புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள் – ஆய்வு முன்னோட்டம்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புலவர் மு. பாலசுப்பிரமணியன். பி.லிட்., எம்.ஏ., பி.எட்.,



புதுக்கோட்டையின் தோற்றம்
விடுதலைக்குப் பின்னால் இந்தியா பல்வேறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பெற்றது. அதில் இன்றைய தமிழ்நாடும் ஒன்றாகும். இது ஆளுகைக்கு ஏற்ற வகையில் மாவட்டங்களாகப் பிரிக்கப் பெற்றது. இவ்வகையில் புதுக்கோட்டையும் தமிழகத்தின் ஒரு மாவட்டமாகத் திகழ்கிறது.

முதலில் திருச்சி மாவட்டத்தில் இணைந்திருந்த புதுக்கோட்டை 1974 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 14 ஆம்நாள் தனி மாவட்டமாக உருவாக்கப் பட்டது.

மாவட்டத் தலைநகரமான புதுக்கோட்¢டைக்குத் தனித்த வரலாற்றுச் சிறப்புகள் பல உண்டு. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு (சமஸ்தானம்) 3.3.1948 -ல் ஒன்று பட்ட இந்தியாவுடன் இணைக்கப் பெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியாளர் வரலாறு
கி.பி எட்டாம் நூற்றாண்டில் இருந்து புதுக்கோட்டை பகுதியில் பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், விஜய நகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆண்டுள்ளனர். 1640 ஆம் ஆண்டு முதல் தொண்டைமான் பரம்பரையினரின் ஆட்சி தொடங்கியது. அவர்கள் காலத்தில் வீதிகள் நேராகவும் சீராகவும் அமையப் பெற்று நன்கு வடிவமைக்கப் பெற்ற புதுக்கோட்டை நகரம் உருவானது. இதனை நகர அமைப்புச் செய்து அழகாக உருவாக்கியவர் புதுக்கோடடை தனியரசின் திவானாக இருந்த சேஷையா சாஸ்திரி ஆவார். கி.பி. 1912ல் புதுக்கோட்டை நகராட்சியும்¢ அமைக்கப் பெற்றது.

இவ்வாறு பல்வகை அரசுகளையும் கண்ட பெருமை உடையது புதுக்கோட்டை நகரம். இந்நகரம் இலக்கியச் சிறப்பும், இலக்கியத் தொடர் பங்களிப்பையும் உடையது. குறிப்பாக மன்னராட்சி காலத்தில் நவராத்திரி விழா என்பது மிகச் சீரோடும் சிறப்போடும் அரசு விழாவாகக் கொண்டாடப் பட்டு வந்திருக்கிறது. இவ்விழாவில் இயல், இசைக் கலைஞர்கள் பாராட்டப் பெற்றுள்ளனர். இதன் தொடர்வாக இலக்கிய அமைப்புகள் பல இங்கு பல்கி¢ப் பெருகின. இவ்வகைச் சிறப்புகளை ஆராய்வதாக இவ்வாய்வு அமைய உள்ளது.

புதுகோட்டை இலக்கிய ஏடுகள்
புதுக்கோட்டை எழுத்தாளர்கள் பலரின் இருப்பிடமாக இருந்து வருகிறது. எழுத்தாளர்களின் முயற்சியால் பல இதழ்கள் புதுக்கோட்டையில் இருந்து வெளிந்துள்ளன.

அன்னியரின் ஆக்கிரமிப்பில் அடிமைப் பட்டிருந்த காலத்தில் புரட்சிக் கனல் கக்கும் ‘தேசஊழியன் ‘ , ‘தேசபந்து’ போன்ற எழுச்சிமிகு ஏடுகள் இங்கிருந்து வெளியாயின. மேலும் ப. நீலகண்டனின் ”கலைவாணி”, லெ. கதிரேசன் செட்டியாரின் ”அணிகலம்” , முருகு சுப்ரமணியத்தின் பொன்னி, க. நாராயணனின் ”தாய்நாடு” , பனையப்பச் செட்டியாரின் ”சந்திரோதயம்” , நவீனனின் ”நவயுவன் ” கரு. செல்ல முத்துவின் ”போர் முரசு ” இராம. மருதப்பப் பிள்ளையின் ”திருமகள்” போன்ற சிந்தனை ஏடுகள் புதுக்கோட்டையில் வெளியாயின. இத்தகைய இலக்கிய ஏடுகளின்¢ பிறப்¢பிடமான புதுக்கோட்டை பல்வேறு இலக்கிய இயக்கங்களின் சிறப்பிடமாகவும் இருக்கிறது.

2. புதுக்கோட்டையின் முக்கிய இலக்கிய இயக்கங்கள்
2.1. நிலைத்த இயக்கங்கள்
அ. சன்மார்க்க சபை
புதுக்கோட்டையின் பல்லவன் குளத்தின் மேற்குக் கரையில் சன்மார்க்க சபை அமைந்துள்ளது. இது அருட்பிரகாச வள்ளலா¡¢ன் கொள்கைகளையும், தொண்டினையும் பரப்பி வருகிற ஓர் இயக்கமாகும். வார நாட்களில் வியாழக்கிழமை தோறும்¢ வள்ளலாரின் பாடல்கள் இசைக்கப் பெறுகின்றன. இங்குத் திருவருட்பாக் கருத்¢துக்களை உள்ளடக்கிய சொற் பொழிவுகளும், ஜோதி வழிபாடும் நாள்தோறும் நிகழ்த்தப் பெறுகின்றன. அன்னதானமும்¢ படைக்கப் பெறுகிறது. ஆண்டுதோறும் ஆண்டவிழா எடுக்கப்பெற்று சன்மார்க்க நெறிகள் பரப்பப் பெறுகின்றன.

ஆ திலகவதியார் திருவருள் ஆதீனம்
சைவமும் தமிழும்¢ தழைத்தினிதோங்கத் தலைநிமிர்ந்து பணியாற்றியவர் அப்பரின் தமக்கையார் திலகவதியார் ஆவார். அவர் பெயரில் ஓர் ஆதீனம் நிறுவி வரலாற்றுப் புகழ் கொண்டவர் புதுக்கோட்டை அருள்மிகு சாயிமாதா சிவ பிருந்தாதேவி அவர்கள். இந்த ஆதீனம் ஆன்மீகம் வளர்க்கும் தவச்சாலையாகவும்¢ , கல்வியைப் பெருக்கும் பல்கலை மையமாகவும், சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு நிலையமாகவும் இயங்கி வருகின்றது.

இ. அதிட்டானம்
புதுக்கோட்டையின் தாகம் தீர்த்த புதுக்குளத்தின் வடபால் அமைந்துள்ளது அதிட்டானம். ஜட்ஜ் சுவாமிகளின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒட்டி இது இயங்கி வருகிறது. இங்கு இலக்கியச் சொற்பொழிவுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. சில நூல் வெளியீடுகளும் இந்நிறுவனத்தால் அவ்வப்போது வெளியிடப் பெறுகின்றன. இவ்வெளியீடுகள் தமிழ் வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் செய்யப் பெற்றுள்ளன.

2.2 மக்களிடம் பரவலாக அறியப்பெற்ற இயக்கங்கள்
அ. கம்பன் கழகம்
காரைக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு கம்பன் புகழ் பரப்பிக் கன்னித் தமிழ் வளர்க்க சா. கணேசன் என்பவரால் நிறுவப்பட்ட இலக்கிய அமைப்பு கம்பன் கழகம் ஆகும். இவ்வமைப்பு பல கிளைகளைத்¢ தமிழகம் முழுவதும் பெற்றுள்ளது. புதுக்கோட்டையிலும் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. திங்கள் கூட்டங்கள், ஆண்டு விழாக்கள், இலக்கிய மலர்கள் ஆகியவற்றின் மூலம் கம்பனது புகழையும் அவரது காவியச் சிறப்புகளையும் உலகுக்கு உணர்த்த இவ்வியக்கம் பாடுபட்டு வருகின்றது.

ஆ. திருக்குறள் கழகம்
இது அண்ணல் சுப்ரமணியனாரால் தோற்றுவிக்கப் பெற்றது. தலைசிறந்த அறிஞர்களைக் கொண்டு உரையரங்கங்களை உருவாக்கியும், திங்கள் கூட்டங்களை, ஆண்டுவிழாக்களை நடத்தியும் தி¢ருக்குறள் நெறி பரப்பிச் சமுதாயத் தொண்டுகளை மேற்கொண்டும் வருகிற ஓர் ஒப்பற்ற இயக்கம் தி¢ருக்குறள் கழகமாகும்.

இ. வாரியார் மன்றம்
புதுக்கோட்டையில் இருக்கும் மருத்துவர்களுள் ஒருவரான சுப்பையா அவர்களைத் தலைவராகக் கொண்டு கிருபானந்தவாரியார் என்ற தமிழ் அறிஞரின் சிறப்பையும் அவரின் பக்திக் கொள்கைகளையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வரும் இலக்கிய அமைப்பு இதுவாகும்.

2.3 அரசியல் சார்பு இயக்கங்கள்
அரசியல் கட்சிகள் சார்புடைய இலக்கிய இயக்கங்களும் புதுக்கோட்டையில் இயங்கி வருகின்றன. அவற்றில் பின்வருவன குறிப்பிடத்தகுந்தவை.

அ. கலை இலக்கியப் பெருமன்றம்
இ¢¢ந்திய பொதுவுடைமை இயக்கம் சார்பான ஓர் இலக்கிய இயக்கம் இதுவாகும். கலைகள், உரைவீச்சுகள் மூலம் இலக்கியத் தொண்டினையும் கலை மேம்பாட்டினையும் கொள்கை முழுக்கங்களையும் செய்து வருகிற இயக்கம் இதுவாகும்.

ஆ. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
இது மார்க்ஸிஸ்ட் பொதுவுடைமை இயக்கம் தழுவிய ஓர் அமைப்பாகும். இதன் மூலம் கவியரங்குகள், சொற்பொழிவுகள், கலை இலக்கிய இரவுகள், நூல் வெளியீ¢டுகள் அவ்வப்போது நிகழ்த்தப் பெற்று வருகின்றன. சமுதாயத் தொண்டும் விழிப்புணர்¢வை ஏற்படுத்துதலும் இதன் நோக்கங்களாகும்.

இ. கலைஞர் தமிழ்ச் சங்கம்
கலைஞர் கருணாநிதி அவர்கள் பெயரால் அவரது இலக்கியப் பணிகளைப் பறைசாற்றி வருகிற இயக்கம் இதுவாகும்.

3. இலக்கிய இயக்கங்களின் தேவைகள்
ஒரு மொழியின் இலக்கியங்களை அழியாமல் காப்பதிலும் அதன் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், நாகரிகம் பண்பாடு ஆகியவற்றில் நலிவு ஏற்பட்டுவிடாமல் சமூகத்தை ஆற்றுப் படுத்துவதிலும் மொழி, இனம், கலை, இலக்கியம், பண்பாடு இவற்றின் தொன்மையை மேன்மையை உலகு அறியச் செய்வதிலும் இலக்கிய இயக்கங்கள் அருந்தொண்டாற்றி வருகின்றன. எனவே அவை என்றென்றும் இன்றியமையாத தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

4. ஆய்வின் தேவை
உலகில் எண்ணற்ற இயக்கங்கள் தோன்றுகின்றன. சில இடையில் மறைந்து போகின்றன. சில நீடித்து நிற்கின்றன. நீடித்து நின்றாலும், மறைந்துபோனாலும் இயக்கங்கள் தான் இருந்த/இருக்கும் காலத்தில் தன்னால் இயன்ற அளவிற்குத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன / ஏற்படுத்தி வருகின்றன. இலக்கிய இயக்கங்களும் அப்படியே.

புதுக்கோட்டையில் பல இலக்கிய அமைப்புகள் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. அவற்றைப் பதியவைப்பதாக இவ்வாய்வு அமைகிறது. இலக்கிய இயக்கங்களின் தோற்றம் வளர்ச்சி, செயற்பாடுகள், சமூகத் தாக்கம், வரவேற்பு , பயன் , விளைவு போன்றவற்றையும் இவற்றோடு பதிய வைப்பதாக இவ்வாய்வு செய்யப் படுகிறது.
——————

Series Navigation

புலவர் மு. பாலசுப்பிரமணியன். பி.லிட்., எம்.ஏ., பி.எட்.,

புலவர் மு. பாலசுப்பிரமணியன். பி.லிட்., எம்.ஏ., பி.எட்.,