புதியமாதவி, மும்பை.
அம்மாவுக்கு என்மீது ரொம்பக் கோபம்.
அவள் விருப்பப்படி நான் அவள் பார்த்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள
வில்லை என்று ஆரம்பத்தில் இரண்டு வருசம் கோபத்திலிருந்தாள்.
அப்புறம் பேரனைப் பார்த்தப்பின் அந்தக் கோபம் காணாமல் போய்விட்டது.
இப்போதெல்லாம் ஒவ்வொரு வருஷமும்
‘ஊருக்குப் பொங்கலுக்கு வாயேண்டா ‘ என்பது தான் அவள் பாடும் பல்லவி.
அவளும் சொல்லி சொல்லி அலுத்துவிட்டாள். இப்போது சொல்வதே இல்லை.
எங்கே முடிகின்றது ? அவனுக்கு லீவு கிடைத்தால் அவன் மனைவி ரெய்ச்சலுக்கு
லீவு கிடைப்பதில்லை.பையன் ரிதிக்கின் ஸ்கூலில் லீவு போட்டால் அவ்வளவுதான்..
ஆனா.. எப்படியும் இந்த வருசம் பொங்கலுக்கு ஊருக்குப் போய்விட வேண்டியதுதான்.
அவனுக்கும் ப்ரமோஷனில் இப்போதெல்லாம் போக வர ஏர் டிக்கெட்.
பொங்கல் வியாழக்கிழமை வருகின்றதா… நல்லதாப் போச்சு..
பொங்கலுக்கு ரெஸ்ரிக்டெட் ஹாலிடே உண்டு. ஒரு நாள் வெள்ளிக்கிழமை லீவு
போட்டாகனும். அப்புறம் சனி, ஞாயிறு மூவருக்குமே லீவுதான்.
பொங்கலுக்கு ஊருக்குப் போகப்போகின்றோம் என்ற நினைப்பே சந்தோஷத்தைக்
கொத்து கொத்தாக அள்ளி வீசியது.
ரெய்ச்சலுக்கு பொங்கல் பற்றி எதுவும் தெரியாது. இவனும் ஒவ்வொரு வருடமும்
பொங்கல் வரும்போதெல்லாம் அவளிடம் தன் ஊர் பொங்கல் கதைகளை
சொல்லி சொல்லி அவள் வியப்பில் விழிகள் விரிய ‘ரியலி ‘ என்று கேட்கும்போது
பெருமையுடன் தலையை அசைப்பான்..
இப்போது அதை எல்லாம் அவளிடமும் தன் வாரிசிடமும் நேரில் காட்டப்போகின்றோம்..
படுக்கின்ற பாய் முதல் சுமக்கின்ற சாக்குப் பை வரை ஓடுகின்ற கால்வாய்த்
தண்ணீரில் கொண்டுவந்துப் போட்டு கழுவுவார்கள்.
முற்றத்தில் நல்ல சுண்ணாம்புக்கோலம்.. பெரிய்ய பெரிய்யப் புள்ளிக்கோலங்கள்..
எங்கே ஆரம்பம் எங்கே முடிகின்றது என்று கணினி வைத்துக்கூடக் கண்டுபிடிக்க
முடியாது… அப்படி புள்ளிகளைச் சுற்றி வட்டமிட்டு வெளியில்வந்து கட்டமாகி
ஓரத்தில் இலையும் பூவுமாக வளைந்து..கோலம் கோலமிடும்.
சுற்றிலும் பார்டர் லைன் கோலம் நடுவில் குத்துவிளக்கு கோலம்.. அதுவும்
புள்ளிகள் வைத்துதான். குத்துவிளக்கு தலைவாசலைப்பார்த்து நான்கு முகம் காட்டி
எரிவது போலிருக்கும்..இவர்கள் வீட்டில் ஒரு அடிக்கு குத்துவிளக்கு கோலம்
எரிந்தால் அடுத்த வீட்டு முற்றத்தில் இரண்டரை அடிக்கு குத்துவிளக்கு வளைந்து
நெளிந்து புள்ளியில் கண்சிமிட்டும்..
தலைவாசலுக்கு ஏறும் படிக்கட்டுகளில் செம்மண் கரைத்து குழைத்து பட்டை பட்டையாக
கோடுகள்.. புதிதாக அடித்த வெள்ளையில் அந்தச் செம்மண் கோடுகள்..
மல்லிகைப்பூவுடன் சேர்த்து அழகுக்காட்டும் சிவப்புக் கனகாம்பரம் மாதிரி இருக்கும்.
பொங்கல் பானையில் கோணலும் மாணலுமாக கோடுகள்.. அம்மா சொல்லுவாள்
சாஸ்திரத்திற்கு கோடு போடனும் என்று. அதன் மூடியில் கூட புள்ளி வைத்திருப்பாள்.
பொங்கல் வைக்கும் மண்ணால் ஆன அடுப்புக் கட்டிகளில் நல்ல சாணி வைத்து
பூசி இருப்பார்கள்.காய்ந்தவுடன் செம்மண் கோலம்.
பொங்கல் பானைக்குத் தீமூட்ட என்று தோட்டத்திலிருந்து நிறைய்ய காய்ந்துப்போன
ஒலைகளை கட்டி எடுத்துவந்து ஓரமாக அடுக்கி வைத்திருப்பார்கள்.
கண்களில் தூசிப்பறக்க பறக்க கண்ணைக் கசக்கிக்கொண்டு நாலாப்பக்கமும்
ஓலையை வைத்து வீட்டில் எல்லோரும் பொங்கல் அடுப்பைச் சுற்றி நிற்பார்கள்.
பொங்கல் பச்சரிசி ஒரு பானையில், பாயாசம் இன்னொரு பானையில்..வைப்பார்கள்.
ஒற்றைப்பானை வைக்க மாட்டார்கள்.
சந்திரனுக்கு எப்போதடா தன் வீட்டுப்பொங்கல் பானைப் பொங்கும் என்று ஆவலாக
இருக்கும். இப்போதும் அவனுக்கு அதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகின்றது.
பொங்கல்பானைப் பொங்கி விழும்போது அவன் அம்மா குலவை இடுவாள்.
நாக்கை உள்ளுக்குள் சுழட்டி வாயோரங்களில் தொட்டசைத்து எழுப்பும் அந்தச் சத்தம்
இப்போதும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இவனும் தன் பங்கிற்கு தன் ஆட்காட்டி விரலை வாய்க்குளிட்டு சத்தம் எழுப்புவான்..
அப்படி சத்தம் எழுப்பிக்கொண்டே தங்கள் வீட்டு முற்றத்தைச் சுற்றி தன் தம்பி
தங்கைகளுடன் ஓடுவான்.
‘ஏலே சந்திரா.. நல்ல நாளும் அதுவுமா கீழை விழுந்து வைக்காதேல்லே ‘
அவன் பாட்டி திண்ணையில் உட்கார்ந்து கொண்டே சொல்லுவாள்.
பாட்டியை அவன் பொங்கலன்று மட்டும்தான் இப்படி அழுக்குப்படாத வெள்ளைச்
சேலையில் பார்த்திருக்கின்றான். மற்ற நாட்களில் எல்லாம் அவள் சேலைகளில்
எப்போதும் ஒருவித பளுப்பு நிறம் ஏறிப்போயிருக்கும். கேட்டால்
‘வாழைக்கறை துவைச்சா எங்கேலே பொவுது ‘என்பாள்.
அவள் சோப்பு செல்வாகிவிடும் என்பதால் சோப்பு போடாமல் துவைத்து
காயவைத்துதான் கட்டுகின்றாள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அம்மா தன் ரெண்டுகொத்து செயினை எடுத்து அன்று போட்டிருப்பாள். அதோடு
அவள் நல்ல நாளுக்கும் கல்யாண வீடுகளுக்கும் போடுகின்ற எட்டுக்கல்
மூக்குத்தியையும் போட்டுக்கொண்டு முற்றத்துக்கும் அடுக்களைக்குமாக
ஓடியாடிக் கொண்டிருக்கும் அழகே தனிதான். அப்போதெல்லாம் அவள் கழுத்தைக்
கட்டிக்கொண்டு தொங்கவேண்டும் போலிருக்கும்.
முற்றத்தில் எல்லா காய்கறிகளுடன் பனம் கிழங்கு தேங்காய் மஞ்ச வாழைப்பழம்
நடுவில் சின்னதா ஒரு சாணிப்பிள்ளையார்.. நிறைநாழியில் நெல்லும் அரிசியும்
இரண்டு பக்கமும் கரும்பும் மஞ்சளும் இலையுடன்..
பெரிய ஆளுயர வெங்கல குத்துவிளக்கு அம்மா புளி வைத்து தைத்து பளபளனு
வச்சிருப்பாள். அப்பா அதில் சந்தணமும் குங்குமமும் வைத்து கதம்பம் பூச்சரத்தைத்
தொங்கவிடுவார்.
அப்பா புது வேட்டியைத் தூக்கி கட்டியிருப்பார். இடுப்பில் புதுத் துண்டை கட்டிக்
கொண்டு அவர் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி அடுப்பிலிருந்து
கங்கு எடுத்து ஒரு சிரட்டையில் வைத்து அதில் சாம்பிராணியைப்போட்டு
வீடெல்லாம் காட்டிக்கிட்டே போவார்.
இப்படி ஒவ்வொன்றாக அவன் ரெய்ச்சலுடன் சொல்லிக்கொண்டே வந்தான்.
‘டாடி.. இப்போவும் இதெல்லாம் உங்க ஊரு பொங்கலிலே இருக்கா ? ‘
ரிதிக் கேட்டான்.
‘டேய்ய் பொங்கல் எங்களுக்கு எப்போதும் பொங்கல்தாண்டா.. அதுதான்
நீயே எல்லாம் பார்க்க போறியே.. அப்போ உனக்கே தெரியும்.. டாடி
சொல்றதெல்லாம் புரியும்.. ‘ அவன் குரலில் சந்தோசத்தின் சங்கீதம்.
ஏர்போர்ட்டிலிருந்து ஒரு டாக்ஸியை வைத்துக்கொண்டான். டாக்ஸிக்காரன்
போய்வர இரண்டுக்கும் சேர்த்து ரேட் பேசியபோது முதலில் கோபம் வந்தது.
‘சார்… என்ன நீங்க ஊர் நாட்டுக்குப் புதுசுமாதிரி பேசறிங்க..நாங்க
உங்களை விட்டு விட்டு வரும்போது இந்த ஊர்லே எங்கே சார் சவாரிக் கிடைக்கும்.
சும்மாதானே திரும்பி வரணும்.. ‘ என்று அவன் நியாயத்தைச் சொன்னபோது
என்னவோ அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
கார் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் ஊரே கூடிவிட்டது. அம்மா ஓடிவந்து
இவன் தோள்களைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு அழுதாள். பின் சேலை
முந்தாணியில் தன் மூக்கைச் சீந்தி முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
உடனே பேரனையும் மருமகளையும் ஆசையுடன் பார்த்து சிரித்தாள்.
கண்ணாலேயே மருமகளிடன் நலம் விசாரித்தாள். ‘என் ராசா ‘ என்று பேரனை
அணைத்தாள்.
அம்மா அழுதவுடன் என்னவோ தெரியலை அவன் கண்களிலும் கண்ணீர் மடைத்
திறந்து .. அவன் கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொள்வதை
ரிதிக் அதிசயமாகப் பார்த்தான்.
ஊரில் உள்ள எல்லா சாதிச் சனங்களும் ‘சந்திரா,,.எப்போ வந்தப்பா ‘
என்று கேட்டுச் சென்றார்கள்.
விடிந்தது.. பொங்கல்.. அம்மா சமையல் அறையில் சின்னதா விளக்கேற்றி
சாஸ்திரத்துக்கு இரண்டு காய்கறிகள் வைத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அடிப்பிலேயே சில்வர் சட்டியில் பாயாசம் வைத்திருந்தாள். அப்பா குளித்துவிட்டு
வந்து இவன் எப்போதோ யாரிடமோ கொடுத்து விட்டிருந்த அவனுடைய பழையச்
சட்டையைப் போட்டுக்கொண்டு நெற்றியில் விபுதி பூசிக்கொண்டு தோட்டத்திற்கு
போய்விட்டார்.
செம்மண் கோடுகள் காணவில்லை. கோலங்களிருந்த முற்றத்தில் ஊர்ப் பஞ்சாயத்திலிருந்து
குடி தண்ணீருக்காகப் போட்டிருந்த அடி பைப்பு இருந்தது. அதில் தண்ணீர்ப் பிடிக்கா
ஊர்ப்பெண்கள் எல்லோரும் தங்கள் காலிக் குடங்களை வைத்திருந்தார்கள்.
தெருநாய் ஊளை விடறச் சத்தம் தான் கேட்டது. குலவைச் சத்தம் கேட்ட தெருவில்
இப்போது ஸ்பீக்கர் அலறிக்கொண்டிருந்தது..
‘மன்மத ராசா… ‘ பாட்டு ஒலித்தது..
பனங்கிழங்கு நல்லதா மார்க்கெட்டிலே கிடைச்சா வாங்கிட்டு வாங்க என்று
அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
மாட்டுப்பொங்கலுக்கு அவன் அம்மா தொழுவத்தில் பொங்கல் வைப்பாள்..
வாசலில் தீமூட்டி.. மாடுகள் கொம்புகளில் வர்ணம் பூசிச் சிமிட்டிக்கொண்டிருக்க
அவன் ஒரு உடைந்த தட்டில் குச்சியால் தட்டி ஓசை எழுப்ப மாடுகள் ஒவ்வொன்றாக
தீயைத்தாண்டி வெளியில் ஓடும்.. அவன் மாடுகளைப்பிடிக்க அவன் தோழர்கள்
வாசலில் நிற்பார்கள்:.. அதுவும் அவர்களின் சிவலைக் காளையை மட்டும் யாராலும்
பிடிக்கவே முடியாது.. அவன் தன் மகனிடம் இந்த இடத்தில்தாண்டா எங்கள்
மாடுகளைக் கட்டி வைத்திருப்போம் என்று காட்டிக்கொண்டிருந்தான்.
யாரும் வீடு வீடாக வந்து ‘பொங்கல் பொங்கிச்சா..வயிறு வீங்கிச்சா ‘னு கேட்கலை.
சிறுசுகளும் இளசுகளும் பொங்கல் ரிலிஸ் பார்க்க போய்விட்டார்கள்.
தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.
பொங்கல் ரீலிஸ் பார்க்க சான்ஸ் கிடைக்காதவர்கள் டி.வி, பெட்டியின் முன்னால்
உட்கார்ந்து பெரிய்ய பெர்ய்ய ஸ்டார்கள் எல்லாம் பொங்கல் வாழ்த்துச் சொல்வதை
வாய்ப்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் ஊரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தான். கார் ஆற்றுப்பாலத்தைக் கடக்கும்போது
இதுதான் நான் சொன்ன ரிவர் என்று சொல்ல நினைத்தான்..
சொல்ல முடியாமல் வார்த்தைகள் வறண்டு போனது.
ஆற்றில் தண்ணீருமில்லை.. மணலுமில்லை..
அவன் கண்களில் தண்ணீர் எட்டிப்பார்த்து எதையோ ஈராமாக்கியது..
அவன் தன் கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து கொண்டான்.
அவன் நஞ்சை நிலங்களில் நடப்பட்டிருந்த ராட்சதக் காற்றாடிகள்..
அவனுக்கு கை அசைத்து விடைக்கொடுத்தன..
………….ி…
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- கிறிஸ்மஸ் விடுமுறை
- நீ வருவாயா ?
- அன்புடன் இதயம் – 2
- மின்சாரமில்லா இரவு
- நாடகமேடை
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- பின்னல்
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- நீளப் போகும் பாதைகள்
- அவதூறுகள் தொடாத இடம்
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
- சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்
- எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்
- கடிதங்கள் – ஜனவரி 8,2004
- வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது
- தமிழ் ஒழிக!
- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு
- ஒளிரும் காரிருள்
- பொங்கலோ பொங்கல்
- நேற்று, இன்று, நாளை
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- மின் ஆளுகை (E-Governance)
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- விடியும்! -நாவல்- (30)
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- பொங்கலைத் தேடி…
- நீ ஏன்…
- புரியாத புதிது
- கவிதைகள்
- வானவில்
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- பரவச கவிதைகள் சில
- நிழல்கள்
- மூன்று
- இரவின் அழகு
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- வாருங்கள்