே நோவா நடக்கும் படி தயார் செய்தாள்.
கடைசிப் பரீட்சையாக, ஒரு ஞாயிறன்று, நோவாவின் சட்டையைக் கழற்றிவிட்டு, தனியாகவே போகவிட்டாள். வேகமாய் , வாலை ஆட்டியபடி நாய் சென்று மூலை திரும்பக்கண்டவளுக்கு, அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பதினைந்து நிமிடம் கழித்து அவள் பஸ் ஒன்றில் ஏறி நாயைத் தொடரமுயன்றாள். ஒரு ட்ராஃபிக் விளக்கருகில், வீதியைக் கடக்க நிற்கும் சிறுவர் சிறுமியருடன் அவள் நாயையும் கண்டாள்.
‘அடக் கடவுளே, பாவம் அனாதையாய்த் தோன்றுகிறதே. ‘ என்று பெருமூச்சு விட்டாள்.
நாய் வந்தடைய இர்ண்டு மணி நேரம் போலக் காத்திருக்க வேண்டியதாயிற்று. கல்லறையில் மலர்க் கொத்து வைக்க வந்த பலரைக் கண்டாள். பல ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் கண்ணில் விழுந்தவர்கள் தான். பலருக்கு இறந்தவர்கள் நினைப்பே போயிருக்கும். எல்லோரும் சென்றபின்பு, ஒரு அழுகைக் கேவல் ஓசைி கேட்டது. ஐந்து மணிக்குச் சற்று தாமதமாக, ஆனால் குறித்த நேரத்திற்குப் பனிரெண்டு நிமிடம் முன்னதாகவே நோவா களைத்துப் போய் , ஒரு ஜெயித்த குழந்தையைப் போல பெருமிதமாக, வரக்கண்டாள். தன் கல்லறையில் அழுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்ற பயம் அவளுக்கு அகன்றது.
அந்த இலையுதிர்க் காலத்தில், மேலும் பல நிமித்தங்கள் அவளுக்குப் புரியாவிடினும் அவள் நெஞ்சைக் கலவரப்படுத்தின. ரிலோஜ் கடைகள் மையத்தில் பெரிய காதுகள் கொண்ட கோட்டை அணிந்து, காகிதப் பூக்கள் செருகிய பழைய தொப்பி- அதுவும் இப்போது ஃபாஷனாகி விட்டது – அணிந்து காப்பி அருந்தலானாள். அவள் உள்ளுணர்ச்சி மிகக் கூர்மையாயிற்று. தன் அமைதியின்மையைப் புரிந்து கொள்வதற்காக, பெண்களின் அரட்டையையும், ஆண்களின் உரையாடலையும் – முதன் முறையாக அவர்கள் கால்பந்து பற்றிப் பேசாமல் இருந்ததைக் -கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். தன் மரணத்தின் குறிப்புகளாகவே எல்லாம் அவளுக்குத் தோன்றியது. கிருஸ்துமஸ் காலத்தில், எல்லா இடங்களிலும் விளக்குகள் மின்னின, டூரிஸ்டுகள் கடை மையத்தை ஆக்கிரமித்தார்கள், இருந்தும் இறுக்கமாகவே உணர்ந்தாள். வீதிகளைப் புரட்சியாளர்கள் ஆக்கிரமித்த சமயத்து இறுக்கம் போலவே இருந்தது. பெரும் கலவர நாட்களில் வாழ்ந்திருந்த அவள், இப்போது, பயம் தூக்கத்திலும் பிறாண்டியெடுக்கிற உணர்வு கொண்டாள். ஓர் இரவு, அரசாங்கப் பாதுகாப்பு அதிகாரிகள் சுவரில் புரட்சிகர வாசகம் எழுதிய ஒரு மாணவனைச் சுடக் கண்டாள்.
‘கடவுளே!!- ‘ தனக்குள் பயத்தில் சொல்லிக்கொண்டாள். ‘என்னுடன் சேர்ந்து எல்லாமே செத்து விடும் போல. ‘
இப்படிப்பட்ட கலவர உணர்ச்சி, சிறு பிள்ளையாய் இருந்தபோது தான் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மானெளஸ் நகரத்தில் கருக்கல் வேளையில், இரவு நேர ஒலிகள் எல்லாம் சட்டென்று நின்று போய், நீர்ப் பரப்பின் ஒலி நின்று போய், காலம் தயங்கி நிற்க, அமேஸான் காடுகள் ஒரு பாதாள நிச்சலனத்தில், மரண அமைதியில் நின்றிருக்கும். இந்த இறுக்கமான சூழ்நிலையில் எப்போதும் போல கார்டோனா பண்ணையார் , ஏப்ரல் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று இரவு உணவுக்காக வந்தார்.
அவர் வருகை வெறும் சடங்காக மாறியிருந்தது. சரியான நேரத்திற்கு வருகிற அந்தப் பண்ணையார், இரவு ஏழு மணிக்கும் ஒன்பது மணிக்கும் இடைப்பட்ட நேரம் உள்ளூர் ஷாம்பேன் போத்தல் ஒன்றை, மாலைச் செய்தித் தாளில் மறைத்துக் கொண்டு வருவார். ஒரு சாகலேட் பெட்டியும் கூட. மரியா கோழிவகைகளைத் தயார் செய்திருப்பாள். அந்தந்தக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழ வகைகளும் உண்டு. அவள் சமைக்கும் போது இத்தாலிய ஓபெரா இசையைப் பழைய ஃபோனாகிராப்பில் கேட்டுக்கொண்டிருப்பார். மதுவை மெள்ள மெள்ள உறிஞ்சிய படி.
அவசரமேயில்லாமல் சாப்பாடும், உரையாடலும் முடிந்த பிறகு நினைவு கூர்வது போல் காதல் புரிந்ததும், இருவரும் ஏதோ விபரீதத்தைச் சுவைத்த உணர்வைப் பெற்றார்கள். நள்ளிரவு நெருங்க நெருங்க , அமைதியிழந்த பண்ணையார், ஆஷ்ட்ரேயின் கீழ் இருபத்து ஐந்து பெசரோக்களை வைத்துவிட்டுச் செல்வார். முதன்முதலில் அவர் பாரலேலொ ஹோட்டல் ஒன்றில், மரியாவைச் சந்தித்த போது அவள் விலை அது. காலம் அந்த ஒன்றைத்தான் துருப்பிடிக்காமல் விட்டிருந்தது.
அவர்களின் நட்புக்கு அடிப்படை என்னவென்று, அவர்கள் இருவருமே யோசித்ததில்லை. மரியாவிற்குச் சில உதவிகளை அவர் பண்ணியிருந்தார். அவள் சேமிப்பை எப்படி நிர்வகிப்பது என்று அவர் ஆலோசனை தந்தார். அவளிடம் இருந்த பழம் பொருட்களின் மதிப்பை எப்படி அறிவது என்று சொல்லித்தந்தார். அவை திருட்டுப் பொருட்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க என்ன வழிவகைகள் உண்டு என்று சொல்லிக் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவள் விபச்சார விடுதியிலிருந்து, வயதானதால், வெளியேற்றப்பட்டு, ஐந்து பெசடோ விலைக்காக் சிறு வயதுக்காரர்களுக்குக் காதலிக்கச் சொல்லிக்கொடுக்கும் இடத்துக்கு அவளை அனுப்ப முனைந்த போது, கிரேசியா நகரத்தில் நன்முறையில் முதுமைக்காலத்தைக் கழிக்க வழி காண்பித்தவர் அவர் தான். பதிநான்கு வயதில், அவள் அம்மாவால் மானெளஸ் துறைமுகத்தில் விற்கப் பட்டதையும், துருக்கியக் கப்பல் பணியாள் ஒருவன் அவளை இரக்கமில்லாமல் துன்புறுத்தியது பற்றியும், பிறகு அவளை பணமோ, உடைமையோ, பெயர் கூட இல்லாமல் பாரலேலோச் சகதிப் பிரதேசத்தில் விடப்பட்டதையும் அவரிடம் சொல்லியிருந்தாள். இருவருக்கும் பொதுவாக எதுவுமே இல்லை என்பதை இருவருமே உணர்ந்திருந்ததால், சேர்ந்திருக்கும் போதே தனிமையாய் இருப்பதாகத் தான் உணர்ந்தார்கள். ஆனால் அதைக் கிளறி பழக்கமாகிவிட்ட மகிழ்ச்சியை அவர்கள் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாடுமுழுக்க எழுந்த அந்தப் புரட்சி இயக்கம் தான், அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள், எவ்வளவு மென்மையைக் கொண்டிருந்தார்கள் என்று உணர்ந்து கொள்ள உதவியது.
அது ஒரு திடாரெனக் கிளம்பிய விஷயம். லா பொஹீமே என்ற ஓபெராவில் இருவரின் இணைந்த காதல் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். அவள் சமையலறையில் வானொலி கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் ஆளரவமில்லாமல் வந்து நின்று கவனித்தார். ஸ்பையின் நாட்டின் நிரந்தர சர்வாதிகாரி, மரண தண்டனை விதிக்கப் பட்ட மூன்று பாஸ்க் பிரிவினைவாதிகள் பற்றி முடிவெடுக்கப் பொறுப்பேற்றிருந்தார். பண்ணையார் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
‘அப்படியானால், நிச்சயம் அவனைச் சுட்டு விடுவார்கள். ‘ என்றார் அவர். ‘வெற்றுப்பயல் தானே அந்த காடில்லோ ‘
மரியா அவரை வெறித்துப் பார்த்தாள். கருநாகத்தின் எரியும் கண்கள், தங்க பிரேமிற்குப் பின்னாலிருந்த இரக்கமற்ற கொடிய கண்கள், கடித்துக் குதறத் தயாராயிருக்கும் பற்கள், இருட்டுக்குப் பழகிப் போன மிருகக் கைகள். அவன் சுயரூபம்.
‘அவனைச் சுட வேண்டாமென்று வேண்டிக் கொள். ‘ என்றாள் அவள். ‘அவர்களில் ஒருவரைச் சுட்டாலும் சரி, உனக்கு விஷம் கொடுத்து விடுவேன். ‘
பண்ணையார் அதிர்ந்தார். ‘ஏன் அப்படிச் செய்வாய் ? ‘
‘ நானும் வெறும் விபச்சாரி தானே. ‘
கார்டோனா பண்ணையார் அதன் பின் வரவேயில்லை. தன் வாழ்வின் கடைசிச் சுற்றும் முடிந்து போனதென அவள் நிச்சயித்தாள். அந்த நாளுக்கு முன்னால், பஸ்ஸில் யாரும் எழுந்து அவளுக்கு இருக்கை அளித்தாலோ, அல்லது வீதியைக்கடக்கும் போது கையைப்பிடித்து அழைத்துச் செல்ல முன் வந்தாலோ, மாடியேறும் போது உதவ முன் வந்தாலோ அவள் அதை ஏற்றுக்கொண்டவள் அல்ல. ஆனால் இப்போது அப்படிப் பட்ட உதவிகளை வெறுத்தாலும் கூடத் தனக்குத் தேவைதான் என்று உணரத் தலைப்பட்டாள். அப்பொழுது தான் , ஒரு புரட்சியாளருக்கான கல்லறைக்கல்லை வாங்கிவைத்தாள். அவள் தூக்கத்திலேயே இறக்க நேர்ந்தால், நோவா வெளியே சென்று தகவல் சொல்லத்தோதாக கதவையும் திறந்து வைத்துத் தூங்கலானாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை எதிர்வீட்டுச் சிறுமியைச் சந்தித்தாள். அவளுடன் ஒன்றுமறியாத பாட்டியைப்போலப் பேசிக்கொண்டே நடந்தவள், நோவாவும் சிறுமியும் நீண்ட கால் நண்பர்கள் போலப் பழ்குவதைக் காண னேர்ந்தது. கடைவீதியில் அவ்ளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தந்தபடி கேட்டாள். ‘ உனக்கு நாயென்றால் பிடிக்குமா ? ‘
‘எனக்கு ரொம்பப் பிடிக்கும் ‘ என்றாள் அந்தச் சிறுமி.
பலநாள் ஒத்திகை பார்த்த திட்டத்தைச் வெளிப்படுத்தினாள். ‘ எனக்கு ஏதும் ஆகி விட்டால், நீதான் நோவாவைப்பார்த்துக் கொள்ள வேண்டும். ‘ என்றாள். ‘ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவனை அவிழ்த்து விட்டு விட வேண்டும். நீ கவலைப் பட வேண்டியதில்லை. என்ன செய்வது என்று நோவாவிற்குத் தெரியும். ‘
சிறுமிக்கு ஒரே சந்தோஷம். மரியா நீண்டகாலமாய் நெஞ்சில் பழுத்த கனவொன்று நிறைவேறிய சந்தோஷத்தில் வீட்டுக்குத்திரும்பினாள். கனவு நிறைவு பெறாததன் காரணம் , வயதுமுதிர்ந்த களைப்பிலோ அல்லது காலந்தாழ்த்தி வந்த மரணமோ அல்ல. அவள் முடிவு செய்ய அதில் ஒன்றுமில்லை. ஒரு பனிபடர்ந்த நவம்பர் மதியம், மூன்று போராளிகளின் பெயரை எழுதி விட்டு கல்லறையை விட்டுக் கிளம்பும் போது புயல் தொடங்கியது. பஸ் நிறுத்தத்தை நோக்கிச் சென்றிருந்த போது மழை அவளைத் தெப்பமாய் நனைத்து விட்டது. ஆளரவமில்லாத ஒரு பாக்டரி வாசலில், பெருத்த லாரிகளுடனும், பிரமாண்ட சரக்குக் கிடங்கிகளுக்கு மத்தியில் காத்துக் கிடப்பது, மழையின் இரைச்சலில் இன்னும் பயம் தருவதாய் இருந்தது. நாயைக் கோட்டுக்குள் வைத்து வெப்பமேற்ற முயற்சி செய்தாள். ஜன நெரிசல் உள்ள பஸ்களும் காலியாய்ப் போன வாடகை டாக்சிகளும் அவள் கஷ்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. அற்புதங்கள் நிகழ வழியில்லையெனும் நினைப்பின் போதே, பெரிய ஒலியே எழுப்பாத ஒரு கார், அவளைக்கடந்து சென்று நின்று, பின்னடைந்து அவளருகில் வந்து நின்றது. மந்திரம் போல ஜன்னல் கதவுகள் இறங்கின. டிரைவர் அவளுக்கு லிஃப்ட் கொடுத்தான்.
‘நான் வெகுதூரம் போகவேண்டும். ‘ என்றாள் மரியா. ‘ போகிற வழியில் கொஞ்சதூரம் கொண்டு போய் விட்டாலும் உனக்குப் புண்ணியமாகப் போகும். ‘
‘எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள் ‘ என்று அவன் வற்புறுத்தினான்.
‘ கிரேசியாவிற்குப் போகவேண்டும் ‘ என்றாள் அவள்.
கார்க்கதவு அவன் தொடாமலே திறந்தது.
‘ நான் போகும் வழிதான் அது. ‘ என்றான். ‘ உள்ளே வாருங்கள். ‘
உள்ளே ஃப்ரிட்ஜில் உள்ள மருந்து வாடை இருந்தது. மழை ஒரு நிஜமற்ற விபத்தாய்த் தோற்றம் கொண்டது. நகரம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டது. முன் கூட்டியே நிச்சயிக்கப் பட்ட ஒரு வினோதமான, மகிழ்ச்சி நிரம்பிய உலகத்தில் தான் இருப்பது போல உணர்ந்தாள். ட்ராஃபிக் சிக்கல்களை லாவகமாக , மந்திரம் போல் தாண்டிச் சென்றான் அவன். தன் நிலையாலும், பாவம்போல் தூங்கும் நாய் நிலையாலும், சிறுமையாய் உணர்ந்தாள்.
‘கப்பல் மாதிரி இருக்கிறது, இது. ‘ தான் சரியாகப் பேசவேண்டுமே என்ற ஆதங்கத்துடன் அவள் சொன்னாள். ‘ என் கனவில் கூட இது மாதிரி நான் பார்த்ததில்லை. ‘
‘ இதில் ஒரே ஒரு பிரசினைதான். இது என்னுடையதல்ல. ‘ சங்கடத்துடன் அவன் சொன்னான். ‘ நான் வாழ்நாள் முழுக்கச் சம்பாதித்தால் கூட என்னால் இதை வாங்க முடியாது. ‘
‘எனக்குப் புரிகிறது. ‘ அவள் பெருமூச்சு விட்டாள்.
தன் ஓரக்கண்ணால் அவனை அவள் நோட்டம் விட்டாள். அவன் இளைஞனாய்த்தானிருந்தான். சுருட்டை முடியும், சிலை போன்ற முகமும். அவன் அழகாய் இல்லாவிடினும், ஒரு கவர்ச்சி இருந்தது. மலிவான லெதர் ஜாக்கெட்டில், அவன் நடந்தாலே, அவன் அம்மா பெருமிதம் அடைவாள் என்று அவளுக்குத்தோன்றியது. அவனுடைய உழைப்பாளிக் கைகள் தான், கார் அவனுக்குச் சொந்தமல்ல என்று காட்டிக்கொடுத்தது.
மீதிப் பயணத்தின் போது அவர்கள் பேசவேயில்லை. ஆனால், அவனும் அவளை வெகு நேரமாக நோட்டம் விடுவது அவளுக்குத் தெரிந்தது. தன் வயதிலும் உயிரோடிருக்கிற துரதிர்ஷ்டத்தை எண்ணி அவள் நொந்தாள். அவலட்சணமாகவும், இரக்கப் படத் தக்கவளாகவும் தன்னை அவள் உணர்ந்தாள். போர்த்தியிருந்த வேலைக்காரியின் பிய்ந்த சால்வையைத் தன் மரண எண்ணங்களினால், மாற்றக்கூட மறந்து போயிருந்தாள். கிரேசியாப்பகுதியை அவர்கள் அடைந்த போது, மழை நின்றிருந்தது. இரவு படரத்தொடங்கியிருந்தது. வீதியின் விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. பக்கத்திலேயே ஒரு மூலையில் இறக்கிவிடுமாறு மரியா கேட்டுக்கொண்டாலும் கார் டிரைவர், வீட்டுமுன் தான் இறக்கிவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான். அவள் நனையாதபடி ஓரமாக வாகனத்தை நிறுத்தினான். நாயைக் கீழே விட்டுவிட்டு, தன் நிலைகுலையாமல் படியேறுமுன்பு அவனுக்கு நன்றி தெரிவிக்கத் திரும்பினவள், அவன் அவளைப் பார்த்த ஆண்மை நிரம்பிய பார்வையக் கண்டு அதிர்ந்தாள். ஒரு நிமிடம் பொறுத்திருந்த அவளுக்கு, யார் யாருக்காக, அல்லது எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவன் குரல் தீர்மானமாய் எழுந்தது. ‘ நான் மேலே வரவா ? ‘
மரியா கீழ்த்தரமாய் உணர்ந்தாள். ‘என்னை இங்கே கொண்டு வந்ததற்கு நன்றி. ஆனால் என்னைக் கிண்டல் செய்ய வேண்டாம். ‘
‘ நான் யாரையும் கிண்டல் செய்பவனில்லை. ‘ மிகக் கம்பீரமான குரலில் அவன் பேசினான். ‘அதுவும் உங்களைப் போன்ற ஒரு பெண்ணை. ‘
மரியா அவன் போலப் பல ஆண்களை அறிந்தவள் தான். அவனை விடவும் தைரியமான ஆண்களைக் கூட அவள் தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் இக்கணம் போல எப்போதும் அவள் தன் முடிவில் தயங்கியதே இல்லை. ஏதும் மாற்றமில்லாத குரலில் மீண்டும் அவன் கேட்டான். ‘ நான் மேலே வரவா ? ‘
கார்கதவைச் சார்த்தாமலே, நடந்த அவள் அவனுக்குப் புரிய வேண்டி காஸ்டிலிய மொழியிலேயே பதில் அளித்தாள். ‘உன் இஷ்டம். ‘
முன் பகுதியில் நுழைந்த அவள், மெல்லிய வெளிச்சத்தில் மேலேறத்தொடங்கினாள். அவள் கால் முட்டிகள் நடுங்கின. மரண பயமேபோல. இரண்டாவது மாடியில் செயலிழப்பின் நடுக்கத்துடன் அவள் சாவிக்காகக் கைப்பையைத்துழாவிய போது, இரண்டு கார்க்கதவுகள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகச் சார்த்தப் படுவதைக் கேட்டாள். அவளுக்கு முன்னால் ஓடி நின்ற நோவா குரைக்க முயன்றது. ‘சும்மா இரு ‘ என்று வேதனை கலந்த முனகலாய்ச் சொன்னாள். முதல் படிகளில் காலடியோசை கேட்டபோது அவள் இதயமே வெடித்து விடும் போலானது. தன் வாழ்க்கையையே மாற்றியமைத்த அந்தக்கனவை மறுபடி அவள் பரிசீலிக்கலானாள். தான் அந்தக்கனவின் பொருளைப் புரிந்து கொண்டதில் செய்த தவறு அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது.
‘அடக் கடவுளே. ஆக அது சாவில்லையோ ? ‘ வியப்புடன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
பூட்டைக்கடைசியாய்க் கண்டுபிடித்து, இருளில் அந்த அளவான காலடியோசைகள் தன்னை அணுகுகிற அந்த நெடு மூச்சுக் காற்றின் ஓசையைக் கவனித்துக் கேட்டபோது, அவளுடைய வியப்பே போல அவன் வியப்பும் வெளிப்படுவதை உணர்ந்து, இத்தனை வருடங்கள் காத்திருந்ததற்குப் பெரும்பயன் கிடைப்பதாகவும், இத்தனை வருடம் இருட்டில் கஷ்டப்பட்டதிற்கு ஈடு செய்வதாயும், வாழ்ந்திருக்க நேர்ந்த இந்தக் கண நேரம்.
Translation From English: Gopal Rajaram