மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘)

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

பாவண்ணன்


திருவிழாக் காலங்களில் எங்கள் ஊருக்கு வழக்கமாக ஒரு தாத்தா வந்து விளையாட்டுக் கூடத்தைக் கட்டுவார். மையத்தில் அச்சு பொருத்தப்பட்ட மிகப்பெரிய வட்டத்தகடு இருக்கும். பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட அதன் பகுதிகளில் வெவ்வேறு வண்ணங்கள் பூசப்பட்டிருக்கும். ஒன்று, இரண்டு என்று ஒவ்வொரு பாகத்திலும் வரிசையாக எழுதப்பட்டிருக்க, நிலத்தில் பொருத்தப்பட்ட மிகப்பெரிய கடிகாரம் போலிருக்கும் அது. நடுவில் விளிம்பைத் தொடவல்ல முள். சுற்றிலும் ஆட்கள் சேர்ந்ததும் ‘ஆரம்பிக்கப் போறேன், ஆரம்பிக்கப் போறேன், பணம் கட்டறவங்க கட்டுங்க ‘ என்று அழைப்பு விடுப்பார். ஆட விருப்பமுள்ள ஆட்கள் தமக்கு விருப்பமான எண்களில் நாலணா, எட்டணா என்று வைப்பார்கள்.

எல்லா எண்களிலும் நாணயங்கள் வைக்கப்பட்டதும் வட்டத்தகட்டைச் சுழற்றுவார் தாத்தா. சற்றே இடைவெளி விட்டு மேலே நிற்கும் முள்ளின் நிழல் வட்டத்தகட்டின் எல்லாப் பாகங்களின் மீதும் படிந்து மறையும். சுழற்சி நிற்கப் போகிற தருணம் வரைக்கும் நாணயங்களை வைத்தவர்கள் பதற்றத்தில் உதட்டைக் கடிப்பார்கள். அவர்கள் கண்கள் தம் நாணயங்கள் வைக்கப்பட்ட எண்களின் மீதே படிந்திருக்கும். வேகம் மெல்ல மெல்லக் குறைந்து வட்டத்தகட்டின் ஏதாவது ஓர் எண் எழுதப்பட்ட பாகத்தின் மீது நிற்கும். அந்த எண்ணில் பணம் கட்டியவனே வெற்றியாளன். மற்றவர்கள் அனைவரும் தோல்வியாளர்கள். வைக்கப்பட்ட அளவைப் போல மூன்று மடங்கு பணத்தை வென்றவனுக்குத் தருவார் தாத்தா. பணமே இல்லாத பாகத்தில் முள் நின்று விட்டால் தாத்தா யாருக்கும் தரத் தேவையில்லை. பதற்றம் மிகுந்த இந்த ஆட்டத்தைத் திருவிழாச் சந்தடியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் ஆடுவார்கள். வேறு ஏதோ முக்கியமான பொருளை வாங்க வந்து, ஆட்டத்தின் உற்சாகத்தால் துாண்டப்பட்டுப் பணத்தை வைத்து இழந்து வெறும்கையுடன் சோகத்துடன் செல்பவர்களும் உண்டு. கையில் இருக்கும் எட்டணாவை ஆரம்ப முதலாக வைத்து பத்து ரூபாய் வரையில் சம்பாதித்து ஆனந்தத்துடன் செல்பவர்களும் உண்டு.

திருவிழா முடிந்த பிறகும் கூட, மீண்டும் மீண்டும் அந்த வட்டத்தகடும் எண்களும் முள்ளும் நினைவில் மோதியபடி இருக்கும். ஓடத்தொடங்கிய வட்டத்தகடில் முள் எந்த எண்ணில் நிற்கப் போகிறது என்பது தகட்டைச் சுழற்றிய தாத்தாவுக்கும் தெரியாது. பார்ப்பவர்களுக்கும் தெரியாது. அது ஒரு தருணத்தின் விளைவு. மிக அபத்தமும் ஆச்சரியமுமான தருணம். வட்டத்தகடு எண்ணவெளியின் படிமம். முள் மனத்தின் படிமம். மனம் எந்த எண்ணத்தில் கால்கொண்டிருக்கிறது அல்லது கொள்ளப் போகிறது என்பது எப்போதும் கண்டுபிடிக்க இயலாத மர்மம். தீர்மானிக்க இயலாத அந்தத் திசைக்கும் மனத்துக்குமான தொடர்பை, அந்தத் தொடர்பு உருவான பிறகு ஓரளவு ஊகங்களின் அடிப்படையில் முடிவுக்கு வர முடியுமே தவிர, இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது.

விடிந்தால் ஓய்வு பெறப் போகும் ஒருவர் முப்பத்தெட்டு ஆண்டுகளாகச் சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் உருவாகும் வண்ணம் இறுதிநாளில் கையூட்டுக்குக் கையை நீட்டிவிட்டு அகப்பட்டுத் தண்டிக்கப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். வழிப்பறிக் கொள்ளைக் காரனாக இருந்தவர்கள் பக்தர்களாகவும் மகாகவியாகவும் மாறிய அற்புதங்களைப் படித்திருக்கிறோம். ஆசைப்பட்டுத் திருமணம் செய்து கொண்டு ஒருசில நாட்களிலேயே கசப்புணர்வில் விலகிச் சென்றவர்களும் உண்டு. வேண்டா வெறுப்பாகத் தலையை நீட்டிய பெண் மெல்லமெல்லக் கணவனை நேசிக்கத் தொடங்கிக் கணமும் பிரியாத இல்லற வாழ்வை நடத்துகிறவர்களும் உண்டு. ஏன் இந்த மாற்றம் ? மனம்தான் காரணம். ஆனால் மனம் எடுக்கிற முடிவு, முடிவெடுப்பதற்கு முந்தைய கணம் வரை மனத்துக்கே தெரிவதில்லை. மனம் ஒரு விசித்திரப் பறவை. வானம் முழுக்க அதன் வெளி. எந்தக் கோணத்தில் அதன் சிறகுவிரியும் என்பது புரியாத புதிர். ஏன் விரிகிறது என்பது இன்னும் விளங்கிக் கொள்ள இயலாத புதிர். ஒருவகையில் ஆர்வத்தைத் துாண்டும் புதிர்.

மனத்தின் புதிர்ப்பயணத்தை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் நினைவுக்கு வரும் சிறுகதை சுஜாதாவின் ‘முரண் ‘. கதையில் குமாரசாமி என்னும் நடுவயது இளைஞன் ஒருவன் இடம்பெறுகிறான். சிறுவயதில் ஒரு ஆங்கிலப் பள்ளியில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்துக்குக் கிளீனராக வேலையில் சேர்ந்தவன் ஐந்தே ஆண்டுகளில் வாகன ஓட்டியாகப் பதவிஉயர்வு பெற்று இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகநல்ல முறையில் சேவை செய்து வருபவன். வாகனத்தை மிக நல்ல முறையில் பராமரிப்பவன். எப்போதும் துாய்மையாக வைத்துக் கொள்பவன். இருபத்தைந்து ஆண்டு கால சேவையில் ஒருமுறை கூட நேரம் தவறாதவன். யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதவன். எல்லாப் பிள்ளைகளிடமும் அன்பாக இருப்பவன். திருமணம் செய்து கொள்ளாமல், குறைந்தபட்ச அளவிலான தன் தேவைக்குச் செலவழித்த பிறகு எஞ்சிய சம்பளப் பணத்தையெல்லாம் வங்கியில் போட்டு வைத்திருப்பவன். துாய ஆடைகளை அணிபவன்.

நிகழ்ச்சி நடக்கும் அன்று பள்ளி தொடங்கிய பிறகு தலைமை ஆசிரியையால் அழைக்கப்படுகிறான் குமாரசாமி. அன்றோடு இருபத்தைந்து ஆண்டுகள் சேவையை அவன் முடித்திருப்பதாக அவர்தான் சொல்கிறார். அவன் சேவையைப் பெரிதும் பாராட்டி, நிர்வாகம் ஒரு கடிகாரத்தையும் பணமுடிப்பையும் அன்பளிப்பாகத் தந்திருப்பதாகச் சொல்கிறார். அவன் பணத்தை வாங்க மறுத்து விடுகிறான். கடிகாரத்தை மட்டும் தயக்கத்துடன் வாங்கிக் கொள்கிறான். அவன் பெருந்தன்மையைப் பற்றியும் பற்றற்ற தன்மையைப் பற்றியும் பாராட்டாதவர்களே பள்ளியில் இல்லை. எங்கும் அவன் பேச்சாகவே இருக்கிறது.

அன்று மாலை பள்ளியில் ஏதோ நாடகப் பயிற்சி நடக்கிறது. மற்ற பள்ளி மாணவிகளை விட்டு விட்டு நாடக ஒத்திகை நடக்கும் வகுப்பறையின் வாசலில் காத்திருக்கும் போது இருட்டி விடுகிறது. பயிற்சி முடிந்து வரும் பத்துப் பெண்களையும் பி.டி.டாச்சரையும் ஏற்றிக் கொண்டு மறுபடியும் வாகனம் புறப்படுகிறது. ஒவ்வொருவராக அவரவர்கள் இல்லத்தருகில் விட்டுவிட்டுக் கடைசியாக எஞ்சிய பெண்ணுடன் வழக்கத்துக்கு மாறான திசையில் இருட்டில் வழக்கத்துக்கு மாறான வேகத்தில் வாகனம் திரும்புகிறது. படிப்பவர்கள் பதற்றமுறும்படி இக்குறிப்புடன் கதை முடிகிறது.

கதையில் குமாரசாமி தீட்டிக்காட்டப்பட்ட குணங்களுக்கு நேர் எதிரான குணத்தைப் பெற்று விடுவது ஒரு பெரும்புதிர். இந்த மாற்றம் அவனுக்குள் எப்படி நிகழ்ந்தது ? அந்த வாகனத்தை அவன் எங்கே செலுத்துவான் ? அந்தப் பெண்ணுடன் அவன் ஏன் சென்றான் ? அவன் நோக்கம் என்ன ? எது அவனைச் செலுத்துகிறது ? திரும்பவும் அவன் வருவானா ? மறுபடியும் அதே பள்ளியில் வேலை செய்ய அவன் மனம் ஒப்புக்கொள்ளுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் கதையின் தளத்தை விரிவாக்குகிறது. எந்த விடையும் கதைக்குள் இல்லை. எது விடையாக இருந்தால் நல்லது என்று நாம் நம்புகிறோம் ? எல்லாமே நம் மனம் முடிவெடுக்க வேண்டிய கேள்விகள்.

*

கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் சுஜாதா. கச்சிதமான உருவம், எளிய புதுமையான மொழி, ஆர்வத்தைத் துாண்டும் கதையோட்டம், துள்ளல் மிகுந்த நடை அனைத்தும் இணைந்த எழுத்தோவியங்களே சுஜாதாவின் படைப்புகள். அறிவியல் சாதனைகளைப் படைப்பு எழுத்துகளாக மாற்றியதில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தவர். ‘முரண் ‘ சிறுகதை சுஜாதாவின் ‘நகரம் ‘ தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பு குமரிப் பதிப்பகத்தின் வெளியீடாக 1974 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்

1 Comment

Comments are closed.