நாகர்கோவில் என்.எஸ்.பி
அகரமுதல்
ஒரு புல்லாங்குழலின் காற்று இசையாகிறது. அத்துளைகளில் விரல்கள் மலர்வண்டு போல் தவழ்ந்தும், கிடந்தும் அழுந்தியும் வருடியும் எத்தனை ஒலி பேதங்களைத் தருகின்றன! வசீகரங்களை வளர்த்துகின்றன! இன்னிசை ராகங்களைப் பொழிகின்றன! மனித இதயங்களைப் பிணைக்கின்றன!
புல்லாங்குழலில் ஆதாரமான காற்றுப் போல்வதுதான் அகரம். அகத்தெழும் அகர ஒலிதான் ஆதார ஒலி. அதன் மீது குறுக்கியும், நெருக்கியும், வருடியும், நெகிழ்த்துயும் பிற எழுத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. பல், அண்ணம் , நா, இதழ் போலும் உறுப்புக்களின் விளையாட்டில் உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் அனைத்தும் பிறக்கின்றன. அவ்வெழுத்துக்கள் பெருக்கும் சொற்களும் தொடர்களும் தானே மொழி! அம்மொழிதான் பிரபஞ்ச அறிவின் தூண்டில்!
மொழி தொடர்களில் ஒடுங்கும். தொடர்கள் சொற்களில் ஒடுங்கும். சொற்கள் எழுத்துக்களில் ஒடுங்கும். எழுத்துக்கள் அகரத்தில் ஒடுங்கும். எனவேதான் திருவள்ளுவர் ‘அகர முதல எழுத்தெல்லாம் ‘ என்றார். எழுத்துக்களின் முதல் அகரம். முதல் என்பதற்கு அடிப்படையானது என்று பொருள். காரணமான முதற்பொருள் அது.
அகரம் எழுத்துக்கள் அனைத்திற்கும் அடிப்படை ஒலி. எனினும் அவற்றினின்று தனித்து வேறுபட்டும் நிற்கும் ஒலி. பிரபஞ்சப் பொருட்கள் அனைத்திலும் கலந்து நிற்கும் சக்தி கடவுள். ஆயினும் அவற்றினின்று வேறுபட்டுக் கடந்தும் நிற்கும் சக்தி அது. எனவே அகரத்துக்கு அமைந்த கலந்த நிலையும், கடந்த நிலையும் கடவுளுக்கு அமைந்த இரு நிலைகளுக்கு நிகரானவை. இதனால் தான் ஆதிபகவனுக்கு அகரத்தை எடுத்துக்காட்டாக்கினார் திருவள்ளுவர்.
‘அகாரம் அவன் ‘ என்று பேசும் திருமந்திரம். ‘அகர முதலானை ‘ என்கிறார் சம்பந்தர். ‘அவ்வென் சொற்பொருளாவான் ‘ என்கிறது பாகவதம். ‘அகரம் என அறிவாகி ‘ என்பது விநாயக புராணம்
-விவேகவாணி [டிசம்பர் 2000]
மழை
கதிரவன் வெப்பத்தால் புமியின் நீர் ஆவியாகிக் குளிர்ந்து நீர்த் திவலைகளாகி மழை பொழிகிறது என்பது விஞ்ஞானம். மேகங்கள் நீருண்டு சூல் கொண்டு மழை பொழிவதாக இலக்கியங்கள் பேசும். வள்ளுவரின் வான் சிறப்பு மழைமாட்சி போற்றும். அவர்க்குப் பின் மழைப் பிரசங்கம் புரிந்தோர் பலர்.
வானின்று பெய்யும் மழையே அமிழ்தம். அது உணவாகும்; உணவாக்கும். அது பொய்த்தால் பசி வருத்தும். குன்றினால் வயலில் ஏர் இல்லை. கெடுப்பதுவும் எடுப்பதுவும் அதுவே. மழைத்துளி வீழாவிடில் புல் முளையாது. பூசனையும் நடவாது. கடல்நீர்மை குன்றும்; தானம் தவம் தங்காது. மழை இன்றேல் ஒழுக்கமும் இல்லை. இவையெல்லாம் திருக்குறள். ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ‘ என்பது இளங்கோவடிகள் வாழ்த்து. தானே மழை பொழிதலுமாய் நிற்பன் என்பது திருமந்திரம்.
மழை பொழியும் வேளை பரவச வேளை. அப்போது விண்ணும் மண்ணும் இணைகிறது. வெள்ளித் தாரைகளால் மண்ணுலகை விண்ணுலகு இணைக்கும் வேளை என்பது கம்பர் கற்பனை. இக்கற்பனைக் காரணம் ‘சிந்தாமணியில் ஓரகப்பை முகந்தது ‘ என்றாராம்.
பாரிமகளிர் தந்த நீலச்சிற்றாடையை வேந்தர் தந்த அரும்பொருளுக்கு நேராக்கி ஒளவை பாடக்காரணம் அவள் நனைந்த மழை. கந்தபுராணக் கற்பனையிலோ சைவம் மணக்கிறது. காளத்தி நாதன் மீது கண்ணப்பன் கொப்பளித்த நீராக மலையை நனைக்கிறதாம் மழை!
-விவேகவாணி [செப்டம்பர் 2000]
கருவூரும் காட்டூரும்
கருவூரிலிருந்து காட்டூருக்குச் செல்லும் பயணமே வாழ்க்கை. எனினும் கருவூர் தொடக்கமும் அல்ல; காட்டூர் முடிவும் அல்ல. கருவறையும் கல்லறையும் வாசல்களே. கருவறைக்கு முன்னும் பயணம் உண்டு; கல்லறைக்குப் பின்னும் பயணம் உண்டு.
‘வாழ்க்கை மெய்யானது; நேரியது
கல்லறை அதன் இறுதிப்புள்ளி அன்று ‘ என்று லாங் ஃபெல்லோ என்னும் கவிஞன் கூறவில்லையா ? எனவே இது முடிவின்றி செல்வதற்குரிய பயணம்.
பிறப்புக்கு முன்னும் பிறப்புக்கு பின்னும் வாழ்வின் நீட்சி உண்டு. பிறப்பும் இறப்பும் முடிச்சுகள். அவை அவிழும் போது வாழ்க்கையின் நீளம் புரியும்.
‘பையூரி லேயிருந்து பாழூரி லே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா பாழாய் முடியாவோ ‘
எனப்பாடும் அழுகணிச் சித்தர் பாடலில் அர்த்தம் மிக உண்டு.
-விவேகவாணி [பிப்ரவரி-2000]
[இவை விவேகானந்த கேந்திரத்தின் மாத இதழான ‘விவேகவாணி ‘ யில் கடைசிப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்துக்கொண்டிருப்பவை. என்.எஸ்.பி தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி துறைத்தலைவராக ஓய்வுபெற்றவர்.]
- நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- 32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-1
- பாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு
- நான் கண்ட சீஷெல்ஸ் – 2
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX
- த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்
- தில்லை வாழ் அந்தணர்களுக்கு
- ‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்
- பண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்
- விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்
- சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- மைனாரிட்டி !
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )