புதுயுகம் பிறக்கிறது

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

மு. தளையசிங்கம்


கெளாி இன்றும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திாிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிறாள். பக்கத்தில் சுற்றிப் போர்த்தி, அந்தச் சிறு உருவம் கிடக்கிறது. அது உருவமா ? உள்ளே எலும்பென்பது இருக்குமா ? அந்தக் கண்கள் ? அந்த வாய் ? உயிர் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு ?

கனகரத்தினம் கல்லாய் நிற்கிறான். கெளாி இனி கண்ணனைத் திறக்கும் போது அவன் என்னத்தைச் சொல்வது ? எப்படிச் சொல்வது ?

கனகரத்தினத்தின் நெஞ்சு கனக்கிறது. நேற்று, முந்தநாள், ஏன் இரண்டு மாதங்களுக்கு முன் கெளாி அந்தக் கதையை ஆரம்பித்தது முதல் அவன் என்னென்னவெல்லாம் சொன்னான்! எப்படியலெ¢லாம் சொன்னான்!

கனகரத்தினத்தால் தாங்கமுடியவில்லை. அடக்க முடியாத வேதனையோடு நினைவுகள் சேர்ந்து நெஞ்சை அமுக்குகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு….

‘அரோகரா ‘ என்று கேலியாகக் கத்திக் கொண்டு சாமி அறைக்குள் எட்டிப் பார்த்தான் கனகரத்தினம். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

ஊதுபத்தியைப் பற்றவைத்துச் சாமிபடத்துக்கு முன்னால் கும்பிட்டுக் கொண்டு நின்ற கெளாி ஒருகணம் திரும்பினாள். முகத்தில், ஒரு புன்னகை நின்றாலும் அடியிலிருந்த சினம் தொியாமலில்லை. கனகரத்தினத்தின் கையிலிருந்து அறைக்குள் நுழைந்த சிகரெட் புகையைப் பார்த்த பின், அந்த மெல்லிய புன்னகையும் மறைந்துவிட்டது. திரும்பவும் தலையைத் திருப்பிக் கொண்டு கும்பிடத் தொடங்கினாள்.

சிலநேரம் சென்று வெளியே வந்த கெளாி யின் முகத்தில் பழைய சினம் இருக்கவில்லை. ‘உங்களுக்கு எந்த நேரமும் பகிடி ‘ என்று சொல்லிச் சிாித்துக் கொண்டே வந்தாள். முகத்தில் நிம்மதி நிறைந்த சாந்தி நின்றது. நெற்றியில் விபூதிப் பொட்டு ஒளிவிட்டது. கூடவே தாய்மையின் பூாிப்பு.

கெளாியின் முகத்தில் அப்படி ஒரு களை சதா ஒளியிடத்தான் செய்யும். ஆனால், முக்கியமாக அவள் சாமி அறையிலிருந்து வெளிவரும்போது அந்தக் களையின் ஒளிவிட்டங்களைக் கூடக் கண்டு விடலாம் என்ற ஒரு பிரமை ஏற்படும். கனகரத்தினத்திற்கு அந்தத் தோற்றம், கெளாியின் அம்மாவை நினைவூட்டும். அவன் சின்னவனாய் இருக்கும்போதே இறந்து போன அவனின் தாயாரை நினைவூட்டும். அம்மாவின் அம்மாவை, என்று அதற்குப் பின் ஒரு தொடர் நினைவுகள் ஓடும். எல்லோர் முகங்களிலும் அதேவித அமைதி, தெய்வீகக்களை, ஒளிவிடும் விபூதிப் பூச்சு.

அதுதான் கிழக்குப் பண்பாடு என்று ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சொல்லும். சாமி அறைக்குள் போய்நின்று அந்தத் தொடர்பேற்படுத்திக் கொள்கிறாளா ? ஐக்கியப் பட்டு விடுகிறாளா ? அச்சாியத்தோடு கனகரத்தினம் தன்னையே அப்படிக் கேட்டுக் கொள்வான். அந்தக் கேள்விகளுக்கு அவனால் விடை கண்டு கொள்ள முடியாவிட்டாலும், கெளாியின் முகத்தில் நிற்கும் அந்த அமைதி நிறைந்த களைக்கு மனதுக்குள் அவனால் மாியாதை கொடுக்காமல் இருக்க முடியாது. அவளின் பழக்க வழக்கங்கள், பழைய பரம்பரை பழக்க வழக்கங்களாய் இருக்கலாம். ஆனால், அவற்றில் உள்ள அமைதியும், பொறுமையும் போற்றப் படக்கூடியவைதான். அவனது புரட்சி எண்ணங்களில், அவன் காணூம் புதுயுகப் பெண்களில், அவற்றின் வெறுமையினால் ஏற்படும் குறையை அப்போதுதான் அவனால் உணரமுடியும். ஆனால் அதற்காக கெளாி யில் அதிக அன்பைக் காட்டுவதைத் தவிர தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள அவன் விரும்புவதில்லை. கட்சியும், கொள்கையும் அறிவை அடிப்படையாகக் கொண்டவையே ஒழிய, உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவையல்ல என்ற வழக்கமான அவனின் சுலோகத்தை அதற்குக் காரணமாகவும் காட்டிவிடுவான்.

‘இண்டைக்கென்ன டைம்டேபிளில் ஒரு மாற்றம் ? பகல் பத்துமணிக்கும் ஒரு கும்பிடு. ஞாயிற்றுக்கிழமை எண்டும் பாராமல் ? ‘ என்ற கெளாி யைப் பார்த்து அவன் கேட்ட போது பகிடியோடு ஓர் இனந்தொியாத வாஞ்சையும் சேர்ந்து நின்றது.

‘உங்களுக்கென்ன ? ஊர்சுற்றியிற்று வருவேங்க. விடிஞ்சாப் பொழுதுபட்டா கட்சி, கட்சியெண்டு பீத்துவேங்க. வேறென்ன தொியும் ? ‘

‘அடேயப்பா புதிசா ஏதோ தொிஞ்சு வைச்சிருக்கிற போலிருக்கே ‘ என்று கனகரத்தினம் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணலாக்கிச் சிாித்தான்.

‘போங்களப்பா, உங்களுக்கு எப்பவாவது நல்லதாக ஏதாவது கதைக்க முடிகிறதா ? ‘ என்றாள் கெளாி.

கனகரத்தினத்திற்குச் சாடையாகச் சுட்டது. எப்போதாவது அவன் நல்லதாக இல்லாத, ஏதாவதைப் பற்றிக் கதைத்ததுண்டா ? நிரந்தரப் புரட்சி, தொழிலாளர் எழுச்சி, சோஸலிஸ அமைப்பு, முதலாளி வர்க்க ஒழிப்பு என்பவற்றைவிட நல்லவை வேறு இருக்கிறதா ?

‘சாி நீ நல்லதாக ஏதாவது கதை பாப்பம் ? ‘ என்றான் கெளாியைப் பார்த்து வேண்டுமென்றே.

‘சுசீலா இருக்கே ? ‘ என்று ஆரம்பித்தாள் கெளாி.

ஆனால் கனகரத்தினம் விடவில்லை. ‘எந்தச் சுசீலா ? ‘ என்று இடைமறித்தான்.

‘நம்மோடு வாசிற்றியில் இருந்துதே அது ‘ என்றாள் அவள்.

‘அதுக்குப் பிறந்த முதல் குழந்தை செத்துப் பிறந்திருக்காம். முகம், கண், மூக்கெல்லாம் அசிங்கமாக இருந்திச்சாம். என்னவோ வியாதியெண்டு இப்ப கோமளா சொல்லிற்றுப் போகுது ‘.

‘அவளுக்கு வீ.டி.யாக்கும் ‘ என்றான் கனகரத்தினம்.

‘யாருக்கு ? ‘

‘பிள்ளையைப் பெத்த சுசீலாவுக்கோ, கிசீலாவுக்கோ ? ‘

‘சும்மா பைத்தியம் போல் கதைக்காதீங்க ‘ என்று பதை பதைத்துச் சொன்னாள் கெளாி. ‘அவள் எவ்வளவோ நல்லவள். அவள் ஒரு றிலிஷியஸ் கேள் ‘

‘அப்ப அவளின்ர புருருனுக்காக்கும் ‘ என்றான் கனகரத்தினம் எந்தளவிலும் தன் காரணம் பிழைக் காததுபோல்.

கெளாிக்கு, கனகரத்தினம் இன்னும் கூடுதலான ஒரு பாவத்தைச் செய்துவிட்டது போல் பட்டிருக்க வேண்டும். அவளின் பதைபதைப்பு இன்னும் கூடிற்று. ‘மற்றவையெல்லாம் தன்னைப்போல் எண்ட எண்ணமாக்கும். ஏனிப்பிடி வீணாப் பாவத்தைத் தேடிக் கொள்றேங்க ? அது ஒரு சாமிப் போக்கு, சுசீலாவை விட நல்லம். என்னுடைய டாயவஉாஅயவநள பற்றி எனக்குத் தொியாதா ? மூண்டு வருசத்துக்கு முந்தியிருந்த உங்களுக்கென்ன தொியும் ? நீங்கதான் முந்தி அங்கையும், இஞ்சையும் திாிஞ்சீங்களெண்டு இப்பேயும் கதைக்கினம். ‘

‘சாி அதுக்கு இப்பவேன் சண்டே ஸ்பெசல் கும்பிடு போட்டனி ? சுசீலாவின்ர குழந்தை உயிர்த்தெழ வேண்டுமெண்டா ? ‘ கனகரத்தினம் கதையை மாற்றி னான்.

‘இல்லை, உங்கட பிள்ளைதான் சுகமாகப் பிறக்க வேண்டுமெண்டு. மூன்று வருசத்திற்குப் பின் அருமை பெருமையாக கிடைச்சிருக்கெண்டு அக்கறை இருக்கா உங்களுக்கு ? ‘

கனகரத்தினம் ஓவென்று சிாித்தான். சிாித்துக் கொண்டே சொன்னான். ‘அதுக்குத்தான் நீ இப்ப ஸ்பெஷல் கும்பிடு போட்டாய் ? பைத்தியம். நீ எாிக்கிற கற்பூரமும், ஊதுபத்தியும் நம் நாட்டுப் பணத்தை ஷப்பானுக்கும், இந்தியாவுக்கும் அனுப்புமேயொழிய கடவுளட்ட ஒண்டும் சொல்லாது. இந்த விசயங் களுக்கெல்லாம் கடவுளிட்டக் கேட்கிறதும், காசி, கதிர்காமம் போறதுவும் இந்தக் காலத்திலை செய்யிறதில்லை. அது அந்தக் காலம். இது அணூக்குண்டுக் காலம் கெளாி, இது அணூக் குண்டுக்காலம், விஞ்ஞானம் எதை யும் செய்யும். கடவுளிட்டக் கேட் கிறத விட்டிற்று டொக்டரிட்டப் போகோணூம் ‘.

‘சாி, சாி உங்கட லெக்ஸர் போதும் ‘, என்று சொல்லிக் கொண்டே, அவன் அதை முடிக்கமுன்பே, கெளாி தன்பாட்டில் குசினிப்பக்கம் போய்விட்டாள். கனகரத்தினம் தொடர்ந்து சிாித்தான். அது ஒரு வெற்றிச் சிாிப்பு.

பரீட்சார்த்தமாக வெடிக்கப்பட்ட அதிக மெகட்டன் அணூக்குண்டுகள் அவனைப் பொறுத்த வரையில் அதே செய்தியைத்தான் கொடுத்தன. வழி எப்படியாய் இருப்பினும் தன் நோக்கம் தலை சிறந்தது என்பது அவனது நம்பிக்கை. அதைக் கெளாியும் உள்ளுக்குள் உணர்ந்திருந்தாள் என்பது அவனுக்குத் தொியும். ஆனால் கெளாி வழியைப் பற்றிக் கவலைப்பட்டாள். கனகரத்தினத்துக்கு அந்தக் கவலை இருக்கவில்லை. மாறாக அது ஒரு பழைய பரம்பரைப் பிற்போக்குச் சுபாவம் என்று சிாித்தான். அடுத்த இரண்டு மாதங்களாக கெளாி கவலைப்படும் போதெல்லாம் கனகரத்தினம் அப்படித்தான் சிாித்தான். அப்படித்தான் பகிடி பண்ணினான். ஆனால், அடுத்த இரண்டு மாதம் வரைக்குந்தான்…. அதற்குப் பின் ?

கெளாி கண்திறந்து ஐந்தாறு நிமிடங்களாகின்றன. கஸ்டப்பட்டு பிரசவித்தபின் கெளாி இப்போதுதான் கண் திறந்திருக்கிறாள். நிதானமாக அறிவு வந்தபின் அங்குமிங்கும் அவள் கண்கள் தேடுகின்றன.

கனகரத்தினத்தின் முகத்தில் அப்படி எழுதி ஒட்டி விட்டிருக்கிறதா ?

‘பிள்ளை எங்கே ? ‘ என்ற பயத்தோடு அவள் கேட்கிறாள்.

பிள்ளை கிடக்கும் பக்கத்தைக் கனகரத்தினம் காட்டுகிறான். போர்வையை அகற்றிக் காட்டும்படி அவள் வேண்டுகிறாள். பேசாமல் நிற்கிறான் கனகரத்தினம். அவளால் பொறுக்க முடியவில்லை. கஸ்டத்தோடு தானே முயல்கிறாள். அதைப் பொறுக்க முடியாமல் கனகரத்தினமும் உதவுகிறான். போர்வை அகற்றப்பட்டு உருவம் தொிகிறது. அடுத்தகணம் கெளாி கீச்சிட்டுக் கொண்டே முகத்தைத் திருப்பி விடுகிறாள்.

கனகரத்தினத்தக்கு எப்படித் தேற்றுவதென்று தொியவில்லை. ஐந்து நிமிடங்களுக்குப் பின் கனகரத்தினம் பக்கம் அவள் பார்வை திரும்புகிறது. அதில் நிற்கும் அந்தக் கேள்வி ?

‘அப்போ உங்களுக்கும் வீ.டி தானா ? உங்களுக்கும் அதுதானா ? ‘

‘இல்லை, கெளாி, இல்லை. இது என்ன வியாதியெண்டு தொியவில்லையாம். அணூக்குண்டுகளின் றேடியோ அச்டிவ் துசுகளினால் வந்திருக்கலாம் எண்டு டொக்டர்ஸ்மார் சொல்லீனம் ‘ என்று கனகரத்தினம் சொல்லும் போது அவனுக்குக் கண்னீர் வடிகிறது.

கெளாியின் கண்கள் விாிகின்றன. பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் மறுபக்கம் தலையைச் சாய்த்துக் கொள்கிறாள். முன்பு இருந்த விம்மல், குலுங்கல் ஒன்றும் இல்லை. அனால் கண்களில் நீர் ஆறாகப் பெருகி ஓடுகிறது. கனகரத்தினத்தின் நெஞ்சை அந்தக் காட்சி நெருடுகிறது. என்னத்தை நினைத்து அவள் அழுகிறாள் ?

கடைசியில் உங்கள் விஞ்ஞானம், உங்கள் அறிவு வழியல்ல. நோக்கமும் முடிவுந்தான் முக்கியம் என்ற கொள்கை எல்லாம் இதைத்தானா செய்தன ? என்றா நினைக்கிறாள் ?

‘அழாதே கெளாி, அழாதே, எல்லாம் கடவுளின் செயல் ‘ என்று என்ன சொல்கிறோம் என்று தொியாமல் உளறினான் கனகரத்தினம்.

‘இல்லை ‘ என்றாள் கெளாி. முனகினாலும் நிதானமாகக் குரல் வந்தது. ‘இல்லை, இது கடவுளின் செயலல்ல, உங்கள் முன்னேற்றம் எங்கட கடவுளையே கொண்டு போட்டுது ‘.

***

தட்டச்சு நன்றி: ஜெயரூபன் மரியதாஸ்

***

Series Navigation

மு. தளையசிங்கம்

மு. தளையசிங்கம்