மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

சந்திரவதனா


மரணம் என்ற சொல்லே மரித்து விட வேண்டுமென்றுதான் மனித மனம் ஆசைப் படும். மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..? மரணிப்பவர் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலை பெற்று விடுவார். ஆனால் அவரின் பிரிய உறவுகள் அப்போதுதான் துயரின் முழுவடிவத்தையும் முழுமையாகப் பரிசிப்பார்கள். துயரிலே மூழ்கி எழுவார்கள்.

ஆனாலும் மூக்கைச் சிந்திச் சீறி எறிகையிலும் ஆசைகளை மட்டும் எறிய மறந்து விடுவார்கள். வாழ்க்கை என்பது ஒரு மாயச்சுடர். சொல்லாமல் கொள்ளாமல் அந்த மாயச்சுடர் அணைந்து போய் விடும் என்று தெரிந்தும், ஆசை என்னும் மாயவலையில் வீழ்ந்து வாழும் காலத்தைச் சிக்கலாக்கி விடுவதுதான் மனித மனங்களின் இயல்பாகி விட்டது.

ஏன் இந்த அர்த்தமற்ற ஆசைகள்…!
ஆசைகள் ஆசைகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதுவே பேராசையாய், பேரவாவாய், வெறியாய், பொறாமைத் தீயாய், துரோகமாய், ஏமாற்றுவதாய்… என்று நீண்டு, தம்மையும் அழித்து பிறரையும் அழித்து…!

ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
அள்ளி வைச்ச ஆசையெல்லாம் கொள்ளி வைச்சால் போச்சு
தூங்கி விட்டால் ஓடி விடும் வாங்கி விட்ட மூச்சு…
(பாடல் – ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன்……
படம் – தீர்ப்பு, பாடியவர்-எம்.எஸ்.விஸ்வநாதன்.)

கொள்ளி வைக்கும் போது கூட வர எதுவுமே இல்லை. இருந்தும் ஏனிந்த ஆசைகள் மனதுக்கு..?

இன்னொரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
மூங்கிலிலே முத்துப்பல்லக்கு அதில் ஏறிச் செல்லச் சொத்து எதற்கு
கொள்ளியிட்டால் வேகும் எலும்பு அதில் கொண்டு செல்ல என்ன இருக்கு…
(பாடல் – குருடான கவிஞனுக்கு….. படம் – நெஞ்சில் ஒரு ராகம்.
பாடியவர் – ரி.எம்.சௌந்தர்ராயன்-சசிரேகா.)

மரணத்தைக் கண்ட பின்னும் மனங்கள் திருந்த மறுப்பதேன்…?
ஆசை.. ஆசை.. ஆசையில் என்னும் தீயில் வெந்து தணலாகி நீறாகும் போதும் நீறாகாத ஆசைகள்.

பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். போகும் போது என்ன கொண்டு போகப் போகிறோம்.

ஊசிமுனை கூட வருமா உன் கூட
உன் கணக்கைப் பார்க்கிறப்போ
சில்லறையா மிஞ்சும், வெறும் கல்லறைதான் மிஞ்சும்…
(பாடல் – ஆடும் வரை ஆட்டம். படம் – வீரப்பதக்கம்.
பாடியவர் – மலேசியா வாசுதேவன்.)

இருந்தும் நான், நீ, எனது, உனது… என்று அடித்துப் பிடித்துச் சண்டை.
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. ஊதிவிட்டால் நீர்க்குமிழி போன்ற வாழ்க்கை உடைந்து போய் விடும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத படி ஆசைகள் அறிவுக் கண்ணை மறைத்து விடுகின்றன.

காயமிது பொய்யடா காற்றடைத்த பையடா
நீயிருக்கும் பூமியே நீர்க்குமிழிதானடா….
……குமிழிக்குள் குத்து வெட்டு கத்திச் சண்டை ஏனடா….
(பாடல் – ஓட்டைப்பானை…… படம் – ஜாதிமல்லி
பாடியவர் – மரகதமணி.)

ஒரு நாளைக்குப் பொசுக்கென்று போய் விடும் போது வீடு வாசல் பணம் பதவி எதுவுமே எம்முடன் கூட வருவதில்லை. இருந்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்தான் எத்தனை எத்தனை கனவுகள், நனவுகள், ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள், தாபங்கள், சண்டைகள், சல்லாபங்கள்… இன்னும் எத்தனை..! உடலை விட்டு உயிர் போன பின்தான் எல்லாமே மாயை என்பது புரிகிறது.

ஆடும் மேனி வெறும் தோணியே, ஆடித் தீர்ந்தால் அவன் ஞானியே
மனிதக் கணக்கு தினம் மாறுமே, கூட்டிக் கழித்தால் வெறும் மாயமே..
(பாடல் – ஏய் சலோமா……
படம் – சுபாஸ் பாடியவர் – வித்தியாசாகர்-சுவர்ணலதா)

மாயம் என்று தெரிந்தும் மனம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பொல்லாத் தனமாய் அலையும். இந்தப் பொல்லாத் தனங்களும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான்.

தண்ணீரில் போடும் கோலம் போல வாழ்க்கையும் நிலைக்காதது. தரை மீது காணும் எதுவுமே நிலைக்காது.

அதைக் கவிஞர் கண்ணதாசன்
தரைமீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா..! என்கிறார்.

நாம் பிறக்கும் போது தன்னந் தனியாக வெற்றுடம்புடன் பிறக்கிறோம். பிறகு இறக்கும் போதும், பிறக்கும் போது எம்முள் இருந்த உயிர் கூட எம்மை விட்டகன்று வெறும் உடலமாய் கிடந்து சாம்பலாகப் போகிறோம். இடையிலே நாம் எதற்கெல்லாம் ஆசைப்பட்டு எம்முடன் சேர்த்து வைத்தோமோ அவையெதுவுமே எம்மோடு வருவதில்லை.

அதைத்தான் கவிஞர்
யாரோடு யார் வந்தது
நாம் போகும் போது யாரோடு யார் செல்வது….
என்று இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறார்.

வாழ்க்கை ஒரு நாடகம் போன்றது. நாமெல்லாம் அங்கு வெறும் நடிகர்கள்தான். உலகம்தான் மேடை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கிடைத்து நடிப்போம். நாடகம் முடிய கூடி இருந்து பார்த்தவர்கள் கலைந்து ஓடி விடுவது போலவே எமது வாழ்க்கை நாடகம் மரணத்தில் முடியும் போது கூடி இருந்தவர்கள் தம்பாட்டில் போய் விடுவார்கள்.

மிகவும் யதார்த்தமாகச் சிந்தித்து கவிஞர் அதை
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்….. என்கிறார்.

தாயாலே வந்தது தீயாலே வெந்தது.
மெய்யென்று மேனியை யார் சொன்னது…
தாயின் மடியில் பிறந்து மண்ணின் மடியில் மடிந்து போகிறோம். மேனிக்கு மெய்யென்று கூட ஒரு பெயருண்டு. அந்த மெய்யே மெய்யற்றது என்று கூறும் விதம் அழகாயுள்ளது.

பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
பிறந்தவுடன் அன்னையின் அணைப்புடன் பால் கிடைக்கும். இறக்கையில் உறவுகள் கூடி பால் ஊற்றுவர். தன்மைகள் வேறுபட்டு நின்றாலும் செயற்பாடு ஒன்றாகவே உள்ளது.

உண்டானது இரண்டானதால்
ஊர் போவது நாலானதால்
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய்யென்று மேனியை யார் சொன்னது….

இருவரின் இணைவில் கருவாகி, நால்வரின் துணையுடன் கடைசி இடத்துக்குப் போகும் இந்த மெய் பொய்யானது.

நாடகம் முடித்து வேசம் கலைத்து பாதைகள் பல மாறிப் பயணித்த இந்தப் பயணத்தை முடித்துக் கொள்வதுதான் மரணம்.

இந்தத் தத்துவத்தை உண்மையை எல்லோரும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் படியாக அதாவது உலக மேடையில் வாழ்க்கை நாடகத்தில் வேசம் போட்டுக் கூத்தாடும் நடிகர்களே, வாழ்க்கை நாடகம் முடியும் போது நாம் மரணிக்க கூடி நின்ற கூட்டம் வெறும் பார்வையாளர்களாய் ஓடி விடும் என்பதைக் கவிஞர் பாடலின் சுவையோ, மரணத்தைச் சொல்லும் சோகமோ சிறிதும் குறையாது அழகாகச் சொல்லியுள்ளார்கள்.

சந்திரவதனா
யேர்மனி
chandraselvakumaran@gmail.com

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா