அம்ஷன்குமார்
சுப்பிரமண்ய பாரதி
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய கர்த்தாக்களில் பிரதாணம் வகிப்பவர்கள்
சிறுகதை மூலம் சிறந்து விளங்கும் வேறு சிலரும் தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக எண்ணப்படவேண்டியவர்கள் எனினும் இம்மூவரின் படைப்பு ஆளுமை மகோன்னதம் வாயந்தது. கலையைப் புனைவது என்பதோடு மட்டுமன்றி சமூகம், அரசியல், மனிதம் போன்ற பலவற்றையும் ஆராய்ந்து நோக்கியும், பொய்மையை இடித்தும், போலி மதிப்பீடுகளை எள்ளி நகையாடியும் தங்களது மேதைமையை நிலைநாட்டியவர்கள் இம்மூவர். இவர்களில் தன்னைப்பற்றியும் அதிகம் வெளிப்படுத்திக்கொண்டவர் ஜெயகாந்தன். சொல்லப்போனால் தன்னை இலக்கியத்தரமாக வெளிப்படுத்திக்கொண்ட வேறு ஒரு தமிழ் இலக்கியவாதியை நாம் கண்டதில்லை. அவரது நினைத்துப் பார்க்கிறேன் ‘ தமிழின் விசேஷங்களில் ஒன்று. கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக தனது பலவீனங்களையும் பகிரங்கப்படுத்திய எழுத்தாளர்.
தமிழ்நாட்டில் டெலிவிஷன் காலம் தொடங்கும் முன்வரை ஜெயகாந்தன் மிகவும் பிரபலமாகவும் விளங்கியர். பிரபல பத்திரிக்கைகளில் ஜெயகாந்ஹ்தை விரும்பிப் படித்த, அவரது கம்பீர ஆளுமையை பெரிதுபடுத்தி ரசித்த தமிழர் கூட்டம் இன்று அருகி விட்டது. டெலிவிஷன் காலத்தில் ஜெயகாந்தனைப் படித்திராத, அறிந்திராத இளைஞர் கூட்டம் மிகப் பெரியது. இதை இன்றைய இளைஞர் மீதான விமர்சனமாகவும் வைக்க முடியும்.
ஜெயக்காந்தனின் படைப்புலகம் மிகவும் விசாலமானது. வட்டார வழக்குகள், ஜாதி, வர்க்க அமைப்புகள் போன்றவற்றை அடிப்படையாக கொள்ளாதது. சேரி பாஷையிலிருந்து பிராமண பாஷைவரை அவர் திறம்பட எடுத்தாளாத வகையறா ஏதுமில்லை. இதில் போற்றத்தக்க விஷயம் யாதெனில் ஒரே கதையிலோ நாவலிலோ அனைத்துலக மக்களும் தங்களது பாஷைகளைப் பேசித்திரிபவர்களாக அவர் காட்டியிருக்கிறார். அவரது படைப்புலகில் பேசப்படும் மொழியை ‘ஜெயகாந்தன் பாஷை ‘ என்றுணர்வதே நமது புரிதலைச் சிறப்பிப்பதாக இருக்கும்.
கலாரீதியாக பாத்திரப்ப்படைப்பு, வர்ணனை, நடை, சொல்லாட்சி, சம்பாஷனை, கடை சொல்லல் போன்றவற்றை அவரது படைப்புகளிலிருந்து சிறப்பித்துச் சொல்லத் துவங்கினால் இச்சிறு கட்டுரை இலக்கிய ஆய்வாக மாறிவிடும். ஒட்டுமொத்தமாக பார்வைகொண்டு விரைவாக குறித்துக் கொள்கிற முயற்சியில் சொல்வதானால் அவரது படைப்புகளில் மேலோங்கியதாகக் காணப்படுவது மனித நாகரீகம் பற்றிய (civilization) அவரது பிரதான அக்கறை. இதுவே அவரை, சமூகத்தில் எத்தகைய அந்தஸ்து கொண்டிருந்த போதிலுமவரது கதாபாத்திரங்கள் தாங்கள் ஞானத்தை தேடுபவர்களாக சித்தரிக்குமாறு தூண்டியது. இதுவே அவரை மனிதாபிமானியாகவும் சிந்தனாவாதியாகவும் உயர்த்தியுள்ளது. இதுவே மாணவர்களை மாடு மேய்க்கப் போங்கள் என்று சொல்லக் காரணமாக இருந்தது. நக்ஸலைட்டுகள் மீதும் சம்பல் கொள்ளைக்காரர்கள் மீதும் பரிதாபம் கலந்த புரிதலைத் தோற்றுவித்தது. தூக்குத்தண்டனை பற்றிய உரத்தச் சிந்தனையை எழுப்பியது. உளவியலை அடிப்படையாக்கித் தார்மீக நோக்கில் குற்றம் புரிந்தவர்களை அணுக உதவி புரிந்தது.
கருத்துலகத்தின் நாகரீகத்தை எப்போதும் வலியுறுத்தியவர் ஜெயகாந்தன். அவர் காதலைப் பற்றி எழுதவில்லை. ஆனால் காதலிப்பது என்பது பருவத்தின் காரணமாக எழும் நாகரீக வெளிப்பாடுதான் என்று கூறியிருக்கிறார். மதுவைப் பற்றி மேலான எண்ணங்களை வெளிப்படுத்திய ஒரே தமிழர். கஞ்சாவை மருந்தென்று புகழ்ந்த உரைநடைச் சித்தர். பழமையை எப்போதும் பரிசோதிக்கத் தயங்காதவர். படைப்புக்கு முக்கியம் இலக்கணம் அல்ல என்று அடித்துக் கூறிய கவிஞர். ஆனால் இலக்கணம் கற்ற பின்னரே அதை மீறுங்கள் என்று எச்சரித்த கறாரான நவீனவாதி.
தான் நம்பிய எதையுமே சலிப்பற்று பிரச்சாரம் செய்யத் தயங்காதவர். அவரது கூற்றுக்களில் தெளிவின்மை உண்டு. திரிவான மரபுப் பார்வை மூலம் ஒரு காலகட்டத்தில் வரலாறுக்கெதிரான பிராமணமோகம் கொண்டிருந்ததை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் அவர் ஒரு போதும் பொய்யுரைத்ததில்லை. இந்திராகாந்தியை சோஷலிசவாதியென்று அவர் கூறினால அதற்கு உள்ளர்த்தங்களை கற்பிக்க முடியாது. உண்மையாகவே அதை அவர் நம்பினார். அதற்கான காரணங்களை வித்தியாசமான கோணத்திலிருந்து அவரே கூறிவிடுவார். இந்தித் திணிப்பைப் பற்றி உணரவே முடியவில்லை என்பதற்கும் அவரது வித்தியாசமான விலகிய பார்வையே காரணம் என்பதை எதிர்காலம் ந™ விளங்கிக் கொள்ளும். தனது சொந்த விருப்பு வெறுப்புகளை முன்வைத்து சமூகத்தையோ இலக்கியத்தையோ கணிக்காதவர். கம்யூனிஸ காங்கிரஸ் கட்சிகள் மீது உறவு கொண்டிருந்தாலும் அதை இலக்கியத்தில் அவர் ஒருபோதும் சிறப்பித்ததில்லை. இலக்கியத்தை தவமென்று புரிந்த முனிவர் அவர்.
ஆங்கிலம் படித்ததனால் உண்மையாகவே முன்னேறிய ஒரு சில தமிழர்களில் அவரும் ஒருவர். ஆங்கில வார்த்தைகளை தமிழ் சந்தர்ப்பங்களில் திறம்பட பிரயோகித்தவர். Snobbery, Taboo போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அவரது பிரயோகங்களின் மூலமாகவே நான் புரிந்து கொண்டுள்ளேன். நாடகம், திரைப்படம் பற்றிய சரியான மதிப்பீடுகள் கொண்டவர். திரைப்படம் மீது அவர் கொண்டிருந்த நல்லெண்ணமே ‘உன்னைப்போல் ஒருவனாக ‘ நமக்குக் கிடைத்துள்ளது.
புதுமைப்பித்தனைப் போலன்றி அவர் யதார்த்த வாதத்தையே எப்போதும் நாடியுள்ளார். தமிழின் மிகச்சிறந்த யதார்த்தவாதத்தை அவரது படைப்புகளில்தான் காண முடியும். நடப்புலகின் மாற்றங்களை உடனுக்குடன் தனது படைப்புகளில் காட்டியவர். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ, பிரதேசத்தையோ விட்டுவிட்டு விலக முடியாதவர்கள். இளமைப் பருவத்திற்கே திரும்பத் திரும்ப வருகிற ‘வயது வராத ‘ எழுத்தாளர்கள் இங்கு நிறைய உண்டு. ஜெயகாந்தனின் யதார்த்தவாதம் பெரும் ஜீவிதம் கொண்டது. அவரது யதார்த்தவாதம் பற்றிய முழு ஆய்வு நடந்தபிறகே இங்கு மந்திர யதார்த்தவாதம் காலூன்ற முடியும்.
மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் வெளிவந்துள்ளன. முகமிழந்த ஒரு காலத்தில் மனிதர்கள் கொண்டுள்ள மதிப்பீடுகளை அவர் ஆராய்கிறார். உண்மையான மனிதர்கள் கொண்டுள்ள மதிபீடுகளை அவர் ஆராய்கிறார். உண்மையான அன்பு நம்மிடையே சாத்தியமா என்று ஒரு கதாபாத்திரம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ நாவலில் கேட்கிறது. அன்பு கொள்வதென்பது மனிதனின் சாசுவத சுபாவங்களில் ஒன்று என்னும் அடிப்படையான கருத்தாக்கத்தை இக்கேள்வி நிர்மாலமாக்குகிறது. நமது காலத்தை நோக்கி எழுப்பப்பட்ட மிக முக்கியமான கேள்வியே இதுவாகத் தான் இருக்க முடியும்.
-நாடக வெளி, ஜனவரி 1994