புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

செய்தி


காலை 10 மணிக்கு மாணவ மாணவிகள் அரங்கத்துள் வந்து சேர நிகழ்ச்சி உமாசங்கரின் இன்னிசையுடன் ஆரம்பமானது.நிகழ்வை கல்லூரி பொறுப்பு முதல்வர் பேரா. அழகப்பன் துவங்கி வைக்க, புதுமைப் பித்தனை பல்வேறு கோணங்களில் பேசுவதற்கான அரங்கம் துவங்கியது, கல்வெட்டு இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி புதுமைப் பித்தன் படைப்புலகம் பற்றி பேசவும்அமிர்தம் சூர்யா புதுமைப் பித்தனின் கடிதங்களுக்கும் அவரது எழுத்துக்குமான இடைவெளியை வாசிப்பதின் மூலம் படைப்பாளி இரண்டுக்கும் தொடர்புடையவனா எனும் கேள்வியை எழுப்பிய படியே அவரது பேச்சு இன்றைய நவீன இலக்கியம் தொட்டும் போய்க் கொண்டிருந்தது. கவின் கவி “பெண்ணிய மீட்சியுள் புதுமைப் பித்தனின் பாலியல்” எனும் தன் கட்டுரையின் சாரம்சத்தை எடுத்து தந்தார். இன்றைக்கு பெண்ணிய எழுத்தாளர்கள் வார்த்தைகளுக்குள்ளே சிக்கிக் கொள்ளும் பாலியல் விசயத்தை புதுமைப் பித்தன் சிக்கிக் கொள்ளாது, நெருடலில்லாது இயல்பாக வாழ்விலிருந்து முரண்படாது கதை சொல்லியிருப்பதை தனது உரையில் தந்து போனார். புதுமைப் பித்தனின் கவிதைகள் பற்றி தமிழ் மணவாளனும் நாடங்கங்கள் பற்றி விஜயேந்திராவும், பேசி முடிக்க, தேநீர் இடைவேளைக்கு பிறகு புத்தக வெளியீடு நடைபெற்றது.

பொன்னீலன் தலைமையில் காளீஸ்வரி கல்லூரியின் தமிழ் துறை தலைவர் கு. தனபால் “புதுமைப் பித்தனில் பூமத்தியரேகை ” எனும் புதுமைப் பித்தனின் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட பொ.நா . கமலா புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.திலகபாமாவின் ” கண்ணாடிப் பாதரட்சைகள்” புத்தகத்தை லஷ்மி அம்மாள் வெளியிட பேரா. பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். வே. எழிலரசு புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை நூலைப் பற்றிய தனது விமரிசன உரையை தந்தார். மாணவிகளின் கட்டுரைகளில் தெரிந்த புதிய பார்வைகளையும் பொறிகளையும் சொல்லி வெங்கட் சாமிநாதன், பொன்னீலன் முன்னுரை தந்திருப்பதையும் முன்னிறுத்தி தனது மதிப்புரையை தந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பொன்னீலன் புதுமை பித்தன் பற்றிய தனது ஒட்டு மொத்த ஒரு விமரிசனப் பார்வையை தந்தார். மாணவர்களுக்கு புதுமைப் பித்தனை அடியொற்றிய அந்த பேச்சு புதுமைப் பித்தன் மேல் ஆர்வத்தையும், புதுமைப் பித்தனை பேசுவதன் வாயிலாக எங்கள் பார்வைக் கோணங்கள் சமுதாய தளத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியது.
தொடர்ந்து ” இன்றைய கவிதையின் இயங்கு தளமும் , திலகபாமாவின் கவிதைகளும்” எனும் தலைப்பில் அமிர்தம் சூர்யாவும், கவின் கவியும், பொ,நா கமலாவும் தங்கள் விமரிசனப் பார்வையை தந்தனர்.

இன்னிகழ்வில் கலந்து கொண்ட 250 மாணவ மாணவிகளுக்கு இந்த இலக்கிய சந்திப்பு பன்முகப் பார்வையையும்,இதுவரை வாசித்த பிரதியைவேறு மாதிரியும் வாசிக்கலாம் என்ற சிந்தனையை வைத்துப் போனது.இதுவரை இலக்கிய சந்திப்புகள் என்றால் அதிக பட்சம் 20 பேர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த இலக்கிய அன்பர்களுக்கும் இந்த கூட்டம் உற்சாகத்தையும் , நிறைய பொறுப்புணர்வையும் தந்திருந்தது.

படங்கள்

1 கவின் கவி, விஜயேந்திரா, கு .தனபால்,தமிழ்மணவாளன், சொர்ணபாரதி,எழிலரசு,அமிர்தம் சூர்யா திலகபாமா

2″புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை”நூல் வெளியீடு

கு. தனபால், திலகபாமா, பொ.நா.கமலா, பொன்னீலன், காவ்யா சண்முக சுந்தர, அமிர்தம் சூர்யா, திலகபாமா

3″கண்ணாடிப் பாதரட்சைகள்” நூல் வெளியீடு
சொர்ணபாரதி, பாலகிருஷ்ணன், லஷ்மி அம்மாள், எழிலரசு அமிர்தம் சூர்யா, திலகபாமா

4. காவ்யா,மாரீஸ்வரி கல்லூரி பேராசிரியர்கள், திலகபாமா தமிழ்மணவாளன்,
பின் வரிசையில்
விஜயேந்திரா பாம்பாட்டி சித்தன்(சௌரி ராஜன்) , அமிர்தம் சூர்யா, கவிக்ன் கவி சொர்ணபாரதி

5 பார்வையாளர்கள்

Series Navigation

செய்தி

செய்தி