பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்

This entry is part 19 of 49 in the series 19991203_Issue

அம்பை


மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.

இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.

அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.

அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய ‘விபரீத எல்லைகள் ‘ பற்றிய ஒரு பயம் இருந்தது என்கலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. ‘புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ‘ போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.

எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. ‘கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்… ‘ (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் – அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, ‘கறுப்பு ஆனால் அழகு ‘ என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.

அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு – அழகின்மை, கறுப்பு – சிவப்பு, இளமை – முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதி யுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது – அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).

எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் ‘நீ பிராமண தாசியாகிவிடு ‘ என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் ‘சுதந்திரம் ‘ உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

– இந்த கட்டுரையின் கடைசிப் பகுதி அடுத்த வாரம் திண்ணையில்

(தி ஜானகிராமனின் நாவலான ‘மரப்பசு ‘ வை படித்தவர்கள், இந்த கட்டுரை பற்றியும் பொதுவாக மரப்பசு பற்றியுமான தங்கள் கருத்துக்களை திண்ணைக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். அடுத்த வாரம் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி வெளியாகும்போது, அந்த கடிதங்களும் பிரசுரிக்கப்படும்) -திண்ணை, டிஸம்பர் 12, 1999

Series Navigation<< மரப்பசு பற்றி அம்பைஅஞ்சலி >>

அம்பை

அம்பை

1 Comment

Comments are closed.