பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க போராடும் ஆப்கானியக் கலைஞர்கள்

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

புராண காலத்தில் காந்தார இசை என்று புகழ்பெற்ற ஆப்கானிஸ்தானிலிருந்து அஷ்ஃபாக் யூசுஃப்ஜாய் எழுதிய கடிதம்


தாலிபான் சங்கீதத்தை தடை பண்ணியிருக்கலாம். ஆனால் ஆப்கானிய இசை வடிவத்தை உயிரோடு வைத்திருக்க சிலர் தங்களது வாழ்நாள் கடமையாக எடுத்துக்கொண்டு உழைக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர் உஸ்தாத் மொகம்மது இஹ்ஸான். இர்ஃபான் சங்கீத அகாதமி என்ற ஒரு இசைப்பள்ளிக்கூடத்தை இரண்டு சிறிய பெஷாவர் அறைகளில் வைத்துக்கொண்டு இசையின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்கானிய இசையைச் சொல்லித்தருவதில் மிகுந்த பெருமை கொள்கிறார். ‘ஆப்கானியர்களின் சமூக-கலாச்சார அடையாளத்தை தக்கவைப்பதற்கும், அதைக் காப்பாற்றுவதற்கும் என்னாலான சிறு முயற்சி ‘ என்று சொல்கிறார் 45 வயதான் உஸ்தாத்.

ஆப்கானிய சமூகத்தில் இசை மிகவும் முக்கிய பங்கு பெற்றிருந்தது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு, ராஜா ஜாஹிர் காலத்தில் மிகவும் வளமையாக இருந்தது. அவரது காலத்தில் மிகப்பெரிய இசைக்கலைஞர்களான பஹாவுத்தீன் மொகம்மது பால்ஹி, அமீர் குஸ்ரோ பால்ஹி, உஸ்தாத் சாரங், மொகம்மது உமர், குலாம் நபி போன்றோருக்கு ஆஃப்கானிஸ்தான் இருப்பிடமாக இருந்தது. இந்த அரசாங்க ஆதரவு ராஜா ஜாஹிர் நாடு கடத்தப்பட்ட பின்னரும் தொடர்ந்தது. பின்னால் வந்த இஸ்லாமிய போராளிகளான தாலிபான் நாட்டை பிடித்ததும், சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்பட்டு விட்டன. இப்போது கார்களிலோ வீடுகளிலோ இசை ஒலிநாடாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், தண்டனை மிகக் கடுமையானது. அந்த ஒலிநாடாக்கள் உடனடியாக அழிக்கப்பட்டு விடுகின்றன. சங்கீதம் கேட்டதற்காக சவுக்கடியும் உண்டு. ‘பிபிஸியில் ஒலிபரப்பப்படும் ‘மல்கராலோ அமைல் ‘ என்ற நிகழ்ச்சியில் கேட்கும் சங்கீதமே எங்களது ஒரே சந்தோஷம் ஒரே பொழுதுபோக்கு ‘ என்று சொல்கிறார் காந்தாரத்தில் வாடகைக் கார் ஓட்டும் சாதிக்குல்லா. 9 வயதாகும் அவரது பையன் பாரியல் , பாடகனாக விரும்புகிறான். ‘தாலிபான் எப்போது இசைமீது இருக்கும் தடையை நீக்குவார்கள் என்று கேட்டுச் சொல்கிறீர்களா ‘ என்று என்னைக் கேட்கிறான்.

டாக்டர் நஜீபுல்லா என்பவர் தாலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆஃப்கானிஸ்தானை ஆண்டவர். அவரது ஆட்சிக்கு அப்புறம், தாலிபானுக்குக் கீழ் இசைக் கலைஞர்கள் அடக்குமுறைக்கு ஆளாகினர். எல்லா சங்கீத வாத்தியங்களும் அழிக்கப்பட்டன. இசைக்கலைஞர்கள் அவமானத்துக்கும் இழிவுக்கும் உட்படுத்தப்பட்டனர். சில இடங்களில் அவர்கள் முகத்தில் கறுப்புமை தேய்க்கப்பட்டு கழுதை மீது ஊர்வலமாகவும் எடுத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பெரும்பாலான இசைக்கலைஞர்கள் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓடி விட்டார்கள். பல ஆஃப்கானிஸ்தான இசைக்கலைஞர்கள் இன்று கானடாவிலும் அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஆஃகானிய இசை வடிவத்தையும் கலையையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் துரத்தப்பட்ட ஆஃகானியர்கள்(இவர்களில் பலர் இந்து ஆஃப்கானியர்கள்) இசைக்கு ஆதரவும் இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவும் அளிக்கிறார்கள். மிகச்சில இசைக்கலைஞர்களே ஆஃகானிஸ்தானத்தில் தங்கி அங்கிருக்கும் தாலிபானின் ஷாரியத் ரேடியோவில் பணிபுரிகிறார்கள். அங்கே செய்தி தெரிவிப்பாளர்களாகவும், குரான் ஓதுபவர்களாகவும் பணிபுரிகிறார்கள். பாகிஸ்தானுக்கு வந்த பெரும்பாலான இசைக்கலைஞர்கள் பெஷாவர் நகரத்திலும் க்வெட்டா நகரத்திலும் கஷ்டங்களுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நகரங்களில் இசை மையங்களை வைத்திருப்பவர்கள் சில நேரங்களில் அங்கிருக்கும் அகதிகளான ஆஃப்கானியர்களால் அழைக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவும் எப்போதாவது ஒருமுறைதான். இதனால் இவர்களால் ஜீவனத்துக்கே கஷ்டம். முன்பு இந்த ஆஃப்கானிய இசைக் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வளமையாக வாழ்ந்து வந்தார்கள். இப்போது பல நாடுகள் ஆஃப்கானியர்கள் அகதிகளாக வருவதை விரும்பாததால் விசா சட்டங்களைக் கடுமையாக ஆக்கிவிட்டார்கள். இது இன்னும் இந்த ஆஃப்கானியக் கலைஞர்களுக்கு இருண்ட எதிர்காலத்தை காட்டுகிறது.

மீண்டும் இர்ஃபான் சங்கீத அகாதமிக்கு வருவோம். இங்கு ஆர்வமுடன் சங்கீதம் கற்றுக்கொள்ள வரும் மாணவர்களுக்குக் குறைவில்லை. அவர்களது ஆர்வத்துக்கும் குறைவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் இந்த சங்கீதப் பள்ளியில் சுமார் 100 மாணவர்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார் மொகம்மது இஹ்ஸான். இவர் ஒவ்வொரு மாணாக்கரிடமிருந்தும் மாதம் சுமார் 300 பாகிஸ்தானிய ரூபாய்கள் வாங்கிக் கொள்கிறார். பணம் கொடுக்க வசதியில்லாதவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக்கொடுக்கிறார். ‘தினமும் பள்ளி விட்டதும் இங்கே தபலா கற்றுக் கொள்கிறேன் ‘ என்று அகமது சுபைர் சொல்கிறான். காந்தாரத்தைச் சேர்ந்த 13 வயதான அகமது ஃபாஹிம் எலக்ட்ரானிக் கீ போர்டு வாசிக்கவும் ஹார்மோனியம் வாசிக்கவும் கற்றுக் கொள்கிறான். ‘நாங்கள் ஆஃப்கானிஸ்தானில் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம். நான் ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொள்வதற்காக, நான் தான் என் பெற்றோரை வற்புறுத்தி பாகிஸ்தானுக்குப் போகலாம் என்று சொன்னேன். ‘ என்று சொல்கிறான். 15வயதான மசூத், சிதார் வாசிக்கத் தெரிந்த தன் தந்தையைப் போலவே சிதார் வாசிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறான்.

உஸ்தாத் இஹ்ஸான், இசையில் தனது ஆரம்ப கல்வியை கல்கத்தாவில்தான் பெற்றார். ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆஃகானிய இசை வடிவம் இந்திய இசையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இசை வடிவம். முன்பு பெரும் இந்திய இசைக்கலைஞர்கள் ஆஃகானிஸ்தானத்துக்கு அழைக்கப்பட்டு அங்கிருக்கும் இசைக்கலைஞர்களை பயிற்றுவிக்க கோரப்பட்டிருந்தார்கள். காபூல் நகரத்துக்குள் இருக்கும் பாலஹிஸார் என்ற கோட்டையில் ஒரு இசை மையம் இதற்காகவே அமைக்கப்பட்டிருந்தது. இது பின்னால் முஜாஹித்தீன் போராளிகளால் உடைத்தெறியப்பட்டது. முன்பு காபூல் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய இந்திய, ஆஃகானிய இசைப்பாடல்கள் சேமிப்பு இருந்தது. அதுவும் முஜாஹிதீன் போராளிகளால் 1995இல் அழிக்கப்பட்டது.

குதா கவா என்ற படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் ஆஃகானிஸ்தானத்தில் இருந்தபோது, அவரை கெளரவிக்க வேண்டி, முன்பு ஜனாதிபதியாக இருந்த நஜிபுல்லா அவர்களால் பெரிய இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் அதில் தான் பாடியதையும் இசைத்ததையும் நினைவு கூர்கிறார் மொகம்மது இஹ்ஸான். ‘நல்ல சூழ்நிலை இருந்ததும், அரசாங்கம் எங்களை கெளரவித்ததும்தான் ஆஃகானிஸ்தானத்தில் நல்ல இசை தொடர்ந்து இருந்ததன் காரணம் ‘ என்று சொல்கிறார் இஹ்ஸான்.

முன்பு சாமியார்கள் கல்லறைகளில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு வரும் ஏராளமான மக்கள், அங்கு பாரம்பரிய இசையையும், நாடோடி இசையையும் கேட்டார்கள். அத்தகைய இசை நிகழ்ச்சிகள் இப்போது தாலிபானால் தடை செய்யப்பட்டு விட்டன. துரதிர்ஷ்ட வசமாக பாகிஸ்தானில் இப்போது வாழும் ஆஃகானிய இசைக்கலைஞர்களும் இன்னும் பயந்தே வாழ்கிறார்கள். பலுச்சிஸ்தான், வடமேற்கு மாகாணத்தில் வாழும் ஆஃப்கானிய இசைக்கலைஞர்கள் பாகிஸ்தானுக்கு உள்ளேயே இருக்கும் அடிப்படைவாதிகளால் பயமுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய பயமுறுத்தலுக்கு நடுவில் தொடர்ந்து இக்கலைகளை காப்பாற்றுவது கடினம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர், நாஸிர் பாக் அகதி முகாமில் ஒரு தனிப்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த தாவுத் நஜாரி என்னும் திறமைவாய்ந்த இளம் இசைக்கலைஞர் முஸ்லீம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார். ஷெரீன் ஆகா என்ற ரபாப் இசைக் கலைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த இசைக்கலைஞர்களை தாக்கியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடிவாங்கிய இசைக்கலைஞர்களுக்கு யாரும் உதவவும் இல்லை. ஆஃகானிய கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகக் கூறும் தன்னார்வக்குழுக்களும் இசையைக் காப்பாற்ற உதவும் சூழ்நிலை இல்லை.

Series Navigation

புராண காலத்தில் காந்தார இசை என்று புகழ்பெற்ற ஆப்கானிஸ்தானிலிருந்து அஷ்ஃபாக் யூசுஃப்ஜாய் எழுதிய கடிதம்

புராண காலத்தில் காந்தார இசை என்று புகழ்பெற்ற ஆப்கானிஸ்தானிலிருந்து அஷ்ஃபாக் யூசுஃப்ஜாய் எழுதிய கடிதம்