மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

அறிவிப்பு


‘புதுமைப்பித்தனைவிட நூறு மடங்கு பெரிய எழுத்தாளன் மண்ட்டோ ‘ – பிரபஞ்சன்

உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் 50வது ஆண்டு நினைவு நாளில் (18.01.05)

ராமாநுஜம் மொழிபெயர்த்த ‘மண்ட்டோவின் படைப்புகள் ‘ நூல் விமர்சனக்கூட்டம் நிழல்

பதிப்பகத்தால் நடத்தப்பட்டது. விமர்சனக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று நிழல்

திருநாவுக்கரசு உரையாற்றினார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையுரையில், ‘மொழி பெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாகத்

தெரிய வேண்டும். தமிழில் எழுதியதாக மாறிவிடக்கூடாது. மண்ட்டோவை படிக்கப்படிக்க

புதுமைப்பித்தனைவிட நூறு மடங்கு பெரிய எழுத்தாளராகவும், உலகத்தரத்திற்கு நிகரான

படைப்புகளைத் தந்தவராகவும் தெரிகிறது. ஒரு சிறுகதையை எழுத வேண்டிய பகுதிகளை

மட்டும் எழுதி, எழுதாமல் வாசகர்கள் புரிந்து கொள்ள நிறைய இடங்களை உண்டாக்கித்

தருகிறார் ‘ என்று கூறிவிட்டு சிறந்த கதைகள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து விளக்கினார்.

அடுத்துப் பேசிய ந. முருகேசபாண்டியன் தமிழில் தேவையில்லாத, தமிழ்படைப்பாளிகளை

மிரட்டும் மொழிபெயர்ப்புகள் பல வந்துகொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் ‘டப்பிங் படங்கள் ‘

போல் மொழிபெயர்ப்புகள் பெருகியிருக்கும் சூழ்நிலையில் இந்தப்புத்தகம் மொழி பெயர்ப்பின்

தேவையை சரியாக உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. புதுமைப்பித்தனால் முடிந்ததை

செய்தார். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. புதுமைப்பித்தனை விட மண்ட்டோ

சிறந்த படைப்பாளி என்று ஏற்றுக் கொள்வதில் நமக்கு தயக்கங்கள் ஏதும் அவசியம் இல்லை.

இதில் வெட்கப்படுவதற்கு ஏதும் இல்லை. மண்ட்டோவிற்கு கிடைத்த அனுபவங்கள் பெரியது.

இவரைப்போல விலகி இருந்து இந்து முஸ்லீம் பிரச்சனையை எழுதியவர்கள் யாரும்

கிடையாது ‘ என்றார். மேலும் அவர் பேசும் போது இந்தப்புத்தகத்தை இலக்கிய வாசகன்

எந்த அளவுக்கு படிக்க வேண்டுமோ அதைக்காட்டிலும் படைப்பாளிகள் படிக்க வேண்டிய

படைப்பு என்றும், தமிழில் முதன்முதலில் வல்லிக்கண்ணன் தான் மண்ட்டோவை மொழி

பெயர்த்தவர் என்று திருநாவுக்கரசு கூறியதாக தெரிவித்தார்.

இறுதியாக பேசிய வ. கீதா, பெண்ணிய நோக்கில் ஒவ்வொரு கதையாக எடுத்து ஆய்வு

செய்தார். பெண் உடல் மண்ட்டோவின் கதைகளில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்று

மிக ஆழமாக எடுத்துரைத்தார். பிரிவினைக்கலவரங்கள் பற்றிய கதைகளில் மனிதனுள்

புதைந்து கிடக்கும் வன்முறையின் ஆழத்தை மண்ட்டோ தொட்டிருக்கும் விதம் பற்றியும்

எடுத்துரைத்தார். இவரின் கதைகள் ஊடாகத்தான் ‘தர்மசங்கடம் ‘ என்ற பதத்தின் முழு

அர்த்தத்தை உணர்ந்ததாகவும் உரைத்தார். ஒரு ஆணின் பார்வையில் பெண் உடல்

கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தை ‘குஷியா ‘ என்ற கதையின் ஊடாக மிக விரிவாக ஆய்வு

செய்தார். இத்தொகுப்பில் உள்ள ‘சொற்சித்திரங்கள் பற்றி பேசும் போது ‘எந்த ஒரு சமூக

ஆய்வுகளிலும், அரசியல் ஆய்வுகளிலும் வெளிப்படுத்த முடியாத நழுவி விடக்கூடிய

உண்மைகளை சொற்சித்திரக்கதைகள் வெளிப்படுத்துவதாகவும் சொன்னார். இவரின் பேச்சு

கட்டுரையாக வெளிவந்தால் அது மிகச் சிறந்த கட்டுரையாக அமையும் என்பது உண்மை.

ஏற்புரையில் இந்தத் தொகுப்பை தொகுத்து தமிழாக்கம் செய்த ராமாநுஜம் பேசும் போது

மண்ட்டோவின் படைப்புகள் ஒரு ‘Urban Literature ‘ என்றும் வாழ்க்கையைப்பற்றி எதை

வேண்டுமானாலும் இலக்கியமாகப் படைப்பதற்கு நம்பிக்கையை ஊட்டுவதாக அமைகிறது

என்றார்.

இறுதியில் மண்ட்டோவின் கதைகளித் தழுவிய இரண்டு குறும்படங்கள் – ராஜாங்கத்தின்

முடிவு (இயக்கம்: அருள் எழிலன்), தூக்கம் (இயக்கம்: எஸ். தாஸ்), திரையிடப்பட்டன.

—-

தமிழாக்கம் செய்த ராமாநுஜம்

கீதா

வெளியீடு

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு