பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

செல்வன்


தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் நிர்மூடர்களின் கேந்திரமாகி வருகிறது என்பதற்கு குஷ்பு விவகாரத்தில் இவர்கள் எடுத்த முட்டாள்தனமான நிலைப்பாடே சான்றாகும்.குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு இவர்கள் எதிர்ப்பது முட்டாள்தனமான ஆணாதிக்க காரணங்களை காட்டி.அதுவும் தந்தை பெரியாரின் கருத்துக்களுக்கு நேர் எதிராக இவர்கள் செயல்படுகிறார்கள்.

கற்பு பற்றி தந்தை பெரியார் என்ன சொன்னார்?

1. நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்கள் எவ்வளவு கேவலமாக ஆகி விட்டார்கள் ? – தந்தை பெரியார், வாழ்க்கை துணை நலம் புத்தகத்தில், 1938 ஆம் பதிப்பு

4. கேள்வி: பெண்கள் புருஷர்கள் என்றைக்கு சுதந்திரம் கொடுப்பார்கள் ?
பதில்: கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள். – தந்தை பெரியார் – குடிஅரசு 29.10.1933. விடுதலை வெளியிட்ட தந்தை பெரியார் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்.

8. ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும் – தந்தை பெரியார் – குடியரசு 8.2.1931 – தந்தை பெரியார் அறிவுரை 100 நூலிலிருந்து.

(நன்றி:இட்லிவடை அவர்களின் பதிவு)

இப்படி புரட்சிகரமான கருத்துக்களை சொன்ன பெரியாரை அப்படியே வழிமொழிந்து கருத்து சொன்னவர் தான் குஷ்பு.குஷ்பு சொன்னது பெரியார் சொன்னதில் கால் பங்கு அளவு கூட கிடையாது.உண்மையை சொல்லப்போனால் இந்த மாதிரி கருத்துக்களை சொன்னதாலேயே குஷ்பு இப்படத்தில்ந் நடிக்க முழுதகுதி பெறுகிறார் என்றே சொல்லவேண்டும்.

மணிஅம்மை அளவுக்கு குஷ்பு என்ன சாதனை செய்தார் என்றும் முட்டாள்தனமான கேள்வி எழுப்புகிறார்கள்.அடுத்து காந்தி வேஷத்தில் நடிக்க பென் கிங்க்ஸ்லி என்ன சாதனை செய்தார் என எந்த பிரஹஸ்பதியாவது கேள்வி எழுப்பினாலும் ஆச்சரியமில்லை.

கற்பு என்று நாம் தலையில் வைத்து ஆடும் மூடத்தனமான கோட்பாடு உண்மையில் பெண்ணை அடக்கி வைக்கவே பயன்படுகிறது.

சமத்துவமும்,சமநீதியும் இருக்கும் சமூகத்தில் மட்டுமே இயற்கையான அன்பில் விளையும் கற்பு இருக்க முடியும்.ஆணாதிக்க மண்ணில் விளையும் கற்பு நிர்பந்தப்படுத்தி பெறும் கற்பு.

நான் யாரையும் வேலிதாண்ட சொல்லவில்லை.வேலியே வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.வேலிபோட்டு பாதுக்காக்க பெண் என்ன ஆடா,மாடா?சொந்த விருப்பத்தில்,சுய விருப்பத்தில் ஆணோ பெண்ணோ முடிவெடுக்கட்டும்.அந்த முடிவு எந்த முடிவாக இருப்பினும் தலைவணங்கி அதை ஏற்பதே ஒரு சமூகத்துக்கு மதிப்பை அளிக்கும்.முடிவெடுக்கும் உரிமையை அளிக்கும் சமூகமே,அந்த முடிவால் ஆணையோ,பெண்ணையோ துன்புறுத்தாத சமூகமே சமநீதி வழங்கும் சமூகமாகும்.அப்படிப்பட்ட சமூகத்தில் தான் உண்மையான கற்பும்,உண்மையான காதலும் மலர முடியும்.

நீ வேலிதாண்டினாய்,கற்பிழந்தவள் என பெண்ணை பார்த்து குறை சொல்லும் சமூகம் கடைந்தெடுத்த கேவலமான சமூகமாகும்.இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விஷயமும்,உரிமையுமாகும்.வேலிபோட்டு பெண் கற்பை பேணிக்காக்கும் சமூகம் பெண்ணை ஆட்டுப்பட்டியில் அடைத்து வைப்பது போன்ற கொடுமையை செய்கின்ற சமூகமாகும்.

சமத்துவமும்,சுதந்திரமும் மலரவேண்டுமெனில் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை அனைத்தும் பெண்ணுக்கும் வழங்கப்படவேண்டும்.அப்படி வழங்கப்பட்டிருப்பின் அதை அவர்கள் எவ்விதத்தில் பயன்படுத்தினாலும் அதை தலைவணங்கி ஏற்கும் பக்குவம் ஒரு சமூகத்துக்கு இருந்தாக வேண்டும்.

அப்படி உரிமைகள் வழங்கப்பட்ட சமூகத்தில் நிலவும் கற்பும்,காதலுமே உண்மையான கற்பாகவும்,காதலாகவும் இருக்க முடியும்.பெயரளவில் மட்டுமே உரிமைகள் வழங்கப்படும் சமூகங்களில் உண்மைகாதலும்,கற்பும் நிலவ முடியாது.

அப்படி உரிமைகளை வழங்காத சமூகங்களும்,ஏட்டளவில் மட்டுமே அதை வழங்கிவிட்டு நிஜத்தில் அப்படிப்பட்ட பெண்களை ஓடுகாலிகள்,கற்பிழந்தவர்கள்,விபச்சாரிகள் என பேசும் சமூகங்கள் கயமைத்தனம் நிரைந்த வர்க்கத்திமிர் பிடித்த ஆணாதிக்கம் மிகுந்த,பெண்ணடிமைத்தனம் நிறைந்த சமூகங்களாகும்.

இந்த திமிர் ஆண்திமிர்,அழிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.இது ஜாதித்திமிரை விட கேவலமான திமிராகும்.இப்படிப்பட்ட ஆண்கள் புழுக்களை விட கேவலமானவர்கள்.இவர்கள் திமிரை அழிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

ஒழுக்கம் என்பதே பெண்களுக்கு மட்டும் என்றாகிவிட்டது நம் சமூகத்தில்.சமநீதி என்பது இல்லாத சமூகத்தில் அதர்மமும்,அநியாயமுமே தலை விரித்தாடும்.ஒழுக்கம் கெட்டு குடிகேடனாய் பஸ்ஸ்டாண்டில் நாய் போல் பெண்கள் பின்னால் அலையும் ஆண்,தனக்கு மடங்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில்லை.அவளை அனுபவித்து ஏமாற்றிவிட்டு கல்யாணம் என்று வரும்போது கிராமத்து குத்துவிளக்காக பார்த்து கல்யாணம் பண்ணிக்கொள்கிறான்.

ஏன் இந்த முரண்பாடு?ஏன் இந்த இரட்டை வேஷம்?காதலிக்க பலர்,கைபிடிக்க கன்னி.என்ன நியாயம் இது?

ஆண் ஒழுக்கத்தை வலியுறுத்தாத பெண் ஒழுக்கத்தை மட்டுமே வலியுறுத்தும் சமூகத்தில் சமநீதி இருக்காது.ஆணாதிக்கமே இருக்கும்.மாதவியிடம் என்று கோவலன் போனானோ அன்றே தமிழ் கலாச்சாரம் அழிந்துவிட்டது.அதன் பின் எஞ்சி நின்றது ஆணாதிக்கமே.

ஒழுக்கமும்,மானமும் கெட்ட இந்த ஆண் வர்க்கம் தரும் கற்புக்கரசி என்ற பட்டத்தை பெறுவதை விட தூக்கு போட்டுக்கொண்டு சாகலாம்.

ஆணுக்கு கற்பை பொறுத்தவரை என்ன வரையறையை ஒரு சமூகம் அளிக்கிறதோ அதே வரையறையை பெண்ணுக்கும் அளிப்பதே சமதர்மமாக இருக்கும்.பல பெண்களை மடக்கி அனுபவிக்கும் ஆண் சாமர்த்தியசாலி என தன் நண்பர்களால் புகழப்படுகிறான்.பல ஆண்களோடு போகும் பெண் விபச்சாரி என பட்டம் கட்டப்படுகிறாள்.இருவரும் செய்வது ஒரே செயலை,ஆனால் கிடைப்பது வேறு,வேறு பட்டம்.ஏன் இந்த முரண்பாடு?

கமலஹாசனையும்,ஜெமினி கணேசனையும் காதல் இளவரசன்,காதல் மன்னன் என தலையில் தூக்கி வைத்து ஆடும் நாம் குஷ்புவை மட்டும் ஏன் கீழே போட்டு மிதிக்கிறோம்?

ஆணுக்கு என்ன விதி இருக்கோ அதையே பெண்ணுக்கும் அளிப்பதே முறை.அது எதுவாக இருப்பினும் சரி.

Promiscuity என்பது வெளிநாட்டிலிருந்து நாம் கற்கவேண்டிய கோட்பாடு அல்ல.அது நம் புராணங்களிலும்,இதிகாசங்களிலும் ஏராளமாக உள்ளது.
திருமணத்துக்கு முன் உறவு கொண்டு பிள்ளை பெற்ற குந்தி
திருமணத்துக்கு பின்னும் மாற்றாருடன் உறவு கொண்டு குழந்தைகளை பெற்ற குந்தி,மாத்ரி.வியாசருடன் சேர்ந்து குழந்தை பெற்ற அம்பா,அம்பாலிகா.சத்யவதியுடன் சேர்ந்து குழந்தை பெற்ற முனிவர்(அவர் மகனே வியாசர்)பலதாரமணம் செய்த திரவுபதி, இப்படி பல உதாரணங்களை காட்ட முடியும்.இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இவர்கள் மிகவும் மதிக்கப்பட்ட பெருவாழ்வு வாழ்ந்தனர்.அன்றைய சமூகத்தில் இவர்களுக்கு எந்த தகுதி குறைவும் ஏற்படவில்லை.

கஜூராஹோ சிலைகளையும்,கோயில் சிற்பங்களையும் பாருங்கள்.காமம் என்பதை கலையாக்கி ஒரு சாத்திரமாக்கி வைத்த பூமி நம் பூமி.இங்கே காம உணர்ச்சியை அடக்கி வைக்கும் மடிசஞ்சி கலாச்சாரம் பிரிடிஷ்காரன் வரும் வரை இருந்தது கிடையாது.பிரிடீஷ்காரனே கைவிட்டு விட்ட விக்டோரியா காலத்து பிரிடிஷ் நடைமுறைகளையும்,ஒழுக்க கோட்பாடுகளையும் நாம் இன்னமும் சுமந்து திரிகிறோம்.

ராமனும்,சீதையும் கற்பை விரும்பி ஏற்றனர்.குந்தியும்,சத்யவதியும் விரும்பி அதை கை விட்டனர்.இவர்கள் அனைவரும் அன்றைய சமூகத்தில் மதிக்கப்பட்டே வாழ்ந்தனர்.கற்பு என்பது கடவுள் மாதிரி.அவரவர் விரும்பிய வடிவில் அதை காணலாம்.அல்லது விரும்பாவிட்டால் சுத்தமாக விட்டுவிடலாம்.அப்படி ஒரு சுதந்திரத்தை நமக்கு வழங்கிய பூமியே பாரத பூமி.

கண்ணபிரான் ரவிசங்கர் சொல்லுவதுபோல் அடுத்த தலைமுறையில் வளரும் ஆண் பெண் குழந்தைகளாவது, நியதிகள் இரு பாலருக்கும் சமமே என்று வளர்ப்பது, வெகு விரைவில் நல்ல விடியலைத் தரும். கலாம் அவர்கள் சொல்லும் “Back to children” என்ற நோக்கு, புதிய சமுதாயம் பிறக்க வழி கோலும்.

தேவை கொஞ்சம் பொறுமை, நிறைய சிந்தனை, சாமர்த்தியமான ஆக்க பூர்வமான செயல்கள்.

“காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும்
மாண்புறச் செய்து வாழ்வமடி!”

References:

www.idlyvadai.blogspot.com
http://madhavipanthal.blogspot.com/

Series Navigation

செல்வன்

செல்வன்