நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!!

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்


அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன. இருந்தாலும், இன்றைய தேரிக்காட்டு மக்கள் அரேபியாவின் மூதாதைகளைப் போல அத்தனை ஏழைகளல்லர்!

1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தையே தீர்மாணிக்கும் அளவிற்கு அரேபியாவின் பெட்ரோல் வளம் வளர்ந்தது. உலக வல்லரசுகள் இன்றுவரை இந்தப் பகுதியில் உள்ள நாடுகளைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அமெரிக்க அரசு இன்றளவும் துவம்சம் செய்து வருவது அங்கிருக்கும் பெட்ரோல் வளத்திற்காகத்தான் என்பதை பிறந்த குழந்தையும் அறியும்.

பாலைக் காட்டிலும் வெண்மை நிறம் கொண்டது டைட்டானியம். இந்தத் கனிமத்தை 1791 ஆம் ஆண்டில் மனித இனம் முதன்முதலாக அறிந்து கொண்டது. 1795 ஆம் ஆண்டில் இதற்கு “டைட்டானியம்” என்ற பெயரை அது சூட்டியது. எனினும் அதனை சுத்தமான உலோகமாக மாற்றக் கற்றுக் கொண்டது என்னவோ 1910 ஆம் ஆண்டில்தான்! இல்மனைட் மற்றும் ரூட்டைல் என்ற கனம் கூடிய கனிமங்களில் இருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் இதன் பின்னரே கண்டறியப் பட்டன. 1946 ஆம் ஆண்டு வரையிலுமே டைட்டானியத்தை பரிசோதனைக் கூடங்களால் மட்டுமே உருவாக்க முடிந்தது. அந்த வருடத்தில்தான் டைட்டானிய உலோகத்தினை பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதைக் “கிரால்” என்பவர் கண்டு பிடித்தார். அவரால் முன்மொழியப்பட்ட அந்த முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது.

ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த “இந்திய நிலவியல் துறை”க்குத் தென்னிந்தியாவின் “தேரி”யிலும், கடற்கரைகளில் உள்ள “கருமணலிலும்” இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற “கனத்த” கனிமங்கள் இருப்பது தெரிந்துதான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள்.

மற்ற உலோகங்களைக் காட்டிலும் டைட்டானியம் எடை குறைந்தது. அதே நேரத்தில் எஃக்கைக் காட்டிலும் உறுதி மிக்கது. எந்த உலோகத்துடனும் எளிதில் சேரும் சிறந்த தன்மையையும் கொண்டது. இந்தத் தன்மைகள் சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தன. தம் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த உலோகத்தினை அவர்கள் பெரிதளவில் உபயோகப் படுத்தத் தொடங்கினர். இதுவே டைட்டானியத்தின் புகழை 1950-60-களில் எட்டுத் திக்கும் பரவச் செய்ததது. சோவியத் விஞ்ஞானிகளின் போக்கைக் “கன்னம்” வைத்து அறிந்து கொண்ட அமெரிக்க அரசு துடித்துதான் போனது. இருப்பினும் உடனடியாக சுதாரித்தும் கொண்டது. டைட்டானிய உலோகத்தை “இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம்” என்று அறிவித்து, அதனை சேமித்து வைக்கும் பணியில் உடனடியாக ஈடுபடத் தொடங்கியது. தான் உருவாக்கும் போர் விமானங்களில் மிக அதிக அளவில் டைட்டானிய உலோகத்தினை உபயோகிப்பது என்ற முடிவை எடுத்தது.

மேற்கூறிய தன்மைகளே டைட்டானியக் கனிமத்தின் தீராப் புகழுக்குக் காரணம். என்றாலும் கூட, இன்றைய தேதியில் மனித இனத்தை அதன் அப்பழுக்கற்ற வெண்மை நிறமே அதிகம் கவர்நதிழுத்திருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் டைட்டானியக் கனிமத்தில் 95% இந்த வெண்மை நிறத்திற்காகத்தான் உபயோகப் படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை!

டைட்டானியம் கனிமம் இல்லையேல் வெள்ளை பெயிண்ட்,, வெள்ளைக் காகிதம், (அ.இ.அ.தி.மு.க-வால் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசியல்வாதிகள் அனைவரையும் தொற்றிக் கொண்ட ” அரசியல்வாதி வெள்ளை யூனிபார்ம்” தைக்கத் தேவையான) வெள்ளைத் துணி , வெள்ளை பிளாஸ்டிக், பற்பசை, சலவைப் பவுடர், சூயிங் கம் போன்றவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் வெண்மை நம்முடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது.

இந்தக் கவர்ச்சியே ரத்தன் டாட்டாவை சாத்தான்குளத் தேரியை நோக்கிப் பாய்ந்தோடி வரச் செய்தது.

சோதனை செய்வேன்! மன நிம்மதி கொள்வேன்!

குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான்குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1989 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை நகரத்தில் வி.வி.மினரல்ஸ் என்றொரு நிறுவனம் இயங்கத் தொடங்கியது. குட்டம், நவ்வலடிப் பகுதிகளில் கடற்கரைக் கருமணலுக்காக எப்பேற்பட்டப் இழி செயலையும் செய்ய அது துணிந்தது. கடலை அம்மையாக வணங்கும் மீனவ மக்கள் அந்த நிறுவனத்தின் கொடூர லாபப் பசியின் துவம்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசியல் செல்வாக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்தமையால் ஏழை மீனவர்களால் அநீதியைத் தின்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் அடாவடி ஆட்டம் இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இல்மனைட் கனிமத்தை உற்பத்தி செய்யும் “மதிப்பு மிக்க” நிறுவனமாக அதை “உயர்த்தியிருக்கிறது!”

1998 ஆம் ஆண்டில் இந்தியக் “கனிம மணல்” தொழிலில் உலக முதலாளிகள் எவரும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்த போதுதான் டாட்டாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டூ பாண்ட் போன்ற பகாசுர டைட்டானிய வெள்ளை நிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக நினைத்தார் ரத்தன் டாட்டா. 2000 ஆம் ஆண்டில் தேரி மணலைத் தோண்டுவதற்கான அப்ளிக்கேஷனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே அவருக்கு பதில் கிடைத்தது. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 19,768 ஏக்கர் ( 80 சதுர கிலோ மீட்டர்) தேரி நிலத்தில் உள்ள மணலைத் தோண்டுவதற்கும், மணலில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கும், பிரித்தெடுத்த கனிமங்களைக் கூடுதல் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதற்குமான “உத்தேச” உரிமத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று இதில் சுமார் 25%-ஆன 5000 ஏக்கர் நிலத்திற்கான “உத்தேச உரிமத்தை” வழங்கவே தமிழ்நாடு அரசு முன்வந்திருந்தது. வேறு வழியின்றி இந்த உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் ரத்தன் கையெழுத்திட்டார்.

கவலை வெகு நேரம் நீடிக்கவில்லை. தேரியின் சிவந்த நிறம் ரத்தனை சிலிர்க்க வைத்தது. மும்பையின் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களால் கொடுக்க முடியாத பேரானந்தத்தை சாத்தான்குளத்துத் தேரியின் வறண்ட காற்று அவருக்கு அளித்தது. உப்பு முதல் புல்டோசர் வரை முக்கித் திணறி வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து உற்பத்தி செய்து ஈட்டிய லாபத்தை சில வருடங்களுக்குள்ளேயே இந்தத் தேரியிலிருந்து கறந்துவிட முடியும் என்ற கனவுகள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

சுட்டுவிரல் ஆட்டத்தில் அனைத்தும் நடந்தேறின. இந்திய அணுசக்தித் துறையைத் துவங்கிய டாக்டர்.ஹோமி பாபாவை 1944 ஆம் ஆண்டில் இந்தியப் பிரமுகராக உருவாக்கியதே ரத்தனின் தாத்தா சர்.தோராப்ஜி டாட்டா அவர்களின் அறக்கட்டளைதான் அல்லவா? தேரியைப் பரிசோதிக்கத் தேவையான அணுசக்தித் துறையின் “சான்றிதழ்” கிடைப்பதில் இம்மியும் சிரமமிருக்கவில்லை. காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது.

தேரியின் வளத்தைப் பரிசோதிக்க உலக நிபுணர்கள் ஓடோடி வந்தார்கள். பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், இந்தியாவின் எல்& டி நிறுவனங்களில் இருந்து வந்த அந்த வெள்ளை நிபுணர்கள் இரவு பகல் பாராது தம் பரிசோதனைகளை நடத்தினர். கிடைக்கும் கனிமங்களை இனம் வாரியாகப் பிரிப்பதற்கும், மதிப்பு கூட்டுவதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்ட ஆஸ்திரேலிய நாட்டின் TZMI, இந்தியாவின் தஸ்தூர்கோ நிறுவனங்களை ரத்தன் கேட்டுக் கொண்டார். தேரியின் கனிம வளப் பரிசோதனை 2004 டிசம்பரிலும், இனம்பிரிக்கும்-மதிப்பு கூட்டும் திட்டம் 2006 மார்ச் மாதத்திலும் நிறைவடைந்தது.

தேரியின் பரிசோதனைக்காக செலவிட்ட 15 கோடி ரூபாய் மன நிறைவை அளிப்பதாக அமைந்தது. நிம்மதியில் பெருமூச்சு விட்டார் ரத்தன்.

ஆடு புலி ஆட்டம்

2006 மார்ச் மாதம் அனைத்து பரிசோதனைகளும், திட்டங்களும் நிறைவடைந்தன. தண்ணீர் மட்டும்தான் பிரச்சினை. நாள் ஒன்றுக்கு சுமார் 546 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை என்றார்கள் நிபுணர்கள். தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது முந்தைய திட்டம். குடிநீருக்கே மக்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் மணல் குவாரிக்குத் தண்ணீரைக் கொடுக்க எந்த அரசுதான் முன்வரும்? வேறு வழியின்றி குலசேகரப் பட்டணத்தில் இதற்காக “கடல் நீர் உப்பகற்றி ஆலை” ஒன்றை நிறுவுவது என்று முடிவானது. உப்பகற்றி ஆலையோடு சேர்த்து 30 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் ஒன்றையும் அமைத்தால் உப்பகற்றி ஆலைக்கு ஆகும் செலவு குறையும். மேலும் திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தையும் குறைந்த விலையில் பெற்றிட முடியும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாலைகளை நிறுவுவதற்காக குலசேகரப் பட்டணத்தில் சுமார் 213 ஏக்கர் நிலம் கையகப் பத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் 2007 ஜூன் மாதம் பழைய ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பித்தது. ஜூன் 28 ஆம் தேதியன்று இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டாட்டாவும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. இதன்படி டாட்டாவின் திட்டத்திற்காக முதல் முதலில் கோரப்பட்ட 19,768 ஏக்கர் ( 80 சதுர கிலோ மீட்டர்) நிலத்தில் (கிட்டத்தட்ட) சரி பாதியான 9828.78 ஏக்கர் தேரிக் காட்டை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுக்கும் என்று முடிவானது.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தன. இவ்வெதிர்ப்பின் காரணம் நிலத்தைக் கையகப் படுத்தும் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியது. நிலத்தை டாட்டா நிறுவனமே பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியது.

“ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும். வறண்ட தரிசு நிலமான தேரிக்கு இதுவே அதிகம்”, என்றது டாட்டா நிறுவனம். கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அமைச்சர் ஒருவரின் தலைமையில் பகுதியைப் பாரிவையிட்டு ஆய்வறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப் பட்டது. ஏக்கருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது.

திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு அரசு.

“எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்கள் சந்திக்கத் தயார். திட்டத்தை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை” என்ற அதிரடி அறிக்கையை டாட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் திட்டம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.

முத்தமிழ்க் காவலரை ஏமாற்றியது யார்?

டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.

தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன.

திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப் பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?

டாட்டா டைட்டானியத் திட்டம் – உண்மை நிலவரம்

பட்டியல் 1: தோண்டப் போகும் தேரி மணலின் மொத்த அளவு

2007 ஜூன் 28 ஒப்பந்தத்தின்படி டாட்டாவிற்குக் கிடைக்க வேண்டிய தேரி நிலம் 9828.78 ஏக்கர் 39.8 சதுர கி.மீ 3.98 x 107 சதுர மீட்டர்
1ஏக்கர் என்பது 4046.8 சதுர மீட்டர்
தோண்டப் போகும் ஆழம் 7 மீட்டர்
1 ஏக்கரில் இருந்து வெளியேற்றப்படவிருக்கும் மணலின் மொத்தக் கொள்ளளவு 4046.8 சதுர மீட்டர் x 7 மீட்டர் 28,327.6 கன மீட்டர்
9828.78 ஏக்கர் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படவிருக்கும் மணலின் மொத்தக் கொள்ளளவு 28327.6 x 9828.78 27,84,25,748 கன மீட்டர் = 27.84 கோடி கன மீட்டர்

பட்டியல் 2: தோண்டப் பட்ட தேரி மணலில் இருக்கும் கனத்த கனிமங்களின் அளவும், அவற்றின் மொத்த எடையும்

தோண்டப் பட்ட தேரி மணலில் இருக்கும் கனத்த கனிமங்களின் அளவு மொத்த மணலின் அளவில் 8-10%
1ஏக்கர் இருந்து வெளியாகும் 28,327.6 கன மீட்டர் மணலில் இருக்கும் “கனத்த கனிமங்களின்” மொத்த அளவு 2266 இல் இருந்து 2833 கன மீட்டர்
இந்தக் கனிமங்களின் சராசரி அடர்த்தி (Density) கன சென்டி மீட்டருக்கு 4.5 கிராம் = அதாவது ஒரு கன மீட்டருக்கு 4.5 டன்
1 ஏக்கர் தேரி மணலில் இருக்கும் (2266) 2833 கன மீட்டர் கொள்ளளவுள்ள “கனத்த கனிமங்களின்” மொத்த எடை (2266) 2833 x 4.5 10,197 இல் இருந்து 12,749 டன்
9828.78 ஏக்கர் நிலத்தில் இருக்கும் “கனத்த கனிமங்களின்” மொத்த எடை (10,197) 12,749 x 9828.78 10,02,24,070 – 12,53,07,116 டன் = பத்தில் இருந்து பன்னிரண்டரைக் கோடி டன்

பட்டியல் 3: பிரித்தெடுக்கப்பட்ட கனத்த கனிம வரவில் இல்மனைட், ரூட்டைல், ஜிர்கான் மற்றும் சிலிமானைட் கனிமங்களின் பங்கு

இல்மனைட் 65-70%
ரூட்டைல் 4-6%
ஜிர்கான் 4%
சிலிமானைட் 15-16%
மொத்தம் 88% – 92%

பட்டியல் 4: பிரித்தெடுக்கப்பட்ட கனத்த கனிம வரவில் இல்மனைட், ரூட்டைல், ஜிர்கான் மற்றும் சிலிமானைட் கனிமங்களின் அளவும் எடையும்

கனிமத்தின் அடர்த்தி கனிமத்தின் அளவு – ஏக்கர் ஒன்றுக்கு கனிமத்தின் எடை – ஏக்கர் ஒன்றுக்கு கனிமத்தின் எடை – 9828.78 ஏக்கருக்கு
இல்மனைட் கன சென்டிமீட்டருக்கு 4.75 கிராம் = கன மீட்டருக்கு 4.75 டன் 1472.90 – 1983.1 கன மீட்டர் 6996 – 9419 டன் 6,87,62,145 – 9,25,77,279 டன் = சுமார் 7 – 9 கோடி டன்
ரூட்டைல் கன சென்டிமீட்டருக்கு 4.25 கிராம் = கன மீட்டருக்கு 4.25 டன் 90.64 – 169.98 கன மீட்டர் 385 – 722 டன் 37,84,080 – 70,96,379 டன் = சுமார் 38 – 71 லட்சம் டன்
ஜிர்கான் (கதிரியக்கத் தன்மை கொண்டது) கன சென்டிமீட்டருக்கு 4.65 கிராம் = கன மீட்டருக்கு 4.65 டன் 90.64 – 113.32 கன மீட்டர் 421 – 527 டன் 41,37,916 – 51,79,767 டன் = 41 – 52 லட்சம் டன்
சிலிமானைட் கன சென்டிமீட்டருக்கு 3.24 கிராம் = கன மீட்டருக்கு 3.24 டன் 339.9 – 453.28 கன மீட்டர் 1101 – 1469 டன் 1,08,21,487 – 1,44,38,478 டன் = சுமார் 1 – 1.4 கோடி டன்

பட்டியல் 5: பிரித்தெடுக்கப்பட்ட இல்மனைட், ரூட்டைல், ஜிர்கான் மற்றும் சிலிமானைட் கனிமங்களின் விலை

டன் ஒன்றின் விலை – அமெரிக்க டாலரில் – ரூபாயில் (2006 ஜனவரி) கனிமத்தின் எடை – ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ஏக்கரில் கிடைக்கும் கனிமத்தின் மதிப்பு விலை
இல்மனைட் 85 அமெரிக்க டாலர் (ரூ. 3476.5) 6996 – 9419 டன் 2,43,21,594 – 3,27,45,154 = 2.5 – 3.25 கோடி ரூபாய்
ரூட்டைல் 350 அமெரிக்க டாலர் (ரூ.14,315 ) 385 – 722 டன் 55,11,275 – 1,03,35,430 = ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை
ஜிர்கான் (கதிரியக்கத் தன்மை கொண்டது) 620 அமெரிக்க டாலர் = ரூ.25,358 421 – 527 டன் 1,06,75,718 – 1,33,63,666 = 1 – 1.30கோடி ரூபாய்
சிலிமானைட் – தகவல் இல்லை 1101 -1468 டன் – தகவல் இல்லை
மொத்தம் குறைந்த பட்சம் சுமார் 4 – 5.5 கோடி ரூபாய்

பட்டியல் 6: 9828.78 ஏக்கரில் இருந்து கிடைக்கவிருக்கும் கனிமங்களின் மதிப்பு

மதிப்பு விலை
இல்மனைட் 24,572 – 31,944 கோடி ரூபாய்
ரூட்டைல் 4,914 – 9,829 கோடி ரூபாய்
ஜிர்கான் 9,829 – 12,777 கோடி ரூபாய்
மொத்தம் 39,315 – 54,550 கோடி ரூபாய்

பட்டியல் 7: இல்மனைட் மற்றும் ரூட்டைல்-இல் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் பட்சத்தில் கிடைக்க வாய்ப்புள்ள வருமானம்

கிடைக்கும் கனிமத்தின் எடை – ஏக்கருக்கு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள டைட்டானியம் டை ஆக்சைடு-வின் எடை – ஏக்கருக்கு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள டைட்டானியம் டை ஆக்சைடு-வின் விலை (டன் ஒன்றுக்கு சுமார் ரூ.1 லட்சம்)
இல்மனைட் (43%-65% டைட்டானியம் டை ஆக்சைடு) 6996 -9419 டன் 2879 – 6122 டன் ரூ.29 கோடி – ரூ.61 கோடி
ரூட்டைல் (95% டைட்டானியம் டை ஆக்சைடு) 385 – 722 டன் 366 – 686 டன் ரூ.3.7 கோடி – ரூ.6.9 கோடி
மொத்தம் ரூ.32.7 கோடி – ரூ.67.9 கோடி
இல்மனைட்டையும், ரூட்டைலையும் டைட்டானியம் டை ஆக்சைடாக தயாரிப்பதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் கனிமங்களை அப்படியே விற்றால் கிடைக்கும் வருமானம் = ரூ.3.0 கோடி – ரூ.4.25 கோடி டைட்டானிய டை ஆக்சைடாக உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் வருமானம் = ரூ.32.7 கோடி – ரூ.67.9 கோடி டைட்டானியம் டை-ஆக்சைடு உற்பத்தியினால் வரவிருக்கும் கூடுதல் வருமானம் = ரூ.29.7 கோடி – ரூ.63.7 கோடி

பட்டியல் 8: 9828.78 ஏக்கரில் இருந்து டைட்டானியம் டை- ஆக்சைடை உற்பத்தி செய்தால் கிடைக்கவிருக்கும் வருமானம்

மதிப்பு விலை
இல்மனைட் 2,85,035 – 5,99,556 கோடி ரூபாய்
ரூட்டைல் 36,366 – 67,819 கோடி ரூபாய்
ஜிர்கான் 9,829 – 12,777 கோடி ரூபாய்
மொத்த வருமானம் (சிலிமானைட்டை சேர்க்காமல்) 3,31,230 – 6,80,152 கோடி ரூபாய் = ரூ. 3 லட்சம் கோடி – ரூ.7 லட்சம் கோடி

பட்டியல் 8: டாட்டா டைட்டானியா திட்டத்தின் செலவு கணக்கு

முதலீடு ரூ.2,500 கோடி
இயக்கம் – நிர்வாக செலவு = டன் ஒன்றுக்கு 2.39 அமெரிக்க டாலர் = ரூ.97.751 = ரூ.98 ஏக்கருக்கு = ரூ.9,99,306 – ரூ.12,49,402 9828.78 ஏக்கருக்கு = 982,19,58,827 – 1228,00,97,390 = ரூ. 1230 கோடி
மொத்த செலவு (2500 + 1230) 3730 கோடி

பட்டியல் 9 : மொத்த லாபம்

பட்டியல் 9.1. டைட்டானியம் டை-ஆக்சைடை உற்பத்தி செய்யாமல் கனிமங்களை அப்படியே விற்கும்போது கிடைக்க வாய்ப்புள்ள லாபம்

வருமானம் சுமார் 50,000 கோடி ரூபாய்
செலவு சுமார் 1,500 கோடி ரூபாய்
லாபம் 48,500 கோடி ரூபாய்

பட்டியல் 9.2. டைட்டானியம் டை-ஆக்சைடை உற்பத்தி செய்து விற்கும்போது கிடைக்க வாய்ப்புள்ள லாபம்

வருமானம் சுமார் 5,00,000 கோடி ரூபாய் ( ஐந்து லட்சம் கோடி ரூபாய்)
செலவு 3730 கோடி ரூபாய்
லாபம் 4,96,270கோடி ரூபாய் (4.9 லட்சம் கோடி ரூபாய்)

ரத்தன் டாட்டாவின் திட்டம்

1. வருடம் ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை- ஆக்சைடை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவுவது.

2. 9828.78 ஏக்கரில் இருந்து கிடைக்க வாய்ப்புள்ள டைட்டானியம் டை- ஆக்சைடு = 3,18,94,391 – 6,69,14,334 டன் = 3 கோடி டன் – 7 கோடி டன்

3. ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்தால் 3-7 கோடி டன் டைட்டானியம் டை-ஆக்சைடை உற்பத்தி செய்யத் தேவைப் படும் காலம் = 300 – 700 ஆண்டுகள்!

டாட்டாவின் பஞ்சப் பாட்டும், அவர் அறிய வேண்டிய பைந்தமிழ் மக்களின் சீர் மரபும்

ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்சைடை டாட்டா உற்பத்தி செய்யப் போகிறார். டைட்டானியம் டை ஆக்சைடுவின் விலை வருடா வருடம் ஏறுமுகமாக இருக்கிறது.

பட்டியல் 10. டைட்டானியம் டை ஆக்சைடு-வின் விலை
2002 2007
ரூ.87,000 ரூ.1,00,000 – ரூ.1,40,000

அதுபோல ஒரு டன் டைட்டானியம் உலோகத்தின் விலை 2005 ஆம் வருடத்தில் ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் வரை இருந்தது. ஆனால் 1981 ஆம் ஆண்டில் இதன் விலை டன்னுக்கு சுமார் 7 லட்சம் ரூபாயாக இருந்தது. இதற்குக் காரணம் அந்த வருடத்தில் அமெரிக்காவில் போர் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதுதான்.

அடுத்த 20 வருடங்களில் எஃக்கிற்குப் பதிலாக அதைவிட எடை குறைந்ததும், உறுதி மிக்கதும், துருப்பிடிக்காத உலோகமான டைட்டானியமே கூடுதலாக உபயோகப் படுத்தப்படும் என்பது நிபுணர்களின் கருத்து. டைட்டானிய உலோகத்தின் விலை அடுத்த சில வருடங்களில் வெகு வேகமாகக் கூடும் என்பதுதான் உண்மை நிலை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாத்தான்குள டைட்டானியத் திட்டத்தில் இருந்து மிகக் குறைவான வருமானமே தங்களுக்குக் கிடைக்கும் என்று டாட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் ஆகும்.

டைட்டானியம் டை-ஆக்சைடுக்கான விலையை நாம் நமது கணக்கிடலில் டன் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் என்றே கருதியுள்ளோம். ஆனால் அதன் இன்றைய விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாகும். ஒவ்வொரு வருடமும் அது ஏறுமுகமாக இருக்கிறது.

ஒரு டன் டைட்டானியம் டை-ஆக்சைடுவின் விலை ரூ.1 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட வருடத்திற்கு 1 லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்சைடை டாட்டாவின் ஆலை உற்பத்தி செய்தால் அவருக்குக் கிடைக்கப்போகும் வருட வருமானம் ரூ.1000 கோடி ஆகும். அவர் போடப்போகும் முதலீட்டுப் பணமான ரூ.2500 கோடியை வெறும் இரண்டரை வருடங்களில் எடுத்து விடுவார். (இன்றைய விலையான ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை வைத்துப் பார்த்தால் அவரது முதலீடு 20 மாதங்களுக்குள்ளாகவே திரும்பி வந்துவிடும்!)

சாத்தான்குளத்துத் தேரியில் இருந்து டைட்டானிய உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆலையை அவர் நிறுவுகிறார் என்றால் அதில் இருந்து எவ்வளவுதான் அவர் சம்பாதிப்பார்? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

முதல் வருடத்திலேயே போட்ட மூலதனத்தை எடுத்து விட்டு அடுத்த 500 வருடங்களுக்கு இந்தத் தேரியின் முடி சூடா மன்னன் நானே என்று கூற நினைக்கும் ரத்தன் டாட்டாவின் ஆசையை என்னென்று சொல்வது?

தமிழக மக்களை முட்டாள்கள் என்று அவர் நினைத்துவிட்டாரோ? சத்தீஸ்கர், ஒரிசா மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களைப் போல தமிழர்களையும் தவறான தகவல்களை அளிப்பதன் மூலம் எளிதில் வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று கனவு காண்கிறாரோ?

பாவம்! தமிழினம் பற்றி அவர் அறியவில்லை!!

“அறிவே முதற்பொருள்! வயிறல்ல” என்பதை இரண்டாயிரம் வருடங்களாகக் கூறி வரும் இனம் இது!

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்று பாடிய பெருந் தகைகளைத் தம் பாட்டன்மார்களாகக் கொண்ட சமூகம் இது!

டாட்டா, பிர்லா, ஏன் இன்றைய உலகத்தின் “புது” முதலாளிகள் அனைவரின் மூதாதைகளும் காடுகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கொற்கைப் பட்டணம், அழகன்குளம், காவேரிப் பூம்பட்டிணம், அரிக்கமேடு என்ற துறைமுகப் பட்டணங்களைக் கொண்ட மக்களல்லவா இவர்கள்!

இவர்களையா அவரால் ஏமாற்றிட முடியும்?

இன்னொரு சிலப்பதிகாரமோ?

இந்தத் திட்டத்தினால் மூன்று மக்கள் குழுக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இரண்டுவகை நிலப் பகுதிகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

1. திட்டத்திற்காக நிலத்தை விற்கப் போகும் மக்கள்

2. திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையத்தையும், நல்ல நீரைக் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையையும் ஏற்றுக் கொள்ளவிருக்கும் குலசேகரப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராம மக்களும், மீனவர்களும்

3. திட்டம் வரவிருக்கிற “சாத்தான் குளத் தேரி”யை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்

4. சாத்தான்குளம் தேரியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி

5. குலசேகரப்பட்டணத்தை அடுத்துள்ள கடற்கரையும், கடலும், அவற்றில் வாழும் உயிரினங்களும்.

ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது. குலசேகரப் பட்டணம் மற்றும் அதை அடுத்துள்ள மணப்பாடு போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாவ்வாதாரங்களும் கடல் நீர் உப்பகற்றி ஆலையின் இயக்கத்தாலும், மின் நிலையத்தின் செயல்பாட்டாலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

இப் பாதிப்புகள் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது உடனடி அவசியம். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டத்திற்காக டாட்டா நிறுவனம் மேற்கொண்ட அனைத்து ஆய்வறிக்கைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.

திட்டத்திற்கான “சுற்றுச் சூழல் தாக்கீட்டு அறிக்கை”யையும், “சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அறிக்கை”யையும் புது தில்லியைச் சேர்ந்த “மின்-மெக்” என்ற நிறுவனம் செய்திருப்பதாக திட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கைகளை உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.

அதுபோல பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், ஆகிய நிறுவனங்களும், ஆஸ்திரேலிய நாட்டின் TZMI நிறுவனமும் திட்டம் குறித்து முன்வைத்த அனைத்து தொழில்நுட்ப அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வறிக்கைகளின் அடிப்படையில்தான் இப்பகுதி மக்களும், உயிரினங்களும் எதிர்நோக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமான இவ்வறிக்கைகளை டாட்டா நிறுவனம் இன்றுவரை வெளியிடாதது ஏன்? டாட்டாவின் இந்தக் கயமைத் தனத்தைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் இருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள?

திட்டத்தில் இருந்து டாட்டாவிற்குக் கிடைக்கப் போகும் லாபம் மிகப் பெரியது. 2005-06 ஆம் வருடத்தில் டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமே 97 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் சாத்தான்குளத் தேரியின் டைட்டானியத் திட்டமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்க வல்லது.

திட்டம் குறித்த தகவல்களை “ஒளித்து” வைத்திருப்பதன் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கப்போகும் நிலத்தை வெறும் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடிக்க டாட்டா முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசோ செங்கோலைப் பிடித்து நீதியை வழங்கத் தயங்குகிறது. “கள்வனுக்கே” பரிந்து பேசவும் அது துணிந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த இந்தத் தமிழ் மண்ணின் மனதில் “இது இன்னொரு கொலைக்களக் காண்டமோ?” என்ற பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

வாழ்வாதாரத்தை இழந்து துடித்திட்ட கண்ணகியை நினைவுபடுத்துகின்றனர் சாத்தான்குளத் தேரியின் மைந்தர்கள்!

மீண்டும் ஒரு முறை சிலம்பின் அவல முடிவை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டுமா?

0 0 0
இக்கட்டுரை செப்டம்பர் மாத சமூக விழிப்புணர்வு இதழில் வெளியானது.
மின்னஞ்சல்: asuran98@gmail.com
பார்க்க: www.tatatitanium.blogspot.com

ஆதாரம்:
1. “Titanium – How it is made?” http://www.madehow.com/Volume-7/Titanium.html
2. “Titanium”, 2005 Minerals Yearbook, United States Geological Survey http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/titanium/
3. “Mineral Sands – Fact Sheet 10″ www.doir.wa.gov.au/documents/gswa/GSD_Fact_Sheet_10.CV.pdf
4. ” Advancing Development of Kwale Project in Kenya” TIOMIN Resources Inc., June 2006 www.tiomin.com/i/pdf/Tiomin_Facts_Sheet.pdf
5. “Zircon Development in Coburn Mine, Western Australia” www.gunson.com.au/files/reports/ABN%20AMRO30.1.06.pdf
6. ” THE NEW MINERAL SANDS PLANT OF THE 3rd MILLENNIUM… HOW DIFFICULT-TO-TREAT FEEDSTOCKS CAN GET A NEW LEASE ON LIFE” J.M. ELDER, and W.S. KOW Outokumpu Technology Inc, Jacksonville, FL, www.outotec.com/28719.epibrw
7. “TITANIUM TETRACHLORIDE PRODUCTION BY THE CHLORIDE ILMENITE PROCESS”, Office of Solid Waste U.S. Environmental Protection Agency http://www.epa.gov/epaoswer/other/mining/minedock/tio2/
8. “Titanium Di Oxide”, www.tidco.com/images%5CTITANIUM%20DIOXIDE.doc
9. ” Project Profile on Titanium Tetrachloride / Titanium Dioxide ” – Mott MacDonald http://www.vibrantgujarat.com/project_profile/chemicals_petrochemicals_pharmaceuticals/chemicals-petrochemicals/titanium-dioxide23.pdf
10. “Opportunities in the Electrowinning of Molten Titanium from Titanium Dioxide” http://doc.tms.org/ezMerchant/prodtms.nsf/ProductLookupItemID/JOM-0510-53/$FILE/JOM-0510-53F.pdf?OpenElement
11. http://webmineral.com/data/
12. http://blonnet.com/2002/11/24/stories/2002112401310200.htm

Series Navigation

அசுரன்

அசுரன்