மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

பாவண்ணன்


ஒருவிதக் குற்ற உணர்ச்சியோடுதான் இந்த முன்னுரைக் குறிப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த நுாலின் ஆசிரியர் மோனிகா இன்று நம்மிடம் இல்லை. 22.1.2003 அன்று அதிகாலை திருநெல்வேலியிலிருந்து வந்த ரயிலில் எழும்பூர் நிலையத்தில் இறங்கிக் கூட்டத்தோடு கூட்டமாக நடந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார். கடந்த ஆண்டில் இதன் கையெழுத்துப்படித் தொகுப்பை அவரே நேரில் சந்தித்துக் கொடுத்தார். படித்து முடிப்பதற்குத் தேவையென்று கருதிய இரண்டு வார கால அவகாசத்தை நான் எடுத்துக்கொண்டதில் அவருக்கு எந்தத் தயக்கமுமில்லை.

முன்னுரை அல்ல, என் கருத்தையறிவதே அப்போது அவருடைய நோக்கமாக இருந்தது. முதல் வாசிப்பிலேயே என்னை இந்த நுால் வசப்படுத்திவிட்டது. வாழும் மனிதர்களில் இத்தனை விதங்களா என்று எனக்குள் எழுந்த ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை. பழக்கப்படுத்தப்பட்ட பசு என்கிற அளவிலேயே நாம் நம் மனத்தைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது எவ்வளவு மோசமான முரட்டுக்குதிரை அல்லது அடங்காத மதம்கொண்ட யானை என்பதை இந்த நுாலில் அடங்கியுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் திரும்பத் திரும்ப வலியுறுத்தியபடி இருக்கிறது. நேர்மறையாக நான் வெளிப்படுத்திய கருத்து அவருக்குப் பெரிதும் நிறைவைத் தந்திருக்க வேண்டும். அவர் முகம் அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மோனிகா தன்னிடமிருந்த மூலப்பிரதியுடன் ஒவ்வொரு பதிப்பகமாக ஏறிஏறி இறங்கியதெல்லாம் இதற்குப் பிறகுதான். ஊக்கமிழக்கும்படி அவர்கள் பேசிய பேச்சுகளையெல்லாம் அவர் கசப்புடன் விவரித்ததுண்டு. பலரும் வெளிப்படுத்திய ‘இப்படியெல்லாம் ஒரு புத்தகமா ?, இதையெல்லாம் நம் வாசகர்கள் ஏற்பார்களா ? ‘ என்பதுபோன்ற ஐயங்களும் முன்கணிப்புகளும் அவரைப் பெரிதும் அதைரியப்படுத்திவிட்டன. இடையில் அவர் சொந்த வாழ்வில் எதிர்பாராமல் பல மாற்றங்கள் உருவாகி நுாலைப்பற்றி யோசிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது மரணமும் அவரை அள்ளிக்கொண்டு போய்விட்டது.

இது ஒரு புதுவகையான நுால் என்பது உண்மைதான். மேலோட்டமான பார்வைக்கு இந்நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் நம்பவே முடியாத சம்பவங்கள் என்று தோன்றக்கூடும். ஆனாலும் நடந்தபிறகே அவை மோனிகாவின் எழுத்துகளில் பதிவாகியிருக்கின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக ஆல்பா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தொடரும் இருக்கிறது. வெறும் சந்திப்புக் குறிப்புகளை வெளிப்படுத்தும் தொகுப்பல்ல இது. இவற்றின் வழியாக மனஆழத்தை அறிய முயலும் தொகுப்பு. மனத்துக்குள் விரிவடையும் தடங்களின் தன்மையையும் திசைகளையும் உய்த்துணரும் முயற்சி.

‘மனமென்னும் காடு ‘ என்கிற தலைப்பே வசீகரிக்கிறது. காடு என்றதும் மரங்களும் புதர்களும் செடிகொடிகளும் அடர்ந்து விரிந்த சிக்கலான பச்சைப்பரப்பே முதலில் மனத்தில் எழுகிறது. எந்த அளவுக்கு அடர்த்தியானதோ அதே அளவுக்குத் திசைகளற்றது காடு. திட்டவட்டமான பாதைகளுமற்றது. ஒருவகையில் எல்லாமே பாதைகள். எல்லாமே திசைகள். அதன் இருளும் மர்மமும் அச்சத்தையும் ஆர்வத்தையும் ஒருங்கே ஊட்டக்கூடியவை. யானைகள், சிங்கங்கள், புலிகள், கரடிகள், சிறுத்தைகள், குரங்குகள் என அங்கே வாழக்கூடிய பலவிதமான விலங்குகளையும் காடு நினைவூட்டுகிறது. சில சமயங்களில் மனம் யானையாக மதம் பிடித்தலைகிறது. சில சமயங்களில் குரங்கைப்போல மரத்துக்கு மரம் தாவியலைகிறது. சில சமயங்களில் பறவையைப்போல சுதந்தரமாகக் கீதமிசைத்தபடி பாறையின் விளிம்பில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறது. இப்படிப் பல எண்ணங்கள் அலைமோதுகின்றன. மனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட கணத்தில் இயங்குவது யானையா, குரங்கா, கிளியா என்று எதைவைத்து எப்படி அறிவது ? ஒரு ரகசியத்தைக் கண்டறிகிற சுவாரசியத்துடன் மனத்தின் இயக்கத்தை அறிய அலைந்தார் மோனிகா. ஒரு சம்பவத்தை வைத்து அவர் உருவாக்க நினைக்கும் சூத்திரங்கள் உடனடியாகவே அடுத்த சம்பவத்தில் சுக்குநுாறாக உடைந்துவிடுகின்றன. தெளிவிழந்த நிலையில் உடனே வேறொரு சூத்திரத்தை வகுக்கும் முயற்சியில் இறங்குகிறது மோனிகாவின் மனம். பிசகுகளைப்பற்றிய வருத்தங்களற்றுச் சுறுசுறுப்பாகத் தொடர்கிறது அவர் இயக்கம்.

மோனிகாவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய நுாலை அறிமுகப்படுத்தி இக்குறிப்புகளை முன்வைக்கிறேன். வாழும் வாழ்க்கையின் சிக்கல்களையும் புதிர்களையும் மனத்தின் இயக்கத்துடன் இணைத்துப்பார்க்கும் அவருடைய ஆர்வம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஒருவகையில் இதே ஆர்வத்துடன் வேறு திசைகளில் அலைகிற பயணி அல்லவா நான்.

***

1997 ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தாண்டு நாளில் பாரதிய வித்யா பவனில் நடந்த ‘நீலவானம் ‘ என்னும் என்னுடைய நாவலைப்பற்றிய விமர்சன விழாவில்தான் முதன்முதலாக மோனிகாவைப் பார்த்தேன். கூட்டம் முடிந்து எல்லாரும் கலையத் தொடங்கிய தருணத்தில் நானும் நண்பர் செல்வகுமாரும் ஓரமாக ஒதுங்கிப் பேச முற்பட்ட போது அவர் எங்கள் அருகில் வந்து நின்றார். முதலில் வேறு யாருக்காகவோ அவர் ஒதுங்கிக் காத்திருக்கிறார் என்ற எண்ணமே எழுந்தது. பிறகு அவர் எங்கள் பேச்சைக் கவனிக்கிறார் என்று விளங்கியதும் நான் அவர் முகத்தை ஏறிட்டேன். என் குழப்பம் அந்நொடிக்குள் அவருக்குப் புரிந்திருக்கவேண்டும். புன்னகைத்தபடி சற்றே முன்வந்து அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அந்தப் புன்னகையும் விரிந்த கண்களும் அவற்றில் தெரிந்த வெளிச்சமும் துடிப்பும் இன்னமும் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.

அருகில் தென்பட்ட தேநீர்க்கடைக்குச் சென்று அமர்ந்தோம். ஆல்பா தொலைக்காட்சியில் ‘நமக்குள் இருப்பது யார் ? ‘ என்கிற நிகழ்ச்சிக்காகப் பலவிதமான மனிதர்களைப் பார்த்துப் பேசி நேர்காணல் எடுப்பவர் என்று தன்னைப்பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார் மோனிகா. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பில்லை என்பதையும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாததையும் தயக்கத்துடன் சொன்னேன் நான். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சிக்காக எந்தெந்த விதமான மனிதர்களைச் சந்திக்கிறார் என்பதையும் அவர்களை எந்தெந்த விதங்களில் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுடன் நேருக்குநேர் பேசுவது அவருக்கு எவ்விதமான அனுபவத்தைக் கொடுக்கிறது என்பதையும் அறியும் ஆவலால் அவரைப் பல கேள்விகள் கேட்டேன். என் கேள்விகள் அவருக்கு உற்சாக்முட்டிவிட்டன. உடனே உந்துதல் பெற்றவராக எல்லாவற்றையும் விரிவாகப் பேசத் தொடங்கினார். செய்தித்தாட்கள், வாய்வழிச்செய்திகள் ஆகியவற்றின் வழியாகத் தமக்குக் கிடைக்கிற விசித்திரச் சம்பவங்களை முதலில் தொகுத்துக்கொள்வதாகவும் சம்பவங்களின் தன்மைகளுக்கேற்பக் கேள்விகளை மனத்துக்குள் வகுத்துக்கொள்வதாகவும் பிறகே நேர்காணல் எடுக்கச் செல்வதாகவும் விரிவாகச் சொன்னார். பதிவு செய்தவற்றை ஒளிபரப்பு நேரத்துக்குத் தகுந்தபடி வெட்டித் தொகுப்பதைப்பற்றியும் சொன்னார். பேசிக்கொண்டே இருப்பதற்கான ஆர்வம் அவர் கண்களில் தெளிவாகத் தெரிந்தன. நேரமோ இரவு ஒன்பதரையைத் தாண்டிக்கொண்டிருந்தது. என் முகவரிச் சீட்டைக் கொடுத்து ஓய்விருக்கும்போது தொலைபேசி செய்துவிட்டு வரும்படிச் சொல்லி அனுப்பினேன். ஒருவேளை கூச்சம் காரணமாகச் சந்திக்காமல் போய்விடுவாரோ என்று மனத்தின் மூலையில் சிறிய தயக்கமெழுந்தது. அதனால் அத்தருணத்தில் அவரிடம் என் மனசிலெழுந்த ஒரே ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்த விரும்பினேன்.

எந்த அனுபவங்களுக்காக ஒரு கலைஞன் காலமெல்லாம் தவமிருந்து அலைகிறேனோ, அவையனைத்தும் ரத்தமும் சதையுமாக அவருக்குக் கிடைக்கின்றன. அலைந்து திரிந்து, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஆட்களை நெருங்கி, வாய்திறவாத மனிதர்களின் வாயையும் மனத்தையும் சாமர்த்தியமாகத் திறக்க வைத்து, முத்துக்களைச் சேகரிப்பதைப்போல ஒவ்வொரு வார்த்தையாகச் சேகரித்துக் கொண்டுவந்து குவிப்பது எவ்வளவு பெரிய சாதனை ? வசீகரமான விளம்பரங்களுக்கிடையே கால்மணிநேரமோ அரைமணிநேரமோ துண்டுத்துண்டாக காட்டப்படுகிற வெறும் காட்சித்தொகுப்பாக மாறி அது வீணாகப்போகலாமா ?

புறப்படும் முன்பு அவரை ஏறிட்டுப் பார்த்த ஒரு கணத்தில் இந்த எண்ணங்களெல்லாம் என் மனத்தில் எழுந்தன. தொடருக்குத் தொகுத்துக் கொடுப்பதோடு விட்டுவிடாமல் ஒவ்வொரு சந்திப்பைப்பற்றியும் விரிவான அளவில் குறித்து வைப்பதை ஒரு பழக்கமாக மேற்கொள்ளும்படி சொல்லி அனுப்பினேன்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு மாலை நேரத்தில் என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்திருந்தார் அவர். குறிப்பெடுத்து வைக்குமாறு நான் சொன்ன வார்த்தை அவருக்கு வேத வாக்காகிவிட்டது. நினைவிலிருந்து நீங்காத ஒரு சம்பவத்தைப்பற்றி எழுதியிருப்பதாகச் சொல்லி ஒரு கடிதஉறையை நீட்டினார். அவர் கண்களில் தென்பட்ட ஆர்வமும் வேகமும் அக்கட்டுரையை உடனே படிக்கத் துாண்டின. பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ‘ஆடுகளும் நரிகளும் வேங்கைகளும் ‘ என்ற தலைப்பில் இந்த நுாலில் அப்பகுதியும் இடம்பெற்றுள்ளது.

மோனிகா முன்வைத்திருந்த சந்திப்பு விவரங்களில் வழக்கமான அணுகுமுறை இல்லை. மாறாக, மனத்தின் கதவைப் பொருத்தமான திறவுகோலைத் தேடி எடுத்துத் திறக்கும் முயற்சி புலப்படுகிறது. பூட்டிலும் திறவுகோலிலும் காலத்தால் படிந்திருக்கும் துருவின் காரணமாகத் திறப்பது எளிதான விஷயமாக இல்லை. தொடர்ந்த முயற்சிகளிடையே எதிர்பாராத தருணமொன்றில் அக்கதவு திறந்துகொள்கிறது. எங்ஙெங்கே என்னென்ன இருக்கின்றன என்பவை புலப்படாத அளவுக்கு ஏகப்பட்ட அறைகள். சிறிது வெளிச்சம். கண்டடைந்ததையும் உணர்ந்ததையும் எந்த இடத்திலும் பொதுமைப்படுத்தாமலும் தீர்க்க முடியாத ஏதோ ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கண்டடைந்ததாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பதை அக்குறிப்பின் விசேஷத்தன்மையாக உணர்ந்தேன். தானும் சுழன்று, சூரியனையும் சுற்றிவரும் பூமிப்பந்தைப்போல மனத்துக்கு இரட்டை இயக்கம் உண்டு என்று குறிப்பிடுகிறார் மோனிகா. தன் நடவடிக்கைகளுக்கான ஆணைத்தொடர்களுக்குக் கட்டுப்படுவது என்பது ஓர் இயக்கம். தன்னை எதிர்கொள்ளும் பிற மனங்களிலிருந்து வெளிப்படும் ஆணைத்தொடர்களுக்குத் தகுந்த எதிர்வினையாற்றுவது என்பது மற்றொரு இயக்கம். ஒரு சூழலில் இவ்விரண்டு இயக்கங்களாலும் மனம் எடுக்கும் ஒரு முடிவு கோடியில் ஒரு பங்கான கணத்தில் நிகழும் செயல்பாடாகும். மனத்தின் முழுமையை அந்த ஒற்றைச் செயல்பாட்டால் ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்திவிட முடியாது. அது சமுத்திரத்தில் ஒரு துளி. அவ்வளவே.

வழி தெரியாத ஊருக்குள் கண்ணுக்குத் தென்படுகிற ஒற்றையடிப் பாதையை நம்பி நடக்கத்தொடங்கிய பயணத்தைப்போலவே மனத்தின் தடத்தில் நடக்கும் முயற்சியாக மோனிகாவின் குறிப்பைப் புரிந்துகொண்டேன். என் பாராட்டுகள் அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. தொடர்ந்து அதுபோன்ற கட்டுரைகளை எழுதித் தொகுக்க வேண்டும் என்று மனமாரச் சொன்னேன். கண்டிப்பாகச் செய்வதாக வாக்களித்துவிட்டுக் கிளம்பிச்சென்றார் மோனிகா.

****

ஆல்பா தொலைக்காட்சி நிறுவனத்துக்காக அவர் நுாற்றுக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கக் கூடும். ஆனால் இந்த நுாலில் நாற்பத்தியேழு சநசதிப்புகளைப்பற்றி மட்டுமே பதிவு செய்திருக்கிறார். கூறியது கூறல் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே பலவற்றை அவர் தவிர்த்திருக்கிறார் என்பது என் ஊகம்.

முக்கியமான இரு குறிப்புகளைப் பற்றிய என் எண்ணங்களை மட்டும் இந்த முன்னுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். ‘தென்றலும் புயலும் ‘ என்கிற கட்டுரையில் சந்தியா என்னும் நடுவயதுப் பெண்ணைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெற்றுள்ளது. இக்குறிப்பில் வெளிப்பட்டிருக்கும் சந்தியாவின் ஆவேசம் மிகமுக்கியமான அம்சம். சரிக்குச் சரியாக ஆசனம் தரமறுத்த ராவணனின் நடவடிக்கையால் சீண்டப்பட்ட அனுமனுடைய ஆவேசத்தையும் ஏதேரா மன்னா செப்புவதுடையேனஃ என்று கைச்சிலம்போடு அரண்மனை வாயிலுக்கு வந்த கண்ணகியின் ஆவேசத்தையும் நினைவு கூர்கிறார் மோனிகா. காலத்தால் மன ஆழத்துக்கு நகர்ந்துவிட்ட இந்த ஆவேசம் ஏதோ ஒரு வேகத்தில் சந்தியாவின் வழியாகப் பொங்கியெழுந்திருக்கக் கூடும் என்று உணர்வதற்காகவே இக்குறிப்பை இங்கே சொல்கிறார் மோனிகா. இதனால் இந்த ஆவேசத்துக்கு ஒரு சரித்திரத்தன்மையும் கிடைத்துவிடுகிறது. அடிமனத்தில் தன்மானம் ஒரு பாம்பைப்போலப் படுத்துக்கிடக்கிறது. தட்டிப் பார்ப்பதையும் தாண்டிச் செல்வதையும் அது பொருட்பத்துவதில்லை. இருப்பு குலையும்படி சீண்டப்படும்போது சீறிக்கொத்தி விஷம் கக்காமல் அது அடங்குவதுமில்லை.

இளம்பெண் சந்தியாவின் வாழ்வில் ஏராளமான சோதனைகள். ஆதரவில்லாத தாய்வீடு. அன்பில்லாத கணவன். அடிமையென நடத்தும் மாமியார். பிச்சைக்காரியை விடக் கேவலமாக இருக்கிறது அவள் வாழ்க்கை. அவள் கண்ட கனவுகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. துன்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் ஆளான சூழலால் அவள் நம்பிக்கை படிப்படியாகச் சிதைந்து வந்தது. ஒவ்வொரு நாளும் கணவனுடைய நடவடிக்கைகளால் அவள் கோபம் கூடியபடி இருந்தது. குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையிலேயே இன்னொரு பெண்ணை அழைத்துவந்து சந்தியாவையும் அறைக்குள் வைத்துக்கொண்டே புதியவளுடன் உறவுகொள்ள அவன் முனைந்தபோது வெளியே சொல்லமுடியாத அளவுக்கு அவமானமுற்றாள் அவள். ஆவேசத்தால் கைக்குக் கிடைத்த பழம்நறுக்கும் கத்தியுடன் பாய்ந்து தடித்து நீண்ட அவன் ஆண்குறியைச் சட்டென வெட்டித் துண்டித்துவிட்டாள்.

‘ஐயோ என்ன கொடுமை ‘ என்று உடனே நம் விரல்கள் வாயைப் பொத்திக்கொள்ளக் கூடும். ஆனால் இக்கொடுமையைத் துாண்டியபடி ஒரு கடும்கொடுமை திரைமறைவில் நிற்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த நம்பிக்கை கடைசிக் கண்ணியாக அவனையும் அவளையும் இணைத்திருந்ததோ அதுவே அறுந்து துண்டுதுண்டாக மாறியதும் அவன் மனிதனே அல்ல, கொல்லப்படவேண்டிய விலஙகு என்ற எண்ணமே எழுந்ததாகச் சந்தியா உரைத்ததாகக் குறிப்பிடுகிறார் மோனிகா. குடும்ப உறுப்பினர்கள் யாருடைய கையிலும் அகப்படாமல் தப்பித்தோடி துண்டான ஆண்குறியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததைச் சொல்லிவிட்டுச் சிரிக்கத் தொடங்கிய அவள் சிரிப்பு பல நிமிடங்கள் நீடித்தன என்றும் எழுதிச்செல்கிறார். ஆனால் அச்சிரிப்பில் எள்ளளவும் ஏளனம் தொனிக்கவில்லை என்றும் ஆசுவாசமுற்ற மனம் வெளிப்படுத்தும் அமைதியே வெளிப்பட்டது என்று மோனிகா பதிவு செய்திருக்கும் குறிப்பு மிக முக்கியமானது.

‘கனிவும் கருணையும் ‘ மற்றொரு முக்கியமான நிகழ்ச்சிக்கட்டுரை. வெள்ளப்பெருக்கில் அகப்பட்டுக்கொண்ட இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றிய செங்கேணி என்ற கிராமத்துப் பெண்ணைப்பற்றிய குறிப்பு அக்கட்டுரையில் உள்ளது. இங்கும் புராணங்கள் வெளிப்படுத்தியிருக்கும் ஓர் உணர்வை அழகாக நினைவுபடுத்துகிறார் மோனிகா. கடும்மழையில் ஒதுங்க இடமில்லாமல் அவதியுற்ற மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நனையாத ஓர் இடமாக கோவர்த்தன மலையையே குடையாகத் துாக்கி நிறுத்தி அபயமளித்த பாலகிருஷ்ணனின் கருணை காவியத்தைத் தாண்டி, காலத்தைத் தாண்டி, இருபதாம் நுாற்றாண்டின் இறுதியில் செங்கேணியின் வழியாக வெளிப்பட்டிருக்கிறது என்பது மோனிகாவின் வாசகம். நிலத்தடி நீரையும் மனத்தடி உணர்வுகளையும் இணைத்து அவர் எழுதியுள்ள இடம் கவித்துவமானவை. கவித்துவ அனுபவம் கவிதைகளில் மட்டும் வெளிப்படுகிற ஒன்றல்ல. வாழ்வியல் அனுபவங்களிலும் கவித்துவம் வெளிப்படக்கூடும்.

‘ஐயோ ஐயோன்னு பச்சைப்புள்ளைங்க போடற சத்தம் கேட்டதும் என் அடிவயிறே நடுநடுறங்கிடுச்சிம்மா. ஆம்பள பொம்பளன்னு ஆயிரம் ஜனங்க கரையோரமா நிக்குதுங்களே தவிர யாரும் காப்பாாத்த போவல. என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு தைரியமா ஆத்துல குதிச்சிட்டேன். நடு ஆத்துல தத்தளிச்சிட்டிருந்த புள்ளைங்க முடியைப் புடிச்சி இழுத்தாந்து தரையில போட்டப்பற்மதான் என்ன நடந்ததுன்னே எனக்குத் தெரியும். எல்லாமே ஏதோ வெறி புடிச்சமாதிரி நடந்திடுச்சி தாயி. அந்தப் புள்ளைங்க சத்தத்த கேட்டுட்டு நமக்கெதுக்கு வம்புன்னு வீட்டுக்கு வந்திருந்தன்னு வையி, கையாலாகாத பொம்பளைன்னு என்னப்பத்தி நானே நெனச்சி நெனச்சியே செத்துருப்பேன் ‘.

செங்கேணியின் வார்த்தைகள் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன. அவருடைய மென்மையையும் பழக்கத்தின் காரணமாகவும் பாதுகாப்பின் காரணமாகவும் நம் மனத்தின்மீது நாம் ோபர்த்தி வைத்திருக்கும் தடித்த கம்பளிகளையும் ஒப்பிட்டுப்பார்த்து வெட்கமுறாமல் இருக்க முடியவில்ால.

மனமென்னும் காட்டுக்குள் ஏதோ ஒரு மரத்தில் ஏதோ ஒரு பறவை இனிய கானத்தை எழுப்பி, அக்கானத்தின் வழியே தன் கட்டளையை மனத்தின் மேல்தளத்துக்கு அனுப்பியவண்ணம் இருக்கிறது. அந்த இசையால் முறுக்கேற்றப்படும் உயிர் அதிர்ஷ்டம் கொண்டது. பக்குவமாக முறுக்கேற்றப்பட்ட தந்திகள் கைவிரல்களால் தொடப்பட்டுதும் பேரின்ப இசையை எழுப்பத் தயாராக இருக்கின்றன. இந்த இசையை மீட்டி வெளிப்படுத்துவதில்தான் மனிதகுலம் சந்தோஷத்தை அடைய முடியும். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு செயலை ஆற்றக்கூடிய ஆவேசத்தையும் சக்தியையும் மனித குலத்துக்கு அந்த இசையே வழங்குகிறது. உள்ளே பொங்கிய இசைக்கு காதுகொடுத்த செங்கேணியைப் பெருமைப்படுத்த கவித்துவம் என்கிற வார்த்தை குறைந்தபட்ச ஒன்றாகவே தோன்றுகிறது.

*****

மிக முக்கியமான ஒரு நேர்காணல் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. அது மோனிகாவே அளித்த நேர்காணல். மோனிகாவைப்பற்றிய நம் மனச்சித்திரம் முழுமையடைய இந்த நேர்காணலின் விவரங்களை வாசகர்கள் அறிவது அவசியம். ‘நமக்குள் இருப்பது யார் ? ‘ தொடரின் வெற்றிக்காக மோனிகாவைக் கெளரவிப்பதற்காக ஆல்பா தொலைக்காட்சி நிறுவனமே அந்த நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நேர்காணலைப்பற்றி எனக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்தார் மோனிகா. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பில்லையே என்கிற வழக்கமான பதிலையே சொன்னாலும் எப்படியாவது பார்த்தாகவேண்டும் என்னும் ஆவல் என் மனத்திலெழுந்தது. ஆனால் அவர் குறிப்பிட்ட நாளில் எதிர்பாராத விதமாக ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்காக நான் மதுரைக்குச் செல்ல வேண்டியிருந்தது. தங்கியிருந்த விடுதியில் தொலைக்காட்சி வசதியிருந்தது. அதனால் அந்த நேர்காணலைப் பார்ப்பதும் எளிதானது. ‘நமக்குள் இருப்பது யார் ? ‘ தொடரின் நேர்காணலில் ஒன்றைக்கூடப் பார்க்காத எனக்கு மோனிகாவின் நேர்காணலைப் பார்க்கக் கிடைத்தது வேடிக்கையான முரணாகப்பட்டது. மோனிகாவின் கம்பீரமான பதில்கள் அவரைப்பற்றிய உயர்வான எண்ணங்களை மேலும் உயரச்செய்தன. ஒருசில கேள்வி பதில்களை மட்டும் வாசகர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

கேள்வி: நீங்கள் கொண்டுவருகிற கேள்வி பதில் தொகுப்பு எந்தச் சுருக்கமும் செய்யப்படாமல் அப்படியே ஒளிபரப்பப்பட வேண்டும் என்று நினைப்பீர்களா ?

பதில்: இல்லை. எனக்கு என் எல்லை தெரியும். நிலையத்தில் ஒரு தொகுப்பாளரின் உரிமை என்னவென்றும் தெரியும். நாங்கள் கொண்டுவருகிற பதிவில் சில சமயங்களில் சொன்ன விஷயமே திரும்பத் திரும்ப இடம்பெற்றுவிடும் வாய்ப்புகள் உண்டு. அவற்றையும் வேறுசில மையத்துக்குத் தேவையற்ற சில உபரித் தகவல்களையும் நேர அளவைக் கருதி வெட்டிப்போடுவதைத் தவிர வேறு வழியில்லை. இன்னொரு வகையில் நிர்வாகத்தின் வெறுப்பு விருப்பையும் தொகுப்பாளர் கணக்கிலெடுத்துக் கொண்டு வெட்டிவிடுவார்.

கேள்வி: உங்கள் நிகழ்ச்சிகளில் அப்படி வெட்டுகள் நிகழ்ந்ததுண்டா ?

பதில்: உண்டு. பலமுறை நிகழ்ந்ததுண்டு

கேள்வி: நீங்கள் எதிர்த்துக் கேட்டதில்லையா ?

பதில்: அதனாலெல்லாம் ஒன்றும் பயனில்லை. எனக்கு நிர்வாகம் சம்பளம் கொடுக்கிறது. நிர்வாகத்துக்கு வேறு சில சக்திகள் வேறு சில விஷயங்களை அளிக்கின்றன. அவற்றுக்கு அவர்கள் கட்டுப்படுவது தவிர்க்கவியலாதவை. எனக்கு முக்கியமான ஒரு சங்கதி நிர்வாகத்துக்கு முக்கியமில்லாமல் போகலாம். இது ஒரு கொடுக்கல் வாங்கல் சுழற்சி. பெரிய அளவில் சுதந்தரத்தை எதிர்பார்க்க முடியாது.

கேள்வி: உங்கள் குடும்ப வாழ்வில் சுதந்தரத்தை உணர்கிறீர்களா ? அலைச்சல் மிகுந்த வாழ்க்கையால் ஏதேனும் பிரச்சனைகள் எழுமா ?

பதில்: எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பெரிய அளவில் எங்கும் சுதந்தரத்தை எதிர்பார்க்க முடியாது. அது குடும்பமாக இருந்தாலும் சரி, வேறு நிறுவனங்களாக இருந்தாலும் சரி. சின்னச்சின்ன சமரசங்கள் எல்லா இடங்களிலும் அவசியமானவை. தனித்தன்மையை குலைத்து வேறொன்றாக மாற்றிவிடுவதாக அச்சமரசங்கள் அமையும்போதுதான் வாழ்க்கை அர்த்தமிழந்து போகிறது.

கேள்வி: நிகழ்ச்சிக்காகப் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறீர்கள். சிறைக்கைதிகள், விலைமாதர்கள், குண்டர்கள், சாராய வியாபாரிகள், தீவிரவாதிகள் எனப் பலவிதமான ச்முகத்தட்டுகளில் இருப்பவர்களையும் பார்க்கிறீர்கள். இதனால் உங்கள் கணவர் வருந்துவண்டா ?

பதில்: இதில் அவர் வருத்தப்பட என்ன இருக்கிறது ? ஒரு வங்கியில் காசாளராக ஒரு பெண்ணோ ஆணோ வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த இந்த மாதிரியானவர்களிடம் மட்டும்தான் பணம் வாங்குவேன், மற்றவர்களிடம் பணம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்று சொல்ல முடியுமா ? அதேபோல்தான் இந்த வேலையிலும். ஒரு விலைமாதைச் சந்திக்கச் செல்லும் மனைவி விலைமாதாகிவிடுவாள் என்று எண்ணும் அளவுக்கு என் கணவர் விவேகமற்றவர் அல்ல. என்னையும் என் விருப்பத்தையும் ஓரளவு நல்ல முறையில் புரிந்துகொண்டிருப்பவர் அவர்.

நிகழ்ச்சி முடிந்ததும் மதுரையிலிருந்தே மோனிகாவை அழைத்து வாழ்த்துகளைச் சொன்னேன். வழக்கமான அவர் சிரிப்பொலியைத் தொலைபேசியில் கேட்டதும் அந்த ஒலி வழியாக அவர் கண்களையும் குழிவிழும் கன்னங்களையும் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் இந்த நிகழ்ச்சி அவருடைய வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது ஆல்பா நிறுவனத்தின் முதலாளி புதுதில்லியில் இருந்திருக்கிறார். அவருடைய பதில்கள் தம் நிறுவனத்தைச் சிறுமைப்படுத்துவதாகத் தோன்றியிருக்கிறது. சென்னைக்குத் திரும்பியதுமே மோனிகா பதவியிலிருந்து விலக்கப்பட்டார். சுதந்தரமாகச் செயல்பட வாழ்த்துகள் என்கிற குறிப்புடன் அவருக்குச் சேரவேண்டிய நிலுவைத்தொகைக்கான காசோலையுடன் கடித உறையொன்று அவருக்குத் தரப்பட்டது. ஏதோ ஒரு விதத்தில் அவர் கணவர் சார்லஸூம் புண்பட்டவராகக் காணப்பட்டார். போகும் இடஙகளிலெல்லாம் எல்லாரும் இந்த நேர்காணலையொட்டிக் கிண்டலாகக் கேள்விகேட்டுத் தடுமாற வைப்பதாகக் குறைபட்டுக்கொண்டார். இரவு உணவுக்குப் பிறகு நிதானமாக இரவு முழுக்கப் பேசி வாய்வார்த்தை மூலமாகவே ஒருவரிடமிருந்து ஒருவர் விலகிக்கொண்டார்கள். வயதான தாயுடன் சென்று சேர்ந்து கொண்டார் மோனிகா.

அடுத்த ஓராண்டுக்காலம் அவர் பட்ட சிரமங்கள் ஏராளம். உடனடியாக அவருக்கு வேறு வேலைகள் கிடைக்கவில்லை. ஆல்பா நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் என்கிற பிம்பம் அவரையறியாமல் அவரை நிழல்போலத் தொடர்ந்து வாய்ப்புகளைத் தட்டிப் பறித்தது. முதலில் வாய்மொழி விலக்கே போதும் என்று ஒதுங்கிய சார்லஸ் சட்டரீதியான விலக்குக்காக நீதிமன்றத்தை நாடியதால் அடிக்கடி வழக்கையும் சந்திக்கவேண்டியிருந்தது. எல்லா வகையிலும் மனஉளைச்சலுற்ற மோனிகா பொறுமை இழக்காமல் இந்தக் கையெழுத்துப் பிரதியுடன் பல பதிப்பாசிரியர்களையும் தொடர்ந்து பார்த்து வந்தார். எந்தத் திசையிலும் அவருக்கு நன்மை கிட்டாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

கையிலிருந்த சேமிப்பு மெல்ல மெல்லக் கரைந்துகொண்டே இருந்தது. வணிக அளவில் ஆல்பா நிறுவனத்துக்குப் போட்டியாக பீட்டா தொலைக்காட்சி நிறுவனம் முளைத்ததும் மோனிகாவின் வாழ்வில் வெளிச்சம் அரும்பியது. அவர் முகத்தில் மீண்டும் புன்னகை திரும்பியது. இந்த முறை அரசியல் புள்ளிகளையும் முதலாளிகளையும் நேர்காணல் எடுக்க வேண்டியிருந்தது. தகுந்த தயாரிப்புகளோடும் புள்ளிவிவரங்களோடும் அவர் எடுத்திருந்த முதல் நேர்காணலே மிகப்பெரிய வெற்றியை அவருக்குத் தேடித்தந்தது. வாரத்துக்கு ஒருமுறை இரவு பத்தரைக்கு ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சி கேபிள் தொலைக்காட்சி வரலாற்றில் எல்லா விளம்பரதாரர்களுக்கும் பிரதான நேரமாயிற்று. பீட்டா நிறுவன முதலாளி அவரைத் தனிப்பட அழைத்து ஊக்கப்படுத்தி அனுப்பினார். அச்சமயத்தில்தான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அவருடைய மணவிலக்கு வழக்கும் முடிவுற்றது. மோனிகா, சார்லஸ் இருவரிடையேயும் இருந்த உறவு முரிந்தது.

ஒருசில மாதங்கள் பிரச்சனையின்றிக் கடந்தன. அடித்தட்டு மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரைச் சந்திக்கிற ந்ிகழ்ச்சி ஒன்றை பீட்டா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. தலைவருடைய இளமை, கல்வி, கட்சிப்பதவிகள், சாதனைகள் என்று பல தலைப்புகளை ஒட்டியதாக அமைந்த உரையாடல் மேடைப்பேச்சு நாகரிகத்தில் மையம் கொண்டது. கடந்த அறுபதாண்டுகளாக மேடைப்பேச்சு எப்படி எப்படியெல்லாம் மாறிமாறி வந்திருக்கிறது என்பதை இரண்டு நிமிடங்களில் ஆறு பகுதிகளாக ஆறு வெவ்வேறு தலைவர்களின் பேச்சை வேகவேகமாகத் திரையில் ஓடவிட்டு அந்தத் தலைவர் பேச்சையும் இணைத்துக் காட்டியபோது அது ஒரு உறுதியான புகாராகப் பதிந்துவிட்டது. உடனே அத்தலைவர் சில சமயங்களில் உணர்வு வேகங்களில் அப்படி நேர்ந்துவிடுவதுண்டு என்றும் ஒருபோதும் அது முன்னுதாரணமாகாது என்றும் சொல்லிச் சமாளித்தார். சற்றும் சளைக்காத மோனிகா கட்சியின் முதல்கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டப் பேச்சாளர்கள் முதல் எல்லா நிலைகளிலும் உள்ள தலைவர்கள் வரை பேசிய பேச்சுகளைச் சரவேகத்தில் ஒரு நிமிடத்தில் கோர்வையாகத் திரையில் மின்னச் செய்தார். சங்கடம் கொண்ட தலைவர் அதையும் சமாளித்தார். ஒருசில வேளைகளில் தாம் பொறுமை கொண்டாலும் தீய எண்ணங்களைக்கொண்ட எதிர்க்கட்சியனர் வாயைக்கிளறும்படி ஏதேனும் கேட்கிற சமயங்களில் கட்டுப்பாடுகளை மீறி இப்படி நடந்துவிடுகிறது என்றும் கட்சி மேலிடம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் முடித்து வைத்தார். அந்த நேர்காணல் மோனிகாவுக்குத் தகவல் ஊடக உலகில் மிகப்பெரிய இடத்தைத் தேடித்தந்தது. அரசியல் தலைவர்களுக்கோ சங்கடங்களைக் கொடுத்தது. பழுத்த அனுபவம் உள்ள தலைவரே மோனிகாவின் கேள்விச் சரங்களால் தடுமாறித் தயங்கிச் சமாளிக்கும் சூழலில் தம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எளிய புதிய தலைவர்கள் மனத்துக்குள் பொருமத் தொடங்கினார்கள். தம்மை நேர்காணலுக்காக பீட்டா நிறுவனம் அணுகிவிடுமோ என்று பலரும் பயந்தார்கள். அணுகப்பட்டுவிடுவோம் என்பது தீர்மானமாகத் தெரிந்ததும் தில்லிக்கோ பெங்க்ளுருக்கோ பறந்துபோய் ஏதாவது வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.

அடித்தட்டு மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அந்த நேர்காணலை மறந்தாலும் கட்சியின் சின்னச்சின்னத் தலைவர்களும் பேச்சாளர்களும் அதை மறக்க விரும்பவில்லை. புண்ணை ஆறவிடாமல் கிளறிக்கிளறிப் பெரிதாக்கத் தொடங்கினார்கள். பீட்டா நிறுவனத்தையும் மோனிகாவையும் கண்டித்து ஒவ்வொரு மேடையிலும் பேசத் தொடங்கினார்கள். மோனிகாவின் நடத்தையைப்பற்றிக் கேவலமாகக் குறிப்பிட்டார்கள். பத்திரிகைகளில் எழுதினார்கள். எதனாலும் பாதிக்கப்படாதவராகத் தலைவர் காட்டிக்கொண்டாலும் தொண்டர்கள் கொதிப்பேறிப் பேசியபடி இருந்தார்கள். ஏறத்தாழ ஒரு மாதம் கடந்தாலும் அக்கொதிப்பு அடங்கவில்லை.

எழும்பூர் நிலையத்தில் மோனிகாவைச் சுட்டுக்கொன்ற இளைஞனுடைய பெயர் அன்புக்கடிமை என்றும் சொந்த ஊர் மதுரை என்றும் அடித்தட்டு மக்கள் முன்னேற்றக் கட்சியின் உறுப்பனர் என்றும் நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட பிறகு மோனிகாவைக் கொல்வதற்காகவே மதுரையிலிருந்து வந்து அவளை நிழல்போலத் தொடர்ந்ததாகவும் செய்திகள் வந்தன. எதையும் காவல்துறை உறுதிப்படுத்தவில்லை. அதற்கிடையே அன்புக்கடிமையின் தந்தையார் தன் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் கோரவிபத்தொன்றில் மனைவியை இழந்த துக்கத்தால் அப்படி நேர்ந்துவிட்டது என்றும் பாதுகாப்பை மீறி இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டிலிருந்து தப்பிவிட்டதாகவும் மோனிகாவை அவன் கொன்றது தற்செயலான விஷயமே என்றும் அறிக்கை கொடுத்தார். அடித்தட்டு மக்கள் முன்னேற்றக் கட்சியும் அன்புக்கடிமை ஒருபோதும் தன் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இருந்ததில்லை என்றும் எல்லாமே எதிர்க்கட்சியினரின் சதிவேலை என்றும் மோனிகாவே எதிர்க்கட்சியின் கையாளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அறிக்கையை வெளியிட்டது.

ஆல்பா நிறுவனத்தையும் மோனிகாவின் கணவர் சார்லஸையும் புரிந்துகொள்ள முடியாததைப்போலவே அடித்தட்டு மக்கள் முன்னேற்றக் கட்சித் தலைவரையும் அன்புக்கடிமையையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இவர்கள் அனைவரும் எடுத்த இறுதி முடிவுக்கு முந்தைய கணத்தில் இவர்களுடைய மனங்களில் என்னவிதமான எண்ணங்கள் அலைமோதியிருக்கக் கூடும் என்ற கேள்விக்குப் பதில்களை அறிய ஆவலாக இருக்கிறது. இதுபோன்ற தருணத்தில் மோனிகா உற்சாகமாக அப்பதில்களைத் தேடிப் பயணம் செய்யக்கூடும். நம்மால் முடியவில்லை. காரணம் மனமென்னும் காடுதான். திக்குத் திசைதெரியாத காடு.

*****

என் மனத்திலெழும் குற்ற உணர்ச்சியைப் பதிவு செய்யாமல் இந்த முன்னுரையை முடிப்பதில் நியாயமில்லை. இந்த நுாலின் கையெழுத்துப் பிரதி ஏறத்தாழ ஓராண்டுக்காலம் என்னிடம் இருந்தது. இதை நுாலாக்கும் ஆவலில் மோனிகா அலைந்த அலைச்சல்களெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் ஒருமுறை கூடத் தனக்கு உதவும்படி அவர் என்னிடம் கேட்டதில்லை. நானாகவும் அந்த முயற்சியைச் செய்யவில்லை. ஒரு நல்ல நுால் என்று படித்ததும் அடையாளம் காட்டத்தெரிகிற நான் இதை நுாலாக்க உதவும் வாய்ப்புகள் இருந்தும் செய்யாமல் அடங்கியது ஏன் என்று என் மனத்தையே கேட்டுக்கொள்கிறேன். இப்போது இதை நுாலாக வெளியிடுகிற புதுவசந்தம் பதிப்பகத்தார் வழியாகவே அப்போதே கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் என்னைத் தடுத்த காரணம் எது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. மோனிகாவின் மறைவுக்குப் பிறகு வருகிற இந்த நுால் அவர் உயிருடன் இருந்தபோதே வந்திருந்தால் அவர் மனம் நிறைவடைந்திருக்கக்கூடும். அந்த மனநிறைவை அவருக்கு நான் தராமல் போனதை எண்ணிப் பெருகும் குற்ற உணர்வுக்கு அளவே இல்லை. என் மனம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கும் பதிலே இல்லை.

—————————————————–

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்