சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
‘இயற்கை பல பில்லியன் ஆண்டுகளாக சிக்கலான இந்த பிரபஞ்சத்தைப் படைக்க கடினமாக வேலை புரிந்து, பூகோளம் பிறந்து தவழ்ந்து வரும்போது எளிய இரசாயனக் கலவைகளை உண்டாக்கி இருக்கிறது! பிற்காலத்தில் பூதள அடித்தட்டுகள் (Earth ‘s Crusts) குளிர்ந்து கடினமானதும், எரிமலைப் புகை வாயுக்களும், நீராவியும் வெளியேறி மழை பொழிந்து ஏரிகளும், கடல்களும் உண்டாயின. ‘
ஜார்க் காமாவ் (George Gamov)
‘நாம் வாழுகின்ற பூமியின் மூலை முடுக்கு, குழிகளில் புதைந்து கிடக்கும் விந்தையான கற்கள், அதிசயப் பாறைகள், கண்ணைக் கவரும் பளிங்குப் படிவங்கள், ஒளிபெற்ற உலோகங்கள் புராதன காலம் முதல் இன்றுவரை மானிடரின் கலைத்துவச் சிந்தனையைக் கிளறி விட்டிருக்கின்றன. ‘
விக்டர் காரெல் [Victor Carell]
நமது கோளத்தின் அடித்தட்டு [Planets Crust] அளவு கடந்த செல்வக் களஞ்சியங்களை மறைத்து வைத்திருக்கிறது! அவற்றில் ஒப்பற்ற ஒளிவீசும் விலை மிகுந்த கற்களுக்கு ஈடு இணையாக எதனையும் ஒப்பிட முடியாது!
Artistry By Accident
முன்னுரை: பூகோளத்தின் கனற்குழம்பு கொதிக்கும் உட்கருவைக் காய்ந்துபோன போர்வையாய் மூடி யிருக்கும் பூதள அடித்தட்டுகள் [Earth ‘s Crusts] மானிடரை மயக்கும் பல்வேறு வியத்தகு ஒளிக்கற்களை உண்டாக்கும் புதையல் களஞ்சியமாக இருந்து வருகின்றன. அடித்தட்டின் மேலே மண்ணும், கற்களும் மேவி மரம், செடி கொடிகள் படர்ந்து வனாந்தரக் காடுகள் வளரும் போது, அடித்தட்டுக்குக் கீழே வெகு ஆழத்தில் ஒளிக்கற்கள், உலோகத் தாதுக்கள், நிலக்கரி, கச்சா ஆயில் போன்றவை ஒளிந்து கொண்டிருக்கின்றன. நவீன தொழிற்துறை யந்திர நாகரீகம் தற்போது மேற்கூறிய பூதளப் பண்டங்களைப் பயன்படுத்தியே முன்னேறி வருகிறது. ஆயினும் இப்போது அந்த தொழிற்துறை யந்திர யுகத்துக்கு பல எச்சரிக்கை அறிவிப்புச் சங்குகள் கூக்குரல் விடுத்துள்ளன! ஒரு காலத்தில் நிரம்பி வழிந்த நிலக்கரி, எரிஆயில் போன்ற பல எரிசக்தி கச்சா எருக்கள், தொழில் யந்திரப் பூதங்களின் யானைப் பசிக்குத் தீனி அளிக்க முடியாது, சிறிது சிறிதாய் வற்றிய வண்ணம் குறைந்து கொண்டு வருகின்றன! மேலும் நமது இயற்கை தாதுக் கூட்டுக் களஞ்சியங்கள் [Natural Mineral Wealths] எதிர்காலச் சந்ததிகளின் வாழ்வுக்குப் போதுமானவையாக இருக்குமா என்பதும் ஐயப்பாட்டில் உள்ளது! அந்தப் பற்றாக்குறைப் பிரச்சனையை ஓரளவுத் தீர்வு செய்ய உலக நாடுகள் ஒன்று கூடி குன்றிவரும் நீர்வள, நிலவளக் களஞ்சியங்களைச் சிக்கன முறையில் பயன்படுத்தும் ஒரு பங்கீட்டுத் திட்டத்தை வகுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது!
அண்டக் கோள்களின் உட்புற அமைப்புகள்
பூகோளத்தின் உட்புற அமைப்பை ஓரளவு ஊகிக்க முடியுமே தவிர அதன் பெளதிகக் கட்டுக் கோப்பைத் [Physical Structure] தெளிவாகக் கூற முடியாது. பூமியின் இராசயனக் கலவைகள், தாது உலோகங்களை அறிவதும், வெவ்வேறு அடுக்குத் தட்டுகள் எவ்விதம் மாறுபட்டுள்ளன என்று கண்டுபிடிப்பதும் அதைவிடக் கடினமானது! நமது பூமியின் உட்புறக் கட்டுக் கோப்பின் ஓரளவு விளக்கங்களை அதன் அடித்தட்டு, கடற்தட்டுகளில் முன்பு ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகளின் பதிவிலிருந்து [Seismic Waves Record] அறியலாம். ஆனால் பூமிக்குள் இருக்கும் மூலகங்கள், மூலக்கூறுகள் [Elements & Molecules], இரசாயனக் கலவைகள் [Chemical Compounds], போன்ற விபரங்களை வெளிப்புறக் கருவிகள் மூலம் அறிய முடியாது. பூதளப் பாறைகள் பெரும்பான்மையாக உட்கருவின் மேற்பட்ட கவசத் தட்டால் [Upper Mantle] படைக்கப் பட்டவை என்று உறுதியாகச் சொல்லலாம். ஆறு அல்லது ஒன்பது மைல் ஆழத்தில் பூதளப் பாறைகளின் மாதிரிகளைத் தோண்டி உளவு செய்ய முடியாமல், அவை என்ன விதமான இரசாயனக் கலவையாக இருக்கும் என்று யூகிப்பது மிகவும் கடினம்.
பரிதியைச் சுற்றிவரும் உட்புறக் கோள்களான வெள்ளி, பூமி, சந்திரன், செவ்வாய் ஆகிய நான்கு அண்டக் கோள்களும் ஆரத்தை ஒத்த அடர்த்தியைப் (திணிவுகள்: முறையே 5.25, 5.54, 5.52, 3.94) பெற்று, ஒரே மாதிரி உட்புற அமைப்பைக் கொண்டவை. புதன் சற்று வேறாகத் (ஆரம் சிறிது, அடர்த்தி பெரிது: 5.42) தோன்றினாலும், மற்ற உட்புறக் கோள்களைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த ஐந்து அண்டக் கோள்களும், புறக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்று குன்றிய அடர்த்தி யின்றி, மிகையான திணிவைக் [Higher Density] கொண்டவை. ஆனாலும் ஆழத்தில் பூமியைப் போன்ற இரசாயனக் கலவைகளை மற்ற நான்கும் கொண்டவையா என்பதை மெய்யாகக் கூறமுடியாது. பூமியின் உள்ளமைப்பையும், பாறைகளின் இரசாயனக் கலவைகளையும் ஒருவாறு விளக்கமாக ஆய்ந்தறிய விண்வெளியிலிருந்து பூமியில் விழும் விண்கற்கள் உதவுகின்றன. ஏறக்குறைய பூமியில் தோண்டி எடுக்கும் சுரங்கப் பாறைகள் போன்று விண்கற்களும் இரசாயனக் கலவைகளைக் கொண்டுள்ளன!
அண்டவெளியில் பாய்ந்து வரும் விண்கற்கள்
ஒரு காலத்தில் விண்கோள்களிலிருந்து சிதறிய, அல்லது விண்கோள்களின் ஈர்ப்பு ஆற்றலில் இழுத்துக் கொள்ளப் படாத அண்டவெளித் துண்டங்களான விண்கற்கள் [Meteorites] விண்வெளியில் சதா வீசப்பட்டு, பூமியின் வாயு மண்டத்தில் சிக்கி முழுமையாக எரிந்தும், எரிந்து போகாமலும் தப்பித் தளத்தை நோக்கி விழுகின்றன. பூதள விஞ்ஞானிகள் அண்டக் கோள்களின் உட்பொருளைச் சோதிப்பதற்கு, இயற்கை அடிக்கடி அளித்துக் கொண்டிருக்கும் மகத்தான விண்வெளி மாதிரிகள் அவை! ஏறக்குறைய அவற்றின் உள்ளமைப்பு, இரசாயனக் கலவைகள் பூமியில் தோண்டி எடுக்கும் சில பாறைகளை ஒத்திருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பூட்டுகிறது. பூமியைப் போல் சந்திரனில் வாயு மண்டலச் சூழ்வெளி இன்மையால், எண்ணற்ற விண்கற்கள் நிலவின் தளத்தில் அதிவேகத்தில் மோதி, பெருங்குழிகளை [Lunar Craters] ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் ஏற்பாட்டுள்ள மாபெரும் தளக்குழி [Barringer Crater in Arizona] 4100 அடி விட்டமும், 600 அடி ஆழமும் கொண்டது! அத்துணை ஆழமான குழியை உண்டாக்கிய விண்கல்லின் எடை 12,000-63,000 டன்னாக இருந்திருக்க வேண்டுமெனக் கணிக்கப்பட்டுள்ளது! வட கனடாவின் உங்காவா பகுதியில் உண்டான பெருங்குழி [Chubb Crater, Ungava, Canada] 3 மைல் விட்டமுள்ளது! ஆஃப்பிரிக்கா, கானாவில் இருக்கும் அஷந்தி பெருங்குழி [Ashanti, Ghana] 6 மைல் விட்டம் உள்ளது! உலகிலே எல்லாவற்றிலும் மிகப் பெரிய விண்கல் தாக்கிய, 90 மைல் விட்டமுள்ள விரிடிஃபோர்ட் பெருங்குழி [Vredefort Crater] தென்னாப்பிரிக்காவில் இருக்கிறது! அப்பெருங்குழி 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கப் பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது!
விண்கற்கள் அடிக்கடி பூமி நோக்கி விழும் விந்தைக் கண்காட்சி ஓர் அபாயகரமான அண்டவெளி நிகழ்ச்சி! இரவு நேரங்களில் விண்வெளியில் காணப்படும் ஒளிமய வீச்சுகள் விண்கற்கள் பொழிவைக் காட்டும். ஒவ்வொரு தினமும் குறைந்தது 20 பவுண்டு எடையுள்ள, 3 அல்லது 4 விண்கற்கள் பூதளம் நோக்கிப் பாய்கின்றன! நூறாண்டுக்கு ஒருமுறை 4000 டன் எடையுள்ள விண்கல் ஒன்று பூமியில் விழலாம் என்று கருதப்படுகிறது! பூமிக்குக் கவசக் குடையாய்க் கடவுள் அமைத்துள்ள வாயு மண்டல உராய்வில், வேகமாய்ப் பாயும் விண்கற்கள் சிதறி, முழுவதும் அல்லது ஓரளவாவது எரிந்து சாம்பலாய் போகலாம்! அந்த அழிவு நியதியில் தப்பி, பூமியில் விழுந்த பல விண்கற்கள் உலகில் கண்டெடுக்கப்பட்டுக் கண்காட்சி சாலைகளில் வைக்கப் பட்டுள்ளன. பூமியில் மூன்றில் ஒரு பாகம் கடல் சூழ்ந்திருப்பதாலும், சூழ்வெளி வாயு மண்டத்தில் உராய்வுக் கனலில் எரிந்து போவதாலும், தப்பித் தளத்தில் விழும் விண்கற்களின் எண்ணிக்கை சொற்பமானதே!
விண்கற்கள் எங்கிருந்து விழுகின்றன ?
விந்தையான அகில விண்கற்கள் எங்கிருந்து விழுகின்றன என்பதை உறுதியாகக் கூறமுடியாது! பல பில்லியன் ஆண்டுக்கு முன்பு அண்டக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விண்கற்கள் சிதறி யிருக்கலாம் என்று ஒரு கொள்கை பரவியுள்ளது! பிரபஞ்சக் கோள்கள் தோன்றிய போதே துண்டுகளாய் உண்டாகி, ஈர்ப்பாற்றலில் ஒரு கோளுடன் பிணைத்துக் கொள்ளாமல், பிழைத்த பாறைகளும், துணுக்குகளும் அவை என்பது இரண்டாவது கொள்கை. பரிதியைச் சுற்றிவரும் வால்மீன்கள் வெளியேற்றும் எச்சத் துணுக்குகள் அவை என்று சொல்லப்படுவது மூன்றாவது கொள்கை! பூமியில் விழுந்த பெரும்பான்மையான விண்கற்களில் இரும்பு, நிக்கல் உலோகக் கலவை [Alloy of Iron: (80-90)% & Nickel: (5-15)%] இருப்பது அறியப்பட்டது. சிறுபான்மை விண்கற்களில் உலோகமும் பாறைக் கற்களும் கலந்திருந்தன. 1894 ஆம் ஆண்டு கிரீன்லாந்தில் கண்டுபிக்கப்பட்ட 36.5 டன் எடையுள்ள விண்கல்லில் இரும்பும், நிக்கலும் இருப்பது அறியப்பட்டது! பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்ததாகக் கருதப்படும் அந்த விண்வெளிக் கல்லின் வயது, 4.5 பில்லியன் ஆண்டாக இருக்க வேண்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
பூதள விஞ்ஞானிகள் தளத்தில் விழுந்த விண்கற்களைச் சோதித்ததில் சில விந்தைகள் நிகழ்வதைக் கண்டார்கள். 1950 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் [Kentucky] விழுந்த விண்கல் துணுக்குகளை ஓர் உணவியல் சாறில் [Broth] வைத்து பாக்டாரியா வளர்ச்சி பெறுகின்றனவா என்று ஆய்வு செய்யப்பட்டது! சில நாட்களில் சாறில் முகில் வெண்மை படிந்து, இதுவரை அறியப்படாத ஒரு புதுவித பாக்டாரியா உண்டாவதைக் கண்டனர்! இதே போல் மற்ற விண்கற்களும் உயிரினம் வளர்ச்சியாக உதவும் இரசாயனக் கலவைகள் கொண்டிருப்பதாக அறியப்பட்டது! அதாவது விண்வெளியில் உலவும் வேறு அண்டக் கோள்களிலும் உயிரின வளர்ச்சிக்குரிய இரசாயனம் இருக்கலாம் என்பதற்கு அந்த விண்கற்கள் ஒருவிதச் சான்றுகள் அளித்தன.
பாறைகள், சுரங்கக்கனிகள், தாது உலோகங்கள்
கற்பாறைகள் பூமிக்கு மேலும், தரைக்குக் கீழும் இருப்பவை. சுரங்கக்கனிகள் [Minerals] என்பவை பூமிக்குள்ளே கிடக்கும் நிலக்கரி, கச்சா எரிஆயில் கட்டிகள், உலோகக் கலவை சேர்ந்துள்ள மண்கட்டிகள். அவற்றைத் தாதுக்கனிகள் என்றும் அழைக்கலாம். தாது உலோக மண்கலவைகளும் [Ores] ஒருவித சுரங்கக் கனிகளே. ஆனால் இவற்றில் ஏதாவது ஓரிரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உலோகங்கள் இருக்கலாம். எல்லாவகைச் சுரங்கக் கனிவுகளிலும் உலோகங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரசாயனப் பண்டம் [Chemical Substance] இருக்கலாம். மினரல்ஸ் என்று சொல்லப்படும் சுரங்கக்கனிகளில் இரசாயனக் கலவைகள் [Chemical Compounds] இருக்கலாம். சில சமயத்தில் மினரல், ஓர்ஸ் [Minerals & Ores] ஆகிய இரண்டுமே பூமியில் வெட்டி எடுக்கும் இரசாயனக் கலவைப் பாறைகளைக் குறிக்கின்றன. ஆனால் உலோகம் தனித்தெடுக்கும் தாதுப் பாறையை, ‘ஓர் ‘ [Ore] என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.
பூகோள உட்கருவில் திரவமாக உலவும் பாறைக் குழம்பு [Magma] திணிவு [Density] குன்றியதால் மிதக்கிறது. மேலே ஏறும் பாறைக் குழம்பு மெதுவாக வெப்பம் தணிந்து, குளிர்ந்து திடப்பாறை ஆகிறது. அவ்விதம் கனற்குழம்பு கடினப் பாறையாக மாற்ற மடைய பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கின்றன! சில சமயங்களில் உட்கருவின் அழுத்தம் மிகையாகி, பாறை இடுக்கைப் பிளந்து கொண்டு, கனற்குழம்பு பீறிட்டு வெளியேறலாம். அவ்வாறு பீறிட்டுக் கிளம்பும் கனற்குழம்பு, எரிமலைக் குழம்பாக [Lava] வெப்பமுடனும், புகை மூட்ட முடனும் வெளியேறிப் பூமியின் சூழ்வெளியை நாசம் செய்கிறது! கண்கவரும் கற்கள், படிகங்கள், பளிங்குகள் [Crystals, Gems, Precious Stones] யாவும் பூதள உட்கருவின் கனற்குழம்பு, வெப்பம் தணிந்து கடின பாறைகளாய்த் திடப்படும் போது உருவாகின்றன! அக்கற்கள் பதிக்கப்பட்ட நுண்ணிய சில்கள் கொண்ட பஸால்ட் பாறை ‘புரோஃபிரி ‘ (Prophyry) என்று அழைக்கப் படுகிறது. கண்கவரும் அவ்வழகிய பாறைகளை பண்டைக்கால எகிப்தியர் தமது கட்டிடக் கலைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் என்று அறியப்படுகிறது.
வைரக் கற்கள் கிடைக்கும் உலக நாடுகள்:
விலைமிக்க ஒளிக்கற்களில் ஏதேனும் ஒன்றுகூட கிடைக்காத நாடு உலகில் இல்லை என்றே சொல்லலாம். அபூர்வக் கற்களுக்குப் பட்டை தீட்டி ஒளியூட்டும் சக்தி அளித்து, நகை ஆபரணங்கள் படைக்கும் தொழிற் கூடங்கள், உலகில் தற்போது பெருகிய வண்ணமாய் இருக்கின்றன. சில நாடுகளில் சிலவித சிறப்புக் கற்கள் ஏராளமாய்க் கிடைக்கும். உலகில் பேரளவு வைரங்களைத் தோண்டி எடுத்து விற்றுவரும் நாடு தென்னாப்பிரிக்கா. அதே சமயத்தில் கனடா, இந்தியா, பிரேஸில், சைபீரியா, டான்ஸனீயா போன்ற நாடுகளிலும் வைரங்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன. வைரத்தைப் போல் மதிப்புள்ள எமரால்டு [Emerald] தென்னமெரிக்காவில் பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளிலும், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா சுரங்கங்களிலும் கிடைக்கின்றது. அதுபோல் ரூபீஸ் [Rubies] மியான்மா (பர்மா), ஸ்ரீலங்காவிலும், சாஃபையர் [Sapphire] ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளிலும், அகுவமாரைன், ஸிர்கான் [Aquamarine, Zircon] போன்ற பளிங்குத் தாதுக் கற்களும் பல நாடுகளில் தோண்டி எடுக்கப்படுகின்றன.
தகவல்:
1. The Land Surprises, By: Victor Carell, Reader ‘s Digest The World Around Us [1972]
2. Earth ‘s Great Natural Tresures, Reader ‘s Digest The World Around Us [1972]
3. Encyclopedia of the Earth, Internal Composition By: Hutchinson [1985]
4. Meteoroids, Meteors and Meteorites [www.lsus.edu/nonprofit/sbas/meteors.htm]
5. The New Book of Knowledge [1984]
6. Britannia Concise Encyclopedia [2003]
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan May 18, 2005]
- தெருவொன்றின் குறு நேர வாழ்வு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- கீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)
- கடிதம்
- ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- தமிழ் வாழ்க!
- கவிதைகளின் திசைக்காட்டி
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3
- பூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்
- பெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)
- ‘தறு ‘
- பாடங்கள்
- எறும்புக்கடி.
- ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….
- மாநிலத்திலும் கூட்டாட்சி!
- ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி
- உறவின் முறிவு
- புண்ணும் மீன்களும்
- வாமனர்கள்
- உதவி
- ஈஸுக்கா ரூமி