வெங்கட் சாமிநாதன்
ஜெயா அத்தையை தேவங்குடி கிராமத்தில் விட்டு விட்டு நான் உடையாளூர் திரும்பி வந்தேன். அந்த நாலைந்து நாட்கள் எவ்வளவு மகிச்சியில் கழிந்தன என்பது இப்போது நினைக்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது தான். ஜெயா என்று ஒரு அத்தை எனக்கு இருக்கிறாள் என்று நான் தெரிந்து கொண்டதே அப்போது தான். ஜெயா அத்தையின் கேலிக்கும் சிரிப்புக்கும் ஆளாகியதும் உடனிருந்த அந்த நாலைந்து நாட்கள் தான். அதன் பிறகு நான் ஜெயா அத்தையை பார்க்கவில்லை. அத்திம்பேர் வேலை தேடி சென்னைக்குச் சென்றார். வேலை கிடைத்து அத்தையையும் மகன் மணியையும் அழைத்துக் கொண்டாரா என்பது தெரியாது. அது பற்றி எந்த விவரமும் இல்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் நான் ஒரிஸ்ஸா போய் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்து முதல் ஆண்டு முடிந்து எடுத்துக்கொண்ட விடுமுறையில் உடையாளூருக்கு வரும் போது, சென்னையில் அவர் தம்புச் செட்டித் தெருவில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். இடையில் இந்த இரண்டு வருட காலத்தில் எவ்வளவோ எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துவிட்டிருந்தன. மிகவும் கொடூரமானது ஜெயா அத்தை உயிரோடு இல்லை என்பதுதான். ரொம்ப சின்ன வயது. நிலக்கோட்டை மாமி போலத் தான். இருபத்து ஏழு அல்லது இருபத்து எட்டு வயதுக்குள், என்னிடம் மிகப் பிரியமாக இருந்தவர்கள் இல்லையென்றாகிவிட்டனர். ஜெயா அத்தை எப்போதும் எல்லோருடனும் மிக இனிமையாகப் பேசி சிரித்த முகத்துடன் விளையாட்டாகவே இருந்த ஒரு ஜீவனுக்கு ஏன் இத்தனை குறுகிய ஆயுளைக் கடவுள் கொடுத்தார்? இருவரையுமே நான் விட்டு வந்ததும் மறு முறை நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவர்கள் என்றென்றைக்குமாக பிரிந்து விட்டனர். உடையாளூர் வந்ததிலிருந்து தான் நான் அறிந்த தங்கையும் என் கண் முன்னாலேயே உயிர் பிரியப் பார்த்தேன். அவளை நான் தெரிந்து கொண்டதும், அவளுடனும் நான் பழகியதும் ஒரு சில மாதங்களே தான் இருக்கும்.
என்ன நடந்தாலும் நம் அன்றாடக் காரியங்கள் வழக்கம் போல் தொடர்வது, நடப்பது நிற்பதில்லை. காலையில் எழுந்ததும் எட்டு மணிக்குள் பள்ளிக்குப் போக கும்பகோணத்துக்குக் கிளம்பி விடுவேன். திரும்ப ஊருக்கு வரும்பொழுது கிட்டத் தட்ட இருட்டி விடும் என்று தான் சொல்ல வேண்டும். ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டுக் கிளம்பிவிடுவேன். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள், விளையாட்டு மைதானத்துக்குப் போக வேண்டியதில்லை என்பது பொதுவான விதி. அவர்கள் ஸ்கூல் பாடங்கள் முடிந்ததும் வீடு திரும்பலாம் என்று சலுகை தரப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு காலையில் பள்ளிக்கூடம் போவதற்கும் சரி, பின் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புவதற்கும் சரி, நேரம் கொஞ்சம் அதிகமாகும். வீட்டை விட்டுக் கிளம்பி நேரே பள்ளிக்கூடத்திற்குப் போவதோ, பின் பள்ளியை விட்டு நேரே வீட்டுக்குத் திரும்புவதோ என் சுபாவத்தில் என்றுமே இருந்ததில்லை. நிலக்கோட்டையிலிருந்த காலத்திலிருந்தே. ஒவ்வொரு தடவையும் பள்ளிக்குப் போகும் வழியும் பின் வீடு திரும்பும் வழியும் ஒன்றாக இராது. சின்ன ஊர் தான் என்றாலும், நிலக்கோட்டையிலேயே கூட ஒரு நாள் போன வழியில் மறுநாள் போகவும் மாட்டேன். வீடு திரும்பவும் மாட்டேன். வீம்பு என்றில்லை. ஊர் சுத்துவது என்பதில்லை. பல வழிகள் இருக்கும் போது, புதிய இடங்கள் பார்க்க இருக்கும் போது ஏன் அலுப்புத் தட்டாது ஒரே பாதையில் போக வேண்டும்? இப்படி ஒன்றும் திட்டமிட்டுச் செய்வதில்லை. அப்படித்தான் இயல்பில் நேர்ந்தது.
இல்லையெனில், போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னால் இருந்த பரந்த மைதானத்தில் மற்றக் கைதிகளோடு, புதிதாக வந்த கைதி, எங்கள் மூன்றாம் க்ளாஸ் வாத்தியார் ஜெயராஜையும் ஒரு போலீஸ் காரன் ஏதோ சொல்லி வேலை வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்பதை எப்படி க்ளாஸில் இருந்த என் சினேகிதர்களுக்குச் சொல்லி அவர்களை வாய் பிளக்க வைக்கமுடியும்? வீடு வந்து மாமாவிடமும் சொன்னேன். அவர் முகம் வேதனையில் கருத்தது. பின்னால் என்னைக் கோபித்துக் கொண்டார் .”நீ ஏண்டா அங்கேல்லாம் சுத்தறே? பள்ளிக்கூடம் விட்டா நேரா வரமாட்டியா?” என்று. புதிதாகத் திறந்த தகரக்கடையிலும், இரும்புப் பட்டறையில் பார்த்த மாதிரியே ஒரு துருத்தியை வைத்துக் கொண்டு காற்றடித்துக்கொண்டிருந்தது எல்லாம் எப்படிப் பார்ப்பது? மதுரையிலும் அதே கதைதான். காமாட்சி புர அக்ரஹாரத்திலிருந்து ஸ்கூலுக்குக் கிளம்பினால் சிம்மக் கல் போவதற்குள் வழியில் இருந்தது ஒரு பெயிண்டிங் ஷாப். எல்லாவித பெயிண்டிங் வேலைகளும் செய்து தரும் ஒரு கடை. அங்கு ஒருத்தன் படம் வரைந்து கொண்டிருப்பான். சிம்மக்கல் ரவி வர்மா அவன். எண்ணை வர்ணங்களில் சித்திரங்களும் வரைந்து தருவான். நிறைய ப்ரஷ்களும் முழுச் சித்திரங்களும் பாதி வரைந்த படங்களுமாகத் தரையில் சுவரோரமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கும். நான் அந்த வழியாகக் கடக்கும்போது அவன் வரைந்து கொண்டிருந்தால் நான் அங்கேயே கடையோரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் என்னை ஒன்றும் சொல்ல மாட்டான். “என்ன தம்பி, ஆசையா இருக்கா? உனக்கு வரையத் தெரியுமா?” என்று லேசாகச் சிரித்துக் கொண்டே பேசுவான். “பென்சிலாலே தான் படம் போடுவேன். பாத்து காப்பி பண்ணுவேன்.” என்று ஒரு நாள் சொன்னேன். ” அது போதும். அப்படியே பழகிட்டு வா” என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டிடம் செர்டி·பிகேட் வாங்கிவிட்ட சந்தோஷம். என் க்ளாஸில் வேறு யாருக்கும் கிடைக்காதது எனக்குக் கிடைத்து விட்டதே.
என் வகுப்பில் கே.டி.கே தங்கமணியை யாருக்குத் தெரியும்? அவர் வீடே எனக்குத் தெரியுமே! மோஹன் குமாரமங்கலத்தை, பி.ராமமூர்த்தியை, சசி வர்ணத் தேவரை யாருக்குத் தெரியும்? அவர்கள் பேசும் கூட்டத்திற்கு யார் போயிருக்கிறார்கள்? என் க்ளாஸில்? மாமி வீட்டில் தான் யாருக்கு இதில் அக்கறை? யார் அருணா ஆச·ப் அலி பேசுவதைக் கேட்க தல்லா குளம் ஓடுவார்கள்? யாருக்கு நவராத்திரி என்றால் ஒன்பது நாட்களும் மதுரையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் போய் அலங்காரங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்? அதிகம் போனால் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போவார்கள்.
ஒரு நாள் தேவி டாக்கீஸ் என்று நினைக்கிறேன். பருத்திக் காரத்தெருவோ என்னவோ. சரியாக ஞாபகமில்லை. அங்கு தேவி பால வினோத நாடக சபா என்றும் ஒரு போர்டு இருந்தது. சினிமாக் கொட்டகையில் ஏன் நாடக சபா என்று போர்டு வைத்திருக்கிறார்கள் என்று யோசனை போயிற்று. ஆனால் பின்னாட்களில் படித்ததிலும் மதுரையில் நாடக சபா ஏதும் இப்படிப் பெயரில் இருந்ததாகப் படிக்கவில்லை. இருந்திருக்கக் கூடும். கும்பகோணத்திலும் கூட, தினம் பாணாதுரை ஹைஸ்கூலுக்குப் போகும் ஒரு வழியில், விஜய லக்ஷ்மி டாக்கீஸ் என்று வெளியில் கேட்டுக்கு மேலே இருந்த வளைவில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் உள்ளே கட்டிட வாசலில் மேலே வாணி விலாச சபா என்றும் எழுதப்பட்டிருக்கும். இதை நான் ஆச்சரியத்துடன் பார்த்ததுண்டு. யாரைக் கேட்டேன் என்பது நினைவில் இல்லை. அங்கு முன்னால் ஒரு நாடக சபை இருந்தது என்று சொன்னார்கள்.
இவை எல்லாம் என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயங்கள். ஆனால் வெகு சாதாரணமாக பார்த்துக் கடந்து விட்ட பல நிகழ்வுகள் சாதாரணமாக என் நினைவில் பதிந்து, பின் வருஷங்களில் நான் படித்து அறிந்தவற்றோடு அவை தொடர்பு பட்டு என்னை சிலிர்க்க வைத்தவையும் இருந்தன. உடையாளூரிலிருந்து நடந்து வருபவனுக்கு கும்பகோணத்துக்குள் நுழைகிறோம் என்பதைச் சொல்வது குறுக்கே பாயும் அரசிலாறு. அந்த ஆரம்ப காலங்களில் அந்த ஆற்றின் மீது வாழை மரங்களை மிதவையாகக் கொண்டு அதன் மீது வாழை இலைகளையும் வாழைத் தார்களையும் அடுக்கி அதன் மீது இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு போவதை நான் பார்த்திருக்கிறேன் அவர்கள் சுவாமி மலை தாராசுரம் போன்ற கிராமங்களிலிருந்து கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டுக்கு சரக்கெடுத்துச் செல்பவர்கள். ஒரு அணா செலவில்லாதே, லாரிக்கோ மாட்டு வண்டிக்கோ சத்தம் கொடுக்காதே அரசலாறே இலவசமாக அவர்கள் சரக்கை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லும். இது ஆற்றில் தண்ணீர் இருக்கும் காலங்களில் தான்.
ஆற்றைக் கடந்து நேராகச் சென்றால் அந்த ரோடின் கடைசியில் இடது பக்கம் பெரிய தெருவும் வலது பக்கம் திருமபினால் காந்தி பார்க்குக்கும், டவுன் ஹைஸ்கூலுக்கும் இட்டுச் செல்லும். ஆனால் அரசிலாற்றின் மறு கரையிலிருந்தே சௌராஷ்டிரர் வாழும் பகுதிக்கு வந்து விடுவோம். ரோடின் இடதும் வலதுமாக சௌராஷ்டிரர்கள் வாழும் தெருக்கள், சந்துக்கள் பிரியும். அது என் தினப்படி பள்ளிக்குப் போகும் வழி. ஒரு நாள் ஒரு சௌராஷ்டிரர் தெருவில், உள்ளே சுற்று தூரத்தில் பிரம்மாண்டமான பேப்பர் ரோலை, ரோட் ரோலரின் முன்னிருக்கும் இரும்பு உருளை கனத்திற்கு, அவ்வளவு பெரிசா இருந்ததைப் பார்த்தேன். அதைச் சுற்றி சிலர் நின்று கொண்டிருந்தனர். அந்த ரோலிலிருந்து கொஞ்ச நீளத்துக்கு காகிதத்தை உருளையிலிருந்து பிரித்து என்னவோ அளந்து கொண்டிருந்தனர். நான் வழக்கம் போல ஆச்சரியத்துடன் அங்கு அருகில் சென்று பார்த்தேன். அந்த நாட்டு ஓடு வேயப்பட்ட வீட்டின் முகப்பில் சின்னதாக ஒரு போர்டு ஒரு அடிக்கு மூன்றடி நீள் சதுரத்திற்கு ஒரு போர்டு. ‘தேனீ’ என்று எழுதப்பட்டிருந்தது. அங்கு என்ன நடக்கிறது, அவர்கள் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏதோ வினோதமாக இருந்தது, இவ்வளவு பெரிய உருளையாக காகிதத்தைப் பார்த்தது ஆச்சரியப் பட்டதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. பின் வருடங்களில் தான், தேனீ என்றொரு இலக்கியப் பத்திரிகை எம்.வி.வெங்கட் ராமின் ஆசிரியத்வத்தில் ஒரு வருஷமோ இரண்டு வருஷங்களோ நடந்தது என்று படித்த போது, அன்று பள்ளிக்குப் போகும் வழியில் சௌராஷ்டிரா தெரு ஒன்றில் பார்த்த காட்சியையும் இணைத்துப் புரிந்து கொண்டேன். அப்போதுதான் தேனீ பத்திரிகைக்கான முன் ஆயத்தங்கள் அவை என்றும், சுற்றி இருந்தவர்கள் ஒரு வேளை எம்.வி.வெங்கட் ராம், தி.ஜானகிராமன், கொனஷ்டை போன்றோராக இருந்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். அன்று இந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏழெட்டு வருஷங்கள் கழிந்த பின் தான், ஹிராகுட்டில் வேலையிலிருந்த போது, கலைமகள் பத்திரிகை மூலம் இவர்களைப் பற்றி அறியவும், இவர்கள் எழுத்துக்களைப் படிக்கவும் தொடங்கினேன்.
பின் நாட்களில் எம்.வி.வெங்கட் ராமுடன் வெகு நெருக்கமாக, அந்நியோன்னியமாகப் பழகும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. அவையெல்லாம் மிக சுவாரஸ்யமான கதைகள் எம்.வி. வி தான் எனக்கு, தஞ்சை பிரகாஷ், பிரபஞ்சன், இருளாண்டி, தஞ்சைக் கவிராயர் போன்றோரை என் வீட்டுக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர். மனதுக்கு மிக இதம் அளிக்கும் கணங்கள், நிகழ்வுகள் அவை. நான் விடுமுறையில் தெற்கே வரும் போதெல்லாம், தஞ்சை பிரகாஷைப் பார்க்காமல் இருந்ததில்லை. அவரோடு சேர்ந்தே எம்.வி.வெங்கட் ராமைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் நாங்கள். எம்.வி.வெங்கட் ராம் அந்த சௌராஷ்டிரர் வாழும் பகுதியிலேயே தான், ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது வேறு ஒரு வீட்டிற்குக் குடி போயிருப்பார்.
இன்னொமொரு புனித ஸ்தலம் எனக்கு மௌனி கும்பகோணத்தில் இருந்த போது வாழ்ந்த காமாட்சி ஜோசியர் தெரு. கும்பகோணத்திலேயே அகலமான அழகான தெருக்களில் அதுவும் ஒன்று,. காமாட்சி ஜோசியர் தெருவைக் கடந்து, காவேரி பழைய பாலத்தைத் தாண்டி மேலக் காவேரியில் அப்பா வீடு மாற்றிய போது, ஒவ்வொரு காரியத்துக்கும் காமாட்சி ஜோசியர் தெரு வழியாகத் தான் போக வேண்டும்.
இவர்கள் மாத்திரமல்ல, பிள்ளையார் கோயில் தெருவையும் சொல்ல வேண்டும். அது தான் தமிழ் இலக்கியத்தின் புகழ் பெற்ற மணிக்கொடிக் கால இரட்டையரான, ந.பிச்சமூர்த்தியும் கு.ப. ராஜகோபாலனும் வாழ்ந்த, இரட்டையராகத் தெரியவந்த இடம். அது வழியாக காமாட்சி ஜோசியர் தெரு வழியாக நான் எவ்வளவு ஆயிரம் முறை கடந்து சென்றிருப்பேன். இவையெல்லாம் நம் தமிழ் இலக்கிய முன்னோடிகள் வாழ்ந்த தினம் நடமாடிய தெருக்கள் என்பது தெரியாமல்.
ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை, அதுவும் என் வகுப்பில் சக மாணவன், நண்பன், முன்னாலேயே சொல்லியிருக்கிறேன், ஆர். ஷண்முகம், தன் கவிதை, இலக்கியக் கட்டுரைகள் பிரசுரமான காவேரி பத்திரிகையை எனக்குக் காட்டி என்னை வாய் பிளக்க வைத்தானே அந்த காவேரி பத்திரிகை அந்நாட்களில் வெளிவந்து கொண்டிருந்தது. அதுவும் என் பள்ளிக்குச் செல்லும் வழியில், விஜய லக்ஷ்மி டாக்கீஸ் இருந்த ரோடிலேயே சற்றுத் தள்ளி இருந்தது.
வெங்கட் சாமிநாதன்/16.10.08
- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- புத்தகச் சந்தை
- அன்புள்ள ஜெயபாரதன்
- விவரண வீடியோப் படக்காட்சி
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
- கந்த உபதேசம்
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- வந்து போகும் நீ
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- பாரி விழா
- ஓட்டம்
- பாலம்
- ஐந்து மணிக்கு அலறியது
- கவிதை௧ள்
- கவிதையை முன்வைத்து…
- வேத வனம் விருட்சம் 30
- சிட்டுக்குருவி
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- சதாரா மாலதி
- நினைவுகளின் தடத்தில் – (28)
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- “பிற்பகல் வெயில்”
- உயிர்க்கொல்லி – 2
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- கழிப்பறைகள்