நீர்வலை (3)

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


——
கிருட்டினமணிக்கு ராப்பயணத்தில் பாட்டு கேட்டுக் கொண்டே போவது பிடிக்கும். பழம் பாடல்களின் ரசிகன் அவன். சில சமயம் கூடவே பாடவும் செய்வான். பழம் பாடல்களில் செக்ஸ் இலைமறை காய்மறை என இருந்தது. வெகுஜன ஈர்ப்புக்கு அவை தேவை என வைத்தார்கள் போலும். ஆனால் அதைமீறிய சுவை அதில் காணக் கிடைக்கும். வார்த்தை எளிமையும் அதை குரல்தெளிவுடன், கேட்கிற அளவில் பாடும் பாடகர்களும். எளிய வாத்திய இசை. இப்ப மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தாற்போல எல்லாம் சத்தங்கள் பாடல்களில் வருகின்றன. தமிழ் உச்சரிக்க வராத ஆட்கள் நிறைய பாட வந்துவிட்டார்கள். தமிழே தெரியாத பாடகர்கள் நடிகர்கள் எல்லாம் வந் து விட்டார்கள்.
பார்வையற்ற காமெராமேன் கூட வரக்கூடும்!
பையனுக்கு நம்ப முடியவில்லை. திடுதிப்பென்று அவன் கேட்டது…. எந்த ஊர் தெரியாது. கூட வரியா, என்று கேட்டான். இவன் யாரைக் கேட்க வேண்டும்… ம் என்று தலையாட்டினான். எதிர்பாராத கேள்வி… திக்குமுக்காடிப் போனது. டிரைவரை நம்பலாம் போலிருந்தது. அந்த சிநேகத்தில் சிரிப்பில் நம்பிக்கை வந்தது. பிரியமான கண்கள் அதை அறிவித்தன.
பசி. பசி என்று நிரந்தரமாய் அவனோடு கூட வந்தபடி, தன்னை நினைவு படுத்திக் கொண்டே வந்தது வயிறு. ஒரு வயிறு அல்ல – வயிறுகள். இரு வயிறுகள். அவனுடையதும் அப்பாவுடையதும். அப்பாவுக்கு அதிகபட்சம் இட்லி. காரம் அதிகம் இல்லாத சட்னி. நீர்ப்பாங்கான உணவு என்றாகி விட்டது. சுடுதண்ணீர் பரவாயில்லை. குளிர்ந்த நீர் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நோயாளி கூட அல்ல… நோயாளி உணர்வு. தன்னுடைய கையாலாகாத்தனம். அதுவே அவருக்கு சத்ரு. பிறந்த நாள் முதல் இந்தப்பிள்ளைக்கு காலம் சதி செய்கிறது. ஆசையாய் இவர் அவனுக்கென்று எதுவும் வாங்கித் தந்ததில்லை.
கடும் வேலைகள் செய்கிறான். ஒருமுறை டீக்டையில் விறகுபிளந்து கொடுத்திருக்கிறான். கையெல்லாம் கன்றிச் சிவந்து விட்டிருந்தது. கோடரிக்காம்பின் அழுத்திப் பிடித்த தடங்கள். காய்ப்பு படாத உள்ளங்கைகள். இரத்தங்கட்டிக் கிடந்தன…
‘என்னடா?’ என்றார் வருத்தமாய்.
‘சீக்கிரம் சாப்பிடுங்கப்பா. இன்னும் வேலை கெடக்கு… நான் போகணும்.’
அன்பான அருமையான அப்பா. அவரையிட்டு அவனுக்கு வருத்தங்கள், புகார்கள் கிடையாது. எந்தச் சூழலையும் எனக்கு வாய்ப்பு இப்படி… என எடுத்துக் கொள்ள எப்படி பக்குவப்பட்டான் தெரியவில்லை. பள்ளிக்கூடப் படிப்பு என்று பெரிதாயும் இல்லை. நல்ல நிதானம், பேச்சு பாவனை எல்லாத்திலும் ஒரு பெரியதனம் வந்திருந்தது. இது இங்கே பிறந்திருக்க வேண்டிய பிள்ளையே இல்லை!…
ஊர்ப் பெருமாள்கோவில் மாவுத்தன் சிங்காரத்திடம் சிநேகிதம். அவனுக்கு நாலு தெரு யானையோடு சுற்றினால் அரிசிக்குப் பஞ்சம் இல்லை. கலவையாய் வெவ்வேறு ரக அரிசிகள். எல்லாம் கலந்து சமைக்க வேணும். இவனுக்கும் அரிசி தருவான். வீட்டில் அப்பா உலை வைப்பார். அவன்போய் தயிர் அல்லது கொஞ்சம் இலவச சாம்பார் வாங்கி வருவான். ஒன்றாய்ச் சாப்பிடுவார்கள். அரிசிச் சோறுதான் பசி தாங்கும்.
ஊர்த் திருவிழா நல்லநாள் என்றால் தண்ணீர்ப் பந்தலில் பானகம் மோர் தருவார்கள். கஞ்சி கூழ் ஊற்றுவார்கள். நிறைய வாங்கி, இருக்கிற பாத்திரத்தில் எல்லாம் பிடித்துவைத்துக்கொண்டு இரண்டுநாள் ஒப்பேற்றி விடலாம்.
எத்தனை மந்திரம்போட்டு விரட்டியும் ஓடாத பேயாக திரும்பத் திரும்ப தலையை ஆட் டி வந்தது பசி!
காலி வயிற்று இரைப்பை… கண்ணுக்குத் தெரியாத திருவோடு போல அதைச் சுமந்து திரிகிறவனாய் இருந்தான்.
வண்டி திரும்பி இடுகாட்டின் வழியே சென்றது. ராஜாவுக்கு உடல் லேசாய்ச் சிலிர்த்தது. அதை எத்தனை உடனே கண்டுகொண்டான் டிரைவர் அண்ணன்.
‘என்னடா குளிருதா?’
‘இல்லண்ணே…’
‘ஏல பேய் கீய் நடமாடுதோன்னு பயந்திட்டியா?’ என்று சிரிக்கிறான் கிருட்டினமணி.
ராஜா அழுவதைப் பார்த்து பதறிப்போனான். ‘என்னடா என்னடா?’ என்றான் அவன் தோளை உலுக்கி.
‘இங்கதாண்ணே அப்பாவைப் பொதைச்சேன்…’
‘அடடா…’ என்றான் வருத்தமாய்.
‘கூட ஆள் யாரும் கிடையாது. பகல்ல வந்தா புதைக்கக் காசு தரணும்… என்ட் ட ஏது பணம்?’
இதுவரை யாரிடம் அவன் இதெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறான். அழ ஒரு மடி தேடி இதுநாள்வரை காத்திருந்தாற் போலிருந்தது. உள் மனசின் ஏக்கங்களை யார் அறிவார்கள்…
‘தம்பி நீ தைரியமான ஆள்த்தான். தைரியமான ஆள் அழலாமா? இன்னும் எவ்ளவோ பாக்கப் போற… கொள்ளையா வயசு கிடக்கு…’
பையன் சிறிது நேரம் பேசாமல் வந்தான். லாரிபாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது. திடுக் திடுக் என மேடுகள் பள்ளங்கள் என உளதிர்வுகள். லாரிக்கு வழிகாட்டிச் செல்லும் முன்வெளிச்சம். யாரோ டார்ச் அடித்துப் போகிறாப் போல. லாரியின் இரட்டை வெளிச்சம் இல்லை… வலது கண் பொட்டை. இடது பக்கப் பார்வை மாத்திரம் இருந்தது லாரிக்கு.
‘நமக்கு எந்தூருண்ணே?’
‘வைகறைவாசல். கடல் சார்ந்த ஊரு. தெரியுமா?’
‘ஐ’ என்றான் ராஜா. ‘தெரியாது…’ என்றான். ‘எனக்குக் கடலைப் பாக்கணும்… கடல் எனக்குப் பிடிக்கும்…’
‘கடல் யாருக்குதான் பிடிக்காது?’ என்றான் கிருட்டினமணி இவனை உற்சாகப்படுத்தினாப் போல. திரும்பி ஒரு வேடிக்கைபோல ‘உனக்கு ஏன் கடல் பிடிக்கும்?’ என்று கேட்டான்.
‘கடல் நான் பாத்ததில்லை… அதுனால பிடிக்கும்’ என்றான் ராஜா.
‘உங்களுக்கு கடல் ஏன் பிடிக்குதுண்ணே?’
அண்ணன் சிரித்தான். பிறகு சொன்னான். ‘கடல் நான் பாத்திருக்கேன். அதுனால பிடிக்கும்…’
தூக்கக் கலக்கத்தில் பஸ் பயணிகள் இடம் வலம் அசைந்து முட்டிக்கொண்டே சாய்ந்துகொண்டே வந்தாற்போல பின்தளத்தில் வாழைத்தார்கள் வரிசையாய்ப் பயணித்தன. கேள்விக்குறியாய் தாரின் தண்டுகள். பகலின் வெப்பத்துக்கு வண்டியில் போவது இம்சை. வியர்த்து வியர்த்து ஊற்றும். உடம்பில் இருந்து கெட்ட நாற்றம் வரும். சில சமயம் பகல் பூராவும் போகவேண்டி வரும். குளிக்க வசதி கிடைக்காது. எப்படா இறங்குவம்னு ஆயிரும்…
கிருட்டினமணி பேசப்பேச ஊங் கொட்டிக் கொண்டே வந்தான் ராஜா. ‘என்னடா தூக்கம் வருதா?’
‘இல்லண்ணே’
‘பேச்சக் கேட்டுக்கிட்டே ஊங் கொட்டிக்கிட்டே வரணும். நீ தூங்கி வழிஞ்சா அதைப் பார்க் கப் பார்க்க எனக்கும் தூக்கம் வரும். வண்டில ஸ்டீயரிங் பிடிச்சிக்கிட்டே நான் தூங்கிட்டா என்னாகும்?’
‘சிலப்ப நாம முழிச்சிட்டு வந்தாக்கூட எதிர்லாரிக்காரன் தூங்கிட்டு வந்தான்னா?…’ என பயமுறுத்தினான் ராஜா.
‘தூங்க மாட்டேண்ணே…’ என்றான் பிறகு. அண்ணனை அவனுக்குப் பிடித்திருந்தது. எத்தனை எளிமையாய்ப் பழகுகிறான்.
வேலை என அவனை அழைத்துப்போய் எத்தனை பேர் ஏமாற்றி யிருக்கிறார்கள். சில பேர் காசு தருவார்கள். காபி டீ என எதும் சில்லரையாய் வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள் சிலபேர். நாளைக்கு வா காசு தரேன்… எனும் பார்ட்டிகளிடமும் வேலை செய்திருக்கிறான். ஐய சில பேர் ரொம்பக் கேவலமாய் வைவார்கள். அதென்னவோ கெட்ட வார்த்தைகள் அவனைக் கூச வைக்கின்றன. ஐய சிலர் ஆவேசமாய் அடிப்பார்கள்… இரு, அண்ணன் என்னவோ சொல்கிறான்…
வழியில் எங்காவது பாலத்தடியில் தண்ணீர் கிடந்தால் உற்சாகம்தான். வசம் பார்த்து தண்ணிப் பக்கம் இறக்கி லாரியையும் குளிப்பாட்டுவோம். நாமளும் நல்லா அழுக்குப் போக குளிப்போம்.
‘நாங் குளிச்சி மூணு நாளாச்சிண்ணே’
‘ஏலேய் தள்ளி உக்காரு…’
சிரிக்கிறான் கிருட்டினமணி.
‘மூணு நாள் முன்னால எப்பிடிக் குளிச்சே?’
‘மழை!’
‘அதான பார்த்தேன்!…’ என்றவன் அவன் பக்கம் திரும்பி ‘பள்ளிக்கூடம் போவலன்றே… நல்லாதாம் பேசறே…’ என்றான்.
‘நீங்க எதுவரை படிச்சிருக்கீங்கண்ணே?’
‘எட்டு!’
‘மேல படிக்கலியா?’
‘எட்டுக்கப்பறம் ஒம்பதுன்னு தெரியாமப் போச்சு!’
‘அப்பன்னா எட்டுவரை கூட சரியாப் படிக்கல்ல…’
சட்டென கிருட்டினமணிக்கு முகம் மாறியது.
‘சின்ன வயசில் இருந்தே படிப்புன்னு உக்காந்து படிக்க மனசு ஒப்பலடா. கும்பகோணம்… தீ பத்தி எத்தனை குழந்தைங்க செத்துப் போச்சு…’ என்று அவன் பக்கம் திரும்பினான்.
ராஜா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘தெரியுமா?’
‘தெரியாதுண்ணே…’
‘நீ எங்க பேப்பரைக் கண்டியா படிக்கத்தான் தெரியுமா ஒனக்கு…’
‘கூரைக் கொட்டாயி…. பசங்க பாடம் படிக்குதுங்க. ஒரு நூறு குழந்தைங்க போல… நல்லாப் படிச்ச, பிள்ளைங்களுக்குச் சொல்லிக் குடுக்கற டீச்சர்மார். என்ன பிரயோஜனம். தீ எரியுது தெரியல்ல. பிள்ளைங்களைக் காபந்து பண்ண முடியல…’
‘அத்தனை குழந்தைங்களும் செத்துப் போச்சா?’
‘டி.வி.ல காட்டினான்… அன்னிக்குப் பூராவும் அதைப்பார்த்த யாருக்கும் சோறு உள்ள இறங்கியிருக்காது…’
அவன் நெஞ்சு ஏறியேறி இறங்கியது.
ராஜாவுக்கு என்னமோ திடீரென ஒரு வக்கிர எண்ணம் வந்தது. அண்ணன் ஒருவேளை குழந்தை எதையும் பறி கொடுத்திருப்பானோ… இத்தனை கவலைப் படுகிறானே… ச்சீ, நான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன்.
ரொம்ப இயல்பாய்த் தன்னை மதித்து அண்ணன் பேசுவது ரொம்பப் பிடித்திருந்தது.
லாரி ஓடிக் கொண்டிருந்தது அது பாட்டுக்கு. இருட்டும் வெளி ச்சமுமாய் அண்ணன் முகத்தில் விழுகின்றன. அவனுக்கும் ராஜாவைப் பார்க்க இந்த வரிக்குதிரைத் தனம் காட்சிப் பட்டிருக்கலாம்…
கொஞ்சநேரம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. மௌனம் மிகப்பெரிய ஆறுதலாய் இருந்தது. சிறுகாற்று கன்னத்தை வருடிச் சென்றது. தெருவின் நிசப்தம். விட்டுவிட்டு தூரங்களில் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. சில இடங்களில் பெருமரங்கள் அந்த வெளிச்சத்தை மறைத்து நின்றன. தலைவிரிகோலமாய் தெருவில் நிழலைக்கிடத்தும் மரங்கள். யாரோ பைத்தியக்காரன் நடுத்தெருவில் படுத்துக்கிடந்தாப் போல.
‘பள்ளிக்கூடந்தான்னில்லை… நம்ம வாழறமே இந்த வாழ்க்கை அது கத்துத் தரும்டா எல்லாத்தையும்… புரியுதா?’
‘இல்ல… அப்ப நான் பள்ளிக்கூடம் போகாதது நல்லதுதான்’ என பையன் தலையாட் டினான்.
‘எனக்கு என்னமோ புத்தகம் தூக்கிட்டு பள்ளிக் கூடத்துல படிக்கிறதுதான் பாடம்ன் றதுல நம்பிக்கை இல்லை. நான் அருமையாப் பாடுவேன். அந்தக்கால டியெம்மெஸ் குரலை அதே ஜோரில் எடுப்பேன்… ஓடும் மேங்களே….’ என திடீரெனப் பாட ஆரம்பித்தான் உற்சாகப் பட்டு. பாடல் வெளியில் உயர்ந்தெழுந்து மேகங்களை நோக்கிப் பயணித்தாற் போலிருந்தது. இருட்டுக்கேத்த பாடல்தான்…
‘மேகம் ஏண்ணே ஓடுது?’
‘டேய் பாட்டைக் கேளுடா…’ என்றபடி பாடிக் கொண்டே வந்தவன் தன்னைப் போல நிறுத்தினான். ‘பாட்டுப் பாட என்ன வேணும்?’
‘தெர்லியே!…’
‘ரசிக்கத் தெரியணும். அக்கறை வேணும். உனக்கே அதுல பிடிப்பு வராம வாத்தியார் எதையும் கத்துக் குடுக்க முடியாது…’
‘சரிண்ணே…’ அவன் பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தது. கிடைத்த இடத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டு கிடைத்த வேலை செய்து கிடைத்த நேரம் ஒதுங்கிய இடத்தில் தூங்குகிறான் அவன். தெருநாய் போன்ற வாழ்க்கை. வாலை ஆட்டி ஆட்டி ஒவ்வொரு முகமாய் டீக்கடையில் பார்த்துக் கொண்டிருக்கும் தெருநாய் அவன்… இரு அண்ணன் என்ன சொல்கிறான்.
‘எனக்குப் பட்டறை வேலையில் ஆர்வம் இருந்தது. அப்பா என்னியப் பள்ளிக்கூடம் போ போ ன்னு துரத்தினாரு…’
‘ம்’
‘போற வழில ஒரு லாரி ஷெட். அங்க மணி மணின்னு ஒரு மெக்கானிக். அவன்ட்டப் போயி நிப்பேன். அவனும் பள்ளிக்கூடம் போடா போடான்னு விரட்டிப் பார்த்தான். நான் திரும்பத் திரும்ப அங்கியே வந்து நின்னேன். என்னடா?-ன்னான். உங்க வேலைய எனக்குச் சொல்லிக் குடுங்கன்னேன்… ஏல நீ நல்ல சட்டை நல்ல உடுப்பு உடுத்தி வெள்ளையுஞ் சொள்ளையா வேலைக்குப் போடா. அதான்டா உனக்கு மதிப்புன்னான்….’
‘ம்’
‘ஏல கேக்கிறியா?’
அண்ணன் நிறுத்தியவுடன் சுதாரித்தான். தூக்கம் லேசாய் உள்ளிழுத்தாற் போலிருந்தது.
‘இப்ப… ஒரு டாக்டரு என்ன செய்வாரு?’
‘அவரா? இந்நேரம் தூங்கிட்டிருப்பாரு…!’
‘ஏல கேளுடா… வியாதி வெக்கைன்னு வர்ற ஆளுக்கு மருந்து குடுக்கிறாரு. இல்லியா?’
‘ம்’ என்றான் கொட்டாவி விட்டபடியே.
‘அதைப் போலத்தான் இதுவும். எதுவும்?… பட்டறை வேலை. டாக்டர் கிட்ட உடம்பு சரியில்லாத மனுசங்க வராங்க. அதுபோல பட்டறைல கோளாறா ஆன வண்டிங்க வருது. வெள்ளைச்சட்டை போட்ட டாக்டர் ஒசந்தவர்னா, பட்டறைல அழுக்குச்சட்டை போட்டு அதேமாதிரியான வேலை செய்யிற மெக்கானிக் தாழ்ந்தவனா?’
‘ம்’
‘என்னல சொல்றே? தாழ்ந்தவனான்னா ம்ଭன்றே?’
‘இல்ல…’ என்றான் கொட்டாவியை அடக்கிக் கொண்டே.
‘என்ன இல்லே?’
‘தாழ்ந்தவன் இல்ல… டாக்டரோட வண்டி ரிப்பேர்னாக் கூட அந்தாளு நம்ம கிட்டதான் வரணும்…’
‘வேலை எல்லாமே ஒரே நல்ல விஷயந்தான்… ஏற்றத் தாழ்வு அவரவர் மனசைப் பொ றுத்து…’
‘பெட்ரோல் பங்க்ல லாரிக்கு ஊசி போடுறாகன்னு நான் நினைச்சுக்குவேண்ணே…’
‘ஆச்சி நம்ப ஊர் வந்தாப்லதான். நாம லோடு இறக்க தாண்டிப் போகணும். ஏலாம் பாக்கம் லோடு இது. சந்தை லோடு. சும்மா செம்மறியாட்டு மந்தைபோல குமிச்சிருப்பாங்க பாரு…’
‘ம். ஊர் வரட்டும். அப்பதானே பார்க்க முடியும்’
அண்ணன் அவனை உற்சாகப்படுத்த விரும்பியிருக்கலாம்.
‘ஏல சினிமா கினிமா பார்க்கிறதுண்டா…’
‘காசில்லாம ஆரு உள்ள விடறாக…’ என்று சிரித்தான் ராஜா. என்ன மயக்ககரமான சிரிப்பு சிரிக்கிறான் இவன், என ஆச்சரியமாய் இருந்தது கிருட்டினமணிக்கு.
‘பார்த்திருக்கேன்… பீடிக் கம்பேனிக்காரங்க சிலப்ப திடல்ல சினிமா போடும். அது பார்ப்பேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ரெண்டு பக்கமும் படம் பார்க்கலாம்… அப்ப அந்தப் படமும் பார்த்தேன்…’
‘என்ன படம்?’
‘நீங்க பாடினீகளே…’
‘என்ன பாட்டு?’
‘அதான் மேகம்னு வருமே…’
‘அதா… எம்ஜியார் பாட்டு.’
‘எம்ஜியார் நல்லாப் பாடுவாரா?’
‘அவரைவிட நான் நல்லாப் பாடுவேன். அவர் வெறும் வாயசைப்பாரு படத்துல. சும்மா வெத்திலை பாக்கு போடறாப்ல ஒரு நடிப்பு. பாடறது வேற.’
‘அப்ப பாடற ஆளு எங்கருப்பாரு…’
‘ஏல ஒனக்கு என்னால பதில் சொல்ல முடியாது. எம் பொண்ணு இப்டிதான் கேள்வி கேட் டு தொணதொணங்கும்… இப்ப நீ…’ என்றான். அடேடே என்றிருந்தது. குழந்தையைப் பற்றி மேலும் தகவல்கள் உற்சாகமாய் அண்ணன் பேச ஆரம்பிப்பான் என எதிர்பார்த்தான். ஆனால் கிருட்டினமணி ஊர் வந்த கவனத்தில் இருந்தாப் போலிருந்தது.
‘நேராப் போயி லோடு இறக்கிருவம். வேலை ஆயிரும்ல…’
‘சரி’ என்றான். ஓசி லாரிப் பயணமே அவனுக்கு அலாதி உற்சாகமாய் இருந்தது. அதும் அண்ணன் ஊர் நெருங்க சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. வெகு இயல்பாய்ப் பேசிக் கொண்டே வருகிற அண்ணனை அவனுக்குப் பிடித்திருந்தது. சின்னப் பையன்தானே அவன். ஏன் வம்படியாய் தம்பிடித்து இப்படி பெரியமனுஷ, வளர்ந்தபாவனை கொண்டாட வேண்டும்…
மேகங்கள் ஏன் ஓட்டமெடுத்தன?
அவை அண்ணன் பாட்டைக் கேட்டு ஓடின போலும்!
நல்ல வெயில் வந்திருக்கிறது இப்போது. உடம்பெங்கிலும் அழுக்கின் சிறு அரிப்பு. எங்காவது சுரசுரப்பான இஞ்சிமுரப்பா-சுவர் கண்டால் தேய்த்துக் கொள்ள வேண்டுமாய் இருந்தது. எருமை மாடு போல. அவன் உடம்பெங்கும் தோல் செதில் விட்டிருந்தது. கரம்பைக் கட்டிகளாய் சச்சதுர அடையாளங்கள். பசி பசி என்று மிரட்டும் வயிறை இக்காலங்களில் அலட்சியம் செய்யக் கற்றுக்கொண்டிருந்தான். கிடைத்தபோது கிடைத்ததைச் சாப்பிட வேண்டும். கிடைக்கவில்லையா… பட்டினிதான். சிறு வேலைகள் கிடைத்தால் செய்வான். ஊர்க் கிணற்றில் யாரும் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தால் கைகுழித்து நீர் ஊற்றச் சொல்லி கேட்டுவாங்கிக் குடிப்பான்.
கல்யாணங்களில் பெருமுகூர்த்த வீடுகளில் ஓரமாய்ப் போய் நின்றால் இரக்கப்பட்டு ஒரு இலையில் சுருட்டி எடுத்துவந்து யாராவது சாப்பிடத் தருவார்கள். சில சமயம் அதில் தித்திப்புகள்கூட கிடைக்கலாம். வயிற்றுவலி தரும் ஐட்டங்களும் தெரியாமல் தின்ன நேரிடும்…
சிங்காரத்துடன் யானையைக் கூட்டிக் கொண்டு ஊரூராய்த் திரிய ஆசைகொண்டான். அவனிடம் இல்லாத கெட்டபழக்கம் இல்லை. வசவுன்னா இன்ன வசவு என்றில்லை. ஒருமுறை கெட்ட காரியம் ஒன்றுக்கு…
‘என்னடா?’
‘ஒண்ணில்லண்ணே…’
‘அதான்… அப்பிடியே லாரில ஒட்டிக்கிட்டேன். இப்ப லாரி டிரைவர்!’
‘நானும்!’ என்றான் ராஜா.
சட்டென்று திரும்பிப் பார்த்தான் கிருட்டினமணி. ‘அடேடே’ என்றான்.
( தொ ட ர் கி றது )


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்