புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள்

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

கோபால் ராஜாராம்


திண்ணையிலும், சொல் புதிது இதழிலும்( சொல் புதிது இதழில் வெளிவந்த வேத சகாயகுமாரின் கட்டுரை தீராநதியில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது) , காலச் சுவடு இதழிலும் , பல வலைப் பக்கங்களிலும் வேங்கடாசலபதியால் ஆய்வு செய்யப் பட்டு, காலச்சுவடு பிரசுரத்தில் வெளியான புதுமைப் பித்தன் செம்பதிப்பு பற்றியும் பல செய்திகளும் ,ஊகங்களும், குற்றச் சாட்டுகளும் வெளிவந்தவாறு இருக்கின்றன. இதில் எது உண்மை எது வெறும் புரளி , எது உள் நோக்கத்துடன் எழுந்த வாதம் என்று புரிந்து கொள்வது மிகவும் சிரமமாய் உள்ளது.. புதுமைப் பித்தன் பற்றிய அக்கறையை சுந்தர ராமசாமி தான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுமைப் பித்தனின் ஆளுமை பற்றிய தொடர்ந்த விவாதங்கள், சர்ச்சைகள் , விமர்சனங்கள் மூலமாக அவரைப் பற்றிய உணர்வை கடந்த ஐம்பது வருடங்களாக சீரிய தமிழ் இலக்கிய மனங்களில் பதிவு செய்ததில், சுந்தர ராமசாமி, க நா சு, பி எஸ் ராமையா, ஜெயகாந்தன், சி சு செல்லப்பா , ரகுநாதன் என்று பலருக்கும் பங்கு உண்டு. குறிப்பாக ரகுநாதன் புதுமைப் பித்தனைத் தொகுப்பவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். அவருடைய தொகுக்கப் படாத சிறுகதைகளைத் தேடி எடுக்க வேண்டும் என்று அக்கறை காட்டியதில் வேத சகாய குமாருக்குப் பெரும் பங்கு உண்டு, அதன் பின்பு வேங்கடாசலபதி, சமீப காலங்களில் மிகவும் உழைத்துப் பல படைப்புகளை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

புதுமைப் பித்தன் போன்ற ஓர் ஆளுமைக்கு நான் தான் முற்றிலும் உரிமையாளன் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் வெவ்வேறு கால கட்டங்களில் வேறு வேறு நபர்களுடன் நட்பும் நெருக்கமும் பூண்டு இயங்கியிருக்க முடியும். முழுமையாய் ஒருவரே அவரைப் பற்றி முழு அறிவு பெற்றவர் என்று இயங்க முடியாது. அப்படிப் பிழைபட எண்ணிக் கொண்டோ என்னவோ ரகுநாதன் எழுதிய புதுமைப் பித்தன் வரலாற்றில் பல இடைவெளிகள் இருப்பதை நாம் அறிவோம்.

புதுமைப் பித்தன் மறைந்து சில ஆண்டுகளுக்குள்ளேயே இப்படியொரு பதிப்பு வர வேண்டிய அவசியத்தை உணர்ந்து எவரும் செயல் பட்டிருந்தால் வேலை சுலபமாகியிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்க வில்லை. புதுமைப் பித்தன் படைப்புகளைத் தொகுப்பதில் உள்ள சிக்கல்கள் , தமிழ்ப் பத்திரிகை உலகிற்குப் பிரத்தியேகமான ஒன்று என்று கூறலாம். பாரதி தொடங்கி புதுமைப் பித்தன் மற்றும் கல்கி வரையில் பத்திரிகை அலுவலகங்களில் பணி புரிந்த பலரும், ஒரு குறிப்பிட்ட வேலை என்றில்லாமல், பலவாறாய்ப் பல புனைப் பெயர்களில் பத்திரிகைகளில் எழுதியாக வேண்டிய கட்டாயம். மற்ற ஏடுகளில் தன் பெயரில் பிரசுரித்துக் கொள்ள இயலாதபடி பல தடைகள். சுதந்திரமாய்த் தன் எழுத்தை வெளியிடுவதற்கு பல விதமான தொந்தரவுகள். இவை இன்னமும் தமிழ்ப் பத்திரிகை உலகில் இருக்கிறதா என்று தெரியவில்லை. பல பத்திரிகைகளில் பல புனைப் பெயர்களில் ஒருவரே எழுதுவதாகவும் அறிகிறேன். அந்த ஆசிரியர் மறைவிற்குப் பின்பு எந்தப் புனைப் பெயர் யாருடையது என்று அறிந்து கொள்வதில் சிக்கல். இதனால் , இன்று வேங்கடாசலபதி பதிப்பிற்குப் பின்பு பத்தாண்டுகள் கழிந்து வேறு எவரும் வந்து சில படைப்புகள் தவறாய் இனங்காணப் பட்டிருக்கின்றன என்று நிரூபிக்கக் கூடுமானால் அதையும் சீர்தூக்கிப் பார்த்துத் தான் ஆக வேண்டும்..

எனவே இந்தப் பிரசினையை உணர்ச்சிமிக்க நிலையில் அணுகாமல் இந்தக் கட்டுரைகளிலிருந்து சில கேள்விகளைத் தொகுக்க முயன்றிருக்கிறேன். என் கவனத்தில் எழாத கேள்விகளும் இருக்கக் கூடும். அப்படி எதுவும் கேள்விகள் வாசகர்களுக்கு எழுந்தால் editor@thinnai,.com என்ற முகவரிக்கு எழுதினால் , அந்தக் கேள்விகளும் தொடர்ந்து பிரசுரிக்கப் படும். கவனிக்கவும்: கேள்விகள். அவதூறுகள் அல்லது அனுமானங்கள் அல்ல..

இந்தக் கேள்விகள் யாரை நோக்கிக் கேட்கப் படுகிறதோ அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும், அளிக்காமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் கேள்விகளைப் பதிவு செய்து வைத்தால், நேரடியாய் பதில் அளிக்காதவர்கள் கூட தம் எதிர்காலச் செயல்பாடுகளில் இந்தக் கேள்விகளை மனதில் கொண்டு செயல்படக் கூடும் என்று நான் நம்புவதால் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் இவர்களின் ஏனைய எழுத்துகளில் இருக்கக் கூடும் தான். ஆனால் எழுகிற சில கேள்விகளைத் தொகுக்கும் போது அவை ஓர் இடத்தில் பதிவு செய்யும் வாய்ப்பாக அமையலாம். சில கேள்விகளுக்கு உடனடி பதிலும் இருக்க முடியாது. உதாரணமாய் ‘சாளரம் ‘ முதல் சிறுகதையா என்பது பற்றி. இது இனி வரும் ஆய்வுகளின் வெளீச்சத்தில் தான் முடிவு செய்யப்பட வேண்டியிருக்கும்.

இந்தக் கேள்விகளுக்குக் களம் அமைக்கச் சம்மதம் தெரிவித்த திண்ணை ஆசிரியர் குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு என் நன்றி:

காலச்சுவடு பதிப்பகத்திற்கு :

1. புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்புக்கு வேங்கடாசலபதி மட்டுமே தொகுப்பாசிரியராய் ஆய்வாளராய்த் தெரிவு செய்யப் பட்டார் ? இந்தத் தெரிவு யாருடைய முடிவு ? அவர் தவிர்த்த யாரும் கருதப் பட்டார்களா ?

2. ஒரு குழு அமைத்துச் செயல் படலாம் என்று வேதசகாய குமார் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வேங்கடாசலபதி பற்றி எதிர்மறைக் கருத்துகளை அவர் தெரிவித்த பின்பு, வேத சகாய குமாரும் , வேங்கடாசலபதியும் குழுவில் சேர்ந்து இயங்கியிருக்க முடியாது. குழு அமைப்பது பற்றி ஏதும் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டதா ?

3. செம்பதிப்பிற்கு முன்பு வெளிவந்த ஆய்வுகள் – முக்கியமாய் ரகுநாதன். வேத சகாய குமார் தெரிவித்த புதிய விவரங்களை – சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்யும் பொறுப்பு வேங்கடாசலபதி மட்டும் தான் மேற்கொண்டாரா ? இதனைச் சரிபார்க்க வேறு வேறு ஆய்வாளர்களின் துணை மேற்கொள்ளப் பட்டதா ?

4. வேங்கடாசலபதிக்கு முற்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வுகளைப் பயன் படுத்திக் கொள்ள அவர்களிடமிருந்து எப்படிப்பட்ட அனுமதி பெறப் பட்டது ? அதற்கு அவர்களுக்கு ஏதும் சன்மானம் தரப் பட்டதா ? வேதசகாய குமார் கேட்பது போல் இவர்கள் தம் ஆய்வுகளின் பயனை முழுக்கவும் காலச் சுவடு பதிப்புக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராது தந்துவிட வேண்டும் எதிர்பார்க்கப் பட்டதா ? எனில் இது எப்படி சரியாகும் ?

5. வேதசகாய குமாரின் பட்டியலை மட்டும் பயன் படுத்திக் கொள்ள வேண்டினீர்களா ? அந்த வேண்டு கோளின் நோக்கம் என்ன ?

வேங்கடாசலபதிக்கு சில கேள்விகள் :

1. வேதசகாய குமாரின் ஆய்வு முடிவுகளைப் பயன் படுத்திக் கொண்ட போது , அவை ஏன் சரியான படி வேதசகாயகுமாரின் ஆய்வு என்று பதிவு செய்யப் படவில்லை. ? அவருடைய ஆய்வின் தவறு என்று சொல்லப் படுபவை சுட்டிக் காட்டப் படும் போது அவருடைய பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது போன்று, சரியான முடிவுகளையும் அவருக்கானது என்று தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா ?

2. ‘ முனைவர் வேங்கடாசலபதி எந்தச் சிமிழுக்குள்ளூம் அடங்காத புதுமைப்பித்தனை ‘அவர் சூனாமானாவா ? ‘ என்று ராஜாஜி கேட்டார் என்ற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் சுயமரியாதைக் காரர், திராவிட இயக்க ஆதரவாளர் என்றெல்லாம் முத்திரை குத்த முயன்றவர். (இந்தியா டுடே சிறப்பிதழ் திராவிட இலக்கியம் குறித்த கட்டுரை) ‘ என்று வேத சகாய குமார் குறிப்பிடுகிறார். இது உண்மையானால் இது மிகக் கடுமையான குற்றச் சாட்டாகும். புதுமைப் பித்தனில் ஆரம்மப அறிமுகம் உள்ளவர்கள் கூட இப்படி ஒரு நிலைபாட்டை எடுக்க இயலாது. உங்கள் இந்தப் பார்வையின் அடிப்படை என்ன ? புதுமைப் பித்தன் ஆய்வுக்கு இப்படிப்பட்ட தவறான பார்வை ஒரு தடையாகாதா ?

3. பாரதியார் கருத்துப்படங்கள் ஆய்வு பற்றிய வேதசகாயகுமாரின் கருத்து உங்களிடம் தெரிவிக்கப் பட்டதா ? அந்தக் கருத்துப் படங்கள் பாரதியாரின் கருத்துப் படங்கள் என்பதற்கு புறச் சான்றுகள் ஏதும் உள்ளனவா ? (இந்தக் கேள்வி புதுமைப் பித்தன் செம்பதிப்புடன் நேரடித் தொடர்பு கொண்டதில்லாவிட்டாலும் கூட உங்கள் ஆய்வு நெறி பற்றியது என்பதால் இது இங்கே பதிவு செய்யப் படுகிறது.)

எம் வேத சகாய குமாருக்கு :

1. உங்கள் ஆய்வு முதன்மையாய் புதுமைப் பித்தனின் தொகுக்கப் படாத எல்லாப் படைப்புகளைக் கண்டடைவதில்லை என்று , இதுவரை வெளிவந்த வாதங்களிலிருந்து தெரிகிறது. சிறுகதைகள் கண்டடைய முடிந்தது மிக வரவேற்கத் தக்க ஒன்று. உங்கள் தேடுதல் முக்கியமாய் சிறுகதைகள் தாம் என்று தோன்றுகிறது. உங்கள் ஆய்வேட்டின் முதன்மையான களன் சிறுகதை என்பதால் இது நியாயமானதும் கூட. ஆனால் வேங்கடாசலபதி சிறுகதை மட்டுமல்லாமல் மற்ற படைப்புகளையும் தேடிக் கண்டுபிடித்து பதிவு செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான கெளரவத்தை ஏன் அவருக்குத் தர மறுக்கிறீர்கள் ?

2. இந்தச் செம்பதிப்புக்கு செயல் தொடங்குமுன்பு கூட்டப் பட்ட கூட்டத்தில் ‘ வேங்கடாசலபதிக்கு செம்பதிப்பு செய்து முடிப்பதற்கு ஆற்றலும், தகுதியும் நேர்மையும் இல்லை ‘ என்று நீங்கள் சொன்னதாய்த் தெரிவித்திருக்கிறீர்கள். இந்த உங்கள் வாதத்தின் அடிப்படை என்ன என்றும் எந்தக் காரணங்களால் வேங்கடாசலபதிக்குத் தகுதி, ஆற்றல் நேர்மை இல்லை என்றும் தெரிவித்தீர்களா ? செம்பதிப்புக்கு முன்னால் அவர் செய்த ஆய்வுகளின் குறைகளை, நேர்மையின்மையை எங்கேனும் பதிவு செய்திருக்கிறீர்களா ? அதன் விவரங்கள் என்ன ?

3. ஆறு கதைகள் முன் குறிப்பிட்ட ஏட்டில் வெளியானவை என்று ‘, , ‘ குறியுடன் புத்தகத்தில் வெளியானது தவறு. தெரியவில்லை என்பதைக் குறிக்க ‘– ‘ என்று தான் குறித்தேன் என்று நீங்கள் தெரிவிக்கிறீர்கள். இந்த விஷயம், செம்பதிப்பின் முன்னுரையில் வேங்கடாசலபதி குறிப்பிட்டு இந்தக் கதைகள் மேற்கண்ட ஏட்டில் வெளியாகவில்லை என்று தெரிவித்ததற்கு முன்னால் வேறு எங்கும் பதிவு செய்யப் பட்டிருக்கிறதா ? நூலின் பிழை திருத்தத்தில் இது குறிப்பிடப் பட்டிருக்கிறதா ? மூல ஆய்வேட்டை வேங்கடாசலபதி பார்த்திருக்க வேண்டும் என்ற உங்கள் வாதம் சரியானதல்ல. ஆய்வு புத்தக உருப் பெற்றபின்பு, காலத்தில் பிந்திய புத்தகம் தான் சரியான ஆவணம் என்று எண்ணி அதை விமர்சிப்பதில் தவறென்ன இருக்க முடியும் ?

4. ‘ ஆய்வாளருக்கு புதுமைப் பித்தன் பற்றிய ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும் ‘ என்ற உங்கள் கூற்றோடு நான் ஒத்துப் போகிறேன். ஆனால், விமர்சன ரீதியாய் அவர் முழுக்க புதுமைப் பித்தனை ஏற்றுக் கொள்பவராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டு , புதுமைப் பித்தனின் சொல்லாடலில் ஆழ்ந்த பரிச்சயமும், அவர் எழுதிய காலகட்டம் பற்றிய நுண்மையான அறிவும் இருந்தாலே போதுமானது என்பது என் கருத்து. சொல்லப் போனால் புதுமைப் பித்தன் மீது பக்தியளவு ஈடுபாடு செல்லுமானால் ஆய்விற்குத் தடங்கல் நிகழவும் வாய்ப்புள்ளது என்பதும் என் கருத்து. நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

4. நிதியுதவி பெறுவதற்கான தகுதி வேங்கடாசலபதிக்கு இருக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டாகவே உங்களால் முன்வைக்கப் படுகிறது. நிதி உதவி இது போன்ற ஆய்வுக்கு மிக அத்தியாவசியமான தேவை. நிதி உதவி பெறுவதையே ஒரு குற்றம் எனக் கொள்ளாமல் அதன்மூலம் என்ன செயல்கள் நடந்துள்ளன என்பதைக் கவனிப்பது தான் சரியான பார்வையாய் இருக்கும். பெறப்பட்ட. நிதி உதவியினால் பல இதழ்கள் மின் பதிவு செய்ய்ப்பட்டு, பின்வரும் ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன் படும்படியாக நிரந்தரப்படுத்தும் செயல் ஒன்று நடந்துள்ளது என்று அறிகிறேன். இதன் பொருத்தம் பற்றியும் பாராட்டுக்குரியதாகவும் நீங்கள் ஏன் எங்குமே குறிப்பிடவில்லை ?

5. வண்ணமயிலில் புதுமைப் பித்தனின் கண்டெடுக்கப் பட்ட கதை வெளியானதன் பின்பு உங்கள் தேடல் தொடர்ந்ததாய்த் தெரியவில்லை- அப்படித் தானா ? அதன் பின்பு உங்கள் ஆய்வு தொடரவில்லையெனில் அது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்த இருபது வருடங்களில் பல புதிய தகவல்கள் வந்திருக்குமல்லவா ? அதனை அடிப்படையாய்க் கொண்டு உங்கள் ஆய்வும் செப்பனிடப்படத் தானே வேண்டும் ? அதைத் தானே வேங்கடாசலபதி செய்துள்ளார் ? இதில் தவறென்ன இருக்க முடியும் ?

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தலைவர் மற்றும் வழக்குரைஞர் ச. செந்தில் நாதனுக்கு :

1. ‘ கண்மணி கமலாவுக்கு ‘ என்ற புதுமைப் பித்தன் கடிதத் தொகுப்பின் உரிமையை இளைய பாரதி என்ற தொகுப்பாளர்/பதிப்பாளர் பெறுவதற்காக நீங்கள் வழக்காடவிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். எழுத்தாளர் மற்றும் எழுத்தாளரின் குடும்பத்திற்கு ஆதரவாகவும், சார்பாகவும் வாதாடி உரிய உரிமையை அவர்களுக்கு மீட்டுத் தர வேண்டிய கடமை உடைய தாங்கள் ஏன் பதிப்பாளர் சார்பில் வாதிடுகிறீர்கள் ?

இந்தக் கேள்வி சட்டம் அறிந்த நிபுணர்களின் பார்வைக்கு :

1. குடும்பத்தினர் கொண்டுள்ள காப்புரிமை பற்றியும், குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாதபடி அவர்கள் அறியாமலேயே வெளிவந்து காலத்தின் இருளுக்குள் புதையுண்ட , இது வரை கண்டடையப் படாத படைப்புகள் ஓர் ஆய்வாளனின் முயற்சியால் மட்டுமே கண்டடையப் பட்டால் அவற்றின் பிரசுர உரிமை பற்றி சட்டம் என்ன சொல்கிறது ? இந்த மாதிரி ஆய்வு முயற்சியால் கண்டடையப் பட்ட படைப்புகளின் பதிப்புரிமை யாரைச் சாரும் ? குடும்பத்தினரையா ? அல்லது ஆய்வாளரையா ? அல்லது ஆய்வுக்கு ஏற்பாடு செய்த நிறுவனத்தினையா ?

2. ஓர் ஆய்வேடு பல்கலைக் கழகத்திற்கு அல்லது ஒரு நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த ஆய்வேட்டின் உரிமைகள் ஆய்வாளனுக்கும், அந்த நிறுவனத்திற்கும் இடையில் எப்படிப் பங்கீடு செய்யப் படும் ? அதைப் பயன் படுத்த, பிரசுரம் செய்ய, மறுபடி வேறு ஆய்வாளர்களுக்குக் கிடைக்கச் செய்ய நிறுவனத்திற்கு முதன்மையான உரிமை உண்டா ? அல்லது, ஆய்வாளனுக்குத் தான் முதல் உரிமையா ? (விஞ்ஞான ஆய்வில் முதல் உரிமை நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்திற்கானது என்பதும் அந்த ஆய்வின் பணப் பயனில் கூட நிறுவனம் உரிமை கொண்டாடலாம் என்பது பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வழமுறை. பல சமயங்களில் காப்புரிமையில் நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தின் பெயர் மட்டுமே குறிக்கப் பட்டு, ஆய்வாளர்கள் சட்ட ரீதியாய் எந்த உரிமையும் கொண்டாட முடியாத பல வித சூழ்நிலைகள் உண்டு. ) இது குறித்து இந்தியக் காப்புரிமைச் சட்டம் என்ன சொல்கிறது ?

3. வேத சகாய குமாரின் ஆய்வு பெறப்பட்ட விதத்தில்,, பயன் படுத்தப் பட்ட விதத்தில் ஏதும் தவறு இருக்கிறதா ?

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்