ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

பாவண்ணன்


புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் இருக்கும் ஊர் வளவனுார். எங்கள் கிராமம். ரயில்வே ஸ்டேஷனும் ஏரியும் எங்கள் கிராமத்தின் மிகப்பெரிய சொத்துகள். சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பதினேழு பாளையங்களின் பொதுமக்களை அவ் வப்போது அருகில் இருக்கிற நகரங்களுக்கு அழைத்துச் சென்று திரும்பும் ரயில்கள். கூவென்று கூவிக்கொண்டு ஓடிவரும் ரயிலை என் அப்பா எனக்குக் காட்டிய போது பயத்தில் அழுது நடுங்கி விட்டேன். அப்போது நான் சிறுவன். திரும்பிப் பார்க்கும் தைரியம் கூட ஏலலாமல் அவர் தொடையோடு ஒட்டிக் கொண்டிருந்தேன். அதன் சத்தமும் நீண்ட ஆகிருதியும் என்னை மிரள வைத்து விட்டன. என்னை அழவைத்துப் பார்க்க விரும்பும் வீட்டு ஜனங்கள் ரயில் பார்க்கப் போகலாமா என்றொரு கேள்வியை வீசிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். மெதுமெதுவாக என் பயம் விலகியது. தொலைதுாரத்துக்குச் சென்று விட்ட ரயிலின் முதுகைப் பார்க்கத்தான் முதலில் தைரியம் வந்தது. கண்ணை விட்டு மறைய ஒரு சில நொடிகளே மீதமிருக்கும் நிலையில் பார்ப்பேன். ஒரு வளைகோடு போல நெளிந்து மின்னி மறையும் ரயில். அப்புறம் அந்த ரயில் என் கற்பனையில் மட்டும் ஓடும். நேருக்கு நேராக நின்று ரயிலைப் பார்க்க வெகுநாட்கள் பிடித்தன.

அதற்கப்புறம் ரயிலைப் பார்க்கவென்றே காலையிலும் மாலையிலும் காத்துக் கிடக்கத் தொடங்கினேன். கடந்து செல்லும் ரயிலின் பெட்டிகளை எண்ணுவேன். உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்துச் சிரித்தபடி கையசைப்பேன். ஆகாய விமானத்தைப் பார்த்ததும் கெட்ட வார்த்தைகளால் திட்டும் சிறுவர்கள் ஊர்ந்து செல்லும் ரயிலைக் கொண்டாட்டத்தோடு பார்த்துக் கையசைக்கும் காரணம் புரியாத ஒரு புதிர். நள்ளிரவில் இருளின் கடலுக்குள் வெளிச்சத்துடன் ரயில் ஒரு கப்பல் போலக் கிழித்துக் கொண்டு செல்வது ஆச்சரியம் மிகுந்த காட்சி. ரயிலின் சக்கரத்தில் ஈர்ப்புச் சக்தி இருக்கிறதென்றும் அருகில் சென்றால் இழுத்துக்கொள்ளும் என்றும் கூட்டாளிகள் சொன்னதை நம்பித் தள்ளி நின்றே பார்ப்பதுண்டு.

ரயில் பயணம் என் இளமையிலிருந்து இன்றுவரை தொடரும் ஒரு பெருங்கனவு. என் கனவுரயில் தண்டவாளங்களில் ஓடத் தொடங்கி சட்டென்று வானத்துக்குத் தாவிவிடும். ஆகாய வீதியில் அந்த ரயில் வளைந்து வளைந்து ஓடும். மேகங்களைக் குடைந்து வரும். வழிநெடுக நட்சத்திரங்களைத் தொட்டுக் கொண்டே செல்வேன். எல்லா மலைகளையும் கடல்களையும் அருவிகளையும் எளிதாகத் தாண்டித் தாண்டிச் செல்லும். பயணங்களின் மீதிருக்கிற அளவு கடந்த ஆசையே அக்கனவுகளுக்குக் காரணம். மனிதர்களுக்காக மனிதர்களே உருவாக்கிக் கொண்ட வாகனம் ரயில். கடவுளர்களுக்கு மயிலும் எலியும் சிங்கமும் கருடனும் வாகனங்களாக அமைந்திருப்பது போல நவீன மனிதனுக்கு அமைந்த வாகனம் ரயில். ஞானப்பழத்துக்காக மயில் வாகனமேறி உலகைச் சுற்றி வரும் முருகன் கதையில் பொதிந்திருக்கிற பொருள் ஆழமானது. வாகனம்-பயணம்-அனுபவம்-ஞானம் என விரியும் கோலம் அது. வாகனம் புதிய புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. புதுப்புது அனுபவங்களுக்கு இடம் வகுத்துக் கொடுக்கிறது. அனுபவங்கள் உலகை அறிமுகப்படுத்துகின்றன. ஞான வாசல்களைத் திறக்கின்றன. ஒவ்வொரு முறையும் என் ரயில் பயணங்கள் புதுப் புது அனுபவங்களையும் புதிய ஞானத்தையும் தொடர்ந்து நல்கியபடி உள்ளன. பயணங்களில் சந்திக்க நேர்ந்த மனிதர்களின் முகங்களும் காட்சிகளும் அழியாத சித்திரங்களாக மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

ரயில் பல மனிதர்களின் முகங்களை மாற்றுகிறது. பயணம் செய்பவர்களின் மனநிலையைமாற்றுகிறது. வழக்கமான நாட்களில் செலவு செய்ய யோசிக்கிறவர்கள் கூட ரயில் பயணத்தில் தாராளமாகச் செலவு செய்கிறார்கள். புற வாழ்க்கையில் பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவதைத் தவிர்ப்பவர்கள் பலரும் பல தருணங்களில் தரையைச் சுத்தம் செய்தபடி வரும் சிறுவர்களுக்கும் இடுப்பில் வைத்திருக்கும் கைக்குழந்தையோடு பிஞ்சுக் கையை நீட்டும் சிறுமிக்கும் கட்டையான குரலில் பாடல்களைப் பாடும் கண்தெரியாத இசைக்கலைஞர்களுக்கும் தானம் செய்யத் தயங்குவதில்லை. அருகில் அழும் சிறுகுழந்தைக்குத் தன் பையில் இருக்கும் பிஸ்கெட்டுகளை அன்புடன் எடுத்துக் கொடுக்க யோசிப்பதில்லை. பக்கத்து இருக்கையிலிருந்து சிரிக்கும் குழந்தையுடன் இனிய குரலில் பேசத் தயங்குவதில்லை. வெளி வாழ்வில் படிக்கவே நேரம் கிடைக்காதவர்களுக்குத் தொடர்ந்து படிக்கிற மனநிலை வாய்ப்பதுண்டு. படிப்பே வேலையாக இருப்பவர்களின் பயணம் அரட்டையும் சிரிப்புமாக மாறிவிடுவதுண்டு. புதிய முகம். புதிய உணர்வு. புதிய ஊக்கம். எல்லாம் பயணத்தின் மகிமை.

பயணத்தின் மகிமையை நினைத்து நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கும் தருணங்களிலெல்லாம் தவறாமல் ஞாபகத்தில் விரியும் சிறுகதை ந.பிச்சமூர்த்தியன் ‘தாய் ‘ என்னும் கதை. பிச்சமூர்த்தியின் நுாற்றுச் சொச்ச கதைகளில் அளவில் மிகச்சிறிய கதை இது. மூன்றே மூன்று பக்கங்கள். 1944ல் எழுதப்பட்டுள்ளது. இன்றும் அதன் பொலிவு மங்காமல் அப்படியே உள்ளது. உலகில் கருணை, இரக்கம், அன்பு, தாய்மை போன்ற சொற்களுக்குப் பொருள் குன்றாத வரைக்கும் இதுபோன்ற கதைகளுக்கு உள்ள ஈர்ப்பும் குறையாமல் இருக்கும்.

கதை முழுக்க முழுக்க ஒரு ரயில் பயணத்தில் நடைபெறுகிறது. எங்கு கிளம்பி எங்கு முடியும் பயணம் என்று சொல்லப்படாத பயணம். ஒரு தாய் தன் குழந்தையோடு உட்கார்ந்திருக்கிறாள். குழந்தை அழுகிறது. குழந்தைக்கு ஊட்ட அவள் மார்பில் பால் சுரக்கவில்லை. கரையைத் தொட்டுத் தொட்டுத் திரும்பும் அலையைப் போல தாயின் மார்பில் பாலருந்த முனைந்து தோற்கிறது குழந்தை. மேலும் உறிஞ்சினால் ரத்தம் மட்டுமே வரும் என்கிற நிலை. அழுது அழுதே அக்குழந்தை துாங்கி விடுகிறது. அதே பெட்டியிலேயே இன்னொரு தந்தை பயணம் செய்கிறார். அவர் அருகிலும் சில குழந்தைகள் இருக்கிறார்கள். தாயற்றவை. கைக்குழந்தை அழுகிறது. கக்குவான் இருமல். அமைதிப்படுத்தத் தெரியாத தந்தை பாட்டிலில் இருக்கும் பிராந்தித் துளிகளைக் குழந்தையின் வாயில் ஊற்றித் துாங்க வைத்து விடுகிறான். கொடுக்கப்பட்டது மருந்து என்று மற்ற பயணிகள் எண்ணிக் கொண்டு விடுகிறார்கள். பிறகுதான் ஒரு கிழவியிடம் பேச்சுவாக்கில் கொடுத்தது மருந்தல்ல என்றும் பிராந்தித்துளிகள் என்றும் சொல்கிறார் அந்தத் தந்தை. சிறிது நேரம் கழித்து விழித்துவிட்ட குழந்தை மீண்டும் இருமலால் அவஸ்தைப்பட்டு அழுகிறது. வேறு வழியின்றி தந்தை பிராந்திப் பாட்டிலைத் திறக்கப் போகும் போது சட்டென்று பழைய தாய் குறுக்கிட்டுத் தடுத்து ‘பிராந்தியத் தொடாதீங்க ‘ என்று ஆவேசமுடன் சொன்னபடி குழந்தையை வாங்கித் தன் மார்புடன் அணைத்துக் கொள்கிறாள்.

பயணம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும் நகர்வின் குறியீடு. பயணம் என்பதே நகர்தலின் அடையாளமாக இருப்பதால்தான் பயணம் மேற்கொள்ளும் பலரும் தமக்குள் புதைந்து கிடக்கும் இயல்பான சுபாவங்களை மீட்டெடுத்துத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். மனத்தளவிலும் எண்ண அளவிலும் உயர்தல் கூட ஒருவித நகர்வுதான். நாயுடு ஸ்திரீ தன் குழந்தைக்குத் தாய் என்கிற நிலையிலிருந்து அடுத்தவர் குழந்தைக்கும் தாய் என்கிற நிலையை நோக்கி இயல்பாக நகர்ந்து விடுகிறாள். அவள் மனம் மிக இயல்பாகவே விரிவு கொண்டு விடுகிறது.ரயில் என்னும் மனிதர்களின் வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் தாயான நாயுடு ஸ்திரீயை இந்த உலகத்துத் தாய்மையின் படிமமாக நாம் உள்வாங்கிக் கொள்ள எந்தத் தடையுமில்லை. பயணத்தின் பின்னணியில் இவ்விரிவை முன்வைப்பதுதான் பிச்சமூர்த்தியின் மேதைமை.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்