பழமொழி படுத்திய பாடு

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

தேவமைந்தன்


ஒரு மாதத்துக்கு முன்னால், பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கட்டுரை வாசிக்க வேண்டி, புதுச்சேரிப் பழமொழிகளை இனங்கண்டு தொகுக்கும் பணியில் இறங்கியிருந்தேன். தன்னைப் பொறுத்த தகவல் என்றால் மட்டும் காதுகொடுக்கும் நண்பர்கள் கூட ஆர்வமாகப் பழமொழிகள் பலவற்றைத் திரட்டித் தந்தனர். பல்கலைக் கழக மாணவர் இருவர் கள ஆய்வு செய்துவைத்திருந்த தரவுகள் தந்தனர். இவர்களைத் தாண்டி ஒரு பழமொழி வினோதமான முறையில் என்னை வந்து சந்தித்தது. அது, பாரதியார் புதுவையில் வாழ்ந்திருந்த காலத்தில் (1908 முதல் பத்தாண்டுகள்) அவரை அவ்வப்பொழுது கடற்கரையில் எதிர்ப்பட்டுத் தெரிந்துவைத்திருந்த பத்மாவதி அம்மாள் அடிக்கடி சொன்னது. அவர் மகள் சைகோன் இராதாலட்சுமி பத்மனாபன் வழியாக,பெயர்த்தியும் பெண்ணியச் சிறுகதை எழுத்தாளருமான ப.ரா.கலாவதி அவர்களுக்குப் பாட்டி சொத்தாக வந்தது.

“ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு, அடுப்பங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை” என்ற பழமொழிதான் அது. பத்மாவதி அம்மாளின் சொந்த ஊரான மங்கலத்தில் (புதுவை வில்லியனூரிலிருந்து ஏம்பலத்துக்குச் செல்லும் வழியில் உள்ளது) இன்றும் அதற்கு மட்டும் ஒரு மவுசு இருப்பதை, நெரிசலான பயணிகள் கூட்டத்தைக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் இடம் தேடிப் பாதம் துழாவி நின்று, சென்று, கண்டுகொண்டேன். உடன் வந்தவர் தன் பாட்டியார் புழங்கிய இடங்களையும் பூர்வீக வீட்டையும் பார்த்துத் திரும்ப வந்தபொழுதும் நெரிசலில் மாட்டிக் கொண்டதால் ஆய்வு, பழமொழி, பூர்வீகம் எல்லாவற்றையும் ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தார். மங்கலத்தில் நாங்கள் “தள்ளிவிடப்பட்ட” பொழுது. இனிதான் சுவாரசியம் இருக்கப் போவதை அவரும்நானும் அறிந்திருக்கவில்லை.

அவர் உறவினர் இல்லத்தில் பூர்வீகம் விசாரித்துக் கொண்டிருந்த பொழுது அங்குவந்த பெரியவரிடம்(அவருக்கு அங்கே ‘தொன்னை மூக்கு’ என்று செல்லப் பெயர்) மேற்படிப் பழமொழியை கூறி அதன் உண்மைப் பொருள் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன மறுமொழியை அவர் நடையிலேயே தருகிறேன்:
“என்ன மிஸ்சியே* கேட்டீங்க! இப்பொவெல்லாம் ஒரு காது சொத்தமா பூட்டுதுங்க!…ஆங்..ஆட்டாளுன்னா அந்த ஆளு’ங்கலாம். எட்டு ஆள் பெலங்கொண்டவன்னு(ம்) வச்சுக்கலாம்..கண்டுபுடிச்சீங்களா நா’ சொல்றதெ?”
என்ன விபரீதப் பொருள்! தலையிட்டு, “அப்படீன்னா மோட்டாளு’ங்கிறது?” என்று கேட்டேன். அவர் தொண்டையைச் செருமிக் கொண்டு நிதானமான குரலில் சொன்னார்: “வஸ்த்தாதும்போமில்லியா மிஸ்சியே! அத்’தான்!” என்றார். சரி இவரை விட்டு விடுவோம் என்று முடிவெடுத்து, அவர் போகும் வரை பொறுத்திருந்து, அந்த வீட்டிலிருந்த பெரியம்மாவிடம் பழமொழியைச் சொல்லி அதன்பொருளைக் கேட்டேன்.

அந்தப் பெரியம்மா பழமொழியில் ஒரு திருத்தம் செய்தார்கள். “ஐய, அது மோட்டாளு இல்லிங்க’பா! ‘சீட்டாளு!” என்று சொல்லிவிட்டு விளக்கம் சொன்னார்கள். “அடுப்பாங்கர மூலை’ல தொடப்பக்கட்டைய பிடிகட்ட கீழேயும் வாறுகட்ட மேலேயும் இருக்கற மாதிரி சாத்தி வப்பாங்க’பா.. இப்ப வர்றாளுவளே, நானும் இந்த வீட்டுக்கு மாட்டுப்பொண்ணு*ன்னு..இத்’தக் கேளப்பா என்ன அன்னியாயம்..வாறுகட்டயக்கீழ் வச்சு சாத்துறாளுவ!” என்று மோவாயில் கையை வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் பொறுத்திருந்துவிட்டு, “அப்புறம்..அந்தப் பழமொழியோட அர்த்தத்தை இன்னும் நீங்க சொல்லலீயே..” என்று இழுத்தேன். “‘பொறம்போக்கு! பொறம்போக்கு!’..அட உன்னியெ திட்டறன்னு நினச்சிக்காத’பா… நேத்து அந்த..” என்று ஆரம்பித்து என்னென்னவோ பேசிய பெரியம்மாவை சாந்தப்படுத்தி விடைபெற்றுக் கொண்டு பக்கத்திலுள்ள தோப்புக்குச் சென்றேன். அங்கே கயிற்றுக்கட்டிலில் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்த காவலாளியின் முதிர்ந்த முகத்தையும் திருகிய வெள்ளை மீசையையும் வைத்து அவருக்கு அந்தப் பழமொழியின் சரியான பொருள் தெரிந்திருக்கும் என்று எடைபோட்டேன். பொறுமையாகப் பழமொழியைக் கேட்டுக் கொண்டார். “அடுப்பாங்கரக்கு ஒரு தொடப்பக்கட்ட… வெளங்குதுங்க அய்யா! அதென்ன ஆட்டாளு..அதுக்கப்புறம் ஒரு மோட்டாளு… எதுக்கும் இதப் போல பழமொழி கிழமொழியவெல்லாம் ஆம்புளசென்மங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்காதீங்க..என்னா! பொண்டுவதான் இதுக்கெல்லா(ம்) வெயாக்கியானம் பண்ணுங்க” என்று முடித்துக் கொண்டார். மங்கலத்தில் சந்தித்த ஒவ்வொருவரும் ஒரு பொருளைச் சொன்னார்கள். எச்சுமி என்ற வேலைக்காரம்மா சொன்ன பொருள் ஓரளவு பொருத்தமாக இருந்தது. “ அய்யா! எவனானாலும் சரி அய்யா! அவனவனுக்கும் தண்ணி கொண்டாந்து தார, அட, ஒரு முருங்கக்கா பிச்சுக் கொடுக்க, இன்னொருத்தவன் இருப்பான்’யா! அது எப்படி இருக்குமுன்னா நாம, நம்ம வூட்டு அடுப்பாங்கரேல பழகுன விளக்குமாத்த அழவா சாத்தி வப்போமுல்ல அப்படி இருக்கூன்னு இந்த சொலவட சொல்லாம சொல்லுது!” என்றார்கள் அந்த அம்மா. “சொலவடை வேறு, பழமொழி வேறு. இது சொலவடை அன்று. பழமொழியே!” என்று எச்சுமி அவர்களிடம் மொழிய என் ‘புலமை’ விழைய, சிரமப்பட்டு அதை அடக்கி வைத்தேன். ஒரு வழியாக, மாலையில் புதுச்சேரிக்குத் திரும்பியபின், என் தலை எனக்கு முடிதிருத்தத்தை நினைவு படுத்தவே, வழக்கமாக நான் முடிதிருத்திக்கொள்ளும்[பலர், தாங்கள் முடிவெட்டப் போவதாக சொல்வார்கள்..] திருத்தகத்துக்குச் சென்றேன். கூட்டமில்லை. வெற்றிலை போட்டுக் கொண்டு பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். முடிதிருத்தும் நண்பரைப் பார்த்து, “அவருக்கு அடுத்தவனா நான்?” என்று விசாரிக்கவும் அவர் பதறி, “இல்லீங்க மிஸ்சியே.. அவரு சோசியர்.. மங்கலமில்லே.. மங்கலம்.. அந்த ஊர்’ல இருந்து வர்றாரு! வாக்கு, டாலர் வாக்கு.. மிஸ்சியே!” என்றார். நண்பர்முடிதிருத்தும் தொழிலை ஒரு ஆர்வத்துக்குத்தான் செய்து வந்தார். அவர் ‘கையில்’ வெளிநாட்டுப் பணமாற்று(moneychanging), ஆரோவில் என்னும் உலக நகரத்திலிருந்து வருபர்களுக்கு வாடகைக்கு ‘டூவீலர்’ விடுதல் முதலான தொழில்கள் வேறும் இருந்தன. உதாரணத்துக்குக் கூட, ‘டாலர்’ ‘யூரோ’ ‘மார்க்;குத்தான்… “என்னதான் ஃப்ரா(ன்)* போயி யூரோ வந்தாலும் டாலருக்குக் காணுமா?” என்பது அவருக்கே உரிய ‘காப்பிரைட் பழமொழி’. எதற்கும் அதைச் சொல்லுவார். இந்த ஞாபகங்களை மீறி, வெற்றிலை போட்டவாறே என்னை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த பெரியவர் ‘மங்கலத்’திலிருந்து வருபவர் என்ற தரவு(data), ஆழச் சென்று என் மூளையில் தைத்தது. விடுவேனா? அவரிடம் பழமொழியைச் சொன்னேன். அதன் உண்மைப்பொருள் கேட்டேன். அவர் பி.எஸ்.வீரப்பா பாணியில் ‘அர்த்தமிக்க’ சிரிப்பொன்றை ‘செம ஆடியோ வீடியோ’ வழங்குகையுடன் சிந்தினார். “தம்பீ! இது எங்க மங்கலத்துல தலைமுறை தலைமுறையா சொல்லப்படுது. ஒண்ணுமில்ல தம்பி..! ஆட்டாளு’ன்னா ஆடு மேய்க்கிறவன்’னு அருத்தம். இடையன்’பமே அவன். மோட்டாளு’ன்னா பொழுது போவாம ஒரு மோட்டு’ல(மேடான பகுதி) குந்திக்கிணு வெறிச்சு வெறிச்சுப் பார்க்குறவன். இதல்லாம் கிராமத்து சங்கதி. அங்க வந்து நீங்க பாக்கோணூம்..[“கடவுளே! மறுபடியுமா?..] இந்த ஆட்டாளு இருக்கானே, ஆடுமேய்க்கிறவ(ன்).. அவன் நம்மளப் போலேயா? இல்லய்யே..நா(ள்)முழுஷா ஆடுமேய்ச்சு சந்தீல அவனுக்கு என்ன பெரீசா கெடைக்கப் போகுது? அப்படிப்பட்டவனுக்கும் நம்ம பிரமன் எடுபிடி ஆளக் கொடுத்திருக்கான் பாருங்க.. மோட்டால ஒக்காந்து வெறிச்சு வெறிச்சுப் பாக்கிறவ(ன்) இல்ல! அவன இவன் கூப்புட்டு ‘அதோ அத்த எடு..இதோ இத்த எடு’-ன்னு வேல இடுவான்’ல.. எப்படி இருக்கு இது’ன்னா, ஒவ்வொரு வூட்டு அடுப்பாங்கரையிலயும்..அது ஏழைபாழைங்க வூடு’ன்னாலுங்ககூட ஒரு தொடப்பக்கட்டை சாத்தி வச்சிருப்பாங்க பாரு.. அத்த மா(தி)ரி இருக்கு(ம்)ன்னு பழமொழி சொல்லுது..” என்றாரே பார்க்கலாம். அவர் பாணியிலேயே என் மனம் எனக்குச் சொன்னது: “பிரமன் ஒன் தலை’ல எப்படி எழுதி வச்சுருக்கா(ன்) பாரு!… பாடாவதி பஸ்’ல பாதங்கூட திருத்தமா வச்சுக்க முடியாம போயி, ஒரு பகல் முழுதும் மங்கலத்துல தங்கி ஆட்டாளுன்னா எட்டு ஆளு’ன்னு ஆரம்பிச்சு எதைஎதையோ கேட்டு… இவர இன்னைக்கு இந்தச் சந்தீல சந்திக்கணும்’ன்னு எழுதிருக்கறச்சே பேசாம இங்கயே இவர சந்திச்சு சரியான அர்த்தத்த தெரிஞ்சுக்கிட்டிருக்கலாமில்லே…”

ஓ! ‘இருக்கறத விட்டு பறக்கறத புடிக்கிறது’ங்கற சொலவடை இதைத்தான் உணர்த்துகிறதோ? சாயுங்காலமா ‘வாக்கிங்’ போகும்போது இன்றைக்கு நம் தடத்தை மாற்றி, தாகூர் கல்லூரி மேட்டுப் பக்கமாகப் போய், அங்கே வழக்கமாக, ஒரு கொன்றை மரத்தடியில் கணவதி அம்மாளுடன் ‘வாக்கிங்’ போய்விட்டு உட்கார்ந்திருப்பாரே நம் கி.ரா. … அவரைக் கேட்டுவிட வேண்டியதுதான்.

****
*மிஸ்சியே = புதுச்சேரியில் ‘ஐயா’ என்பதற்குப் பரவலாகச் சொல்லப்படும் பிரஞ்சுமொழிச் சொல்.
மாட்டுப்பெண் = ஒரு குடும்பத்தின் பெண் ‘நாட்டுப்பெண்’ என்று சொல்லப்படும் ‘நாற்றுப்பெண்’ ஆவாள். அந்தக் குடும்பத்துக்கு மணவினை மூலம் வந்து சேரும் பெண்தான் ‘மாட்டுப்பெண்’ என்று சொல்லப்படும் ‘மாற்றுப்பெண்.’

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்