சி. ஜெயபாரதன், கனடா
புரட்சிப் பெண்ணவள்! போர்த் தளபதி அவள்!
பிரெஞ்ச் விடுதலைக்குப் போரிட் டவள்!
சீரிய குறிக்கோள், தெய்வீக வாக்கு,
நேர்மை, தளரா முயற்சி அவள் போக்கு!
போராடி மதப்பழியில் தீயெரித் தழிந்தாள்!
வீரமங்கை புனித மாதாய் உயிர்த் தெழுந்தாள்!
கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!
****
இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.
ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்கி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். ஆணாதிக்க உலகம் 19 வயது (மே மாதம் 30, 1431) அபலைப் பெண்ணை உயிரோடு எரித்துப் பழிவாங்கியது!
ஏழாம் காட்சி (பாகம்-7)
[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]
காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)
இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.
நேரம்: பகல் வேளை
நாடகத்தில் பங்கு கொள்வோர்:
1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
2. சகோதரர் மார்டின் லாட்வெனு
3. ஜோன் ஆஃப் ஆர்க்
5. பிரெஞ்ச் போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்
6. வார்விக் கோமகன்
7. ஆங்கிலப் பாதிரி
அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப்படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது. அடுத்து பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ் குரலும் காதில் படுகிறது. அவர்கள் உரையாடல் நடக்கையில், படைவீரன் ஒருவன் உள்ளே நுழைகிறான். பிறகு ஆங்கிலப் பாதிரி, வழக்கறிஞர், வார்விக் கோமகன் அனைவரும் வருகிறார்கள்.
புதிய நபர்: நண்பர்களே! நான் கோமாளி அல்லன்! நாடகமாடியும் அல்லன்! நீதி மன்றத்தில் வேலை செய்யும் ஓர் ஊழியன் நான்! வந்த காரணத்தைச் சொல்கிறேன். முக்கிய அறிவிப்பைப் பறைசாட்ட நான் வந்திருக்கிறேன். உம்முடன் விளையாட வரவில்லை! கவனமாய்க் கேளுங்கள். [பையிலிருந்து ஒரு தாளை எடுத்து வாசிக்கத் துவங்கிறான்] ஆர்லின்ஸ் நகரப் பாதிரியார் புதிய நீதி மன்றத்தைக் கூட்டுகிறார்! ஏனென்று கேட்கிறீர்களா ? பழைய வழக்கை மீண்டும் திறக்கப் போகிறார்! ஜோன் ஆஃப் ஆர்க் எனப்படும் பணி மங்கை வழக்கை விவாதிக்க அந்த நீதி மன்றம் ஏற்பாடாகி வருகிறது! ஜோனுக்கு ஒழுங்கான தீர்ப்பு முதலில் வழங்கப் படவில்லை என்னும் புகார் கிளம்பி யிருக்கிறது! கைப்பணமும், கள்ளப் பணமும் வாங்கிக் கொண்டு நீதிபதிகளும், சாட்சிக் கூலிகளும் கூடிச் சதி செய்து ஜோனைப் பொய்க் குற்றம் சாட்டித் தீக்கிரை செய்ததாகத் தெரிகிறது! ஜோன் புனித மங்கை என்று மக்கள் ஆராதனை செய்து வருகிறார்!
ஜோன்: அடடா! ஆர்லின்ஸ் பொதுமக்கள் என்னை இன்னும் நினைவில் வத்திருக்கிறாரா ? ஆச்சரியமாக உள்ளதே! இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு என் வழக்கை மீண்டும் திறந்து, சாம்பலாய்ப் போன என்னை உயிர்ப்பிக்கப் போகிறாரா ? அல்லது பழிசுமத்தித் தண்டித்து, என்னைத் தீயில் தள்ளியவரைக் குற்றவாளிகள் ஆக்கித் தீயில் எரிக்கப் போகிறாரா ? அவர்கள் எவரும் உயிருடன் இருப்பதாகத் தெரியவில்லை. நான் என்றைக்கும் புனிதப் பெண்ணென்று பறைசாற்றிக் கொண்டதில்லை! பட்டிக் காட்டில் பிறந்தவள் நான்! படிக்கத் தெரியாது எனக்கு! எழுதத் தெரியாது எனக்கு! வேண்டப் படாதவளாய் வீட்டை விட்டுதுத் துறத்தப் பட்டவள் நான்! என்னைத் தண்ணீரில் மூழ்க்கிக் கொல்லும்படித் தந்தை என் தமையனுக்கு உத்தர விட்டிருந்தார்! நான் புழுதிக் காட்டில் திரிந்தவள்! புனித அணங்கு காதிரைன் போல நான், புண்ணியம் செய்தவளில்லை!
புதிய நபர்: நீ விரும்பா விட்டாலும், உன்னைப் புனித மாதாகப் பிரெஞ்ச் மக்கள் போற்றுவதை எவரும் தடுக்க முடியாது. உன்னைப் பற்றி உனக்கே தெரியாது! நீ புரட்சி மாது! பிரெஞ்ச் நாட்டின் முதல் புரட்சி நங்கை! புதுமைப் பெண்! நீ பாதம் வைத்து விடுதலை செய்த தளங்களில் எல்லாம், உனது சிலை கம்பீரமாக எழப் போகிறது! உன்முக ஒளியைத் தெரிசிக்க மாந்தர் புது விழிகளைப் பெற்றிருக்கிறார்! ஜோன்! நீ புனித அணங்கு ஜோன்! நீ சாதாரணப் பெண்ணில்லை! தெய்வ மகள், தேவதை!
ஜோன்: [சிரிக்கிறாள்] யார் ? நானா ? புனித அணங்கா நான் ? நல்ல வேடிக்கை! [சிரிக்கிறாள்]
புதிய நபர்: ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 30 ஆம் தேதி புனித மாது ஜோன் மரண தினம். அன்றைய நாளில் பிரெஞ்ச் தேவாலயங்களில் புனித மங்கை ஜோனுக்குத் திருப்பணித் தொழுகை நடக்கிறது! மேலும் ஜோன் பெயரில் புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட விருக்கிறது! அந்த தேவாலயத்தில் நான் மண்டியிட்டுப் புனித அணங்கைத் தொழுதிடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும்.
ஜோன்: புனித அணங்கு காதிரைன் எனக்களித்த பொறுப்புக்கு, முதலில் நான் அவரை மண்டியிட்டுத் தொழ வேண்டும். [மண்டியிட்டுத் தலை தணித்து வணங்குகிறாள்]
புதிய நபர்: [தாளை மறுமுறைப் பார்த்து] சொல்ல மறந்து விட்டேன், அடுத்து முக்கியமான நாள்: 1920 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள், ரோமாபுரி பாஸிலிகா வாட்டிகனில் வீற்றிருக்கும் போப்பாண்டவர், ஜோன் பணிமங்கையைப் புனித அணங்காய் அங்கீகரித்து உலக காத்திலிக் மதத்தாருக்கு அறிவித்த நாள்!
துனாய்ஸ்: [ஜோனைக் கைகளில் தூக்கி] ஜோன் புனித அணங்கே! உன்னைச் சுட்டெரிக்க அரை மணி நேரம்! உத்தமி என்று உண்மையைக் கண்டுபிடிக்க நானூறு ஆண்டுகள் எடுத்துள்ளன! என்ன ஆச்சரியம் ?
ஆங்கிலப் பாதிரி: நீ என்ன நினைக்கிறாய் ? ஜோன் பணிமங்கைக்கு எங்கள் இங்கிலாந்து வின்செஸ்டர் தேவாலயத்தில் ஒரு சிலை வைப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கிறேன்.
புதுநபர்: ஆங்கிலப் பாதிரியாரே! என்னை மன்னிக்க வேண்டும். அந்த வின்செஸ்டர் ஆலயம் தற்போது ஆங்கிலிகன் துரோகிகள் வசமிருப்பதால், என்னால் எந்த விபரமும் தர முடியாது.
[அப்போது பின்திரையில் ஜோன் குதிரை மீது வாளேந்திப் பாய்ந்து செல்லும் படமும் அவளைப் பின்பற்றிச் செல்லும் படை வீரரின் ஆரவாரமும் காட்டப் படுகின்றன.]
ஜோன்: [படத்தைப் பார்ந்து பூரிப்படைகிறாள். படத்தில் அவள் கையில் உள்ள வாள் உடைந்து காணப் படுகிறது. சற்று சினத்துடன்] யார் எனது போர்வாளை உடைத்தது ? அது பிரான்ஸின் விடுதலை வாள்! அதை உடைப்பது அத்துணை எளிதன்று. அந்த வாளை நான் போர்க்களத்தில் ஏந்திச் சென்றாலும், யாரையும் நான் அதனால் காயப் படுத்திய தில்லை! உடையாத அந்த விடுதலை வாளை என்னாலயத்தில் வைத்து விடுவீரா ? என்னுடலை ஆடவர் எரித்து அழித்தாலும், என் ஆத்மா கடைசியில் கடவுளைக் கண்டது.
கெளஸான் பாதிரி: [மண்டியிட்டு] புனித அணங்கே! உன்னை என் தேவ மாதாய் ஏற்று வணங்குகிறேன்! வயற் புறத்தே வேலை செய்யும் வாலிப மங்கையர் உன்னைப் போற்றுகிறார்! அவரின் விழிநோக்கை உயர்த்தி விட்ட வித்தகி நீ! அவரது தாழ்ந்த நிலை, சொர்க்க புரியை அடைவதற்குத் தடைசெய்யா தென்னும் தத்துவத்திற்கு வித்திட்ட தெய்வப் புதல்வி நீ!
துனாய்ஸ்: [மண்டியிட்டு] பிரான்ஸின் விடுதலை அரசி நீ! உனக்கு என் பணிவான வணக்கம். உன்னை என் படை வீரர் அனைவரும் புனித மங்கை என்று தொழுகிறார்! வெற்றிக் கேடயத்தை அவரது கையில் மீண்டும் அளித்து நீ, அவரது பாதுகாப்புத் தேவதையாய்க் காத்து வந்திருக்கிறாய்!
ஆர்சிபிஷப்: [மண்டியிட்டு] தெய்வப் பெண்ணே! உன்னை ஆலய அணங்குகள் அனைவரும் தம்முள் ஒருவராய் மதிக்கிறார்! புழுதியில் தோன்றிய வைரக்கல் நீ! உந்தன் ஒளி ஒருபோதும் மங்காது! உனக்கு நானொரு சீடன்! ஏற்றுக் கொள்வாயா என்னை ?
ஆங்கிலப் பாதிரி: [முழங்காலிட்டு] தேவ மகளே! உனது பாபங்கள் எல்லாம் பனியாக உருகி, பணித் தீபங்களாய் மாறி ஒளி வீசுகின்றன. கல்லறையில் தூங்கப் போகும், இந்தக் கிழவனை மன்னித்து, உனது பிரதான சீடரில் ஒருவனாய் ஏற்றுக் கொள்! நரகத்தில் உழலும் நான் உனது பெயரை உச்சரித்து, சொர்க்க புரிக்கு வரும் ஒருநாளை எதிர்நோக்கி யுள்ளேன்!
வழக்காளி: [மண்டியிட்டு] புண்ணிய மாதே! பொய் கூறிய சாட்சிகளும், பொன் முடிப்பு வாங்கித் தண்டனை யிட்ட நீதிபதிகளும், தவறை உணர்ந்து, உன்னைப் போற்ற துவங்கி விட்டார்! உனது உறுதியான உள்ளத்துக்கும், அழுத்தமான சொல்லுக்கும் எந்தன் தாழ்ந்த வணக்கம்!
சார்லஸ் மன்னன்: [ஜோன் முன்பாக மண்டி யிட்டு] மண் புழுவாய்க் கிடந்தவனை மீண்டும் பிரெஞ்ச் மன்னனாய் முடி சூட்டிய புனித மங்கையே, நீ ஊட்டிய நெஞ்சுறுதி கனலாய் இன்னும் எரிகிறது! உன்னை நானும் மறக்க முடியாது. பிரெஞ்ச் மக்களும் மறக்க முடியாது.
ஜோன்: [வெட்கமுடன்] நீங்கள் அத்தனை பேரும் என்னைச் சுற்றி முழங்காலிட்டு வணங்குவதைக் கண்டு என் நெஞ்சம் சுருங்கிப் போகிறது! நான் என்றும் நானேதான்! ஜோன் என்றும் பணி மங்கைதான்! எனக்குப் புனித மங்கை என்று மகுடம் சூட்டினாலும், சூனியக்காரி என்று நீங்கள் அளித்த பட்டம்தான், பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் பாய்ந்துள்ளது! புனித மாது என்பதற்கு நான் எந்த அற்புதமும் செய்திலேன்! தயவு செய்து என்னைப் புனித மாதென்று போற்றிப் புகழ வேண்டாம்! நான் என்றென்றும் பழைய பணி மங்கையாகவே உங்களுடன் உலவி வர விரும்புகிறேன்.
[மண்டியிட்ட அனைவரும் ஒன்றாக]
எல்லாரும்: ஜோன்! ஜோன்! ஜோன்! பணிமங்கை என்றோ தீக்கிரை ஆகிவிட்டாள்! புதிதாகத் தோன்றிய நீ புனித அணங்கு! ஜோன்! புண்ணிய மங்கை நீ! தேவ மகள் நீ! கடவுளின் புதல்வி நீ!
(முற்றும்)
****
தகவல்:
1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)
2. Saint Joan of Arc By: Mark Twain
3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain
4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).
5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)
6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)
7. The New Book of Knowledge By: Grolier International (1984)
8. Britannica Concise Encyclopedia (2003)
9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)
10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)
11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan December, 5 2005]
- நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- 32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-1
- பாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு
- நான் கண்ட சீஷெல்ஸ் – 2
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX
- த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்
- தில்லை வாழ் அந்தணர்களுக்கு
- ‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்
- பண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்
- விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்
- சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- மைனாரிட்டி !
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )