பிபாஷா பாசு பிள்ளைத் தமிழ்

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


இணைய மடலாடற்குழு ஒன்றில் நடந்த இந்த விவாதம் பிபாஷா பாசுவும், தமிழ் வெகுஜனக் கலாச்சாரமும்

என்ற ஆய்வறிக்கையிலிருந்து எடுத்து இங்கு தரப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த, அவ்வறிக்கையை எழுதிய ராஷ்மி ஜெயராமனுக்கு என் நன்றிகள்.தேவையற்ற மின்னஞ்சல்களைத் தவிர்க்கும் பொருட்டு மின்னஞ்சல் முகவரிகள் இங்கு தரப்படவில்லை.

—-

ஆகஸ்ட் 8 2004

ரமேஷ் வைத்தியநாதன்

அன்புள்ள சக நாயர்களே

வணக்கம். நீங்கள் என் பின் நவீனத்துவ சங்கக் கவிதைகளுக்கு தந்த ஆதரவு காரணமாக பிபாஷா பாசு

பிள்ளைத் தமிழ் எழுத உத்தேசித்திருக்கிறேன். வேணும் உங்கள் ஆதரவும், ஆலோசனைகளும்

இவண்

ரமேஷ் வைத்தியநாதன் (ர.வை)

—-

ஆகஸ்ட் 9 2004

வேதாந்தி வெங்கட் ராமன்

வாருமைய்யா வாரும், எழுதுமையா எழுதும். பிபாஷா தேசிய யோகப்பியாச போட்டிகளில் தங்க மெடல்

வென்றவர். அவர் முகத்தில் தெரியும் அந்த தேஜஸ் பல ஆண்டுகள் யோகாப்பியாசம் செய்ததனால்

வந்தது.நீர் அதைப் பற்றியும் எழுத வேண்டும்

வே.வெ

அருணாச்சலம் சேஷாச்சலம்

எனக்கு பிள்ளைத்தமிழ் என்று ஒன்று இருப்பதே மிச்சிகனில் பொறியியல் படிக்கும் போதுதான் தெரியும்.

இரண்டு மூன்று பிள்ளைத்தமிழ் படித்தேன். ஒன்றும் புரியவில்லை. இப்போது நம் அழகன் பிபாஷாவின்

வாழ்க்கை வரலாற்றை பிரமிக்க வைக்கும் பிபாஷா என்று ஆனந்த விகடனில் எழுதவிருக்கிறார். ர.வைக்கு

அது உதவும்.

அ.சே

ரவி ஸ்ரீநிவாஸ்

ர.வை, நான் பிள்ளைத்தமிழ் படித்து வெகுகாலமாகிவிட்டது. வெகுஜனக் கலாச்சாரத்தின் ஆர்வலன, ஆய்வாளன் என்ற முறையில் உங்கள் பிள்ளைத் தமிழை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

ர.ஸ்ரீ

—-

ஆகஸ்ட் 10 2004

ர.வை

ஐயா வேதாந்தி, உம் தகவலுக்கு நன்றி. பிபாஷாவின் அழகுக்கும் அதுதான் காரணமோ. நானும் 10 வயது

முதல் யோகாப்பியாசம் செய்கிறேன், முகத்தில் அசடுதான் வழிகிறது. எது எப்படியோ அவர் யோகாப்பியாசம் செய்யும் புகைப்படங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

ஜெயகிருஷ்ணன்

ர.வை, உமக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றும். :). சரி பிள்ளைத்தமிழ் இலக்கணம் தெரியுமா.

சீராக சீர் தட்டாமல், தளை தட்டாமல் எழுத உம்மைப் போன்றவர்களுக்கு உதவும் என்றுதான்

பிள்ளைத்தமிழும், யாப்பும் என்று 15 கட்டுரைகளை அரசமரத்தில் போட்டிருக்கிறேன். பிரயோசனப்படுகிறதா என்று படித்துவிட்டு எழுதவும்

ஜெகி

—-

ஆகஸ்ட் 14 2004

மல்லிகை சீனிவாசன் (ம.சீ)

ர.வை, ஏற்கனவே எம்.ஜி.ஆர் பிள்ளைத்தமிழ், கலைஞர் பிள்ளைத்தமிழ், பெரியார் பிள்ளைத்தமிழ் இருக்கிறது. அடுத்த வாரம் ராமதாஸ் பிள்ளைத்தமிழ், வை.கோ பிள்ளைத்தமிழ் நூல்கள் வெளியாக உள்ளன. எனவே சீக்கிரம் எழுதி முடியும். இப்போதுதான் தேகம் பார்த்தேன். வலைப்பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ்

ர.வை கீழ்க்கண்ட கட்டுரைகளை சமீபத்தில் படித்தேன். உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பவா

இரண்டிலும் பிள்ளைத்தமிழ் பற்றி குறிப்புகள் இருக்கின்றன

Duraisamy Damodaran, Ranjani Ramakrishnan : PillaiThamizh and Politics in Tamil Culture:

From 1100 A.D to 2000 A.D – Review of Culture, History and Society Vol 12 No 4, Pp

450-472

Ramasamy Narayanan, Yeshiko Kow: Sweet Lullabies in Two Cultures: A Comparative

Study – Journal of Asian Cultural Studies Vol 8 No 2 67-92

ஜெயஸ்ரீ ராமநாதன்

ர.வை, எங்கு இருக்கிறீர்கள். டி.சியிலா இல்லை டெக்ஸாஸிலா. பாஸ்டன் பக்கம் வந்தால் வீட்டிற்கு

வரவும். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

—-

ஆகஸ்ட் 18 2004

ர.வை

ம.சீ – தகவலுக்கு நன்றி

ர.ஸ்ரீ – அனுப்பாமலிருந்தால் நன்றியுடையவனாக இருப்பேன் :).அனுப்பினால் 🙁

ஜெயஸ்ரீ – நான் இப்போது இருப்பது சன்னி வேலில், கலிபோர்னியாவில். பாஸ்டன் எந்த நாட்டில்

இருக்கிறது 🙂

—-

ஆகஸ்ட் 22 2004

ர.வை

பிபாஷா பாசு உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், விடியோ பார்த்தேன். பிரமிக்க வைக்கும் வளைவுகள்,

வில்லாக வளைக்கிறார் உடலை. டைம்ஸ் வீடியோ வெளியீடு. என்ன உடல் என்ன அசைவுகள்.

—-

ர.ஸ்ரீ

ர.வை

ஏமாந்து விட்டார்கள். அந்த பிபாஷா வேறு, நடிகை பிபாஷா வேறு. இந்த பிபாஷவை எனக்குத் தெரியும்.

என்னுடன் விபாஸனா தியானப் பயிற்சி படித்தார்.

—-

ஆகஸ்ட் 24 2004

ஜெயஸ்ரீ ராமநாதன்

ர.வை, ஏமாந்தது என் வீட்டுக்காரரும்தான். மநுஷன் காசு கொடுத்து வீடியோவை வாங்கியிருக்கிறார். அப்புறம் வீட்டில் வந்து சொன்ன சால்ஜாப்புகளைக் கேட்டால் சிரிப்பும், கோபமும் வந்தது.

ர.ஸ்ரீ, நீங்கள் கொடுத்துவைத்தவர் 🙂

—-

ஆகஸ்ட் 27 2004

ர.வை

ஒரு வழியாக பிள்ளைத்தமிழ் எழுத பிள்ளையார் சுழி போட்டாச்சு. ஒரு மூடில் நாற்பது வரிகள் எழுதியாச்சு. ஜெகி அண்ணாவிற்கு அனுப்பி கேட்கவிருக்கிறேன். நான் பிள்ளைத்தமிழ் எழுதுவது குறித்து எழுத்தாளர் ராஜமோகன் ஏதோ சொல்லியிருக்கிறாரமே. என்னதான் சொல்லியிருக்கிறார்

—-

ஆகஸ்ட் 30 2004

ஜெயஸ்ரீ ராமநாதன்

ர.வை , ராஜமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை கேட்காதீங்க: நீங்க பாட்டு(க்கு) எழுதுங்க,

படிக்க நாங்க இருக்கிறோம் 🙂

மல்லிகை சீனிவாசன் (ம.சீ)

ராஜமோகன் பிள்ளைத்தமிழ் என்கிற வடிவத்தை அண்ணாவிற்கும்,கலைஞருக்கும், பெரியாருக்கும்

பயன்படுத்தி திராவிட இயக்கத்தினர் தமிழுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று முற்றத்தில்

புல்ம்பித்தள்ளியிருக்கிறார். பிள்ளைத்தமிழ் என்பது தெய்வத்திற்கும், உயர்ந்தோருக்கும் உடையதாம்.

மேட்டுகுடி வன்முறைதான் அவர் கருத்துக்களில் வெளிப்படுகிறது. இதை எதிர்ப்பதற்காவது ர.வை

பிள்ளைத்தமிழ் முயற்சியை தொடர வேண்டும். என் அபிமான நடிகை ஐஸ்வர்யா ராய் என்றாலும்

இந்தக் கலாச்சார வன்முறையை எதிர்க்கும் முயற்சியான பிபாஷா பாசு பிள்ளைத்தமிழுக்கு என்

ஆதரவு உண்டு.

—-

செப்டம்பர் 2 2004

ரவி ஸ்ரீநிவாஸ் (ர.ஸ்ரீ)

முற்றத்தில் நான் அதற்கு பதில் கொடுத்திருக்கிறேன். இது போன்ற ஒரு கருத்தை டேவிட் பாஸ்கரன்

எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதிய போது அதை மறுத்து

எழுதினேன். இப்போது முற்றத்தில் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது போன்ற கருத்துக்களை

எதிர்ப்பதற்காக ஜூலியா ராபர்ட்ஸ் பிள்ளைத்தமிழ் எழுதலாமா என்று யோசித்து வருகிறேன்.

—-

ஜெயகிருஷ்ணன்

ர.வை உங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இலக்கணம் பிடிபடவில்லை, குழந்தையைப்

பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள், நானிருக்க பயமேன் .

—-

நவம்பர் 14, 2004

ஜெயக்குமார் ராஜசேகரன்

ரமேஷ் வைத்தியநாதன் எழுதிக் கொண்டிருக்கும் பிபாஷா பிள்ளைத்தமிழை இணையத்தில் போட்டால்

என் போன்ற ரசிகர்களுக்கு உதவும். பிளாகைப் பயன்படுத்தி பிபாஷாவைப் பற்றிய அனைத்து தகவல்கள்

கொண்ட ஒரு இணையத்தளம் உருவாக்கிவருகிறோம். உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். எழுத்தாளர்

சாரு நிவேதிதா பிபாஷா பற்றி உயிர்மையில் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அது எங்கு

கிடைக்கும்

—-

டிசம்பர் 2, 2004

சக நாயர்களே

பிபாஷா பிள்ளைதமிழ் 200 வரிகள் எழுதிவிட்டேன். இன்னும் 800 வரிகள் எழுதவேண்டும். மார்ச் 2005ல்

முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஜெகி அண்ணாவிற்கு மிக்க நன்றி.

ர.வை

—-

ஏப்ரல் 5 2005

ஜெயஸ்ரீ ராமநாதன்

ர.வை

என்ன ஆச்சு உங்களுக்கு, மின்னஞ்சல் அனுப்பினேன். பதிலில்ிலை. பிபாஷாவில் ரொம்ப பிஸியோ 🙂

எது எப்படியோ சீக்கிரம் பதில் போடுங்க, நல்ல செய்தி சொல்லுங்க.

—-

ஏப்ரல் 10, 2005

ஜெயஸ்ரீ, சக நாயர்களே

சில அவசர வேலைகள் காரணமாக உடனே எழுத முடியவில்லை. அடுத்த வாரம் விளக்குகிறேன்.

—-

ஏப்ரல் 15, 2005

சக நாயர்களே

ஏப்ரல் 5ம் தேதி எனக்கும் லிண்டா கோல்ட்ஸ்மித்திற்கும் திருமணம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்தது.

மிக அவசரமாக திருமணம் நடைபெற்றதால் உங்களில் யாரையும் அழைக்க முடியவில்லை. இந்தியா சென்று முறைப்படி திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்தோம். லிண்டாவின் உடல் நிலை சரியில்லை. இது காதல் திருமணம்.

ர.வை

—-

ஏப்ரல் 18 2005

வாழ்த்துச் சொன்ன அன்பர்களுக்கு நன்றிகள். பிபாஷா பிள்ளைத்தமிழ் பாதியில் நிற்கிறது. குட்டி பிபாஷா

விரைவில் வந்துவிடுவாள். அப்புறம் நிஜமாகவே பிள்ளைத்தமிழ் எழுதினால் போச்சு 🙂

ர.வை

—-

ஏப்ரல் 20, 2005

ஜெயஸ்ரீ ராமநாதன்

ர.வை

அப்படியா சங்கதி, அதுதான் அவசரமாகத் திருமணமா. பிள்ளைத்தமிழ் எழுதப் போக பிள்ளைப் பிறந்த

கதையாச்சு என்று புது மொழி இப்போ உண்டாச்சு 🙂

—-

ர.வை கைவிட்ட பிள்ளைத்தமிழை எடுத்து ஒரு குழு திறவூற்று மூல அடிப்படையில் புதிய பிள்ளைத்தமிழ்

எழுத முயன்றது. அதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இப்போது மூன்று பிள்ளைத்தமிழ்கள் உருவாகி வருகின்றன. திறவூற்று மூல அடிப்படையில் எழுதப்பட்ட முதல் பிள்ளைத்தமிழ் ஆகஸ்ட் 25,2005ல் பாஸ்டனில்

வெளியிடப்பட்டது.

http://ravisrinivas.blogspot.com/

Series Navigation