பரவசமும் துக்கமும் (எனக்குப் பிடித்த கதைகள் -20 க.நா.சு.வின் ‘கண்ணன் என் தோழன் ‘)

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

பாவண்ணன்


நண்பரொருவரின் வீட்டில் தங்கி இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். தனி அறை. பேச்சு, அப்புறம் ஒரு நீண்ட நடை, மறுபடியும் பேச்சு, அதற்கப்புறம் தொலைவிலிருக்கும் குன்றை நோக்கிய பயணம், அவ்வப்போது தேநீர் என நாள்முழுக்கப் பேசியபடியே திரிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினோம். நண்பரின் தாயார் அன்போடு உணவுக்கு ஏற்பாடு செய்தார். சாப்பிட்டு விட்டு மறுபடியும் பேசத் தொடங்கினோம். நண்பருக்கு ஒரு பாட்டி இருந்தார். எண்பதையொட்டிய வயது. நினைவாற்றல் கரைந்து போகத் தொடங்கியிருந்தது. ஊருக்குப் போய்விட்டவரை அடுத்த அறையில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார். அருகிலேயே இருப்பவரைப் பார்த்து ‘ஊரிலிருந்து எப்போது வந்தாய் ? ‘ என்று கேட்பார். வீட்டில் இருப்பவர்கள் எல்லாருமே அவருடன் அன்பாக இருந்தார்கள். அவருடைய தொல்லைகளைக் குழந்தையொன்றின் தொல்லையாகவே ஏற்றுச் சகித்துக் கொள்ளப் பழகியிருந்தனர்.

பாசத்துடன் அவரை ஒரு விளையாட்டுப் பொம்மை போல அவர்கள் சீண்டிப் பார் ப்பது வேடிக்கையாக இருக்கும். எல்லாரையும் அவர் தன் பேரப் பிள்ளையாகவே எண்ணிப் பேசத் தொடங்கி விடுவார். கூடத்தில் அவருக்குக் கட்டில் போடப்பட்டிருக்கும். உள்ளறையில் வேறு நண்பரின் குடும்பத்தார் இருப்பார்கள். அன்று முன்னிரவில் பேசிக் கொண்டே வெளியே சென்றிருந்த நாங்கள் பின்னிரவுக்குப் பிறகுதான் திரும்பினோம். நாங்கள் தங்கியிருந்த தனியறையிலேயே தங்கியிருக்கலாம். எதிர்பாராத விதமாகப் தலையணையும் போர்வைகளும் வீட்டுக்குள் இருந்தன. அவற்றை எடுக்க வேண்டி கதவைத் தட்டினார் நண்பர். கதவு உட்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. வெகுநேரத்துக்குப் பதிலே இல்லை. பிறகு பாட்டிதான் பதில் சொன்னார். அவர் மகனுக்கு ஏதோ ஒரு காலத்தில் சொன்ன அறிவுரையை அவர் கேட்காததற்காக மனம் நொந்தபடி பேசும் குரல் கேட்டது. கதவைத் திறக்கும் வண்ணம் பாட்டிக்குப் புரியும் விதத்தில் பக்குவமாகக் கேட்டுக் கொண்டார் நண்பர். மெதுமெதுவாக எழுந்து வந்த பாட்டி சிரமத்துடன் கதவின் தாழை விலக்கிவிட்டார். ‘யாரு உள்ள பாட்டி ? ‘ என்று கேட்டார் நண்பர். ‘நானும் பகவானும்தான் இருக்கோம். வேற யாரு இருக்காங்க ? ‘ என்று மிகச் சாதாரணமாகச் சொன்னபடி படுக்கைக்குத் திரும்பினார் பாட்டி. தீர்மானமான அந்தக் குரல் என்னை ஒருகணம் உலுக்கி எடுத்தது.

பலர் கடிதம் எழுதும் முன்னர் ‘கடவுள் துணை ‘ என்று எழுதிவிட்டே தொடங்குவதைப் பார்த்திருக்கிறேன். அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுதுகிற போது கூட கடவுள் துணை என்று எழுதுகிறவர்கள் உண்டு. மூச்சுக்கு மூச்சு ‘கடவுள்தான் நம்மைக் காப்பாத்தணும் ‘ என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் இவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே கடவுளைத் தன் துணையாக எண்ணுகிறவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக் குறிதான். அதுவும் உறுதியாக நானும் கடவுளும்தான் இருக்கிறோம் என்று நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு ஆழமாக நம்புகிறவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. அவ்வளவாக மன ஒருமை இல்லாத நிலையில் கூட அந்தப் பாட்டி சொன்ன பதில்வாக்கியம் மீண்டும் மீண்டும் மனத்தில் அடிக்கடி எழத் தொடங்கி விட்டது. பக்கத்திலேயெ ஆடிக் கொண்டிருக்கிற யாரோ ஒரு குழந்தையைக் காட்டிச் சொல்வதைப் போல மிக சகஜமான குரலில் சொன்ன விதம் உண்மையிலேயே அவர் முதுகுக்குப் பின்னால் கடவுள் நின்று கொண்டிருக்கிற உணர்வைத்தான் கொடுத்தது. பாட்டியால் பார்க்க முடிகிற, பக்கத்திலேயே இருப்பதாக நம்ப முடிகிற கடவுளை நம்மாலும் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓரிரு கணங்கள் மனத்தில் வெறுமை கவிவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

உதகைக்குப் பக்கத்தில் கல்லட்டி என்னும் காட்டுப் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது, தொலைவில் உலவும் காட்டெருமைகளை நண்பர்கள் காட்டிக் காட்டிப் பேசிய போது என் கண்களுக்கு எதுவுமே தெரியாமல் விழித்தேன். அதோ அதோ என்று நண்பர்கள் கைகாட்டிய திசையில்தான் பார்த்தேன். ஆனால் என் கண்களில் அவை தென்படவே இல்லை. அன்று கவிந்த அதே ஏமாற்ற உணர்வைத்தான் பாட்டியுடன் கடவுள் இருப்பதைப் பார்க்க இயலாதபோதும் அடைந்தேன்.

பாட்டியைப் போலவே நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பரம்பொருளின் அருகிலேயே இருப்பதைப் போலவே நினைத்து உருகிக் கசிந்திருக்கிறார்கள். தம் உணர்வுகளைப் பாடல்களாக வடித்திருக்கிறார்கள். அவற்றைப் படிக்கும் போதெல்லாம் நமக்கும் அந்த உணர்வு வருகிறது. நாமும் அந்தப் பரம்பொருளின் அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறோம். ஆண்டாள் அரங்கனை விரும்பியதையும் அக்கமகாதேவி மல்லிகார்ஜூனனை விரும்பியதையும் உண்மையில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் ? அந்தப் பாடல்களில் தெரியும் நம்பிக்கையைப் பொய்யென்று எப்படித் தள்ளிவைக்க முடியும் ?

குழப்பமும் நெகிழ்வும் கலந்த இத்தகு மனநிலைகளில் என் மனத்தில் தோன்றும் ஒரு சிறுகதை க.நா.சு.வின் ‘கண்ணன் என் தோழன் ‘. மிக எளிய கதை. தனிமையில் படுத்துறங்கும் கண்ணன் அதிகாலையில் காணாமல் போய்விடுகிறான். கவலைப்படும் பாட்டியிடம் ஆற்றைத் தாண்டி ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்றதாகச் சொல்கிறான் கண்ணன். ஊரிலிருந்து வந்த மகனிடம் பாட்டி விஷயத்தைச் சொல்கிறாள். பாட்டியைப் போல மகனுக்குப் பதற்றமில்லை. ஆனாலும் பேச்சோடு பேச்சாக விவரம் கேட்கிறார். பத்துநாட்களுக்குத்தான் இந்த ஊரிலிருப்பேன் என்று சொல்லிக் கொண்டு பிருந்தாவனத்திலிருந்து வந்திருக்கும் நண்பனுடன் கோயிலுக்குச் செல்வதாகவே சொல்கிறான் கண்ணன். மகன் வார்த்தைகளில் அப்பாவுக்கும் நம்பிக்கை பிறந்து விடுகிறது. ஏதோ ஒரு நாளில் படகோட்டியைத் தற்செயலாகப் பார்த்து விவரம் கேட்கிற போதுதான் பிள்ளைகள் அவன் படகில் செல்லவில்லை என்று தெரிய வருகிறது. ஆனால் இரவில் இக்கரையில் கட்டப்பட்டிருக்கிற படகு காலையில் மறுகரையில் கட்டப்பட்டிருப்பதாகவும் சொல்கிறான் அவன். தற்செயலாக சந்திக்க நேர்கிற கோயில் குருக்கள் காலைப்பூசையை நிறுத்திப் பல நாட்களாகின்றன என்று சொல்கிறார். மறுநாள் அதிகாலையில் தெருமுனையிலிருந்து கேட்ட புல்லாங்குழல் ஓசையைக் கேட்டு கண்ணன் எழுந்து செல்ல, அதே இசை தாலாட்டாக மாறித் தந்தையைச் செயலற்றவராக்கித் துாங்க வைத்து விடுகிறது. விடிந்து நேரம் கழித்து கோயிலிலிருந்து மகனே திரும்பி உற்சாகம் குன்றி வருகிறான். நண்பன் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டான் என்று வாட்டத்தோடு சொல்கிறான். ‘பத்துநாள் பார்த்துப் பழக என்ன பாக்கியம் பண்ணிப் பிறந்தாயோ ‘ என்று தன் பிள்ளையைக் கட்டிப் பிடித்து அழுகிறார் அப்பா. துப்பறியும் வேலையில் தான் ஈடுபட்ட காரணத்தால்தான் மகனின் பாக்கியம் நிலைக்கவில்லை என்கிற குற்ற உணர்வு ஒரு பக்கமும் சிறுவனுக்குக் கிடைத்த வாய்ப்பு தனக்குக் கிட்டவில்லையே என்கிற துக்கமும் அவர் அழுகையில் பொதிந்து வெளிப்பட்டன.

கிருஷ்ணன் என்னும் அவன் நண்பனை அருகிலிருந்து பார்த்துப் பேசி ஆற்றைக் கடந்து உறவாடுகிற பேறு சிறுவன் கண்ணனுக்குக் கிடைக்கிறது. அதே கிருஷ்ணனை ஒரு கருப்பு நிழலாகப் பார்க்கவும் ‘நீ கவலைப்படாதே பாட்டி, போய்த் துாங்கு ‘ என்று சொல்வதைக் கேட்கவும் பாட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வந்தவனை உணர முடிவில்லை அவளால். அந்த வாய்ப்பும் கூட இல்லாதவராக நிற்கிறார் அப்பா. கூடவே இருக்கிற ஒருவரைப் பார்க்கவே இயலாத துக்கம் அவருக்கு.

நம்பிக்கையில் வாழ்வது நம் சமூகம். உலகில் பல சமூகங்களுக்கும் பலவிதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. பாறையின் மீதும் கூரையின் மீதும் தன் குடும்பத் தெய்வங்கள் வந்து பலியை ஏற்றுக் கொள்கின்றன என்னும் நம்பிக்கை மக்களிடம் இருப்பதைப் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம். தம் குடும்பத் தெய்வங்கள் தம் பிரச்சனைகளின் போது தம் கனவில் வந்து தீர்வுகளைச் சொல்வதுண்டு என்கிற நம்பிக்கை பல மலைவாழ் மக்களிடம் உள்ளதைப் படித்திருக்கிறோம். காக்கைளின் வடிவில் பித்ருக்களைக் காணப் பழகிய சமூகம் நம்முடையது. நந்தனைச் சிதம்பரம் அழைத்துக் கொள்வதற்காக அவருக்குப் பண்ணையார் இட்ட வேலைகளையெல்லாம் தெய்வமே செய்து முடித்தது என்றும் படித்திருக்கிறோம். ‘ஆயுதங்களே இல்லாதவனாக நான் மட்டும் ஒரு பக்கம், என் படைகள் ஒரு பக்கம், இரண்டில் எதுவேண்டும் ? ‘ என்று கிருஷ்ணன் வினவிய போது துரியோதனன் படையையும் அர்ஜூனன் அவரது துணையையும் கேட்டுப் பெறுகிறார்கள். அதுவும் ஒரு நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை பண்பாட்டின் ஞாபகங்கள் வழியாகவே மனிதர்களிடம் வேர்விட்டுத் தொடர்ந்து பரவும் ஒன்றாகும்.

எந்த ஆசையுமில்லாத சிறுவன் கண்ணனுடன் பத்து நாட்கள் இசைத்தும் பாடியும் நீந்தியும் கோயிலுக்கு அழைத்துச் சென்றும் களிக்கும் கிருஷ்ணனை மற்றவர்களால் பார்க்க இயலாமல் போவது துரதிருஷ்டவசமானதுதான். ‘கண்ணன் என் தோழன் ‘ என்று சொல்கிற கிருஷ்ணன் தம்மையும் தோழர்களாகச் சொல்லக் கூடாதா என்கிற ஆதங்கம் யாருக்குத்தான் இருக்காது ? ஆனால் அவன் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய ஆட்களைப் பார்த்துப் பேசுவதை விட அடையாளமே தெரியாத ஆட்களுடன் பேசிப் பழகுவதுதான் அவனுக்கும் பிடித்திருக்கிறது போலும்.

****

பொய்த்தேவு என்னும் நாவலின் மூலம் தமிழ் நாவல் உலகில் அழுத்தமான தடம் பதித்தவர் க.நா.சு. என்று அழைக்கப்படும் க.நா.சுப்பிரமணியன். சிறந்த விமர்சகரும் மொழிபெயர்ப்பாளரும் கூட.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்