மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள்

This entry is part 4 of 14 in the series 19990902_Issue

சின்னக்கருப்பன்

மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள்

  1. நிறையச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து சாதம் நிறைய வடித்துவிட்டேன். பிள்ளைகள் எண்ணியதுபோல சாப்பிடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சாதத்தை அப்படியே அரைத்து சிறிது கோதுமை மாவும், சிறிது ரவையும் சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் வந்திருந்த என் மாமியாருக்கு தோசை செய்து போட்டேன். அப்போது ஊருக்குப் போனவர்தான் மாமியார், இன்னும் வரவேயில்லை. மாமியார் தொல்லையுள்ளவர்கள் இந்த தோசையைச் செய்து பார்க்கலாம்.
    -சுஜாதா ரங்கமணி, தொல்லையார்பேட்டை
  2. நிறைய செய்து வைத்திருந்த பஜ்ஜி மாவில் பல்லி விழுந்து விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது என் கணவர் தனது குடிகாரத் தோழர்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். குடித்துக் கொண்டே பஜ்ஜி போட்டு எடுத்துக் கொண்டு வா என்று ஒரே ரகளைதான் போங்கள், நான் வேறுவழியின்றி அந்த பஜ்ஜி மாவிலேயே பஜ்ஜி போட்டு கொடுத்தேன்.( பஜ்ஜியை என் கணவருக்கு மட்டும் கொடுக்கவில்லை ). சில மணிநேரங்களில் என் கணவரின் நண்பர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். விஷச்சாரயம் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் என் கணவர் அதன் பின்னர் குடிக்கவேயில்லை என்பதுதான் நல்ல விஷயம். உங்கள் வீட்டிலும் இது போன்று பஜ்ஜிமாவில் பல்லி விழுந்தால் இதைச் செய்து பாருங்கள்,
    -பங்கஜம் ராமகிருஷ்ணன், கண்ணம்மாபேட்டை
  3. இட்லி நிறையச் சுட்டு மீந்து விட்டதா கவலைப்படவேண்டாம். அந்த இட்லியை மீண்டும் அரைத்து தோசை சுடலாம். அந்த தோசை கண்றாவியாக இருக்கிறது என்று யாரும் சாப்பிடாமல் மீந்து விட்டால் கவலையை விடுங்கள், அந்த தோசைகளையும் தோசை மாவையும் சேர்த்து அரைத்து கொஞ்சம் கறுவேப்பிலை, கொத்துமல்லி, வினிகர், கடலைமாவு, கொஞ்சம் சோயாஸாஸ், கொஞ்சம் பெருங்காயம் (பழைய மாவு நாற்றம் போவதற்காக), கொஞ்சம் பாதாம் பருப்பு, கொஞ்சம் குங்குமப்பூ, கொஞ்சம் ஏலக்காய், கொஞ்சம் ஜாதிக்காய், அரைக்கிலோ சர்க்கரை போட்டு அரைத்து நிறைய கோதுமைப்பால் ஊற்றி ஹல்வா கிண்டுங்கள். நிச்சயம் தின்றுவிடுவார்கள். என்ன போட்டாய் என்று யார் கேட்டாலும் சொல்லிவிடாதீர்கள்.
    -சுந்தரி சங்கரபாண்டி, வடக்கு மாம்பலம்
  4. கத்தரிக்காய் ரசம். ஐந்து பேருக்கு தேவையான அளவுக்கு கத்தரிக்காய் சாம்பார் செய்யுங்கள். சாம்பார் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு சுடுதண்ணீர் ஊற்றுங்கள். நன்றாக கலக்குங்கள். இப்போது, எவ்வளவு தண்ணீர் ஊற்றினீர்களோ அவ்வளவு சாம்பாரை மேலாக எடுத்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றுங்கள். இப்போது கத்தரிக்காய் சாம்பாரும் ரெடி, கத்தரிக்காய் ரசமும் ரெடி. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதே வகையில் மாங்காய் ரசம், உருளைக்கிழங்கு ரசம், முருங்கக்காய் ரசம் அனைத்தும் செய்யலாம். என் கணவர் சாம்பார், ரசம் என்று சாப்பிட்டுவிட்டு, எப்படித்தான் இப்படி வீட்டுக்கு ஓடாய் உழைக்கிறாயோ என்று பாராட்டினார். நீங்களும் அவ்வாறு பாராட்டைப் பெறலாம்,
    -ராஜாத்தி சின்னக்கருப்பன், நந்தனம்,
Series Navigation<< அன்புள்ள ஆசிரியருக்குகுடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர் >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *